Friday, January 14, 2011

ஆராவமுதே! - 1


எனது உயிருக்கும் மேலான அன்பை உடைய அண்ணனைப் பிரிந்தேன். அதனாலே துன்பம் வந்தது!

அப்படிப் பிரிந்ததால் அவனுடைய திருவடிகளில் பணிந்துத் தொண்டு செய்யும் வாய்ப்பும் கிட்டாமல் போனது. அதனாலே மேலும் துன்பம் வந்தது!

இப்படி அண்ணன் காட்டிற்குச் செல்ல நேர்ந்ததற்கு நானே காரணம் என்ற பழிச்சொல்லுக்கும் ஆளானேன். அதனால் மேன்மேலும் துன்பம் வந்தது!

இப்படி ஒன்றிற்கு மேல் ஒன்றாக வந்த துன்பங்களெல்லாம் வனம் சென்ற பெருமாள் திருவடிகளைக் கண்டு சரணடைந்தால் தீரும்! நிச்சயம் தீரும்!

இப்படி பரதாழ்வான் எண்ணிக் கொண்டு வனம் சென்ற சக்ரவர்த்தித் திருமகன் திருவடிகளிலே சரண் புகுந்தான்.

அது போல தாமும் திருக்குடந்தைக்குச் சென்று ஆராவமுதன் திருவடிகளைச் சேர்ந்தால் தமது மனத்தில் இருக்கும ஆசைகள் எல்லாம் அமையும் என்று எண்ணினார் நம்மாழ்வார். எல்லாவிதங்களிலும் குறைவில்லாத பெரும்பதமான பரமபதம் இருக்க அதனை விட்டு திருக்குடந்தையிலே வந்து கண் வளர்ந்தருளுவது குறைகளை உடையவர்களின் குறைகளைத் தீர்ப்பதற்காகவே அன்றோ?! அதனால் நம் ஆசைகளையும் குறைகளையும் ஆராவமுதன் கட்டாயம் தீர்ப்பான் என்று எண்ணி இங்கே வருகிறார்.

அப்படியே திருக்குடந்தைப் பெருமாளைக் காண வந்தால், பரதனிடம் பெருமாள் 'ஆட்சியை குறையில்லாமல் நடத்துகிறாயா? மந்திரிகளிடம் கலந்து கொண்டு அனைத்தையும் செய்கிறாயா?' என்று வார்த்தை சொன்னதைப் போல் இல்லாமல், இவருடைய துன்பம் தீர தனது திருவாயைத் திறந்து ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. பரதனைக் கண்குளிரப் பார்த்தத் தன் திருக்கண்களாலே இவர் நிற்கும் திசையையும் நோக்கவில்லை. எதிரியான கம்சனிடம் பணிசெய்து அவன் சோறு உண்டு வாழ்ந்த அக்ரூரை அவர் தனது பக்தன் என்றதை மட்டுமே கொண்டு எதிர் கொண்டு சென்று தழுவியதைப் போல இவரையும் தழுவுவார் என்று இவர் இருக்க அதுவும் செய்யவில்லை. உலக இன்பங்களையே பெரிதென்று இருப்பவர்களை எப்படி நடத்துவானோ அப்படியே இவரையும் நடத்தியதால் மிகவும் மனத்துன்பம் கொண்டு புலம்புகிறார்!சொந்தப் பிள்ளை தாய்ப்பாலை வேண்டிக் காலடியே வந்து தழுவும் போது பெற்ற தாய் அக்குழந்தையைக் கண்டு கொள்ளாமல் தள்ளினால் அக்குழந்தை கதறி அழுமே அது போல் அவனுடன் கலந்து பரிமாறும் தமது ஆசை நிறைவேறாமையாலே கதறி அழைக்கிறார்!

***

(நம்மாழ்வாரின் திருவாய்மொழி ஓர் ஆயிரத்தில் ஐந்தாம் பத்தில் வரும் எட்டாம் திருவாய்மொழியான திருக்குடந்தைத் திருவாய்மொழிக்குப் பொருள் எழுதலாம் என்று சடாரிதேவரின் திருவடி நிலைகளைச் சரண் புகுந்து தொடங்குகிறேன். எத்தனை இடுகைகள் செல்லுமோ அத்தனை இடுகைகளும் அவரே அடியேன் மூலம் எழுதிக் கொள்ள வேண்டும்! )

***சுவாமி! அடியேன்! தேவரீர் திருவடிகளுக்கு தண்டன்!

பிள்ளாய்! உன் பெயர் என்ன? எங்கிருந்து வருகிறாய்?

அடியேன் சுந்தரராம இராமானுச தாசன். தென்னாட்டில் இருந்து வருகிறேன். தேவரீர் திருப்பெயரை இங்கே வடநாட்டில் அனைவரும் பேசக் கேட்டு தண்டனிட வந்தேன்.

தென்னாட்டில் என்ன விஷேசம்?

திருவாய்மொழி என்றொரு பிரபந்தம் பிறந்திருக்கிறது. அதனை அடியவர்கள் மிகவும் போற்றிக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்!

அப்படியா? அந்தப் பிரபந்தத்தில் ஒரு பாசுரம் சொல். கேட்போம்.

அடியவர்கள் அப்பிரபந்தத்தை ஓத தொலைவிலிருந்து கேட்டிருக்கிறேன். அதில் எனக்கு நினைவிருப்பது ஒரே ஒரு சொல் தான்.

எங்கே அச்சொல்லையாவது சொல்.

ஆராவமுதே.

அடடா. என்ன சுவையான திருப்பெயர். நாராயண வாசுதேவ விஷ்ணு போன்ற திருநாமங்கள் எல்லாம் வேதங்களிலும் வேதாந்தங்களிலும் பரக்கப் பேசப்பட்டிருக்க அந்த நாமங்களில் இல்லாத சுவையைக் காட்டும் இந்த திருநாமம் நடையாடுகின்ற நாட்டில் அல்லவா வாழவேண்டும்! சிறுபேர் நடையாடும் நாட்டில் இவ்வளவு நாள் வாழ்ந்தோமே! இப்போதே தென் திசைக்குச் சென்று இத்திருவாய்மொழியை நன்கு கற்போம்!

***வாரும் லோகசாரங்கமுனிகளே! வடநாட்டில் வெகுநாட்கள் வாழ்ந்த நீங்கள் தென்னாட்டிற்கு எழுந்தருளியது எதற்காக?

திருவாய்மொழி என்றொரு பிரபந்தம் இங்கே பிறந்திருக்கிறதாமே! அதில் ஒரு சொல் கேட்டேன்! ஓடோடி வந்தேன்!

அப்படியா? நல்லது தான். அப்பிரபந்தத்தில் என்ன சொல் கேட்டீர்?

ஆராவமுதே என்ற சொல். அருமையாக இருக்கிறது. தேவரீரிடத்தில் அத்திருவாய்மொழியைப் பொருளுடன் கற்றுக் கொள்ள வந்தேன்.

அடியேன் செய்த நல்வினை. உடனே தொடங்குவோம்.

***

ஆகால தத்வம் அச்ராந்தம் ஆத்மனாம் அநுபச்யதாம் அத்ருப்த் அம்ருத ரூபாய என்று பின் வந்தவர்கள் பாடியது இந்த ஒரு சொல்லைக் கொண்டு தானே! காலம் என்னும் ஒன்று இருக்கும் வரையில் பதட்டமே இல்லாமல் ஆற அமர அனுபவித்தாலும் திகட்டாத அமுதம் போன்ற உருவம் உடையவன் அல்லவோ எம்பெருமான்! அதனால் அவனுக்கு ஆராவமுதன் என்ற திருப்பெயர் ஆயிற்று!

ஒரு குடத்தில் இருக்கும் அமுதத்தை பத்து பேர் உண்ணலாம். பெரிய குடம் என்றால் இன்னும் சிலர் கூட உண்ணலாம். இப்பிரபஞ்சத்தில் இருப்பவர்கள் எல்லோரும் சேர்ந்து காலம் காலமாய் அனுபவித்தாலும் தீராத அமுதம் போல் இருப்பவனன்றோ எம்பெருமான்! அதனால் அவனுக்கு ஆராவமுதன் என்ற திருப்பெயர் ஆயிற்று!

ஒன்றை அனுபவிப்பதிலும் முறை என்று உண்டு. முதலில் பார்த்தல், பின்னர் நெருங்குதல், பின்னர் தொடுதல், இப்படித் தானே அனுபவிப்பதிலும் முறை என்று இருக்கிறது. ஆனால் அந்த முறைகளை எல்லாம் ஒவ்வொன்றாக காலக்கிரமத்தில் செய்யும் பொறுமை மற்ற விஷயத்தில் வேண்டுமானால் இருக்க முடியும். எம்பெருமான் விஷயத்தில் அது முடிவதில்லை. எந்த முறையையும் பார்க்க முடியாதபடி, முறைப்படி செய்வோம் என்று ஆறியிருக்க முடியாதபடி இருக்கும் அமுதமானவன் என்பதால் எம்பெருமானுக்கு ஆராவமுதன் என்ற திருப்பெயர் ஆயிற்று.

அமுதம் அமுதம் என்கிறோமே அந்த அமுதம் இவனுடன் ஒப்பிட்டால் கடலில் பிறந்த உப்புச்சாறு தானே! அந்த உப்புச்சாற்றான அமுதத்தை உண்ண வேண்டும் என்றால் தேவர்களாகப் பிறக்க வேண்டும்! அதற்கு கடுமையான தவங்கள் செய்ய வேண்டும்! அவ்வளவும் செய்தால் சில நேரம் பலிக்கலாம்; சில நேரம் பலிக்காது! எம்பெருமானோ அப்படியின்றி எல்லோரும் அனுபவிக்கக் கூடியவனாக, எல்லா காலத்திலும் அனுபவிக்கக் கூடியவனாக, சொர்க்கம், கைவல்யம், மோட்சம் போன்றவற்றையும் கொடுக்கக் கூடியவனாக இருப்பதால் அவனுக்கு ஆராவமுதன் என்ற திருப்பெயர் ஆயிற்று.ஆழம் எவ்வளவு என்று தெரியாத குளத்தில் இறங்குபவர்கள் ஒரு கொம்பையோ கொடியையோ பிடித்துக் கொண்டு இறங்குவார்கள். அது போல தன்னைத் தானே அனுபவிக்க எம்பெருமான் நினைத்தால் தனக்குத் துணையாக வரும் கொம்பாகக் கொடியாகப் பிராட்டியை அழைத்துக் கொள்கிறான். அயோத்தியில் இராகவப் பெருமாள் பெரிய பெருமாளை அனுபவிக்கப் போகும் போது தனியாகவா சென்றான்?! ஸஹபத்ந்யா விசாலாக்ஷ்யா நாராயணமுபாகமத். பெரிய பெருமாள் என்னும் ஆராவமுதைக் காண கொழுகொம்பாக சீதாபிராட்டியை அழைத்துச் சென்றான் இராமன். பெருமாளுக்குப் பெரியபெருமாள் மேல் உண்டான அன்பின் ஆழத்தைக் கண்டு, தன்னை அணைக்கும் போதை விட இங்கே அன்பு அதிகமாக இருக்கிறதே என்று வியந்து விசாலமான கண்ணை உடையவள் ஆனாள் சீதை. அப்படிப்பட்ட எம்பெருமானுக்குத் தானே ஆராவமுதன் என்ற திருப்பெயர் ஆயிற்று!

ஆராவமுதே! ஆராவமுதே! ஆராவமுதே! அடடா! அடடா! அடடா! எப்படி பொருளை அடுக்கிக் கொண்டே போகிறீர்கள்! அருமை அருமை. ஆத்மனாம் அனுபச்யதாம் என்று ஆத்ம தத்துவத்தில் கொண்டு அவனை அனுபவித்தாலும் அவன் ஆராவமுதனே! கூடியிருந்து குளிர்வதைப் போல் எல்லோரும் ஒரே நேரத்தில் அனுபவித்தாலும் அவன் ஆராவமுதனே! முறையெல்லாம் பார்க்க முடியாதபடி ஆறியிருக்கமுடியாதபடி அனுபவித்தாலும் அவன் ஆராவமுதனே! எளிமையிலும் எளிமையாக எங்கும் கிடைப்பதாக இருக்கும் அவன் ஆராவமுதனே! அவனே அனுபவிக்க இறங்கினாலும் காலம் காலமாக ஆழங்காண முடியாதபடி இருப்பதால் துணை கொண்டு இறங்கும் வகையில் இருக்கும் அவன் ஆராவமுதனே!

இதில் ஒரு ஐயம் ஐயா. இறைவன் ஐந்து நிலைகளில் இருப்பதாகச் சொல்கிறார்களே. அவற்றில் எந்த நிலையில் அவன் ஆராவமுதன்?

அடடா! மிக அருமையான கேள்வியைக் கேட்டீர்.

ஸதா பச்யந்தி ஸூரய: என்றல்லவோ வேதம் முழங்குகிறது! வேண்டிய உருவெல்லாம் எடுத்து வேண்டிய வகையிலெல்லாம் அவனுக்குத் தொண்டு செய்யும் போது நித்யர்களும் முக்தர்களும் கண் கொட்டாமல் பார்க்கும் பரமபத நாதனும் ஆராவமுதனே! அதனால் அன்றோ சுரர்களான நித்யர்களும் முக்தர்களும் சதா அவனைக் கண்டு கொண்டே இருக்கிறார்கள் என்று வேதம் முழங்குகின்றது!

தேவர்களும் முனிவர்களும் அபயம் அபயம் என்று கூக்குரலிட்டு ஓடி வரும் திருப்பாற்கடலில் அறிதுயில் கொள்பவனும் அனந்தன், கருடன், தும்புரு, நாரதன், பிரம்மன் முதலானவர்கள் என்றும் அனுபவிக்கத்தக்கவனாக இருக்கும் ஆராவமுதனே!

ஆணாய் பிறந்ததால் இவன் வடிவழகென்னும் அமுதத்தை முழுமையாகப் பருக முடியவில்லையே என்று முனிவர்கள் வரம் வேண்டி கோபியர்களாகப் பிறந்து இவனை அனுபவிக்கும் வகையில் அமைந்த இராமன், கிருஷ்ணன் முதலான அவதார திருவுருவமும் ஆராவமுதனே!

கண் மூடி மனத்தை நிலை நிறுத்தி நீண்ட காலம் அசையாமல் அமர்ந்து யோகிகள் தங்கள் இதயத்தில் இருக்கும் தகராகாச சோதியாகக் கண்டு அனுபவிக்கும் அந்த அந்தர்யாமியான இறைவனும் ஆராவமுதனே!

நீரும் நானும் என எல்லோரும் கூடியிருந்து அனுபவிக்கலாம்படி நம் இல்லங்களிலும் திருக்கோவில்களிலும் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானும் ஆராவமுதனே!

(தொடரும்)

***

அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்! பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக!

15 comments:

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

ஆரா அமுதமான பொங்கல் வாழ்த்துக்கள்!

திரு வாய் மொழியான பொங்கல் வாழ்த்துக்கள்!

கூடலுக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்கள்! :)

குமரன் (Kumaran) said...

நன்றி கண்ணபிரான் அறையோ இனிப் போனாலே! :-)

Radha said...

குமரன்,
கண்ணன் பாட்டில் ஆராவமுதே பாசுரம் இட்ட பொழுது யாராவது பொருள் சொல்வார்களா என்று இருந்தேன். ஒரு தொடரே வரப் போவது குறித்து மிக்க மகிழ்ச்சி. :-)

Radha said...

//கண் மூடி மனத்தை நிலை நிறுத்தி நீண்ட காலம் அசையாமல் அமர்ந்து யோகிகள் தங்கள் இதயத்தில் இருக்கும் தகராகாச சோதியாகக் கண்டு அனுபவிக்கும் அந்த அந்தர்யாமியான இறைவனும் ஆராவமுதனே!

நீரும் நானும் என எல்லோரும் கூடியிருந்து அனுபவிக்கலாம்படி நம் இல்லங்களிலும் திருக்கோவில்களிலும் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானும் ஆராவமுதனே!
//
மிக அருமை.
"கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே
காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே
வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமே
மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே
நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே"

Radha said...

//ஆணாய் பிறந்ததால் இவன் வடிவழகென்னும் அமுதத்தை முழுமையாகப் பருக முடியவில்லையே என்று முனிவர்கள் வரம் வேண்டி கோபியர்களாகப் பிறந்து
//
ரொம்ப பிடித்திருக்கிறது. :-)
வலக்கை எது இடக்கை எது என்று தெரியாத கோபியர் எல்லாம் முற்பிறவிகளில் நிறைய தவம் செய்தவர்கள் என்பது மனதிற்கு தெம்பளிக்கிற விஷயம். :-)

Narasimmarin Naalaayiram said...

நம்மாழ்வாரின் திருவாய்மொழி ஓர் ஆயிரத்தில் ஐந்தாம் பத்தில் வரும் எட்டாம் திருவாய்மொழியான திருக்குடந்தைத் திருவாய்மொழிக்குப் பொருள் எழுதலாம் என்று சடாரிதேவரின் திருவடி நிலைகளைச் சரண் புகுந்து தொடங்குகிறேன்:)

Thanks a lot kumaran sir:)

Narasimmarin Naalaayiram said...

ஒரு குடத்தில் இருக்கும் அமுதத்தை பத்து பேர் உண்ணலாம். பெரிய குடம் என்றால் இன்னும் சிலர் கூட உண்ணலாம். இப்பிரபஞ்சத்தில் இருப்பவர்கள் எல்லோரும் சேர்ந்து காலம் காலமாய் அனுபவித்தாலும் தீராத அமுதம் போல் இருப்பவனன்றோ எம்பெருமான்! அதனால் அவனுக்கு ஆராவமுதன் என்ற திருப்பெயர் ஆயிற்று!//

நினைக்க நினைக்க தேனாய் இனிக்கும் அமுது பெருமாள் ஆராவமுது பெருமாள் .என்ன வென்று சொல்வது!!!!!!!!!!!!!!!!!!!!:))

இருந்தாலும் திருகுடந்தை ஆராவமுது பெருமாள் கோவில் புத்தம் புதிதாக மாற்றி ஒப்பிலியப்பன் கோவில் போல பராமரிக்கவில்லையே என்று ஒரு வருத்தம் .:((

Narasimmarin Naalaayiram said...

"கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே
காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே
வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமே
மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே
நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே

ithu entha paasuram : yaar paadiyathu radha anna pl.tell me

குமரன் (Kumaran) said...

இராதா,

நீங்க சொல்ற அந்த நேரத்துல எழுதத் தொடங்கினது தான். கண்ணன் பாட்டுல வந்த போது எழுத வேண்டும் என்று தோன்றி தொடங்கினேன்; நேரம் கிடைக்கும் போதெல்லாம் எழுதி இப்போது தான் இட முடிந்தது. அடுத்த பகுதியை இனி மேல் தான் தொடங்க வேண்டும்.

குமரன் (Kumaran) said...

நன்றி இராஜேஷ்.

Radha said...

ராஜேஷ்,
அது வள்ளலார் சுவாமி பாடல். தைப்பூசம் நினைவில் வந்துவிட்டது. :-)

Radha said...

//ஆகால தத்வம் அச்ராந்தம் ஆத்மனாம் அநுபச்யதாம் அத்ருப்த் அம்ருத ரூபாய //
வேங்கடேசாய மங்களம். :-)

Radha said...

//ஸஹபத்ந்யா விசாலாக்ஷ்யா நாராயணமுபாகமத் //
தேன்....படித்து களித்தேன். :-)
[அம்மா விசாலாக்ஷி, உன் பையன் ராதா செய்யும் பிழைகளை எல்லாம் மன்னிக்க வேண்டும் ! ]

குமரன் (Kumaran) said...

எல்லாம் முன்னோர் சொன்னவை தான் இராதா. முடிந்த வரை எளிமைப்படுத்தி ஒரு உரையாடல் வடிவில் தர முயன்றுள்ளேன். அடுத்த பகுதி முதல் இன்னும் எளிமைப்படுத்த முயலவேண்டும்.

மதுரை சரவணன் said...

பொங்கல் செய்தி அருமை. நீண்ட இடுகை. என் இ. மெயில் saran.hm@gmail.com. நன்றி. வாழ்த்துக்கள்