Friday, December 02, 2016

சடகோபர் அந்தாதி - சிறப்புப் பாயிரம் 1

தேவில் சிறந்த திருமாற்குத் தக்க தெய்வக் கவிஞன்
பாவால் சிறந்த திருவாய்மொழிப் பண்டிதனே!
நாவில் சிறந்த மாறற்குத் தக்க நன் நாவலவன்
பூவில் சிறந்த ஆழ்வான் கம்பநாட்டுப் புலமையனே!

தெய்வங்களில் சிறந்தவன் திருமால்!

அவனுக்குத் தக்க தெய்வீகமான கவிஞன் பலவிதமான பாவகைகளைத் திருவாய்மொழியில் சிறப்பாக அமைத்த பண்டிதனான நம்மாழ்வாரே!

நாவண்மையில் சிறந்த அந்த மாறன் சடகோபன் நம்மாழ்வாருக்குத் தக்க நாவண்மை கொண்டவன் தாமரைப் பூவில் அமர்ந்த பிரமனை ஒத்த கம்பநாட்டாழ்வானே!

சடகோபர் அந்தாதி; சிறப்புப் பாயிரம் 

Sunday, February 21, 2016

படியாய் கிடந்து உன் பவளவாய் காண்பேனே!



செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே!
நெடியானே! வேங்கடவா! நின் கோயிலின் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்து இயங்கும்
படியாய் கிடந்து உன் பவளவாய் காண்பேனே!
- குலசேகராழ்வாரின் பெருமாள் திருமொழி
புதர்போல் மண்டிக்கிடக்கும் என் பாவ புண்ணியங்கள் என்னும் வலிமையான வினைப்பயன்களைத் தீர்த்து உன் திருவடிகளில் சேர்க்கும் திருமகள் தலைவனே! எல்லோரையும் எல்லாவற்றையும் விட பெரியவனே! உயரமானவனே! திருவேங்கடவா! உனது சந்நிதியின் திருவாசலில் அடியவர்களும் தேவர்களும் தேவமகளிர்களும் கால்வைத்து ஏறி இறங்கும் படியாகக் கிடந்து காலம் காலமாய் உனது பவளவாயின் அழகைக் கண்டு மகிழ்வேனே!

துணிவு உனக்குச் சொல்லுவன் மனமே!


துணிவு உனக்குச் சொல்லுவன் மனமே! தொழுது எழு! தொண்டர்கள் தமக்கு 
பிணி ஒழித்து, அமரர் பெருவிசும்பு அருளும், பேரருளாளன் எம்பெருமான் 
அணிமலர்க் குழலார் அரம்பையர் துகிலும் ஆரமும் வாரி வந்து அணி நீர் 
மணி கொழித்து இழிந்த கங்கையின் கரை மேல் வதரி ஆசிரமத்துள்ளானே!


- திருமங்கை ஆழ்வாரின் பெரிய திருமொழி

மனமே! உனக்கு உறுதியாக ஒன்றைச் சொல்கிறேன் கேள்! வணங்கி வாழ்ந்து போ!

யாரை வணங்குவது என்று கேட்டால் சொல்கிறேன்!

தொண்டு செய்பவர்களுக்கு எல்லாவிதமான நோய்களையும் ஒழித்து, மரணமில்லாத தேவர்களின் (நித்யர்களின்) நிலையான பெரிய பரமபதத்தை அருளும் பேரருளாளனான எம்பெருமான்

அழகிய மலர்களைச் சூடிய கூந்தலை உடையவர்களான தேவ மகளிர்கள் நீராடும் போது, அவர்களின் மெல்லிய உடைகளையும் (துகிலையும்) கழுத்தில் அணியும் நகைகளையும் வாரிக்கொண்டு வந்து பொன்னும் மணியுமாகப் பொங்கி வரும் கங்கையின் கரை மேல் பத்ரிகாச்ரமத்தில் நிலையாக வாழ்கின்றான்! அவனைத் தொழுது எழு!