"அடுத்த சொல் இன்னும் மிகவும் அழகானது உலகரே! எளிமையாக எல்லோரும் கூடியிருந்து குளிர்ந்து அனுபவிக்கும்படி ஆராவமுதமாக இருக்கும் நிலையைக் கண்டு நான் அடிமையானேன் என்று சொல்வது போல் தன்னை அடியேன் என்று ஆழ்வார் சொல்கிறார்"
"ஆகா ஆகா. அடியேன் என்று தன்னை அழைத்துக் கொள்வதற்கும் ஒரு அருமையான இடம் பார்த்தாரே! ஆராவமுதே அடியேன் என்று இரண்டையும் சேர்த்துச் சொல்லும் போது ஆராவமுதமாக இருக்கும் அந்த அனுபவிக்க உகந்த தன்மைக்கு அடிமையானேன் என்று சொல்லாமல் சொன்னாரே!"
"அது மட்டும் இல்லை உலகசாரங்கரே. ஆத்ம வஸ்து சத் சித் ஆனந்த மயம் என்று வேதங்கள் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்க அதனை எல்லாம் தனக்கு அடையாளமாக வைக்காது ஆத்ம வஸ்துவுக்கு அடையாளமாக அமைவது என்றென்றும் இறைவனுக்குத் தொண்டு செய்யும் நிலையே என்று சொல்வது போல் இங்கே அடியேன் என்ற் சொல்லைப் புழங்குகிறார் ஆழ்வார்"

"அடடா. மிக ஆழ்ந்த பொருளைச் சொல்கிறீர்கள் போலிருக்கிறதே. இன்னும் கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள்".
"சாதாரண மனிதர்கள் 'நான்' என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும் போது ஆத்மவஸ்துவைக் குறிக்காமல் பெயர் உருவம் குணம் கொண்ட தனது உடலையும் மனத்தையும் சேர்த்தே தானே சொல்கிறார்கள்"
"ஆமாம்"
"இறைவனாலேயே மயக்கம் இல்லாத தெளிவு நிலை என்னும் மயர்வற மதிநலம் அருளப்பெற்றவர் ஆழ்வார். அவர் 'நான்' என்று சொல்ல நினைக்கும் போது தனது உடலையும் மனத்தையும் குறிக்காமல் ஆத்மவஸ்துவையே குறிக்கிறார்"
"அப்படி சொல்வது எதனை வைத்து?"
"அடுத்த சொல்லை வைத்து. அடியேன் உடலம் என்று சொல்கிறாரே. எனது சட்டை என்றால் நானும் சட்டையும் வெவ்வேறு என்று ஆகிறதே. அதே போல் அடியேன் உடலம் என்னும் போது தானும் உடலும் வெவ்வேறு என்று சொல்லாமல் சொல்கிறார். அதனால் இங்கே தன்னை உடல் என்று எண்ணும் மயக்கம் இல்லாதவர் ஆழ்வார் என்பது தெளிவு"
"ஆமாம்"
"அப்படி தன் ஆத்மவஸ்துவைக் குறிக்கும் போது அதன் குணங்களாக வேதங்கள் விரித்துரைக்கும் என்றும் அழியாமல் இருத்தல் (சத்), அறிவே வடிவாகவும் குணமாகவும் இருத்தல் (சித்), என்றும் மகிழ்ச்சியும் இருத்தல் (ஆனந்தம்) என்ற குணங்களை விட இறைவனுக்குத் தொண்டு செய்வதே ஆத்மனுக்கு இயற்கை குணம் என்பதால் அதனை முதன்மைப்படுத்தி அடியேன் என்று சொல்கிறார்"
"ஆகா ஆகா. நன்கு சொன்னீர்கள். நன்கு சொன்னீர்கள். அடியேன் என்ற சொல் தான் எத்தனை ஆழமான பொருளைத் தருகிறது. அடியேன் என்று வாயாரச் சொல்லும் எல்லோரும் இனி மேல் இந்த ஆழ்ந்த பொருளை நினைவில் வைத்துக் கொண்டு ஒவ்வொரு முறையும் சொன்னால் அது அவர்களுக்கு பெரும்பதத்தைத் தந்துவிடுமே!"

"உண்மை. நாராயண நாமம் தராததையும் இந்த அடியேன் என்ற சொல் தந்துவிடும்!"
"அடுத்து வரும் சொற்களையும் சொல்லியருள வேண்டும்"
"அடியேன் உடலம் நின் பால் அன்பாயே நீராய் அலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே"
"என்ன விந்தை இது? ஆராவமுதமாய் இருக்கும் அனுபவ நிலையைக் கண்டு அதில் மயங்கிவிழுந்து புற்கவ்வி மண்கவ்வி அடியேன் என்று அடிமை புகுதல் ஆத்மவஸ்துவிற்கு இயல்பு. அந்த நெகிழ்ச்சியில் ஆத்மாவிற்கு அருகாமையில் இருக்கும் மனமும் புத்தியும் நெகிழ்வதுவும் உண்டு. அறிவே இல்லாத ஊனுடல் உருகுவதும் உண்டோ?!"
"நன்கு கேட்டீர்! உணவால் பிறந்து உணவால் வளர்ந்து உணவாகி மடியும் உடல் என்பதால் அதனை அன்னமயம் என்றார்கள் பெரியோர்கள். அந்த அன்னமயமான உடலும் இந்த ஆராவமுதனின் மேல் அன்பே உருவாகியது. அன்னமயம் என்பது போய் அன்புமயம் ஆனது. அதனால் அறிவில்லாத ஊன் உடலும் உருகுகின்றது"
"எப்படி அதனைச் சொல்கிறீர்கள்?"
"ஆழ்வார் சொல்வதைக் கவனித்துப் பாருங்கள். அடியேன் உடலம் நின் பால் அன்பாயே என்கிறார். நின் பால் என் உயிரும் மனமும் புத்தியும் மட்டும் இல்லை என் உடலமும் அன்பே ஆக ஆகி நின்றது என்கிறார். அப்படி உடலும் அன்பே உருவாக ஆனதால் தான் நீராய் அலைந்து கரைந்துவிட்டது"
"அடடா. ஆழ்வாரின் நிலை தான் என்னே! அவரது உடலும் ஆராவமுதன் மேல் அன்பாகி உருகுகின்றதே!"
"நாம் அப்படி நினைக்கிறோம். ஆனால் அடியேன் என்று ஆத்மாவின் முதன்மைக் குணத்தைச் சொன்ன ஆழ்வார் அப்படி சொல்லவில்லை. அவரது உடல் தானே உருகவில்லை. அதனைச் செய்தததும் அவனே என்று சொல்கிறார். நீராய் அலைந்து கரைய உருக்குகின்ற என்று சொல்வதை பாருங்கள். என் செயல் ஆவது யாதொன்றும் இல்லை என்று பெரியோர் விரித்துச் சொன்னதை இங்கே சுருங்கச் சொன்னார் ஆழ்வார்!"
"அடடா அடடா. மனிசர்க்குத் தேவர் போல் தேவர்க்கு தேவன் ஆராவமுதன் என்பதால் அடுத்து நெடுமாலே என்றார் போலும். அந்த பெருமையும் இவர் உடல் நீராய் கரைய உருக்கும் தன்மை கொண்டதன்றோ?"
"உண்மை தான். இறைவன் மிகப்பெரியவன். மனிதர்களுக்கு தேவர்கள் எப்படியோ அப்படி தேவர்களுக்கு எல்லாம் தேவனான தேவதேவன். சர்வேஸ்வரன். ஆனால் இங்கே அதனைச் சொல்லவில்லை ஆழ்வார்."
"அப்படியா? என்னில் எந்த பொருளில் சொல்கிறார்?"
"உமக்கு எப்போது ஒருவர் மேல் அன்பு பிறக்கும்? அந்த ஒருவருக்கு உம்மேல் அன்பு இருக்கும் போது தானே? நின் பால் அன்பாயே என்று இவர் சொல்லும் போதே அதனை விட பலமடங்கு அன்பு அவனுக்கு இவர் மேல் இருக்கின்றதையும் அறிந்து சொல்கிறார். மால் என்றால் மயக்கம். இவர் மேல் அவனுக்கு ஆழ்ந்த மயக்கமும் அன்பும் உண்டு. அந்த பன்மடங்கு அன்பு அவனுக்கு இவர் மேல் இருப்பதால் அது இவரது உடலையும் அன்பு மயமாக்கி உருக்கும் தன்மை கொண்டது. அப்படி ஆழ்ந்த மயக்கம் இவர் மேல் அவன் கொண்டதால் அவனை 'நெடுமாலே' என்கிறார்"
"நன்கு சொன்னீர்கள். நன்கு சொன்னீர்கள்"
"அப்படி இவரையும் இவர் உடலையும் உருக்கும் அளவிற்கு ஆழமான அன்பை இவர் மேல் உடையவன் இவரைப் பார்த்தவுடன் என்ன செய்வான்?"
"இவர் வரும் திசை நோக்கி வருவான். நலமா என்று விசாரிப்பான். கட்டி அணைப்பான்"
"அதனை எல்லாம் அவன் செய்தானா? இல்லையே! அதனைத் தான் அடுத்த இரு வரிகளில் கூறுகிறார் ஆழ்வார்!"
(தொடரும்)