Wednesday, September 08, 2010

ஆடிக்காற்றா ஆவணியில்....

கூரையை ஏதோ உரசும் ஓசை கேட்டு எழுந்தேன். விட்டு விட்டு உரசும் ஓசை. யாரோ நடப்பது போன்ற ஓசை. மனைவியும் குழந்தைகளும் பக்கத்தில் ஆழ்ந்த உறக்கத்தில். ஓசை வரும் காரணம் தெரியவில்லை. மனதில் கொஞ்சம் திக்.

கள்வன் நுழைகின்றான் என்று தெரிந்தால் உடனே காவலரைக் கூப்பிட கையில் தொலைபேசி எடுத்துக் கொண்டு எழுந்து வந்தேன். வந்து பார்த்தால் உய் உய் என்று வீசும் காற்று. அந்தக் காற்றில் அசையும் மரங்கள். அந்த மரங்களின் கிளைகள் சுவற்றிலும் கூரையிலும் உரசுவதால் வந்த ஓசை. அவ்வளவு தான்.

மனத்தின் கற்பனைகளை எண்ணிப் புன்னகைத்துக் கொண்டு படுக்கைக்கு வந்தேன். தூங்க முடியவில்லை. தூக்கம் போய்விட்டது. ஏதேதோ நினைவுகள். மரங்களை அலைக்கழிக்கும் சுழல் காற்றின் வீச்சே மனத்தில் நிறைந்திருந்தது. 'காற்றடிக்குது கடல் குமுறுது கண்ணை விழிப்பாய் நாயகனே' என்ற பாரதியாரின் பாடல் வரிகள் நினைவிற்கு வந்தன. இந்த ஓங்கி வீசும் காற்றையே உள்ளுறைப் பொருளாக வைத்து சங்க கால ஒளவையார் பாடிய குறுந்தொகைப் பாடலும் நினைவிற்கு வந்தது.

முட்டுவேன் கொல்! தாக்குவேன் கொல்!
ஓரேன் யானும் ஓர் பெற்றி மேலிட்டு
ஆ! ஒல்! எனக் கூவுவேன் கொல்!
அலமர அசைவு வளி அலைப்ப என்
உயவு நோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே!


இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் அதுவும் ஒரு மழைக்காலம். பிரிவுத்துயரில் வாடும் ஓர் இளம்பெண். களவுக்காதலில் காலம் செலுத்திய காதலனிடம் 'விரைவில் இவளை மணந்து கொள்வாய்' என்று தோழி அறிவுறுத்தியதால் அதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்ட காதலன் காதலியைக் காணாமல் காலம் தாழ்த்துகிறான். இவளோ அந்த குறுகிய காலப் பிரிவினையும் தாங்க முடியாமல் புலம்புகிறாள்.

கடுமையாக வீசும் காற்று மரங்களை எல்லாம் அலைக்கழிப்பதைப் போல் என் பிரிவுத் துயர் என்னை அலைக்கழிக்கிறது! இதனை அறியாமல் அமைதியாகத் தூங்குகிறது இந்த ஊர்! முட்டுவேனா குத்துவேனா ஆஓ எனக் கூவுவேனா இந்த ஊரை என்ன செய்வது என்று தெரியவில்லை!

அந்தப் பெண் தன் காதலன் வரவை எதிர்நோக்கி விழித்திருந்தாள்! நான் யார் வரவை எதிர் நோக்கி விழித்திருக்கிறேன்?

10 comments:

Unknown said...

Kumaran:
Arumaiyaana Pathivukku, Nanri.
RRR

Can you and others provide a quick check form at the end of the pathivu so that readers can express their appreciation rather than writing.
My new computer does not have Tamil Font to write in Tamil yet .
Thanks.
RR

Kannabiran, Ravi Shankar (KRS) said...

இது குறுந்தொகை அல்ல! பெருந்தொகை!
பெரும் தொகை கொடுத்தாலும் கிடைக்காத சங்கத் தமிழ்ப் பெருந்தொகை!

என்ன ஒரு வீச்சு, ஒளவையின் கவிதையில்! - ஆ! ஒல்! எனக் கூவுவேன் கொல்! முட்டுவேன் கொல்! தாக்குவேன் கொல்!

எதை முட்டி யாரைத் தாக்கினாளோ தலைவி? :)

//ஓரேன் யானும் ஓர் பெற்றி மேலிட்டு//

ஒரு பெற்றியா? ஓர் பெற்றியா, குமரன்?

//அந்தப் பெண் தன் காதலன் வரவை எதிர்நோக்கி விழித்திருந்தாள்! நான் யார் வரவை எதிர் நோக்கி விழித்திருக்கிறேன்?//

:)
முருகனும் நானும் சேர்ந்து வரும் வரவைத் தான்!
அப்போ தானே நீங்க ஆசி கூற முடியும்! அதுக்குத் தான் எதிர் நோக்கி விழித்து இருக்கீங்க போல! :)

குமரன் (Kumaran) said...

Thanks R. There is a check form at the end of this post also. Do you want me to add one more form with few more options?

குமரன் (Kumaran) said...

பாடலில் ஓர் பெற்றின்னு தான் இருக்கு இரவி. வழுவமைதி போல. :-)

Kavinaya said...

:) நல்லா இருக்கு.

யாருக்காக விழிச்சிருந்தீங்கன்னு கண்டு பிடிச்சாச்சா?

குமரன் (Kumaran) said...

தெரியலையேக்கா. :-)

Radha said...

//நான் யார் வரவை எதிர் நோக்கி விழித்திருக்கிறேன்? //
:-)
தூக்கம் வரலை அப்படின்றதை கூட இந்த மாதிரி அழகா பதிவு செய்ய முடியும் போல. :-)

குமரன் (Kumaran) said...

:-)

அழகா பதிவாயிருக்கா? மகிழ்ச்சி இராதா! :-)

bharathi said...

thodarattum ungal sevai... nandrai ulladhu....aanandha vikatan oorkuruviyil ungal webthalam patri saaru ezhudhiyadhan moolam kandarindhen adhanal avarukku oru nandri

குமரன் (Kumaran) said...

பாரதி.

தகவலுக்கு நன்றி. சாரு விகடனில் இந்தப் பதிவைப் பற்றி ஒரு வரி எழுதியதால் இந்தப் பதிவிற்கு நிறைய பேர் புதிதாக வருகை தந்தார்கள் என்று நினைக்கிறேன். அதற்காக சாருவிற்கும் நன்றி.