Thursday, February 26, 2009
உடுக்கை இழந்தவன் கை - 15 (பாரி வள்ளலின் கதை)
எங்கும் நிறைந்த இறையே. என் நண்பன் பாரி சென்ற வழியே நானும் செல்ல மனம் துடிக்கின்றது. அவனுக்குத் தந்த வாக்கினை மட்டும் நிறைவேற்றிவிட்டேனென்றால் போதுமே. பிரிவெனும் துயரைத் துடைத்து எறிந்து விடலாமே. அதற்கு ஒரு வழி காட்ட மாட்டாயா?
இன்னும் ஓரிரு வேளிர்கள் தான் இத்தமிழகத்தில் இருக்கிறார்கள். அவர்களிடமும் சென்று என் மக்களை மணக்கக் கேட்கிறேன். அவர்களும் மறுக்காமல் இருக்க நீயே அருள் புரியவேண்டும்'
அருகில் அமைதியாக படுத்திருக்கும் அங்கவை, சங்கவை இருவரையும் பார்த்தபடியே மனத்தில் இறையை வேண்டிக் கொள்கிறார் கபிலர். பெண்ணையாற்றங்கரையில் இருக்கும் மலையமானின் இந்நகரத்திற்கு வந்த பின் இங்கிருக்கும் சத்திரத்தில் தரப்பட்ட உணவை ஏற்றுக் கொண்டு அங்கேயே தங்கியிருக்கிறார்கள் மூவரும். இந்த முறை தான் மட்டும் தனியே அரசவைக்குச் சென்று மலையமானைப் பற்றி முதலில் நன்கு தெரிந்து கொண்டு பின்னரே தன் ஆவலை வெளியிட வேண்டும் என்று உறுதி கொண்டிருக்கிறார் கபிலர்.
***
'இன்றைக்கு நல்ல நாளாக இருக்கிறது. இன்றே மலையன் அவைக்குச் சென்று அவனைப் பாடுவோம்.
அடடா. இதென்ன புள் நிமித்தம் தடுக்கின்றதே. இன்றைக்குச் செல்ல வேண்டாமோ? பல முறை பெற்ற தோல்வியே நம் மன உறுதியைக் குலைக்கும் புள் நிமித்தமாக நின்று தடுக்கின்றதோ? இருக்கலாம். உள்ளே இருப்பவை தானே வெளியே தென்படுகின்றன. இந்தப் புட்கள் நின்று தடுத்தாலும் இன்றே மலையமானைச் சென்று பார்ப்போம். இனி மேலும் இந்தப் பெண்களின் துயரத்தைக் கண்டு கொண்டிருக்க முடியாது'
'மாளிகை வாசலுக்கு வந்துவிட்டோம். இதென்ன புலவர்களின் பெரும் கூட்டம். இன்றைக்கு ஏதேனும் முக்கியமான நாளா? மலையனின் பிறந்த நாளோ? அவன் ஏதேனும் போரில் வென்று வெற்றி விழா கொண்டாடுகின்றானா? நகரத்தில் எந்த வித கொண்டாட்டமும் தென்படவில்லையே. மாளிகை வாசலில் மட்டும் ஏன் இந்தக் கூட்டம்?
ம்ம்ம். அருகில் வந்துப் பார்த்தால் இவர்களில் பலர் புலவர்கள் இல்லை போலிருக்கிறதே. ஏதேனும் பரிசு பெற்றுச் செல்ல வந்திருக்கும் வறியவர்கள் போல் தான் இருக்கிறார்கள்'.
"காவலர்களே. இன்று ஏதேனும் முக்கிய விழாவா? மாளிகை வாசலில் இவ்வளவு பேர் நிற்கின்றார்களே"
"ஐயா. இது நாள்தோறும் காணும் காட்சியே. நம் அரசர் பெருமான் வேண்டும் என்று கேட்டு வந்தோருக்கெல்லாம் வாரி வாரி வழங்கும் வள்ளல் பெருமான். ஒவ்வொரு நாளும் அவரை வந்துப் பார்த்து ஏதேனும் இரந்து பெறுபவர்களும் உண்டு; அவரைப் பாடிப் பரிசில் பெறுபவர்களும் உண்டு"
'நாள்தோறும் காணும் காட்சியா? பரவாயில்லையே?! பாரியின் மாளிகை வாசலில் ஏதேனும் முக்கிய நாட்களில் மட்டும் தான் இவ்வளவு கூட்டம் கூடும்'
"புலவர்களும் இரவலர்களும் தனித்தனியே மன்னனைக் காண்பார்களோ?"
"இல்லை ஐயா. அனைவருமே ஒன்றாகத் தான் உள்ளே செல்வார்கள். அனைவருக்கும் பரிசு உண்டு"
"யார் எவர் என்று கூட பார்ப்பதில்லையா?"
"இல்லை ஐயா. எந்த வித வேறுபாடும் இல்லை. அனைவருக்கும் ஒரே மரியாதை தான்"
'என்ன இது? காவலர்கள் சொல்வதைப் பார்த்தால் மலையனிடம் கற்றவருக்கும் மற்றவருக்கும் ஒரே மரியாதை தான் போலிருக்கிறதே? இது தவறல்லவா? இவன் பரிசினை வழங்கி வள்ளல் என்ற பெயரைப் பெறும் நோக்கம் மட்டுமே கொண்டவனோ? தமிழையும் புலமையையும் மதிக்காதவனோ? இது என்ன கொடுமை?'
"காவலரே. நான் ஒரு தமிழ்ப்புலவன். பெயர் கபிலன். நானும் மன்னனைக் கண்டு பரிசில் பெற வந்திருக்கிறேன்"
"மகிழ்ச்சி ஐயா. நல்ல இடத்திற்குத் தான் வந்திருக்கிறீர்கள். இதோ வரிசையில் நில்லுங்கள். இன்னும் சிறிது நேரத்தில் மாளிகை வாசலைத் திறப்பார்கள். அவைக்குச் சென்று மன்னரைக் காணலாம்"
கபிலர் வரிசையில் சென்று நிற்கிறார். புலவர்களும் வறியவர்களும் ஒரேயடியாகக் குழுமி இருக்கும் அந்த இடம் இரைச்சலாக இருக்கிறது. நான் முன்னே நான் முன்னே என்று ஒருவரை ஒருவர் இடித்துத் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். வாசற்கதவு திறந்ததும் அனைவரும் உள்ளே நுழைய முயன்று நெருக்கிக் கொள்கிறார்கள்.
உள்ளே அரசவையில் அவையினருடன் மன்னன் அமர்ந்திருக்கிறான். அவைக்காவலர்கள் வந்தவர்களை ஒழுங்குப்படுத்தி ஒவ்வொருவராக மன்னவனிடம் அனுப்புகிறார்கள்.
உள்ளே சென்ற ஒவ்வொருவருக்கும் பரிசு கிடைக்கின்றது. புலவர்கள் என்றால் அவர்கள் பாடி முடிக்கும் வரை கேட்டுவிட்டுப் பின்னர் பரிசு கொடுக்கிறான் மலையன். மற்றவர் என்றால் அவர்கள் வாழ்த்தி முடித்த உடனே பரிசு கிடைக்கின்றது. பலர் மகிழ்ச்சியுடன் செல்கின்றனர். சிலர் நினைத்தது கிடைக்காமல் மன வருத்தத்துடன் செல்கின்றனர்.
"மன்னவர் வாழ்க. திருக்கோவலூர் மலையமான் வாழ்க.
மன்னவா. நான் ஒரு தமிழ்ப்புலவன். பெயர் கபிலன். அந்தணன். உன்னைப் பாட வந்திருக்கிறேன். "
"மிக்க மகிழ்ச்சி புலவரே"
"நாள் அன்று போகிப் புள் இடைத் தட்பப்
பதன் அன்று புக்குத் திறன் அன்று மொழியினும்
வறிது பெயர்குநர் அல்லர் நெறி கொளப்
பாடான்று இரங்கும் அருவிப்
பீடு கெழு மலையற் பாடியோரே"
"நல்ல பாடல் புலவரே. தங்களுக்கு ஒரு தேரை வழங்குகிறேன்"
"திருமுடிக்காரி. நான் தேரினை வேண்டி வந்தேன் என்று நினைத்தாயா? அவரவர் தகுதி அறிந்து அவரவர் வேண்டியதை வழங்குவது தானே முறை. அப்படியின்றி வருவோர்களுக்கெல்லாம் அவர்களின் தகுதியினைக் கருத்தில் கொள்ளாமல் மனம் போன போக்கில் வழங்குவது தகுமா?
ஒரு திசை ஒருவனை உள்ளி நாற்றிசைப்
பலரும் வருவர் பரிசின் மாக்கள்
வரிசை அறிதலோ அரிதே பெரிதும்
ஈதல் எளிதே மா வண் தோன்றல்!
அது நன்கு அறிந்தனை ஆயின்
பொது நோக்கு ஒழிமதி புலவர் மாட்டே!"
"ஐயனே. மிகப்பெரும் உண்மையைச் சொன்னீர்கள். வேளிர்கள் என்றாலே வள்ளல்கள் என்று வழிவழியே வரும் பெயருக்கேற்ப நடந்து கொள்ளவேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் வருபவர்களின் வரிசை அறியாமல் ஈந்து வந்தேன். இன்றைக்கு ஒரு நல்லுரையைக் கூறி நல்லறிவு புகட்டினீர்கள்"
"மன்னவா. இது நான் சொல்லும் அறிவுரை மட்டும் இல்லை. பொது நோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின் அது நோக்கி வாழ்வார் பலர் என்று பொய்யாமொழியும் சொல்கிறதே"
"கற்றபின் நிற்க மறந்துவிட்டேன். கற்றலினும் கேட்டல் நன்று என்று எனக்காகத் தான் சொன்னார்களோ.
தாங்கள் ஒரு பெரும் புலவர் என்று நினைக்கிறேன். தங்களைப் பற்றி மேலும் அறிய விழைகிறேன்"
"மன்னவா. முன்னரே சொன்னது போல் நான் ஒரு தமிழ்ப்புலவன். அந்தணன். பெயர் கபிலன். அகத் திணைகளில் குறிஞ்சித் திணையில் நிறைய பாடல்கள் இயற்றியிருக்கிறேன்"
"ஐயனே. நீங்கள் தான் குறிஞ்சிக்குப் புகழ் தந்த கபிலரா? இறையனாரும் முருகப்பெருமானும் கட்டிக் காத்த தமிழ்ச்சங்கத்தில் முதன்மை பெற்று இருப்பவர் தாங்கள் தானா? என் குலக்கடவுள் மாயோனின் திருவருளால் நீங்கள் என் மாளிகைக்கு வந்தீர்கள். உங்கள் பெருமை அறியாமல் நடந்து கொண்ட சிறியேனை மன்னிக்க வேண்டும்.
புலவர் பெருமானே. இந்த ஆசனத்தில் அமர வேண்டும்."
அவன் தந்த ஆசனத்தில் அமர்ந்தார் கபிலர்.
"மன்னவா. சிலர் எத்தனை முறை சொன்னாலும் நல்லவற்றைக் கேட்க மாட்டார்கள். நீ ஒரு முறை சொன்னவுடனேயே புரிந்து கொண்டாய். கூர் மதி படைத்தவன் நீ. என்னை மட்டுமின்றி இனி இங்கே வரும் எல்லோரையும் அவரவர் தகுதி அறிந்து அவர்களைப் பெருமை செய்வாய். அதனால் உன் பொருளும் புகழும் குலமும் வளரும்"
"அப்படியே செய்கிறேன் ஐயனே. தாங்கள் என்னிடம் பரிசில் பெற வந்ததாகத் தெரியவில்லை. என்னை நோக்கி வந்த காரணத்தைச் சொல்லி அருளுங்கள்"
"மலையமான். உன்னுடைய குலத்திற்குத் தகுந்த குலம் பாரி வள்ளலின் குலம். அந்தப் பாரிவேள் எனது நெருங்கிய தோழன். அவனது மக்கள் இருவரையும் நீ மணந்து கொள்ள வேண்டும்"
"ஐயனே. நானோ சிறியவன். எனக்கு எது நன்மை தரும் என்பதை சான்றோராகிய நீங்களே அறிவீர்கள். தங்கள் ஆணைப்படியே நடந்து கொள்கிறேன்"
"திருமுடிக்காரி. பாரிவேள் மூவேந்தர்களுக்கு பெண் தர மறுத்து இறந்து பட்டதை நீ அறிவாய் தானே?"
"அறிவேன் ஐயனே. வேந்தர்களுக்குப் பெண் தரும் வழக்கம் வேளிர் நடுவே இருந்தாலும் தர மறுக்கும் வேளிர்களும் உண்டு. அவர்களின் குல வழக்கத்தை நான் மதிக்கிறேன். வள்ளல் பாரிவேளின் குல வழக்கமும் அப்படியே அமைந்தது போலும். அதனால் அவர் பெண் தர மறுத்திருக்கலாம். இப்போது தங்களின் ஆணைப்படி வேளிர்களின் ஒருவனான நான் அப்பெண்களை மணந்து கொள்கிறேன்"
"வேந்தர்களிடம் உனக்கு பயம் இல்லையா?"
"ஐயனே. பெண் கேட்பது அவர்கள் உரிமை. தர மறுப்பது பாரிவேளின் உரிமை. பெண் தரவில்லையாயின் ஒதுங்கிச் செல்வதே வேந்தர்களுக்கு அழகாக இருந்திருக்கும். அதனை மீறி அவர்கள் பறம்பு நாட்டின் மேல் படையெடுத்தார்கள். சூழ்ச்சியால் வென்றார்கள்.
பாரிவள்ளல் தங்களிடம் அவர் மக்களை அடைக்கலமாகத் தந்தார். என்னிடம் அப்பெண்களை மணக்க வேண்டுவது உங்கள் உரிமை. அதனை ஏற்றுக் கொள்வது என் கடமை. அதனால் வேந்தர்கள் வெகுண்டால் அவர்களுக்குத் தகுந்த பதிலை மலையமான் அளிப்பான். அதனை அவர்களும் அறிவார்கள். அவர்களின் சூழ்ச்சி என்னிடம் செல்லாது"
"மன்னவா. உன் வீரத்தைக் கண்டு மிக்க மகிழ்ந்தேன். விரைவில் ஒரு நல்ல நாளில் உனக்கும் பாரி மகளிருக்கும் திருமணம் நடைபெறும்"
"தங்கள் ஆணை ஐயனே"
“குலம், கல்வி, செல்வம் என்று எல்லா வகைகளிலும் தகுதியுடைய கிழத்தியை மேற்கூறிய எல்லா வகைகளிலும் சமமான தகுதிகள் உடைய கிழவனுக்கு மணமகளின் பெற்றோர் மகிழ்வுடன் தர மணமகளின் பெற்றோர் மகிழ்வுடன் அருகில் நிற்க நடக்கும் திருமணம் கற்பு மணம் என்று சான்றோர் சொல்லுவர். அப்படிப்பட்ட கற்பு மணத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாக உங்கள் திருமணம் திகழட்டும்"
***
பாடற்குறிப்புகள்:
1. 'நாள் அன்று போகி' என்று தொடங்கும் பாடல் புறநானூற்றின் 124 ஆம் பாடல். கபிலர் மலையமான் திருமுடிக்காரியைப் பாடியது. திணை: பாடாண்திணை (பாடப்பெறுபவரது பெருமைகளைக் கூறும் திணை); துறை: இயன்மொழி (உள்ளதை உள்ளபடியே கூறும் துறை).
பொழிப்புரை: நாள் நல்ல நாளாக அமையாமல், புள் நிமித்தம் இடையே நின்று தடுக்க, முறைப்படி மாளிகைக்குள் நுழையாமல், திறமையொன்றும் இல்லாமல் தகாத சொற்களைச் சொன்னாலும் வறுமையுடன் செல்லமாட்டார்கள், நெறிகளுடன் கூடிய இன்னிசையை எழுப்பிக் கொண்டு வீழும் அருவியை உடைய பெருமை பொருந்திய மலையை உடையவனைப் பாடியவர்கள்.
(கதையில் சொல்லப்பட்ட நிகழ்ச்சிகள் இப்பாடலை அடிப்படையாகக் கொண்டே சொல்லப்பட்டன).
2. 'ஒரு திசை ஒருவனை' என்று தொடங்கும் பாடல் புறநானூற்றின் 121வது பாடல். கபிலர் மலையமான் திருமுடிக்காரியைப் பாடியது. திணை: பாடாண்திணை. துறை: பொருண்மொழிக்காஞ்சி (நீதிநெறிகளைக் கூறும் துறை)
பொழிப்புரை: ஒரு திசையில் 'வள்ளல் என்றாலே இவன் தான்' என்று சொல்லும்படி விளங்கும் ஒருவனிடம் பரிசில் பெற நினைந்து நான்கு திசைகளில் இருந்தும் பரிசு பெற விரும்புபவர்கள் வருவார்கள். அவர்களின் தகுதிகளை அறிவது மிக அரிது. அவர்களுக்கு ஈதலோ மிக எளிது. பெரிய வள்ளல் தன்மை உடைய தலைவனே! தகுதியின் படி ஒருவரைப் பெருமைப்படுத்த வேண்டும் என்ற நெறியினை நீ நன்கு அறிந்தாய் ஆயின் ஒரே தரமாகப் புலவர்களையும் பார்ப்பதை தவிர்ப்பாய்.
Monday, February 09, 2009
சிவன் பாட்டு, கண்ணன் பாட்டு, அம்மன் பாட்டு, முருகனருள் கூடும் கூடல்!!!
காணக் கண் கோடி வேண்டும்! ஐயன்
கால் தூக்கி நின்றாடும் காட்சி பொன்னம்பலத்தில்
(காணக்)
மானாட மழுவாட மதியாட புனலாட
மாலாட அயனாட மங்கை சிவகாமியாட
(காணக்)
நீர் பூத்த மேக நிறம் கொண்ட வண்ணா!
பார் பூத்த உந்திப் பரந்தாமனே கண்ணா!
கார் மேவும் ச்ரிரங்கம் காவிரிக் கரை மேலே
கள்ளத் துயில் கொண்டுலகைக் காக்கும் பெருமாளே!
ஏன் பள்ளி கொண்டீரையா? ஸ்ரீரங்கநாதா!
(ஏன்)
மணம் வீசும் கதம்ப வன வாசினீ!
மாமதுராபுரி ஆளும் தேவி மகராணி!
திக்குவிஜயம் செய்ய சேனையுடனே சென்று
சொக்கனுக்கு மாலையிட்ட மீனாட்சி!
(மணம்)
(கானக்) குறவள்ளி குஞ்சரி மருவிடும் குகனே!
திருச்செந்தூர் வளர் ஆறுமுகனே!
ஒரு மாங்கனி வேண்டிச் சிறுபிள்ளைத்தனமாக
உலகை வலம் வந்த சிவபாலா!
உன் திருக்கோவில் வலம் வர நான் என்ன
புண்ணியம் செய்தேன் வடிவேலா!
பச்சை மாமலை போல் மேனி
பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே
ஆயர் தம் கொழுந்தே!
(பச்சை)
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு!
வடிவாய் நின் வலமார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு!
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு!
பலகோடி நூறாயிரம்!
Thursday, February 05, 2009
கூரத்தாழ்வானின் குரு பரம்பரை - 2
மேதினியில் வைகாசி விசாகத்தோன் வாழியே
வேதத்தைச் செந்தமிழால் விரித்துரைத்தோன் வாழியே
ஆதி குருவாய் புவியில் அவதரித்தோன் வாழியே
அனவரதம் சேனையர்கோன் அடி தொழுவோன் வாழியே
நாதனுக்கு நாலாயிரம் உரைத்தான் வாழியே
நன்மதுரகவி வணங்கும் நாவீறன் வாழியே
மாதவன் பொற்பாதுகையாய் வளர்ந்தருள்வோன் வாழியே
மகிழ் மாறன் சடகோபன் வையகத்தில் வாழியே
வைகாசி விசாகத்தில் தமிழ்க்கடவுள் திருமுருகனும் வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபனும் பிறந்தார்கள். அதனால் 'வைகாசி விசாகத்தோன்' என்ற விருது இருவருக்கும் பொருந்துகின்றது. உலகத்தில் வைகாசி விசாகத்தில் பிறந்த நம்மாழ்வார் வாழ்க. மேதினியில் வைகாசி விசாகத்தோன் வாழியே.
வடமொழியில் இருக்கும் நான்கு வேதங்கள் காலத்தால் முந்தியவை. ஆக்கியவர் இவர் என்று காட்டும் படி இல்லாதவை - அதனால் 'அபௌருஷேயம்' என்று அழைக்கப்படுபவை. அப்படி காலத்தால் முந்தையதாக இருப்பதாலும் அதில் உள்ள சொற்கள் மறைமொழியாக இருப்பதாலும் சில இடங்களில் பொருள் தெளிவாக சட்டென்று விளங்காத படி அமைந்திருக்கின்றன. அப்படிப்பட்ட வேதங்களை 'எல்லோரும்' எளிதாக படித்து உணர்ந்து கொள்ளும் வண்ணம் செந்தமிழில் விரித்து உரைத்தார் நம்மாழ்வார். அதனால் தான் 'செய்ய தமிழ் மாலைகள் நாம் தெளிய ஓதி தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே' என்று சுவாமி வேதாந்த தேசிகன் மனம் உவந்து பாடினார். வேதத்தைச் செந்தமிழால் விரித்து உரைத்தோன் வாழியே.
குலமுதல்வன் என்றும் கூடஸ்தன் என்றும் குலபதி என்றும் போற்றும் படி ஆசாரிய வரிசையில் முதல் மானுட குருவாய் புவியில் அவதரித்தவர் பராங்குசனான நம்மாழ்வார். ஆதி குருவாய் புவியில் அவதரித்தோன் வாழியே.
என்றென்றும் தன் குருவான சேனைமுதல்வரின் திருவடிகளைத் தொழுபவர் நம்மாழ்வார். அனவரதம் சேனையர்கோன் அடி தொழுவோன் வாழியே.
கால வெள்ளத்தில் கரைந்து போன ஆழ்வார்களின் நாலாயிரப் பனுவல்களைத் தேடி வந்த நாதமுனிகளுக்கு அந்த நாலாயிரம் பாசுரங்களையும் உரைத்து அவரை ஆசாரிய பரம்பரையில் அடுத்த ஆசாரியன் ஆக்கியவர் நம்மாழ்வார். நாதனுக்கு நாலாயிரம் உரைத்தான் வாழியே.
வயது, படிப்பு, பிறப்பு என்று எந்த ஏற்றத் தாழ்வுகளையும் பார்க்காத நல்ல மதுரகவியாழ்வார் வணங்கும் திருநாவுக்கரசர் நம்மாழ்வார். நன்மதுரகவி வணங்கும் நாவீறன் வாழியே.
திருமகள் நாதன் என்னும் பரதெய்வத்தின் திருப்பாதுகைகளாக - சடாரியாகத் திருக்கோவில்களில் என்றென்றும் வீற்றிருந்து திருமகள் நாதனின் திருவருளை அன்பர்களுக்கு அள்ளித் தருபவர் நம்மாழ்வார். மாதவன் பொற்பாதுகையாய் வளர்ந்து அருள்வோன் வாழியே.
என்றைக்கும் மகிழ்வுடன் மகிழம்பூ மாலையை அணிந்து உலகத்தில் வகுளாபரணராய் விளங்குபவர் மாறன் சடகோபனான நம்மாழ்வார். மகிழ் மாறன் சடகோபன் வையகத்தில் வாழியே.