Thursday, August 20, 2009

ஆண்டாள்

கோயில் கந்தாடை நாயன் என்னும் அடியவர் அருளிச் செய்த பெரிய திருமுடியடைவு என்னும் நூலில் இருக்கும் ஆளவந்தாரின் வாழ்க்கைக் குறிப்புகளை நேற்று இட்டிருந்தேன். அதே நூலில் ஆண்டாளின் வாழ்க்கைக் குறிப்புகளும் இருக்கின்றன. அவற்றை இன்று இடுகிறேன். இதுவும் மணிப்பிரவாள நடையில் இருந்தாலும் வடமொழிச் சொற்கள் சிறிதளவே இருக்கின்றன. ஆனாலும் இது கடினம் என்று நினைப்பவர்களுக்காக தற்காலத் தமிழிலும் அந்த குறிப்புகளை எழுதியிருக்கிறேன்.

***

ஸ்ரீபூமிப்பிராட்டியார் திருவவதாரமான சூடிக்கொடுத்த நாச்சியாருக்குத் திருவவதாரஸ்தலம் பாண்டியமண்டலத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர். திருவவதரித்தது பெரியாழ்வாருடைய திருநந்தவனத்தில் திருத்துழாயடியிலே. திருநக்ஷத்ரம் ஆடி மாஸம் பூர்வபக்ஷத்தில் சதுர்த்தி செவ்வாய்க்கிழமை திருவாடிப்பூரம் வரீயாந்நாமயோகம் பத்ரகரணம் துலாலக்னம் மத்யாஹ்ந ஸமயத்தில். பூமியிலே இருந்து பெரியாழ்வார் திருமாளிகையிலே வளர்ந்தருளினார். திருநாமங்கள் சூடிக்கொடுத்தாள், கோதை, ஆண்டாள், ஆழ்வார் திருமகள். இவள் எழுந்தருளியிருக்கிறது நூற்றெட்டுத் திருப்பதிகளிலும். அதிலும் ப்ரதானம் ஸ்தலம் ஸ்ரீவில்லிபுத்தூர். இவர் அருளிச் செய்த ப்ரபந்தங்கள் திருப்பாவை முப்பது பாட்டும், நாச்சியார் திருமொழி நூற்றுநாற்பத்து மூன்று பாட்டும். இவள் பாடின திருப்பதிகள் திருவாய்ப்பாடி, திருப்பாற்கடல், வடமதுரை, ஸ்ரீவில்லிபுத்தூர், கோயில், திருமலை. இவளுக்குத் திருவாராதனம் நம்பெருமாள். ஆசார்யர் பெரியபெருமாள்.

இவளுக்குத் தனியன் (பராசரபட்டர் அருளிச் செய்தது)

நீளாதுங்க ஸ்தநகிரிதட ஸுப்தம் உத்போத்ய க்ருஷ்ணம்
பாரார்த்யம் ஸ்வம் ச்ருதி சத சிரஸ் ஸித்தம் அத்யாபயந்தீ
ஸ்வ உச்சிஷ்டாயாம் ஸ்ரஜி நிகளிதம் யா பலாத்க்ருத்ய புங்க்தே
கோதா தஸ்யை நம இதம் இதம் பூய ஏவ அஸ்து பூய:

இதன் பொருள் - நப்பின்னை பிராட்டியின் ஸ்தனங்கள் என்னும் மலைகளின் சாரலில் கண்வளர்பவனும், இவளது மாலையை தனக்கு விலங்காகக் கொண்டு கட்டுப்பட்டு உள்ளவனும் ஆகிய க்ருஷ்ணனை திருப்பள்ளி உணர்த்தினாள். வேதங்களின் தலைப்பாகமாக உள்ள வேதாந்தங்கள் கூறும் தனது அடிமைத்தனத்தை கண்ணனிடம் அறிவித்தாள். தானாக வலியச் சென்று அவனை அனுபவித்தபடி இருந்தாள். இப்படிப்பட்ட ஆண்டாளின் விஷயமாகக் கூறப்படும் இந்த நமஸ்காரங்கள், காலம் என்ற தத்வம் உள்ளவரை விளங்க வேண்டும்.

ஆண்டாள் திருவடிகளே சரணம்.

நன்றி: நம்பெருமாள் விஜயம் ஆகஸ்ட் 1 - 2007 மின்னிதழ்

***

பெருமாளின் தேவியர்களில் ஒருவரான பூமிப்பிராட்டியாரின் திரு அவதாரமான சூடிக்கொடுத்த நாச்சியார் எனப்படும் ஆண்டாளின் பிறந்த இடம் பாண்டிய நாட்டில் இருக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர். இவர் பிறந்தது பெரியாழ்வாரின் திருநந்தவனத்தில் துளசிச்செடியின் கீழே. இவருடைய பிறந்த நாள் ஆடி மாதம் வளர்பிறை நான்காம் நாள் செவ்வாய்க்கிழமை திருவாடிப்பூரம் என்னும் நட்சத்திரத்தில் துலா லக்னத்தில் மதிய நேரத்தில். பூமியிலே பிறந்து பெரியாழ்வாரின் வீட்டில் வளர்ந்தார். இவருடைய திருப்பெயர்கள் சூடிக் கொண்டாள், கோதை, ஆண்டாள், ஆழ்வார் திருமகள். இவர் நூற்றியெட்டு திவ்விய தேசங்கள் என்னும் திருப்பதிகளிலும் பெருமாளுக்கு இடப்பக்கம் எழுந்தருளியிருக்கிறார். அவற்றில் முதன்மையான இடம் ஸ்ரீவில்லிபுத்தூர். இவர் இயற்றிய நூல்கள் திருப்பாவை முப்பது பாட்டும், நாச்சியார் திருமொழி நூற்றுநாற்பத்தி மூன்று பாட்டும் ஆகும். இவர் பாடிய திருப்பதிகள் திருவாய்ப்பாடி, திருப்பாற்கடல், வடமதுரை, ஸ்ரீவில்லிபுத்தூர், கோயில் எனப்படும் திருவரங்கம், திருமலை (அழகர் கோவில் எனப்படும் திருமாலிருஞ்சோலையையும் பாடியிருக்கிறார். ஆனால் எப்படியோ அந்தத் திருப்பதியின் பெயர் இங்கே விடுபட்டிருக்கிறது). இவர் வணங்கியது நம்பெருமாள் என்னும் திருவரங்க நகர் வளர் அழகிய மணவாளன். இவருக்கு ஆசாரியர் பெரியபெருமாள் என்னும் திருவரங்கத்து மூலவர். (ஆண்டாளே பட்டர்பிரான் கோதை என்று தன்னை அழைத்துக் கொள்வதால் பெரியாழ்வாரே ஆண்டாளின் ஆசாரியர் என்று சொல்லுவதுண்டு. இங்கே பெரியபெருமாள் இவருக்கு ஆசாரியர் என்று சொல்லியிருப்பது வியப்பளிக்கிறது.)

தனியனுக்குத் தரப்பட்டுள்ள பொருள் தற்காலத் தமிழிலேயே இருப்பதால் மீண்டும் தரவில்லை.

ஆண்டாள் திருவடிகளே சரணம்.

ஆளவந்தார்

இராமானுஜரின் ஆசாரியரான ஆளவந்தாரின் வாழ்க்கைக் குறிப்புகள் சுருக்கமாக 'கோயில் கந்தாடைநாயன்' என்னும் அடியவர் அருளிச்செய்த பெரியதிருமுடியடைவு என்ற நூலில் கூறப்பட்டிருக்கின்றன. அவற்றை இங்கே முதலில் தந்திருக்கிறேன். மணிபிரவாளம் என்னும் தமிழும் வடமொழியும் கலந்த நடையில் இந்த குறிப்புகள் இருந்தாலும் வடமொழி அதிகம் கலக்காமல் கொஞ்சம் எளிய தமிழிலேயே இருக்கின்றன. ஆனாலும் இந்த நடை புரியவில்லை என்பவர்களுக்காக இக்குறிப்புகளைத் தற்காலத் தமிழிலும் எழுதியிருக்கிறேன்.

***

ஸிம்ஹாநநாம்ச பூதரான ஆளவந்தாருக்குத் திருவவதாரஸ்தலம் சோழ தேசத்திலே திருக்காவேரிதீரத்தில் வீரநாராயணபுரம். திருநக்ஷத்ர கலியுகம் மூவாயிரத்து எழுபதேழுக்குமேல் தாது வருஷம் ஆடி மாஸம் பௌர்ணமி வெள்ளிக்கிழமை உத்தராடம் விஷ்கம்பம் பவகரணம். திருத்தகப்பனார் ஈச்வரமுனிகள். திருப்பாட்டனார் நாதமுனிகள். திருத்தாயார் ஸ்ரீரங்கநாயகி. குமாரர் திருவரங்கப் பெருமாளரையர், தெய்வத்துகரசு நம்பி, பிள்ளையரசு நம்பி, சொட்டை நம்பி. திருநாமங்கள் யாமுனாசார்யார், யமுனைத்துறைவர், வாதிமத்தேபஸிம்ஹேந்த்ரர், ஆளவந்தார், பெரியமுதலியார், குடி சொட்டை. திருவாராதனம் நம்பெருமாள். இருப்பிடம் கோயில். இவருக்கு நாதமுனிகள் யாமுனாசார்யரென்கிற திருநாமமும், பகவத் ஸம்பந்தமும், மந்த்ரோபதேசமும் ஸாதித்தருளி, தத்வஹித புருஷார்த்தங்களை ப்ரஸாதிக்க உய்யக்கொண்டாருக்கு நியமித்து, யோகரஹஸ்யம் ப்ரஸாதிக்கக் குருகைக்காவலப்பனுக்கு நியமித்தார். அந்த உய்யக்கொண்டார் மணக்கால்நம்பிக்கு நியமித்தார். ஆகையாலே இவருக்குப் புருஷார்த்தங்களும் பகவத் விஷயமும் நாலாயிரமும் சதுர்த்தாச்ரம ஸ்வீகாரமும் முதலான அர்த்த விசேஷங்களெல்லாம் ப்ரஸாதித்தருளினவர் ஸ்ரீராமமிச்ரர். ஆக இவர்க்காசாரியர் ஸ்ரீமத் நாதமுனிகளும், புருஷகாரர் மணக்கால் நம்பியுமாம். குருபரம்பரை வரிசைக்கு இவர்க்கு ஆசார்யர் மணக்கால்நம்பி. சிஷ்யர்கள் பெரியநம்பி, பெரியதிருமலைநம்பி, திருக்கோட்டியூர்நம்பி, திருமாலையாண்டான், தெய்வவாரியாண்டான், வானமாமலையாண்டான், ஈச்வராண்டான், ஜீயராண்டான், ஆளவந்தாராழ்வான், திருமோகூரப்பன், திருமோகூர் நின்றார், தேவப்பெருமாள், மாறனேரி நம்பி, திருக்கச்சிநம்பி, திருவரங்கப்பெருமாளரையர், திருக்குருகூர்தாஸர், வகுளாபரண ஸோமயாஜியார், அம்மங்கி, ஆள்கொண்டி, வடமதுரையில் பிறந்த கோவிந்த தாஸர், ராஜபுரோஹிதரான நாதமுனி தாஸர், ரங்கசோழாவின் ராஜபத்னியான திருவரங்கத்தம்மான் ஆக சிஷ்யர் ப்ரதானரானவர் இருபத்திருவர். இவரருளிச் செய்தருளின ப்ரபந்தங்கள் ஸ்தோத்ரரத்னம், ஸித்தித்ரயம், ஸ்ரீகீதார்த்த ஸங்க்ரஹம், ஆகமப்ராமாண்யம், சது:ச்லோகி. இவர் சதுர்வேத ஷட்சாஸ்த்ராதி ஸகலவித்யா பாடங்களும் அருளிச் செய்து நூற்றிருபத்தஞ்சு திருநக்ஷத்ரம் எழுந்தருளியிருந்தார். இவர் நம்பெருமாள் அனுஜ்ஞையினாலே திருநாட்டுக்கெழுந்தருளின ஸ்தலம் கோயில். நிக்ஷேபம் பண்ணப்பட்ட ஸ்தலம் திருப்பார்த்துறையிலே.

இவருடைய தனியன்

யத் பதாம்போருஹ த்யான வித்வஸ்த அசேஷ கல்மஷ:
வஸ்துதாம் உபயாத: யாமுனேயம் நமாமி தம்

பொருள் - எந்த ஒருவரின் தாமரை போன்ற திருவடிகளைத் த்யானிப்பதன் மூலம் எனது அனைத்துப் பாவங்களும் நீங்கப் பெற்றனவோ, எதனால் நான் இந்த உலகில் ஒரு மதிக்கத்தக்க பொருளாக உள்ளேனோ, அப்படிப்பட்ட பெருமை உடைய யாமுனாசார்யரை வணங்குகிறேன்.

ஆளவந்தார் திருவடிகளே சரணம்.

நன்றி: நம்பெருமாள் விஜயம் ஜூலை 2 - 2007 மின்னிதழ்

***

சிம்மானனரின் (இவர் பரமபதத்தில் என்றைக்கும் நிலையாக வாழும் நித்யசூரிகள் என்னும் அடியவர்களில் ஒருவர். சிங்க முகம் கொண்டவர். அதனால் ஸிம்ஹாநநர் என்ற பெயர் பெற்றவர்) அம்சத்தில் பிறந்த ஆளவந்தார் பிறந்த இடம் சோழ நாட்டில் காவேரிக்கரையில் இருக்கும் வீரநாராயணபுரம். இவர் பிறந்த நாள் கலியுக வருடம் மூவாயிரத்து எழுபத்தேழு, தாது வருடம் ஆடி மாதம் முழுநிலவு நாள் வெள்ளிக்கிழமை உத்திராட நட்சத்திரம் சேர்ந்து வந்த நாள். இவர் தந்தையார் ஈச்வரமுனிகள். இவர் பாட்டனார் நாதமுனிகள். இவர் தாயார் ஸ்ரீரங்கநாயகி. இவருடைய மகன்கள் திருவரங்கப் பெருமாள் அரையர், தெய்வந்துக்கரசு நம்பி, பிள்ளையரசு நம்பி, சொட்டை நம்பி என்னும் நால்வர். இவருடைய மற்ற திருப்பெயர்கள் யாமுனாசாரியர், யமுனைத்துறைவர், வாதிமத்தேபசிம்மேந்திரர், ஆளவந்தார், பெரியமுதலியார். இவருடைய குலத்தின் பெயர் சொட்டை. இவர் தினமும் வணங்கி வந்த பெருமாள் நம்பெருமாள். இவருடைய இருப்பிடம் கோயில் எனப்படும் திருவரங்கம். இவருடைய பாட்டனார் நாதமுனிகள் இவருக்கு யாமுனாசாரியர் என்ற திருப்பெயரும், இறை தொடர்பும், மந்திர உபதேசமும் தந்து அருளி, தத்துவம் ஹிதம் புருஷார்த்தம் என்னும் மூன்றையும் அருளிச் செய்ய தன்னுடைய சீடரான உய்யக்கொண்டாரை நியமித்து, இவருக்கு யோகரகசியம் அருளிச்செய்ய குருகைக்காவலப்பனை நியமித்தார். உய்யக்கொண்டார் மணக்கால்நம்பியிடம் அந்தப் பொறுப்பைத் தந்தார். ஆகையாலே இவருக்கு வாழ்க்கையின் குறிக்கோள்கள் எனப்படும் புருஷார்த்தங்களும் பகவத் விஷயம் எனப்படும் வேத வேதாந்தங்களும் நாலாயிர திவ்விய பிரபந்தங்களும் நான்காவது ஆசிரமம் எனப்படும் துறவறம் முதலான எல்லாவற்றையும் அருளிச்செய்தவர் ஸ்ரீராமமிச்ரர் எனப்படும் மணக்கால்நம்பியாவார். ஆக இவருக்கு ஆசாரியர் ஸ்ரீமத் நாதமுனிகளும் அவர் அருளிசெய்தவற்றைக் கொணர்ந்து கொடுத்தவர் மணக்கால் நம்பியும் ஆவார்கள். குருபரம்பரை வரிசையில் இவருக்கு ஆசாரியர் மணக்கால்நம்பியாவார். இவருடைய சீடர்கள் பெரிய நம்பி, பெரிய திருமலை நம்பி, திருக்கோட்டியூர் நம்பி, திருமாலை ஆண்டான், தெய்வ்வாரி ஆண்டான், வானமாமலை ஆண்டான், ஈச்வர ஆண்டான், ஜீயர் ஆண்டான், ஆளவந்தார் ஆழ்வான், திருமோகூர் அப்பன், திருமோகூர் நின்றார், தேவப்பெருமாள், மாறனேரி நம்பி, திருக்கச்சி நம்பி, திருவரங்கப் பெருமாள் அரையர், திருக்குருகூர் தாஸர், வகுளாபரண சோமயாஜியார், அம்மங்கி, ஆள்கொண்டி, வடமதுரையில் பிறந்த கோவிந்த தாசர், அரசகுருவான நாதமுனி தாசர், ரங்க சோழன் என்னும் அரசனின் பட்டத்து ராணி திருவரங்கத்தம்மான் ஆக சீடர்களில் முதன்மையானவர்கள் இருபத்தி இருவர். இவர் அருளிச் செய்த நூல்கள் ஸ்தோத்ர ரத்னம், சித்தித்ரயம், ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹம், ஆகமப்ராமாண்யம், சது:ஸ்லோகி என்னும் வடமொழி நூல்கள். இவர் நான்குவேதங்களையும் ஆறு சாத்திரங்களையும் அனைத்து அறிவு நூல்களையும் சீடர்களுக்கு சொல்லிக் கொடுத்து நூற்றி இருபத்தைந்து வருடம் வாழ்ந்திருந்தார். இவர் நம்பெருமாளின் அனுமதியினால் திருநாடு எனப்படும் பரமபதத்திற்கு எழுந்தருளின (இறந்த) இடம் திருவரங்கம். இறுதிக் காரியங்கள் பண்ணப்பட்ட இடம் திருப்பார்த்துறை.

(தனியனின் பொருள் தற்காலத் தமிழிலேயே இருப்பதால் அதனை மீண்டும் சொல்லவில்லை.)

ஆளவந்தார் திருவடிகளே சரணம்.

Sunday, August 09, 2009

வாழ்க இரவிசங்கரன் படி! பல்லாண்டு வாழ்க வாழ்க!

பேசும் பேச்செல்லாம் ஈசன் திருநாமம்
வாசம் கொள்வதுவோ கேசன் திருவாசல்
நேசம் மிகு நெஞ்சில் தேசும் மிக ஒளிரும்
நேசன் இரவி சங்க ரேசன் வாழியவே!

வாழி கேயாரெஸ் வாழி புதுயார்க்கன்
வாழி புதுஜெர்சி வாழ் வேந்தன் வாழியவே
மாயோனை சேயோனை தாயோனை மறவாத
மாயவன் இரவிசங்கரன்!


***


ஊனேறு செல்வத்து உடற்பிறவி யான் வேண்டேன்
ஆனே(று) ஏழ் வென்றான் அடிமைத் திறம் அல்லால்
கூனேறு சங்கம் இடத்தான் தன் வேங்கடத்து
கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே

நப்பின்னைப் பிராட்டியை மணப்பதற்காக ஏழு எருதுகளை வென்ற கண்ணனின் அடிமையாய் வாழும் நல்வாழ்க்கையை அன்றி வலிமை மிக்க உடலில் அருமையான அழகிய புஜங்களும் மார்புகளும் கொண்ட வீர வாழ்க்கையை நான் வேண்டேன். வளைந்திருக்கும் சங்கினைத் தன் இடக்கரத்தில் ஏந்தியிருக்கும் திருவேங்கடத்தானின் கோனேரித் தீர்த்தத்தில் வாழும் கொக்காய் பிறப்பேனே.



ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ
வான் ஆளும் செல்வமும் மண்ணரசும் யான் வேண்டேன்
தேனார் பூஞ்சோலைத் திருவேங்கடச் சுனையில்
மீனாய்ப் பிறக்கும் விதியுடையேன் ஆவேனே

கொக்காய்ப் பிறப்பேன் என்றேன். ஆனால் கொக்காய்ப் பிறந்தால் ஏதோ ஒரு நேரத்தில் திருவேங்கடத்தை விட்டுப் பறந்து போக வாய்ப்புண்டு. அதனால் கொக்காய் பிறப்பதைக் காட்டிலும் மீனாய்ப் பிறப்பது மேல்.

அளவில்லாத செல்வத்துடன் அரம்பையர்களால் சூழப்பட்டு வானுலகத்தை ஆளும் பெரும் வாய்ப்பையும் மண்ணுலகத்தில் அரசாள்வதையும் நான் வேண்டேன். தேனால் நிரம்பியப் பூக்களைக் கொண்ட சோலைகள் உடைய திருவேங்கடத்தில் இருக்கும் நீர்ச்சுனையில் மீனாய்ப் பிறக்கும் பெரும் வாய்ப்பு உடையவன் ஆவேனே.



பின்னிட்ட சடையானும் பிரமனும் இந்திரனும்
துன்னிட்டுப் புகல் அரிய வைகுந்த நீள்வாசல்
மின்வட்டச் சுடராழி வேங்கடக்கோன் தான் உமிழும்
பொன்வட்டில் பிடித்(து) உடனே புகப் பெறுவேன் ஆவேனே

மீனாய்ப் பிறந்தாலும் வேங்கடவன் அருகாமை கிடைக்காது. அது மட்டுமின்றி என்றாவது அந்த நீர்ச்சுனை வற்றிப் போனால் மீனாய் எடுத்தப் பிறவியும் வீணே போகும்.

பின்னலுடைய சடையணிந்த சிவபெருமானும் பிரமனும் இந்திரனும் விரைந்து உன்னைக் காண்பதற்காக வைகுந்தத் திருவாசலில் குழுமி நிற்கின்றனர். நீ மின்னலைப் போல் சுழலும் வட்ட வடிவு கொண்ட சக்கரத்தைக் கொண்டுள்ளாய். திருவேங்கடத்தலைவா. நீ உன் எச்சிலை உமிழும் போது அதனைத் தாங்குவதற்காக பொன்வட்டிலைப் பிடித்து நின்று என்றும் உன்னுடனே எல்லா இடத்திற்கும் செல்லும் பேறு பெறுவேன் ஆவேனே.



ஒண்பவள வேலை உலவு தண் பாற்கடலுள்
கண் துயிலும் மாயோன் கழலிணைகள் காண்பதற்கு
பண்பகரும் வண்டினங்கள் பண் பாடும் வேங்கடத்து
செண்பகமாய் நிற்கும் திருவுடையேன் ஆவேனே

நீ உமிழும் பொன்வட்டிலைத் தாங்கும் அடிமையாய் இருப்பேன் என்றேன். ஆனால் அதனால் உன் திருமுகத்தைக் காணும் பேறு மட்டுமே கிடைக்கும். திருவடிகள் அல்லவா அடியவர்க்குப் பெரும்பேறு.

அருமையான பவளங்களை அலைகள் கரையினில் தினமும் சேர்க்கும் குளிர்ந்தத் திருப்பாற்கடலில் அறிதுயில் புரியும் மாயவா உன் கழலிணைகள் காண்பதற்கு வழி தெரிந்துவிட்டது. பாடல்களைப் பாடிய படி வண்டுக் கூட்டங்கள் திரியும் திருவேங்கட மலையில் ஒரு செண்பக மரமாய் நிற்கும் பெரும்பேறு உடையேன் ஆவேனே. தினந்தோறும் உன் திருவடிகளுக்கு அர்ச்சனையாய் செண்பக மலர்கள் தந்து எப்போதும் உன் திருவடிகளில் நிலையாக இருப்பேனே.

கம்பமத யானை கழுத்தகத்தின் மேலிருந்து
இன்பமரும் செல்வமும் இவ்வரசும் யான் வேண்டேன்
எம்பெருமான் ஈசன் எழில் வேங்கட மலை மேல்
தம்பகமாய் நிற்கும் தவமுடையேன் ஆவேனே

செண்பக மரமாய் நிற்கும் பேறு பெரும் புண்ணியம் செய்தவர்க்கே கிட்டுமோ என்னவோ? அப்படியென்றால் திருவேங்கட மலை மேல் ஒரு முள்செடியாயாவது பிறக்கும் பேறு பெறுவேன்.

வலிமையும் அழகும் மிகுந்த பட்டத்து யானையின் கழுத்தின் மீதேறி இன்பத்தை நுகரும் செல்வத்தையும் அரசாட்சியையும் நான் வேண்டேன். எனக்கும் இந்த ஈரேழ் உலகங்களுக்கும் தலைவனான திருவேங்கட நாதனின் திருமலை மேல் ஒரு முள்செடியாய் நிற்கும் தவமுடையேன் ஆவேனே.



மின்னனைய நுண்ணிடையார் உருப்பசியும் மேனகையும்
அன்னவர்தம் பாடலொடு ஆடலவை ஆதரியேன்
தென்னவென வண்டினங்கள் பண்பாடும் வேங்கடத்துள்
அன்னனைய பொற்குவடாம் அருந்தவத்தன் ஆவேனே


முள்செடியாய் நின்றால் எனக்கு மட்டுமே பயன். எம்பெருமானுக்கோ அடியவர்களுக்கோ எந்த பயனும் இல்லை. அதனால் திருவேங்கடமலையில் இருக்கும் பல சிகரங்களுக்குள் ஒரு சிகரமாக நான் நின்றால் இறைவன் இருக்கும் இடம் இது என்று அடியவர்களுக்கு உணர்த்தும் பேறு கிடைக்கும். (சிகரம் என்றால் மலைச் சிகரம் என்றும் கோபுரம் என்றும் பொருள் தரும்).

மின்னலைப் போன்ற நுண்ணிய இடையினை உடைய ஊர்வசியும் மேனகையும் அவர்களைப் போன்றவர்களும் பாடியும் ஆடியும் மகிழ்விக்கும் இன்பங்களை நான் விரும்பேன். அவர்களின் பாடல் ஆடலைவிட இனிமையாக தேனினைப் போல் (தென்ன வென) வண்டுக் கூட்டங்கள் பண்களைப் பாடி ஆடும் திருவேங்கடத்துள் அழகு மிகுந்த பொற்சிகரமாக ஆகும் அரிய தவத்தை உடையவன் ஆவேனே.

வானாளும் மாமதி போல் வெண்குடைக்கீழ் மன்னவர்தம்
கோனாகி வீற்றிருந்து கொண்டாடும் செல்வறியேன்
தேனார் பூஞ்சோலைத் திருவேங்கட மலை மேல்
கானாறாய்ப் பாயும் கருத்துடையேன் ஆவேனே.

மலைச்சிகரமாய் நின்றாலும் யாருக்கும் பயனின்றிப் போகலாம். எத்தனையோ சிகரங்கள் இருக்கின்றன; அதனால் அடியார்களுக்கும் பயனின்றிப் போகலாம். ஆனால் திருவேங்கட மலையில் ஒரு காட்டாறாய் நான் இருந்தால் உன் திருமுழுக்குக்கும் ஆவேன்; அடியார்களின் தாகத்திற்கும் ஆவேன்.

வானத்தில் இருக்கும் விண்மீன்களையெல்லாம் தன் ஒளியால் வென்று வானத்தை ஆளும் முழுமதியைப் போல் வெண்கொற்றக் குடையின் கீழ் அரசாளும் மன்னவர்களை எல்லாம் திறத்தால் வென்று அவர்கள் தலைவனாக வீற்றிருக்கும் பெருமையையும் நான் வேண்டேன். தேன் நிரம்பும் பூக்கள் உடைய சோலைகளைக் கொண்ட திருவேங்கட மலை மேல் ஒரு காட்டாறாய் பாயும் எண்ணத்தைக் கொண்டவன் ஆவேனே.



பிறையேறு சடையானும் பிரமனும் இந்திரனும்
முறையாய பெருவேள்விக் குறை முடிப்பான் மறையானான்
வெறியார் தண் சோலைத் திருவேங்கடமலை மேல்
நெறியாய்க் கிடக்கும் நிலையுடையேன் ஆவேனே

பொற்சிகரமாய் நின்றாலும் உன் கோயிலைச் சுற்றி அடர்ந்த காடுகள் இருப்பதால் அடியார்களால் உன் கோயிலை அடைய முடியாமல் போகலாம். அதனால் அவர்கள் உன் கோயிலை அடையும் வழியாக நான் ஆவேன்.

பிறையினை தன் சடையில் வைத்திருக்கும் சிவபெருமானும் பிரமனும் இந்திரனும் முறையுடன் உன்னை வேண்டிச் செய்யும் பெரும் வேள்விகளுக்கான பயன்களைத் தந்து அவர்களின் குறை தீர்ப்பாய். அவர்கள் முறை என்ன என்று அறியும் வகை சொல்லும் வேதங்களாய் நின்றாய். நறுமணம் கமழும் குளிர்ந்த சோலைகளைக் கொண்ட திருவேங்கட மலை மேல் அடியவர்கள் உன் திருக்கோயிலை அடையும் வழியாகக் கிடக்கும் நன்னிலை உடையவன் ஆவேனே.


செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே வேங்கடவா நின் கோயிலின் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே

உன் கோயிலுக்கு வரும் வழிகள் பல இருக்கலாம். அதனால் உன்னைக் காண வரும் அடியார்களில் சிலர் நான் வழியாய்க் கிடந்தாலும் என் மேல் வராமல் வேறு வழியாய் உன் கோயிலை அடையலாம். அவர்கள் எல்லோருடைய திருவடிகளும் என் மேல் பட வேண்டும் என்றால் உன் திருக்கோயிலின் படியாய் கிடக்கும் பேறு வேண்டும்.

பற்பல பிறவிகளாய் செய்த ஒன்றுடன் ஒன்று பிணைந்த காட்டுச் செடிகளைப் போல் இருக்கும் என் வலிய வினைக்கூட்டங்களைத் தீர்க்கும் திருமகள் மணாளா. நான் என்றோ செய்த சிறிய நல்வினையை நினைவில் நெடுங்காலம் கொண்டு எனைக் காப்பவனே நெடியவனே. திருவேங்கடவா. உன் கோயிலின் வாசலில் அடியவர்களும் வானவர்களும் அரம்பையர்களும் வந்து உன்னைக் காணுமாறு ஒரு படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே.



உம்பர் உலகாண்டு ஒரு குடைக்கீழ் உருப்பசி தன்
அம்பொற்கலை அல்குல் பெற்றாலும் ஆதரியேன்
செம்பவள வாயான் திருவேங்கடமென்னும்
எம்பெருமான் பொன்மலை மேல் ஏதேனும் ஆவேனே.

நான் ஏன் இப்படி இது ஆவேன்; அது ஆவேன் என்று உன்னை வேண்டிக் கொண்டிருக்கிறேன். அடியவனுக்கு அழகு தன் தலைவன் தன்னை எந்த நிலையில் வைத்தாலும் அதில் மகிழ்ந்திருந்து தலைவனுக்குத் தொண்டு செய்வதே. அதனால் நீ என்னை எந்த நிலையில் வைத்தாலும் அதற்கிணங்க ஏதேனும் ஒன்றாய் திருவேங்கட மலை மேல் நான் ஆவேன்.

தேவர்கள் உலகங்களை ஒரு குடை கீழ் ஆண்டு ஊர்வசியின் அழகிய பொன்னாடைகள் அணிந்த இடையிலிருந்து கிடைக்கும் இன்பத்தைப் பெற்றாலும் அதனை விரும்பேன். சிவந்த செம்மையான் திருப்பவள வாயானின் திருவேங்கடமென்னும் எம்பெருமானுடைய பொன் மலையில் அவன் திருவுள்ளப்படி ஏதேனும் ஆவேனே.


மன்னிய தண் சாரல் வடவேங்கடத்தான் தன்
பொன்னியலும் சேவடிகள் காண்பான் புரிந்திறைஞ்சி
கொன்னவிலும் கூர்வேல் குலசேகரன் சொன்ன
பன்னிய நூல் தமிழ்வல்லார் பாங்காய பத்தர்களே

என்றென்றும் குளிர்ந்த சாரல் வீசும் வடவேங்கடத்தை உடைய எம்பெருமானின் பொன்னைப் போன்ற செவ்விய திருவடிகளைக் காண்பதற்கு இறைஞ்சி எல்லா எதிரிகளையும் வெல்லும் கூரிய வேலினைக் கைக் கொண்ட குலசேகரன் சொன்ன இந்தத் தமிழ்ப்பாடல்களை சொல்லி மனத்தில் வைத்தவர்கள் இறைவனுக்கு மிகவும் நெருக்கமான பக்தர்கள் ஆவார்கள்.