Thursday, February 05, 2009

கூரத்தாழ்வானின் குரு பரம்பரை - 2

ஆசாரிய பரம்பரையில் திருமகள் நாதன், திருமகள், சேனைமுதலியார் என்ற மூன்று ஆசாரியர்களின் வாழித் திருநாமங்களைச் சென்ற பகுதியில் பார்த்தோம். சேனைமுதலியாரின் அம்சமாகப் பிறந்தவர் நம்மாழ்வார். சேனைமுதலியாருக்கு அடுத்த ஆசாரியராகப் புகழப்படுபவர் மாறன் சடகோபனான நம்மாழ்வார். ஆசாரிய வரிசையில் முதல் மூவரும் தெய்வ உலகத்தைச் சேர்ந்த நித்யர்களாக இருக்க, அந்த வரிசையில் வரும் முதல் மனிதர் இவர். ஆழ்வார்களில் காலத்தால் நடுவினராக இருந்தாலும் அவர்களுள் முதன்மையானவராகக் கருதப்படுபவர் வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபனான நம்மாழ்வார். மற்ற அனைத்து ஆழ்வார்களும் இவரது அங்கங்களாகக் கருதப்படும் பெருமை உடையவர். ஆழ்வார்கள் வரிசையிலும் ஆசாரியர் வரிசையிலும் வைத்துப் போற்றப்படும் பெருமை பெற்ற ஒரே ஒருவர். வைணவ குல முதல்வர்; கூடஸ்தர்; குலபதி என்று போற்றப்படுபவர். அவருடைய தெய்வீகமான திருக்கதையை இங்கே படிக்கலாம்.





மேதினியில் வைகாசி விசாகத்தோன் வாழியே
வேதத்தைச் செந்தமிழால் விரித்துரைத்தோன் வாழியே
ஆதி குருவாய் புவியில் அவதரித்தோன் வாழியே
அனவரதம் சேனையர்கோன் அடி தொழுவோன் வாழியே
நாதனுக்கு நாலாயிரம் உரைத்தான் வாழியே
நன்மதுரகவி வணங்கும் நாவீறன் வாழியே
மாதவன் பொற்பாதுகையாய் வளர்ந்தருள்வோன் வாழியே
மகிழ் மாறன் சடகோபன் வையகத்தில் வாழியே

வைகாசி விசாகத்தில் தமிழ்க்கடவுள் திருமுருகனும் வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபனும் பிறந்தார்கள். அதனால் 'வைகாசி விசாகத்தோன்' என்ற விருது இருவருக்கும் பொருந்துகின்றது. உலகத்தில் வைகாசி விசாகத்தில் பிறந்த நம்மாழ்வார் வாழ்க. மேதினியில் வைகாசி விசாகத்தோன் வாழியே.

வடமொழியில் இருக்கும் நான்கு வேதங்கள் காலத்தால் முந்தியவை. ஆக்கியவர் இவர் என்று காட்டும் படி இல்லாதவை - அதனால் 'அபௌருஷேயம்' என்று அழைக்கப்படுபவை. அப்படி காலத்தால் முந்தையதாக இருப்பதாலும் அதில் உள்ள சொற்கள் மறைமொழியாக இருப்பதாலும் சில இடங்களில் பொருள் தெளிவாக சட்டென்று விளங்காத படி அமைந்திருக்கின்றன. அப்படிப்பட்ட வேதங்களை 'எல்லோரும்' எளிதாக படித்து உணர்ந்து கொள்ளும் வண்ணம் செந்தமிழில் விரித்து உரைத்தார் நம்மாழ்வார். அதனால் தான் 'செய்ய தமிழ் மாலைகள் நாம் தெளிய ஓதி தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே' என்று சுவாமி வேதாந்த தேசிகன் மனம் உவந்து பாடினார். வேதத்தைச் செந்தமிழால் விரித்து உரைத்தோன் வாழியே.



குலமுதல்வன் என்றும் கூடஸ்தன் என்றும் குலபதி என்றும் போற்றும் படி ஆசாரிய வரிசையில் முதல் மானுட குருவாய் புவியில் அவதரித்தவர் பராங்குசனான நம்மாழ்வார். ஆதி குருவாய் புவியில் அவதரித்தோன் வாழியே.

என்றென்றும் தன் குருவான சேனைமுதல்வரின் திருவடிகளைத் தொழுபவர் நம்மாழ்வார். அனவரதம் சேனையர்கோன் அடி தொழுவோன் வாழியே.

கால வெள்ளத்தில் கரைந்து போன ஆழ்வார்களின் நாலாயிரப் பனுவல்களைத் தேடி வந்த நாதமுனிகளுக்கு அந்த நாலாயிரம் பாசுரங்களையும் உரைத்து அவரை ஆசாரிய பரம்பரையில் அடுத்த ஆசாரியன் ஆக்கியவர் நம்மாழ்வார். நாதனுக்கு நாலாயிரம் உரைத்தான் வாழியே.

வயது, படிப்பு, பிறப்பு என்று எந்த ஏற்றத் தாழ்வுகளையும் பார்க்காத நல்ல மதுரகவியாழ்வார் வணங்கும் திருநாவுக்கரசர் நம்மாழ்வார். நன்மதுரகவி வணங்கும் நாவீறன் வாழியே.

திருமகள் நாதன் என்னும் பரதெய்வத்தின் திருப்பாதுகைகளாக - சடாரியாகத் திருக்கோவில்களில் என்றென்றும் வீற்றிருந்து திருமகள் நாதனின் திருவருளை அன்பர்களுக்கு அள்ளித் தருபவர் நம்மாழ்வார். மாதவன் பொற்பாதுகையாய் வளர்ந்து அருள்வோன் வாழியே.

என்றைக்கும் மகிழ்வுடன் மகிழம்பூ மாலையை அணிந்து உலகத்தில் வகுளாபரணராய் விளங்குபவர் மாறன் சடகோபனான நம்மாழ்வார். மகிழ் மாறன் சடகோபன் வையகத்தில் வாழியே.

28 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

தமிழ் வேதம் தழைக்க வந்த குலக் கொழுந்து, மாறன்
நம்மாழ்வார் திருவடிகளே சரணம்!

நம்மாழ்வாரின் அடியார்க்கு அடியார்க்கு அடியார்க்கு அடியார்க்கு அடியார்க்கு அடியார்க்கு அடியேன்!

அடியார், அடியார், தம் அடியார், அடியார் தமக்கு,
அடியார், அடியார், தம் அடியார், அடி யோங்களே!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஆழ்வார்கள் வரிசையிலும் ஆசாரியர் வரிசையிலும் வைத்துப் போற்றப்படும் பெருமை பெற்ற ஒரே ஒருவர்//

நம்மாழ்வார் திருவடிகளே சரணம்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//வைணவ குல முதல்வர்; கூடஸ்தர்; குலபதி என்று போற்றப்படுபவர்//

நம்மாழ்வார் திருவடிகளே சரணம்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

1. அடியார்கள் வாழ
2. அரங்கநகர் வாழ
3. சடகோபன் தண்டமிழ் நூல் வாழ

என்று முதலில் அடியார்களும்
அடுத்து அரங்கத் தலமும்
அடுத்து நம்மாழ்வாரும்

என்று சொல்லி, ஆச்சார்யர்களைச் சொல்லி, அப்புறம் தான் ஆண்டவனையே சொல்கிறார் சாற்று மறையில்!

நம்மாழ்வார் திருவடிகளே சரணம்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

எல்லா ஆச்சார்யர்களும் பெரிது உகப்பது இராமானுஜ சம்பந்தம்!
ஆனால் எல்லா ஆச்சார்யர்களும், இராமானுசரும், இராமானுசருக்கு முன்னுள்ள ஆச்சார்யர்களும் உகந்தே உகப்பது நம்மாழ்வார் சம்பந்தம் தான்!

புகழ் மலிந்த
பா மன்னு மாறன் அடி பணிந்து உய்தனன்...
பல் கலையோர்
தாம் மன்ன வந்த இராமானுசன்...
என்று மாறனின் சம்பந்தம், நேரடியான இறைவனின் திருவடி சம்பந்தம்!

அதனால் தான் ஒன்று விடாமல் அனைத்து ஆலயங்களிலும்...
எம்பெருமானின் திருவடிகளாக நம்மாழ்வார் என்னும் சடாரியை, நம் தலைகளிலே சார்த்துகிறார்கள்!

நம்மாழ்வார் திருவடிகளே சரணம்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

குமரன்
தனி மின்னஞ்சலில் சொல்ல மறந்து போனது! இங்கு இதைக் கண்ட உவப்பிலே திடீரென்று ஞாபகம் வந்தது!

நம்மாழ்வாருக்கு இன்னொரு வாழித் திருநாமப் பனுவலும் உண்டு!
இதோ:

திருக்குருகூர்த் திருப்புளியில் வளர்ந்த பிரான் வாழியே!
சேமங் கொள் தென் மறைகள் வெளியிட்டான் வாழியே!

பெருக்கமுற்ற அடி நிலையாய் வந்து உதித்தான் வாழியே!
பெரும் நிலைகள் மதுரகவிக்கு அருள் புரிந்தோன் வாழியே!

கருத்துடை நாதமுனிக்குங் கருணை செய்தான் வாழியே!
குருக்களுக்குத் திலகமெனக் கூற நின்றான் வாழியே!

குருகூரான் சடகோபன் குலத்தாள்கள் வாழியே!

(ஒரு முறைக்கு இரு முறை சரி பார்த்து, பதிவில் இட்டு விடுங்கள்!)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

மானிட ஆச்சார்ய பரம்பரையில் கடைசி ஆச்சார்யர் மணவாள மாமுனிகள்!
அவர் மானிட ஆச்சார்ய முதல் ஆச்சார்யரான நம்மாழ்வாரை வாழ்த்திப் பாடுவது இதோ:

உண்டோ வைகாசி விசாகத்துக்கு ஒப்பு ஒரு நாள்?
உண்டோ சடகோபர்க்கு ஒப்பு ஒருவர்? - உண்டோ
திருவாய் மொழிக்கு ஒப்பு தென் குருகைக்கு உண்டோ?
ஒருபார் தனில் ஒக்கும் ஊர்!

நம்மாழ்வார் திருவடிகளே சரணம்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

கவிப் பேர் ஏறு (கவிதார்க்கிக சிம்மம்), வேதாந்த தேசிகர், நம்மாழ்வாரை ஆயிரம் சுலோகங்களால், பாதுகா சஹஸ்ரத்தில் கொண்டாடுகிறார்!

நாதமுனி-"சடகோபன்"-சேனைநாதன்
இன்னமுதத் திருமகள் என்று இவரை முன்னிட்டு
எம்பெருமான் திருவடிகள் அடைகின்றேனே...
என்று தேசிகர் செய்யும் துதி!

நம்மாழ்வார் திருவடிகளே சரணம்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

நம்மாழ்வாரின் நேரடிச் சீடர் மதுரகவிகள். பிறப்பால் அந்தணர்! இருப்பினும் தன்னை விட வயதில் பொடியவனான நம்மாழ்வார், பிறப்பால் வேளாளர், அவரிடம் கை கட்டி-வாய் பொத்தி தமிழ் மறைகளைக் கேட்ட அழகே அழகு!

அவர் நம்மாழ்வாரைப் புகழ்ந்து செய்த பதினோரு பாசுரங்கள்!
இறைவன் மீது செய்ய மறுத்து விட்டார்!

அதில் தலையாய பாசுரம்:
கண்ணி நுண் சிறுத் தாம்பினால் கட்டுண்ணப்
பண்ணிய பெரு மாயன், என் அப்பனில்,
நண்ணித் தென் குருகூர் நம்பி என்றக்கால்,
அண்ணிக்கும் அமுது ஊறும் என் நாவுக்கே!

நம்மாழ்வார் திருவடிகளே சரணம்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

வடமொழியிலும் நம்மாழ்வார் போற்றிக் கொண்டாடப்படுகிறார்!

வகுளாபரணன் என்று நம்மாழ்வாருக்கு இன்னொரு திருப்பெயர்!

மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதி
ஸர்வம் யதேவ நியமேந மதந் வயாநாம்
ஆத் யஸ்ய ந:குலபதேர் "வகுளா பிராமம்"
ஸ்ரீமத் ததங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்னா!

(பொருள் நீங்களே சொல்லிருங்க குமரன்:)

நம்மாழ்வார் திருவடிகளே சரணம்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

நம்மாழ்வாரை நம் அனைவருக்கும் முதல் தாய் என்று கொண்டாடுவது வழக்கம்!

இராமானுசரை, முதல் தாய்க்கு அடுத்த "இதத் தாய்" என்று போற்றுவது வழக்கம்!

வான் திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ் மேல்
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும் - ஈன்ற
முதல் தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த
இதத் தாய் இராமா னுசன்!

தமிழில் வேதம் காட்டி, ஆன்மீகத் தமிழுக்கு முதல் தாய் ஆன,
அம்மா...நம்மாழ்வார் திருவடிகளே சரணம்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

வைணவர்கள் மட்டுமல்லாது, சிவ நெறிச் செல்வர்களான இடைக்காட்டுச் சித்தரும், கருவூர்ச் சித்தரும் கூட நம்மாழ்வாரை மட்டும் தலை மேல் வைத்துப் போற்றுகிறார்கள்!

இடைக்காட்டுச் சித்தர் = தாண்டவக் கோனே என்று முடியும் சித்தர் பாடல்கள் வருமே! அவரே தான் இவர்! பழுத்த சைவர்!
அவரு செய்த திருவாய்மொழித் தனிப்பாட்டு (தனியன்) இதோ:

ஐம்பொருளும் நாற்பொருளும் முப்பொருளும் பெய்து அமைந்த
செம்பொருளை, எம் மறைக்கும் சேண் பொருளை - தண் குருகூர்
சேய்மொழி அது என்பர் சிலர், யான் இவ்வுலகில்
தாய்மொழி அது என்பேன் தகைந்து!

தமிழ் வேதம் என்று பட்டம் கட்டியதே இந்த சிவநெறிச் செல்வர் தான்!

குழந்தை மாறனின் மொழி, சேய் மொழி அல்ல! உலகத்துக்கே தாய் மொழி என்று மேற்கண்ட பாட்டில் சொல்கிறார்!
இதோ தொடர்புடைய பதிவு!

நம்மாழ்வார் திருவடிகளே சரணம்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

கடைத்தமிழ்ச் சங்கப் புலவர்களும் நம்மாழ்வாரை வாழ்த்தி எழுதிய பாடல்:

ஈ ஆடுவதோ கருடற்கு எதிரே?
இரவிக்கு எதிர் மின் மினி ஆடுவதோ?

நாய் ஆடுவதோ உறு வெம்புலி முன்?
நரி, கேசரி முன் நடை ஆடுவதோ?

பேய் ஆடுவதோ அழகு ஊர்வசி முன்?
பெருமாள் வகுளா பரணன் அருள்கூர்ந்து,

ஓவாது உரைஆயிரம் "தமிழ் மாமறையின்"
ஒரு சொற் பெறுமோ உலகில் கவியே!!

(கருடனுக்கு முன் ஈ ஆடுமோ? சூரியனுக்கு முன் மின்மினி தான் ஆடுமோ?
புலி முன் நாயும், சிங்கத்தின் முன் நரியும் தான் ஆடிடுமோ?
ஊர்வசி முன் பேய் ஆடுமோ?

வகுளாபரணன் என்ற பெயர் பெற்ற நம்மாழ்வார் ஓதிய ஆயிரம் பாடல் கொண்ட திருவாய்மொழி. அது வேத நெறிகளின் சாராம்சம்!
மானுடம் உய்ய வந்த அதுவே தமிழ் வேதம்!
அதன் ஒரு சொல்லுக்கு ஈடாகுமோ, உலகில் உள்ள கவி?)

நம்மாழ்வார் திருவடிகளே சரணம்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//நாதனுக்கு நாலாயிரம் உரைத்தான் வாழியே//

நம்மாழ்வார் பாடியது ஓராயிரம் தான் என்றாலும்...
நாதமுனிக்கு மொத்தமும் சொல்லி, ஓராயிரச் சொந்தக்காரர், நாலாயிரச் சொந்தக்காரர் ஆனது தான் சிறப்போ சிறப்பு! :)

//மேதினியில் வைகாசி விசாகத்தோன் வாழியே//

என் சுப்பன், செல்லக் குழந்தை முருகப் பெருமான் பிறந்தநாளில் பிறந்த நம்மாழ்வார்,
தமிழுக்குத் தொண்டு செய்து, வேதத்தைத் தமிழில் கொண்டு வைத்ததில் வியப்பும் உண்டோ? :)

நம்மாழ்வார் திருவடிகளே சரணம்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

இதுக்கு மேல என்னால முடியாது குமரன்!
வணங்குதல் அல்லது
வாழ்த்தல் என் நாவிற்கு அடங்காது!

இன்னும் அலுவலகம் தான்! வீட்டுக்குப் போகலை!
சென்று, மீண்டு, மீண்டும் வருகிறேன்! :)

நம்மாழ்வார் திருவடிகளே சரணம்!

Raghav said...

வேதம் தமிழ் செய்த மாறன் திருவடிகளே சரணம் !

Raghav said...

நம்மாழ்வார் என்ற உடனே ரவி அண்ணா மழையாக பொழிந்து விட்டாரே :)

Raghav said...

நம்மாழ்வார் , ஸ்ரீமன்நாதமுனிகளுக்கு பிரபந்தங்களை அருளும் போது தன்னுடைய திருவாய்மொழியை இறுதியில் உரைத்ததாக என் அண்ணா சொல்லிக் கேட்டுள்ளேன்.

குமரன் (Kumaran) said...

இன்னொரு வாழித் திருநாமத்தையும் தந்தற்கு நன்றி இரவி. தொடர்ந்து நிறைய சொல்லியிருக்கிறீர்கள். அவற்றிற்கும் மிக்க நன்றி.

மானிட ஆசார்ய பரம்பரையில் கடைசி ஆசார்யர் மணவாள மாமுனிகள் என்று சொல்லியிருக்கிறீர்கள் - பூர்வாசார்யர்களில் கடைசி அவர் என்று சொல்லலாம் - ஆசார்ய மணிமாலையில் பூர்வாசார்யர்கள் மட்டுமே தானே காட்டப்படுகிறார்கள். மற்றபடி ஆசார்ய புருஷர்கள் ஜீயர்களாகவும், ஆண்டவன்களாகவும், தேசிகன்களாகவும், சிம்ஹாசனாதிபதிகளாகவும், அழகிய சிங்கர்களாகவும் இன்றைக்கும் இருக்கிறார்களே. 'அஸ்மத் ஆசார்ய பர்யந்தம்' என்று சொல்லித் தானே ஆசார்ய பரம்பரை வணங்கப்படுகின்றது.

குமரன் (Kumaran) said...

மணவாள மாமுனிகளின் 'உண்டோ வைகாசி விசாகத்துக்கு ஒப்பொரு நாள்' பாட்டைப் படிக்கும் போது 'இன்றோ திருவாடிப்பூரம்' என்று கோதை நாச்சியாரை அவர் பாடிய பாடலும் நினைவிற்கு வருகின்றது.

குமரன் (Kumaran) said...

ஆமாம் இராகவ். அப்படித் தான் இருக்க வேண்டும். இப்போதும் நாலாயிரப் பிரபந்தங்களில் இராமானுஜ நூற்றந்தாதிக்கு முன்னர் தான் திருவாய்மொழி இருக்கின்றது என்று நினைக்கிறேன். சரி தானா?

குமரன் (Kumaran) said...

பராங்குச நாயகியின் படத்தை இட்டிருக்கிறேனே. நீங்கள் இருவருமே கவனிக்கவில்லையா? :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//குமரன் (Kumaran) said...
பராங்குச நாயகியின் படத்தை இட்டிருக்கிறேனே. நீங்கள் இருவருமே கவனிக்கவில்லையா? :-)//

பாத்தாச்சே! அதைப் பாத்துட்டு தான்...
//ஆன்மீகத் தமிழுக்கு முதல் தாய் ஆன,
அம்மா...நம்மாழ்வார் திருவடிகளே சரணம்!// -ன்னும் சொன்னேன்!

நீங்கள் இருவருமே கவனிக்கவில்லையா? :))

குமரன் (Kumaran) said...

ஓ. அப்படியா? சரி சரி.

பாட்டுக்குத் தான் பொருள் சொன்னீங்கன்னு நினைச்சேன்.

இங்கே பராங்குச நாயகியின் படம் இருக்கு. அது முதல் தாயின் படம்.

இதத் தாய்க்கும் அப்படி பெண் உருவத்தில் அணிமணிகள் பூட்டிய படம் இருக்கிறதா? இருந்தால் சொல்லுங்கள். :-)

Anonymous said...

அருமையான பதிவு. இவ்வளவு நாட்கள் படிக்கமால் இருந்துவிட்டேன். நாலூரானை மன்னித்தது போல, கூரேசர் தான் என்னை மன்னிக்க வேண்டும் இவ்வளவு நாட்கள் இந்தப் பதிவினைப் படிக்காமல் இருந்ததற்காக

குமரன் (Kumaran) said...

பரவஸ்து சுந்தர் அண்ணா. நாலூராரோடு உங்களை ஒப்பிட்டுக் கொள்ள நீங்கள் என்ன கிருமிகண்டனுடனா சேர்ந்து இருக்கிறீர்கள்? :-)

இதற்கு முந்தைய இடுகை (ஜனவரியில் இட்டது) 'கூரத்தாழ்வானின் குரு பரம்பரை - 1' - அதனையும் படித்துப் பாருங்கள் அண்ணா. ஏதேனும் தவறிருந்தால் சொல்லுங்கள்.

உங்களிடமிருந்து ஒரு உதவி தேவை. உங்கள் மின்னஞ்சல் முகவரியை இப்போது தான் இரவிசங்கர் அனுப்பினார். மின்னஞ்சல் அனுப்புகிறேன்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இதத் தாய்க்கும் அப்படி பெண் உருவத்தில் அணிமணிகள் பூட்டிய படம் இருக்கிறதா? இருந்தால் சொல்லுங்கள். :-)//

இதத் தாய் லட்சுமணரு! அவருக்கு பொசுக் பொசுக்-ன்னு கோவம் வரும்! ஆனாலும் ரொம்ப கருணை மனசு!

நாச்சியார் கோலம் உடையவருக்கு இல்லை! ஆனால் எம்பெருமான் கோலம் (அதே போல் அலங்காரம்) உடையவர், தேசிகர் இருவருக்குமே உண்டு!

குமரன் (Kumaran) said...

உடையவர், தேசிகர் எம்பெருமான் திருக்கோலத்தில் இருக்கும் படங்கள் உங்களிடம் இருக்கிறதா இரவி?