Saturday, April 28, 2007

ஒரு நிமிட மேலாளர் (One Minute Manager) - பகுதி 1

ஒரு நிமிட மேலாளர் (One Minute Manager) என்றொரு புத்தகத்தை ஏழு வருடங்களுக்கு முன்னர் படித்தேன். படித்தவுடன் அந்தப் புத்தகத்தில் இருக்கும் கருத்து மிகவும் பிடித்தது.

நான்கு ஒரு நிமிட மேலாண்மைக் கருத்துகளை இந்தப் புத்தகத்தில் சொல்லியிருக்கிறார்கள்.

ஒரு நிமிடத்தில் குறிக்கோள் குறித்தல் (One Minute Goal Setting)
ஒரு நிமிடத்தில் நிலை அறிதல் (One Minute Status)
ஒரு நிமிடத்தில் பாராட்டுதல் (One Minute Appreciation)
ஒரு நிமிடத்தில் தவறுகளைச் சுட்டுதல் (One Minute Reprimand)

1. ஒரு நிமிடத்தில் குறிக்கோள் குறித்தல்:

இது மிக முக்கியமான ஒன்று. பல மேலாளர்கள் செய்யத் தவறுவது. பல முறை நான் செய்ய மறந்து பின்னர் தவறுகள் நேரும் போது சரி செய்திருக்கிறேன். குறிக்கோள் என்ன என்பதைத் தெளிவாகச் சொல்லாவிட்டால் எப்படி அந்தக் குறிக்கோளை அடைய முடியும்?

சிலர் குறிக்கோளைச் சொல்கிறேன் என்று நிறைய நேரம் எடுத்துக் கொள்வார்கள். இந்த 'ஒரு நிமிடத்தில் குறிக்கோள் குறித்தல்' முறையில் அதிகபட்சம் ஐந்து நிமிடங்கள் எடுத்துக் கொண்டால் போதும். அப்படியென்றால் நீண்ட காலக் குறிக்கோளை வரையறுக்க முடியாது; குறுகிய காலக் குறிக்கோளைத் தான் வரையறுக்க முடியும் என்று சில மேலாளர்கள் நினைக்கிறார்கள். அப்படியில்லை. முதலில் நீண்ட காலக் குறிக்கோளை வரையறுத்துவிட்டு பின்னர் அந்தக் குறிக்கோளை அடைய குறுகிய காலக் குறிக்கோள்களைப் பற்றிப் பேசலாம்.

குறிக்கோளைப் பற்றிப் பேசுதல் என்றால் மேலாளருக்கு மட்டுமே குறிக்கோள் தெளிவாகப் புரிதல் இல்லை. நம்முடன் வேலை பார்த்து அந்தக் குறிக்கோளை அடைய உதவுபவர்களும் அந்தக் குறிக்கோளை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். கடந்த பல ஆண்டுகளாக இதில் பல முறை கோட்டை விட்டு பின்னர் சரி செய்திருக்கிறேன். குறிக்கோள் எல்லோருக்கும் தெளிவாகப் புரிந்தால் தான் வேலை சரியாக சரியான நேரத்தில் நடந்து முடியும். வேலை செய்பவருக்குக் குறிக்கோள் புரியாமல் இருந்தால் அவர்களுக்கு தாங்கள் செய்யும் வேலையின் முக்கியத்துவமும் நேரத்தோடு செய்து முடிக்க வேண்டிய கட்டாயமும் புரியாது. அப்படி நடந்தால் வேலை நேரத்துக்கு நடக்காமல் மேலாளரும் கடைசி நிமிடத்தில் அந்த வேலையை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்ய வேண்டியிருக்கும். அப்புறம் யாரை நொந்து என்ன பயன்?

ஒரு நிமிடத்தில் (சரி ஐந்து நிமிடத்தில் என்றே சொல்வோம்) குறிக்கோளைக் குறித்துப் பேசும் போது வேலை செய்பவர்களுக்கும் அந்த குறிக்கோள் புரிந்ததா, அந்தக் குறிக்கோளின் முக்கியத்துவம் புரிந்ததா, அந்த வேலையைச் செய்வதால் எடுத்துக்கொண்ட பணிக்கு என்ன பயன் என்று புரிந்ததா, வேலை செய்யும் தங்களுக்கு அதனால் என்ன நன்மை என்று புரிந்ததா என்று அறிந்து கொள்ள வேண்டும். அதற்கு குறிப்பான கேள்விகளை (Pointed Questions) அவர்களிடம் அந்த ஐந்து நிமிடங்களிலேயே கேட்கலாம். பல முறை அவர்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்பதும் இன்னும் சரியான சொற்களைப் பயன்படுத்தினால் அவர்கள் சரியாகப் புரிந்து கொள்வார்கள் என்பதையும் கண்டிருக்கிறேன். அப்படி முதன்முறையிலேயே குறிக்கோளை பணி புரிபவர்கள் தெளிவாகப் புரிந்து கொண்டு விட்டால் மேலாளருக்கு அப்புறம் வேலையே இல்லை; அவர்களே அந்த வேலைக்கு பொறுப்பு எடுத்துக் கொண்டு தானாகவே வேலையை முடித்துவிடுவார்கள்.

அடுத்த மூன்று 'ஒரு நிமிடத்தில்' கோட்பாடுகளை தொடர் இடுகைகளாக இடுகிறேன்.

இந்த இடுகைகள் மேலாளர்களுக்கு மட்டும் இல்லை. இந்தியாவில் இருக்கும் நண்பர்கள் மூலமாக வேலையை இங்கிருந்த படியே ஒருங்கிணைக்கும் மென்பொருளாளர்களும் (Onsite Coordinator), சிறு தொகுப்புத் தலைவர்களும் (Module Leader) இந்த கோட்பாடுகளைப் பயன்படுத்தலாம். நண்பர்கள் தங்கள் அனுபவங்களைப் பற்றிப் பேசினால் இந்தத் தொடர் இன்னும் பயனுள்ளதாக இருக்கும்.

Sunday, April 22, 2007

சித்திரை திருவாதிரை

திருவாதிரைத் திருநாள் என்று மார்கழியில் வரும் திருவாதிரைத் திருநாளைக் கொண்டாடுவார்கள். அன்று தான் ஆடல் வல்லானின் அருந்தரிசனம் தில்லைமாநகரில் கிடைக்கிறது. சித்திரையில் வரும் திருவாதிரை நாளும் சிறந்த நாள். இந்து மதத்தின் முப்பெரும் ஆசாரியர்களில் முதல் இருவரும் அவதரித்தத் திருநாள் இது. முதல் ஆசாரியரும் அத்வைத தத்துவத்தை நிலை நாட்டியவரும் ஆன ஸ்ரீ ஆதி சங்கர பகவத்பாதரும் இரண்டாவது ஆசாரியரும் ஸ்ரீ வைஷ்ணவ சம்ப்ரதாயத்தையும் விசிஷ்டாத்வைத தத்துவத்தை நிலை நாட்டியவரும் ஆன உடையவர் ஸ்ரீ இராமானுஜரும் தோன்றிய புனித நாள் இது.



விதிதாகில சாஸ்த்ர சுதா ஜலதே
மஹிதோபநிஷத் கதிதார்த்தநிதே
ஹ்ருதயே கலயே விமலம் சரணம்
பவ சங்கர தேசிக மே சரணம் (தோடகாஷ்டகம் 1)

அனைத்து சாஸ்திரங்களின் நுண்பொருட்கள் என்னும் பெருங்கடலை நன்கு அறிந்தவரே! மிகப்பெரும் உபநிஷதங்கள் என்னும் பெரும்நிதியை வெளிப்படுத்தியவரே! என்னுடைய இதயத்தில் குற்றமற்ற உங்கள் திருவடிகளை என்றும் நினைத்திருக்கிறேன். ஆதி சங்கர குருவே. நீங்களே எனக்குக் கதி. நான் உங்கள் அடைக்கலம்.

கருணாவருணாலய பாலயமாம்
பவ சாகர துக்க விதூன ஹ்ருதம்
ரசயாகில தர்சன தத்வவிதம்
பவ சங்கர தேசிக மே சரணம் (தோடகாஷ்டகம் 2)

கருணைக்கடலே! என்னைக் காப்பாற்றுங்கள்! சம்சாரக்கடலின் வெப்பத்தால் என் இதயம் துவண்டு போய் உள்ளது. அனைத்துத் தத்துவங்களையும் அறிந்து கொள்ளும் படி செய்யுங்கள்! ஆதி சங்கர குருவே! நீங்களே எனக்குக் கதி. நான் உங்கள் அடைக்கலம்.

இந்த தோடகாஷ்டகம் முழுப்பாடலையும் திருமதி. எம்.எஸ். அவர்களின் குரலில் கேட்க இங்கே அழுத்துங்கள்.

***



யோ நித்யம் அச்யுத பதாம்புஜ யுக்ம ருக்ம
வ்யாமோஹதஸ்ததிராணி த்ருணாய மேனே
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக ஸிந்தோ:
ராமாநுஜஸ்ய சரணௌ சரணம் ப்ரபத்யே
(தனியன்)

அச்சுதனின் திருவடித் தாமரைகளை என்றும் தம் திருமனத்தில் நிலையாகக் கொண்டிருப்பவரும் அந்தத் திருவடித் தாமரைகளைத் தவிர்த்து மற்றிருக்கும் எல்லாவற்றையும் புல்லாக மதிப்பவரும் அடியேனின் ஆசாரியனும் அனைத்து நற்குணங்கள் நிரம்பியவரும் கருணைக்கடலும் ஆன இராமானுஜரின் திருவடிகளுக்கே அடைக்கலமாக என்னை அளிக்கிறேன்.

பூமன்னு மாது பொருந்திய மார்பன் புகழ் மலிந்த
பாமன்னு மாறன் அடி பணிந்துய்ந்தவன் பல்கலையோர்
தாம் மன்ன வந்த இராமானுஜன் சரணாரவிந்தம்
நாம் மன்னி வாழ நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே (இராமானுஜ நூற்றந்தாதி 1)


தாமரைப்பூவில் வாழும் திருமகள் என்றும் நிலையாகப் பொருந்திய மார்பினை உடைய திருமாலவனின் புகழ்களை பல்லாயிரம் பாக்களால் பாடிய மாறன் சடகோபனாம் நம்மாழ்வாரின் திருவடிகளைப் பணிந்து உய்ந்தவர் - பல கலைகளும் வல்லவர்கள் என்றும் மண்ணில் நிலைத்திருக்கும் வண்ணம் தோன்றிய இராமானுஜரின் திருவடித் தாமரைகளில் நாம் என்றும் நிலையாக இருந்து நல்வாழ்வு பெற நெஞ்சமே நீயும் நானுமாக அவர் திருநாமங்களைச் சொல்லுவோம்.

Wednesday, April 11, 2007

முருகும் குழகும் அழகு

அழகினைப் பற்றி எழுத தம்பி இராமச்சந்திரமூர்த்தியும் அண்ணன் கோவி.கண்ணனும் அழைப்பு விடுத்திருக்கிறார்கள். பாருங்கள் பொருத்தத்தை. அழகு என்றாலே நினைவிற்கு வருபவர்கள் முருகனும், கண்ணனும், இராமனும். முருகு என்றாலே அழகு என்று பொருள். குழைவான அழகிற்கு கண்ணன். கம்பீரமான அழகிற்கு இராமன். அழகன் முருகன் பெயர் கொண்ட அடியவனை கம்பீர அழகன் இராமனும் குழகன் கண்ணனும் அழைத்திருக்கிறார்கள். நான் இராகவனையும் இரவிசங்கரையும் சங்கரகுமாரையும் அழைக்கிறேன்.

அழகில்லாத இடமும் உண்டோ? கடினமான சூழலிலும் எங்கோ மறைந்திருக்கும் ஆனால் நம் கண்ணெதிரிலேயே இருக்கும் அழகினைக் கண்டு கொண்டால் அந்தக் கடினச் சூழலைத் தாண்டுவது எளிதாகுமே.

மேகமில்லா வானம் அழகு. வெண் முகில்களுடன் கூடிய வானமும் அழகு. கார் மேகங்களைக் கண்டால் மயிலாருக்கு கோலாகலம்.

கொளுத்தும் வெயிலில் சோலை அழகு.

மழை பொழிந்த பின் மாலை வெயிலில் பச்சை இலைகளுடன் கூடிய மரங்கள் அழகு.

உடலை முழுதும் மூடிய பின்னும் தங்கள் அழகு நன்கு தெரியும் வண்ணம் கண்ணைக் கவரும் (கவர்ச்சிகரமான இல்லை) ஆடை அணியும் இளம் பெண்கள் அழகு.

நேர்த்தியான ஆடை அணிந்த ஆடவர் அழகு.

நிறைய கேள்விகள் கேட்டு அனைத்தையும் தெரிந்து கொள்ளும் ஆர்வம் கொண்ட குழந்தைகள் அழகு.

அவர்களிடம் நாம் தொடர்ந்து கேள்விகள் கேட்டுக் கொண்டே செல்ல அவர்கள் அறிந்தவரை விடை சொல்லிக் கொண்டே வரும் குழந்தைகள் அழகு.

கூட்டமாகப் பறந்து செல்லும் பறவைகள் அழகு.

மலர்ந்து மணம் வீசும் வண்ண மலர்கள் ஒவ்வொன்றும் அழகு.

சிறு குழந்தைகள் வரையும் கிறுக்கல் ஓவியங்கள் அழகு.

மழலை அழகு.

மழலை மாறிய பின் மழலையை நினைவில் வைத்திருந்து 'நான் முன்பு அப்படிச் சொல்வேன். இப்போது சரியாகச் சொல்கிறேன்' என்று குழந்தைகள் சொல்லும் போது அழகு.

அன்பும் பண்பும் நிறைந்தவர் அனைவரும் அழகு.