Monday, January 23, 2006

124: *நட்சத்திரம்* - முருகனருள் முன்னிற்கும்

2001 கடைசியில்:

கோவிலில் நுழையும் போதே அம்மாவின் கையைப் பிடித்துக்கொண்டு சின்ன வயதில் நானும் என் தம்பியும் அடிக்கடி இங்கு வந்தது நினைவுக்கு வந்தது . வீட்டுப் பக்கத்தில் பஸ்ஸைப் பிடித்தால் ஒரு அரை மணி நேரத்தில் திருப்பரங்குன்றம் வந்துவிடலாம் . ஆனால் இப்போதெல்லாம் வாடகை ஊர்தி கிடைப்பதால்
குடும்பத்தோடு திருப்பரங்குன்றம் வருவதற்கு அது தான் வசதியாக இருக்கிறது.

நானும் என் மனைவியும் அமெரிக்காவில் மினியாபொலிஸ் நகரில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறோம். கணவனும் மனைவியுமாக அமெரிக்காவை வலம் வந்துக் கொண்டிருக்கிறோம். திருமணத்திற்கு முன், திருமணத்திற்கு பின் என்று பார்க்க வேண்டிய இடங்களை எல்லாம் இரண்டாவது தடவை பார்த்து வாழ்க்கை மகிழ்ச்சியாகச் சென்றுகொண்டிருக்கிறது. வருடா வருடம் நான் வேலை பார்க்கும் நிறுவனம் இந்தியாவுக்கு வந்து செல்லும் செலவை ஏற்றுக்கொள்ளும். அதனால் தவறாமல் ஒவ்வொரு வருடமும் தாய்த் திருநாட்டைப் பார்ப்பதற்கு வந்துவிடுவதுண்டு . விடுமுறைக்கு மதுரை வரும் போதெல்லாம் திருப்பரங்குன்றம் தவறாமல் வந்துவிடுவதுண்டு . எங்கள் குல தெய்வம் திருப்பரங்குன்றம் முருகன். எங்கள் வீட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு எல்லாம் முடியிறக்குவது இங்கு தான்.

கோவிலில் நுழைந்தவுடன் இடது பக்கம் திரும்பி கருப்பண்ணசாமியை வணங்கினோம் . அவருக்குத் தான் இங்கு முதல் மரியாதை. அவர் இருக்கும் தேர் போன்ற மண்டபம் எனக்கு மிகவும் பிடித்த இடம். தெய்வயானைத் திருமணக் காட்சியைக் காண வந்த மணமகனின் அப்பா அம்மா அண்ணன் மாமா மாமி எல்லாரும் அந்த மண்டபத் தூண்களில் அழகாக நின்றிருப்பார்கள். அதிலும் அண்ணன் தன் தம்பி கல்யாண கோலாகலத்தில் மகிழ்ந்து தன் தொந்தி குலுங்க நடனம் ஆடிக்கொண்டிருக்கும் காட்சி மனதைக் கொள்ளைக்கொள்ளும். எத்தனைத் தடவை பார்த்தாலும் சலிக்காத ஆராவமுதானத் தோற்றம்.

குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்று சொல்லுவது போல் குமரக்கடவுள் குன்றின் மேலும் அடிவாரத்திலும் தான் பெரும்பாலும் கோவில் கொண்டுள்ளான். இந்தக் கோவில் மலை மேல் இல்லாவிட்டாலும் மலையைக் குடைந்து கட்டியிருப்பதால் ஐயனைக் காண சில படிகள் ஏறிச் செல்லவேண்டும் . கோவிலை அடுக்கடுக்காகக் கட்டியிருக்கிறார்கள் . ஒவ்வொரு அடுக்கிலும் பல அழகிய தெய்வ உருவங்கள். எல்லா தெய்வ உருவங்களையும் வணங்கிவிட்டு அவன் திருமுன் நிற்கிறோம் .

அந்தக் காலத்தில் இருந்ததை விட அதிக கூட்டம் இப்போது. எல்லாரும் சொல்வது போல மக்களுக்கு இறை நம்பிக்கை முன்பைவிட அதிகமாய் விட்டது தான் போலும். அம்மாவுடன் வரும்போதெல்லாம் இருக்கும் சிறிய கூட்டத்துடன் முண்டி மோதி வந்து தான் கந்தனைப் பார்ப்பது வழக்கம் . சுவாமியின் நேரெதிரே சுவற்றில் ஒரு பெரிய ஜன்னல் இருக்கும். அந்த ஜன்னலில் ஏறி நின்று கொண்டால் முருகனை எத்தனை நேரம் வேண்டுமானாலும் ஆசை தீரப் பார்த்துக் கொண்டிருக்கலாம். அம்மா என்னையும் தம்பியையும் அந்த ஜன்னலில் ஏற்றிவிட்டுவிடுவார்கள். இப்போது அந்த ஜன்னலில் ஒரு கம்பி தடுப்பு போட்டிருந்தார்கள்.

இல்லாவிட்டாலும் என்ன? அந்தக் காலம் போல் கூட்டத்தில் முண்டி மோதி இறைவனைப் பார்க்கும் பொறுமை இருக்கிறதா? சிறப்பு தரிசன அனுமதி சீட்டு வாங்கிக்கொண்டு நேராகக் குடும்பத்துடன் தெய்வயானை மணாளன் திருமுன்பு சென்று நின்றுவிட்டோம்.

சின்ன வயதில் முருகன் திருமுகத்தைப் பார்த்தது மட்டும் நினைவில் இருக்கிறது. அவன் பக்கத்தில் யார் யார் இருக்கிறார்கள், சுற்றுப்புறம் எப்படி இருக்கிறது என்றெல்லாம் பார்த்ததில்லை. ஆனால் இந்த முறை அதெல்லாம் கண்ணில் தென்பட்டது. மற்ற இடங்களைப் போல் நிற்காமல் இங்கே கார்த்திகேயன் ஒருகாலைத் தொங்கவிட்டுக்கொண்டும் மறு காலை மடக்கி வைத்துக்கொண்டும் அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி தருகிறான். திருமணக்கோலத்தில் இருப்பதால் கையில் ஒரு மலர்ச்செண்டு வைத்திருக்கிறான் . ஒரு பக்கத்தில் மணமகள் தெய்வயானையும் மலர்செண்டுடன் அமர்ந்திருக்கிறாள் . இன்னொரு பக்கம் அமர்ந்திருப்பது யார் என்பதில் கருத்து வேறுபாடு இருக்கிறது. சிலர் அது தெய்வயானையின் தந்தையான் இந்திரன் என்கிறார்கள். சிலர் வீணையை வைத்திருப்பதால் அது நாரதர் என்கிறார்கள்.

திருமணக் கோலத்தில் ஒரு சிம்மாசனத்தில் வீற்றிருப்பதால் முருகன் திருமுடியின் மேல் ஒரு வெண்கொற்றக் குடை இருக்கிறது. இரு பக்கமும் வானத்தில் சூரிய சந்திரர்கள் இருக்கிறார்கள் . இடப்பாதத்தில் தொடங்கி வலத்தோள் வரை முருகனின் வெற்றிவேலை சாத்திவைத்திருக்கிறார்கள்.

இங்கு வரும் பக்தர்கள் பல பேர் பாலாபிஷேகத்திற்கு பால் கொண்டு வருவார்கள். அம்மாவும் ஒவ்வொரு தடவையும் அபிஷேகத்திற்குப் பால் கொண்டு வந்தார்கள். அந்தப் பாலை முருகனுக்கு அபிஷேகம் செய்ய மாட்டார்கள். முருகன் கையில் சாத்தி வைத்திருக்கும் இந்த வேலுக்குத் தான் பாலாபிஷேகம் நடக்கும் . அந்த அபிஷேகப் பாலை அருந்துவதில் எனக்குக் கொள்ளை இஷ்டம். அபிஷேகத்திற்குப் பின் அந்தப் பால் அதிக இனிப்புடன் இருப்பதாய்த் தோன்றும். அந்த அபிஷேகப் பால் குடித்தால் நல்ல பேச்சுத் திறமையும் கூர்மையான அறிவும் கிடைக்கும் என்று அம்மா நிறைய தடவை சொல்லியிருக்கிறார்கள். இப்போதெல்லாம் அலுவலகத்தில் ஏதாவது சொல்லவேண்டிய நேரத்தில் சொல்ல முடியாமல் முழிப்பதைப் பார்த்தால் தேவையான அளவு அபிஷேகப் பாலைக் குடிக்கவில்லையோ என்று தோன்றுகிறது. அம்மா இருந்திருந்தால் கேட்டிருக்கலாம்.

இந்த ஆராய்ச்சியை எல்லாம் மனம் செய்து கொண்டு இருக்கும் போதே அர்ச்சகர் எங்களிடம் இருந்த அர்ச்சனைத் தட்டை வாங்கி எங்கள் பெயர் நட்சத்திரம் எல்லாம் கேட்டு அர்ச்சனை செய்ய ஆரம்பித்துவிட்டார். கற்பூர ஆரத்தி காட்டும் போது திடீரென்று ஒரு எண்ணம் மனதில் ஓடியது. 'முருகா. எங்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு உன் பெயர் வைக்கிறோம்'. எனக்கே அந்த எண்ணம் மிக்க ஆச்சரியமாய் இருந்தது . இதுவரை குழந்தையைப் பற்றி நானும் என் மனைவியும் பேச ஆரம்பிக்கவில்லை. இரண்டு பேரும் வேலைக்குப் போவதால் கொஞ்ச நாள் சந்தோசமாக இருக்கலாம் என்று எண்ணியிருக்கிறோம். உறவினர்கள் கூட யாரும் குழந்தைப் பற்றிக் கேட்டதாய் நினைவில்லை. எப்படி இந்த எண்ணம் திடீரென்று வந்தது. சற்றுத் திகைப்பாகத் தான் இருந்தது.

யாரிடமும் அந்த எண்ணம் வந்தது என்பதை உடனே சொல்லவில்லை. முதலில் எப்படி அந்த எண்ணம் அந்த நேரத்தில் வந்தது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். பிறகு மற்றவர்களிடம் சொல்லிக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன்.

**********

2002 நடுவில்:

விடுமுறை முடிந்து அமெரிக்கா வந்த ஒரு ஐந்து மாதத்தில் நல்ல செய்தியைச் சொன்னார் துணைவியார். அப்போது என் முகத்தில் தவழ்ந்த சிரிப்பைக் கண்டு 'ஏன் சிரிக்கிறீங்க?' என்று கேட்டபிறகு திருப்பரங்குன்றத்தில் இறைவன் திருமுன்பு ஓடிய எண்ணத்தைப் பற்றிச் சொன்னேன். 'இந்த வருடம் நமக்குக் குழந்தை பிறக்கப் போவதால் தான் நம் குலதெய்வம் முன்னால் அந்த எண்ணம் வந்திருக்கிறது. நமக்குப் பிறக்கும் குழந்தைக்கு முருகன் பெயர் வைக்கவேண்டும்' என்று சொன்னேன். அவரும் மகிழ்ச்சியுடன் ஒத்துக்கொண்டார்.

குழந்தைக்குப் பெயர் தேடும் படலம் கொஞ்ச நாளில் ஆரம்பித்தது. நம் நாட்டில் குழந்தை பிறந்த பின் அது ஆணா பெண்ணா என்று பார்த்தபின் பெயர் தேடிச் சூடினால் போதும். ஆனால் இங்கோ குழந்தை பிறந்த உடனேயே பிறப்புச் சான்றிதழுக்காகப் பெயரைச் சொல்ல வேண்டும். அதனால் பல பெயர்களைப் பற்றி விவாதித்து ஒரு ஆண் பெயரையும் ஒரு பெண் பெயரையும் முடிவு செய்தோம். ஆண் குழந்தை என்றால் 'ஷ்யாம் கார்த்திக்' என்றும் பெண் குழந்தை என்றால் 'தேஜஸ்வினி' என்றும் பெயர் வைக்க முடிவு செய்தோம். பெண்ணாயிருந்தாலும் நீங்கள் முருகன் முன் நினைத்தது போல் முருகன் பெயரைத் தான் வைக்கவேண்டும் என்று என் துணைவியார் சொல்லிக் கொண்டிருந்தார். நானோ, பெண்ணாயிருந்தால் எப்படி முருகன் பெயரை வைப்பது; சுஜாதா ஒரு முறை தேஜஸ்வினி என்ற தலைப்பில் ஒரு கதை எழுதியிருந்தார்; அந்தக் கதையைப் படித்ததிலிருந்து எனக்குப் பெண் குழந்தை பிறந்தால் அந்தப் பெயரைத் தான் வைக்க வேண்டும் என்று இருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

**********

2003 ஆரம்பத்தில்:

பங்குனி உத்திரத் திருநாளில் எங்கள் மகள் பிறந்தாள். இனிமேல் நானும் அவளும் ஒரே நாளில் பிறந்த நாள் கொண்டாடலாம் என்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. நானும் பங்குனி உத்திரத்தில் தான் பிறந்தேன். குழந்தை பெற்ற அசதியில் என் மனைவி அரைத்தூக்கத்தில் இருக்கும் போது ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. குழந்தைக்குப் பெயர் முடிவு செய்துவிட்டீர்களா என்று கேட்டார்கள். நானும் ஆமாம் , முடிவு செய்துவிட்டோம், தேஜஸ்வினி என்று ஒவ்வொரு எழுத்தாக பெயரைச் சொன்னேன். குழந்தை பிறந்த பின் பெண் குழந்தையாய் இருந்தாலும் என்னுடன் பேசி முருகன் பெயர் வைத்துவிடலாம் என்று என் மனைவியார் எண்ணியிருந்திருக்கிறார் . ஆனால் அவர் அரைத்தூக்கத்தில் இருந்ததால் நான் தேஜஸ்வினி என்றப் பெயரைச் சொல்லும் போது அவரால் ஒன்றும் செய்யமுடியவில்லை என்று பின்னர் சொன்னார். நான் பரவாயில்லை; இப்போது பெயர் வைத்துவிட்டோம்; இனிமேல் மாற்றமுடியாது என்று அவரை சமாதானப் படுத்திவிட்டேன்.

**********

2003 முடிவில்:

இதோ குழந்தை பிறந்த எட்டு மாதத்தில் மதுரைக்கு வந்திருக்கிறோம் . குழந்தைக்கு முடியிறக்க குடும்பத்தோடும் உறவினர்களோடும் திருப்பரங்குன்றம் வந்திருக்கிறோம் . முடியிறக்குவதற்கு முன் அர்ச்சனை செய்யவேண்டும் என்று பெரியவர்கள் சொன்னதால் அர்ச்சனை செய்வதற்கு நானும் என் மனைவியும் குழந்தையோடு இறைவன் திருமுன்பு நிற்கிறோம் . ஒரு விதமான குற்ற உணர்வு மனதை பிழிந்துக் கொண்டிருக்கிறது. முருகன் கட்டளையை மீறிவிட்டோமோ என்று மனம் அலைபாய்கிறது . எப்போதும் நிமிர்ந்து நேர்கொண்ட பார்வையுடன் அவன் அழகைப் பருகிய கண்கள் இப்போது வேறு எங்கெங்கோ பார்த்துக் கொண்டிருக்கிறதே ஒழிய அவனை நேரடியாகப் பார்க்கக் கூசுகிறது.

அர்ச்சனைத் தட்டை வாங்கிக் கொள்ள அர்ச்சகர் வந்து நின்றார். எங்கள் இருவரின் பெயர் நட்சத்திரம் கேட்டபின் குழந்தையின் பெயர் நட்சத்திரம் கேட்டார். 'உத்திரம் , தேஜஸ்வினி' என்று நான் சொன்னவுடன் அவர் சொன்னது ' தேஜஸ்வினியா. நல்ல பேராச்சே. சுப்ரமண்ய சஹஸ்ரநாமத்தில் ஓம் தேஜஸ்வினே நம:ன்னு வருது. இன்னைக்கு காலையில தான் அதை கவனிச்சு ரொம்ப நல்ல பேராச்சேன்னு நினைச்சேன். நீங்க குழந்தைக்கு முருகன் பேரே வச்சிருக்கேள்' என்று சொல்லிவிட்டு அர்ச்சனை செய்யச் சென்றுவிட்டார். கற்பூர ஆரத்தி காட்டும் போது அங்கு அமர்ந்திருக்கும் தேஜஸ்வியும் என் கையில் இருந்த தேஜஸ்வினியும் ஒரே நேரத்தில் சிரித்தார்கள்.

49 comments:

G.Ragavan said...

குமரன், முருகனருள் முன்னிற்கும் என்றால் அந்த முருகப் பெருமானைப் பற்றிச் சொல்லுமிடமெல்லாம் ராகவன் முன்னிற்பான் என்பதற்கேற்ப முதல் பின்னூட்டத்தை எனக்கு ஒதுக்கிய முருகனுக்கு நன்றி.

அலுவலகம் சென்று ஆழமான பின்னூட்டம் இடுகிறேன்.

ஜோ/Joe said...

சுவாரஸ்யமான பதிவு!

முத்துகுமரன் said...

குமரன்,

அற்புதமான பதிவு. உங்கள் வாழ்வின் மிக மகிழ்வான தருணங்களை அழகாக மாலையாக்கி இருக்கிறீர்கள். இதற்கு நீண்ட பின்னூட்டம் இட மனசு சொல்கிறது. அதனால் மாலை பதிக்கிறேன்.

கீதா said...

குமரன்!! தேஜஸ்வினிக்கு இப்போ 3 வயசாகப்போகுதா.. பிறந்த நாள் என்னைக்கு (தமிழ் நாட்காட்டியெல்லாம் என்கிட்ட இப்ப இல்லை) ஒரு புகைப்படம் இருந்தா (இல்லாம என்ன) இங்கே போடுங்களேன்..

G.Ragavan said...

குமரன், ஒரு நாமம் ஒரு உருவம் இல்லாதான் என்றுதான் தமிழ் கூறுகிறது. எல்லாமே அவனுடைய பெயர்கள்தான். எல்லாமே அவனுடைய உருவங்கள்தான். அதனால்தான் நோக்குமிடமெங்கும் இறைவனைக் கண்டனர் அருளாளர் பெருமக்கள்.

எப்பெயராயினும் அப்பெயர் சுப்பன் பெயரே! முருகப்பன் பெயரே!

திருப்பரங்குன்றம் எனக்கும் மிகவும் பிடித்த கோயில். ஒருமுறை தூத்துக்குடியிலிருந்து நானும் எனது மூத்த தங்கையும் தனியாகப் புறப்பட்டு திருப்பரங்குன்றம் வந்தோம். நல்ல அருமையான தரிசனம். அன்றைக்கு அபிசேகம் செய்த பாலை பெரிய கொப்பரையில் ஊற்றி வைத்திருந்தார்கள். அன்பர்கள் சிலர் அதில் வெல்லத்தையும் தட்டினார்கள். அள்ளி அள்ளிக் குடிக்கக் கிடைத்தது அந்த அமுதம்.

டிபிஆர்.ஜோசப் said...

எப்படி இந்த எண்ணம் திடீரென்று வந்தது. சற்றுத் திகைப்பாகத் தான் இருந்தது.//

அதுதான் குமரன் இறைவனின் செயல்..

பிற்பாடு நீங்கள் தற்செயலாக வைத்த பெயரும் முருகன் விருப்பப்படியே என்பதும் அவனுடைய விளையாட்டுகளில் ஒன்று..

இப்ப எப்படியிருக்கா பொண்ணு?

rv said...

குமரன்,
விஷ்ணுசித்தர் பத்தி பதிவெல்லாம் வெச்சுகிட்டு இத மறந்துட்டீங்களா?

நம்பிநம்பியென்று நாட்டுமானிடப்பேரிட்டால்
நம்பும்பிம்புமெல்லாம் நாலுநாளில்அழுங்கிப்போம்
செம்பெருந்தாமரைக்கண்ணன் பேரிட்டழைத்தக்கால்
நம்பிகாள். நாரணன் தம்அன்னைநரகம்புகாள்.



அருமையான பதிவு. நீங்கள் மனைவிக்கு கடுக்காய் கொடுக்கலாம் என்று பார்த்திருக்கிறீர்கள், முருகன் உங்களுக்கே தெரியாமல் தன்பெயர் கொடுத்து விளையாடியிருக்கிறான்! :)

தாணு said...

குன்று தவிர்த்து கடல் காற்று வாங்கும் முருகன் திருச்செந்தூரான்தான் இல்லையா குமரன்? அறுபடை வீடுகளில் முதல் படைவீடு திருப்பரங்குன்றம் என்று வாசித்ததாக நினைவு. சரிதானா?

G.Ragavan said...

தாணு, குன்று தவிர்த்த குமரன் படை வீடுகளே இல்லை. திருச்செந்தூர் கடற்கரைதான் என்றாலும் அது சந்தனமலை. ஒரு வித நுரைப்பாறைகளால் ஆன மலை. இப்பொழுது அது கோயிலாக மாறியிருக்கிறது. ஆனாலும் கோயிலுக்குள் ஆங்காங்கு காணலாம். வள்ளிகுகையும் அந்த மலைதான். ஆறுபடை வீடுகளும் குன்றில் அமைந்தவைதான்.

ஆறுபடைவீடுகளின் வரிசை திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் எழுதிப் புகழ்ந்த வரிசையில் சொல்லப்படுவது. திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய், திருவேரகம், திருவாவினன்குடி, திருத்தணி மற்றும் பழமுதிர்ச்சோலை.இதுதான் வரிசை என்று நினைக்கிறேன். நாளை சரிபார்த்துச் சொல்கிறேன். அதற்குள் குமரனே சொல்லி விடுவார் என நினைக்கிறேன்.

ஞானவெட்டியான் said...

தங்்களின் வாழ்வுக் கோவை (கோர்வையா வருவதால்) மிக நன்றாகக் கோர்வையாய் வருகிறது. நானும் திருப்பரங்குன்றம் சென்று அபிடேகப்பால் அருந்தலாம்தான். மருத்துவர் சுகர்(சுகரல்ல sugar) +++்ககு மேல் போகக்கூடாது என்றிருக்கிறார்.

ENNAR said...

குமரன்
திருப்பரங்குன்றும் தெப்பக்குளத்தில் மீன்கள் உள்ளனவா? பொரி வாங்கி மீன்களுக்கு போடுவோமே இப்பொழுது உண்டா? மீன்கள் நலமா?

சிவா said...

பாப்பாவோட பெயர் காரணம் இதுவா. ரொம்ப சுவாரஸ்யம் குமரன். உங்கள் நடையில் நல்ல ஓட்டம். நட்சத்திரம் கொடுத்தவுடன் எப்படி இப்படி எல்லாம் கலக்க ஆரம்பித்து விடுறீங்க. கலக்குங்க. வாழ்த்துக்கள்.

குமரன் (Kumaran) said...

என்ன இராகவன், ஆழ்ந்த பின்னோட்டம் இடப் போகிறேன் என்று சொல்லிவிட்டு அவ்வளவாய் பெரிதாக இல்லாத பின்னூட்டம் போட்டுவிட்டீர்கள்? சரி சரி ஆழமாய்த் தான் போட்டிருப்பீர்கள். பெரிதாய் இருந்தால் அது அகலப் பின்னோட்டமாய்த் தான் இருக்கும் :-)

முருகப்பெருமானைச் சொல்லும் இடமெல்லாம் இராகவன் முன்னிற்பது மிக்க மகிழ்ச்சி.

முருகன் என்றால் அழகன் என்று தமிழ்மொழி கூறும் அந்த
அழகன் எங்கள் குமரன் என்று மனமொழி கூறும்ன்னு பாடாம இருந்தாச் சரி. :-)

குமரன் (Kumaran) said...

நன்றி ஜோ.

குமரன் (Kumaran) said...

முத்துக்குமரன். அழகான இந்த மாலைக்கு அழகிய மாலைப் பொழுதில் நீண்ட பின்னூட்டம் இடுங்கள். காத்திருக்கிறேன்.

இந்தப் பதிவை அழகான மாலையென்று சொன்னதற்கு மிக்க நன்றி.

குமரன் (Kumaran) said...

ஆமாம் கீதா. தேஜஸ்வினிக்கு இந்த பங்குனி (மார்ச்) வந்தால் 3 வயது ஆகப் போகிறது. நட்சத்திரப் படி பிறந்த நாள் 'பங்குனி உத்திரம்' (எனக்கும் :-)) ஆங்கில நாட்காட்டிப் படி மார்ச் 18. அவள் புகைப்படத்தை உங்களுக்குத் தனி மடலில் அனுப்புகிறேன்.

குமரன் (Kumaran) said...

ஆமாம் இராகவன். ஒரு நாமம் ஒரு உருவம் என்று அவனை அடக்கிவைக்க முடியாது. எல்லா நாமங்களும் எல்லா உருவங்களும் அவனுடையதே என்று தான் நம் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். அப்பன் சுப்பன் முருகப்பன் பெயர் தானே இராகவன் என்பதும் :-)

நன்றாய்த் தெரியுமே. அபிஷேகப் பாலை அருந்தியதால் தான் இன்று இப்படி தமிழமுதத்தால் எங்களைக் குளிப்பாட்டிக் கொண்டிருக்கிறீர்கள் என்று. :-) அதில் வெல்லம் வேறு சேர்த்துவிட்டார்களா அன்பர்கள். இனிப்புக்கு இனிப்பூட்டியிருக்கிறார்கள். :-)

குமரன் (Kumaran) said...

ஆமாம் ஜோசஃப் சார். நீங்க சொல்றது மிக்கச் சரி. தற்செயலாக நடந்தது, நடக்கிறது என்று நாம் நினைப்பதெல்லாம் அவன் செயலகளாகத் தான் இருக்கிறது என்பதைப் பின்னர் உணர்கிறோம்.

பொண்ணு நல்லா இருக்கா. ரொம்ப நன்றி.

குமரன் (Kumaran) said...

உண்மைதான் இராமநாதன். அவன் பெயர் வைத்து அழைத்தால் அந்தக் குழந்தையின் பெற்றோர் நரகம் புகவேண்டிய அவசியம் இன்றித் தான் போகும்.

என்ன இன்னும் என் துணைவியார் சொல்லிக் கொண்டு தான் இருக்கிறார் - முருகன் பெயர் வைப்பதென்றால் எத்தனையோ தமிழ் பெயர்கள் இருக்கின்றனவே; நாம் வடமொழிப் பெயராய் வைத்துவிட்டோம் என்று. :-) அவன் அப்படி நினைத்திருக்க நாம் மாற்றி வைக்க முடியுமா?
எல்லோருடைய பெயரும் தாய் தந்தையர் வைத்தாலும் அது இறைவன் அருளிய பெயர் என்பது தான் என் எண்ணம். அதைத் தான் என் அறிமுகக் கவிதையிலும் 'நலமுடைக் குமரனெனும் நல்ல பெயர் தனை அருளினான்' என்று சொன்னேன்.

குமரன் (Kumaran) said...

தாணு அக்கா, உங்கள் கேள்விக்கு இராகவனார் ஏற்கனவே பதில் சொல்லிவிட்டார். உங்கள் கேள்வியைப் பார்த்தவுடன் எனக்கு வள்ளி குகை தான் நினைவிற்கு வந்தது. இராகவன் இன்னும் விளக்கமாகப் பதில் சொல்லிவிட்டார்.

படித்துப் பார்த்துக் கருத்து சொன்னதற்கு நன்றி. உங்கள் எதிர்ப்பார்ப்பிற்கேற்ப இருக்கிறதா பதிவுகள்?

குமரன் (Kumaran) said...

ஆமாம் இராகவன். குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் கோயில் கொண்டிருந்தாலும் ஆறு கோயில்களைத் தான் சிறப்பாய் அவனுடைய படைவீடுகளாய்ச் சொல்வது வழக்கம். அந்த ஆறு படைவீடுகளும் நக்கீரர் திருமுருகாற்றுப் படையில் பாடிய திருத்தலங்கள் தான். வரிசையைச் சரியாகத் தான் சொல்லியிருக்கிறீர்கள். திருப்பரங்குன்றம் (தெய்வயானைத் திருமணக்கோலம்), திருச்சீரலைவாய் (திருச்செந்தூர் - சூரனை வதைக்கப் போர்க்கோலம் கொள்ளும் முன் தந்தையை வணங்கி நின்றது), திருவேரகம் (சுவாமிமலை - அப்பனுக்குப் பாடம் சொன்ன சுப்பனாய் தகப்பன் சுவாமியாய் அமர்ந்தது), திருவாவினன்குடி (பழனி - கனி கிடைக்கவில்லையே என்று பொய்க்கோபம் கொண்டு மலைமேல் கோவணாண்டியாய் நின்று பின் பெற்றோர் சமாதானப்படுத்த கோபம் தனிந்து மயில் மேல் அமர்ந்து நின்றது), திருத்தணி (சூரனைக் கொன்ற கோபம் தனிந்து குறமகளாம் வள்ளியை கடிமணம் புரிந்தது), பழமுதிர்ச்சோலை (ஒளவைக்கு சுட்ட பழம் அருளி தன் துணைவியர் இருவருடன் நின்றது) - இவையே கந்தனின் ஆறு படைவீடுகள்.

சில நேரம் திருவேரகத்திற்குப் பதிலாய் குன்று தோறாடலும் சொல்லுவதுண்டு.

குமரன் (Kumaran) said...

நன்றி ஞானவெட்டியான் ஐயா. திருப்பரங்குன்றம் சென்றால் ஒரு துளி அபிஷேகப் பாலாவது அருந்துங்கள். அதில் சுகர் சேர்ப்பதில்லை. :-)

குமரன் (Kumaran) said...

என்னார் ஐயா. போன முறை திருப்பரங்குன்றம் சென்ற போது லக்ஷ்மி தீர்த்தத்திற்குச் சென்று மீன்களுக்குப் பொரி போட்டோம். இப்போதும் மீன்களுக்குப் பொரி போடும் வழக்கம் இருக்கிறது. அது இன்னும் நெடுநாளைக்கு இருக்கும் என்று தான் தோன்றுகிறது.

குமரன் (Kumaran) said...

என்ன சிவா. நடையில் ஓட்டமா? என்ன சொல்கிறீர்கள்? நான் நடக்கிறேனா இல்லை ஓடுகிறேனா? :-)

வாழ்த்துக்களுக்கு நன்றி.

G.Ragavan said...

// முருகப்பெருமானைச் சொல்லும் இடமெல்லாம் இராகவன் முன்னிற்பது மிக்க மகிழ்ச்சி. //

அதில் எனக்குதான் பெருமை.

// முருகன் என்றால் அழகன் என்று தமிழ்மொழி கூறும் அந்த
அழகன் எங்கள் குமரன் என்று மனமொழி கூறும்ன்னு பாடாம இருந்தாச் சரி. :-) //

அதத்தான் ஊராரும் உலகாரும் பாடுறாங்களே. (உங்க வீட்டுலயும் பாடுறாங்கன்னு கேள்வி).

// ஆமாம் இராகவன். ஒரு நாமம் ஒரு உருவம் என்று அவனை அடக்கிவைக்க முடியாது. எல்லா நாமங்களும் எல்லா உருவங்களும் அவனுடையதே என்று தான் நம் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். அப்பன் சுப்பன் முருகப்பன் பெயர் தானே இராகவன் என்பதும் :-) //

ஆமாம். இந்தக் கருத்துப்படி எல்லாம் அவன் பெயர்தான். ஈஷ்வர் அல்லா தேரே நாம்.

// சில நேரம் திருவேரகத்திற்குப் பதிலாய் குன்று தோறாடலும் சொல்லுவதுண்டு. //

அது திருத்தணிக்கு மாற்றாக. திருவேரகத்திற்கு அல்ல. குன்றுதோறாடல் என்ற வழக்கம் அருணகிரிக்குப் பிறகு வந்தது என்று நினைக்கிறேன். அதற்கு முன்பு திருத்தணிதான் கூறப்பட்டது. அருணகிரி குன்று தோறும் சென்று குமரனைக் கண்டு பேரின்பம் கொண்டு பாடிய தீந்தமிழ்ப் பாக்களின் தொகுப்பாததால் அப்படி சொல்லப் பட்டது.

பூனைக்குட்டி said...

கலக்குங்க குமரன். நட்சத்திரமா வாழ்த்துக்கள். கடவுளுக்கும் எனக்கும் கொஞ்சம் தூரம். அதனால பதிவைப்பத்தி எதுவும் சொல்லலை. சுத்தமா நேரமே கிடைப்பதில்லை சமீபகாலமாக. ஆனால் கிடைக்கும் நேரத்தில் படித்துக்கொண்டும் இருக்கிறேன்.

குமரன் (Kumaran) said...

//அது திருத்தணிக்கு மாற்றாக. திருவேரகத்திற்கு அல்ல. //

அப்படியா? திருப்பரங்குன்றத்தில் ஆறுபடைவீடுகள் படம் வைத்திருப்பார்கள். அதில் திருவேரகத்திற்குப் பதிலாக குன்று தோறாடல் பார்த்ததாக நினைவு.

குமரன் (Kumaran) said...

சதயம். இந்த உணர்வு வரவேண்டும் என்று தான் நானும் முயற்சித்தேன். உங்களுக்கு அப்படித் தோன்றியதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. கல்லூரியில் படிக்கும் போது அடிக்கடி போய்ப் பார்ப்பீர்களா குமரனை?

குமரன் (Kumaran) said...

வாழ்த்துக்களுக்கு நன்றி மோகன் தாஸ். நேரம் கிடைக்கும் போது படித்துக் கருத்து சொல்லுங்கள்.

நிலா said...

//அந்தக் காலத்தில் இருந்ததை விட அதிக கூட்டம் இப்போது. எல்லாரும் சொல்வது போல மக்களுக்கு இறை நம்பிக்கை முன்பைவிட அதிகமாய் விட்டது தான் போலும்.//

ஒருவேளை மக்கள் தொகை பெருக்கத்தினாலோ:-)

மணியன் said...

உங்களை ஆட்கொண்ட முருகனின் அற்புத லீலையை அழகாக எழுதியிருக்கிறீர்கள். நானும் குன்றத்திலே முருகனுக்கு கல்யாணத்தை கண்டு மகிழ்ந்திருக்கிறேன்.

நிகழ்கால வணிகமயமாக்கலில் அபிடேகப் பாலை பாட்டிலில் அடைத்து விற்காமல் இருந்தால் சரி.

தேஜஸ்வினிக்கு வாழ்த்துக்கள் !

G.Ragavan said...

முருகப் பெருமானைப் பற்றி இன்று ஒரு புதிய தொடர் தொடங்கியிருக்கிறேன். இங்கு வந்து பாருங்கள். (குமரனின் அனுமதியின்றி ஒரு விளம்பரம்)

http://iniyathu.blogspot.com/2006/01/1.html

G.Ragavan said...

http://gragavan.blogspot.com/2006/01/blog-post_24.html

இன்னொரு விளம்பரம். இதுவும் குமரன் தொடர்பானதுதான். நம்ம தமிழ்மணத்து இந்தவார நட்சத்திரக் குமரன் பத்தியது. அவரப் பத்தி ஒரு செய்யுள் எழுதீருக்காருல்ல. அதுக்கு நானும் மயிலாரும் சேர்ந்து ஒரு வழியா விளக்கம் சொல்லீருக்கோம். படிச்சுக் கருத்து சொல்லுங்க.

குமரன் (Kumaran) said...

மக்கள் தொகைப் பெருக்கமும் ஒரு காரணம் தான் நிலா. ஆனால் நாத்திகம் பேசியவர்கள் என் தந்தையார் தலைமுறையில் அதிகம் என்பதும் எங்கள் தலைமுறையில் நாத்திகம் அவ்வளவு சூடாக இளைஞர்களிடம் இல்லை என்பதும் நான் கண்டது. பெரியாரின் தாக்கம் இப்போது குறைந்து விட்டது.

குமரன் (Kumaran) said...

பாராட்டுகளுக்கு நன்றி மணியன்.

நல்லவேளை இதுவரை அபிஷேகப் பாலை விற்க ஆரம்பிக்கவில்லை. யாரும் அறநிலையத்துறைக்கு இன்னும் சொல்லவில்லை என்று எண்ணுகிறேன். யாராவது சொல்லிவிட்டு அதன் பெருமைப் பற்றியும் ஒரு பரபரப்புச் செய்தியைப் பரப்பிவிட்டார்கள் என்றால் போதும். பிச்சிக்கிட்டுப் போகும்.

தேஜஸ்வினி சார்பாக உங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

குமரன் (Kumaran) said...

இராகவன் உங்கள் பதிவைப் பற்றிச் சொல்ல என் அனுமதியும் வேண்டுமா? அந்தத் தொடரைத் தொடங்கியதற்கு மிக்க நன்றி.

குமரன் (Kumaran) said...

இராகவன். என் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு என் கவிதைச் செய்யுளுக்கு விளக்கம் எழுதியதற்கு மிக்க நன்றி. அருமையாகவும் நகைச்சுவையாகவும் இருக்கிறது.

Unknown said...

முருகன் தமிழ் கடவுள். திரு ஆவினன் குடி -எங்க ஊருக்குப் பக்கத்தில் உள்ளதால் அடிக்கடி செல்லும் ஊர் பழனி. திருச்சி பேருந்து நிலையத்துல திண்டியல் (திண்டுக்கல்)., பழனி ந்னு குரல் கேட்டாலே கால்கள் நடக்கக் கொஞ்சம் மறுக்கும் ஊர் ஞாபகத்தில்.

//ஆனால் நாத்திகம் பேசியவர்கள் என் தந்தையார் தலைமுறையில் அதிகம் என்பதும் எங்கள் தலைமுறையில் நாத்திகம் அவ்வளவு சூடாக இளைஞர்களிடம் இல்லை என்பதும் நான் கண்டது//. .

இதை இப்படியும் சொல்லலாம் தன்னை நம்பியவர்கள் நம் தந்தைகளின் காலத்தில் நிறைய. இப்போது அது குறைந்திருக்கிறது.

//பெரியாரின் தாக்கம் இப்போது குறைந்து விட்டது//
பெரியாரின் தாக்கம் மிக அதிகமாகி இருப்பதாகவே நான் உணர்கிறேன்.

தேஜஸ்வினியின் பெயரில் அழகிய 'தேவி' ஒளிந்திருக்கிறாளா?. பெயரிலேயே தேவி இருக்கிறது.

முத்துகுமரன் said...

//இந்தப் பதிவை அழகான மாலையென்று சொன்னதற்கு மிக்க நன்றி.//

நான் அப்படி சொல்லாதிருந்தால் எனக்கு பார்வை கோளாறு என்று அர்த்தம். நீங்கள் என்னை ஒரே கண்ணோட்டத்தில்தான் பார்க்கிறீர்கள் என நினைக்கிறேன். அது போகட்டும்.

என்னை பொறுத்தவரை இறைவன் ஒருவனே. அவனுக்கு பேரும், அவனைப் போய்ச் சேரும் பாதைகள் வேறு வேறாக இருக்கலாம். சக்தி வாய்ந்த தெய்வங்கள் என்று குறிப்பிடுபவற்றை விட இஷ்ட தெய்வத்திற்கு தனிச் சிறப்பு உண்டு. நாம் எல்லோரிடமும் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்வதில்லை. நமக்கு மிக நெருக்கமானவர்களிடம் மட்டும்தான் உள்ளுக்குள் இருப்பதை சொல்வோம். அதே தான் உங்களுக்கும் நடைபெற்றிருக்கிறது. திருப்பரங்குன்றத்து முருகனை நீங்கள் மிக நெருக்கமானவனாக உணர்ந்திருக்கிறீர்கள், அதானால்தான் குழந்தை பற்றிய எண்ணமும் அவன் சன்னிதானத்தில் உங்களுக்கு உதித்திருக்கிறது. சில விசயங்களை பெற்றோர் கேட்காமலும் நாம் சொல்வதில்லையா? ஏன் அப்படி செய்கிறோம், வேறு எவரையும் விட அவர்களின் அங்கீகாரத்தையும் ஆசியையும் எதிர்பார்க்கிறோம். அது போலத்தான் குழந்தைச் செல்வம் என்னும் பெரும்பேற்றை பற்றியான எண்ணம் அங்கு உதித்திருக்கிறது.

இங்கு இன்னொன்று, இறை நம்பிக்கையின் அற்புதமான பலன் மனநிறைவு, மிகச் சாதரணமாக நிகழக்கூடிய நிகழ்விற்கும் ஒரு அர்த்தம் வந்து விடுவது. நடப்பது எதோச்சையானது என்றாலும் அது நமக்குள் கிளப்பும் உற்சாக ஊற்று வற்றாதது. அதுதான் தங்கள் திருமகள் பங்குனி உத்திரத்தில் உதித்தது.

பெண் குழந்தை என்றாலே என்னைப் பொறுத்தவரை ஒரு அற்புதமான பரிசு.
நீங்கள் அப்பரிசைப் பெற்ற பாக்கியவான். உங்களுக்குள் எண்ணம் கரு கொள்ள வைத்தவனுக்கு பேர் வைக்கவா தெரியாது:-)

இந்தப் பூ மாலையோட நம்ம பூவையும் சேர்த்து விடுகிறேன்.

எனக்கு பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் மிகவும் பிடிக்கும். அவரை கடவுளாக அல்ல என் நண்பனாகத்தான் உணர்கிறேன். ஆளப்பார்த்தா நல்லா ஜம்முன்னு மாப்பிள்ளை மாதிரி அலங்காரத்தோட நமக்கு எதிர உட்கார்ந்துகிட்ட என்னடா பண்றன்னு கேக்குற தோரணையாத்தான் இருக்கும்.
இங்கு பிள்ளையாரைப் பற்றிய வரலாற்றுக்குள் போகவில்லை. அங்கு செல்லும் போது நான் எப்படி உணர்கிறேன் என்பதைத் தான் சொன்னேன்.

Anonymous said...

Kumaran,

Kalloori natkalil ovvoru Thingat kilamai athikaalai 'cycle'-il Thirupparamkundram sendru paalabishegan seithu vantha naatkkal gnabathirkku varuginrana.

Nandri,
Kumaresh

தி. ரா. ச.(T.R.C.) said...

முருகன் தங்கள் வீட்டிற்கு எந்த ரூபத்தில் எந்த பேரில் வரவெண்டும் என்பது அவன் செயல்.அதை மாற்றுவதற்கோ இல்லை வேறு மாதிரி நினைப்பதற்கோ உஙகளுக்கு எந்த உரிமையும் கிடையாது இந்த நட்சத்திர அந்தஸ்தும் அவன் தந்ததுதானே. தி ரா ச

குமரன் (Kumaran) said...

//முருகன் தமிழ் கடவுள்// அப்டிபோடு அக்கா. துளசி அக்காகிட்ட தான் கேக்கணும். மலையாளிங்களும் முருகன் மலையாளக் கடவுள்ன்னு சொல்றாங்களாமே? :-) அதனால தான் முருகன் (தமிழாளுங்க மேல கோவிச்சுக்கிட்டு) கேரளா பாத்துக்கிட்டு பழனியில நிக்கிறாராம். :-)

அடைப்புக் குறிக்குள் உள்ளது நான் வெளாட்டுக்குச் சேர்த்தது :-)

பழனி, மதுரையில இருந்து என்ன கொள்ளை தூரத்துலயா இருக்கு? நாங்களும் வருஷத்துக்கு மூனு தடவையாவது பழனிக்குப் போயிடுவோம். பழனி தனி மாவட்டம் ஆகும் முன் மதுரை மாவட்டத்துல இருந்தது. அப்ப எல்லாம் மதுரை மாவட்டத்துல மூனு படை வீடு இருக்குன்னு சொல்லிக்குவேன். இப்ப ரெண்டு தான் - திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை.

குமரன் (Kumaran) said...

அக்கா, நாத்திகம் பத்தி இந்த வாரம் முடிஞ்ச பின்ன பேசலாம். :-) தேஜஸ்வினியின் பெயரில் தான் தேவி ஒளிந்திருக்கிறது. நேரில் பார்த்தால் எல்லாமே வெளிப்படை தான். :-)

குமரன் (Kumaran) said...

//நீங்கள் என்னை ஒரே கண்ணோட்டத்தில்தான் பார்க்கிறீர்கள் என நினைக்கிறேன்.//

இல்லை முத்துக்குமரன். அது எந்த உள்ளர்த்ததுடனும் சொல்லப்பட்ட வார்த்தை இல்லை. எல்லாருக்கும் பல பரிமாணங்கள் உண்டு என்று தெரியும்.

//என்னை பொறுத்தவரை இறைவன் ஒருவனே. அவனுக்கு பேரும், அவனைப் போய்ச் சேரும் பாதைகள் வேறு வேறாக இருக்கலாம். சக்தி வாய்ந்த தெய்வங்கள் என்று குறிப்பிடுபவற்றை விட இஷ்ட தெய்வத்திற்கு தனிச் சிறப்பு உண்டு. நாம் எல்லோரிடமும் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்வதில்லை. நமக்கு மிக நெருக்கமானவர்களிடம் மட்டும்தான் உள்ளுக்குள் இருப்பதை சொல்வோம். அதே தான் உங்களுக்கும் நடைபெற்றிருக்கிறது. திருப்பரங்குன்றத்து முருகனை நீங்கள் மிக நெருக்கமானவனாக உணர்ந்திருக்கிறீர்கள், அதானால்தான் குழந்தை பற்றிய எண்ணமும் அவன் சன்னிதானத்தில் உங்களுக்கு உதித்திருக்கிறது. சில விசயங்களை பெற்றோர் கேட்காமலும் நாம் சொல்வதில்லையா? ஏன் அப்படி செய்கிறோம், வேறு எவரையும் விட அவர்களின் அங்கீகாரத்தையும் ஆசியையும் எதிர்பார்க்கிறோம். அது போலத்தான் குழந்தைச் செல்வம் என்னும் பெரும்பேற்றை பற்றியான எண்ணம் அங்கு உதித்திருக்கிறது.
//

அற்புதமாகச் சொல்லியிருக்கிறீர்கள். மிக்க நன்றி.

//இங்கு இன்னொன்று, இறை நம்பிக்கையின் அற்புதமான பலன் மனநிறைவு, மிகச் சாதரணமாக நிகழக்கூடிய நிகழ்விற்கும் ஒரு அர்த்தம் வந்து விடுவது. நடப்பது எதோச்சையானது என்றாலும் அது நமக்குள் கிளப்பும் உற்சாக ஊற்று வற்றாதது. அதுதான் தங்கள் திருமகள் பங்குனி உத்திரத்தில் உதித்தது.
//

உண்மை உண்மை மிகவும் சரி. Statistical Coincidence என்று இணையத்தில் தேடிப் பாருங்கள். இந்த உலகில் நடக்கும் எல்லா அற்புதங்களுக்கும் அறிவியல் ரீதியான விளக்கம் தரலாம் என்று அற்புதமாகச் சொல்லியிருப்பார்கள்.


//பெண் குழந்தை என்றாலே என்னைப் பொறுத்தவரை ஒரு அற்புதமான பரிசு.
நீங்கள் அப்பரிசைப் பெற்ற பாக்கியவான். உங்களுக்குள் எண்ணம் கரு கொள்ள வைத்தவனுக்கு பேர் வைக்கவா தெரியாது:-)

//

:-)

கற்பக விநாயகரைப் பற்றிய உங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

தாமே தமக்குச் சுற்றமும். தாமே தமக்கு விதிவகையும்.

இறைவனே நமக்குச் சுற்றம். அவனே நமக்கு விதிவகையும் என்று மாணிக்கவாசகரும் சொல்லியிருக்கிறாரே?!

குமரன் (Kumaran) said...

குமரேஷ். நீங்கள் சௌராஷ்ட்ரா கல்லூரியில் படித்தீர்களா? அப்படி என்றால் அடிக்கடி திருப்பரங்குன்றம் செல்லும் வாய்ப்பு கிட்டியிருக்கும்.

நான் திங்களன்று திருப்பரங்குன்றம் செல்வதைத் தவிர்ப்பேன். கூட்டம் தாங்க முடியாது. அதனால். :-)

குமரன் (Kumaran) said...

உண்மைதான் தி.ரா.ச. முருகன் நினைத்ததை இந்தக் குமரனால் மாற்றமுடியுமா என்ன?

நட்சத்திர அந்தஸ்தும் அவன் தந்தது தான். (மதி) கந்தசாமி தந்தது தானே.

VSK said...

அற்புதமான மெய் சிலிர்க்க வைக்கும் இந்தப் பதிவை இப்போதுதான் குமரன் தயவால் [ந்ம்ன் 'நட்சத்திர குமரன் தான்!] பார்த்தேன்.

மிகவும் உணர்ச்சிபூர்வமாய் எழுதியிருக்கிறீர்கள்!

முருகன் அருள் முன்னிற்கிறது உங்களுக்கு என்ப்தற்கு இதைவிட வேறு சான்று தேவையே இல்லை.

ஒரு சிறு விளக்கம்.
நான் அன்றாடம் படிக்கும் தேவராய ஸ்வாமிகள் அருளிய அருபடைக் கவசங்களின் வரிசை கீழ்வருமாறு அமைந்துள்லது:
1. திருப்பரங்குன்றுறைத் திருமகன்
2. செந்தில் மேவும் சரவனன் [வழக்கமாக அனவருக்கும் தெரிந்த கவசம்]
3. பழனிப் பதிவாழ் அப்பன்
4. திருவேரகம்வாழ் தேவன் [ஸ்வாமிமலை]
5. குன்றுதோறாடும் குமரன் [திருத்தணி]
6. பழமுதி சோலைப் பண்டிதன்

தங்கள் கவனத்திற்கு.

மிக்க நன்றி.

மெளலி (மதுரையம்பதி) said...

நல்ல அனுபவம், அதை மிக அழகா கோர்த்திருக்கீங்க குமரன்.

தேஜஸ்வினி, நல்ல தேஜஸுடன் வளர வாழ்த்துக்கள்....

குமரன் (Kumaran) said...

நன்றி மௌலி.