Friday, September 10, 2010

பழியற்று வாழ்ந்திடக் கண் பார்ப்பாய்!

நான்கு விதமான பாவகைகளில் பாடல்களை அந்தாதித் தொடையாக எழுதுவது 'நான்மணிமாலை' எனப்படும். மகாகவி சுப்பிரமணிய பாரதியார் விநாயகர் மீது அப்படியொரு நான்மணிமாலை எழுதியிருக்கிறார். மணக்குள விநாயகரைப் பற்றி அடிக்கடி இந்த நான்மணிமாலையில் சொல்வதால் புதுச்சேரியில் இருக்கும் போது இதனை இயற்றியிருக்கலாம் என்று நினைக்கிறேன்.

இந்த 'விநாயகர் நான்மணிமாலை'யில் இது வரை எட்டு பாடல்களுக்கு விளக்கம் பார்த்திருக்கிறோம். பிள்ளையார் சதுர்த்தியான இன்று (11 Sept 2010) அடுத்த பாடலுக்கு விளக்கம் காண்போம். இந்தப் பாடல் வெண்பா வகை. சென்ற பாடல் 'களித்தே' என்று நிறைவுற்றது. அந்தாதித் தொடை என்பதால் இந்தப் பாடல் 'களியுற்று' என்று தொடங்குகிறது.



களியுற்று நின்றுக் கடவுளே இங்குப்
பழியற்று வாழ்ந்திடக் கண் பார்ப்பாய் - ஒளிபெற்றுக்
கல்வி பல தேர்ந்து கடமையெலாம் நன்காற்றித்
தொல் வினைக் கட்டெல்லாம் துறந்து!


இன்பமாக வாழ்வதே உயிர்களின் முதன்மை நோக்கமாக இருக்கிறது. ஆனால் அப்படி இன்பமாக வாழும் போது உலகத்தோடு ஒட்ட ஒழுகி, பெரியோர் பழித்தவற்றை செய்யாமல் விட்டு, அவர்கள் புகழ்வனவற்றை தவறாமல் செய்து, பழியின்றி வாழ்தலும் மனிதர்களுக்கு மிக முக்கியமானதாக இருக்கிறது. அதனால் தான் போலும் இவை இரண்டையும் சேர்த்துக் கடவுளிடம் வேண்டுகிறார் பாரதியார்.

களி உற்று நின்றுக் கடவுளே இங்குப் பழி அற்று வாழ்ந்திடக் கண் பார்ப்பாய்

இப்படி இன்பமாக இவ்வுலகில் வாழ்வதற்கு பழியற்று வாழ்வது மட்டும் போதாது போலும். அறிவு ஒளியும் பெற வேண்டியிருக்கிறது. அதற்கு பலவிதமான கல்விகளைக் கற்றுத் தேர்ச்சி பெற வேண்டியிருக்கிறது. அதனால் அவ்விரண்டையும் அடுத்து வேண்டுகிறார் பாரதியார்.

ஒளி பெற்றுக் கல்வி பல தேர்ந்து

அதுவும் போதாது போலும். கடமைகள் என நான்குவிதமான கடமைகளைச் சென்ற பாடலில் சொன்னார். 'தன்னைக் கட்டுதல், பிறர் துயர் தீர்த்தல், பிறர் நலம் வேண்டுதல், உலகெங்கும் காக்கும் ஒருவனைப் போற்றுதல்' - இவை நான்கே இந்தப் பூமியில் எவருக்கும் கடமை என்று சொன்னார். இந்தக் கடமைகளை நன்காற்றும் திறன் வேண்டும் என்று வேண்டுகிறார் இந்தப் பாடலில்.

கடமையெலாம் நன்கு ஆற்றித்

மனிதன் பல்லாயிரம் ஆண்டுகளாக வரும் தொன்மையான பலவிதமான செயல்கட்டுகளில் கட்டுண்டிருக்கிறான் என்பது தத்துவச் சிந்தனைகளின் முடிவு. அந்த கட்டுகளில் இருந்து விடுபடுதலே என்றென்றும் இன்பமாக வாழ்வதற்கு வழி வகுக்கும். அதனால் அடுத்து அதனைச் சொல்கிறார் பாரதியார்.

தொல்வினைக் கட்டெல்லாம் துறந்து

இந்த நான்மணிமாலையே நான்குவகைப் பாக்களால் தொடுக்கப்பட்ட மணிமாலையென்றால் இந்தப் பாடலோ தனக்குள்ளேயே தொடுக்கப்பட்ட மாலையாக இருக்கிறது. இன்பம், பழியற்று வாழ்தல், ஒளி பெறுதல், கல்வி பல தேர்தல், கடமை ஆற்றுதல், தொல்வினைக்கட்டெல்லாம் துறத்தல், இன்பம் என்று ஒரு சுழல் இந்தப் பாடலில் வருகிறது. எல்லாமே இங்கே சுழற்சியில் தானே இயங்குகின்றன!


P.S. இன்று பாரதியார் நினைவு நாளும்!

Wednesday, September 08, 2010

ஆடிக்காற்றா ஆவணியில்....

கூரையை ஏதோ உரசும் ஓசை கேட்டு எழுந்தேன். விட்டு விட்டு உரசும் ஓசை. யாரோ நடப்பது போன்ற ஓசை. மனைவியும் குழந்தைகளும் பக்கத்தில் ஆழ்ந்த உறக்கத்தில். ஓசை வரும் காரணம் தெரியவில்லை. மனதில் கொஞ்சம் திக்.

கள்வன் நுழைகின்றான் என்று தெரிந்தால் உடனே காவலரைக் கூப்பிட கையில் தொலைபேசி எடுத்துக் கொண்டு எழுந்து வந்தேன். வந்து பார்த்தால் உய் உய் என்று வீசும் காற்று. அந்தக் காற்றில் அசையும் மரங்கள். அந்த மரங்களின் கிளைகள் சுவற்றிலும் கூரையிலும் உரசுவதால் வந்த ஓசை. அவ்வளவு தான்.

மனத்தின் கற்பனைகளை எண்ணிப் புன்னகைத்துக் கொண்டு படுக்கைக்கு வந்தேன். தூங்க முடியவில்லை. தூக்கம் போய்விட்டது. ஏதேதோ நினைவுகள். மரங்களை அலைக்கழிக்கும் சுழல் காற்றின் வீச்சே மனத்தில் நிறைந்திருந்தது. 'காற்றடிக்குது கடல் குமுறுது கண்ணை விழிப்பாய் நாயகனே' என்ற பாரதியாரின் பாடல் வரிகள் நினைவிற்கு வந்தன. இந்த ஓங்கி வீசும் காற்றையே உள்ளுறைப் பொருளாக வைத்து சங்க கால ஒளவையார் பாடிய குறுந்தொகைப் பாடலும் நினைவிற்கு வந்தது.

முட்டுவேன் கொல்! தாக்குவேன் கொல்!
ஓரேன் யானும் ஓர் பெற்றி மேலிட்டு
ஆ! ஒல்! எனக் கூவுவேன் கொல்!
அலமர அசைவு வளி அலைப்ப என்
உயவு நோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே!


இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் அதுவும் ஒரு மழைக்காலம். பிரிவுத்துயரில் வாடும் ஓர் இளம்பெண். களவுக்காதலில் காலம் செலுத்திய காதலனிடம் 'விரைவில் இவளை மணந்து கொள்வாய்' என்று தோழி அறிவுறுத்தியதால் அதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்ட காதலன் காதலியைக் காணாமல் காலம் தாழ்த்துகிறான். இவளோ அந்த குறுகிய காலப் பிரிவினையும் தாங்க முடியாமல் புலம்புகிறாள்.

கடுமையாக வீசும் காற்று மரங்களை எல்லாம் அலைக்கழிப்பதைப் போல் என் பிரிவுத் துயர் என்னை அலைக்கழிக்கிறது! இதனை அறியாமல் அமைதியாகத் தூங்குகிறது இந்த ஊர்! முட்டுவேனா குத்துவேனா ஆஓ எனக் கூவுவேனா இந்த ஊரை என்ன செய்வது என்று தெரியவில்லை!

அந்தப் பெண் தன் காதலன் வரவை எதிர்நோக்கி விழித்திருந்தாள்! நான் யார் வரவை எதிர் நோக்கி விழித்திருக்கிறேன்?