Wednesday, April 08, 2009

பரமேஸ்வரம் ரமேஸ்வரம் மேஸ்வரம் ஈஸ்வரம் - கலியன் மிரட்டிய திருவிந்தளூர் பரிமளரங்கன்

“குமுதவல்லி. நண்பகல் பொழுது ஆகிவிட்டது. விரைந்து செல்லவேண்டும். திருவாராதனமும் பெற்று திருவமுதைக் கண்டருளி பரிமளரங்கன் திருக்கண் வளரத் தொடங்குவதற்கு முன் அவன் திருமுன் நிற்க வேண்டும். திருத்தலத்தார் நண்பகல் திருவாராதனத்திற்குப் பின் திருக்கோவிலுக்குத் திருக்காப்பிடுவார்களோ இல்லையோ தெரியவில்லை. நம்மைக் கட்டாயம் கண் குளிர நோக்கி வாரியணைத்து நலம் வினவி அத்தாணிச்சேவகத்தில் ஏவுவான் பரிமளரங்கன். ஆனாலும் அவனை நெடுநேரம் காக்க வைக்காமல் விரைந்து செல்லவேண்டும்”

வாள்வலியால் மாயோனிடமிருந்தே நேரடியாக நாராயண மந்திரத்தைக் கொண்ட கலியன் பரகாலன் கலிகன்றி திருமங்கை மன்னனும், அரட்டமுக்கியை அறவழியில் திருப்பிய குமுதவல்லி நாச்சியாரும் மருவினிய மைந்தன் பரிமளரங்கனைக் காணும் பேராவலோடு விரைந்து திருவிந்தளூர் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள்.


***

"என் அடியவர்கள் இருவர் என்னைக் காண இங்கே வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களில் ஒருவன் நான் இருக்கும் ஊருக்கெல்லாம் சென்று என்னை இனிய தமிழால் பாடுபவன். அவனிடம் கொஞ்சம் விளையாட நினைக்கிறேன். பரகால நாயகியாய் உருமாறி என் பிரிவைத் தாங்காமல் அவன் நீர்ப்பாண்டமாய் உருகியதுண்டு. ஆனால் இப்போது தன் மனைவியுடன் இங்கே வருகிறான். அப்போது அவனால் என் நாயகியாய் உருமாற இயலாது. அவன் தானாக - தன் ஆண் உருவுடனேயே நின்று என் பிரிவைத் தாங்காமல் உருகி இனிய தமிழால் என்னைப் பாடிக் கேட்கும் ஆவல் கொண்டுள்ளேன். அதனால் பட்டரே, திருவாராதனத்தை விரைவில் நடத்தி திருக்காப்பிட்டுவிட்டு வாசலில் நில்லுங்கள்".

நண்பகல் பூசை செய்ய பூசைத் திரவியங்களை எடுத்துவைத்துக் கொண்டிருந்த அருச்சகர் அசரீரியாய் ஒலித்த அக்குரல் எம்பெருமானின் திருக்கட்டளையே என்று உணர்ந்து அதற்கேற்ப பூசையை விரைவில் முடித்துக் கொண்டு திருக்கோவில் கதவைத் தாளிட்டுவிட்டு அங்கேயே நின்று கொண்டார்.

***

"அடடா. இதென்ன கொடுமை. திருக்காப்பிட்டு விட்டார்களே. பரிமளரங்கன் நம்மை புறந்தள்ளான் என்றல்லவோ நினைத்தோம் குமுதா. நம்மை நடுத்தெருவில் நிறுத்திவிட்டு இவன் கண்வளர்ந்துவிட்டானே.

திருத்தலத்தாரே. திருவாராதனத்திற்கு இன்னும் நேரம் இருக்கிறதே. இவ்வளவு விரைவில் திருக்காப்பிட்ட காரணம் என்ன? தேவரீர் அருள் கூர்ந்து திருக்காப்பினை நீக்கிப் பரிமளரங்கனைக் காட்டியருள வேண்டும்"

"ஆழ்வாரே. எம்பெருமானின் திருக்கட்டளையின் படியே திருக்காப்பு இடப்பட்டிருக்கிறது. எங்களால் ஆவதொன்றில்லை. மன்னிக்க வேண்டும்"

"என்ன எம்பெருமான் திருக்கட்டளையா?

திருவிந்தளூர்த் திருமாலே. இது உமக்கே அழகாக இருக்கிறதா?

உம்மையே தொழுது உமது அடிமைத் தொழிலே உயிருக்கு ஆதாரமாய் உடைய உமது அடியார்கள் நாங்கள். பேரின்பம் பெற வானுலகம் செல்ல வேண்டும் என்ற நிலையின்றி எல்லா இன்பங்களையும் இங்கேயே உமக்கடிமைத் தொழில் செய்து பெற்றோம் என்று எண்ணியிருந்தோம். அப்படிப்பட்ட எங்களின் இரங்கத்தக்க நிலை கண்டு ஆ ஆ என்று இரங்கி உமது திருமுகத்தை ஒரு முறையேனும் காட்டி விரைவாக உமது திருப்பணியில் நியமித்து அருளினால் ஆகாதா? நாங்கள் உய்ந்து போவோமே.

நும்மைத் தொழுதோம் நும் தம் பணி செய்திருக்கும் நும் அடியோம்
இம்மைக்கு இன்பம் பெற்றோம் எந்தாய் இந்தளூரீரே
எம்மைக் கடிதாக் கருமம் அருளி ஆவா என்று இரங்கி
நம்மை ஒரு கால் காட்டி நடந்தால் நாங்கள் உய்யோமே.


உமது இரக்கத்தால் அன்றி எங்கள் முயற்சியால் உமது திருமுகம் காணக் கிடைக்குமோ? கடலிலே நீர் வற்றுவதுண்டோ? உமது திருவுள்ளத்திலும் இரக்கம் மாறுவதுண்டோ? எங்களை ஏன் இப்படி நோக வைக்கிறீர்?

திருவிற்கும் திருவான செல்வனே. உம்முடைய காரணமில்லாத கருணையினால் நீரே வந்து எங்கள் சிந்தையில் நீங்காது அமர்ந்து கொண்டீரே. எங்கள் கண்ணுக்குத் தெரியாமல் இருப்பது போல் எங்கள் சிந்தைக்கும் தெரியாமல் இருந்தால் இந்த நோவு எங்களுக்குக் கிடையாதே. எப்படி எங்கள் சிந்தையில் புகுந்தீரோ அப்படியே உமது திருவடிவையும் காட்டித் தர வேண்டும்.

உம்மை நினைக்கும் தோறும் இனியவனாக இருக்கிறீரே. காணும் போது இன்னும் இனிமையாக இருப்பீரே என்றும் இளைய மருவினிய மைந்தா. அழகிய குளிர்ந்த திருவாலி நகர்த் திருமாலே. திருமாலிருஞ்சோலையில் வாழ் யானைக்கன்றே. என்றும் அணையாத விளக்கின் சுடரே. திருநறையூரில் நின்ற அழகிய நம்பி. திருவிந்தளூர் எந்தாய். அடியோங்கள் எங்களுக்கு சிறிதும் இரங்க மாட்டேன் என்கிறீரே.

சிந்தை தன்னுள் நீங்காது இருந்த திருவே! மருவினிய
மைந்தா! அம் தண் ஆலி மாலே! சோலை மழகளிறே!
நந்தா விளக்கின் சுடரே! நறையூர் நின்ற நம்பீ! என்
எந்தாய்! இந்தளூராய்! அடியேற்கு இறையும் இரங்காயே.


நீர் உமது குணத்திற்கு எதிராக இப்படி சிறிதும் எங்கள் மேல் இரக்கமின்றி இருக்கலாமா? உமது இயற்கைக் குணமான இரக்கம் இப்போது என்ன ஆயிற்று? போனால் போகட்டும். நாங்கள் உம்மை உமது அருளால் சேவிக்க இயன்றால் சேவிக்கிறோம்; இல்லாமல் போய் இழந்தாலும் இழக்கிறோம். அது பெரிதில்லை. ஆனால் குணம் கெட்டவன் நீர் என்று மற்றவர் பேசுகிறார்களே.

அண்டகுலத்திற்கெல்லாம் அதிபதியாக நீர் இருக்கச் செய்தேயும் உமது அடியவர் பெருமை துலங்க வேண்டும் என்பதற்காக குறளுருவாகி ஈரடியால் வையமெல்லாம் அளந்து கொண்டீரே. அதுவன்றோ உம்முடைய திருக்குணம். அப்படி பெருமை பெற்ற உம் திருக்குணம் இன்று ஏசப்படும் படி நீர் வைத்துக் கொள்ளலாமா?

வேண்டியவர் வேண்டாதவர் என்று பாராமல் வையம் அளந்த போது அனைவரது தலையிலும் தன் திருவடியை வைத்து அருளினானாமே இவன்; இன்று வாசலில் நின்று இவர்கள் இப்படி ஏங்கி உயிர்தரிக்க முடியாதிருக்க தாளிட்டுக் கொண்டு உள்ளே நின்றானே. இவனா எல்லோரையும் காப்பவன் என்ற பெயருடையவன் - என்று அயலார் ஏசுகின்றார்கள். இந்த ஏச்சு உமக்குக் கிடைக்கக் கூடாது என்றே நாங்கள் இப்போது பேசிக் கொண்டிருக்கிறோம்.

இந்தளூரீரே. வண்டுகள் மொய்க்கும் மாலையை அணிந்த திருமுடியையுடையவரே. உம்மைக் காண வேண்டும் என்ற ஆசைக்கடலில் வீழ்ந்து தத்தளிக்கின்றோம். உம்மைக் காட்டியருள வேண்டும்.

பேசுகின்றது இதுவே வையம் மூவடியால் அளந்த
மூசி வண்டு முரலும் கண்ணி முடியீர் உம்மைக் காணும்
ஆசையென்னும் கடலில் வீழ்ந்து இங்கு அயர்த்தோம் அயலாரும்
ஏசுகின்றது இதுவே காணும் இந்தளூரீரே.


ஒருவரை மற்றொருவர் அலட்சியம் செய்தால் அவர்களிடையே ஆன அன்பு குறைவதை உலகத்தில் கண்டிருக்கிறோம். இப்போது நீர் எங்களை அலட்சியம் செய்கிறீர். ஆனால் உம்மிடம் எங்களுக்குள்ள அன்பு குறையவில்லை. ஆசையும் குறையவில்லை. அப்படி ஆசை குறையாமல் உம்மைப் போற்றித் துதிக்கும் எங்களைக் கண்டு 'தலைவனை அடிமைகள் போற்றுவது இயல்பே' என்று எண்ணாமல் 'கதறி அழும் இவர்களுக்குக் காட்சி தராத இவனுக்கெல்லாம் அனைத்துலகுக்கும் கதி என்ற பெயர் அழகாகத் தான் இருக்கிறது' என்று உம்மையும் 'பல்லைக் காட்டி பலவாறு வேண்டிய பிறகும் மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார் என்றாற் போல் இருக்கின்றவனை இன்னும் போற்றுகின்றாரே இவர்கள்' என்று எங்களையும் ஏளனமாகப் பேசுகிறார்கள் அயலார்கள். உம் மேல் மாறாத எங்கள் ஆசை இப்படி உமக்கும் எமக்கும் இழுக்காக வந்து நின்றது.

இப்படி ஊரறிய உலகறிய உமக்கே ஆளாகித் திரிகின்ற அடியோமுக்கு 'சுட்டுரைத்த நன் பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாது' என்றாற் போல் இருக்கும் ஒளி மிகுந்த உம் திருவடிவைக் காட்ட மாட்டேன் என்கிறீரே. எம்பெருமானே. பரமபதத்தில் இருப்பார்க்கு அன்றி ஈனரான இவருக்கா என் திருவடிவைக் காட்டுவேன் என்று உயர்வு தாழ்வு பார்க்கிறீரே. இந்தளூரீர். உம் திருவடிவை நீரே பார்த்துக் கொண்டும் தொட்டுக் கொண்டும் மோந்து கொண்டும் கட்டிக் கொண்டும் நீரே வாழ்ந்து போம்.

ஆசை வழுவாது ஏத்தும் எமக்கு இங்கு இழுக்காய்த்து; அடியோர்க்குத்
தேசமறிய உமக்கே ஆளாய்த் திரிகின்றோமுக்கு
காசின் ஒளியின் திகழும் வண்ணம் காட்டீர் எம்பெருமான்!
வாசி வல்லீர்! இந்தளூரீர்! வாழ்ந்தே போம் நீரே!


'ஐம்பூதங்களின் வடிவாய் அகிலமெங்கும் நான் நிற்கின்றேனே; அங்கெல்லாம் என்னைக் காணக்கூடாதா' என்று எண்ணிக் கொண்டு உமது திருவடிவைக் காட்டாமல் நிற்கின்றீர் போலும். 'நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடுவானாய் சீரார் சுடர்கள் இரண்டாய் சிவனாய் அயனானாய்' என்றாற் போல் நீர் நிற்பதை நாங்கள் அறிவோம். தீயாய் நிற்பதும் எம்பெருமான், நீராய் நிற்பதும் எம்பெருமான், திசையும் பரந்த இவ்வுலகமுமாய் நிற்பதும் எம்பெருமான் என்பதை அறியும் அறிவு அருளியிருக்கிறீர். பரவாசுதேவனாக இருப்பது நித்யர்களும் முக்தர்களும் தொழுது அனுபவிப்பதற்காக. பிரமன் முதலான தேவர்களின் கூக்குரல் கேட்டு இரங்குவதற்காக இருப்பது திருப்பாற்கடலில். இராமனாகவும் கண்ணனாகவும் வந்த அவதாரங்கள் அந்த அந்தக் காலத்தில் இருந்தவர்கள் பணிவதற்காக. நீர், நிலன், காற்று, தீ, வான் இவற்றின் அந்தரியாமியாய் நிற்பது பெருகலாதன் (ப்ரஹ்லாதன்) போன்றோருக்குப் பயனளிக்கும். இங்கே அருச்சாவதாரமாக நிற்பது ஒன்று தானே அடியோங்களுக்கு உயிராக இருப்பது. ஆதலால் நீர், தீ முதலிய வடிவில் நீரே நிற்கிறீர் என்ற அறிவு இருந்தாலும் ஐயோ நாங்கள் உம்மை அங்கே எல்லாம் காண இயலாதவர்களாக இருக்கிறோமே. தாயாகவும் தந்தையாகவும் தந்தைக்கும் தந்தையாகவும் எங்களை ஆளும் தலைவனாகவும் இங்கே சிலை வடிவில் நிற்கும் நீரே அல்லவோ இருக்கிறீர்? உம்மைக் காட்டி அருளக் கூடாதா?

தீ எம்பெருமான் நீர் எம்பெருமான் திசையும் இருநிலனும்
ஆய் எம்பெருமானாகி நின்றால் அடியோம் காணோம் ஆல்
தாய் எம்பெருமான் தந்தை தந்தையாவீர் அடியோமுக்
கே எம்பெருமான் அல்லீரோ நீர் இந்தளூரீரே.


'நீர் அடிமை; நான் உடையவன். அப்படியிருக்க என் வடிவை உனக்குக் காட்டவேண்டும் என்று என்னை வற்புறுத்துவது தகுமா? என் எண்ணப்படி நான் நடந்து கொள்ளும் வலிமை கொண்டவன் நான் என்பதை அறிந்து எனது மற்ற அடியவர்கள் எல்லாம் நான் இட்டபடி இருக்க நீர் மட்டும் என்னை வற்புறுத்துவது ஏன்?' என்று தேவரீர் திருவுள்ளம் பற்றி இருக்கிறீர் போலும் இந்தளூரீரே. அப்படியென்றால் எல்லாம் அறிந்த சர்வஜ்ஞனான உமக்கு அடியேனின் நிலை தெரியவில்லை என்றே சொல்லவேண்டும். அதனைப் பற்றிப் பேசாமல் விடலாம் என்றால் என்னால் இயலவில்லை. நான் அறிந்தவற்றைச் சொல்லுகிறேன் கேட்பீர். 'அவன் உடையவன்; நாம் உடைமை' என்று நீர் இட்ட வழக்காக இருக்கும் உம் அடியார்கள் அனைவரோடும் ஒக்க அடியேனையும் என்ணியிருந்தீர். உம்மை விட்டுப் பிரிந்தால் உயிர்தரிக்க இயலாத நல்லவர்களையும் நீர் அறிவீர். உம்மை விட்டுப் பிரிந்தாலும் உயிர் தரிக்க இயலும் தீயார்களையும் நீர் அறிவீர். அவ்வளவு ஏன் - இவ்வுலகில் நீர் எல்லாம் அறிவீர். ஆனால் ஒன்றை மட்டும் நீர் அறியவில்லை. 'ஒரு மாதம் வரையில் உயிர் தரித்திருப்பேன்' என்று சொன்ன அசோகவனத்தில் இருந்த பிராட்டியைப் போன்ற வலிமை அடியோமுக்கு இல்லை. ஒரு நொடிப்பொழுதும் உம் பிரிவைப் பொறுக்க ஒண்ணாதவர் நாங்கள் என்பதை மட்டும் அறியாதவாக இருக்கிறீர்.

சொல்லாது ஒழியகில்லேன் அறிந்த சொல்லில் நும் அடியார்
எல்லாரோடும் ஒக்க எண்ணியிருந்தீர் அடியேனை
நல்லார் அறிவீர் தீயார் அறிவீர் நமக்கு இவ்வுலகத்தில்
எல்லாம் அறிவீர் ஈதே அறியீர் இந்தளூரீரே


நீர் எல்லா வலிமையும் மிக்கவர் தானே. ஆனால் எம்மிடம் பணி கொள்ளும் திறன் இல்லாமல் போய்விட்டதா? ஏழை ஏதலன் கீழ்மகன் இவன்; இவனிடம் பணி கொள்ளலாகாது என்று நினைத்து பணி கொள்ளாமல் விட்டீர்கள் போலும். நிறை ஒன்றுமில்லாத நீசன் ஆனாலும் திருப்பணிக்கு ஆளாகும் படி எம்மைத் திருத்திப் பணி கொள்ள உம்மால் இயலவில்லையா? பின் எப்படி சர்வசக்தன்; எல்லா வலிமையும் உள்ளவன் என்ற திருநாமத்தை உகந்திருக்கிறீர்?

மொத்தமாக அறிவே இல்லாத மண்ணாங்கட்டியாக எம்மை படைத்திருந்தாலாவது இத்துன்பங்கள் எல்லாம் கிடையாது. ஆனால் அன்பும் அறிவும் உடைய பிறவியாக்கி உனக்காளாக இருப்பதே எம் இயல்பு என்ற அறிவையும் தந்தீர். இந்த அறிவையும் தந்துவிட்டு இப்போது முகம் காட்டாமல் தள்ளி வைத்திருக்கிறீர். பணி கொள்ளாவிடிலும் திருவடிகளையாவது தரலாமே. பிறர்களுக்கே அமுதம் ஆன திருவடிகளையும் 'ஆலிலை மேல் ஒரு பாலகனாய்' சுவைத்துக் கொள்ள நீரே வைத்துக் கொள்ள நினைத்தீர் போலும். நாடு நகரமும் நன்கறிய நமோ நாராயணா என்று உம் தொண்டரான நாங்கள் உம்முடைய திருவடிகளைத் தந்தால் உய்ந்து போக மாட்டோமா?

மாட்டீர் ஆனீர் பணி நீர் கொள்ள எம்மைப் பணி அறியா
வீட்டீர் இதனை வேறே சொன்னோம் இந்தளூரீரே!
காட்டீர் ஆனீர் நும் தம் அடிக்கள் காட்டில் உமக்கு இந்த
நாட்டே வந்து தொண்டரான நாங்கள் உய்யோமே.


முதன்முதலில் நீர் பாலின் வண்ணம் காட்டினீராம். உமக்கே இயற்கையான நிறம் மாயோன் என்ற திருப்பெயருக்கு ஏற்ற கருமுகில் வண்ணத்தைப் பிற்காலத்தில் வெளிப்படுத்தினீராம். இது போக வேறு வண்ணங்களும் உமக்கு உண்டோ என்று எண்ணிப் பார்த்தால் நடுவில் சில நாட்கள் பொன்னின் வண்ணத்தையும் நீலமணியின் வண்ணத்தையும் காட்டினீராம். இப்படி ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு வண்ணம் காட்டும் உமது அழகு மிக்கத் திருமேனி இந்த ஊரில் என்ன வண்ணம் காட்டுகிறது நாங்கள் அறிந்து இன்புறும் வண்ணம் உம் திருவுருவத்தைக் காட்டுவீர் திருவிந்தளூர் திருமாலே.

முன்னை வண்ணம் பாலின் வண்ணம் முழுதும் நிலை நின்ற
பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம் வண்ணம் எண்ணும் கால்
பொன்னின் வண்ணம் மணியின் வண்ணம் புரையும் திருமேனி
இன்ன வண்ணம் என்று காட்டீர் இந்தளூரீரே


எளிவந்த தன்மை கொண்டவன் என்று உம்மை எல்லோரும் போற்றுகின்றோம். ஆனால் நீரோ 'எந்தை தந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன் ஏழ்படிகால் தொடங்கி வந்து வழி வழி ஆட்செய்கின்றோம்' என்றாற் போலே ஏழேழு தலைமுறையாக வந்து அடிமை செய்யும் குடியிலே பிறந்த அடியோமுக்கு அருள் செய்யவே உயர்வு தாழ்வு பார்க்கிறீர். இந்தத் தகுதியும் இல்லாமல் இந்தத் தலைமுறையில் உமக்கு அடிமை செய்யும் எண்ணம் கொண்டவருக்கு நீர் எளிவந்த தன்மையுடனும் நீர்மையுடனும் இருப்பது எங்ஙனம்?

எங்கள் சிந்தை தன்னில் முந்தி வந்து நிற்கிறீர். நீரே அப்படி சிந்தையில் வந்து நிற்பது போல் உமது திருமேனியின் வண்ணம் இதென்று சிறிதளவும் காட்டாமல் இருக்கிறீரே இந்தளூரீரே.

எந்தை தந்தை தம்மான் என்று என்று எமர் ஏழ் அளவும்
வந்து நின்ற தொண்டரோர்க்கே வாசி வல்லீரேல்
சிந்தை தன்னுள் முந்தி நிற்றிர் சிறிதும் திருமேனி
இந்த வண்ணம் என்று காட்டீர் இந்தளூரீரே”


இப்படி மாறி மாறிப் பல முறை வேண்டி அயர்ந்து மூர்ச்சையுற்றார்கள் திருமங்கையாழ்வாரும் குமுதவல்லி நாச்சியாரும். இனிமேலும் சோதிக்க வேண்டாம் என்ற எண்ணம் கொண்ட பரிமளரங்கன் அருச்சகர் மூலமாக திருக்கதவம் திறப்பித்து தன் திருமேனி அழகைக் காண்பித்தான். வீர சயனத்தில் பரந்து கிடந்த மரகதத் திருமேனி அரங்கனைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே என்றாற் போல் பரகாலனும் நாச்சியாரும் வைத்த கண் வாங்காமல் பார்த்து நின்றனர்.

***

அழகிய சோலைகளாலே சூழப்பட்ட திருவிந்தளூரில் எழுந்தருளியிருக்கின்ற எந்தை எம்பெருமானை மேகங்கள் வந்து அணவும் சோலைகளை உடைய திருமங்கை நகருக்கு வேந்தனான கலியன் திருமங்கையாழ்வார் அருளிச் செய்த சிறப்பும் இனிமையுமான இந்த சொல்மாலையை ஓதித் திரிபவர்கள் இவ்வுலகத்தில் யாராக எத்தன்மையுடையவராக இருந்தாலும் அவர்கள் எக்காலத்திலும் அமரர்கள் தொழுதேத்தும் அமரர்களாக இருப்பார்கள்.

ஏரார் பொழில் சூழ் இந்தளூரில் எந்தை பெருமானை
காரார் புறவின் மங்கை வேந்தன் கலியன் ஒலி செய்த
சீரார் இன்சொல்மாலை கற்றுத் திரிவார் உலகத்தில்
ஆர் ஆர் அவரே அமரர்க்கு என்றும் அமரர் ஆவாரே


***

இப்போது எதற்கு திடீரென்று திருவிந்தளூர் எம்பெருமானைப் பற்றிய கலியன் பனுவல்களைப் பாடிப் பரவுகிறேன் என்று தெரிய வேண்டுமென்றால் இங்கே பாருங்கள். இத்திருக்கோவில் புனிதநீர்தெளிப்பினை முன்னிட்டு நம் நண்பர் இரவிசங்கர் கண்ணபிரான் நியமித்தபடி காரி மாறனையே இதுவரை அறிந்திருந்த அடியேன் கலியன் பரகாலன் பைந்தமிழையும் பருகித் திளைத்தேன். அடியார் நியமனம் அரங்கன் நியமனமே.

24 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அடியார் நியமனம் அரங்கன் நியமனமே//

அடியார் வாழ்த்து அரங்கனின் வாழ்த்தே! :)
இன்னுமொரு நூற்றாண்டு இரும்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

எப்படி இருந்துச்சி குமரன் ஆடல்-மா குதிரைச் சவாரி? :)

உங்க கிட்ட சொல்லாமல், இதுல ஒரு மறைமுகமான சதி வேற செஞ்சேன்! :)
பல சமயம் நம் ஆழ்வார் மாறனைப் பேசும் நீங்கள், அவருக்கு அடுத்து அதிகம் ரசிகர் பட்டாளம் இருக்கும் பரகாலன் என்று ஒரு வரி மட்டும் குறிப்பிட்டுச் சென்று விடுவீர்கள்! உங்களை எப்படிக் "குதிரை" ஏற்றலாம் என்று காத்துக் கிடந்த போது தான் இந்த வாய்ப்பு வந்தது! :)

திரிவிந்தளூரை மங்களாசாசனம் செஞ்சது திருமங்கை மட்டுமே! அதுவும் மீனாச்சி குடமுழுக்குக்கு அடுத்த நாள்! உம்மால மறுக்க முடியாது-ன்னு தெரியும்! வலையை வீசினேன்! வேடு பறி வைபவத்தில் மாட்டிக் கொண்டீர்கள்! கலியன் சொற்றமிழில் எங்களையும் மாட்டி வைத்து விட்டீர்கள்! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//எம்மைக் கடிதாக் கருமம் அருளி ****ஆவா***** என்று இரங்கி
நம்மை ஒரு கால் காட்டி நடந்தால் நாங்கள் உய்யோமே//

ஆகா! இங்கேயுமா "ஆ வா"!
வா வா! ஆ வா! வாரே வா! :)
மீதியை அலுவலகம் சென்று தொடர்கிறேன் குமரன்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ஒவ்வொரு பாசுரத்துக்கும் பிறகு வாரேன்! அதுக்கு முன்னாடி...அது என்ன..."பரமேஸ்வரம் ரமேஸ்வரம் மேஸ்வரம் ஈஸ்வரம்"? :)

திருமங்கை-ன்னாலே விளையாட்டு தானா? :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//காரி மாறனையே இதுவரை அறிந்திருந்த அடியேன் கலியன் பரகாலன் பைந்தமிழையும் பருகித் திளைத்தேன்//

இராமானுசர் மாறன் பாசுரங்களை வாசித்த பின் யானை போல கம்பீரமா அமைதியா நடப்பாராம்! ஆனால் திருமங்கை கலியன் பாசுரங்களை வாசித்த பின் சிங்கம் போல கொஞ்சம் மூரி நிமிர்ந்து முழங்கியே புறப்படுவாராம்!

பண்டு அரு மாறன் பசுந்தமிழ், ஆனந்தப் பாய் மதமாய்
விண்டிட எங்கள் இராமானுச முனி வேழம்!

"கலி"மிக்க செந்நெல் கழனிக் குறையல் கலைப் பெருமான்
ஒலிமிக்க பாடலை உண்டு, தன் உள்ளம் தடித்து, அதனால்
வலிமிக்க சீயம் இராமானுசன்!

அது போல இப்ப உங்க நிலைமை குமரன்! :)

அபி அப்பா said...

பதிவை படிக்க படிக்க ஆனந்த கண்ணீர்! அப்படியே திருவிழந்தூர் பரிமள ரங்கனை சேவிச்ச மாதிரி இருக்குது குமரன்!!

மெளலி (மதுரையம்பதி) said...

அருமை குமரன். இனிய தமிழை சுவைக்கத் தந்தமைக்கு. கும்பகோணம்-தஞ்சாவூர் பக்கத்துக் கோவில்களை தரிசிக்க என்றே ஒரு பயணம் போகவேண்டும். என்று நடக்குமோ/அருளுவானோ தெரியவில்லை. ஆங்காங்கே சில கோவில்கள் மட்டுமே, அதிலும் அவசர, அவசரமாக தரிசினம்.

குமரன் (Kumaran) said...

வாழ்த்துகளுக்கு நன்றி அடியாரே. (ஆனா நீங்க அடியார்ன்னு சொன்னா யாரும் ஒத்துக்க மாட்டேங்கறாங்களே. கும்மு கும்முன்னு உள்குத்து வெளிக்குத்துன்னு குத்திக்கிட்டே இருக்கீங்களோ? :-) அப்படின்னா அடியார் இல்லை நீங்க. அடியாள். அடியாள்ன்னா பெண்பாலைச் சொல்லலை. :-) )

குமரன் (Kumaran) said...

நீங்க செஞ்ச சதியோ பெருமாள் செஞ்ச சதியோ முதல் பாசுரத்தின் பொருள் படிக்கத் தொடங்கினப்பவே தெரிஞ்சிருச்சு - இந்த இடுகை எழுதுறது ஒரு பேரானந்த அனுபவமாக இருக்கப் போகுதுன்னு. அப்படியே தான் இருந்தது. :-)

குமரன் (Kumaran) said...

முத்துசுவாமி தீட்சிதர் இந்த ஊர் பெருமாள் மேல் ஒரு கீர்த்தனை பாடியிருக்கிறார். அந்தக் கீர்த்தனையின் கடைசி வரி தான் தலைப்பாக இங்கே போட்டிருக்கிறேன்.

பரமேஸ்வரம் = அனைத்துலகுக்கும் அதிபதி
ரமேஸ்வரம் = ரமா + ஈஸ்வரம் = திருமகள் நாயகன்
மேஸ்வரம் = மே + ஈஸ்வரம் = என் தலைவன்
ஈஸ்வரம் = தலைவன் (தலைவன் என்று சொன்னாலே இவன் மட்டுமே தான்)

என்று ஒவ்வொரு எழுத்தாக எடுத்துவிட்டு அருமையக பொருள் வரும் படி இந்த வரி வந்ததால் அதனைத் தலைப்பாக வைத்தேன். (அதுவே இந்த இடுகையை நிறைய பேர் படிக்காமல் விட்டதற்கும் காரணமாக இருக்கலாம். :-) )

குமரன் (Kumaran) said...

மலம் அறவில்லை இன்னும் இரவிசங்கர். அதனால் யானையாகவும் இல்லை சிங்கமாகவும் இல்லை. சீரார் இராமானுசனாகவும் இல்லை. :-)

குமரன் (Kumaran) said...

ரொம்ப மகிழ்ச்சி அபி அப்பா. அடுத்த முறை பரிமளரங்கனைப் பார்க்கும் போது என்னையும் நினையுங்கள்.

குமரன் (Kumaran) said...

நன்றி மௌலி. நான் குடமூக்கிற்கும் தஞ்சைக்கும் ஒரே ஒரு தடவை தான் போயிருக்கேன்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஆனா நீங்க அடியார்ன்னு சொன்னா யாரும் ஒத்துக்க மாட்டேங்கறாங்களே//

ஹிஹி! யாருன்னு சொல்லுங்க குமரன்! ஒத்துக்க வச்சிருவோம்! :))
இல்லீன்னா ஒரு பதிவுலக வாக்கெடுப்பு நடாத்திப் பாத்துருங்க! :)

//கும்மு கும்முன்னு உள்குத்து வெளிக்குத்துன்னு குத்திக்கிட்டே இருக்கீங்களோ? :-) அப்படின்னா அடியார் இல்லை நீங்க. அடியாள். அடியாள்ன்னா பெண்பாலைச் சொல்லலை. :-) )//

ஹா ஹா ஹா!
அடியானோ! அடியாளோ! அடியாரோ! அடியாதோ! :))

Jokes Apart...
அடியேன் அடியேன் தான்!
அடியேன் அடியார் இல்லை!

அதனால் எவ்வொருவர் ஒப்புதலும் இவ்விடத்தே தேவையில்லை!
நாம் ஆர்க்கும் குடி அல்லோம்! நமனை அஞ்சோம்!

எம்பெருமான் திருமுக உல்லாசத்துக்குத் தான் அடியேனால் எழுத முடியுமேயன்றி, அவர் உல்லாசம், இவர் உல்லாசங்களுக்கு எல்லாம் எழுதிக் கொண்டிருக்க முடியாது!

அது உள்குத்தோ, வெளிக்குத்தோ - என்ன பெயர் வேண்டுமானாலும் நீங்கள் கொடுத்துக் கொள்ளுங்கள்!
ஆனால் மனக்குத்து = மனசாட்சிக் குத்து! என்னையும் சேர்த்தே குத்திக் கொள்வதும் வழக்கம் தான்!

மனக்குத்து குத்தினால் தான் கலமும் கடலில் இறங்கும்!
நீரைக் குத்தாமல் ஓடம் முன் செல்லாது!

மனம் எனும் தோணி பற்றி, மதி எனும் கோலை ஊன்றும் போது,
சினம் எனும் சரக்கைச் சிலர் ஏற்றலாம்! ஆனால் உனை எண்ணும் உணர்வை நல்காய், ஒற்றியூர் உடைய கோவே என்று கலம் சென்று கொண்டு தான் இருக்கும்!

ஆழ்வார், நாயன்மார்கள், ஆச்சார்யர்கள் சொல்லாத மனக்குத்து எதையும் அடியேன் புதிதாகச் சொல்லிவிடவில்லை! சொல் ஒன்று செயல் ஒன்று என்று இருப்பார்க்கு இப்படி குத்தாக எடுத்துக் கொண்டு, பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும்! தன்னெஞ்சே தன்னைச் சுடும்! அது அடியேன் பிழையன்று! நதியின் பிழையன்று நறும் புனல் இன்மை!

இல்லை...ஒப்புக்க முடியாது...எழுதுவது கேவலமான உள்குத்து தான் என்றால் ஊரே திரண்டு எதிர்க்குமே!
ஓரிருவருக்கு மட்டுமே அலர்ஜி என்றால், நோய் யாரிடத்தில்?

நீங்கள் விளையாட்டாகச் சொன்னாலும், உங்கள் முகத்தான், இங்கு, இன்று, பரிமள ரங்கன் முன் பொதுவில் வைத்து விட்டேன்!

காப்பு மறந்தறியேன்!
கண்ணனே என்றிருப்பேன்!
ஹரி ஓம்!

அடியேனை அறிவோம் என்றில்லாதவர்க்கும்
அடியேன் ஹரி ஓம்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கும்மு கும்முன்னு உள்குத்து வெளிக்குத்துன்னு குத்திக்கிட்டே இருக்கீங்களோ? :-)//

இந்தப் பேச்சை நீங்களே எடுத்ததால் இன்னொன்றும் சொல்ல வேண்டி இருக்கு!

இது வரை தனிப்பட்ட முறையில் எவரையும் தாழ்த்தியதுமில்லை! கடிந்து பேசிச் சொன்னதுமில்லை!

அது உள்குத்தோ, வெளிக்குத்தோ - என்ன பெயர் வேண்டுமானாலும் நீங்கள் கொடுத்துக் கொள்ளுங்கள்! ஆனால் அவை அத்தனையும் ஒரு கருத்தின் மீதோ, இல்லை கொள்கைகளின் மீதோ தான்!

காஞ்சிப் பெரியவர் தெய்வத்தின் குரலில் செய்யாத இனிய நையாண்டிகளா? அவையும் போலித்தனமான கருத்தின் மீதோ, இல்லை கொள்கைகளின் மீதோ தானே!

காலத்துக்கு ஒவ்வாத கொள்கைகள் மீது தான் என்றாலும், அப்போது கூட தெய்வங்களைப் பற்றி இழித்துரைத்ததில்லை! கடலில் போட்டது சரியே என்று சொன்னதுமில்லை! அன்னை, பெருமாளின் மகுடத்தின் மேல் காலடி வீசி நடந்து வந்தாள் என்று எழுதியதுமில்லை! சங்கரநாராயண உருவம் ஓரினச் சேர்க்கை என்று எங்கும் பின்னூட்டியதும் இல்லை!

அதனால் தான் கும்மு கும்முன்னு உள்குத்து வெளிக்குத்துன்னு குத்திக்கிட்டே இருக்கீங்களோ? என்று கேட்கத் தோன்றியது அல்லவா?

அவரவரும் கருத்தைக் கருத்தாகப் பார்க்காமல் போவதற்குக் காரணம், மனசாட்சியின் குத்தல் தான்! பரவாயில்லை! குத்திக் கொள்ளட்டும்!

* தனிப்பட்ட முறையில் என்னைக் கும்மி அடித்தாலும், பதில் கும்மியில் இது வரை அடியேன் இறங்கியதுமில்லை!
* யாரையும் போய் "ஏன், இதை எழுதேன், அதை எழுதேன்" என்று அடாவடி செய்ததுமில்லை!
* ஒருவர் அதிகமாக எழுதும் கருப்பொருளை வைத்து, அவரை நையாண்டி செய்தது கூட இல்லை!

ஆனால் என்னைச் செய்துள்ளார்கள்!
செய்து விட்டு, உங்களை மட்டும் தான் இப்படிச் செய்யத் தோன்றுகிறது என்றும் சொல்லி உள்ளார்கள்!
xxx தனமானவன் என்று என்னைப் பேசிய பின்னூட்டங்கள் இன்றும் உள்ளன!

அடியேன் செளலப்பயத்தினால் தானே இத்தனையும்?

இப்படி தனிப்பட்ட முறையில் மற்றவர் இறங்கி விட்டு,
நான் கும்மு கும்முன்னு உள்குத்து வெளிக்குத்து குத்துகிறேன் என்பது பேச்சோ? அதை இங்கே நீங்களும் சிரிப்பான் போட்டுக் காட்டுகிறீர்களோ?

விளையாட்டுக்குச் சொன்னேன், விளையாட்டுக்குச் சொன்னேன் என்று பல முறை விளையாடியும் ஆகி விட்டது...
இப்படி விளையாடி விளையாடி இல்லாத ஒன்றை நிலைக்கச் செய்யும் வித்தை பற்றியும் அடியேனுக்குத் தெரியும்!

எம்பெருமானார் திருவடிகளைத் தஞ்சமெனப் பற்றியவனுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டுமில்லை!

மீண்டும் சொல்கிறேன்! எம்பெருமான் திருமுக உல்லாசத்துக்குத் தான் அடியேனால் எழுத முடியுமேயன்றி, அவர் உல்லாசம், இவர் உல்லாசங்களுக்கு எல்லாம் எழுதிக் கொண்டிருக்க முடியாது!
எழுதுவது குணானுபவத்திற்குத் தான்! பொழுதுபோக்குக்கு அல்ல!

நீங்கள் சிரிப்பான் போட்டுக் காட்டினாலும் அதை எதிர் கொள்ளும் அறத் துணிவு அடியேனிடம் உண்டு! ஞான வைராக்கிய பூஷணம்! ஸ்ரீமத் வேங்கட நாதார்யம்! வந்தே வேதாந்த தேசிகம்!

உங்களில் பாவமே செய்யாதவர்கள் எவரோ, அவர்கள் இந்த விபசாரி மீது கல்லெறியக் கடவீர்களாக!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

அதே குணானுபவ நோக்கில் இதை மட்டும் இட்டுவிட்டு நிறுத்திக் கொள்கிறேன்! பரிமள ரங்கா!!!!!!!

//பரமேஸ்வரம் = அனைத்துலகுக்கும் அதிபதி
ரமேஸ்வரம் = ரமா + ஈஸ்வரம் = திருமகள் நாயகன்
மேஸ்வரம் = மே + ஈஸ்வரம் = என் தலைவன்
ஈஸ்வரம் = தலைவன் (தலைவன் என்று சொன்னாலே இவன் மட்டுமே தான்)//

முத்துசாமி தீட்சிதரின் அருமையான எண்ணக் கோர்வை, சொற் கோர்வை, மனக் கோர்வை!

அதைக் கொடுத்தமைக்கு நன்றி குமரன்!

அமீர் கல்யாணி ராகத்தில், பெருமாளைப் பாடி, குரு குஹ என்று முடிக்கும் அழகே அழகு!
பரிமள ரங்க நாதம் பஜேஹம் என்று தொடங்கும்!
இந்தாங்க விஜய் சிவா பாடும் சுட்டி
http://www.youtube.com/watch?v=RXw_t1H0vbQ

குமரன் (Kumaran) said...

அடடா. பொங்கித் தள்ளிவிட்டீர்களே இரவிசங்கர். நான் எதையுமே மனத்தில் வைத்துக் கொண்டு சொல்லவில்லை. அடியார் நியமனம் அரங்கன் நியமனம் என்று சொன்ன சொல்லே உண்மையான உணர்வு. பின்னூட்டத்தில் 'அடியார் = அடிக்கமாட்டார்' என்ற பொருளில் தான் நீங்க அடிக்கமாட்டீங்கன்னு சொன்னா ஒத்துக்க மாட்டாங்களே; கும்மு கும்முன்னு கொள்கை, கருத்துன்னு எல்லாத்தையும் கும்முறீங்களே - அப்ப அடிக்க மாட்டீங்கன்னு எப்படி சொல்றது?ன்னு சொல்ல வந்தேன். அம்புட்டு தான். அதுக்கு மேல வேற எதுவும் சொல்லலை. ஆனால் உங்க பக்கத்தில இருந்து பார்த்தா ஏன் உங்களுக்கு அப்படி புரிஞ்சதுன்னு புரியுது. உங்களுக்கு மன வருத்தம் ஏற்படுத்தியதற்கு மன்னிச்சுருங்க.

குமரன் (Kumaran) said...

விஜய் சிவா பாடிய பாட்டைக் கேட்டுப் பார்க்கிறேன் இரவி. சுட்டிக்கு நன்றி.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//உங்களுக்கு மன வருத்தம் ஏற்படுத்தியதற்கு மன்னிச்சுருங்க//

ஆகா! அதெல்லாம் ஒன்னுமில்லை குமரன்!
Wanted to make this public, bcoz a few other people too feel the same way abt "kuthu kuthu-nu" kutharen!

பகவானை இவர்கள் கும்மு கும்முன்னு குத்தியது எல்லாம் குத்தாத் தெரியலையா?
(I have showed "just" three instances of those kuthus)

அனுட்டானம் என்று சொல்லிக் கொண்டு சமூகத்தில் உள்ள சில பழக்க வழக்கங்கள் பற்றிப் பேசுவது மட்டும் தான் குத்தாகத் தெரிகிறதோ?

இத்தனைக்கும் யாரையும் தனிப்பட்ட முறையில் கூட எதுவும் சொல்லவில்லையே? காணலாகும் பழக்க வழக்கங்கள் பற்றிப் பேசினாலே அது குத்தா?

அப்படின்னா காசியில் கண்டு விட்டு, "மூட மதே, நஹி நஹி ரக்ஷதி டுக்ருண் கரணே"-ன்னு ஆதி சங்கரர் ஆரம்பிப்பது என்னவாம்? உள் குத்தா? வெளிக் குத்தா? - சொல்லச் சொல்லுங்கள் பார்ப்போம்! கடைசி வரை பதில் வராது!

எங்களைப் போலவே பகவானை என்ன வேணும்-ன்னாலும் பேசிக்கோ! ஆனா நாங்க செய்யும் பழக்க வழக்கத்தைப் பத்தி மட்டும் பேசாதே! - ன்னு சொல்வது போல் இருக்கு!

உம்...இந்த "அத்யந்த" பக்தியை எங்கே போய் சொல்ல? :))
விடுங்க! மீனாக்ஷி மம தேஹி கரவாலம்பம்-ன்னு நானும் பாடிட்டு போயிடறேன்!

பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
கோவிந்தம் பஜ! "மூட மதே"!

S.Muruganandam said...

//முன்னை வண்ணம் பாலின் வண்ணம் முழுதும் நிலை நின்ற
பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம் வண்ணம் எண்ணும் கால்
பொன்னின் வண்ணம் மணியின் வண்ணம் புரையும் திருமேனி
இன்ன வண்ணம் என்று காட்டீர் இந்தளூரீரே//

அடியேனுக்கு மிகவும் பிடித்த பாசுரம்.

இந்த்ளூரன் மேல் நம் கலியன் பாடிய பாசுரத்தை விளக்கத்துடன் கொடுத்ததற்கு நன்றி குமரன்.

சுந்தரர் எம்பிரான் தோழர் ஒரு பதிகத்தில் இப்படித்தான் ஒரு கண் தராவிட்டால் வாழ்ந்து போம் நீரே என்று பதிகம் பாடினார்.

குமரன் (Kumaran) said...

எனக்கும் நீங்கள் சொல்லும் சுந்தரர் பதிகம் படித்தது போல் தோன்றுகிறது கைலாஷி ஐயா. நன்றி.

Radha said...

திரு குமரன் அவர்களே,
இந்த பதிவை படித்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். god bless you !
~
Radha
------------------------
Glory unto the Supreme !
------------------------

Radha said...

திரு குமரன் அவர்களே,
இந்த பதிவை படித்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். god bless you !
~
Radha
------------------------
Glory unto the Supreme !
------------------------

குமரன் (Kumaran) said...

தங்கள் ஆசிகளுக்கு மிக்க நன்றி இராதாம்மா. உங்கள் இடுகைகளையும் பார்த்தேன். படிப்பதற்காகப் பிரதி எடுத்து வைத்திருக்கிறேன். பார்க்கவே மிக அழகாக இருக்கின்றன.