உலகத்தில் எதுவுமே முழுக்க முழுக்க நல்லதாகவோ முழுக்க முழுக்கக் கெட்டதாகவோ இருப்பதாகத் தெரியவில்லை. இறை நம்பிக்கையாளர்கள் இறைவன் தான் எக்குறையும் அற்றோன் என்ற நம்பிக்கை கொண்டுள்ளார்கள். அந்த இறைசக்தி என்பதைத் தவிர்த்துப் பார்த்தால் எதுவுமே எவருமே நல்லதும் கெட்டதும் கலந்த கலவையாகத் தான் இருக்கிறது/இருக்கிறார்கள்.
நிறை குறை இரண்டும் இருக்கும் இடத்தில் குறைகளை மட்டுமே பெரிதுபடுத்திப் பேசி வருவது எல்லோருக்கும் இயற்கையாக இருக்கிறது. நிறைகளைப் பேசினால் சுவை குறைந்து போரடிக்கிறது. குறைகளைப் பேசினால்? மிகச் சுவையாக இருக்கிறது. சொற்போர்கள் நடப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது. இந்தச் சுவைக்காகவும் சொற்போர்களுக்காகவும் குறைகளே பெரிதுபடுத்திக் காட்டப்படும் போது நிறைகளைப் பற்றிய பேச்சுக்களும் வரவேண்டும்; வந்தால் தான் எல்லோருக்கும் நல்லது.
நாம் எல்லோரும் குறை கண்டுபிடித்தே பேர் வாங்கும் புலவர்களாகவும் அனைத்தும் அறிந்ததைப் போல் பேசிவரும் அரைகுறை அறிவு வலையுலக 'ஹாய் மதன்களாகவும்' மாறி வருகிறோம். இந்த நேரத்தில் நான் சைவன்; நான் வைணவன் என்று சொல்லிக் கொள்ளும் நம்பிக்கையாளர்களாவது நாயன்மார்கள் பெருமாளைப் பற்றிப் பாடியிருப்பதையும் ஆழ்வார்கள் சிவபெருமானைப் பற்றிப் பாடியிருப்பதையும் அறிய வேண்டும்; அறிந்து சொல்ல வேண்டும். வேற்றுமையில் ஒற்றுமை காண வேண்டிய காலம் இது. இல்லை என்றால் 'ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்' என்றாற் போல் ஆகிவிடும்.
***
அரன் நாரணன் நாமம் ஆன்விடை புள் ஊர்தி
உரை நூல் மறை உறையும் கோயில் வரை நீர்
கருமம் அழிப்பு அளிப்பு கையது வேல் நேமி
உருவம் எரி கார் மேனி ஒன்று.
அரன் என்பதும் நாரணன் என்பதும் அவர்கள் பெயர்கள். ஆவின் விடையும் (எருதும்) பறவையும் அவர்களின் ஊர்தி. அவர்கள் சொன்னது ஆகம நூலும் மறை நூலும். அவர்கள் உறையும் கோயில் கயிலை மலையும் பாற்கடலும். அவர்களின் தொழில் அழித்தலும் காத்தலும் (அளிப்பு). அவர்கள் கையில் இருப்பது வேலும் சக்கரமும். அவர்களின் உருவம் தீ நிறமும் முகில் நிறமும். ஆனால் மேனியோ ஒன்று.
இங்கே வைணவத்தின் முதலாழ்வார்களின் ஒருவரான பொய்கையாழ்வார் மிக மிகத் தெளிவாக இருவரின் மேனியும் ஒன்றே; இருவரும் ஒன்றே என்று கூறிவிட்டார்.
***
ஒருபால் உலகளந்த மாலவனாம் மற்றை
ஒருபால் உமையவளாம் என்றால் இருபாலும்
நின்னுருவம் ஆக நிறந்தெரிய மாட்டோமால்
நின்னுருவமோ மின்னுருவோ நேர்ந்து
ஒரு பக்கம் உலகளந்த மாலவன் உருவம்; இன்னொரு பக்கம் உமையவளின் உருவம். இப்படி இருந்தால் இருபக்கத்திலும் உன்னுருவம் எது என்று நிறத்தால் அறிய முடியாத படி இருக்கிறதோ? இல்லை. உன் உருவம் மின்னலை நிகர்த்து இருப்பதால் நொடியில் தோன்றி மறைகிறது போலும்.
இங்கே உலகளந்த மாலவனையும் உமையவளையும் அரனின் திருவுருவத்தில் பிரிக்க முடியாத அளவிற்குக் காண்கிறார் சிவபெருமானால் 'இந்தக் காரைக்கால் பேயார் என் தாயார்' என்று சொல்லப்பட்ட காரைக்கால் அம்மையார்.
***
தாழ்சடையும் நீள்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்
சூழ் அரவும் பொன் நாணும் தோன்றுமால் - சூழும்
திரண்டு அருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு
இரண்டு உருவும் ஒன்றாய் இசைந்து
சூழ்ந்து திரண்டு அருவிகள் பாயும் திருமலை மேல் என் தந்தையான வேங்கடவனுக்கு சிவன், பெருமாள் என்ற இரண்டு உருவங்களும் ஒன்றாக அமைந்திருக்கிறது. தாழ்ந்து நிற்கும் சடைமுடியும் தெரிகிறது; நீண்டு உயர்ந்த திருமுடியும் (கிரீடமும்) தெரிகிறது. கூர்மையான மழுவாயுதமும் சக்கரமும் தெரிகிறது. கழுத்தைக் கையைச் சூழும் பாம்புகளும் தெரிகின்றன; பொன்னால் செய்த அணிகளும் தெரிகின்றன.
சைவத்தின் பேயார் சொன்னதையே இங்கே வைணவத்தின் பேயாராம் பேயாழ்வாரும் சொல்லியிருக்கிறார்.
***
இடம் மால் வலம் தான் இடப்பால் துழாய் வலப்பால் ஒண்கொன்றை
வடமாலிடம் துகில் தோல் வலம் ஆழி இடம் வலம் மான்
இடமால் கரிதால் வலம் சேது இவனுக்கெழில் நலம் சேர்
குடமால் இடம் வலம் கொக்கரையாம் எங்கள் கூத்தனுக்கு
இடப்பக்கத்தில் திருமால்; வலப்பக்கம் தானாகிய சிவபெருமான். இடப்பக்கம் திருத்துழாயாம் துளசி; வலப்பக்கம் அழகிய கொன்றைப்பூ. இடப்பக்கத் திருமால் அணிவது மெல்லிய பட்டாடை (துகில்); வலப்பக்கச் சிவபெருமான் அணிவது தோலாடை. இடப்பக்கம் திருவாழி என்னும் சக்கரம்; வலப்பக்கம் மான். இடப்பக்கம் கரிய நிறம்; வலப்பக்கம் அழகு தரும் சிவந்த நிறம். நலம் சேர்க்கும் குடத்தை எடுத்துக் கூத்தாடும் குடக்கூத்தாடி இடப்பக்கம்; கொக்கரையென்னும் தாளமும் உடுக்கையும் கொண்டு கூத்தாடும் கூத்தன் வலப்பக்கம்.
தம்பிரான் தோழராம் சுந்தரமூர்த்தி நாயனாரின் தோழர் சேரமான் பெருமாள் சொல்வது இது.
***
வைணவத்தின் குலமுதல்வனாகப் போற்றப்படும் மாறன் சடகோபனாகிய நம்மாழ்வார் பாடிய திருவாய்மொழியில் மீண்டும் மீண்டும் முக்கண்ணனைப் பாடும் பாட்டுகள் வருகின்றன. அவற்றையும் மற்ற அருளாளர்கள் பாடியதையும் அடுத்த இடுகையில் காண்போம்.
***
பாசுர மடல் திரு நா.கண்ணன் அவர்களுக்கு பதிகங்களையும் பாசுரங்களையும் பட்டியல் இட்டதற்கு நன்றிகள்
Wednesday, October 31, 2007
Thursday, October 25, 2007
உதயசூரியன் முருகனே!!!
கடலிலிருந்து கதிரவன் தோன்றுவதைக் கண்டிருக்கிறீர்களா? கன்னியாகுமரிக் கடற்கரையில் ஒரு முறை நான் கண்டிருக்கிறேன். கரு நிறக் கடலின் நடுவில் மெதுவாக சிவந்த பந்து தோன்றுவதும் அது மெல்ல மெல்ல மேல் எழுவதும் அதே நேரத்தில் மெதுவாக கடலின் நிறம் நீலமாக மாறுவதும் பகலவன் முழுவதும் தோன்றி ஆனால் இன்னும் கடலை நுனி தொட்டுக் கொண்டு இருக்கும் போது அலைகளில் தெரியும் நீண்ட சிவப்புக் கோடும் ஆகா நேரே கண்டால் தான் அதன் அழகு தெரியும்; புரியும்.
உலகத்தவர் யாராயினும் இந்தக் காட்சியைக் கண்டால் மனம் உவப்பர் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை. இந்தக் காலத்தில் மட்டும் இன்றி எந்தக் காலத்திலும் அப்படித் தான். இல்லையா? திருமுருகாற்றுப்படை எழுதிய காலத்தும் அப்படித் தான் இருந்திருக்கும். அதனால் தான் முருகனைப் பற்றிச் சொல்லத் தொடங்கியவுடன் சிவந்த சூரியன் கடலில் எழுவதும் அதனைக் கண்டு உலகோர் மகிழ்வதும் மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரனாருக்குத் தோன்றியிருக்கிறது. முதல் இரண்டு வரிகளில் இந்த அருமையான காட்சியை கண் முன்னே நிறுத்துகிறார் நக்கீரனார்.
உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு
பலர் புகழ் ஞாயிறு கடல் கண்டாஅங்கு...
உலகத்தவர் மகிழ உலகத்தின் வலப்பக்கத்தில் தோன்றி (வலிவுடன் தோன்றி) உலகத்தினைச் சுற்றும், பலரும் போற்றும், ஞாயிறு கடலில் தோன்றியதைப் போல...
இது தான் நக்கீரனாருக்கு முதலில் தோன்றிய உவமை. எத்தனை அழகான உவமை பாருங்கள்.
கருநிற யானையாம் பிணிமுகத்தின் மேல் செவ்வேள் குமரன் அமர்ந்து வருவது கருநிறக்கடலின் மேல் செந்நிறக் கதிரவன் தோன்றுவதைப் போல் இருக்கிறது என்கிறது இந்த உவமை.
பிற்கால வழக்கின் படி நீல நிற மயிலின் மேல் சேயோன் முருகன் அமர்ந்து வருவது நீலத்திரைக்கடலின் மேல் செங்கதிரவன் தோன்றுவதைப் போல் இருக்கிறது என்றும் சொல்லலாம்.
அகரத்திலும் உகரத்திலும் கவிதையை, காப்பியத்தைத் தொடங்குவது மரபு. 'அகர முதல' என்று தொடங்கினார் பொய்யாமொழிப் புலவர். 'உயர்வற உயர் நலம்' என்று திருவாய்மொழியைத் தொடங்கினார் நம்மாழ்வார் மாறன் சடகோபன். 'உலகெலாம்' என்று திருத்தொண்டர் புராணமெனும் பெரிய புராணத்தை தொடங்கினார் சேக்கிழார் பெருமான். 'உலகம் யாவையும்' என்று இராமாவதாரமெனும் கம்பராமாயணத்தைத் தொடங்கினார் கவிச்சக்ரவர்த்தி கம்பர். இந்த மரபு பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து வந்திருக்கிறது என்பதற்கு சாட்சியாக திருமுருகாற்றுப்படையும் 'உலகம்' என்று தொடங்குகிறது.
வலன் என்பதற்கு வலம் என்றும் வலிமை என்றும் இரண்டு பொருள் சொல்லப்படுகிறது. வலம் என்று கொண்டால் கதிரவன் உலகத்தை வலம் வருகிறான் என்ற கருத்து தோன்றுகிறது. உலகம் கதிரவனை வலம் வருகிறது என்பதை நாம் இப்போது அறிவோம். அந்தக் காலத்தில் கதிரவன் உலகத்தை வலம் வந்தான் என்றே எண்ணினர். அதனைச் சொல்கிறார் போலும். கதிரவன் உலகை மட்டுமில்லை மேரு மலையை/இமய மலையை/கயிலை மலையை வலம் வருகிறான் என்றதொரு கருத்தும் பழங்காலத்தில் இருந்தது. அதனையும் சொல்கிறார் போலும்.
வலிமை என்ற பொருளினைக் கொண்டால் ஞாயிற்றின் சிவப்பு நிறம் மட்டும் முருகனுக்கு உவமை என்று கொள்ளாமல் ஞாயிற்றின் வலிமையும் முருகனுக்கு உவமையாகச் சொல்லப்படுகின்றது என்னலாம். செயல் திறனிலும் முருகன் ஞாயிற்றைப் போன்றவன். உருவத்திலும் முருகன் ஞாயிற்றைப் போன்றவன்.
அதிகாலைச் சூரியன் குளிர்ந்து இருப்பான். அந்தக் குளிர்ச்சியும் இங்கே முருகனுக்கு உவமை ஆகின்றது போலும்.
பலர் புகழ் ஞாயிறு என்று சொல்லும் போது 'ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்' என்று சிலப்பதிகாரம் தொடங்குவது நினைவிற்கு வருகிறது. சங்க காலத்தில் ஞாயிறு பலர் போற்றும் வகையில் ஏற்றம் பெற்றிருந்தது என்பதை இந்த இரு இலக்கியங்களின் மூலமும் அறியலாம்.
இன்னொரு அழகும் இந்த இரு அடிகளில் காணலாம். சிறிதே தமிழ்ப்பயிற்சி கொண்டவரும் எந்த வித உரை உதவியும் இன்றி விளங்கிக் கொள்ளும் படி இந்த இரண்டு அடிகளும் இருக்கின்றன. உலகம், உவப்ப, வலன், திரிதரு, பலர், புகழ், ஞாயிறு, கடல், கண்டு என்று ஒவ்வொரு சொல்லும் இரண்டாயிரம் ஆண்டுகளாக எல்லோரும் புரிந்து கொள்ளும் படி அமைந்திருக்கின்றன பாருங்கள். உன் சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே என்று தான் பாடத் தோன்றுகிறது.
Labels:
இலக்கியத்தில் இறை,
திருமுருகாற்றுப்படை,
முருகன்
Saturday, October 20, 2007
திருமால், சிவன், முருகன் எனும் மூவரைப் போற்றும் திருமுருகாற்றுப்படை
முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகள் என்று சொல்லும் வழக்கம் திருமுருகாற்றுப்படையின் அடிப்படையிலேயே வந்தது என்பது பலருக்கும் தெரியும். பரிசு பெற்ற ஒரு புலவர் பரிசு தந்த புரவலரின் - வள்ளலின் பெருமைகளைக் கூறி, அந்த வள்ளலின் ஊருக்குச் செல்லும் வழியை இன்னொரு புலவருக்குச் சொல்லுதல் ஆற்றுப்படை எனப்படும். முருகப்பெருமானின் திருவருளைப் பெற்ற நக்கீரர் என்னும் தெய்வப்புலவர் திருமுருகனின் பெருமைகளைக் கூறி அவனின் ஊர்களான ஆறு வீடுகளைப் பற்றிப் பாடி மற்றவருக்குச் சொல்வது திருமுருகாற்றுப்படை. இந்த சங்க கால நூலில் திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய் என்னும் திருச்செந்தூர், திருவாவினன்குடி என்னும் பழனி, திருவேரகம், குன்றுதோறாடல், பழமுதிர்ச்சோலை என்னும் ஆறுபடை வீடுகள் சொல்லப்பட்டிருக்கின்றன. இதில் திருவேரகம் சுவாமிமலை என்றும் குன்றுதோறாடல் 'குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்' என்று சொல்வது போல் இவ்வைந்தும் போக இருக்கும் எல்லா முருகன் திருக்கோவில்களையும் குறிக்கும் என்றும் சொல்லுவார்கள்.
முருகப்பெருமானைப் பாட்டுடைத் தலைவனாகப் பாடும் இந்தத் திருமுருகாற்றுப்படையில் முப்பெரும் தெய்வங்களாக மூவர் போற்றப்படுகின்றனர்.
...வால் எயிற்று
அழலென உயிர்க்கும் அஞ்சுவரு கடுந்திறல்
பாம்பு படப் புடைக்கும் பல் வரிக் கொடுஞ்சிறைப்
புள்ளணி நீள் கொடிச் செல்வனும், வெள்ளேறு
வலைவயின் உயரிய பலர் புகழ் திணிதோள்
உமையமர்ந்து விளங்கும் இமையா முக்கண்
மூவெயில் முருக்கிய முரண்மிகு செல்வனும்,
நூற்றுப்பத்து அடுக்கிய நாட்டத்து நூறு பல்
வேள்வி முற்றிய வென்றடு கொற்றத்து
ஈரிரண்டு ஏந்திய மருப்பின் எழில் நடைத்
தாழ் பெருந்தடக்கை உயர்த்த யானை
எருத்தம் ஏறிய திருக்கிளர் செல்வனும்,
நாற்பெரும் தெய்வத்து நன்னகர் நிலைஇய
உலகம் காக்கும் ஒன்று புரி கொள்கைப்
பலர் புகழ் மூவரும் தலைவராக
...
ஒளிவீசும் நெற்றியுடன் தீயென மூச்சினை விடும் அஞ்சும் படி வரும் மிகுந்த வலிமை கொண்ட பாம்புகளும் அஞ்சும் படி அவற்றைத் தாக்கும் பல வரிகளுடன் கூடிய நீண்ட வலிய சிறகுகளைக் கொண்ட பறவையைக் (கருடனைக்) கொடியில் கொண்ட செல்வனும் (திருமாலும்), வெண்மையான எருதின் மேல் எல்லோரும் போற்றும் உமையம்மையோடு அமர்ந்து விளங்கும் இமைக்காத மூன்று கண்களையுடைய மூன்று கோட்டைகளை கொளுத்திய சினம் மிகுந்த செல்வனும் (சிவபெருமானும்), மலை போன்ற உடலையும் அழகான நடையும் நீண்ட தும்பிக்கையும் கொண்ட யானையின் மேல் அமர்ந்திருக்கும் பெருமையும் புகழும் உடைய செல்வனும் (திருமுருகனும்)...
நாஞ்சில் (கலப்பை) கொடியுடைய பலராமனும், புட்கொடியுடைய திருமாலும், எருதேறிய சிவபெருமானும், பிணிமுகம் ஏறிய முருகப்பெருமானும் உலகம் காக்கும் நாற்பெருந்தெய்வங்களாகத் திருமுருகாற்றுப்படையில் சொல்லப்படுகின்றனர் என்ற குறிப்பைக் கண்டு இணையத்தில் திருமுருகாற்றுப்படை நூலைப் பார்த்தேன். நான் தேடிய வரையில் பலராமனைப் பற்றிய பாடல் அடிகள் கிடைக்கவில்லை. சங்க நூலான திருமுருகாற்றுப்படையை உரையின் உதவியின்றி விளங்கிக் கொள்ள என்னால் இயலாததால் பலராமனைக் குறிக்கும் பாடல் அடிகள் என் கண்ணிற்குத் தென்படாமல் சென்றிருக்கலாம். உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்.
உசாத்துணை: மதுரைத் திட்டத்தினரின் திருமுருகாற்றுப்படை பக்கம்
Labels:
இலக்கியத்தில் இறை,
கண்ணன்,
முருகன்
Saturday, October 13, 2007
மாயோன் புகழ் பாடும் தொல்காப்பியம்
பழந்தமிழ் இலக்கியங்களில் தற்போது கிடைக்கும் இலக்கியங்களில் மிகவும் தொன்மையானது தொல்காப்பியம் என்று கருதப்படுகிறது. தற்போது கிடைக்கும் சங்க நூற்களின் காலம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வரை என்று கருதப்படும் போது தொல்காப்பியம் இதில் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்கலாம் என்ற கருத்து நிலைபெற்றிருக்கிறது. இந்த சங்க நூற்களின் காலத்தை இன்னும் முன்னால் கொண்டு சென்று கி.மு. ஆறாம் நூற்றாண்டில் தொடங்குகிறது இப்போது கிடைக்கும் நூற்களின் காலம் என்ற கருத்தும் இப்போது கேட்கத் தொடங்கியிருக்கிறது. தொல்காப்பியத்தின் காலத்தைப் பற்றிய கருத்துகளை விவரிப்பது இந்த இடுகையின் நோக்கமில்லை. இந்த நூலின் தொன்மையைச் சுட்டிக்காட்டுவதற்காக இந்த கருத்துகளை இங்கே தொட்டுச் செல்கிறேன்.
தொல்காப்பியம் எனும் இலக்கண நூலில் எல்லா இலக்கண விதிகளும் சூத்திர முறையில் கூறப்பட்டிருக்கின்றன. அகத்திணையியலில் ஐந்தாம் சூத்திரம் ஐவகை நிலங்களில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்ற நானிலங்களைப் பற்றிக் கூறும் போது அவற்றின் தெய்வங்களையும் குறிக்கிறது.
மாயோன் மேய காடு உறை உலகமும்
சேயோன் மேய மை வரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையான் சொல்லவும் படுமே
முல்லை என்பது காடுகள் நிறைந்த நிலம். அதில் மாயோன் உறைகிறான்.
குறிஞ்சி என்பது மலைகள் நிறைந்த நிலம். அதில் சேயோன் உறைகிறான்.
மருதம் என்பது நன்னீர் நிறைந்த நிலம். அதில் வேந்தன் உறைகிறான்.
நெய்தல் என்பது எங்கு நோக்கினும் மணல் நிறைந்து காணப்படும் நிலம். அதில் வருணன் உறைகிறான்.
இங்கே மாயோன் என்பவன் கண்ணன் என்றும், சேயோன் என்பவன் முருகன் என்றும், வேந்தன் என்பவன் இந்திரன் என்றும் பொருள் கூறுவார்கள். பிற்கால இலக்கியங்களில் எல்லாம் மாயவன் என்று கண்ணனே அறியப்படுவதால் கண்ணன் தான் இங்கே மாயோன் என்று சொல்லப்படுகிறான் என்ற பொருள் பொருந்தும். அப்படியே பிற்கால இலக்கியங்களில் குறிஞ்சித் தலைவனாக முருகனே அறியப்படுவதாலும் அவன் சிவனின் மகன் என்றும் கொற்றவை சிறுவன் என்றும் அறியப்படுவதாலும் சேயோன் என்பது முருகனே என்ற பொருளும் பொருந்தும். வேந்தன் என்றால் இந்திரன் தானா? இந்திரன் என்ற சொல்லும் வேந்தன் என்ற சொல்லும் அரசன் என்ற பொதுப் பொருளைக் கொண்டிருப்பதாலும் இந்திரன் மழைக்கு தலைவன் என்று வடமொழி இலக்கியங்களும் பிற்கால தமிழ் இலக்கியங்களும் கூறுவதாலும் நீர் நிறைந்த நிலத்திற்கு இந்திரன் தலைவன் என்பதும் பொருந்தும். வருணன் என்பவன் வடமொழி வேதம் சொல்லும் வருணன் தானா? இல்லை வேறு தெய்வமா? இந்த கேள்வியும் உண்டு. வடமொழி வேதம் சொல்லும் தேவனாம் வருணனும் கடலுக்கு அரசனாகத் தான் அறியப்படுகிறான். இங்கும் கடலும் கடல் சார்ந்த இடமும் என்று வகுக்கப்படும் நிலமாம் நெய்தலுக்கு உரியவனாக வருணன் அறியப்படுகிறான். இங்கே பிற்கால இலக்கியங்கள் என்று சொன்னது தொல்காப்பியத்திற்குப் பின்னால் எழுந்த இலக்கியங்கள். அவற்றில் சங்க இலக்கியங்களும் அடக்கம்.
இப்படிப் பொருள் சொல்வதை மறுப்பவர்களும் உண்டு.
***
புறத்திணையியலில் ஐந்தாம் சூத்திரத்தின் ஒரு பகுதியில் பூவை நிலை என்னும் துறையைப் பற்றி விளக்கும் போது மாயோன் மீண்டும் சொல்லப்படுகிறான்.
மாயோன் மேய மன்பெருஞ் சிறப்பின்
தாவா விழுப்புகழ் பூவை நிலையும்
மாயோனின் நிலைத்த பெருஞ்சிறப்பின் எல்லாவற்றையும் மிஞ்சும் பெரும்புகழைப் பாடுவதைப் போல் தலைவனின் புகழைப் பாடுவது பூவை நிலை. மாயோனின் சிறப்பையும் பெருமையையும் பாட்டுடைத் தலைவனுக்கு உவமையாகச் சொல்வதும் பூவை நிலை. சிறப்பான் ஒன்றையே உவமையாகக் கூறுவார்கள். இங்கே மாயோனின் சிறப்பையும் புகழையும் மிகச் சாதாரணமாகச் சொல்லிவிட்டுவிடாமல் மன்பெருஞ்சிறப்பு என்றும் தாவா விழுப்புகழ் என்றும் மிக மிக உயர்வாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இதிலிருந்து மாயோன் என்னும் தெய்வம் தமிழர்களின் மிகப் பெரும் தெய்வமாக இருந்திருக்கிறது என்பது விளங்கும்.
***
உசாத்துணை: மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டத்தாரின் தொல்காப்பிய வலைப்பக்கம்.

Friday, October 05, 2007
வள்ளலார் பிறந்த நாள்
இன்று அக்டோபர் 5 - வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய இராமலிங்க வள்ளலார் பெருமானின் பிறந்த நாள். உலகத்தவர் எல்லோரும் உய்ய வேண்டி சமரச சன்மார்க்கம் கண்டவர் அவர். பிறவா நிலையை எல்லோரும் பெற வேண்டி அருட்பெரும்சோதி மந்திரத்தை உபதேசித்த பெருமானார் அவர். உலகத்தவர் உய்ய ஒளியுடம்பு பெற்று எங்கும் கலந்து நிற்கின்றவர் அவர்.
எங்கெல்லாம் நல்லது நடக்கிறதோ அங்கெல்லாம் வள்ளலாரின் ஒளியுடம்பின் வீச்சு அதிகமாக இருக்கிறது என்பது வள்ளலார் அன்பர்களின் அனுபவம். பாண்டிச்சேரி அரவிந்த ஆசிரமத்தில் அன்னை, அரவிந்தர் இவர்களின் நிலையான இருப்பை ஒரு சொந்த அனுபவம் மூலம் உணர்ந்த அடியேன் வள்ளலார் அன்பர்களின் அனுபவத்தை உணர்வு பூர்வமாக ஏற்றுக் கொள்கிறேன்.
அடிகளாரின் பிறந்த நாளன்று 'உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்' என்று இறையை வேண்டி நிற்கிறேன்.
Tuesday, October 02, 2007
வலையுலகில் இரண்டு வருடங்கள்
ஆயிற்று இன்றோடு இரு வருடங்கள். கனவிலும் நனவிலும் அதிகமாக நினைத்தது பதிவுகள் பற்றித் தான். இந்த பிரிக்க முடியாத ஒட்டுதல் ஏன் ஏற்பட்டது என்றெல்லாம் பல முறை ஆராய்ந்து விட்டேன். மீண்டும் அவற்றைப் பேசி உங்களை அறுக்கப் போவதில்லை (என் பதிவுகள் எல்லாமே அப்படித்தானே என்கிறீர்களா? :-) அது சரி).
நண்பர் சிவபுராணம் சிவா இளையராஜாவின் திருவாசகம் குறுந்தகட்டை என்னிடம் விற்றபின் ஒரு முறை பேச்சோடு பேச்சாக 'இந்தப் பாட்டெல்லாம் புரியுதா?' என்று கேட்டேன். அவர் 'கொஞ்சம் கொஞ்சம் புரியுது குமரன்; ஆனா இசையில் தான் ஈடுபாடு அதிகம்' என்றார். 'நான் அர்த்தம் சொல்லவா?' என்றவுடன் 'சொல்லுங்க. சொல்லுங்க' என்றார். மின்னஞ்சலில் ஒவ்வொரு பாட்டாக எழுதி அனுப்பத் தொடங்கினேன். இரண்டு வாரங்களுக்குப் பின் 'வலைப்பதிவு' என்று ஒன்று இருக்கிறது; அதில் அவர் எழுதுகிறார் என்று அறிமுகப்படுத்தினார். அப்போது தான் வலைப்பதிவுகளை முதன்முறையாகப் பார்த்தேன். அவர் பதிவில் நான் எழுதித் தந்த திருவாசகப் பொருளினை இட்டார். பின்னர் நீங்களும் எழுதலாமே என்று அவர் கேட்டவுடன் என்ன எழுதுவது என்று சில நாட்கள் சிந்தித்துத் தொடங்கியது தான் 'அபிராமி அந்தாதி' பதிவு. அக்டோபர் மூன்றாம் தேதி 'முதல் வணக்கம்' சொல்லி அந்த பதிவினைத் தொடங்கினேன். அபிராமி பட்டரின் அழகுத் தமிழில் ஆழ்ந்து ஆழ்ந்து இரசித்ததைப் பிறரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று பல நாட்களாக இருந்த ஆவல். வீட்டம்மாவும் நண்பர்களும் அபிராமி அந்தாதி சொன்னார்கள்; ஆனால் பொருள் சொன்னால் கேட்கவில்லை. அதனால் எழுத வேண்டும் என்றதும் தொடங்கியது அபிராமி அந்தாதி. 100 பாடல்கள் இருக்கின்றன. வாரம் ஒன்று என்று எழுதியிருந்தாலும் இந்த இரு வருடங்களில் முடித்திருக்கலாம். ஆனால் இன்னும் எழுதிக் கொண்டிருக்கிறேன்.
இப்படியே ஒவ்வொரு பதிவிற்கும் நான் கதை சொல்லலாம். கேட்க உங்களுக்குப் பொறுமை இருக்கணுமே! :-)
எல்லா நண்பர்களின் நட்பிற்கும் வலைப்பதிவுகளின் மூலம் தரும் அறிவிற்கும் தெளிவிற்கும் மிக்க நன்றி.

Subscribe to:
Posts (Atom)