சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல்
வேந்தனைச் செந்தமிழ் நூல் விரித்தோனை விளங்கு வள்ளி
காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார் மயில்வாகனனைச்
சாம்துணைப்போதும் மறவாதவர்க்கு ஒரு தாழ்வில்லையே
- அருணகிரிநாதரின் கந்தர் அலங்காரம்
சிவந்த திருமேனியையுடைய சேந்தனை, கந்தப்பெருமானை, திருச்செங்கோட்டு மலைக்கு உரியவனை, சிவந்த சுடரும் வேலுக்கு அரசனை, (தமிழ் சங்கத்தில் அமர்ந்து) செந்தமிழ் நூல்களை வளர்த்தவனை,
புகழுடன் விளங்குகின்ற வள்ளியம்மையின் கணவனை, மணம் மிகுந்த கடம்ப மலரை அணிந்தவனை, மழையைப் பொழியும் மேகத்தைக் கண்டு மகிழ்கின்ற மயிலை வாகனமாக உடையவனை, உயிர் பிரியும்வரை மறவாதவர்களுக்கு எந்த ஒரு குறையும் இல்லையே!
நாள் என் செயும்? வினைதான் என் செயும்? எனை நாடி வந்த
கோள் என் செயும்? கொடும் கூற்று என் செயும்? குமரேசர் இரு
தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே
- அருணகிரிநாதரின் கந்தர் அலங்காரம்
நல்ல நாள் தீய நாள் என்பதெல்லாம் என்ன செய்யும்? நான் முன்பு செய்த நல்வினை தீவினை தான் என்ன செய்யும்? என் வினைகளுக்கு ஏற்ப பயன் தர என்னை தேடி வரும் நவகோள்களும் (நவகிரகங்களும்) என்ன செய்யும்? கொடிய கூற்றுவன் (யமன்) தான் என்ன செய்ய முடியும்? குமரேசனுடைய இரண்டு திருவடிகளும் அவற்றில் உள்ள சிலம்புகளும் சதங்கைகளும் தண்டைகளும், ஆறு திருமுகங்களும், பன்னிரு திருத்தோள்களும், அவற்றில் அணிந்த கடம்ப மாலையும் எனக்கு முன்னே வந்து தோன்றிடுமே!
ஆறிரு தடந்தோள் வாழ்க! ஆறுமுகம் வாழ்க! வெற்பைக்
கூறுசெய் தனிவேல் வாழ்க! குக்குடம் வாழ்க! செவ்வேள்
ஏறிய மஞ்ஞை வாழ்க! ஆனை தன் அணங்கு வாழ்க!
மாறிலா வள்ளி வாழ்க! வாழ்க சீர் அடியார் எல்லாம்!
- ஸ்ரீ கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்த புராணம்
முருகப்பெருமானின் மலைகளைப் போல் உயர்ந்த (தட) பன்னிரு (ஆறு * இரு) திருத்தோள்கள் வாழ்க!
ஆறு திருமுகங்களும் வாழ்க!
க்ரௌஞ்சம் என்னும் மாய மலையைப் பிளந்த (வெற்பைக் கூறு செய்) ஒப்பில்லாத (தனி) திருவேல் வாழ்க!
சேவல் (குக்குடம்) கொடி வாழ்க!
சிவந்த தலைவனாம் (செவ்வேள்) சேந்தன் ஏறும் மயில் (மஞ்ஞை) வாழ்க!
ஐராவதம் என்னும் தெய்வ யானை வளர்த்த (ஆனை தன்) திருமகளார் (அணங்கு) தெய்வயானை அம்மை வாழ்க!
ஒப்பில்லாத (மாறு இலா) வள்ளியம்மை வாழ்க!
சிறப்புடைய முருகன் அடியவர்கள் எல்லாரும் வாழ்க!
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!
- அருணகிரிநாதரின் கந்தர் அனுபூதி
ஆறுமுகங்களும் பன்னிரு தோள்களும் கொண்ட திருவுருவாகவும்,
உருவம் பெயர் குணங்களற்ற அருவான பிரம்மமாகவும்,
உண்டு என்று சொல்பவர்களுக்கு என்றும் உள்ள இறையாகவும்,
இல்லை என்று சொல்பவர்களுக்கு இல்லாதவனாகவும்,
மலரின் மணம் மிகுந்த மொட்டாகவும்,
மலர்ந்த மலராகவும்,
நவமணிகளாகவும்,
அவற்றின் ஒளியாகவும்,
எல்லா உயிர்களையும் தோற்றுவிக்கும் கருவாகவும்,
அவற்றின் உள்ளே நின்று அவற்றை நடத்துவிக்கும் உயிராகவும்,
அவை எல்லாம் இறுதியில் சென்று அடையும் கதியாகவும்,
அந்த நற்கதி அடைவதுவே அவற்றின் இயல்பு நிலை என்னும் படி விதியாகவும்,
அமைந்து
எனக்கு குருவாக வந்து அருள்வாய் குகக்கடவுளே!
No comments:
Post a Comment