Monday, July 31, 2006

இறைவனின் திருநாமம்

நான் உங்கள் அருகில் வந்து "ஐயோ! தேள்! என்று சத்தம் போட்டால் உடனே அலறிக் குதிக்கிறீர்கள்.

"ரஸகுல்லா" என்று சொன்னால் நாக்கில் நீர் சுரக்கிறது.

"நீர் கழுதை" என்று சொன்னால் கோபப் படுகிறீர்கள் , இரத்தம் கொதிக்கிறது,
கண்கள் சிவந்து விடுகிறது .

இப்படியான சாதாரண சொற்களுக்கே இவ்வளவு சக்தி என்றால், இறைவனது திருநாமத்திற்கு எவ்வளவு சக்தி இருக்க வேண்டும்!

பிரகலாதன் , மீரா போன்றவர்களுக்கு இந்த சக்தி பற்றி தெரியும். இறைவனது பெயர் உள்ளத்தை சுத்தப்படுகிறது. இறைவனை நேருக்கு நேர் கொண்டு வருகிறது.

- சுவாமி சிவானந்தர்

Thursday, July 27, 2006

இன்றோ திருவாடிப்பூரம்!



திருவாடிப்பூரத்துச் செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்தப் பெண்பிள்ளாய் வாழியே
பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
ஒரு நூற்று நாற்பத்தி மூன்றுரைத்தாள் வாழியே
உயரரங்கற்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே
மருவாரும் திருமல்லி வளநாடி வாழியே
வண்புதுவை நகர்க் கோதை மலர்ப்பதங்கள் வாழியே


திருவாடிப்பூரம் ஆகிய இன்றையத் திருநாளில் உலகத்தில் அவதரித்தவள் வாழ்க!
திருப்பாவை முப்பதும் சொன்னவள் வாழ்க!
பெரியாழ்வார் பெருமையுடன் வளர்த்தப் பெண் பிள்ளை வாழ்க!
திருப்பெரும்புதூரில் அவதரித்த இராமானுஜமுனிக்குத் தங்கையானவள் வாழ்க!
ஒரு நூற்று நாற்பத்தி மூன்று பாசுரங்களைப் பாடியவள் வாழ்க!
உயர்வற உயர்நலம் உடைய அரங்கனுக்கு மலர்மாலையை மகிழ்ந்து தான் சூடிக் கொடுத்தவள் வாழ்க!
மணம் கமழும் திருமல்லிநாட்டைச் சேர்ந்தவள் வாழ்க!
புதுவை நகரெனும் வில்லிபுத்தூர் நகர்க் கோதையின் மலர்ப்பதங்கள் வாழ்க வாழ்க!

கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழுமூர்
சோதி மணிமாடம் தோன்றும் ஊர் - நீதிசால்
நல்ல பக்தர் வாழுமூர் நான்மறைகள் ஓதுமூர்
வில்லிபுத்தூர் வேதக் கோனூர்.

கோதை பிறந்த ஊர்
கோவிந்தன் நிலைத்து வாழும் ஊர்
ஒளிவீசும் மணி மாடங்கள் விளங்கும் ஊர்
நீதியில் சிறந்த நல்ல பக்தர்கள் வாழும் ஊர்
நான்மறைகள் என்றும் ஒலிக்கும் ஊர்
அப்படிப்பட்ட வில்லிபுத்தூர் வேதங்களின் தலைவனின் ஊர்

பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும்
வேதம் அனைத்திற்கும் வித்தாகும் - கோதைதமிழ்
ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானுடரை
வையம் சுமப்பதும் வம்பு.

பஞ்சமா பாதகங்களைத் தீர்க்கும்
பரமனின் அடிகளைக் காட்டும்
வேதங்கள் அனைத்திற்கும் வித்து ஆகும்
அப்படிப்பட்டக் கோதையின் தமிழ்ப் பாசுரங்கள்
ஐயைந்தும் ஐந்தும் (முப்பதும் - திருப்பாவை)
அறியாத மானுடரை
வையம் சுமப்பது வீண்

அன்னவயல் புதுவை ஆண்டாள் அரங்கற்கு
பன்னு திருப்பாவை பல்பதியம் இன்னிசையால்
பாடிக் கொடுத்தாள் நற்பாமாலை, பூமாலை
சூடிக் கொடுத்தாளைச் சொல்லு.

அன்னங்கள் சூழ, அன்னம் விளையும் வயல்கள் கொண்ட புதுவை என்னும் திருவில்லிபுத்தூர்.
ஆங்கு அவதரித்த ஆண்டாள், ஆரா அமுதன் அழகிய திரு அரங்கன் மீது பாடிக் கொடுத்தாள் நல்ல பாமாலை...வாய்க்கு மணம்!
போதாது என்று பூமாலையும் சூடிக்கொடுத்தாள்...மேனிக்கே மணம்!
அந்த மாலைகளை அனைவரும் சொல்லுவோம்.


சூடிக் கொடுத்தச் சுடர்கொடியே தொல்பாவை
பாடி அருளவல்ல பல்வளையாய் - நாடி நீ
வேங்கடவற்கு என்னை விதி என்ற இம்மாற்றம்
நாங்கடவா வண்ணமே நல்கு.

மலர்மாலையை மாலவனுக்குச்
சூடிக் கொடுத்த சுடர்கொடியே!
தொன்மையான பாவை நோன்பிற்காக
திருப்பாவை பாடி அருளிய பலவிதமான வளையல்களை அணிந்தவளே!
'மன்மதனே. நீ மனம் இரங்கி திருவேங்கடவனுக்கே என்னை மணாட்டியாக விதி' என்று நீ கூறிய வார்த்தைகளை நாங்களும் ஏற்று
என்றும் புறந்தொழாமல்
என்றும் படிதாண்டா பத்தினிகளாக
எம்பெருமானையே பற்றி வாழ அருள்வாய்.

இன்றோ திருவாடிப்பூரம் எமக்காக
அன்றோ ஆண்டாள் அவதரித்தாள் - குன்றாத
வாழ்வான வைகுந்த வான்போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திருமகளாராய்.

இன்றல்லவோ திருவாடிப்பூரம்! (இந்தத் திருநாளில்)எம் பொருட்டு அன்றோ ஆண்டாள் அவதரித்தாள்!(எம் மேல் அவள் கருணை எப்படிப்பட்டதெனில்) என்றும் அழியாத பெரும்பேறான வைகுந்த வான்போகத்தை (அடியாரைக் காத்தருளுவதை விட கீழானதென்று) இகழ்ந்து பெரியாழ்வர் திருமகளாராய்!

அடையுங்கள் அடையுங்கள் ஆண்டாள் திருவடி அடையுங்கள் நம் ஆண்டாள் திருவடி அடையுங்கள்!

Wednesday, July 05, 2006

ஸ்வாமியே சரணம் ஐயப்பா!



அன்னதானப் பிரபுவே சரணம் ஐயப்பா!
ஆரியங்காவு ஐயாவே சரணம் ஐயப்பா!
இருமுடிப் பிரியனே சரணம் ஐயப்பா!
ஈசன் திருமகனே சரணம் ஐயப்பா!
உய்வதற்கொரு வழியே சரணம் ஐயப்பா!
ஊழ்வினை அறுப்பவனே சரணம் ஐயப்பா!
எங்கும் நிறைந்தவனே சரணம் ஐயப்பா!
ஏழுலகாள்பவனே சரணம் ஐயப்பா!
ஐயம் நீக்கிடுவாய் சரணம் ஐயப்பா!
ஒன்றாய் நின்றவனே சரணம் ஐயப்பா!
ஓங்காரப் பொருளே சரணம் ஐயப்பா!
ஒளவியம் தனைத் தீர்ப்பாய் சரணம் ஐயப்பா!

அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் என்னைப் போன்ற தமிழ் வலைப்பதிவாளர்கள் எத்தனையோ குற்றங்களைச் செய்து கொண்டிருக்கிறோம். ஒன்றைச் சொல்ல விரும்பி வேறொன்றைச் சொல்கிறோம். உன் கருணையைப் பற்றியே ஐயம் கொள்கிறோம். உன் பாரபட்சம் இல்லாத தன்மையைத் தவறாகப் புரிந்து கொண்டு பேசிக் கொண்டிருக்கிறோம். எத்தனையோ விதங்களில் உன்னை இழித்தும் பழித்தும் பேசுகிறோம். இப்படி நாங்கள் அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் செய்த சகல குற்றங்களையும் மன்னித்துக் காத்து ரக்ஷிக்க வேணும் அருள் தரும் பொன்னு பதினெட்டாம்படி ஐயன் ஐயப்பசாமியே சரணம் ஐயப்பா.

***

ஒளவியம்: பொறாமை, தீவினை