நம் நண்பர் இரவிசங்கர் கண்ணபிரான் திருவேங்கடவன் திருப்பள்ளியெழுச்சிக்குப் பொருள் சொல்லிக் கொண்டு வருகிறார். அண்மையில் அவர் இட்ட
பதிவில் அடியேன் சில பின்னூட்டங்களை இட்டேன். அப்போது தோன்றிய கருத்துகளை அப்படியே எழுத்தில் இட முயன்றதால் முற்றுப்புள்ளியே இல்லாமல் சில கருத்துகளைச் சொல்லியிருந்தேன். அவற்றை இன்னும் எளிமையாகச் சொன்னால் நன்றாக இருக்கும் என்று நண்பர்கள் சிலர் அறிவுறுத்தியதால் அங்கே சொன்னதை இன்னும் எளிமையாகவும் விளக்கமாகவும் சொல்ல அடியேன் முயல்கிறேன்.
ஸ்ரீ ஸ்வாமினி - திருமகள் நம்மையுடையவள்!இந்தப் பதிவு கொஞ்சம் வைணவ தத்துவங்களில் செல்லும். அதனால் கொஞ்சம் பொறுமையாகப் படிக்கும் படி நண்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன். தத்துவங்கள் என்பதால் எல்லோருக்கும் புரியும் படி சொல்வது எளிதாக இருக்காது என்று எண்ணுகிறேன். முடிந்த வரை எளிதாகத் தர முயல்கிறேன். அடியேன் சிறிய ஞானத்தன்.
முதலாளியின் மனைவியும் முதலாளி என்று ஏற்றுக் கொள்வது சில நேரங்களில் ஏற்புடையது. பல நேரங்களில் ஏற்றுக் கொள்ள முடியாதது. நாம் ஒரு வீட்டில் வேலைக்காரராக இருந்தால் அந்த வீட்டில் இருக்கும் எல்லோருமே நமக்கு முதலாளிகளாக இருக்கலாம். ஆனால் அலுவலகத்தில் மேலாண்மையாளராக இருக்கும் ஒருவரது மனைவியும் நம்மிடம் மேலாண்மையாளரைப் போல் நடந்து கொண்டால் நாம் ஏற்றுக் கொள்வோமா? சில மேலாளர்களின் மனைவியர் அப்படித் தான் எண்ணிக் கொள்கின்றனர் என்பது வேறு. ஆனால் நம் கண்ணோட்டத்தில் அது அபத்தமாகத் தோன்றும் இல்லையா? அதைவிடக் கொடுமை சில நேரங்களில் சில மேலாளர்களின் மனைவியர் தங்கள் கணவர்களின் கீழ் வேலை செய்பவர்களின் மனைவியர் தங்களுக்கு அடிமைகள் என்பது போல் நடந்து கொள்வது தான். :-) பலருக்கும் அந்த அனுபவம் இருக்கும் என்று எண்ணுகிறேன். நான் மேலாளர் ஆவதற்கு முன்னாலேயே என் வீட்டம்மாவிடம் அப்படி நடந்து கொள்ளக் கூடாது என்று சொல்லிவிட்டேன். என் நல்வினைப்பயன் என் வீட்டம்மாவும் அந்த மாதிரி எண்ணிக் கொள்பவர் இல்லை. அதனால் என் குழுவில் வேலை செய்பவர்கள் எல்லாம் வீட்டிலும் அலுவலகத்திலும் நண்பர்களாகவும் இருக்கிறார்கள்.
சரி. இதெல்லாம் ஏன் சொல்கிறேன் என்று கேட்கிறீர்களா? இதோ சொல்லிவிட்டேன். வடமொழியில் ஸ்வம் என்றால் சொத்து. ஸ்வாமி என்றால் சொத்தை உடையவன். ஸ்வாமினி என்றால் சொத்தை உடையவள். உயிருள்ளது, உயிரற்றது என்று இந்த உலகிலும் பேரண்டங்களிலும் இருக்கும் எல்லாமே ஸ்வம் என்பதற்குள் அடக்கம். அந்த சொத்துக்களை உடையவன் ஸ்வாமி. அந்த ஸ்வாமி யார் என்ற கேள்விக்கு வடமொழி வேதங்களும் தமிழ் வேதங்களும் மிகத் தெளிவாகச் சொல்லிவிடுகின்றன. எளிமையாக கோதை நாச்சியார் 'நம்மையுடையவன் நாராயணன்' என்றும் 'நாராயணனே நமக்கே பறை தருவான்' என்றும் சொல்லிவிடுகிறார். அதனால் பெருமாள் தான் நம்மைப் பெறும் ஆள்; அவரே எல்லாரையும் விட பெரும் ஆள் என்று மிகத் தெளிவாகச் சொல்லிவிடுகிறார்கள். யார் நம் ஸ்வாமி; நம்மையுடையவர் என்பது ஐயத்திற்கு இடமின்றி தெளிவாகிவிடுகிறது.
சரி. இப்போது சொல்லுங்கள். நம்மையுடையவன் நாராயணன். சரி. அவனது துணைவி - என்றும் அவனை விட்டு நீங்க மாட்டேன் என்று அவனது மார்பில் நிலையாக அமர்ந்தவள் - அவள் நம்மையுடையவளா இல்லையா? மேலாளரின் மனைவியும் நமக்கு மேலாளரா இல்லையா?
அவனைச் சேர்ந்தவர் எல்லாருமே நம்மையுடையவர்கள். 'அவன் அடியார் அடியார் அடியார் அடியார் அடியார் தமக்கு அடியேன்' என்று ஆழ்வார்கள் சொல்லும் போது அவனின் துணைவி நம்மையுடையவளாய் இருப்பதில் என்ன தடை? அப்படித்தானே தோன்றுகிறது. உண்மை தான்.
ஸ்வாமியின் தர்மபத்னி நமக்கு ஸ்வாமினி. திருமகள் திருமாலின் துணைவி என்ற முறையில் மட்டுமே நம்மையுடையவளா? எப்படி நாராயணன் அவனின் தனியுரிமையால் நம்மையுடையவனோ அப்படியே பெரிய பிராட்டியாரும் (திருமகளைப் பெரிய பிராட்டி என்பர்) தனது தனியுரிமையாலேயே நம்மையுடையவளா? இந்தக் கேள்விக்கு ஆசாரியர்கள் சொல்லும் பதில் 'ஆமாம்' என்பதே. இருவருமே நம்மையுடையவர்கள். இருவரும் இணைபிரியாதவர்கள். இருவரும் ஒருவருக்கொருவர் இணையானவர்கள். இருவரும் ஒருவருக்கொருவர் ஏற்றவர்கள் - திருமாலுக்கு ஏற்ற துணைவி திருமகள்; திருமகளுக்கு ஏற்ற துணைவன் திருமால்.
இருவரும் சேர்ந்தே நம்மையுடையவர்கள். திருமகளின்றித் திருமால் என்றுமே இல்லை. அதனால் அவனால் நம்மை அவனுக்கு மட்டுமே உரிமையானவராகக் கொள்ள முடியாது. இருவருக்கும் சொத்து நாம். இப்படி தன் தனியுரிமையாலும் நம்மை உடையவளாக இருப்பவள் மகாலக்ஷ்மி என்பதைச் சொல்லவே தனியாக ஸ்ரீ ஸ்வாமினி என்று சொல்லியிருக்கிறார்கள்.
அப்படி இருவருமே பரம்பொருள்; இருவருமே நம்மையுடையவர்கள் என்றால் இன்னொரு கேள்வி எழுகிறது. பரம்பொருள் ஒன்றே என்பது தான் வேதங்கள் சொல்வது. அதுவே அறிவிற்கும் ஏற்றது. பரம்பொருள் இருவராக இருப்பது சாத்தியமில்லை. 'ஏகம் சத். விப்ரா பஹுதா வதந்தி - உண்மை ஒன்றே. அறிஞர்கள் அதனைப் பலவாறாகப் (புகழ்ந்து) பேசுகிறார்கள்' என்றும் 'ஏகம் அத்விதீயம் - ஒன்று;(தனக்கு இணையாக) இரண்டாவது இல்லாதது' என்றும் வடமொழி வேதங்களும் 'தானோர் தனிவித்து' என்றும் 'ஒருவனே தேவன்' என்று தமிழ்மறைகளும் பேசுவதற்கு ஏற்ப இல்லையே இருவரும் பரம்பொருள் என்பது? இந்தக் கேள்விக்கு ஆசாரியர்கள் சொல்லும் பதில்: எப்படி மலரும் மணமும், சுடரும் ஒளியும் இணைபிரியாமல் இருக்கிறதோ அது போலவே இறைவனும் இறைவியும் இணைபிரியாமல் இருப்பதால் இருவரும் ஒருவரை விட்டு ஒருவர் இருப்பு என்பதே இல்லை; அதனால் இருவரும் ஒரே தத்துவமே. அதனால் ஒன்றே தேவன் என்பதற்கு இருவரும் பரம்பொருள் என்பது ஏற்புடையதே.
பிரணவம், திருமந்திரம், துவயமந்திரம் இவையும் இந்தப் பொருளையே சொல்கின்றன என்று இரவிசங்கரின் பதிவில் பின்னூட்டமாகச் சொல்லியிருந்தேன். அவற்றையும் விரித்தால் மிக விரிவாக இந்தப் பதிவு அமைந்துவிடும். அவற்றைப் பற்றி வேறோரிடத்தில் பேசலாம்.