Friday, January 29, 2010
அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெருஞ்ஜோதி
வடலூர் வள்ளல் இராமலிங்க அடிகள் தன் ஊன் திருமேனியை ஒளித் திருமேனியாக மாற்றிய புனித நாளான தை பூசத் திருநாள் இன்று!
எனது இனிய தோழன் கிருஷ்ணப்ரேம் பாடியவை இவை. இவற்றைப் பார்க்கும் போது சின்ன குழந்தையின் குரலில் கீழிருக்கும் இவை கிடைத்தன. அவனுடைய குழந்தை பாடியவையா என்று கேட்க வேண்டும்.
Friday, January 15, 2010
கூரத்தாழ்வானின் குரு பரம்பரை - 8 (எண் திசையும் புகழும் எதிராசராம் எம்பெருமானார் இராமானுசர்)
கூரத்தாழ்வானின் குருபரம்பரை என்ற தலைப்பில் வைணவ குருபரம்பரையின் முதல் ஆசாரியனான திருமால், அதற்கு பின் திருமகள், சேனை முதலியார், நம்மாழ்வார், நாதமுனிகள், உய்யக்கொண்டார், மணக்கால் நம்பிகள், ஆளவந்தார், பெரிய நம்பிகள், திருக்கச்சி நம்பிகள் என்று ஆசாரிய பரம்பரையில் வந்த ஆசாரியர்களின் வாழித் திருநாமங்களைத் தொடர் இடுகைகளாக இதுவரை பார்த்தோம்; இப்போது கூரத்தாழ்வானின் ஆசாரியரான எம்பெருமானார், இளையாழ்வார், உடையவர் முதலிய திருப்பெயர்களைக் கொண்ட இராமானுசரின் வாழித் திருநாமத்தைப் பார்க்கப் போகிறோம். கருணையே வடிவான இராமானுசர் தம் வாழ்நாளில் செய்த திருச்செயல்கள் எல்லாம் ஓர்இடுகையில் சொல்லி நிறைவு செய்ய இயலாது. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவருடைய திவ்ய சரிதத்திலிருந்து பேசிக் கொண்டே இருக்கலாம்; இருக்கிறேன். அவரது வரலாற்றைச் சுருக்கமாக 'உடையவர்' என்னும் பதிவில் படிக்கலாம். இந்த இடுகையில் இராமானுசரின் வரலாற்றைச் சித்தரிக்கும் சில சித்திரங்களுடன் அவருடைய வாழித் திருநாமங்களைப் பொருளுடன் சொல்லிச் செல்லலாம் என்று எண்ணியிருக்கிறேன். அடியேன் இராமானுச தாசன்.
அத்திகிரி அருளாளர் அடி பணிந்தோன் வாழியே
அருட்கச்சி நம்பி உரை ஆறு பெற்றோன் வாழியே
பத்தியுடன் பாடியத்தைப் பகர்ந்திட்டான் வாழியே
பதின்மர் கலை உட்பொருளைப் பரிந்து கற்றான் வாழியே
சுத்த மகிழ் மாறன் அடி தொழுது உய்ந்தோன் வாழியே
தொல் பெரிய நம்பி சரண் தோன்றினான் வாழியே
சித்திரையில் ஆதிரை நாள் சிறக்க வந்தோன் வாழியே
சீர் பெரும்பூதூர் முனிவன் திருவடிகள் வாழியே
அத்திகிரி அருளாளர் அடி பணிந்தோன் வாழியே – காஞ்சிபுரம் அத்திகிரி அருளாளப் பெருமாளின் திருவடிகளைப் பணிந்தவன் வாழ்க.
அருட்கச்சி நம்பி உரை ஆறு பெற்றோன் வாழியே - கருணையே வடிவான திருக்கச்சி நம்பிகளிடம் இருந்து அத்திகிரி வரதன் சொன்ன ஆறு வார்த்தைகளைப் பெற்றவன் வாழ்க.
பத்தியுடன் பாடியத்தைப் பகர்ந்திட்டான் வாழியே - மிகுந்த பக்தியுடன் வியாசரின் பிரம்ம சூத்திரத்திற்கு விளக்கவுரையான ஸ்ரீபாஷ்யத்தை இயற்றியவன் வாழ்க.
பதின்மர் கலை உட்பொருளைப் பரிந்து கற்றான் வாழியே – பூதத்தாழ்வார், பொய்கையாழ்வார், பேயாழ்வார், பெரியாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், குலசேகராழ்வார், திருப்பாணாழ்வார், தொண்டரடிப்பொடியாழ்வார், திருமங்கையாழ்வார் என்ற பத்து ஆழ்வார்களின் பாசுரங்களின் உட்பொருளை மிகவும் உணர்வு கலந்து கற்றவன் வாழ்க.
சுத்த மகிழ் மாறன் அடி தொழுது உய்ந்தோன் வாழியே - இறைவனாலேயே மயக்கம் இல்லாத அறிவு அருளப்பெற்றதால் தாமசம், ராஜசம் முதலிய குணங்கள் இல்லாமல் சுத்த சத்துவ குணமே கொண்டிருந்த மகிழ மாலை அணிந்த நம்மாழ்வாரின் திருவடிகளைத் தொழுது உய்ந்தவன் வாழ்க.
தொல் பெரிய நம்பி சரண் தோன்றினான் வாழியே - தொன்மையான அறிவினைத் தந்த பெரிய நம்பிகளின் திருவடிகளைச் சரணடைந்தவன் வாழ்க.
சித்திரையில் ஆதிரை நாள் சிறக்க வந்தோன் வாழியே - சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரம் பெருமை கொள்ளும் படி அதில் பிறந்தவன் வாழ்க.
சீர் பெரும்பூதூர் முனிவன் திருவடிகள் வாழியே - எல்லா சிறப்பும் கொண்ட திருப்பெரும்பூதூரில் பிறந்த இராமானுச முனிவனின் திருவடிகள் வாழ்க வாழ்க.
எண்டிசையெண் இளையாழ்வார் எதிராசன் வாழியே
எழுபத்து நால்வர்க்கும் எண்ணாங்கு உரைத்தான் வாழியே
பண்டை மறையைத் தெரிந்த பாடியத்தோன் வாழியே
பரகாலன் அடியிணையைப் பரவும் அவன் வாழியே
தண்டமிழ் நூல் நம்மாழ்வார் சரண் ஆனான் வாழியே
தாரணியும் விண்ணுலகும் தான் உடையோன் வாழியே
தெண்டிரை சூழ் பூதூர் எம்பெருமானார் வாழியே
சித்திரையில் செய்ய திருவாதிரையோன் வாழியே
எழுபத்து நால்வர்க்கும் எண்ணாங்கு உரைத்தான் வாழியே - எழுபத்தி நான்கு சிம்மாசனாதிபதிகள் என்னும் சீடர்களுக்கு எண்ணான்கு முப்பத்திரண்டு எழுத்துகளைக் கொண்ட ஈரடி மந்திரத்தை (த்வயம்) அதன் பொருளுடன் சொல்லி வைணவ சமயம் நிலை கொள்ளும் படி செய்தவன் வாழ்க.
பண்டை மறையைத் தெரிந்த பாடியத்தோன் வாழியே - கால வெள்ளத்தில் இல்லாத பொருள் எல்லாம் சொல்லப்பட்ட வேதத்தை அந்தக் குறைகள் எல்லாம் நீங்கும் படி உண்மைப் பொருள் அறிந்து அதனைக் கொண்டு பிரம்ம சூத்திர உரையான ஸ்ரீபாஷ்யத்தைச் செய்த பாஷ்யக்காரர் வாழ்க.
பரகாலன் அடியிணையைப் பரவும் அவன் வாழியே - எதிர்த்து வந்தவர்களுக்கு எல்லாம் காலனைப் போன்ற திருமங்கையாழ்வாரின் திருவடிகள் இரண்டினையும் போற்றும் இராமானுசன் வாழ்க.
தண்டமிழ் நூல் நம்மாழ்வார் சரண் ஆனான் வாழியே - எம்பெருமானின் திருவடி நிலைகளான சடாரியான, குளிர்ந்த தமிழ் மறையைத் தந்த வள்ளல் நம்மாழ்வாரின் திருவடி நிலைகள் ஆனவன் வாழ்க.
தாரணியும் விண்ணுலகும் தான் உடையோன் வாழியே - மண்ணுலகையும் விண்ணுலகையும் திருவரங்கனும் திருவரங்கநாயகியும் தரப் பெற்று அவர்களின் சொத்துகள் அனைத்தையும் 'உடையவர்' என்ற திருப்பெயர் பெற்றவன் வாழ்க.
தெண்டிரை சூழ் பூதூர் எம்பெருமானார் வாழியே - அலைகடல் சூழ்ந்த திருப்பெரும்பூதூரில் பிறந்த, எந்த வித ஏற்றத்தாழ்வுகளும் இல்லாமல் விருப்பம் உடையவர்கள் எல்லோரும் வாருங்கள் என்று அழைத்து, தன் ஆசாரியன் சொல்லை மீறித் தான் நரகம் புகுந்தாலும் மற்ற எல்லோரும் உய்வடைவார்கள் என்று எண்ணி அனைவருக்கும் மந்திரத்தின் உட்பொருளைச் சொன்ன, எம்பெருமானையும் மிஞ்சும் கருணையே வடிவான எம்பெருமானார் வாழ்க.
சித்திரையில் செய்ய திருவாதிரையோன் வாழியே - சித்திரையில் வரும் திருவாதிரை நட்சத்திரத்திற்கு உரியவன் வாழ்க வாழ்க.
சீராரும் எதிராசர் திருவடிகள் வாழி
திருவரையில் சாத்திய செந்துவராடை வாழி
ஏராரும் செய்ய வடிவு எப்பொழுதும் வாழி
இலங்கிய முன்னூல் வாழி இணைத்தோள்கள் வாழி
சோராத துய்ய செய்ய முகச்சோதி வாழி
தூமுறுவல் வாழி துணை மலர்க்கண்கள் வாழி
ஈராறு திருநாமம் அணிந்த எழில் வாழி
இனிதிருப்போடு எழில் ஞான முத்திரை வாழியே
சிறப்புகள் நிறைந்த எதிராசரின் திருவடிகள் வாழ்க. அவர் தனது இடுப்பில் அணிந்திருக்கும் சிவந்த காவி ஆடை வாழ்க. அழகு நிறைந்த சிவந்த உடல் எப்பொழுதும் வாழ்க. மார்பில் விளங்கும் முப்புரிநூல் வாழ்க. இணையாக இருக்கும் தோள்கள் வாழ்க. என்றும் சோர்வு கொள்ளாத தூய்மையான சிவந்த திருமுகச் சோதி வாழ்க. அந்த திருமுகத்தில் விளங்கும் தூய்மையான புன்முறுவல் வாழ்க. ஒன்றுக்கொன்று துணையான அவருடைய தாமரை மலர்க்கண்கள் வாழ்க. ஈராறு பன்னிரண்டு திருநாமம் (திருமண் காப்பு) அணிந்த அவருடைய எழில் மிகுந்த திருமேனி வாழ்க. அவர் இனிதாக அமர்ந்திருக்கும் இருப்போடு அவர் காட்டும் அழகிய ஞான முத்திரை வாழ்க.
அறுசமயச் செடி அதனை அடி அறுத்தான் வாழியே
அடர்ந்து வரும் குதிருட்டிகளை அறத்துறந்தான் வாழியே
செறு கலியைச் சிறிதும் அறத் தீர்த்துவிட்டான் வாழியே
தென்னரங்கர் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே
மறை அதனில் பொருள் அனைத்தும் வாய் மொழிந்தோன் வாழியே
மாறன் உரை செய்த தமிழ் மறை வளர்த்தோன் வாழியே
அற மிகு நற்பெரும்பூதூர் அவதரித்தான் வாழியே
அழகாரும் எதிராசர் அடியிணைகள் வாழியே
அறுசமயச் செடி அதனை அடி அறுத்தான் வாழியே - மாயாவாதம் என்னும் அறுசமயச் செடியை அதன் அடியோடு மறுத்தவன் வாழ்க.
அடர்ந்து வரும் குதிருட்டிகளை அறத்துறந்தான் வாழியே - வேதங்களையும் வேதாந்தங்களையும் தவறாக பொருள் கொள்ளும் குதிருட்டிகள் எல்லா இடங்களிலும் அடர்ந்து வந்த காலத்தில் அவர்கள் அறவே இல்லாத படி செய்தவன் வாழ்க.
செறு கலியைச் சிறிதும் அறத் தீர்த்துவிட்டான் வாழியே - 'கலியும் கெடும் கண்டு கொண்மின்' என்று இவர் வருகையை முன்கூட்டியே நம்மாழ்வார் பாடிய படி வந்து எங்கும் நிறைந்திருந்த கலி புருடனின் கொடுமையைச் சிறிதும் இல்லாமல் தீர்த்துவிட்டவன் வாழ்க.
தென்னரங்கர் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே - திருவரங்கநாதனுடைய செல்வம் முழுவதையும் வருங்காலம் முழுவதும் தடையின்றி எல்லா விழாக்களும் முறைப்படி நடக்கும் வகையில் திருத்தி வைத்தவன் வாழ்க.
மறை அதனில் பொருள் அனைத்தும் வாய் மொழிந்தோன் வாழியே - வேத வேதாந்தங்கள் அனைத்திற்கும் தகுந்த பொருள் உரைத்தவன் வாழ்க.
மாறன் உரை செய்த தமிழ் மறை வளர்த்தோன் வாழியே - நம்மாழ்வார் உரைத்த தமிழ் மறையாம் திருவாய்மொழி முதலிய பாசுரங்களை வளர்ந்தவன் வாழ்க.
அற மிகு நற்பெரும்பூதூர் அவதரித்தான் வாழியே - அறத்தில் சிறந்தவர் வாழும் திருப்பெரும்பூதூரில் அவதரித்தவன் வாழ்க.
அழகாரும் எதிராசர் அடியிணைகள் வாழியே - அழகில் சிறந்த துறவிகளின் அரசன் எதிராசர் திருவடி இணைகள் வாழ்க வாழ்க!
சங்கர யாதவ பாட்டப் பிரபாகரர் தங்கள் மதம்
சாய்வுற வாதியர் மாய்குவர் என்று சதுமறை வாழ்ந்திடு நாள்
வெங்கலி இங்கினி வீறு நமக்கிலை என்று மிகத் தளர் நாள்
மேதினி நம் சுமை ஆறும் எனத் துயர் விட்டு விளங்கிய நாள்
மங்கயராளி பராங்குச முன்னவர் வாழ்வு முளைத்திடு நாள்
மன்னிய தென்னரங்காபுரி மாமலை மற்றும் உவந்திடு நாள்
செங்கயல் வாவிகள் சூழ் வயல் நாளும் சிறந்த பெரும்பூதூர்ச்
சீமான் இளையாழ்வார் வந்தருளிய நாள் திருவாதிரை நாளே!
சங்கரர், யாதவபிரகாசர், பாஸ்கரர், பிரபாகரர் முதலியவர்களின் மதங்களான மாயாவாதம் முதலியவை சாய்வுற, வாதம் செய்ய வருபவர்கள் யாரும் இல்லாமல் போவார்கள் என்று நான்கு வேதங்களும் மகிழ்ந்து 'இனி தவறான பொருள்கள் இன்றி வாழ்ந்தோம்' என்று மகிழ்ந்திடும் நாள்; வெம்மை தரும் கலிபுருடன் இனி இங்கே நம் வலிமை இல்லாமல் போய்விடும் என்று மிகவும் தளர்ந்திடும் நாள்; பூவுலகம் இனி தீயவர்களின் கூட்டம் குறைந்து நம் சுமை குறையும் என்று துயரின்றி விளங்கிடும் நாள்; திருமங்கை மன்னன், நம்மாழ்வார் முதலிய முன்னோர்களான ஆழ்வார்களின் பாசுரங்கள் நிலைபெறும் நாள்; என்றும் அழியாத திருவரங்கத் திருநகர், திருமலை திருப்பதி முதலிய திவ்ய தேசங்கள் உவகை கொள்ளும் நாள்; கயல் மீன்கள் நிறைந்த குளங்களும் கிணறுகளும் சூழ்ந்த வயலை உடைய சிறப்புடைய திருப்பெரும்பூதூரில் வந்த திருவுடையோன் இளையாழ்வார் என்னும் இராமானுசர் வந்து உதித்த நாள் (சித்திரை மாதத்) திருவாதிரைத் திருநாளே!
நாடித் தொழுபவர் இன்னலைப் போக்கும் நாதனே சாயி நாதனே (சாயி சிந்து)
நாதனே சாயி நாதனே (நாடி) - இந்த
மண்ணில் உதித்த நவநிதியே
மனதோடு உனை நினைவார் வினை
களைவாய் மறுகணமே
சொல்லத் தித்திக்கும் உன் நாமமே - அதை
சொன்னால் விலகுது என் பாவமே (மனதோடு)
நின்றதோர் இடமெல்லாம் நெஞ்சமோ - அன்பர்
நெஞ்சமோ மலர் மஞ்சமோ
உந்தன் அருளுக்கு உண்டோ பஞ்சமோ
என் போல் புரியாத கசடன் மேல்
பரிதாபம் இல்லையோ
பார்புகழ் சுந்தர சாய்ராம் - எங்கு
பார்த்தாலும் உன் ரூபம் சாய்ராம் (பார்புகழ்)
சாயிராம் ஹரே சாயிராம் ஹரே
சாயிராம் ஹரே சாயிராம்
ஆர்க்கும் அலைகடல் வாசமோ - எந்தன்
துயர் தெரிந்தும் பரிஹாசமோ
கண்பார்த்திட துயர் தீரும் - நீ
கண்பார்த்திட துயர் தீரும்
கைபட்டிட பிணி தீரும்
சொல்லுவேன் உருகி சொல்லுவேன் - உந்தன்
நாமம் சொல்லி பகை கொல்லுவேன் (சொல்லுவேன்)
சாயிராம் ஹரே சாயிராம் சங்கர
சாயிராம் ஹரே சாயிராம் சத்ய
சாயிராம் ஹரே சாயிராம் ...
Wednesday, January 13, 2010
கூரத்தாழ்வானின் குரு பரம்பரை - 7 (பெரிய நம்பிகள், திருக்கச்சி நம்பிகள்)
"மன்னிக்க வேண்டும் ஐயா. உண்மை தான். கல்லூரி காலத்தில் வார இறுதியில் தவறாமல் வந்து உங்களிடம் கீதையும் பாசுரங்களும் கற்ற காலம் மிகவும் மகிழ்வான காலம். இப்போது வெளிநாட்டில் சென்று வசிப்பதால் மதுரைக்கு எப்போதோ ஒரு முறை தான் வருகிறேன். வரும் போது தான் உங்களை வந்து காண இயலுகிறது. மன்னிக்க வேண்டும்"
"பரவாயில்லை குமரா. மதுரை வரும் போதெல்லாம் வந்து பார்க்கிறாயே. அதுவே மகிழ்ச்சி"
"ஐயா. வழக்கம் போல் சில ஐயங்களுடன் தான் உங்களைக் காண இந்த முறையும் வந்திருக்கிறேன்"
"ஐயங்களா? சரி தான். கேள். கேள்"
"இராமானுசருக்கு ஆளவந்தார் குருவா? பெரிய நம்பிகள் குருவா?"
"பெரிய நம்பிகள் தான் எம்பெருமானாருக்கு பஞ்ச சம்ஸ்காரம் செய்தவர். அதனால் அவரைத் தான் குருவாகக் கொள்ள வேண்டும். ஆனால் பெரிய நம்பிகள் இளையாழ்வாருக்கு பஞ்ச சம்ஸ்காரம் செய்யும் போது ஆளவந்தாரே செய்வதாக எண்ணிக் கொள்ளும் படி கூறியதால் ஆளவந்தாரை எம்பெருமானாரின் குரு என்றும் சொல்லுவார்கள். (பஞ்ச சம்ஸ்காரம் - ஓர் உயிர், இறைவனுக்கே அடிமை என்பதை உறுதி செய்யும் ஐந்து பகுதிகளைக் கொண்ட ஒரு சடங்கு)
அது மட்டுமில்லை குமரன். ஆளவந்தாரின் ஐந்து சீடர்களிடம் எம்பெருமானார் வைணவ சமயத்தின் பல கூறுகளைக் கற்றார். அதனால் அந்த ஐந்து ஆசாரியர்களும் இராமானுசரின் ஆசாரியர்களே. சமயம் என்னும் நதி ஆளவந்தார் என்னும் ஒற்றை உருவில் இருந்து அவரின் ஐந்து சீடர்கள் என்னும் கிளை நதிகளாக மாறி பின்னர் இராமானுசரிடம் மீண்டும் ஒன்றாகக் கலந்தது என்று இதனைச் சுவையுடன் கூறுவார்கள்".
"இராமானுசரின் ஆசாரியர்களைப் பற்றி மேலும் சொல்லுங்கள் ஐயா".
"முதலில் இராமானுசரின் இரு ஆசாரியர்களைப் பற்றி சொல்கிறேன். கேள். அவ்விருவர்கள் பெரிய நம்பிகளும் திருக்கச்சி நம்பிகளும்".
"திருக்கச்சி நம்பிகளா? அவர் காஞ்சி வரதனுக்கு திருவாலவட்டக் கைங்கரியம் (விசிறும் பணி) செய்யும் போது வரதன் அவருடன் நேரில் பேசுவார் என்று படித்திருக்கிறேன். சரி தானா?"
"ஆமாம் குமரன். அவரே தான்"
***
இராமானுசர் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் தீர்த்த கைங்கரியம் செய்து கொண்டிருக்கிறார். பெருமாளின் அபிசேகத்திற்கும் மற்ற கோவில் பயன்பாடுகளுக்கும் பக்கத்தில் இருக்கும் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவதே அந்தப் பணி. அப்படி தொண்டு செய்து வரும் போது ஒரு முறை திருக்கோவிலில் திருக்கச்சி நம்பிகளைக் காணுகிறார்.
"வாரும் இளையாழ்வாரே. நலம் தானே?!"
"தேவரீர் ஆசிகளினால் அடியேன் நலமுடன் இருக்கிறேன் சுவாமி".
"ஆனால் உங்கள் முகம் ஏதோ குழப்பத்தால் வாடியிருக்கிறதே. அது ஏன்?"
"சுவாமி. அடியேன் மனத்தில் சில கேள்விகள் இருக்கின்றன. தேவரீர் திருவுளம் இரங்கி வரதனிடம் அக்கேள்விகளுக்கு விடை பெற்றுத் தரவேண்டும்".
"வருந்த வேண்டாம். உம் கேள்விகளுக்கு வரதனின் விடை என்ன என்று இன்றைய திருவாலவட்டப் பணியின் போது கேட்டுச் சொல்கிறேன்".
**
"காஞ்சிபூர்ணரே. ஏதோ எம்மைக் கேட்க எண்ணியிருந்தீர் போலிருக்கிறதே. ஏன் கேட்காமல் இருக்கின்றீர்?"
"சுவாமி. தேவரீர் திருக்கட்டளையை எதிர்நோக்கியே காத்திருந்தேன். இளையாழ்வார் ஏதோ கேள்விகளைத் தன் மனத்தில் கொண்டிருக்கிறாராம். அவற்றிற்கான விடைகளை உங்களிடம் கேட்டுச் சொல்ல வேண்டியிருக்கிறார். தேவரீர் திருவுளம் இரங்கிச் சொல்லியருள வேண்டும்"
"ஓ. இராமானுசனின் கேள்விகளா? அவை மிகப் பெரியவை. அந்த ஆறு கேள்விகளுக்கு ஆறு வார்த்தைகள் விடைகளாகச் சொல்கிறேன். சென்று அவனிடம் சொல்லும்".
"ஆகட்டும் சுவாமி. அந்த ஆறு வார்த்தைகளைச் சொல்லியருள வேண்டும்".
"பரதத்துவம் நாமே.
பேதமே தரிசனம்.
உபாயமும் பிரபத்தியே.
அந்திமஸ்மிருதியும் வேண்டாம்.
பிறப்பின் இறுதியில் மோட்சம்.
பெரியநம்பிகளைக் குருவாக அடையட்டும்.
இவையே அந்த ஆறு வார்த்தைகள் கஜேந்திர தாசரே."
***
"இளையாழ்வாரே. வரதன் அருளிய ஆறு வார்த்தைகள் இவை. உமது திருவுள்ளத்தில் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு இவை சரியான விடைகள் தானா என்று பாரும்".
வரதன் சொன்ன ஆறு வார்த்தைகளைச் சொல்கிறார்.
"ஆகா. அடியேன் தங்களுக்குப் பெரும் நன்றியுடையவன் ஆனேன் சுவாமி. பெருமாளின் பதில்கள் என் மனத்தில் இருக்கும் குழப்பங்களை எல்லாம் நீக்கின".
"அவ்வாறு நீர் நினைத்ததும் என்ன? வரதன் சொன்னதும் என்ன?"
"வேதங்களும் சாத்திரங்களும் பரதெய்வம் என்று பல தெய்வங்களைக் குறிக்கின்றன. எல்லா சம்பிரதாயத்தாரும் நாராயணனே பரம்பொருள் என்று அறுதியிட்டாலும் வேதங்களை நேரடியாகப் படித்துப் பார்த்தால் மற்ற தேவதைகளையும் பரம்பொருள் என்று வேதம் சொல்வதைப் பார்க்க முடிகிறது. அதனால் குழப்பம் கொண்டிருந்தேன். மாயாவாதத்தார், பரசமயத்தார் முதற்கொண்டு முன்னோர் பலரும் சாதித்த படியே பரதத்துவம் தாமே என்று வரதன் பறை சாற்றினான்.
முத்தத்துவங்களான இறை, உயிர், இயற்கை என்னும் இவை ஒரே பொருள் தான் என்றும் வெவ்வேறு என்றும் கூறும் வேத வாக்கியங்கள் இருக்கின்றன. இவற்றுள் எதனை முதன்மையாகக் கொள்ள வேண்டும் என்ற குழப்பம் இருந்தது. இயல்பில் உயிரும் இயற்கையும் இறையின் பகுதிகளாக இருப்பதால் அவை ஒன்றே என்று சொல்லலாம் என்றாலும் அவற்றின் இடையே இருக்கும் வேறுபாடுகளும் உண்மை என்பதால் அவை வெவ்வேறானவை என்று கொள்வதே சமயக் கொள்கை என்று பொருள்படும்படி பேதமே தரிசனம் என்று சொன்னான் வரதன்.
வேத வேதாந்தங்களில் இறைவனை அடையும் வழிகளாகப் பல வழிகளும் சொல்லியிருக்க எந்த நிலையிலும் இறைவனுக்கே அடிமையான உயிர் அந்த வழிகளைக் கடைபிடிப்பது எங்ஙனம் என்று வருந்தியிருந்தேன். உயிருக்கும் இறைக்கும் இயற்கையாக அமையும் அந்த தொடர்பிற்குத் தகுந்த வழியான - அவனே கதி என்று இருக்கும் - பிரபத்தியே வழி என்று சொன்னான் பேரருளாளன்.
அப்படி இயற்கை தொடர்பினாலே நாராயணனே நமக்கே பறை தருவான் என்று இருக்கும் பிரபத்தி வழியில் நின்றால் கீதையில் கண்ணன் சொன்னது போன்ற மரண காலத்தில் அவனை நினைப்பது என்ற அந்திம ஸ்மிருதி இயல்பின் வழியில் தானே அமையலாம்; அமையாமலும் போகலாம். அவ்வாறு அமையாமல் போனால் அவ்வுயிரின் கதி என்ன என்று கலங்கியிருந்தேன். அப்போதைக்கிப்போதே சொல்லி வைத்தால் போதும்; அந்திமஸ்மிருதியும் வேண்டாம் என்று அருளினான் அத்திகிரி காளமேகம்.
அந்திமஸ்மிருதி இல்லையேல் அவ்வுயிருக்கு விடுதலை உண்டா என்ற கேள்விக்கு அப்பிறப்பின் இறுதியில் மோட்சம் என்று அருளினான் அச்சுதன்.
தேவரீரைக் குருவாக வரித்தேன்; தேவரீர் சாத்திர மரியாதையைச் சொல்லி தவிர்த்துவிட்டீர்கள். அதனால் நற்கதிக்கு வழியேது என்று கலங்கியிருந்தேன். பெரிய நம்பிகளை குருவாக அடைய வழி காட்டினான் வரதன்."
"ஆகா. அருமை அருமை இளையாழ்வாரே. ஆளவந்தார் 'ஆமுதல்வன் இவன்' என்று உம்மை குளிர கண் பார்வை செய்தது மிகப் பொருத்தமே. வரதன் காட்டிய வழியில் பெரிய நம்பிகளை சென்று அடையுங்கள்".
***
வரதன் காட்டிய வழியிலே பெரிய நம்பிகளை ஆசாரியராக அடைந்து அவர் காட்டிய வழியில் ஆளவந்தாருக்குப் பின்னர் வைணவ தலைமைப் பீடத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கிறார் இளையாழ்வார் எம்பெருமானார் இராமானுசர். ஆளவந்தாருக்கு வந்த இராசபிளவை என்ற நோயை தான் அடைந்து அதனால் நோயுற்று வருந்திக் கொண்டிருக்கிறார் ஆளவந்தாரின் சீடர் மாறனேரி நம்பிகள். இவர் தாழ்ந்த குலம் என்று அக்காலத்தில் கருதப்பட்ட குலத்தில் பிறந்தவர். அந்தணரான பெரிய நம்பிகள் தன்னுடைய ஆத்ம சகோதரரான மாறனேரி நம்பிகள் ஆசாரிய பிரசாதமாக இந்த நோயை அடைந்து வருந்திக் கொண்டிருப்பதைக் கண்டு அவருக்குப் பணிவிடைகள் செய்து வருகிறார். மாறனேரி நம்பிகள் தம் காலம் முடிந்து ஆசாரியன் திருவடிகளை அடைந்த போது (காலமான போது) அவருடைய திருவுடலுக்கு அந்தணர்களுக்குரிய இறுதிச் சடங்குகளைச் செய்து எரியூட்டுகிறார் பெரிய நம்பிகள்.
"கேட்டீர்களா இந்த அநியாயத்தை. பிராமண குலத்தில் பிறந்து சாத்திர மரியாதையையே கெடுத்துவிட்டார் பெரிய நம்பி".
"ஆமாம் ஆமாம். இது பெரிய துரோகம் தான். காலம் சென்றவர் என்ன தான் தன் ஆசாரியரின் இன்னொரு சீடர் என்றாலும் சாத்திரம் சொன்ன வழி நடப்பது தானே அவருக்கும் அழகு; அவருடைய ஆசாரியருக்கும் அழகு. இப்படி ஒரு காரியத்தை அவர் செய்யலாமா?"
"இப்படி சாத்திரம் காட்டிய வழியிலிருந்து தவறிய பெரிய நம்பியை நாம் அனைவரும் ஒதுக்கி வைக்க வேண்டும். இனி மேல் நாம் யாருமே அவருடன் எந்தவித சம்பந்தமும் வைத்துக் கொள்ளக் கூடாது. இது நம் அனைவரையும் கட்டுப்படுத்தும். ஒத்துக் கொள்கிறீர்களா?"
"சரி தான். ஒத்துக் கொள்கிறோம். ஒத்துக் கொள்கிறோம்"
நாட்கள் செல்கின்றன. சாதிக்கட்டுப்பாட்டின் படி திருவரங்கத்து அந்தணர்கள் எல்லோரும், ஆளவந்தாரின் தொடர்பு கொண்டவர்களைத் தவிர்த்து மற்ற அந்தணர்கள் எல்லோரும், பெரிய நம்பிகளுடன் எந்த வித தொடர்பும் இல்லாமல் இருக்கின்றனர். இது இராமானுசரின் திருவுள்ளத்தை நோகடிக்கிறது. இதற்குத் திருவரங்கனே வழி செய்ய வேண்டுமென்று வருந்தியிருக்கிறார்.
அப்போது திருவிழாக்காலம். அரங்கன் தனது திருத்தேரில் ஏறி வீதி வலம் வந்து கொண்டிருக்கிறான்.
"அடடா. இதென்ன தேர் நகர மாட்டேன் என்கிறதே. அனைவரும் கூடி இன்னும் நன்கு வலித்து இழுங்கள்".
"ஐயா. அனைத்து முயற்சிகளும் செய்தாயிற்று. என்ன முயன்றாலும் தேர் நகரவே மாட்டேன் என்கிறது".
"திருத்தலத்தாரே. இப்போது என்ன செய்வது?"
"அதைத் தான் நாமும் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். இதற்கு முன்னர் இப்படி நிகழ்ந்ததுண்டா?"
"இல்லை. இதுவே முதன்முறை."
"அப்படியென்றால் அரங்கனைத் தான் வேண்டிக் கொள்ள வேண்டும்."
"அரங்கா. இந்த சோதனையிலிருந்து எங்களை விடுவிக்க நீயே வழி காட்டியருள வேண்டும்".
அருச்சகர் மேல் அரங்கனின் ஆவேசம் ஏற்படுகிறது.
"திருத்தலத்தாரே. என் அடியவன் ஒருவனுக்கு இவ்வூர் மக்கள் தீங்கு இழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவனை ஒதுக்கிவைத்து இவர்கள் துன்புறுத்துவதால் வருந்தி இப்போது தன் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கிறான் என் அடியவன். அவனிடம் இவர்கள் மன்னிப்பு கேட்டுக் கொண்டு அவனை வெளியே அழைத்து வந்து தீர்த்தம் சடாரி முதலிய மரியாதைகளைச் செய்தால் தான் தேர் நகரும்".
"ஆகா. அப்படிப்பட்ட அடியவர் யார்? யார் வீட்டின் முன் தேர் இப்போது நிற்கிறது? ஓ இது பெரிய நம்பிகளின் வீடு அல்லவா? அவரைத் தான் அரங்கன் சொல்கிறான்.
ஊரார்களே. அரங்கனின் கட்டளையை நீங்கள் கேட்டீர்கள். அதன் படியே நாம் செய்ய வேண்டும். வாருங்கள் சென்று பெரிய நம்பிகளைப் பணிந்து அழைத்து வருவோம்"
அரங்கனின் கட்டளைப்படி பெரிய நம்பிகளை அழைத்து வந்து தீர்த்த சடாரி மரியாதைகளைச் செய்த பின்னர் தேர் நகர்கிறது. அன்று முதல் முன் போலவே ஊரார்கள் பெரிய நம்பிகளுடன் அனைத்து தொடர்புகளையும் கொள்கின்றனர். இளையாழ்வாரின் திருவுள்ளமும் மகிழ்ந்திருக்கிறது.
**
"ஆசாரியர்களின் திருக்கதைகளைச் சொன்னதற்கு நன்றி ஐயா. அவர்களது வாழித் திருநாமத்தின் பொருள் இப்போது நன்கு புரிகிறது."
"வாழித் திருநாமமா? சொல் குமரா. மீண்டும் ஒரு முறை கேட்டால் ஆனந்தமாக இருக்கும்"
"பெரிய நம்பிகளின் வாழித் திருநாமம்:
அம்புவியில் பதின்மர் கலை ஆய்ந்துரைப்போன் வாழியே
ஆளவந்தார் தாளிணையை அடைந்துய்ந்தோன் வாழியே
உம்பர் தொழும் அரங்கேசர்க்கு உகப்புடையோன் வாழியே
ஓங்கு தனுக் கேட்டை தன்னில் உதித்த பிரான் வாழியே
வம்பவிழ்தார் வரதர் உரை வாழி செய்தான் வாழியே
மாறனேர் நம்பிக்கு வாழ்வளித்தான் வாழியே
எம்பெருமானார் முனிவர்க்கு இதம் உரைத்தான் வாழியே
எழில் பெரிய நம்பி சரண் இனிதூழி வாழியே
அம்புவியில் பதின்மர் கலை ஆய்ந்துரைப்போன் வாழியே. அழகிய இந்த உலகத்தில் பத்து ஆழ்வார்களது பாசுரங்களை ஆய்ந்து உரைப்பவன் வாழ்க.
ஆளவந்தார் தாளிணையை அடைந்து உய்ந்தோன் வாழியே. ஆளவந்தாரது திருவடிகள் இரண்டினையும் அடைந்து உய்வு அடைந்தவன் வாழ்க.
உம்பர் தொழும் அரங்கேசர்க்கு உகப்புடையோன் வாழியே. ஊரெல்லாம் ஒதுக்கி வைத்தாலும், தேவர்களும் தொழும் திருவரங்கநாதன் அவன் திருத்தேரை இவர் திருமாளிகை முன்பு நிறுத்தி அதன் மூலம் இவர் மேல் அவனுக்கு இருக்கும் உகப்பை ஊரெல்லாம் அறியும் படி செய்தான். அப்படி அரங்கேசனின் உகப்பை உடையவன் வாழ்க.
ஓங்கு தனுக் கேட்டை தன்னில் உதித்த பிரான் வாழியே. பெருமையில் சிறந்த மார்கழி மாதக் கேட்டை நட்சத்திரத்தில் பிறந்த தலைவன் வாழ்க.
வம்பவிழ்தார் வரதர் உரை வாழி செய்தான் வாழியே. மணம் மிகுந்த தாரை (மலர் மாலையை) அணிந்த வரதரின் ஆறு வார்த்தைகள் உண்மை ஆகும் படி இராமானுசருக்கு குருவாக அமைந்தவன் வாழ்க.
மாறனேர் நம்பிக்கு வாழ்வளித்தான் வாழியே. நம்மாழ்வாருக்கு நேரான மாறனேர் நம்பிகளின் இறுதிச் சடங்குகளைச் செய்து அவர் நல்கதி அடையவைத்தவன் வாழ்க.
எம்பெருமானார் முனிவர்க்கு இதம் உரைத்தான் வாழியே. எம்பெருமானாராம் இராமானுசமுனிவருக்கு நன்மையான சமயக்கருத்துக்களைச் சொன்னவன் வாழ்க.
எழில் பெரியநம்பி சரண் இனிது ஊழி வாழியே. அழகுடைய பெரிய நம்பிகளின் திருவடிகள் இனிது எல்லா காலங்களிலும் வாழ்க வாழ்க.
திருக்கச்சி நம்பிகளின் வாழித் திருநாமம்:
மருவாரும் திருமல்லி வாழ வந்தோன் வாழியே
மாசி மிருகசீரிடத்தில் வந்துதித்தான் வாழியே
அருளாளருடன் மொழி சொல் அதிசயத்தோன் வாழியே
ஆறு மொழி பூதூரர்க்கு அளித்த பிரான் வாழியே
திரு ஆலவட்டம் செய்து சேவிப்போன் வாழியே
தேவராச அட்டகத்தைச் செப்புமவன் வாழியே
தெருளாரும் ஆளவந்தார் திருவடியோன் வாழியே
திருக்கச்சி நம்பி இரு திருவடிகள் வாழியே
மருவாரும் திருமல்லி வாழ வந்தோன் வாழியே - மலர்களின் மகரந்தங்கள் எங்கும் விளங்கும் பூந்தண்மல்லி (பூவிருந்தவல்லி, பூந்தமல்லி) என்றும் பெயர் பெற்று விளங்குமாறு அந்த ஊரில் பிறந்தவன் வாழ்க.
மாசி மிருகசீரிடத்தில் வந்துதித்தான் வாழியே - மாசி மாத மிருகசீரிட நட்சத்திரத்தில் வந்து உதித்தவன் வாழ்க.
அருளாளருடன் மொழி சொல் அதிசயத்தோன் வாழியே - பேரருளாளனாம் காஞ்சிபுரம் வரதராசப் பெருமாளுடன் நேரடியாகப் பேசும் அதிசயம் செய்தவன் வாழ்க.
ஆறு மொழி பூதூரர்க்கு அளித்த பிரான் வாழியே - ஆறு வார்த்தைகளை திருப்பெரும்பூதூரில் பிறந்த பூதூரராம் இராமானுசருக்காக வரதராசப் பெருமாளிடம் கேட்டுச் சொன்ன தலைவன் வாழ்க.
திரு ஆலவட்டம் செய்து சேவிப்போன் வாழியே - பேரருளாளப் பெருமாளுக்கு விசிறி வீசும் சேவையைச் செய்தவன் வாழ்க.
தேவராச அட்டகத்தைச் செப்புமவன் வாழியே - அந்தப் பெருமாளின் மேல் தேவராச அட்டகம் என்ற துதி நூலைச் செய்தவன் வாழ்க.
தெருளாரும் ஆளவந்தார் திருவடியோன் வாழியே - மயக்கம் தீர்ந்த/தீர்க்கும் ஆளவந்தாரின் திருவடிகளை அடைந்தவன் வாழ்க.
திருக்கச்சி நம்பி இரு திருவடிகள் வாழியே - திருக்கச்சி நம்பிகளின் இரு திருவடிகளும் வாழ்க வாழ்க."
***
அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள்!
Monday, January 11, 2010
நான் தமிழன்!
தமிழ்நாட்டில் 'தமிழ்த்தாய்' வாழ்த்துப் பாட யாருமே முன்வரவில்லை. அழைப்பு விடுத்த அன்றைய முதல்வர் கலைஞருக்கு இது பேரதிர்ச்சி. ஆனால் துணிந்து பாடி வரலாற்றில் இடம்பெற்றார் டி.எம். சௌந்தர்ராஜன். பி. சுசீலாவுடன் இணைந்து அவர் பாடிய 'நீராருங் கடலுடுத்த...' என்று தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்தான், இன்றைக்கு தமிழ் நெஞ்சங்கள் அனைத்திலும் குடிகொண்டிருக்கிறது. துணிச்சல் மிக்க மதுரைக்காரர் என்று பாராட்டியது கலைஞர் மட்டுமல்ல தமிழ்த்தாயும்தான். அந்தக் குரலில் இருந்த கம்பீரம், தமிழைத் தலைநிமிர வைத்தது.
கோடானகோடி தமிழ் இதயங்களைக் கொள்ளை கொண்ட அந்த வெண்கலக்குரலை தமிழுலகிற்குத் தந்து பெருமை தேடிக் கொண்டது சௌராஷ்ட்ர சமூகம்.
இன்றைக்குத் தமிழகத்தின் பல பகுதிகளிலும் விரவியிருக்கும் சௌராஷ்ட்ர சமூகத்தார் பெரும்பாலும் பட்டு நெசவு நெய்பவர்களாகவும் பட்டு நூல் வியாபாரிகளாகவும் இருக்கிறார்கள். அதனால்தான் இவர்களை 'பட்டு நூல்காரர்கள்' என்கிறார்கள்.
குஜராத் பகுதிகளில் உள்ள சௌராஷ்ட்ர இனமக்களே சில நூற்றாண்டுகளுக்கு முன்பு இடம்பெயர்ந்து தமிழகம் வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் இவர்களின் வருகை பற்றி பல்வேறு கருத்து முரண்கள் எழுகின்றன.
விஜயநகர ஆட்சியின் போது நாயக்க மன்னர்க ள் மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்டனர். அப்போது நாயக்க மன்னர்களுக்குப் பட்டாடை நெய்து தருவதற்கு என்றே சில சௌராஷ்ட்ர குடும்பங்களை மதுரையில் குடியேற்றியதாகவே பலரும் கூறுகிறார்கள்.
அப்படி குடியேறியவர்கள் தமிழ்நாட்டுக் கலை, இலக்கியம், கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றில் பிரிக்கமுடியாத ஒரு அங்கமாக தங்களை நிலைநிறுத்திக்கொண்டனர். மதுரை, திருச்சி, சேலம், கும்பகோணம், பரமக்குடி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், ஆரணி, சென்னை, கோவை, பெரியகுளம், திருபுவனம் என்று அவர்கள் பரந்து விரிந்து வாழுகிறார்கள்.
இன்றைக்கு சுமார் 20 லட்சம் மக்கள்வரை வாழும் இச்சமூகத்தார் வீட்டில் பேசுவது சௌராஷ்ட்ரம் என்றாலும் அவர்களின் வாழ்வாதார மொழி தமிழ்தான்.
பக்தி இலக்கியத்தில் சௌராஷ்ட்ரர் பங்கு குறிப்பிடத்தக்க அளவு உள்ளது. திருபுவனத்தில் தம் வழிபாட்டிற்காக ஒரு பெருமாள் கோயில் கட்டியுள்ளனர். சௌராஷ்ட்ர சபை நடத்தும் 'பக்தபிரகலாத நாடக சபை' நாடகக் கலைக்கு உயிர் ஊட்டி வருகிறது. ஸ்ரீமத் நடனகோபால நாயகி சுவாமிகள் (1843 - 1914) 'மதுரையின் ஜோதி' என்றும் சௌராஷ்ட்ர ஆழ்வார் என்றும் போற்றப்படுபவர். கடவுளை நாயகனாகவும் தன்னை நாயகியாகவும் பாவித்து இவர் பாடிய கீர்த்தனைகள் பலரின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டவை.
சுதந்திரப் போராட்டத்தில் குதித்த பல சௌராஷ்ட்ர தொண்டர்களின் வீரவரலாறுகள் வெளியில் வராமலே போய்விட்டன. காந்தியத்தில் பற்றுக் கொண்ட ஏ.ஜி. சுப்புராமனும் அவரது புதல்வர் ஏ.ஜி.எஸ். ராம்பாபுவும் மதுரை எம்பியாக தலா இரு முறை தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அ.தி.மு.க. அரசில் அமைச்சராக இருந்த எஸ்.ஆர். ராதா, பா.ஜ.க.வின் முன்னாள் சேலம் எம்.எல்.ஏ. லட்சுமணன், கும்பகோணம் முன்னாள் எம்.எல்.ஏ. ஏ.ஆர். ராமசாமி உள்ளிட்ட பலர் அரசியலில் பங்காற்றியுள்ளனர்.
தமிழ்த்திரைப்பட வரலாற்றில் சௌராஷ்ட்ரர்களின் பங்கு அளவிடற்கரியது. தமிழ்த்திரை இசை உலகின் அடையாளமாகத் திகழ்ந்தவர் டி.எம். சௌந்தர்ராஜன்.
பட்டு நெசவு செய்யும் சமூகத்திலிருந்து பாட்டு நெசவு செய்தவர் டி.எம்.எஸ். எம்.ஜி.ஆர்., சிவாஜி என்ற இரு சிகரங்களைத் தன் குரலால் உயர்த்திப் பிடித்தவர். ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி சாதனை செய்தவர்.
ஏ.எல். ராகவன் இன்னொரு சௌராஷ்ட்ர சமூகம் தந்த இசைக்கொடை. 'சீட்டுக்கட்டு ராஜா', 'என்ன வேகம் நில்லு பாமா', 'அங்கமுத்து தங்கமுத்து' உள்ளிட்ட பல பாடல்களால் தமிழ்த்திரை இசை உலகிற்கு அணி சேர்த்த ஏ.எல் ராகவன், நடிகை எம்.என். ராஜமின் கணவர் என்பது கூடுதல் சிறப்பு. எம்.என். ராஜம், எம்.ஜி.ஆர்., சிவாஜி, என்.டி.ஆர்., நாகேஸ்வரராவ் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களுடன் நாயகியாக நடித்தவர். எம்.ஆர். ராதாவுடன் நடித்த 'ரத்தக் கண்ணீர்' அவரது சினிமா வாழ்வில் மிகப் பெரிய திருப்புமுனை.
'அத்தானும் நான் தானே', 'சித்தாடை கட்டிக்கிட்டு', 'மண்ணை நம்பி மரமிருக்கு..' போன்ற பல பாடல்களைத் தந்து தமிழர் உள்ளத்தில் நீங்கா இடம் பிடித்த எஸ்.சி. கிருஷ்ணன் சௌராஷ்ட்ர சமூகத்தவரே.
இயக்குநர் ஸ்ரீதரால் 'வெண்ணிற ஆடை' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் செய்யப்பட்ட வெண்ணிற ஆடை நிர்மலா 100 படங்களுக்கும் மேல் நடித்து திரையுலகில் முத்திரை பதித்த தனிப்பெரும் கலைஞர்.
இலக்கிய உலகிலும் சௌராஷ்ட்ர சமூகத்து மக்கள் தனி முத்திரை பதித்துள்ளனர்.
இராமராய் என்பவர் சௌராஷ்ட்ர எழுத்தை மீட்டெடுத்தவர். அதனால் இராமராய் லிபி என்றே குறிப்பிடுபவரும் உண்டு.
'மணிக்கொடி' காலத்து முதுபெரும் எழுத்தாளர் எம்.வி. வெங்கட்ராம். தமிழ் இலக்கிய உலகின் குறிப்பிடத்தக்க ஆளுமை. தனது 'காதுகள்' நாவலுக்கு சாகித்ய அகாடமி விருதினைப் பெற்றுத் தந்து, தமிழை கௌரவித்தவர். இவரது 'வேள்வித் தீ' நாவல் தமிழுக்கு சௌராஷ்ட்ர சமூகம் பற்றிய பதிவாகும்.
இவரைத் தொடர்ந்து சாகித்ய அகாடமியின் சௌராஷ்ட்ர மொழிக்கான 'பாஷா சம்மான்' விருது, தமிழகத்தில் சௌராஷ்ட்ரர் வரலாறு எழுதிய கே.ஆர். சேதுராமனுக்கும் சௌராஷ்ட்ர இலக்கணம், ராமாயணம் எழுதிய தாடா. சுப்ரமணியனுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
நாவல் இலக்கியத்தில் தனியொரு முத்திரை பதித்த சுபா என்ற இரட்டையர்களில் பாலகிருஷ்ணன் சௌராஷ்ட்ரம் தந்த கொடையே.
சென்ற நூற்றாண்டுவரை ஒரு ஊர் சௌராஷ்ட்ரர்கள் மற்ற ஊர் சௌராஷ்ட்ரர்களுக்கு பெண் கொடுக்க மாட்டார்கள். ஆனால் இப்போது எல்லாமே மாறி கொள்வினை கொடுப்பினை வைத்துக் கொள்கின்றனர். திருமணத்தின்போது அவர்களின் வரலாற்றைச் சொல்லும் நிகழ்ச்சி மிக முக்கியமாக இடம்பெறுவது சிறப்பு. இன்றைக்கு உலகம் முழுவதும் பரவியிருக்கும் தமிழ் சௌராஷ்ட்ரர்கள் சகோதர பாசம்மிக்கவர்களாகவும் தமிழின் ஒரு அங்கமாகவும் விளங்குவது தமிழுக்கு உயர்வு.
நன்றி: குமுதம் 13.1.2010 இதழ்
***
17 பிப்ரவரி 2010 அன்று சேர்க்கப்பட்டது:
'சௌராஷ்ட்ர மேதாவி', 'சௌராஷ்ட்ர எழுத்தின் விஸ்வகர்மா', மேதகு தொப்பே. முனிசவ்ளி ராமாராய் அவர்களின் திருவுருவச் சிலை மதுரை தெற்கு கிருஷ்ணன் கோவில் ஆண்டாள் சன்னிதித் தூண்கள் ஒன்றில் இருக்கிறது. அப்படத்தைத் திரு. மார்கண்டேயன் சுரேஷ்குமார் அனுப்பினார். அதனை இங்கே இடுகிறேன்.
Thursday, January 07, 2010
கூரத்தாழ்வானின் குரு பரம்பரை - 6 (ஆளவந்தார் யமுனைத்துறைவன்)
"வா குமரா. நலமாக இருக்கிறாயா?"
"உங்களைப் போன்ற பெரியவர்களின் ஆசிகளினால் நலமாக இருக்கிறேன் ஐயா"
"இன்றைக்கு இங்கு வந்த நோக்கம் என்ன?"
"ஆளவந்தாரின் வாழித்திருநாமத்தைப் படித்துக் கொண்டிருந்தேன் ஐயா. அதில் சில ஐயங்கள். கேட்டுத் தெளிவு பெறலாம் என்றே வந்தேன்"
"அப்படியா! என்ன ஐயங்கள்?"
"அதற்கு முன் ஆளவந்தாரின் திருக்கதையைக் கொஞ்சம் சொல்லுங்கள் ஐயா"
"சரி. சொல்கிறேன் கேள்"
***
இடம்: நாதமுனிகளின் திருக்குமாரரான ஈஸ்வரமுனிகளின் திருமாளிகை (சான்றோர்களின் சிறு வீட்டையும் திருமாளிகை என்பது வைணவ வழக்கு).
காலம்: ஈஸ்வரமுனிகளின் திருக்குமாரரான யமுனைத்துறைவன் சிறுவயதில் வேதங்களைக் கற்றுக் கொள்ளும் காலம்.
வேதங்களைக் கற்றுக் கொள்ளும் போது ஆசிரியர் ஒரு முறை சொல்ல, மாணவர்கள் அதனை இரு முறை திருப்பித் திருப்பிச் சொல்லி மனப்பாடம் செய்வது வழக்கம். அதனைச் சந்தை சொல்லுதல் என்பார்கள். அப்படியே யமுனைத்துறைவனுடன் பயிலும் மாணவர்கள் அனைவரும் இரு முறை திருப்பித் திருப்பிச் சொல்லி பயின்று கொண்டிருக்கின்றனர். சில நேரங்களில் முந்தைய நாள் படித்த பாடத்தையே மறு நாளும் படித்து வருவதும் உண்டு.
"யமுனைத்துறைவா. நீயும் மற்ற மாணவர்களைப் போல் வேதங்களைக் கற்றுக் கொள்ளாமல் விளையாடிக் கொண்டிருக்கிறாயே?"
"ஐயா. அவர்கள் ஓதினவிடத்தையே ஓதிக் கொண்டிருக்கிறார்கள்"
"ஓ. சந்தை சொல்கிறார்களா? அப்படி செய்தால் தானே வேத பாடம் மனதில் நிலைக்கும். நீயும் சென்று அவர்களுடன் ஓதுவாய்"
"ஐயா. அடியேனுக்கு இந்தப் பகுதி பாடம் ஆகிவிட்டது"
"அப்படியா? எங்கே சொல்!"
அந்தப் பகுதியை ஓரெழுத்தும் பிசகாமல் ஓரொலியும் பிசகாமல் யமுனைத்துறைவன் சொல்லுவதைக் கேட்டு அனைவரும் இவரின் மேதைமையைக் கண்டு வியக்கின்றனர். ஒரே ஒரு முறை ஆசிரியர் சொன்னதை உருப் போட்டு மனப்பாடம் செய்யும் திறன் யாருக்கு அமைந்திருக்கிறது? நான்கு வேதங்களையும் இப்படியே பல முறை உருப்போட்டு கற்காமல் ஒரே உருவில் கற்று மகிழும் இந்த சிறுவனை அனைவரும் வாழ்த்தினர்.
***
இடம்: சோழன் அரசவை
காலம்: அரசபுரோகிதன் ஆக்கியாழ்வான் செருக்கழியும் காலம்
பெரும்பண்டிதனான ஆக்கியாழ்வான் நாட்டில் இருக்கும் எல்லா புலவர்களையும் வென்று தனக்கு நிகர் யாருமில்லை என்றும் இன்னும் வாதப் போர் புரிந்து தன்னிடம் தோற்க யார் இருக்கிறார்கள் என்றும் அப்படியே யாராவது இருந்தால் அவர்களைத் தானாகவே வாதப்போருக்கு அழைப்பதும் என்று இருக்கிறார். யமுனைத்துறைவனின் ஆசிரியர் மஹாபாஷ்ய பட்டருக்கும் அப்படியே வாதப்போர் அழைப்பு வர அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு சிறுவனான யமுனைத்துறைவன் அரசன் அனுப்பிய பல்லக்கில் ஏறி சோழன் அரசவைக்கு வந்திருக்கிறார்.
"ஆகா. இந்தச் சிறுவனின் மேதைமை முகத்திலேயே தெரிகிறது. இவன் நிச்சயம் நம் ஆக்கியாழ்வாரை வாதத்தில் தோற்கடிப்பான்"
"தேவி. நம் ஆக்கியாழ்வார் எத்துணைப் பெரும்புலவர் என்று அறிந்துமா இப்படி சொல்கிறாய்? இவரோ கல்விக்கடலுக்குக் கரை கண்ட வயோதிகர். அவனோ சிறுவன். இவரை அவன் வெல்லுவது எங்ஙனம்?"
"அரசே. இந்தச் சிறுவன் தோலான் (தோல்வியடையமாட்டான்). அதில் எனக்கு உறுதியுண்டு. அப்படி அவன் தோற்றால் என்னை முரட்டு நாய்களுக்கு இரையாக இடலாம்"
"தேவி. அவன் தோற்பான் என்பதில் எனக்கு உறுதியுண்டு. அவன் வென்றானாகில் என் அரசில் பாதியை அவனுக்குத் தருகிறேன்"
"அரசே. வாதத்தைத் தொடங்கலாமா?"
"தொடங்குங்கள்"
"சிறுவா! உன் ஆசிரியரை அழைத்தால் நீ வந்ததென்ன?"
"ஐயா. தங்களை வாதப்போரில் வெல்ல அடியேனே போதும் என்பதால்"
"ஹாஹாஹா. சரியான வேடிக்கை. சரி தான். உன் பெயர் என்ன?"
"அடியேன் பெயர் யமுனைத்துறைவன்"
"யமுனைத்துறைவா. இந்த வாதத்தை விரைவில் முடிக்கும் வகையில் ஒரு உத்தி செய்யலாம். நீ உண்டு என்று சொல்வதை நான் இல்லை என்று சொல்வேன். நீ இல்லை என்று சொல்வதை நான் உண்டு என்று சொல்வேன். அப்படி சொல்ல இயலாவிட்டால் தோற்றவனாவேன். வென்றவர் தோற்றவர் தலையில் குட்டலாம்"
"அப்படியே ஐயா. இதோ மூன்று வாக்கியங்களைச் சொல்கிறேன். அவற்றை இல்லை என்று நிறுவுங்கள்.
உங்கள் அன்னை மலடியில்லை.
இந்த அரசன் சார்வபௌமன் (அனைத்துலகுக்கும் அரசன்; தூய்மையில் சிறந்தவன்).
இந்த அரசி கற்புக்கரசி"
'ஆகா. என்ன விபரீதம் இது?! சிறுவன் என்று அலட்சியமாக இருந்துவிட்டேனே. என் தாய் மலடி தான் என்று எப்படி என்னால் வாதிடமுடியும்?! அவள் மகன் நான் தான் இங்கே இவர்கள் முன் நிற்கிறேனே?! அரசன் சார்வபௌமன் இல்லை என்றோ அரசி பதிவிரதை இல்லை என்றோ இந்த அவையிலேயே நான் சொல்லத் தான் இயலுமா? சொல்லி உயிர் பிழைக்கவும் கூடுமா? நல்ல சங்கடம் வந்ததடா நமக்கு'
"யமுனைத்துறைவா. நான் தோற்றேன். இந்த வாக்கியங்களுக்கு மறுப்பாக என்னால் ஒன்றும் சொல்ல இயலாது".
"ஆகா. இது என்ன விந்தை?! நம் ஆக்கியாழ்வார் தோற்பதா? யமுனைத்துறைவரே! நீர் வென்றீர் என்று உறுதிபடுத்த வேண்டுமெனில் இந்த வாக்கியங்களை நீரே மறுத்துக் கூறும்! அப்படி கூற இயலவில்லை எனில் யாரும் இங்கே வென்றதாக ஆகாது"
"அப்படியே அரசே.
உலக வழக்கிலும் உண்மையிலும் இந்த வாக்கியங்களை மறுக்க இயலாது. ஆனால் வாதத்தில் சாத்திரப் பிரமாணம் என்று ஒன்று உண்டு. அதனைக் கொண்டு இந்த வாக்கியங்களை மறுக்க இயலும். இது வெறும் வாதத்திற்குத் தானே ஒழிய உண்மையில் இல்லை. இதனை ஏற்றுக் கொண்டால் மேலும் விளக்குகிறேன்"
"எல்லோரும் ஏற்றுக் கொள்கிறோம். விளக்குங்கள் யமுனைத்துறைவரே!"
"ஒரு மரம் தோப்பாகாது. ஒரு பிள்ளையைப் பெற்றவள் அந்தப் பிள்ளைக்கு என்ன ஆகுமோ என்று எப்போதும் பயந்து கொண்டே இருப்பதால் பெற்றும் பெறாதவள் ஆகிறாள். ஆக்கியாழ்வார் அவர் தாய்க்கு ஒரே பிள்ளை. அதனால் ஒரே பிள்ளை பெற்ற அவர் தாயாரை மலடி என்றும் சொல்வதில் தவறில்லை.
நீர் உமது நாட்டிற்கு மட்டுமே அரசன். உம் நாட்டை விட்டுச் சென்றால் உமக்கு மரியாதை இல்லை. அதனால் உம்மை சார்வபௌமன் (எல்லா பூமியையும் உடையவன்) என்று சொல்ல முடியாது என்னில் அதுவும் தவறில்லை. அது மட்டும் இன்றி குடிமக்கள் செய்யும் பாவங்களில் அரசனுக்கும் பங்கு உண்டு என்று சாத்திரங்கள் சொல்வதால் நீங்கள் பாவமே இல்லாத தூய்மையானவர் என்றும் சொல்ல இயலாது.
திருமணத்தின் போது தெய்வங்களான சோமன், கந்தர்வன், அக்னி என்னும் மூன்று பேரை ஒரு பெண் குறியீட்டு முகமாக மணந்து கொண்ட பின்னரே ஒரு மனிதனை மணக்கிறாள். அதனால் நடப்பில் கற்புக்கரசியாக அரசியார் இருந்தாலும் ஒரு வாதத்திற்காக அரசியார் நான்கு பேரை மணந்தவர் என்று சொல்லலாம்."
"ஆகா. ஆகா. ஆகா. அருமையான விளக்கங்கள். யமுனைத்துறைவா. நீ வென்றாய் என்பதில் எந்த ஐயமும் இல்லை. நாம் முன்பே சொன்னது போல் தோற்ற என் தலையில் குட்டுவாய்"
"ஐயா. நீங்கள் வயதில் மூத்தவர். நானோ சிறுவன். நான் தங்கள் தலையில் குட்டுவது தகாது. என்னை வற்புறுத்தாதீர்கள்"
"அடடா. என்னே இந்த சிறுவனின் பணிவு. தேவி. நீ சொன்னது போல் இந்தச் சிறுவன் வென்று விட்டான். நானும் சொன்னதைப் போல் என் அரசில் பாதியை இவனுக்குத் தருகிறேன். இனி நீ நாய்களுக்கு இரையாக வேண்டாம்.
இந்த சிறுவனை அருகில் அழைத்துக் கொண்டு வாருங்கள்"
யமுனைத்துறைவர் வெற்றி பெற்றதைக் கண்டு அங்கிருந்தவர்கள் ஆரவாரத்துடன் அவரைத் தங்கள் தோள்களில் ஏற்றிக் கொண்டு அரசனுக்கும் அரசிக்கும் அருகில் கூட்டி வந்தார்கள். அருகில் வந்ததும் அரசி மிகவும் அன்புடன் சிறுவனான யமுனைத்துறைவனை 'ஆளவந்தீரே' என்று சொல்லி உச்சி முகர்ந்து அணைத்துக் கொண்டாள். ஆளவந்தாரும் அரசன் தந்த பாதி நாட்டை ஏற்றுக் கொண்டு மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தார்.
***
'நம் ஆசாரியர் அவரது ஆசாரியரின் ஆசையை நம்மிடம் தெரிவித்துவிட்டு திருநாட்டுக்கு எழுந்தருளி (காலமாகி) வெகு நாட்கள் ஆகின்றன. நம்மால் இன்னும் யமுனைத்துறைவனைச் சென்று காண இயலவில்லையே. எப்போது அவர் மாளிகைக்குச் சென்றாலும் கடுங்காவல் இருக்கிறது. உள்ளே சென்று அரசனைக் காண இயலவில்லை. என்ன செய்வது?'
நாதமுனிகள் தன் சீடரான உய்யக்கொண்டாரிடமும், உய்யக்கொண்டார் தன் சீடரான மணக்கால் நம்பியிடமும் தந்திருந்த கட்டளையைப் பற்றி மணக்கால் நம்பி சிந்தித்துக் கொண்டிருக்கிறார். தன் பேரன் யமுனைத்துறைவன் தக்க வயது வந்த பின்னர் அவனிடம் வைணவ சமயத் தலைமைப் பொறுப்பை தர வேண்டும் என்பது நாதமுனிகளின் கட்டளை. அதனை நிறைவேற்றத் தான் தகுந்த நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார் வயோதிகரான மணக்கால் நம்பிகள்.
'இன்றைக்கும் ஒரு முறை யமுனைத்துறைவன் மாளிகைக்குச் சென்று பார்ப்போம்".
ஆளவந்தாரின் மாளிகைக்குச் சென்று பார்த்தால் வழக்கம் போல் கடுங்காவல் இருக்கிறது. உள்ளே செல்ல இயலவில்லை. அந்த நேரத்தில் மாளிகையில் சமையல் செய்யும் அந்தணர் ஒருவர் அங்கே வருகிறார்.
"அந்தணரே. அரசருக்கு மிகவும் பிடித்த உணவு எது?"
"பெரியவரே. அவருக்குத் தூதுவளைக்கீரை என்றால் மிகவும் பிடிக்கும். நானும் மாதம் ஒரு முறையாவது அக்கீரையைச் சமைக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் அக்கீரை கிடைப்பதில்லை"
'இதனை முயன்று பார்த்தால் என்ன? நம் வீட்டிற்கு அருகில் தூதுவளைக் கீரை தழைத்து வளர்கிறது. அதனைக் கொண்டு வந்து கொடுத்தால் யமுனைத்துறைவன் எங்கிருந்து கிடைத்தது இந்தக் கீரை என்று கேட்பான். இந்த சமையல்காரரும் நம்மைப் பற்றி சொல்ல அவன் நம்மைப் பார்க்க விரும்பலாம். அப்படியே செய்து பார்ப்போம்'
"அந்தணரே. இனி வருந்த வேண்டாம். நாளை முதல் தினந்தோறும் தூதுளைக்கீரையை நான் கொணர்ந்து தருகிறேன்"
"ஆகா. அப்படியே செய்யுங்கள் பெரியவரே. அரசர் மிகவும் மகிழ்வார்"
தொடர்ந்து ஆறு மாதங்கள் தினந்தோறும் மணக்கால் நம்பிகள் யமுனைத்துறைவரின் சமையல்காரரிடம் தூதுவளைக் கீரையைத் தந்து வருகிறார். ஆனால் யமுனைத்துறைவரைப் பார்க்கும் வாய்ப்பு தான் இன்னும் கிடைக்கவில்லை. மிகவும் வருந்திய மணக்கால் நம்பிகள் சில நாட்கள் கீரையைத் தராமல் விடுகிறார்.
"பரிசாரகரே. சில நாட்களாக தூதுவளைக் கீரையைக் காணவில்லையே. ஏன்?"
"அரசே. ஆறு மாதங்களாக ஒரு அந்தணப் பெரியவர் அக்கீரையைத் தந்து வந்தார். சில நாட்களாக அவர் வரவில்லை. அதனால் தான் சாப்பாட்டில் கீரை இல்லை"
"ஆறு மாதங்களாக வருகிறாரா அந்தப் பெரியவர். அடடா. அவருக்கு என்ன தேவையோ? கவனிக்காமல் விட்டுவிட்டோமே. பரிசாரகரே. அடுத்த முறை அவர் வந்தால் எனக்குச் சொல்லுங்கள்"
மறுநாளே மணக்கால் நம்பிகள் கீரையுடன் வர சமையல்காரர் யமுனைத்துறைவரிடம் சொல்லி அவர் உத்தரவு பெற்று மணக்கால் நம்பிகளை யமுனைத்துறைவரிடம் அழைத்துச் சென்றார்.
"ஐயா. வாருங்கள். இந்த இருக்கையில் அமருங்கள். நீங்கள் ஆறு மாதங்களாக அடியேனுக்காக கீரை தந்து வருகிறீர்களாமே. அது எதற்காக? உங்களுக்கு ஏதேனும் செல்வம் வேண்டுமா? நிலம் வேண்டுமா?"
"ஆளவந்தாரே. எனக்கு அதெல்லாம் வேண்டாம். உங்கள் முன்னோர்கள் தேடி வைத்த செல்வம் என்னிடம் இருக்கிறது. அது இருக்கும் இடம் நான் அறிவேன். உமக்கு அந்த செல்வத்தைத் தரவே உம்மைக் காண விரும்பினேன். அந்த செல்வத்தை நீர் அடையும் காலம் வரும் வரையில் நான் இங்கே தடையின்றி வந்து செல்லும்படி ஆணையிட வேண்டும்"
"அப்படியே ஐயா"
அரசரின் ஆணை இருந்ததால் மணக்கால் நம்பி எந்த தடையும் இன்றி ஆளவந்தாரைத் தினந்தோறும் காண இயன்றது. பகவத் கீதையின் பதினெட்டு அத்தியாயங்களும் ஆளவந்தாருக்கு கற்பித்தார் மணக்கால் நம்பி. பயிர் முதிர்ந்து வர வர தலைசாய்வதைப் போல கீதையைக் கற்க கற்க ஆளவந்தாருக்கு அவரது முன்னோர் செல்வத்தை அடையும் மனநிலை முழுதும் தோன்றியது. இதுவே தக்க தருணம் என்று எண்ணி மணக்கால் நம்பியும் ஆளவந்தாரைத் திருவரங்கத்திற்கு அழைத்துச் சென்று 'இதுவே உம் முன்னோர் சொத்து' என்று திருவரங்க நாதனைக் காட்டியருளினார்.
அன்று முதல் நிலையாக திருவரங்கத்திலேயே இருந்து வைணவத் தலைமையை ஏற்றுக் கொண்டார் ஆளவந்தார்.
***
"மிக்க நன்றி ஐயா. யமுனைத்துறைவரின் திருக்கதையைக் கேட்ட பின்னர் அவரது வாழித்திருநாமத்தின் வரிகள் மிக நன்றாகப் புரிகின்றன. அந்தப் புரிதலைச் சொல்கிறேன். அவை சரி தானா என்று சொல்லுங்கள்"
"ஆகட்டும் குமரா. சொல்"
"மச்சணியும் மதிள் அரங்கம் வாழ்வித்தான் வாழியே
மறை நான்கும் ஓர் உருவில் மகிழ்ந்து கற்றான் வாழியே
பச்சை இட்ட ராமர் பதம் பகரும் அவன் வாழியே
பாடியத்தோன் ஈடேறப் பார்வை செய்தோன் வாழியே
கச்சி நகர் மாயன் இரு கழல் பணிந்தோன் வாழியே
கடக உத்திராடத்துக் கால் உதித்தான் வாழியே
அச்சமற மனமகிழ்ச்சி அணைந்திட்டான் வாழியே
ஆளவந்தார் தாளிணைகள் அனவரதம் வாழியே
மச்சு அணியும் மதிள் அரங்கம் வாழ்வித்தான் வாழியே! மாடங்கள் நிறைந்த, ஏழு மதில்களால் சூழப்பட்ட திருவரங்கத்தை வைணவ தலைமைத் தலமாக ஆக்கி வாழ்வித்தவன் வாழ்க! ஆளவந்தார் காலத்தில் தான் திருவரங்கத்தில் நிலையாக வைணவத் தலைமைப் பீடம் அமைந்தது. அதற்கு முன்னர் நாதமுனிகள் காலத்திலும் மற்ற ஆசாரியர்கள் காலத்திலும் திருவரங்கத்திற்கு முதன்மை இருந்தாலும் வைணவத் தலைமைப் பீடம் அங்கே நிலையாக அமையவில்லை. ஆளவந்தாரே அப்படி அமைத்து திருவரங்கத்தை வாழ்வித்தவர்.
மறை நான்கும் ஓர் உருவில் மகிழ்ந்து கற்றான் வாழியே! நான்கு வேதங்களையும் ஒரே தடவை சொல்லி மகிழ்ச்சியுடன் கற்றவன் வாழ்க! மற்றவர் போல் பல முறை சொல்லி வேதங்களைக் கற்காமல் ஒரே தடவையிலேயே வேதங்களைக் கற்கும் மேதைமை கொண்டவர் ஆளவந்தார்.
பச்சை இட்ட ராமர் பதம் பகரும் அவன் வாழியே! பச்சை என்னும் தூதுவளைக் கீரையைத் தந்து, திருத்தி ஆட்கொண்ட ராமமிச்ரரான மணக்கால் நம்பிகளின் சீடராக ஆகி அவரது திருவடிகளை என்றும் போற்றுபவன் வாழ்க!
பாடியத்தோன் ஈடேறப் பார்வை செய்தோன் வாழியே! பாஷ்யக்காரர் என்று பெயர் பெற்ற இராமானுசர் உய்யும்படி அவரைக் குளிரக் கண் பார்வை செய்தவன் வாழ்க! இராமானுசர் காஞ்சிபுரத்தில் அத்திகிரி வரதன் சன்னிதியில் திருப்பணி செய்து வரும் போது அங்கு வந்து தூரத்தில் இருந்து இராமானுசரைக் கண்டு 'ஆமுதல்வன் இவனே. நம் சமயத்தை நிலை நிறுத்தப் போகிறவன் இவனே' என்று சொல்லி இராமானுசரைக் குளிரக் கண் பார்வை செய்தவர் ஆளவந்தார்.
கச்சி நகர் மாயன் இரு கழல் பணிந்தோன் வாழியே! காஞ்சிபுரம் அத்திகிரி வரதனான பேரருளாளனிடம் இராமானுச முனியை வைணவ சமயம் விளங்கத் தந்தருளுமாறு பேரருளாளன் திருவடிகளைப் பணிந்தவன் வாழ்க!
கடக உத்திராடத்துக் கால் உதித்தான் வாழியே! ஆடி மாதம் உத்திராட நட்சத்திரத்தில் பிறந்தவன் வாழ்க! சூரியன் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ராசியில் நடை பயிலுவதால் எந்த மாதத்தில் எந்த ராசியில் இருக்கிறானோ அந்த மாதத்திற்கு அந்த ராசியைப் பெயராகக் கூறும் வழக்கம் உண்டு. அதன் படி கடகராசியில் சூரியன் சஞ்சரிக்கும் மாதம் ஆடி மாதம்.
அச்சம் அற மன மகிழ்ச்சி அணைந்திட்டான் வாழியே! வைணவ சமயம் தழைக்க வேண்டுமே என்ற தனது அச்சம் இராமானுசரால் தீர அதனால் மன மகிழ்ச்சி அணைந்தவன் வாழ்க!
ஆளவந்தார் தாளிணைகள் அனவரதம் வாழியே! ஆளவந்தாரின் திருவடிகள் இரண்டும் எப்போதும் வாழ்க வாழ்க!
பொருள் சரி தானா ஐயா?"
"சரி தான் குமரா"
"அன்று இராமானுசரைத் தர வேண்டி அத்திநகர் தேவராஜனிடம் பணிந்தார் ஆளவந்தார். அவருடைய வாழித் திருநாமத்தின் பொருள் வேண்டி இன்று அடியேனும் தேவராஜனிடம் பணிந்தேன்.
மிக்க நன்றி ஐயா!"