Thursday, August 20, 2009

ஆளவந்தார்

இராமானுஜரின் ஆசாரியரான ஆளவந்தாரின் வாழ்க்கைக் குறிப்புகள் சுருக்கமாக 'கோயில் கந்தாடைநாயன்' என்னும் அடியவர் அருளிச்செய்த பெரியதிருமுடியடைவு என்ற நூலில் கூறப்பட்டிருக்கின்றன. அவற்றை இங்கே முதலில் தந்திருக்கிறேன். மணிபிரவாளம் என்னும் தமிழும் வடமொழியும் கலந்த நடையில் இந்த குறிப்புகள் இருந்தாலும் வடமொழி அதிகம் கலக்காமல் கொஞ்சம் எளிய தமிழிலேயே இருக்கின்றன. ஆனாலும் இந்த நடை புரியவில்லை என்பவர்களுக்காக இக்குறிப்புகளைத் தற்காலத் தமிழிலும் எழுதியிருக்கிறேன்.

***

ஸிம்ஹாநநாம்ச பூதரான ஆளவந்தாருக்குத் திருவவதாரஸ்தலம் சோழ தேசத்திலே திருக்காவேரிதீரத்தில் வீரநாராயணபுரம். திருநக்ஷத்ர கலியுகம் மூவாயிரத்து எழுபதேழுக்குமேல் தாது வருஷம் ஆடி மாஸம் பௌர்ணமி வெள்ளிக்கிழமை உத்தராடம் விஷ்கம்பம் பவகரணம். திருத்தகப்பனார் ஈச்வரமுனிகள். திருப்பாட்டனார் நாதமுனிகள். திருத்தாயார் ஸ்ரீரங்கநாயகி. குமாரர் திருவரங்கப் பெருமாளரையர், தெய்வத்துகரசு நம்பி, பிள்ளையரசு நம்பி, சொட்டை நம்பி. திருநாமங்கள் யாமுனாசார்யார், யமுனைத்துறைவர், வாதிமத்தேபஸிம்ஹேந்த்ரர், ஆளவந்தார், பெரியமுதலியார், குடி சொட்டை. திருவாராதனம் நம்பெருமாள். இருப்பிடம் கோயில். இவருக்கு நாதமுனிகள் யாமுனாசார்யரென்கிற திருநாமமும், பகவத் ஸம்பந்தமும், மந்த்ரோபதேசமும் ஸாதித்தருளி, தத்வஹித புருஷார்த்தங்களை ப்ரஸாதிக்க உய்யக்கொண்டாருக்கு நியமித்து, யோகரஹஸ்யம் ப்ரஸாதிக்கக் குருகைக்காவலப்பனுக்கு நியமித்தார். அந்த உய்யக்கொண்டார் மணக்கால்நம்பிக்கு நியமித்தார். ஆகையாலே இவருக்குப் புருஷார்த்தங்களும் பகவத் விஷயமும் நாலாயிரமும் சதுர்த்தாச்ரம ஸ்வீகாரமும் முதலான அர்த்த விசேஷங்களெல்லாம் ப்ரஸாதித்தருளினவர் ஸ்ரீராமமிச்ரர். ஆக இவர்க்காசாரியர் ஸ்ரீமத் நாதமுனிகளும், புருஷகாரர் மணக்கால் நம்பியுமாம். குருபரம்பரை வரிசைக்கு இவர்க்கு ஆசார்யர் மணக்கால்நம்பி. சிஷ்யர்கள் பெரியநம்பி, பெரியதிருமலைநம்பி, திருக்கோட்டியூர்நம்பி, திருமாலையாண்டான், தெய்வவாரியாண்டான், வானமாமலையாண்டான், ஈச்வராண்டான், ஜீயராண்டான், ஆளவந்தாராழ்வான், திருமோகூரப்பன், திருமோகூர் நின்றார், தேவப்பெருமாள், மாறனேரி நம்பி, திருக்கச்சிநம்பி, திருவரங்கப்பெருமாளரையர், திருக்குருகூர்தாஸர், வகுளாபரண ஸோமயாஜியார், அம்மங்கி, ஆள்கொண்டி, வடமதுரையில் பிறந்த கோவிந்த தாஸர், ராஜபுரோஹிதரான நாதமுனி தாஸர், ரங்கசோழாவின் ராஜபத்னியான திருவரங்கத்தம்மான் ஆக சிஷ்யர் ப்ரதானரானவர் இருபத்திருவர். இவரருளிச் செய்தருளின ப்ரபந்தங்கள் ஸ்தோத்ரரத்னம், ஸித்தித்ரயம், ஸ்ரீகீதார்த்த ஸங்க்ரஹம், ஆகமப்ராமாண்யம், சது:ச்லோகி. இவர் சதுர்வேத ஷட்சாஸ்த்ராதி ஸகலவித்யா பாடங்களும் அருளிச் செய்து நூற்றிருபத்தஞ்சு திருநக்ஷத்ரம் எழுந்தருளியிருந்தார். இவர் நம்பெருமாள் அனுஜ்ஞையினாலே திருநாட்டுக்கெழுந்தருளின ஸ்தலம் கோயில். நிக்ஷேபம் பண்ணப்பட்ட ஸ்தலம் திருப்பார்த்துறையிலே.

இவருடைய தனியன்

யத் பதாம்போருஹ த்யான வித்வஸ்த அசேஷ கல்மஷ:
வஸ்துதாம் உபயாத: யாமுனேயம் நமாமி தம்

பொருள் - எந்த ஒருவரின் தாமரை போன்ற திருவடிகளைத் த்யானிப்பதன் மூலம் எனது அனைத்துப் பாவங்களும் நீங்கப் பெற்றனவோ, எதனால் நான் இந்த உலகில் ஒரு மதிக்கத்தக்க பொருளாக உள்ளேனோ, அப்படிப்பட்ட பெருமை உடைய யாமுனாசார்யரை வணங்குகிறேன்.

ஆளவந்தார் திருவடிகளே சரணம்.

நன்றி: நம்பெருமாள் விஜயம் ஜூலை 2 - 2007 மின்னிதழ்

***

சிம்மானனரின் (இவர் பரமபதத்தில் என்றைக்கும் நிலையாக வாழும் நித்யசூரிகள் என்னும் அடியவர்களில் ஒருவர். சிங்க முகம் கொண்டவர். அதனால் ஸிம்ஹாநநர் என்ற பெயர் பெற்றவர்) அம்சத்தில் பிறந்த ஆளவந்தார் பிறந்த இடம் சோழ நாட்டில் காவேரிக்கரையில் இருக்கும் வீரநாராயணபுரம். இவர் பிறந்த நாள் கலியுக வருடம் மூவாயிரத்து எழுபத்தேழு, தாது வருடம் ஆடி மாதம் முழுநிலவு நாள் வெள்ளிக்கிழமை உத்திராட நட்சத்திரம் சேர்ந்து வந்த நாள். இவர் தந்தையார் ஈச்வரமுனிகள். இவர் பாட்டனார் நாதமுனிகள். இவர் தாயார் ஸ்ரீரங்கநாயகி. இவருடைய மகன்கள் திருவரங்கப் பெருமாள் அரையர், தெய்வந்துக்கரசு நம்பி, பிள்ளையரசு நம்பி, சொட்டை நம்பி என்னும் நால்வர். இவருடைய மற்ற திருப்பெயர்கள் யாமுனாசாரியர், யமுனைத்துறைவர், வாதிமத்தேபசிம்மேந்திரர், ஆளவந்தார், பெரியமுதலியார். இவருடைய குலத்தின் பெயர் சொட்டை. இவர் தினமும் வணங்கி வந்த பெருமாள் நம்பெருமாள். இவருடைய இருப்பிடம் கோயில் எனப்படும் திருவரங்கம். இவருடைய பாட்டனார் நாதமுனிகள் இவருக்கு யாமுனாசாரியர் என்ற திருப்பெயரும், இறை தொடர்பும், மந்திர உபதேசமும் தந்து அருளி, தத்துவம் ஹிதம் புருஷார்த்தம் என்னும் மூன்றையும் அருளிச் செய்ய தன்னுடைய சீடரான உய்யக்கொண்டாரை நியமித்து, இவருக்கு யோகரகசியம் அருளிச்செய்ய குருகைக்காவலப்பனை நியமித்தார். உய்யக்கொண்டார் மணக்கால்நம்பியிடம் அந்தப் பொறுப்பைத் தந்தார். ஆகையாலே இவருக்கு வாழ்க்கையின் குறிக்கோள்கள் எனப்படும் புருஷார்த்தங்களும் பகவத் விஷயம் எனப்படும் வேத வேதாந்தங்களும் நாலாயிர திவ்விய பிரபந்தங்களும் நான்காவது ஆசிரமம் எனப்படும் துறவறம் முதலான எல்லாவற்றையும் அருளிச்செய்தவர் ஸ்ரீராமமிச்ரர் எனப்படும் மணக்கால்நம்பியாவார். ஆக இவருக்கு ஆசாரியர் ஸ்ரீமத் நாதமுனிகளும் அவர் அருளிசெய்தவற்றைக் கொணர்ந்து கொடுத்தவர் மணக்கால் நம்பியும் ஆவார்கள். குருபரம்பரை வரிசையில் இவருக்கு ஆசாரியர் மணக்கால்நம்பியாவார். இவருடைய சீடர்கள் பெரிய நம்பி, பெரிய திருமலை நம்பி, திருக்கோட்டியூர் நம்பி, திருமாலை ஆண்டான், தெய்வ்வாரி ஆண்டான், வானமாமலை ஆண்டான், ஈச்வர ஆண்டான், ஜீயர் ஆண்டான், ஆளவந்தார் ஆழ்வான், திருமோகூர் அப்பன், திருமோகூர் நின்றார், தேவப்பெருமாள், மாறனேரி நம்பி, திருக்கச்சி நம்பி, திருவரங்கப் பெருமாள் அரையர், திருக்குருகூர் தாஸர், வகுளாபரண சோமயாஜியார், அம்மங்கி, ஆள்கொண்டி, வடமதுரையில் பிறந்த கோவிந்த தாசர், அரசகுருவான நாதமுனி தாசர், ரங்க சோழன் என்னும் அரசனின் பட்டத்து ராணி திருவரங்கத்தம்மான் ஆக சீடர்களில் முதன்மையானவர்கள் இருபத்தி இருவர். இவர் அருளிச் செய்த நூல்கள் ஸ்தோத்ர ரத்னம், சித்தித்ரயம், ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹம், ஆகமப்ராமாண்யம், சது:ஸ்லோகி என்னும் வடமொழி நூல்கள். இவர் நான்குவேதங்களையும் ஆறு சாத்திரங்களையும் அனைத்து அறிவு நூல்களையும் சீடர்களுக்கு சொல்லிக் கொடுத்து நூற்றி இருபத்தைந்து வருடம் வாழ்ந்திருந்தார். இவர் நம்பெருமாளின் அனுமதியினால் திருநாடு எனப்படும் பரமபதத்திற்கு எழுந்தருளின (இறந்த) இடம் திருவரங்கம். இறுதிக் காரியங்கள் பண்ணப்பட்ட இடம் திருப்பார்த்துறை.

(தனியனின் பொருள் தற்காலத் தமிழிலேயே இருப்பதால் அதனை மீண்டும் சொல்லவில்லை.)

ஆளவந்தார் திருவடிகளே சரணம்.

9 comments:

Radha said...

குமரன்,
Thanks for the post.
ஸ்ரீரங்கத்தின் முரளி பட்டர் எழுதி இருக்கும் இந்தத் தொடரினை நீங்கள் முன்பே அறிந்து இருக்கலாம்.
சற்றே எளிமையான நடையில் வைஷ்ணவ ஆச்சார்யர்களின் சரிதங்களைப் படிக்க மிக அருமையாகத் தந்துள்ளார்.

http://srirangapankajam.wordpress.com/2008/06/22/pesum-arangan-55/
~
ராதா

குமரன் (Kumaran) said...

srirangapankajam வலைப்பதிவைத் தொடர்ந்து படித்து வருகிறேன் இராதா. ஆனால் பேசும் அரங்கன் தொடர் இடுகையை இனி மேல் தான் முழுமையாகப் படிக்க வேண்டும்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

கொஞ்ச நாள் காய்ச்சலுக்கு அப்பறம் இப்ப தான் ஒவ்வொன்னா எட்டிப் பாக்குறேன் குமரன்! ஏதோ கேள்வி எல்லாம் வேற கேட்டு வச்சிருக்கீக, ஓம் நமோ Dash-ல்ல? அறிந்தவர் கேட்டால் அரியாதவர் எங்கே போவது? சொல்லுங்க பார்ப்போம் :))

ஆளவந்தார் குறிப்புகளுக்கு நன்றி!
என்ன திடீர்-ன்னு?
வாழித் திருநாமம் பதிவுத் தொடர் என்ன ஆனது?
ஒரு வேளை அதான் இதுவா? :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//வாதிமத்தேபஸிம்ஹேந்த்ரர்//

அப்படின்னா என்ன குமரன்?

//சிஷ்யர்கள் பெரியநம்பி, பெரியதிருமலைநம்பி, திருக்கோட்டியூர்நம்பி, திருமாலையாண்டான், தெய்வவாரியாண்டான், வானமாமலையாண்டான், ஈச்வராண்டான், ஜீயராண்டான், ஆளவந்தாராழ்வான், திருமோகூரப்பன், திருமோகூர் நின்றார், தேவப்பெருமாள், மாறனேரி நம்பி, திருக்கச்சிநம்பி, திருவரங்கப்பெருமாளரையர், திருக்குருகூர்தாஸர், வகுளாபரண ஸோமயாஜியார், அம்மங்கி, ஆள்கொண்டி, வடமதுரையில் பிறந்த கோவிந்த தாஸர், ராஜபுரோஹிதரான நாதமுனி தாஸர், ரங்கசோழாவின் ராஜபத்னியான திருவரங்கத்தம்மான் ஆக சிஷ்யர் ப்ரதானரானவர் இருபத்திருவர்//

ஆகா! பெரிய நம்பிகள் முதலான அனைவர் திருவடிகளுக்கும் வணக்கம்!

//நூற்றிருபத்தஞ்சு திருநக்ஷத்ரம் எழுந்தருளியிருந்தார்//

125 ஆண்டுகள் என்பதா இது?
திருநக்ஷத்ரம் மாதா மாதம் வருமே!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//நூற்றி இருபத்தைந்து வருடம் வாழ்ந்திருந்தார். இவர் நம்பெருமாளின் அனுமதியினால் திருநாடு எனப்படும் பரமபதத்திற்கு எழுந்தருளின (இறந்த) இடம் திருவரங்கம்//

//இறுதிக் காரியங்கள் பண்ணப்பட்ட இடம் திருப்பார்த்துறை//

திருப்பார்த்துறை எங்கு உள்ள ஊர்?

குமரன் (Kumaran) said...

வாழித் திருநாமம் இடுகைகளும் வரும் இரவி. ரொம்ப சிந்திக்காம எளிதா புத்தகத்தில இருந்து எடுத்துப் போட வசதியா இருந்ததால இந்த ரெண்டு இடுகைகளையும் அடுத்தடுத்து போட்டுட்டேன். சிந்திச்சு எழுத வேண்டிய இடுகைகளுக்கு கொஞ்சம் நேரம் பார்த்து எழுதணும்.

வாதிமத்தேபஸிம்ஹேந்த்ரர் என்றால் என்ன என்று தேவ் ஐயா தான் சொல்ல வேண்டும். எனக்குப் புரியும் பொருள் வாதம் செய்பவர்கள் நடுவில் சிங்கராசனைப் போன்றவர்.

'இன்றைக்கு ஆண்டாள் திருநட்சத்திரம்; இராமானுசர் திருநட்சத்திரம்; ஆதிசங்கரர் திருநட்சத்திரம்' என்று இடுகைகள் போடுகிறீர்களே இரவி. அவற்றை மாதாமாதமா போடுகிறீர்கள்? வருடத்திற்கு ஒரு முறை தானே போடுகிறீர்கள்?! அது போலத் தான் 125 திருநட்சத்திரங்கள் எழுந்தருளி இருந்தார் என்றால் 125 வருடங்கள் வாழ்ந்தார் என்று பொருள். அறிவினா தானே இது!

திருப்பார்த்துறை எங்கே இருக்கிறது என்று தெரியாது இரவி. வடகாவேரிக் கரையில் இருக்கலாம். அங்கே தான் ஆளவந்தாரின் திருமேனியை எம்பெருமானார் தரிசித்தார் என்று படித்த நினைவு.

Raghav said...

எம்பெருமானாரை நமக்குக் காட்டித் தந்த ஆளவந்தார் பற்றிய குறிப்புகள் அருமை குமரன்.

Raghav said...

//திருப்பார்த்துறை எங்கே இருக்கிறது என்று தெரியாது இரவி. வடகாவேரிக் கரையில் இருக்கலாம்.//

வடகாவேரிக்கரையில் திருப்பராய்த்துறை எனும் இடம் கேள்விப்பட்டுள்ளேன், ஜீயபுரத்திற்கருகில் உள்ளது.. ஒருவேளை இந்த இடத்தைக் குறிப்பிடுகிறீர்களா??

குமரன் (Kumaran) said...

நன்றி இராகவ். ஆமாம். நானும் திருப்பராய்த்துறை கேள்விபட்டிருக்கிறேன். அங்கே இருக்கும் தபோவனமும் கேள்விபட்டிருக்கிறேன். அந்த ஊர்தானா என்று தெரியவில்லை.