"இரவி. உய்யக்கொண்டாரைப் பற்றி எழுதலாம் என்று எண்ணுகிறேன். ஆனால் அவர் பெயர் மட்டுமே தெரியும். வேறொன்றும் தெரியாது. அவரைப் பற்றி சொல்லுங்களேன்"
"குமரன். இது அறிவினா தானே? என்னைச் சோதித்துப் பார்க்கிறீர்களா?"
"இல்லை இரவி. உண்மையாகவே தான் சொல்கிறேன். உய்யக்கொண்டார் நாதமுனிகளின் சீடர் என்று மட்டுமே தெரியும். வேறொன்றும் தெரியாது"
"சரி. நீங்கள் உண்மையைச் சொல்கிறீர்கள் என்று நம்பி அவரைப் பற்றி சொல்கிறேன்.
உய்யக்கொண்டாருடைய இயற்பெயர் புண்டரீகாட்சர். திருவெள்ளறையில் பிறந்தவர். இவர் பிறந்த நாள் சித்திரை மாதம் கார்த்திகை நட்சத்திரம். பிறந்த வருடம் 886.
சிறுவயதில் தந்தையாரிடம் வேத வேதாந்தங்களைக் கற்றவர். திருவெள்ளறையில் இருக்கும் புண்டரீகாட்சப் பெருமாள் கோவிலில் தொண்டு புரிந்தவர்கள் இவர் குடும்பத்தவர்கள். தகுந்த வயதில் இவரை மேலும் கல்வி கற்க நாதமுனிகளிடம் அனுப்பினார்கள் இவரின் பெற்றோர்கள்"
"இவர் இயற்பெயர் புண்டரீகாக்ஷர் என்றால் உய்யக்கொண்டார் என்ற பெயர் எப்படி வந்தது?"
"அதுவா? உலகத்து மக்களின் மேல் இவருக்கு இருக்கும் அன்பைக் கண்டு நாதமுனிகள் வைத்த பெயர் அது!"
**
"அடியேன்".
"வாரும் பிள்ளாய். நலமாய் உள்ளீரா?"
"தேவரீரின் திருவருட் பெருமையால் அடியேன் அன்பனாய் உள்ளேன்".
"தாமரைக்கண்ணரே. நீரும் குருகைக்காவலப்பனும் எனது முதன்மைச் சீடர்கள். என்னிடம் இரண்டு செல்வங்கள் இருக்கின்றன. பக்தியோகத்தால் ஒருவர் தன்னைக் கடைத்தேற்றிக் கொள்ளலாம்; ஆழ்வார்களின் அருளிச் செயலான நாலாயிரப் பனுவலால் ஒருவர் தன்னையும் மற்றவரையும் கடைத்தேற்றிக் கொள்ளலாம். உமக்கு யோக இரகசியம் வேண்டுமா? நாலாயிரப் பனுவல் வேண்டுமா?"
"ஐயனே. பிணம் கிடப்பார் வீட்டில் மணம் உண்டோ? உலகத்து உயிர்கள் எல்லாம் இறைவன் திருவடி நினையாமல் செத்துக் கொண்டிருக்கும் போது ஒற்றை உயிர் இறைவன் திருவடிகளை அடைவதில் என்ன பயன்? அடியேனுக்கு தேவரீர் அருளிச் செயல்களையே அருளிச்செய்ய வேண்டும்"
"ஆகா. புண்டரீகாட்சரே! உலகம் உய்யக்கொண்டீரே! உம் விருப்பம் போலவே நாலாயிரப் பனுவல்களையும் சொல்லித் தருகிறேன்"
**
"இரவி. இவருடைய வாழித் திருநாமத்தைப் படித்துப் பார்த்தேன். அதில் நாலிரண்டு ஐயைந்து நாலெட்டு என்று வருகிறது. திருப்பாவையை ஐயைந்தும் ஐந்தும் என்றும் நாச்சியார் திருமொழியை ஒரு நூற்று நாற்பத்தி மூன்று என்றும் சொல்வது போல் இவர் இயற்றிய பாடல்களைச் சொல்கிறார்களா?"
"குமரன். இவர் நூலெதுவும் எழுதியதாகத் தெரியவில்லை. திருப்பாவைக்குத் தனியன் எழுதியவர் இவர்."
"எந்த தனியன் இரவி?"
"அன்ன வயல் புதுவை ஆண்டாள் அரங்கர்க்குப்
பன்னு திருப்பாவைப் பல்பதியம் - இன்னிசையால்
பாடிக் கொடுத்தாள் நற்பாமாலை பூமாலை
சூடிக் கொடுத்தாளைச் சொல்லு.
படிச்சிருப்பீங்களே! இந்தத் தனியனும்
சூடிக் கொடுத்த சுடர்கொடியே தொல்பாவை
பாடி அருள வல்ல பல்வளையாய் - நாடி நீ
வேங்கடவர்க்கு என்னை விதி என்ற இம்மாற்றம்
நான் கடவா வண்ணமே நல்கு
இந்தத் தனியனும் இவர் எழுதியது."
"ஆமாம். இந்தத் தனியன்கள் தெரியும். ரொம்ப எளிமையான தனியன்கள். இவர் இந்தத் தனியன்கள் மட்டுமே எழுதினார் என்றால் வாழித் திருநாமத்தில் வரும் நாலிரண்டு ஐயைந்து நாலெட்டு எல்லாம் என்ன?"
"ரொம்ப விளக்கமாக சொல்லத் தேவையில்லை என்று நினைக்கிறேன் குமரன். மூன்று மறைப்பொருட்களான ரகஸ்ய த்ரயம் தான் அவை"
"இரகசியத் திரயமா? ஓஓ. இரகசியத் திரயமா? சரி தான். இப்போது புரிகிறது.
நாலிரண்டு எட்டு - எட்டெழுத்து மந்திரமான ஓம் நமோ நாராயணாய. நான் உன்னையன்றி இலேன். நீ என்னையன்றி இலாய். சரி தான்.
ஐயைந்து இருபத்தியைந்து - இரு வரிகளில் இருபத்தியைந்து எழுத்துகளில் வரும் துவய மந்திரம்.
ஸ்ரீமந் நாராயண சரணௌ சரணம் அஹம் ப்ரபத்யே
ஸ்ரீமதே நாராயணாய நம:
திருமகள் நாதன் திருவடிகளை சரணாக நான் அடைகிறேன். திருமகள் கேள்வனுக்கே உரியவன் எனக்குரியேன் அல்லன்.
நாலெட்டு முப்பத்தியெட்டு - முப்பத்தியெட்டு எழுத்துகளில் வரும் கீதைச் சுலோகமான சரம சுலோகம்.
ஸர்வ தர்மாந் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ
அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச:
எல்லாவற்றையும் முழுமையாக விட்டுவிட்டு என்னை மட்டுமே கதியாக அடைவாய். நான் உன்னை எல்லா பாவங்களிலும் விடுதலை செய்கிறேன். வருத்தம் வேண்டாம்.
அருமை. இம்மூன்றையும் அடுத்த தலைமுறைக்குப் பொருளுடன் கொண்டு சென்றவர் என்பதால் இவரை இப்படி போற்றுகின்றதா வாழித்திருநாமம்"
**

வால வெய்யோன் தனை வென்ற வடிவழகன் வாழியே
மால் மணக்கால் நம்பி தொழும் மலர்ப்பதத்தோன் வாழியே
சீலமிகு நாதமுனி சீர் உரைப்போன் வாழியே
சித்திரையில் கார்த்திகை நாள் சிறக்க வந்தோன் வாழியே
நாலிரண்டும் ஐயைந்தும் நமக்குரைத்தான் வாழியே
நாலெட்டின் உட்பொருளை நடத்தினான் வாழியே
மால் அரங்க மணவாளர் வளம் உரைப்போன் வாழியே
வையம் உய்யக் கொண்டவர் தாள் வையத்தில் வாழியே
இளஞ்சூரியன் அழகு மிகுந்தவன். இருளை நீக்கி வண்ண ஓவியங்களை வானமெங்கும் பூமியெங்கும் அவன் ஒளி எழுதும். அவன் ஒளி கண்களைக் கூசாது. அப்படிப் பட்ட இளம்பரிதியின் வடிவழகை வெல்லும் அழகைப் பெற்றுள்ளவர் உய்யக்கொண்டார். அவர் வாழ்க வாழ்க!
பரசுராமன், இராமன், பலராமன் என்று முன்பு திருமாலின் வடிவாய் வந்த மூன்று இராமர்களைப் போல் நான்காவது இராமனாய் வந்த இராமமிச்ரரான மணக்கால் நம்பி தன் குருவாகக் கொண்டு தொண்டு செய்யும் மலர்களைப் போன்ற திருப்பாதங்களை உடையவர் உய்யக்கொண்டார். அவர் வாழ்க வாழ்க!
நற்குணங்களும் நன்னடத்தையும் நல்லெண்ணங்களும் உடைய நாதமுனிகள் என்னும் ஆசாரியரின் பெருமைகளை எப்போதும் உரைத்துக் கொண்டிருப்பவர் வாழ்க வாழ்க!
சித்திரை மாதம் கார்த்திகை நட்சத்திரப் பெருநாளில் உலகம் சிறக்க பிறந்தவர் வாழ்க வாழ்க!
நாலிரண்டான எட்டெழுத்து மந்திரத்தின் பொருளையும் ஐயைந்தான துவய மந்திரத்தின் பொருளையும் நமக்கு உரைத்தவர் வாழ்க வாழ்க!
நாலெட்டான சரம சுலோகத்தின் உட்பொருளை தன் வாழ்க்கையில் நடத்திக் காண்பித்தவர் வாழ்க வாழ்க!
திருமாலவன் திருவரங்கன் அழகிய மணவாளன் திருப்பெயர்களையும் திருப்புகழ்களையும் எப்போதும் சொல்லுபவர் வாழ்க வாழ்க!
உலகம் உய்யக் கொண்டவரின் திருவடிகள் இந்த வையகத்தில் என்றென்றும் வாழ்க வாழ்க வாழ்க!