அம்மாவை விடச் சிறந்த ஆசிரியர் யார் உண்டு? அன்று அந்தத் தாய் என்ன விதைக்கிறாளோ அது தானே நன்கு வேர்விட்டு பெரிய மரமாக (இந்த வார நட்சத்திரத்தைச் சொல்லலீங்க) வளர்கிறது. சின்ன வயதில் அம்மா கையைப் பிடித்துக் கொண்டு கோவில் கோவிலாகச் சென்று கந்தர் சஷ்டி கவசம் சொன்னது நினைவில் என்றும் நிற்கிறது. தமிழையும் பக்தியையும் தாய்ப்பாலுடன் சேர்த்து ஊட்டினாள். அதன் பலனைக் காணத் தான் அவள் இன்று இல்லை. தாயே நீயே துணை. தாயிற் சிறந்த கோவிலும் இல்லை.
எல்லா அப்பாக்களைப் போலவே எந்தக் குறையும் தெரியாமல் வளர்த்த அதே வேளையில் வருடத்திற்கு ஒரு முறை அவரின் அலுவலக நண்பர்களுடன் இணைந்து பல ஊர்களுக்குச் சுற்றுலா அழைத்துச் சென்று உலகத்தை சுற்றிக் காண்பித்த அப்பா அடுத்த ஆசிரியர். பழனிக்கு வருடம் மூன்று நான்கு முறை அழைத்துச் சென்று அம்மா ஊட்டிய முருக பக்தி தழைத்தோங்கச் செய்தவர். பின்னாளில் தன் மகன் பல இடங்களில் பேசுவதையும் எழுதுவதையும் கேட்டும் படித்தும் ஆனந்தக் கண்ணீர் வடித்தும் தனக்கு காயத்ரி மந்திரத்தைத் அதன் பொருளோடு மகன் சொல்லிக்கொடுத்ததும் 'தகப்பன் சாமி' என்று சொல்லி மகிழ்ந்ததும் அவன் அருள். அவர் அன்பையும் ஆசியையும் என்றும் விரும்பி நிற்கிறேன். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.
ஒன்றாம் வகுப்பில் படிக்கும் போது எனக்கு 'ஊமைக் குசும்பன்' என்று பெயர் கொடுத்த ஆசிரியையை இன்னும் மறக்கமுடியவில்லை. அது வரை யாருமே என்னைத் திட்டியதில்லை. திட்டுவதென்ன, என்னைப் பற்றித் தவறாய்ச் சொன்னதில்லை. அன்று அந்த ஆசிரியை எங்களை எல்லாம் தானாகப் படிக்கச் சொல்லிவிட்டு புதிதாக வந்த இன்னொரு ஆசிரியையிடம் வகுப்பில் இருக்கும் ஒவ்வொரு குழந்தையைப் பற்றியும் சொல்லிக்கொண்டிருந்தார். என்னைப் பற்றி அந்த ஆசிரியை என்னச் சொல்லப் போகிறார் என்று ஆவலுடன் கேட்டுக் கொண்டிருந்த எனக்கு அவர் என்னை 'ஊமைக் குசும்பன்' என்று கூறி அதற்கு விளக்கமும் கூறியது மிக்க அதிர்ச்சியாக இருந்தது. அது ஒரு சிறந்த பாடமாய் அமைந்தது. நாம் நினைப்பது மாதிரியே எல்லாரும் நினைப்பதில்லை. அவரவர்கள் பார்வை அவரவர்களுக்கு அமையும் சூழ்நிலையைப் பொறுத்து அமைகிறது. அதனால் எல்லாவிதமான கருத்தையும் எதிர்நோக்க வேண்டும் என்பது மிகவும் உதவிய ஒரு பாடம்.
எங்கள் ஆரம்பப் பள்ளிக்குப் பக்கத்தில் ஒரு சின்ன பலசரக்குக் கடை இருந்தது. ஒரு வயதான தாத்தா அதை நடத்தி வந்தார். அவர் ஒரு நல்ல விஷயம் செய்து வந்தார். பள்ளியில் படிக்கும் குழந்தைகள் ஒரு பேனாவை எடுத்துக் கொண்டு வந்தால் அதில் மையை இலவசமாக ஊற்றித் தருவார். அப்போது அது ஒரு பெரிய விஷயமாகத் தெரியவில்லை. ஆனால் வளர்ந்தவுடன் அவரின் செய்கையின் நோக்கமும் படிப்பு என்பது நம் முன்னேற்றத்திற்கு எவ்வளவுத் தேவையானது என்பதும் நன்கு புரிந்தது. அவரால் முடிந்த அளவில் அவர் செய்ததைப் போல நம்மால் முடிந்த அளவில் மற்றவர் கல்விக்காக நாமும் செய்ய வேண்டும் என்ற ஊக்கத்தைக் கொடுத்த பாடம் அது.
பகவத் கீதை, இராமாயணம், மகாபாரதம், திருக்குறள், திருப்பாவை, தேவாரத் திருவாசகங்கள், திவ்யப் பிரபந்தம், கந்தர் அனுபூதி, திருப்புகழ் போன்ற புத்தகங்களை வீட்டில் வைத்திருந்து அவைகளைப் படிப்பதில் எனக்கு இருக்கும் விருப்பத்தை மிகச் சிறு வயதிலேயே கண்டு அதற்கு ஏற்ற ஊக்கத்தைக் கொடுத்து, கேட்ட போதெல்லாம் என் வயதிற்கு உகந்த விளக்கங்கள் கொடுத்த என் தாய் வழிப் பாட்டி அடுத்து நினைவில் நிற்பவர். மகா பாரதம் படித்து விட்டு பல இடங்களில் புரியாமல் விவகாரமான கேள்விகளைக் கேட்டு அவரை தர்ம சங்கடத்தில் பல முறை ஆழ்த்தியது நன்றாக நினைவில் இருக்கிறது. அப்போதெல்லாம் தாத்தா வந்து வேறு எதையோ சொல்லி என் கவனத்தை மாற்றிவிடுவார். அன்று கேட்ட கேள்விகளுக்கு இன்னும் சரியான விடைகள் எனக்குத் தெரியவில்லை. அதில் ஒரு கேள்வியை ஏற்கனவே பதிவிட்டிருக்கிறேன்.
அடிக்கடி மீனாக்ஷி அம்மன் கோவிலுக்கு வந்து நாட்கணக்கில் கதை சொல்லி 'செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம்' என்பதற்கேற்ப பல விஷயங்களைச் சொல்லிப் புரியவைத்த வாரியார் சுவாமிகளை மறக்க முடியாது. பேசும் போது நடுநடுவே ஏதாவது கேள்விகளைக் கேட்டு கூட்டத்தில் இருக்கும் சிறுவர் சிறுமியர் அதற்குப் பதில் சொல்ல வேண்டும் என்று கூறுவார். சரியாகப் பதில் சொல்லும் சிறுவர்/சிறுமியருக்கு ஒரு சின்ன நூல் பரிசாகக் கொடுப்பார். அப்படிப் பல முறை அவர் கையால் சிறு நூல்களையும் அவர் ஆசிகளையும் பெறும் பாக்கியம் கிடைத்தது. ஒரு முறை என்னுடன் யார் வந்துள்ளார் என்று கேட்ட போது நான் தனியாக வந்துள்ளேன் என்று அறிந்து கண்களில் நீர் மல்க 'நானும் ஒரு வாரமாகப் பார்க்கிறேன். முதல் வரிசையில் இந்த எட்டு வயது சிறுவன் தனியாக வந்து அமர்ந்துக் கொண்டு கூட்டம் முடிந்த பிறகே போகிறான். இவன் நிச்சயமாய் முருகன் அருளால் வருங்காலத்தில் பெரிய ஆளாய் வருவான்' என்று ஆசிர்வதித்தார். அவர் ஆசி சீக்கிரம் பலிக்கும் என்று நம்புகிறேன்.
உயர்நிலைப் பள்ளியில் என் தமிழார்வத்தைக் கண்டுகொண்டு என்னில் தனிக் கவனம் செலுத்தி எனக்குத் தமிழைச் சொல்லிக்கொடுத்த தமிழாசிரியர்கள் சுரேந்திரன் ஐயாவையும் சக்திவேல் ஐயாவையும் மறக்க முடியாது. ஏழாம் வகுப்பு முதல் மூன்று வருடம் சுரேந்திரன் ஐயா எனக்குத் தமிழ் சொல்லிக் கொடுத்தார். அதற்கு அப்புறம் மூன்று வருடங்கள் சக்திவேல் ஐயா தமிழ் வகுப்பெடுத்தார். அன்று அவர்கள் சொல்லிக் கொடுத்தத் தமிழ் தான் இன்று இங்கு வலைப்பதிவுகளில் எழுதும் போது பெருந்துணையாக இருக்கிறது.
பத்தாம் வகுப்பில் எனக்கு கணிதம் சொல்லிக் கொடுத்த சுரேந்திரன் சார் அடுத்து நினைவில் நிற்கிறார். அவர் பல ஆன்மிகப் பெரியவர்களைப் பற்றிப் பல தமிழ் நூல்களை எழுதிப் பதித்திருக்கிறார். என்னையும் எழுதத் தூண்டியவர் அவர். அந்த வயதில் கவிதை எழுத ஆரம்பித்தேன். பாரதிதாசன், சுப்புரத்தின தாசன் (சுரதா), கண்ணதாசன் இவர்கள் வரிசையில் நானும் ஒரு பெரிய கவிஞனாய் வருவேன் என்று எண்ணிக் கொண்டு சுரேந்திர தாசன் (சுதா) என்ற பெயரிலும் இளங்கவி குமரன் என்ற பெயரிலும் கவிதைகள் எழுத ஆரம்பித்தேன். மற்றவர் கவிதைகளை ரசிக்க ஆரம்பித்த உடன் நான் கவிதை எழுதுவது இப்போது குறைந்து விட்டது. இன்னும் நான் எழுதியவை எதையும் நூலாகப் பதிக்கவில்லை. எதிர்காலத்தில் நடக்கலாம்.
நான் உங்களிடம் பகவத் கீதை கற்றுக் கொள்ள வேண்டும் என்று சொன்னவுடன் தயங்காமல் வீட்டிற்கு வா என்று சொல்லி வாராவாரம் பகவத் கீதையையும் திவ்யப் பிரபந்தத்தையும் எனக்குச் சொல்லிக் கொடுத்த, தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் வேதியியல் பேராசிரியராய் இருக்கும் திரு. வாசுதேவன் எனக்கமைந்த அடுத்த குரு. வில்லிபுத்தூர் அருகில் இருக்கும் கிருஷ்ணன் கோவிலில் இளங்கலை பொறியியல் படித்துக் கொண்டிருந்தேன் அப்போது. ஒவ்வொரு சனிக்கிழமையும் தவறாமல் மதுரை அருகே இருக்கும் திருநகருக்கு வந்து அவர் இல்லத்தில் அவரிடம் தமிழும் கீதையும் கற்றுக் கொண்டேன். பல முறை அந்த வாரம் மதுரைக்கு (வீட்டிற்கு) வரவேண்டாம் என்று எண்ணியிருப்பேன். அந்த வாரங்களும் தவறாமல் திருநகர் வரை வந்து செல்வேன். அவர் அடிக்கடி சொற்பொழிவு ஆற்றுவார். எனக்கும் சொற்பொழுவு ஆற்ற ஊக்கம் தந்தார்.
நட்பு என்றால் என்ன? நண்பர்கள் எங்கே இருந்தாலும் எப்படி இருக்கவேண்டும்? என்பதை நன்றாக எனக்குப் புரியவைத்தவர்கள் தற்போது குஜராத்தில் இருக்கும் என் நண்பன் குமரனும் வெர்ஜினியாவில் இருக்கும் என் நண்பன் கார்த்திகேயனும். பல விஷயங்கள் அவர்களிடம் கற்றுக் கொண்டுள்ளேன். அவற்றை எல்லாம் சொன்னால் மிக விரிவாய்ப் போய்விடும்.
வேலை பார்க்க ஆரம்பித்தப் பிறகு எத்தனையோ ஆசிரியர்கள். எனக்கு வேலை கொடுத்தவர்கள், என்னுடன் வேலை பார்த்தவர்கள், என்னிடம் வேலை பார்த்தவர்கள் என்று நிறைய பேரிடம் அவர்கள் நேரே சொல்லியும் அவர்கள் செய்வதைக் கவனித்தும் கற்றுக் கொண்டவை ஏராளம். கற்றுக் கொள்வது கடைசிக் காலம் வரை நடப்பது அல்லவா? அதனால் இனிமேல் வரப்போகும் ஆசிரியர்களையும் இப்போதே வணங்கிக் கொள்கிறேன்.
இன்னும் நிறைய பேரைப் பற்றிச் சொல்ல வேண்டும். ஆனால் பதிவு மிக விரிவாகச் செல்கிறது. அதனால் அவர்கள் பெயர்களை மட்டும் கூறிக்கொண்டு விரிக்காமல் விடுகிறேன்.
பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபா, பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்ஸர், பகவான் ஸ்ரீ ரமணர், ஸ்ரீ அரவிந்த மகரிஷி, அன்னை மிரா, ஸ்ரீ ஞானானந்தகிரி சுவாமிகள், ஸ்ரீ நடனகோபால நாயகி சுவாமிகள், இப்படி பல மகான்கள் எழுதியதைப் படித்தும் கேட்டும் பல விஷயங்கள் புரிந்தன.
பத்தாவது படிக்கும் போது வந்த ஒரு கனவு நினைவிற்கு வருகிறது. வீதியில் ஏதோ ஒரு பேராரவாரம். வீட்டு வாசலில் வீட்டில் இருக்கும் எல்லோரும் நின்று கொண்டிருக்கின்றனர். என்னவென்றால் ஒரு மகான் வந்துக் கொண்டிருக்கிறார் என்று சொன்னார்கள். அவர் எங்கள் வீட்டிற்கு முன் வந்தவுடன் என்னை அறியாமல் நான் அவர் முன் சென்று நமஸ்கரிக்கிறேன். யாரோ ஒருவர் ஒரு சிறு நாற்காலியைக் கொண்டு வந்து போடுகிறார்கள். அதில் அந்தப் பெரியவர் அமர்ந்து கொண்டு கீழே விழுந்து வணங்கிக் கொண்டிருக்கும் என் தலையில் தன் கால்களை வைக்கிறார். பின்புலத்தில் கீதையின் பெருமையைப் பேசும் சுலோகத்தை ஒருவர் சொல்கிறார். கனவு கலைந்தது. அப்படி கனவில் வந்து கீதையை படி என்று சொல்லாமல் சொல்லி எனக்குப் பாத தீட்சை கொடுத்தவர் ஆசார்யர் என்று சொன்னவுடனே எல்லாருக்கும் நினைவிற்கு வருபவர்.
என்ன புண்ணியம் செய்தேனோ? சத்குரு நாதா
எத்தனை தவம் செய்தேனோ? உன் அருள் பெறவே (என்ன)
பன்னரும் வேதங்கள் படித்து உணர்ந்தாலும் உன்னருள் இல்லாவிட்டால் ஒன்றுக்கும் உதவாது (என்ன)
அவர் இவரே.

குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணு
குருர் தேவோ மஹேஷ்வர:
குருர் சாக்ஷாத் பரப்ரம்ஹ:
தஸ்மை ஸ்ரீ குரவே நம: