Friday, June 05, 2009

உடுக்கை இழந்தவன் கை - 16 (பாரி வள்ளலின் கதை)

பெரியோர்கள் குறித்தபடி ஒரு நல்ல நாளில் மலையமான் திருமுடிக்காரிக்கும் பாரிமகளிருக்கும் திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பின்னர் தன் வழியே செல்ல விரும்பிய கபிலரைத் தடுத்து சில காலமேனும் தங்களுடன் தங்கியிருந்து நல்லறிவுரைகளைக் கூறி நல்வழிப்படுத்த வேண்டுமென்று மலையன் வேண்டிக் கொண்டதால் கபிலர் திருக்கோவலூரில் தங்கியிருக்கிறார்.

'நண்பா பாரி. நீ விரும்பியபடியே குலத்திலும், கல்வியிலும், செல்வத்திலும் உன் மக்களுக்கு ஒத்த ஒருவனுக்கே அவர்களை மணமுடித்துக் கொடுத்துவிட்டேன். இவர்கள் வாழும் வாழ்க்கையைக் காண மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. காமனும் இரதியும் போல, மாயோனும் நப்பின்னையும் போல, உமையும் உமையொருபாகனும் போல, வள்ளியும் முருகனும் போல, வசிட்டனும் அருந்ததியும் போல இவர்கள் வாழ்கிறார்கள். வள்ளல் என்று பெரும் புகழ் பெற்ற உன்னையும் மிஞ்சும் படியான வண்மை உன் மருகனுக்கு இருக்கிறது. இவற்றையெல்லாம் கண்டு பெருமிதம் கொள்ள நீ உயிருடன் இல்லாமல் போய்விட்டாயே.

இவர்கள் வாழும் கற்பு வாழ்க்கையைப் பற்றி உன்னிடம் கூற விரைந்து வருகிறேன். உன் மக்களின் விருப்பப்படி சிறிது நாட்களே இங்கு தங்கியிருக்கப் போகிறேன். இனி மேலும் உன் பிரிவினை என்னால் தாங்க இயலாது'

"புலவர் பெருமானே. மன்னர் திருவோலக்கத்து வீற்றிருக்கப் புறப்பட்டுவிட்டார். தாங்களும் அரசவைக்கு எழுந்தருளி திருவோலக்கத்தைப் பொலிவு பெறச் செய்ய வேண்டும் என்பது மன்னரின் வேண்டுகோள்"

"அமைச்சரே. இன்னும் ஒரு நாழிகைக்குள் அரசவைக்கு வருகிறேன். மன்னரின் அரசவையை நான் கண்டதுண்டு. இப்போது என் மருகனாய் என் மக்கள் இருவரையும் இருபுறமும் அமர்த்திக் கொண்டு அவன் அரசுக்கட்டிலில் வீற்றிருக்கும் அழகைக் காண்பதற்காக விரைந்தோடி வருகிறேன்"

***

'இதென்ன. என்றுமில்லா திருநாளாக எங்குமில்லா வழக்கமாக மூவேந்தர்களின் அமைச்சர்களின் கூட்டம் அலைமோதுகின்றதே. புலவர்களும் இரவலர்களும் மட்டுமே வந்திருப்பார்கள் என்றல்லவோ நினைத்தேன். மன்னன் மணம் புரிந்த பின்னர் முதன்முதலில் அரசவைக்கு வருவதால் அவனை வாழ்த்துவதற்காக அந்தணர்களும் வந்திருக்கிறார்கள். அதனைப் புரிந்து கொள்ள முடிகின்றது. ஆனால் மூவேந்தர்களின் தூதுக்குழுக்களும் இங்கே வந்த காரணமென்ன? ஒருவேளை பாரி மகளிரை மலையன் மணந்ததால் அவன் மீது மூவரும் போர் தொடுக்கின்றார்களோ?'

"வாருங்கள் கபிலரே. இங்கே வலப்புறத்தில் இருக்கும் இருக்கையில் அமர்ந்து அருளுங்கள்" அங்கவை சங்கவை இருவருடன் மலையமான் எழுந்து கை கூப்பி கபிலரை வரவேற்றான்.

"வாழ்க மன்னவா" என்று வாழ்த்திவிட்டு கபிலர் அவன் காட்டிய இருக்கையில் அமர்கிறார்.

மூவேந்தர்களின் விருதுகளையும் உரக்கச் சொல்லிக் கொண்டு ஒருவர் பின் ஒருவராக மூவேந்தர்களின் அமைச்சர்களும் அரசனுக்கு முன்னர் வந்து மலையமானின் திருமணத்திற்கு வேந்தர்கள் அனுப்பிய வாழ்த்துகளைத் தெரிவித்துப் பரிசுப் பொருட்களை வழங்குகிறார்கள். வந்தவர்கள் தேரும், பரியும், யானையும், அணிகளும் என பலவிதமான பரிசுகளை அறிவித்தார்கள். போரினை அறிவிக்க வந்தவர்களோ என்ற ஐயத்தில் இருந்த கபிலருக்கு இக்காட்சி மிக வியப்பாக இருந்தது. மலையமானின் வீரச்சிறப்பைக் கேள்விப்பட்டிருந்த கபிலர் இன்று அதனை நேரிலேயே கண்டார். மற்றவர் வியக்கும் படைசிறப்பினை உடைய வேந்தர்களும் வியக்கும் வெற்றிச் சிறப்பு இவனிடம் இருப்பதால் இவனது துணை வேண்டி இப்படி மூவேந்தர்களும் தனித்தனியே பரிசுகள் அனுப்பியிருக்கிறார்கள் என்பதை உணர்ந்தார்.

மூவேந்தர்களிடமிருந்தும் வந்த பரிசுப் பொருட்களை ஏற்றுக் கொண்டு திருமுடிக்காரி அவரவர்களுக்குத் தகுதியான இருக்கைகளைத் தந்து அமரச் செய்தான். பின்னர் அங்கிருந்த அந்தணர்கள் முன் வந்து வாழ்த்து மொழிகளைக் கூறினர். அவர்கள் முன் அரசன் வணங்கி தன் நாடு முழுவதுமே அவர்களுக்கே உரியது என்று மரியாதைச் சொல் சொல்லி அவர்களை விடுத்தான்.

பின்னர் புலவர்களும் இரவலர்களும் ஒவ்வொருவராக வந்து வாழ்த்துகளையும் பாடல்களையும் கூறி மன்னனைச் சிறப்பித்தார்கள். ஒவ்வொருவருக்கும் அவரவர் தகுதியறிந்து அவரவர் வேண்டி வந்ததை வரையாது வழங்கினான் மன்னன். மூவேந்தர்களிடம் இருந்து வந்த பரிசுப் பொருட்கள் எல்லாம் இப்படி வந்தவர்களுக்கெல்லாம் தந்தான் அரசன். சில மன்னர்கள் அதிகாலையில் எழுந்து கள்ளருந்தி அந்த மகிழ்வினால் தேரும் பரியும் என பரிசுகள் வழங்குவதை கபிலர் கண்டதுண்டு. ஆனால் அப்படி இன்றி எந்த வித மயக்கமும் இல்லாத நிலையிலும் தேரினையும் பரியினையும் அணிகளையும் வாரி வாரி வழங்கும் மலையமானைப் பாட வேண்டும் என்ற ஆவலுடன் எழுந்தார் கபிலர்.

"நாள் கள் உண்டு நாள் மகிழ் மகிழின்
யார்க்கும் எளிதே தேர் ஈதல்லே
தொலையா நல்லிசை விளங்கு மலையன்
மகிழாது ஈத்த விழை அணி நெடுந்தேர்
பயன் கெழு முள்ளூர் மீமிசைப்
பட்ட மாரி உறையினும் பலவே
"


"புலவர் பெருமானே".

"சொல்லுங்கள் அரசியாரே"

"பெரியப்பா. இதென்ன கொடுமை? என்னை எப்போதும் போல் சங்கவை என்றே அழைக்கலாமே. ஏன் அரசியார் என்று அழைக்கிறீர்கள்"

"அம்மா சங்கவை. நீ என்னை புலவர் பெருமானே என்று விளித்தாய். நான் அதற்குத் தகுந்த மரியாதையாக அரசியாரே என்றேன். இப்போது பெரியப்பா என்றாய்; நானும் உன் பெயரைச் சொன்னேன்"

"சரி தான். போட்டிக்குப் போட்டியா? அது போகட்டும். மன்னவரைப் புகழ்வது போல் வேறு யாரையோ இகழ்வது போல் தோன்றுகிறதே. நம் மன்னவர் கள்ளருந்தும் வழக்கம் இல்லாதவர். அதனால் அவரைப் பற்றி பாடிய பாடல் அடிகள் பொருத்தமானவை. ஆனால் கள்ளுண்டு அந்த மகிழ்ச்சியில் தேரினை வழங்கியவர் என்று யாரைக் குறிக்கிறீர்கள்? உங்கள் அருமை நண்பரையா?"

"அடடா. என் அருமை நண்பன் பாரியைப் பற்றி அப்படி பேசுவேனா அம்மா? என்ன வார்த்தை சொன்னாய்? அவனும் பல இரவலர்களுக்குத் தேரினை ஈந்தவன் தான். ஆனால் அவனுடைய புகழ் அதனால் கிட்டியதில்லையே! உன் தந்தைக்கு வான் புகழ் கிட்டியது வாடிக்கிடந்த முல்லைக்கொடிக்குத் தேரினை அவன் ஈந்ததால் தான் அம்மா. ஆறறிவு கொண்ட மக்களுக்கு இரங்குபவரே இங்கு அரிதாக இருக்கும் போது ஓரறிவு கொண்ட முல்லைக் கொடிக்கு இரங்கியதால் தான் அம்மா உன் தந்தையார் வள்ளல்களில் முதன்மையிடத்தைப் பெற்றான். அந்த நேரத்தில் அவன் கள்ளும் உண்ணவில்லை. அதனால் நான் பாடிய பாடலின் அடிகள் அவனைக் குறிக்கவும் இல்லை"

"எனக்கு தெரியும் பெரியப்பா. ஆனால் பாடலைக் கேட்டவர் யாரேனும் நீங்கள் பறம்புக் கோமானைப் புறம்பாகப் பேசிவிட்டீர்களோ என்று எண்ணலாம் என்பதால் தான் விளக்கம் கேட்டேன்"

"அங்கவை. சங்கவை. நீங்கள் பட்ட துன்பங்களுக்கு எல்லாம் சேர்த்து கிடைத்த நற்பயனாக உங்களுக்கு இந்த மலையமான் கணவனாக அமைந்திருக்கிறான். பாரியின் மக்களாகப் பிறந்த பயனை இவனை மணந்து பெற்றீர்கள். நீங்கள் எந்தக் குறையும் இல்லாதவர்கள். ஆனால் உங்கள் கணவனான இம்மன்னன் அப்படியில்லை. அவனிடம் இருக்கும் செல்வமோ குறைவு. ஆனால் அவனுக்கு இருக்கும் பெருமிதமோ மிகுதி"

"பெரியப்பா. இதென்ன விந்தை. எங்கள் தந்தையாரைக் குறையாகப் பேசவில்லை என்று மகிழ்ந்து ஒரு நொடியே ஆகிறது. அதற்குள் எங்கள் மணாளனைக் குறைவாகப் பேசுகிறீர்களே. இது என்ன விந்தை? முறை தானா இது?"

"அங்கவை. பார் மலையனும் சங்கவையும் உன் சினம் கண்டு தமக்குள் நகைக்கிறார்கள். பாட்டு பாடினால் தான் நான் சொல்ல வந்தது புரியும் போலும்.

கடல் கொளப்படாஅது உடலுநர் ஊக்கார்
கழல் புனை திருந்து அடிக் காரி நின் நாடே
அழல் புறம் தரூஉம் அந்தணர் அதுவே
வீயாத் திருவின் விறல் கெழு தானை
மூவருள் ஒருவன் உறுப்பாகியர் என
ஏத்தினர் தரூஉம் கூழே நும் குடி
வாழ்த்தினர் வரூஉம் இரவலர் அதுவே
வடமீன் புரையும் கற்பின் மடமொழி
அரிவை தோள் அளவு அல்லதை
நினது என இலை நீ பெருமிதத்தையே

இப்போது புரிகிறதா அம்மா நான் சொல்ல வந்தது?"

"புரிகிறது பெரியப்பா. இகழ்வது போல் புகழ்ந்திருக்கிறீர்கள்".

"இல்லாததைச் சொல்லிப் புகழவில்லை அம்மா. நான் என் கண்களால் கண்டவற்றைக் கொண்டே புகழ்கிறேன். கோழி கூவ துயில் எழும் மக்கள் உள்ள ஊர் உறையூரும் வஞ்சியும்; அழலை ஓம்பும் அந்தணர் மறை மொழி முழங்க துயில் எழும் மக்கள் உள்ள ஊர் எங்கள் ஊராம் மதுரை என்று பெருமை கொண்டிருந்தேன். ஆனால் தழலைப் போற்றும் அந்தணர் பெற்ற பெருமையை இங்கே கண்டேன். அவர்களுக்குத் தன் நாட்டையே தருவதாக மன்னவன் சொன்ன மொழியையும் கேட்டேன். அப்படி ஒவ்வொன்றும் இயல்பாக நடந்தவற்றைக் கொண்டே இந்தப் பாடல் பாடப்பட்டது அம்மா"

"உண்மை தான் பெரியப்பா. இன்று மாலையிலும் சில பாடல்களைப் பாடி எங்களை மகிழ்விக்க வேண்டும்"

"ஆமாம் புலவர் பெருமானே. இப்போது சற்றே ஓய்வு எடுத்துக் கொண்டு இன்று மாலை தாங்கள் அரண்மனை நந்தவனத்திற்கு வந்து அருள வேண்டும்"

"ஆகட்டும் திருமுடிக்காரி. அப்படியே செய்கிறேன்".

***
பாடற்குறிப்புகள்:

1. 'நாள் கள் உண்டு' என்று தொடங்கும் பாடல் புறநானூறு 123-ஆவது பாடல். கபிலர் மலையமான் திருமுடிக்காரியைப் பாடியது. திணை: பாடாண் திணை (பாடப்படுபவரது புகழைக் கூறுவது); துறை: இயன்மொழித் துறை (இயல்பாக அமைந்த குணங்களைக் கூறுவது).

பொழிப்புரை: அதிகாலையில் கள்ளினை உண்டு நண்பர்களுடன் கூடி மகிழும் மகிழ்ச்சியுடன் இருந்தால் தேரினைத் தருவது யாருக்கும் எளிது. என்றும் குறையாத நல்ல புகழுடன் விளங்கும் மலையமான் அப்படி மது நுகர்ந்து மகிழாது ஈத்த பொற்படைக்கலன்களுடன் கூடிய உயர்ந்த தேர்கள், பயன் பொருந்திய முள்ளூர் மலையுச்சியின் மீது பெய்த மழையின் துளிகளிலும் பல. ஏனையோர் வழங்குவது செயற்கை. இவன் கொடை இயற்கை.

2. 'கடல் கொளப்படாஅது' என்று தொடங்கும் பாடல் புறநானூறு 122-ஆவது பாடல். கபிலர் மலையமான் திருமுடிக்காரியைப் பாடியது. திணை: பாடாண் திணை (பாடப்படுபவரது புகழைக் கூறுவது); துறை: இயன்மொழித் துறை (இயல்பாக அமைந்த குணங்களைக் கூறுவது).

பொழிப்புரை: கடலாலும் கொள்ளப்படாது (இயற்கையால் அழிவில்லை); பகைவர்களும் அதனைக் கொள்ள வேண்டும் என்று எண்ண மாட்டார்கள் (செயற்கையாகவும் அழிவில்லை). உடலமைப்பு இலக்கணங்களின் படி திருத்தமாக அமைந்த கால்களை உடைய காரி! உனது நாடே அப்படிப்பட்டது. அது வேள்வித் தீயைப் பாதுகாக்கும் அந்தணர்கள் உடையது. அழியாத செல்வத்தினையும் வெற்றி பொருந்திய படைகளையும் உடைய மூவேந்தர்களுக்குள் ஒருவருக்குத் துணையாக வேண்டுமென்று வேண்டி அவர்களிடம் இருந்து வந்தவர்கள் தனித் தனியே புகழ்ந்து உனக்குத் தரும் கூழாகிய பரிசுகள் உனது குடியின் பெருமையை வாழ்த்தியவர்களாக வரும் பரிசிலர்களுக்கு உரியது. வடமீனாம் அருந்ததியைப் போல் கற்பு நெறியில் சிறந்த இந்தப் பெண்களின் தோள் அளவல்லது வேறு எதையும் உனது என்று கூறிக் கொள்ள இயலாது. ஆனாலும் நீ பெருமிதம் கொண்டிருக்கிறாயே!

9 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

அருமையான பதிவு.மிகவும் ரசித்துப் படித்தேன்...
இதுபோன்ற பதிவுகள் எதிர்காலத் தலைமுறையினருக்கு அவசியம்.....

மெளலி (மதுரையம்பதி) said...

அப்பாடி ஒருமாதிரியா அங்கவை-சங்கவை திருமணம் நடந்துடுச்சு. :))

குமரன் (Kumaran) said...

நன்றி முனைவரே. புறநானூற்றுப்பாடல்களைக் கொண்டு பாரியின் கதையை ஒரு தொடர்கதையாக வெகு நாட்களாக எழுதி வருகிறேன். (அதனால் தான் மதுரையம்பதி மௌலி இப்படி சொல்கிறார்). இந்த வலைப்பக்கத்தின் வலப்பக்கத்தில் இருக்கும் வகைகளில் இந்தத் தொடர்கதையின் தலைப்பில் ஒரு வகை இருக்கிறது. அந்த வகையில் இருக்கும் இடுகைகள் அனைத்துமே உங்களுக்குப் பிடிக்கும் என்று நினைக்கிறேன். படித்துச் சொல்லுங்கள்.

குமரன் (Kumaran) said...

ஆமாம் மௌலி. இன்னும் ஒரு பகுதியில் இந்தத் தொடர் நிறைவு பெறும். :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//பெரியோர்கள் குறித்தபடி ஒரு நல்ல நாளில் மலையமான் திருமுடிக்காரிக்கும் பாரிமகளிருக்கும் திருமணம் நடந்தது//

சூப்பரு! வாழ்க மணமக்கள்! நீங்காத செல்வம் நிறைந்து வாழ்க!

//மலையன் வேண்டிக் கொண்டதால் கபிலர் திருக்கோவலூரில் தங்கியிருக்கிறார்//

கபிலரே வேணாம்! திருக்கோவலூர் ஆளுங்க சுத்த மோசம்! இருவர் இருக்க, மூவர் நிற்க, நால்வர் நெருக்க-ன்னு ரொம்ப நெருக்கிடுவாங்க! உஷார்! :))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//புலவர் பெருமானே. மன்னர் திருவோலக்கத்து வீற்றிருக்கப் புறப்பட்டுவிட்டார்//

திருவோலக்கமா? அப்படீன்னா என்ன குமரன்?

//போரினை அறிவிக்க வந்தவர்களோ என்ற ஐயத்தில் இருந்த கபிலருக்கு இக்காட்சி மிக வியப்பாக இருந்தது//

எனக்கும் தான்!
மலையமான் படைகளைக் கண்டு சற்று ஒதுங்கி விட்டனரா மூவேந்தர்கள்? அப்படின்னா பாரியை விட மலையமான் பலம் மிக்கவனா?

//நம் மன்னவர் கள்ளருந்தும் வழக்கம் இல்லாதவர். ஆனால் கள்ளுண்டு அந்த மகிழ்ச்சியில் தேரினை வழங்கியவர் என்று யாரைக் குறிக்கிறீர்கள்? உங்கள் அருமை நண்பரையா?//

ஆகா! இந்தப் பொண்ணுங்களை நம்பவே முடியாதுப்பா! அதுக்குள்ள புருசன் பக்கம் சாஞ்சிட்டாங்களா? புருசன் குடிக்க மாட்டான்! அப்பாரு குடிப்பாரு! நல்லா இருக்கும்மா அங்கவை சங்கவை! :)))
இனிய இல்லற வாழ்த்துக்கள்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கொளப்படாஅது//
//ஏத்தினர் தரூஉம்//
//வாழ்த்தினர் வரூஉம்//

இதெல்லாம் என்ன குமரன்? தரூஉம், வரூஉம்?
இன்னிசை அளபெடையா?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

kumaran koodal-um panthal-um mattum work aavala nu chonaaru...aanmeega virus ethuvum illa enpatharkaana...chothanai pinoottam :))

குமரன் (Kumaran) said...

ஆமாம் இரவி. ஏதோ எங்கேயோ படிச்ச நினைவுல திருவோலக்கம்ன்னு எழுதிட்டேன். ஆனா இப்ப என்னான்னு புரியலை. உங்களுக்குத் தெரிஞ்சா சொல்லுங்களேன். :-)

பாரியை விட மலையமான் வலிமிக்கவனாகத் தான் தோன்றுகிறான் இரவி. கதை அப்படித் தான் சொல்கிறது. :-)

தரூஉம் வரூஉம் எல்லாம் அளபெடைன்னு தெரியும். ஆனா இன்னிசையா இல்லையான்னு வகை தெரியாது இரவி.