சில மாதங்களுக்கு முன்னர் எழுதிய 'புல்லாகிப் பூண்டாகி' தொடர்கதையைப் படித்துவிட்டு நண்பர்
இராதாமோகன் எழுதியிருக்கும் விமரிசனம் இங்கே:
***
குமரன்,
கதையைப் படிச்சோமா, ரசிச்சோமா, அடுத்தக் கதைக்கு போனோமான்னு இருக்கற
பேர்விழியிடம் விமர்சனம் எழுதச் சொன்னால்...நான் என்ன எழுதுவது என்று
புரிபடாமல் முன்பே பிறர் கொடுத்துள்ள விமர்சனங்களை படித்துப் பார்த்தேன்.
புதிதாக சொல்ல இனி என்ன இருக்க போகிறது என்று தெரியவில்லை. இருந்தாலும்
என் கிரிதாரியின் துணையுடன் முயற்சி செய்கிறேன். :)
முதலாவதாக, கதைக் கரு, பின்னர் எழுத்து நடை, பின்னர் கதையில்
ஆங்காங்கே தென்படும் தத்துவங்கள் என்ற வரிசையில் எனது கருத்துகளை தெரிவிக்கிறேன்.
**********
கதைக் கருவைப் பற்றி சொல்ல வேண்டுமெனில், "கண்ணன் காலடி பட்டு கல் உயிர்
பெற்றது; பிறவிச் சுழலில் அகப்பட்டது" என்பது ஒரு சுவாரஸ்யமான கற்பனை.
பிறவிச் சங்கிலியை அறுக்கும் திருவடி பிறவியைத் தந்தது... இறைவனின் லீலா
வினோதங்களில் எது தான் சாத்தியமில்லை என்ற நோக்கில் இந்தப் புதிய
சிந்தனை ரசிக்கும்படி உள்ளது. புதிது என்றாலும் யாரையும் புண்படுத்தும்
அபாயம் இல்லாத சிந்தனை என்றே நினைக்கிறேன். தொடரின் முடிவில் எனக்கு
புதுமைப் பித்தனின் கதை ஒன்று நினைவிற்கு வந்தது. "சாப விமோசனம்" என்ற
அந்தக் கதையில், இலங்கை யுத்தம் எல்லாம் முடிந்து சீதா-ராமர் அயோத்தி
நகர் திரும்பும் வழியில், கௌதம முனிவரின் ஆசிரமத்திற்கு வருகை புரிவர்.
அங்கே அகலிகை சீதையுடன் உரையாடுவதாக ஒரு காட்சி வரும்.
சீதையை ராமன் அக்னிப் பிரவேசம் செய்யச் சொன்னான் என்பதை அகலிகையால்
தாங்கவே முடியாது. மன அதிர்ச்சியில் அகலிகை மீண்டும் கல்லாகச் சமைந்தாள்
என்று வரும். இக்கதை அந்த நாட்களில் நிறைய சர்ச்சையை எழுப்பியதாக
சொல்வர்.
(அந்தக் கல் தான் மீண்டும் இங்கு கண்ணன் காலடிப்பட்டு புனர்ஜென்மம்
எடுத்ததோ என்னவோ. :))
கதையின் ஆரம்பத்தில் எல்லா சராசரி மனிதர்களையும் போல அற்ப விஷயங்களுக்கு
பொறாமைப் படுதல், டம்பம் அடித்துக் கொள்ள விரும்புதல் போன்ற நல்ல
குணங்களுடன் கதாநாயகன் கந்தன் அறிமுகமாகிறான். அதே கந்தன் முந்தைய
பிறவிகளில் இறைவன் ஒருவனையே நினைத்துக் கொண்டிருக்கும் நரசிம்மதாசனாக
இருந்தான் என்று பின்னர் தெரிய வருகிறது. இதைப் படிக்கும் பொழுது, இன்றைய
சராசரிகள் அனைவரும் நமது தெய்வீகத் தன்மையை மறந்து விட்ட கந்தனை போலத்
தான் என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கிறது. "நீ தெய்வீகமானவன் !" என்ற
விவேகானந்தரின் கூற்றை உங்கள் கதை நினைவூட்டுகிறது.
(நீங்க உடனே உங்களை விவேகானந்தராகக் கற்பனை செய்து கொள்ள வேண்டாம். :))
**********
அடுத்ததாக எழுத்து நடை பற்றி...சம்பாஷணை மூலம் கருத்துகளைத் தெரிவித்தல்,
மூன்றாம் நபராக இருந்து பாத்திரங்களை அறிமுகம் செய்வது, பாத்திரங்களின்
நினைவுகள் வாயிலாக பாத்திரத்தினுள் வாசகனை நுழைப்பது போன்ற கதை எழுதும்
யுக்திகள் எல்லாம் சிறப்பாகவே தென்படுவதால் இது உங்களது முதல் படைப்பு
என்பதை நம்பக் கடினமாக உள்ளது.
எல்லா பின்னூட்டங்களையும் படித்துப் பார்த்த பொழுது, தொடரின் ஆரம்பம்
மட்டும் சிலருக்கு ஒரு தொய்வினை ஏற்படுத்தி இருப்பதாக தெரிகிறது.
உங்களுக்கு உரையாடல் மூலமாக கதை சொல்வது என்பது அருமையாக வருகிறது. இதனை
நீங்கள் ஆரம்ப அத்தியாயங்களில் இன்னும் நன்றாக பயன்படுத்தி இருக்கலாம்
என்று நினைக்கிறேன். திருவண்ணாமலை சம்பந்தமாக நிறைய உழைப்புடன், நிறையவே
பொறுமையுடன் நீங்கள் சொல்லிய கதைப் பாங்கில் ஆங்காங்கே வசனங்கள்
இருந்தாலும், அவை தொடர்ச்சியாக, பெரிய பெரிய பத்திகளில் வந்தது ஒரு
கட்டுரை படிக்கும் உணர்வினை ஏற்படுத்தி இருக்கலாம்.
அன்னமாசார்யர் கீர்த்தனை, முகுந்தமாலா ஸ்லோகம், திருவெம்பாவை
பாடல்கள்...என்று ஆங்காங்கே மஹான்களின் பனுவல்களை தூவியிருந்தது அருமை.
ஒரு குறுந்தொடர் கதையில் இது போல படித்தது இதுவே முதல் முறை.
இந்த நடை கல்கியின் நடையை நினைவூட்டியது. (பொன்னியின் செல்வனில்,
பதிகங்களையும் பாசுரங்களையும் கதாப் பாத்திரங்கள் வாயிலாக கதையினூடே
அழகாக கோர்த்திருப்பார்.)
பின்னூட்டங்களைப் படித்தபோது, "பஞ்சவர்க்கு தூது நடந்தானை ஏத்தாத நாவென்ன
நாவே என்ற வரிகள் வரும் போது கந்தனை உறக்கம் தழுவியது." என்று முடித்தப்
பின்னர், அடுத்த அத்தியாயத்தில் பாண்டவ தூது ஒரு கனவு என்பதை வாசகர்கள்
யூகிக்க முடியாமல் போனது அதிசயமாக உள்ளது.
(இங்கே அதிசயம் சம்பந்தமாக ஒரு கேள்வி. நீங்கள் உங்கள் எழுத்துகளில்
ஆச்சர்யக் குறியை(!) எங்கும் பயன்படுத்துவதில்லை என்று விதி
வைத்திருக்கிறீர்களா?! :)) "இனியும் இங்கிருக்க எனக்கு விருப்பமில்லை.
இறைவா. என் வேண்டுதலுக்குச் செவி சாய்ப்பாய்." என்று அடுத்த
அத்தியாயத்தில் முடித்து, அதற்குப் பின்னர் மரமாகப் பிறவி எடுத்தத்
தொடர்ச்சியை, புத்தக வடிவில் இருந்தால் எளிதாக யூகித்திருப்பார்கள் என
நினைக்கிறேன்.
என்றாலும் உங்கள் எழுத்து நடை ஆங்காங்கே சில குழப்பங்களையும்
ஏற்படுத்தியது என்பதையும் சொல்லிவிடுகிறேன். உதாரணமாக, நரசிம்மதாசனின்
அறிமுகம் முடிந்து, அடுத்தப் பத்தியில், "இவன் பிறந்து ஐந்து
வருடங்களுக்குப் பின்னர் நவத்வீபத்தில் ஒரு பெரும் ஜோதி தோன்றியது."
என்று படித்தபோது, இன்னமும் நரசிம்மதாசனைப் பற்றியே சொல்கிறீர்கள் என்று
தான் நினைத்திருந்தேன். இடையில் வந்தப் படம் "இது தான் நரசிம்மதாசனின்
படம் போல" என்று என்னை நினைக்கத் தூண்டியது. அடுத்த வரியைப் படித்தபோது
சுதாரித்துக் கொண்டேன். :)
படங்களைப் பற்றி எல்லோரும் சொல்லி விட்டனர். கண்ணன் துரியோதனன்
மாளிகைக்குச் செல்ல மறுத்து, விதுரர் வீட்டிற்குச் சென்றான் என்ற
இடத்தில், பக்தியை உயர்த்தும் தராசு படம், மாதுர்ய பக்தியே இருக்கும்
எல்லா பக்தி முறைகளிலும் மிக மிகச் சிறந்தது என்று சொல்லுமிடத்து
ராதா-கிருஷ்ணன் ஊஞ்சலாடும் படம், ஒன்பது கலவைகளுடன் போகர் படம் என்று
நிறைய இடங்களில் படங்களின் தேர்வுகள் அருமை.
**********
அடுத்ததாக தத்துவங்கள்..."மாதுர்ய பக்தியே இருக்கும் எல்லா பக்தி
முறைகளிலும் மிக மிகச் சிறந்தது" என்பதை படித்தபோது இவ்விடத்தில் இங்கு
சைதன்யருக்கு பதிலாக ஒரு பெரியாழ்வார் அல்லது ஒரு அப்பர் பெருமான்
இருந்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணம் தோன்றியது. :)
பின்னர், அடுத்த அத்தியாயத்தில், ஜகன்மோகனுக்கு பஞ்ச கோசங்கள் பற்றிய
உணர்வு ஏற்பட்டது என்று மட்டுமே சொல்லி, அதற்கு அப்பால் உள்ளப் பொருளைப்
பற்றிய உணர்வு ஏற்பட்டதா இல்லையா என்பதைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே
என்று எண்ணினேன். பின்னர் ஜகன்மோகன்,"இன்று இராமகிருஷ்ணரைப் பார்த்த
பின்னால் நான் எதையோ இழந்தது போல் உணர்கிறேன்." என்று படித்தபோது அதன்
காரணம் புரிந்தது. (இவ்விடத்தில், நிர்விகல்ப சமாதி அனுபவம் பெற்றவரும்
கூட அதனை நழுவ விடாமல் சஹஜ சமாதியில் நிலைக்க முயற்சிக்க வேண்டும் என்ற
ரமணர் வாக்கு நினைவிற்கு வந்தது. அது தொடர்பாக எல்லாம் மேலும் யோசியாமல்
கதையினை தொடர்ந்து படித்து முடித்தேன்.)
"அனுபவங்களின் வாசனைகள் இரண்டு விதமாக நீங்கும். ஒன்று அந்த அனுபவத்தை
முழுமையாக அனுபவித்துவிட தானாக அந்த வாசனையும் அதோடு சேர்ந்து வரும்
ஆவலும் நீங்கும்." என்பதை படித்தபோது, "ஆசை அனுபவித்தெல்லாம் தீருமா?"
என்ற எண்ணம் எழுந்ததையும், அதனைத் தொடர்ந்து, பாகவதத்தில் யயாதியின்
சரித்திரம், கீதை வாக்கியங்கள் என்று நிறைய எண்ணங்கள் எழுந்ததையும்
தவிர்க்க முடியவில்லை. "ஆசையை அனுபவித்து ஆவல் நீங்குவது என்பது எரிகிற
அக்னியை அணைக்க அதில் நெய்யை விடுவது போல" என்றபடியெல்லாம் எங்கோ படித்த
நினைவு....
அந்த வரியைத் தொடர்ந்து, "மற்றொன்று அந்த அனுபவத்தைத் தரும் பொருட்கள்
நம்மை விட்டு வலுவாக நீக்கப்பட்டு அதனால் அந்த அனுபவத்தைத் தொடர்ந்து
பெறும் வாய்ப்பு இல்லாமல் போய் அந்த வாசனையும் ஆவலும் நீங்கும்."
என்பதையும் படித்தப் பொழுது மேலும் பல எண்ணங்கள் எழுந்தன...
நன்றாகக் கனிந்த பழம் தானே விடுபட்டு கீழே விழும் என்று பெரியோர்
சொல்கிறார்கள். இரண்டு வழிகளுமே "விட்டுவிடுதல்" என்ற ஒரு வழியில்
சேர்வது போன்ற ப்ரமை ஏற்படுகிறது. :)
"கள்ளம் கபடம் இல்லாத இந்த மக்களைப் பார்க்கும் போதெல்லாம் என் மனம்
குதூகலிக்கிறது." , "அடியார் முன்னாடி நின்னா மனசு தன்னால சாந்தமாகும்."
போன்ற வசனங்கள் அருமை.
இரண்டாவதைப் படித்தபோது, "There are two signs of a person who has
attained spiritual knowledge. First, he has no pride; second, he
develops a serene attitude." என்ற ராமகிருஷ்ண பரமஹம்சரின் மொழி
நினைவிற்கு வந்தது.
இது போன்ற நிறைய வசனங்கள்; கந்தன் மூலமாக நாத்திக வசனங்களும் ரசிக்கும்படி இருந்தன.
**********
கடைசியாக ஒரு (அடாவடித்தனமான) இலவச விமர்சனம்:
முதல் அத்தியாயம் தொடங்கி கடைசி அத்தியாயம் வரை கண்ணன் வாசம் வீசுகிறது.:)
முதலில் கேசவனாக கண்ணன் உள்ளே நுழைகிறான். நான் சொல்லலை குமரன்.
"கேசவன் மட்டும் ஒவ்வொரு பிறவியிலயும் உன்னோடவே வர்றவன்"னு தாத்தா
சொல்கிற இடத்தில் ஒரு படம் போட்டு உள்ளீர்களே...அது சொல்கிறது. :)
கடைசியில் கல்யாணப் பத்திரிக்கையில் கண்ணன். :)
எடுக்கின்ற பிறவிகள் எல்லாம் கண்ணனுடன் தொடர்புடையதாக இருக்கிறது.
குளிர்ச்சிக்கே பெயர் பெற்ற வேப்ப மரம், அல்லது ஒரு மாமரம், அல்லது ஒரு
பெரிய ஆலமரம் என்றெல்லாம் இல்லாமல் கண்ணன் கடம்பேறி காளிங்க மடுவில்
குதித்தான் என்பதனால் கடம்ப மரமாக பிறவி ஏற்பட்டதோ? :)
பறவை என்றால் ஒரு குயில், முருகனின் ஒரு மயில், இல்லை மீனாக்ஷி கையில்
உள்ள ஒரு பச்சைக் கிளி என்றெல்லாம் இல்லாமல், அது எப்படி கருடனாக ஒரு
பிறவி? (ஒ ! கண்ணன் பாரிஜாத மரத்தை துவாரகாவிற்கு கொண்டு வர கருடன்
மீதேறி தானே இந்தரலோகம் சென்றான் !! :))
அட! இதெல்லாம் போகட்டும். ஒன்பது வகை பக்தி பற்றி பாகவதம் சொல்கிறது
என்று சொல்லி, அடைப்புக் குறிக்குள் கண்ணனை அழகாக நுழைத்து விட்டீர்கள்.
:) பொதுவாக இறைவன், பகவான், பரம்பொருள் என்று சொல்லாமல்...எப்படி கண்ணன்
அங்கே வந்தான் என்றால்...சட்டியிலே இருக்கறது தானே அகப்பையில் வரும். :))
**********
விமர்சனம் முற்றும். ராதே கிருஷ்ணா !!
~
ராதா