Wednesday, July 30, 2008

செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே! சிவபெருமானே!


அம்மையே! அப்பா! ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்கு
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!

இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்து அகிலாண்ட கோடி பிரம்மாண்டங்களுக்கும் தலைவனாய் இருந்த போதிலும் எல்லா உயிர்களுக்கும் தாயும் தந்தையும் ஆனவன். இந்த உலகில் பிறக்கும் உயிர்கள் ஆணவம், கன்மம், மாயை என்னும் மூன்றுவித அழுக்குகளால் மூடப்பெற்று இறைவனை மறந்து புலன்களின் வழியே சென்று பாவக்குழியில் விழுந்து சொல்லொணா துயரம் அடையும் போது, செய்த குற்றங்களை எல்லாம் மறந்து அந்த உயிர்களை நல்வழிக்குக் கூட்டிவந்து அருள்செய்வது இறைவனின் தனிப்பெரும்கருணை. தம் குழந்தைகள் எத்தனைத் தான் குற்றங்கள் செய்திருந்தாலும் அவற்றை எல்லாம் பொறுத்து அந்த குழந்தைகளைக் காப்பது பெற்றோர் இயல்பு. இறைவன் அப்படி நம் குற்றங்களை எல்லாம் பெற்ற அன்னையும் தந்தையும் போல பொறுத்துக்கொண்டு நம்மை எப்போதும் காப்பதால் 'அம்மையே! அப்பா!' என்றார் மாணிக்கவாசகர். 'பெற்றவன் நீ குரு பொறுப்பது உன் கடன்; பெற்றவள் குறமகள் பெற்றவளாமே' என்றார் பாலன் தேவராய சுவாமிகளும்.

அருளிலார்க்கு அவ்வுலகம் இல்லை; பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லாகியாங்கு என்றார் பொய்யாமொழிப்புலவர். இந்த உலகில் நாமும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து, நம் குடும்பம், உற்றார் உறவினர், நண்பர்கள் ஆகியவர்களையும் மகிழ்ச்சியுடன் வைத்து, உலக மக்கள் அனைவரும் துன்பமின்றி இருக்குமாறு உதவி செய்ய, கைப்பொருள் மிக்க அவசியம் ஆகிறது. அந்த கைப்பொருளை அடையத்தான் இங்குள்ளவர் அனைவரும் தம் வாழ்வின் பெரும் பகுதியை செலவிட்டுக்கொண்டிருக்கிறோம். அந்த கைப்பொருளை பொன்னாகவும் மணியாகவும் மாற்றி சேமித்து வைத்தலும் நடக்கிறது. அப்படி நாம் சேமித்துவைக்கும் வைத்த நிதிகளிலேயே விலைமதிப்பற்ற ஒப்பு இல்லாத பெரும் மாணிக்கம் இறைவனே. அவன் அருள் இருந்தால் நாம் கைப்பொருளால் அடையும் அத்தனை இன்பத்தையும் அடைந்து அதற்கு மேலும் அடையலாம். நாம் சேர்த்துவைக்கும் 'வைத்த நிதிகள்' எல்லாம் காலவேகத்தில் கரைந்து போகும். ஆனால் இறைவனோ என்றும் அழியா பெரும் செல்வம் - வைத்த மா நிதி. அதனால் தான் பாண்டியனின் முதலமைச்சர் இறைவனை 'ஒப்பிலா மணியே' என்கிறார்.

அன்பே சிவம் என்றார் திருமூல நாயனார். அமுதம் கடலில் விளைந்தது. அந்த அமுதம் உண்டவர்களை இறவா நிலைக்குக் கொண்டு செல்லக்கூடியது. ஆனால் அந்த அமுதமும் அளவுக்கு மீறி அருந்தினால் திகட்டிவிடும். இறைவனோ அன்பே உருவாய் அந்த அன்பினில் விளைந்த ஆரா அமுதமானவன். அவனை அடைந்தால் இறவா நிலையும் பிறவா நிலையும் என்றும் அவன் அருகில் இருந்து ஆனந்தம் அடையும் நிலையும் அடையலாம்.

வேத நூல் பிராயம் நூறு மனிசர் தாம் புகுவரேலும்
பாதியும் உறங்கிப்போகும்; நின்றதில் பதினைந்தாண்டு
பேதைப் பாலகனதாகும்; பிணி, பசி, மூப்பு, துன்பம்


என்று பாடுவார் ஆழ்வார். வேதங்கள் விதித்தபடி ஒரு மனிதன் நூறு பிராயம் வரை வாழ்ந்தாலும், அந்த நூறில் பாதியாகிய ஐம்பது வருடங்கள் உறக்கத்தில் சென்று விடுகிறது. மிச்சம் உள்ள ஐம்பதில் பதினைந்து வருடம் வரை ஏதும் அறியா பேதைப் பருவமாய் சென்று விடுகிறது. மிச்சம் உள்ள முப்பத்தி ஐந்தில் நாம் அடையும் துன்பங்கள் அளவில - பிணி உண்டு; பசி உண்டு; மூப்படைவோம்; மற்ற எத்தனையோ துன்பங்கள். இப்படி நூறு வயது வாழ்ந்தாலுமே இறைவனை நினைக்க நமக்குக் கிடைக்கும் வாய்ப்பு மிக குறைவு. அப்படி நிலையில்லாதவற்றையே நம்பி நம் வாழ்நாளை வீணே கழித்துக்கொண்டிருக்கிறோம். அப்படிப்பட்ட வாழ்க்கையையே 'பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்' வாழ்க்கை என்கிறார் மாணிக்கவாசகர்.

அப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்துவந்த தமக்கு சிறந்த சிவபதம் என்னும் பெருமையை இறைவன் தானே வந்து அருளினான் என்பதால் 'செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே, சிவபெருமானே' என்றார்.

உன் அருளாலே உன் தாள் வணங்கினேன். இம்மையே இப்பொழுதே உன் திருவடிகளைச் சிக்கெனப் பிடித்தேன். நீர் எம்மை விட்டு எங்கே சென்றுவிடப் பார்க்கிறீர்.

Tuesday, July 29, 2008

அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!


அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!

அம்மையே - என் தாயே!

அப்பா - என் தந்தையே!

ஒப்பிலா மணியே - நிகரில்லாத மாணிக்கமே!

அன்பினில் விளைந்த ஆரமுதே - அன்பெனும் கடலில் உண்டாகிய அருமையான அமுதமே!

பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும் - பொய்யான செயல்களிலேயே ஈடுபட்டு என் வாழ்நாளை வீணே கழிக்கும்

புழுத்தலைப் புலையனேன் தனக்கு - புழுக்கள் நிரம்பிய உடலும் தலையும் கொண்டு அலையும் கீழ்மையான எனக்கு

செம்மையே ஆய - மிகவும் மேன்மையான

சிவபதம் அளித்த - என்றும் இன்பமயமான சிவ பதத்தைக் அருளிய

செல்வமே சிவபெருமானே - அருட்செல்வமே சிவபெருமானே!

இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் - இப்போதே, இவ்வுலகத்திலேயே உன்னை உறுதியாகப் பற்றினேன்

எங்கெழுந்தருளுவதினியே - நீர் இனிமேல் என்னை விட்டுவிட்டு எங்கே செல்லமுடியும்?


என் தாயே! தந்தையே! நிகரில்லாத மாணிக்கமே! அன்பெனும் கடலில் உதித்த அருமையான அமுதமே! என் உயிருக்கு உறுதி தரும் நல்ல செயல்களைச் செய்யாது தீமையான செயல்களையே செய்து என் வாழ்நாளை வீணே கழிக்கும் இந்தக் கீழானவனுக்கு மிக மேன்மையான சிவபதம் அருளிய அருட்செல்வமே! சிவபெருமானே! இந்தப் பிறவியிலேயே உன்னை உறுதியாகப் பற்றினேன். நீர் எங்கு என்னை விட்டு சென்றுவிடப் பார்க்கிறீர்?

வினையனேனுடைய மெய்ப்பொருளே!


விடைவிடாதுகந்த விண்ணவர் கோவே!
வினையனேனுடைய மெய்ப்பொருளே!
முடைவிடாதடியேன் மூத்தற மண்ணாய்
முழுப்புழுக் குரம்பையில் கிடந்து
கடைபடா வண்ணம் காத்தென்னை ஆண்ட
கடவுளே! கருணைமாக்கடலே!
இடைவிடாதுன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!

இறைவன் தருமத்தின் தலைவன். கடைபிடிக்க வேண்டியதில் சிறந்தது தருமம். தர்மோ ரக்ஷதி ரக்ஷித: - தருமம் தன்னைக் காப்பவனைக் காக்கிறது என்கிறது வேதம். அந்த தருமம் எருது ரூபமாய் இருக்கும்போது அதன் மேல் அன்பு கொண்டு அதனைத் தனது வாகனமாக ஏற்றுக்கொண்டுள்ளான் இறைவன்.

தரும வழி நடப்பவரே மனிதர் தொழும் தெய்வங்களாகி நிற்கிறார்கள். வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர்கள் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படுகிறார்கள். இறைவன் தருமத்தின் தலைவன் ஆகையால் இயற்கையாகவே அவன் விண்ணில் வாழும் விண்ணவர் தலைவன் ஆகிறான்.

அவன் விண்ணவர் தலைவனாய் அவ்வளவு உயரத்தில் நின்றாலும் புண்ணிய பாவங்கள் செய்து அந்த வினைப்பயனை அனுபவித்துக்கொண்டிருக்கும் சாதாரண உயிர்க்கும் என்றும் நிலையான துணையாக இருக்கிறான்.

ஈசன் வானவர்க்கு என்பன்; என்றால் அது
தேசமோ திருவேங்கடத்தானுக்கு?
நீசனேன் நிறை ஒன்றுமிலேன் என்கண்
பாசம் வைத்தப் பரஞ்சுடர் சோதிக்கே

என்பார் நம்மாழ்வார்.

நீசனாய் எந்த நற்குணங்களும் இல்லாமல் இருக்கும் என்னிடமும் அன்பு வைத்த இறைவனுக்கு 'வானவர் தலைவன்' என்பதா பெருமை? என்னிடமும் அன்பு வைத்தான் என்பதே பெருமை, என்கிறார் நம்மாழ்வார். அது போலவே வாதவூராரும் 'விடை விடாது உகந்த விண்ணவர் கோவே; வினையனேனுடைய மெய்ப்பொருளே' என்கிறார்.

அந்த கருத்தையே இன்னும் விரித்து 'உன் அடிமையாகிய நான் இந்த உடம்பில் கிடந்து கெட்ட நாற்றம் விடாது முதுமையடைந்து வீணே மண்ணாய் அழியாத வண்ணம் என்னை ஆண்டு கொண்டாய்' என்கிறார்.

அப்படி உயர்ந்தவன் தாழ்ந்தவனை ஆண்டுகொண்டதால் அவனைக் கருணைமாக்கடலே என்கிறார். எல்லோரும் தம்மில் உயர்ந்தவருடன் அன்புடன் நடந்துகொள்வர். தமக்கு இணையானவருடன் நட்புடன் நடந்துகொள்வர். தம்மிலும் சிறிது தாழ்ந்த நிலையில் இருப்பவருடன் அன்பு கொண்டாலே அவர்களைக் கருணைக்கடல் எனலாம். இறைவனோ மிகப் பெரியவனாய் இருந்த போதிலும் மிகத் தாழ்ந்த நம்மிடமும் கருணை கொள்வதால், அவனே 'கருணைமாக்கடல்' எனத் தகுந்தவன்.

என்னை ஆண்டு கொண்டவனே என்பதோடு நிறுத்தவில்லை. கடவுளே என்கிறார். எல்லாப் பொருளிலும் நம்மிலும் உள் கடந்து நிற்பதால் அவனுக்குக் கடவுள் என்று பெயர். நம் தனி முயற்சியால் எவ்வளவு தான் முயன்றாலும் அந்த உள் கடந்து நிற்பவனைக் காண முடியாது; அப்படி அவனைக் காணும் வரை நம் புலன்களின் ஆட்சியிலிருந்து விடுபட முடியாது. அவனே தன்னைக் காட்டிக் கொடுக்கவேண்டும். இப்படி உள்கடந்து கடவுளாய் நின்றாலும் என்மேல் கருணை கொண்டு நீயாய் உன்னைக் காட்டிக்கொடுத்தாய் என்பதைக் குறிக்கத்தான் 'கடவுளே' என்கிறார்.

இப்படிப் பட்ட உன்னை இடைவிடாமல் நான் பிடித்துக்கொண்டேன். நீ எம்மை விட்டு செல்லவேண்டாம் என்று வேண்டி இந்தப் பாட்டை முடிக்கிறார்.

Monday, July 28, 2008

விடைவிடாதுகந்த விண்ணவர் கோவே!


விடைவிடாதுகந்த விண்ணவர் கோவே!
வினையனேனுடைய மெய்ப்பொருளே!
முடைவிடாதடியேன் மூத்தற மண்ணாய்
முழுப்புழுக் குரம்பையில் கிடந்து
கடைபடா வண்ணம் காத்தென்னை ஆண்ட
கடவுளே! கருணைமாக்கடலே!
இடைவிடாதுன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!

விடைவிடாது உகந்த விண்ணவர் கோவே - தரும ரூபமான காளை மாட்டினை (விடையை) வாகனமாக விரும்பி ஏற்றுக்கொண்டுள்ள, வானில் வாழும் தேவர்களுக்கெல்லாம் அரசனே!

வினையனேனுடைய மெய்ப்பொருளே - கரும வினையின் அடிமையாகிய எனக்கு வேறு கதி இல்லை. நீயே எனக்குக் கதியாகும் உண்மைப்பொருள்.

அடியேன் - உன் அடிமையாகிய நான்

முழுபுழுக் குரம்பையில் கிடந்து - முழுவதும் நுண்ணுயிரிகளால் (புழுக்களால்) நிரம்பிய (அதனால் துன்பங்களை அடைந்து துயர் உறும்) இந்த உடலில் கிடந்து

முடை விடாது - அதனால் எழும் கெட்ட நாற்றம் (வடமொழியில் வாசனா எனப்படுவது) விடாது

மூத்தற மண்ணாய் - முதுமை அடைந்து இறுதியில் ஒன்றுமே இல்லாத மண்ணாகி

கடைபடா வண்ணம் - கீழ்மை நிலை அடையாத வண்ணம்

காத்து என்னை ஆண்ட கடவுளே

கருணைமாக்கடலே - வினைப்பயன்கள் மற்றும் வாசனைகளின் அடிமையாகிய என்னை உன் அடிமையாக்கிய கருணை மாக்கடலே.

இடைவிடாது - எப்போதும்

உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்

எங்கு எழுந்து அருளுவது இனியே!

வானில் வாழும் தேவர்களின் அரசனே! நீர் தருமத்தின் தலைவன். ஆதலினால் தரும ரூபமான ரிஷப தேவரை விரும்பி உம் வாகனமாக ஏற்றுக் கொண்டுள்ளீர். என் முன்வினைப் பயன்களால் பெரிதும் அலைப்புண்டு கலங்கி நிற்கும் எனக்கு நீரே மெய்யான கதி. உம் கடல் போன்ற கருணையால் என்னை இந்த கீழான வாழ்விலிருந்து கடைத்தேற்றினீர். நான் எப்போதும் உம் திருவடிகளை சிக்கெனப் பிடித்துள்ளேன். நீர் எங்கு செல்ல முயல்கிறீர்? நான் எப்போதும் உம் திருவடிகளைப் பற்றியுள்ளதால் நீர் எங்கும் தப்பிச் சென்று விட முடியாது.

Friday, July 25, 2008

திருவிளையாடல் நிறைவு பெற்றுவிட்டதா? :-(((


சன் தொலைக்காட்சியில் தினம் இரவு 8 மணிக்கு வந்து கொண்டிருந்த 'திருவிளையாடல்' தொடர் இன்றோடு நிறைவு பெற்றுவிட்டது போலிருக்கிறது. என்றைக்கும் 'தொடரும்' என்று முடிப்பார்கள். இன்றைக்கு 'சுபம்' போட்டுவிட்டார்கள்.

புராணம் சொன்னதில் புதுமை புகுத்துகிறோம் என்று எதையாவது செய்து குளறுபடி செய்யாமல் மிகவும் அழகாகத் தந்து கொண்டிருந்தார்கள். தொடர்ந்து விரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தோம். இந்த நல்லத் தொடர் இவ்வளவு விரைவில் முடிந்ததில் மிகவும் வருத்தம்.

ஏதேனும் அரசியல் மாற்றங்கள் நிகழ்கின்றனவா? அதனால் தான் இவ்வளவு விரைவில் இந்தத் தொடரை நிறுத்திவிட்டார்களா? அடுத்து ஞாயிற்றுக்கிழமை வரும் இராமாயணமும் நின்றுவிடுமோ?

இறைவன் மிகப்பெரியவன்


உம்பர்கட்கரசே! ஒழிவற நிறைந்த
யோகமே! ஊத்தையேன் தனக்கு
வம்பெனப் பழுத்தென் குடி முழுதாண்டு
வாழ்வற வாழ்வித்த மருந்தே!
செம்பொருட்டுணிவே! சீருடைக்கழலே!
செல்வமே! சிவபெருமானே!
எம்பொருட்டுன்னைச் சிக்கெனப்பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!


இறைவன் மிகப்பெரியவன். தேவர்களின் அரசன். இந்த உலகில் வாழ்பவர் இம்பர். மற்ற தெய்வீக உலகங்களில் வாழ்பவர் உம்பர். அவர்கள் இருவகையினர் - எப்போதும் தெய்வீக உலகங்களில் வாழ்ந்து இறைத்தொண்டினை இடையறாது செய்பவர்; இவ்வுலகில் வாழ்ந்திருந்து இறைவன் கருணையால் அவன் தொண்டில் ஈடுபட்டு தெய்வீக உலகங்களை அடைந்து அங்கும் அவன் தொண்டினைத் தொடர்பவர்கள். இந்த இருவகை உம்பர்களுமே இம்பர்களின் வணக்கத்திற்கு உரியவர்கள். அவர்கள் அரசாங்க அதிகாரிகள் போல. அவர்கள் சிற்றரசர்கள் போல. இறைவன் அவர்களுக்கு எல்லாம் அரசன். உம்பர்கட்கு அரசன். பேரரசன். ராஜராஜன். ராஜேந்திரன். தேவராஜன். இங்கு இறைவனின் 'பரம்பொருள்' தன்மை போற்றப்படுகிறது.

இறைவன் எங்கும் நிறைந்தவன். இந்தப் ப்ரபஞ்சத்தில் எங்கும் எந்த இடத்திலும் எப்பொருளிலும் எல்லாக் காலத்திலும் நீக்கமற நிறைந்திருப்பவன். அவன் எல்லாக் காலத்திலும் இங்கிருப்பதால் அவன் காலத்தைக் கடந்தவன் - காலாதீதன். அவன் இல்லாத இடமே இல்லை என்பதால் அவன் எல்லா எல்லைகளையும் கடந்தவன் - தேசாதீதன். அவன் எல்லா இடத்திலும் எப்போதும் இருந்தாலும் சாதாரணமாய் புலன்களுக்குப் புலப்படாமல் எங்கும் 'கலந்து' நிற்பவன். யோகம் என்றால் கலத்தல். கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம், ராஜ யோகம், தியான யோகம், ஹத யோகம், ப்ரபத்தி யோகம் என்று இறைவனை ஜீவன் கலப்பதற்கான வழிகள் எல்லாமே யோகம் என்று குறிப்பிடப்படுவதைக் காணலாம். இங்கு இறைவனின் 'எங்கும் எப்போதும் கலந்து நிற்கும்' தன்மை போற்றப்படுகிறது.

நானோ பொல்லா வினையேன். எல்லா தீய காரியங்களும் செய்துள்ளேன். அவன் பெருமையுடன் ஒப்பிடும் போது நான் மிக மிக மிகச் சிறியவன். இருந்தும் அவன், காலத்திற்கு முன் கனிந்த இனிய பழம் போல, எனக்கு அருள் செய்தான். அவன் என்னிடம் மட்டும் கருணை கொள்ளவில்லை. எனது குழு முழுவதையுமே தன் அடியார்களாக்கிக்கொண்டு எங்களுக்கு நிரந்தரமான வாழ்வு கொடுத்தான். இங்கு இறைவனின் கருணையும் எளிவந்த தன்மையும் போற்றப் படுகின்றன.

அவன் எல்லா அறிவு நூலகளாலும் அறிஞர்களாலும் 'செம்பொருள்' என்று போற்றப்படுகிறான். இங்கு இறைவனின் 'மேலான போற்றுதலுக்கு உரிய' தன்மை பேசப் படுகிறது. எல்லாப் புகழும் இறைவனுக்கே.

அவனே எல்லோர்க்கும் கதி. அவன் திருவடிகளே எப்போதும் எவ்வகையினருக்கும் மிகச் சிறந்த கதி. இங்கு இறைவனின் 'மேலான கதி'யாகும் தன்மை போற்றப்படுகிறது.

அவனே நிரந்தரமான செல்வம். மற்ற வகைச் செல்வங்கள் எல்லாம் நிரந்தரமில்லை. அவன் வைத்தமாநிதி. இங்கு இறைவனின் 'அடியார்களுக்கு எல்லாமும்' ஆகும் தன்மை போற்றப்படுகிறது.

இப்படி பல விதமான 'சீர்கள்' இந்தப் பாடலில் போற்றப்படுகிறது.

Wednesday, July 23, 2008

உன்போல் கண்கண்ட தெய்வம் உளதோ? சகலகலாவல்லியே!


மண்கொண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும் என்
பண்கண்ட அளவில் பணியச் செய்வாய்! படைப்போன் முதலாம்
விண்கண்ட தெய்வம் பல்கோடி உண்டேனும் விளம்பில் உன்போல்
கண்கண்ட தெய்வம் உளதோ? சகலகலாவல்லியே!

மண் கொண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும் - மண்ணுலகில் மன்னர்கள் எல்லாரும் தம் அரசாட்சியின் சின்னமாக வெண்கொற்றக் குடையின் கீழ் சிம்மாசனத்தில் வீற்றிருக்கின்றனர். சிற்றரசர்களின் வெண்குடைகள் பேரரசர்களின் கீழ் அமைகின்றன. அவ்வாறு மண்ணுலகில் உள்ள எல்லா வெண்குடைகளும் தனக்குக் கீழாக பேரரசனாக விளங்குகின்ற மன்னரும்

என் பண்கண்ட அளவில் பணியச் செய்வாய் - என் பாடல்களைக் கண்டவுடனே தகுந்த மரியாதை கொடுத்துப் பணியும் படி அருள் செய்வாய்.

படைப்போன் முதலாம் விண்கண்ட தெய்வம் பல்கோடி உண்டேனும் - படைக்கும் கடவுளான பிரம்மதேவன் முதற்கொண்டு விண்ணில் வாழும் தெய்வங்கள் பலகோடி இருப்பினும்

விளம்பில் உன்போல் கண்கண்ட தெய்வம் உளதோ சகலகலாவல்லியே - உன்னைப் போல் கண்கண்ட தெய்வம் உள்ளதோ? சொல்லுவாய் கலைவாணியே!

Tuesday, July 22, 2008

செம்பொருட்டுணிவே! சீருடைக்கழலே! செல்வமே! சிவபெருமானே!


உம்பர்கட்கரசே! ஒழிவற நிறைந்த
யோகமே! ஊத்தையேன் தனக்கு
வம்பெனப் பழுத்தென் குடி முழுதாண்டு
வாழ்வற வாழ்வித்த மருந்தே!
செம்பொருட்டுணிவே! சீருடைக்கழலே!
செல்வமே! சிவபெருமானே!
எம்பொருட்டுன்னைச் சிக்கெனப்பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!

உம்பர்கட்கரசே - தேவர்களுக்கு அரசனே!

ஒழிவற நிறைந்த யோகமே - இல்லாத இடமே இல்லையெனும் படியாய், தோற்றம் இறுதி இல்லாமல், எக்காலத்தும், எங்கும், எல்லாப் பொருளினிலும் எல்லா உயிரினிலும் நிறைந்து கலந்தவனே

ஊத்தையேன் தனக்கு - கேவலமான, அழுக்கான எனக்கு

வம்பெனப் பழுத்து - வீம்பாய் அருள் புரிந்து, பழுக்கும் காலமில்லாத காலத்தில் சீக்கிரமே பழுத்த பழம் போல தகுதி இல்லாவிடினும் எனக்கு அருள் புரிந்து

என் குடி முழுதாண்டு - என் குடும்பம், குலம், உற்றார், உறவினர், எல்லோரையும், உன் அடிமையாய் ஆண்டு

வாழ்வு அற வாழ்வித்த - நிலையில்லா வாழ்வு போகும்படி நிலையான வாழ்வு அளித்த

மருந்தே - அமுதம் போன்றவனே

செம்பொருள் துணிவே - பெரியோர்களால் உண்மைப் பொருள் என்று முடிவு செய்யப் பட்ட பொருளே; செம்பொருளாகிய வேதங்களால் முழுமுதல் என முடிவு செய்யப்பட்டவனே

சீருடைக்கழலே - அழகிய பெருமையுடைய சிறந்த திருவடிகளை உடையவனே

செல்வமே - என் செல்வமே

சிவபெருமானே

எம் பொருட்டு - எங்கள் பொருட்டு

உன்னைச் சிக் எனப்பிடித்தேன்

எங்கு எழுந்து அருளுவது இனியே - நீர் எங்கே சென்று விட முடியும்?

தேவர்களின் அரசனே! நீர் எங்கும் எப்பொருளும் விடாமல், இல்லாத இடமே இல்லை எனும்படியாய், நீக்கமற நிறைந்துள்ளீர். உமக்கு தொடக்கம் என்றும் முடிவு என்றும் இல்லாமல் எங்கும் எப்போதும் நிறைந்துள்ளீர். நிலையில் மிகவும் குறைந்தவனான கேவலமான எனக்கு பழுக்கும் காலத்திற்கு முன்பே பழுத்த இனிய பழம் போல அருள் புரிந்தவரே. நீர் எம்மை மட்டும் அல்ல என் குலம், நண்பர், உறவினர் என அனைவரையும் உன் அடியார்களாய் ஆக்கிக் கொண்டீர். எங்கள் நிலையில்லாத வாழ்வை நீக்கி, என்றும் நிலைக்கும் பெருவாழ்வைக் கொடுத்த அமுதம் போன்றவரே! ஞானிகளாலும், வேதங்களாலும் மெய்ப்பொருள் என்று துணியப் பட்டவரே! நீரே எல்லோருக்கும் அழியாத பெருஞ்செல்வம். சிவபெருமானே! எங்கள் நலனுக்காக நான் உமது திருவடிகளைச் சிக் எனப் பிடித்தேன். நீர் எங்கு செல்ல முயல்கிறீர். நான் உமது பாதங்களை பிடித்துவிட்டதால் நீர் எங்கும் தப்பிச் சென்று விட முடியாது.

அன்னம் நாண நடை கற்கும் பதாம்புயத்தாள்


சொற்கும் பொருட்கும் உயிராம் மெய்ஞ்ஞானத்தின் தோற்றம் என்ன
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார் நிலம்தோய் புழைக்கை
நற்குஞ்சரத்தின் பிடியோடு அரசன்னம் நாண நடை
கற்கும் பதாம்புயத்தாயே சகலகலாவல்லியே

சொற்கும் பொருட்கும் உயிராம் மெய்ஞ்ஞானத்தின் தோற்றம் என்ன நிற்கின்ற - கவிதைகளிலும் கட்டுரைகளிலும் சொல்லும் சொற்களுக்கும், அவற்றின் பொருட்களுக்கும் உயிராக உள்ளுரைப் பொருளாக இருக்கும் மெய்யான ஞானவடிவாக விளங்குகின்ற

நின்னை நினைப்பவர் யார் - உன்னை (எப்போதும்) வணங்குபவர் (என்னையன்றி வேறு) யார்?

நிலம்தோய் புழைக்கை நற்குஞ்சரத்தின் பிடியோடு - நிலத்தில் தோயும்படி இருக்கும் நீண்ட தும்பிக்கையுடைய சிறந்த பெண்யானையும்

அரசன்னம் - பறவைகளிலேயே அழகில் சிறந்த ராஜஹம்ஸமாகிய அரச அன்னப் பறவையும்

நாண நடை கற்கும் பதாம்புயத்தாயே சகலகலாவல்லியே - வெட்கும் படியான நடையுடைய திருவடித் தாமரைகளை உடையவளே கலைவாணியே

***

அருஞ்சொற்பொருள்:

புழைக்கை - துதிக்கை, தும்பிக்கை

குஞ்சரம் - யானை

பிடி - பெண்யானை (இங்கு குஞ்சரத்தின் பிடி என்பது பெண்யானை என்ற பொருளில் வந்தது)

பதாம்புயம் - பத + அம்புயம் - பாதத் தாமரைகள். அம்புயம் என்பது அம்புஜம் என்பதன் திரிபு. அம்பு - நீர், ஜம் - பிறந்தது; நீரில் பிறந்தது தாமரை மலர்.

Monday, July 21, 2008

தென்னன் உடல் உற்ற தீப்பிணி தீர்த்த பாடல்கள்


ஆற்றல் அடல் விடை ஏறும் ஆலவாயான் திருநீற்றைப்
போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞான சம்பந்தன்
தேற்றித் தென்னன் உடல் உற்ற தீப்பிணி ஆயின தீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே

ஆற்றல் அடல் விடை ஏறும் ஆலவாயான் திருநீற்றைப் போற்றி - பெரும் வலிமை உடைய எருதின் மேல் ஏறும் மதுரையம்பதி உடைய சொக்கநாதரின் மடைப்பள்ளித் திருநீற்றைப் போற்றி

புகலி நிலாவும் பூசுரன் ஞான சம்பந்தன் - சீர்காழியைச் சேர்ந்த பூவுலகில் வாழ் தேவனாம் திருஞான சம்பந்தன்

தேற்றித் தென்னன் உடல் உற்ற தீப்பிணி ஆயின தீரச் - தெளிவுடன் தென்னாட்டை உடைய மன்னனாம் பாண்டியன் தன் உடலில் உற்ற வெப்பு நோய் தீரும் படி

சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே - மொழிந்த இப்பாடல்கள் பத்தும் வல்லவர் நற்குணங்களுடன் திகழ்வார்கள்.

திருச்சிற்றம்பலம்.

***

ஆளுடையபிள்ளையார் திருஞானசம்பந்தர் அருளிய திருவாலவாய்ப்பதி திருநீற்றுப் பதிகம் நிறைவுற்றது.

அண்டத்தவர் பணித்தேத்தும் ஆலவாயான் திருநீறே


குண்டிகைக் கையர்களோடு சாக்கியர் கூட்டமும் கூடக்
கண் திகைப்பிப்பது நீறு கருத இனியது நீறு
எண் திசைப் பட்ட பொருளாளர் ஏத்தும் தகையது நீறு
அண்டத்தவர் பணித்தேத்தும் ஆலவாயான் திருநீறே

குண்டிகைக் கையர்களோடு சாக்கியர் கூட்டமும் கூடக் கண் திகைப்பிப்பது நீறு - கமண்டலம் ஏந்தும் கையர்களான சமணர்களும் சாக்கிய குலத்தில் பிறந்த புத்தரைப் பின்பற்றும் பௌத்தர்களும் கூட்டமாய் கூடும் போது அவர்களைத் திகைக்கச் செய்வது திருநீறு. (அவர்கள் வாதங்களை அழித்து அவர்களை திகைக்க வைப்பது திருநீறு)

கருத இனியது நீறு - எண்ணத்தில் நினைத்து தியானிக்க இனியது திருநீறு

எண் திசைப் பட்ட பொருளாளர் ஏத்தும் தகையது நீறு - எட்டு திசைகளில் இருக்கும் மக்கள் எல்லோராலும் ஏத்தும் தகைமை உடையது திருநீறு

அண்டத்தவர் பணித்தேத்தும் ஆலவாயான் திருநீறே - தேவர் அசுரர் மனிதர் என்று எல்லாரும் பணிந்து ஏத்தும் திருவாலவாயான் திருநீறே.

Sunday, July 20, 2008

கல்விப் பெரும் செல்வப் பேறே


சொல்விற்பனமும் அவதானமும் கவி சொல்ல வல்ல
நல்வித்தையும் தந்து அடிமை கொள்வாய் நளின ஆசனம் சேர்
செல்விக்கு அரிது என்று ஒரு காலமும் சிதையாமை நல்கும்
கல்விப் பெரும் செல்வப் பேறே சகலகலாவல்லியே

சொல்விற்பனமும் அவதானமும் கவி சொல்ல வல்ல நல்வித்தையும் தந்து அடிமை கொள்வாய் - பேச்சுத் திறமையும் நல்ல கவனமும் கவிதைகளை எண்ணிய போதில் சொல்லவல்ல நல்வித்தையும் அருளி என்னை அடிமை கொள்வாய்

நளின ஆசனம் சேர் செல்விக்கு அரிது என்று ஒரு காலமும் சிதையாமை நல்கும் - தாமரையை இருப்பிடமாகக் கொண்டு விளங்கும் செல்வியாம் இலக்குமியின் அருள் அரிதாகப் போய்விட்டதே என்று மனம் வருந்தும் நிலையில்லாமையை அருளும்

கல்விப் பெரும் செல்வப் பேறே சகலகலாவல்லியே - கல்வியெனும் பெரும்செல்வப் பேறே எல்லாக் கலைகளும் வல்லவளே!

***

சொல் விற்பனம் எல்லாருக்கும் கிடைப்பதில்லை. மற்றவரைப் புண்படுத்தாமல் நல்ல சொற்களைச் சொல்லும் திறமை அவள் அருளின்றி அமைவதில்லை. அதே போல் கூர்மையான அறிவு வேண்டுமென்றால் நம்மைச் சுற்றி நடப்பதை கவனத்துடன் நோக்கினால் தான் முடியும்; அந்த அவதானமும் அவள் அருளின்றி அமைவதில்லை. எத்தனை எத்தனை கவிதைகளையும் செய்யுள்களையும் படித்தாலும் பொருள் உணர்ந்தாலும், மற்றவர் மனம் கவரும் வண்ணம் கவிதைகளைப் படைப்பதும் அவள் அருளே. அப்படி எல்லா விதமான கலைச் செல்வங்களையும் அருளி என்னை ஆட்கொள்ளவேண்டும் என்ற வேண்டுதல் இந்தப் பாடலில் இருக்கிறது.

வாழ்க்கையில் கிடைத்தற்கரிய பெரும் செல்வம் எது? கல்விச் செல்வம் தானே. அந்த செல்வம் இருந்தால் மற்றைய செல்வங்கள் தானே வரும். அதனைத் தான் அடுத்த வரிகளில் சொல்கிறார் குமர குருபரர். 'கல்வியெனும் பெரும் செல்வப் பேறை அருளும் சகலகலாவல்லியே! அந்த கல்வியெனும் பெரும் செல்வப் பேறு அலைமகளின் அருள் இல்லையே (பொருள் இல்லையே, பணம் இல்லையே) என்று மனம் நோகாத நிலையைக் கொடுக்கும்' என்கிறார்.

மாலொடு அயன் அறியாதது


மாலொடு அயன் அறியாத வண்ணமும் உள்ளது நீறு
மேலுறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு
ஏல உடம்பிடர் தீர்க்கும் இன்பம் தருவது நீறு
ஆலமதுண்ட மிடற்றெம் ஆலவாயான் திருநீறே


மாலொடு அயன் அறியாத வண்ணமும் உள்ளது நீறு - திருமாலும் பிரம்மனும் அறியமுடியாத வண்ணம் உள்ளது திருநீறு.

மேலுறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு - மேல் உலகங்களில் வாழும் தேவர்கள் தங்கள் உடலில் விளங்குவது வெண்ணிற திருநீறு

ஏல உடம்பு இடர் தீர்க்கும் இன்பம் தருவது நீறு - உடம்பினால் ஏற்படும் துன்பங்களைத் தீர்த்து நிலையான இன்பம் தருவது திருநீறு

ஆலமது உண்ட மிடற்று எம் ஆலவாயான் திருநீறே - ஆலகால விடத்தை உண்ட கழுத்தையுடைய எங்கள் திருவாலவாயான் திருநீறே.

Saturday, July 19, 2008

பாட்டும் பொருளும் பொருளால் பொருந்தும் பயனும்


பாட்டும் பொருளும் பொருளால் பொருந்தும் பயனும் என்பால்
கூட்டும் படி நின் கடைக்கண் நல்காய் உளம் கொண்டு தொண்டர்
தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால் அமுதம் தெளிக்கும் வண்ணம்
காட்டும் வெள் ஓதிமப் பேடே சகலகலாவல்லியே!

பாட்டும் பொருளும் பொருளால் பொருந்தும் பயனும் - நல்ல பாடல்களும், அதில் நல்ல பொருளும், அந்த பொருளால் நல்ல நல்ல பயன்களும்

என்பால் கூட்டும் படி நின் கடைக்கண் நல்காய் - என்னிடம் இருந்து உருவாகும் படி உன் கடைக்கண்ணால் பார்த்து அருள் புரிவாய்.

உளம் கொண்டு தொண்டர் தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால் அமுதம் - உள்ளத்தில் உறுதியும் தெளிவும் கொண்டு உன் தொண்டர்கள் தீட்டும் கலைத் தமிழ் தீம்பால் அமுதமானது

தெளிக்கும் வண்ணம் காட்டும் வெள் ஓதிமப் பேடே - மற்றவர்கள் எழுதும் சுவையில்லாதவற்றிலிருந்து பிரித்துக் காட்டி தெளிவிக்கும் (பாலினை நீரிலிருந்து பிரித்துக் காட்டும்) வெண்மையான பெண் அன்னமே

சகலகலாவல்லியே - எல்லாக் கலைகளையும் அருளும் கலைவாணியே.

***

எல்லாராலும் பாட்டு எழுத முடிவதில்லை. அப்படியே பாட்டெழுதினாலும் பொருட்செறிவுடன் எழுத எல்லாராலும் முடிவதில்லை. அப்படியே பொருட் செறிவுடன் எழுதினாலும் எல்லாருக்கும் பயன் தரும் பொருளுடன் எழுத எல்லாராலும் முடிவதில்லை. அப்படி எழுதுவது கலைவாணியின் அருள் உள்ளவருக்கு மட்டுமே முடியும்.

அவள் அருள் பெற்றவர்களும் தமிழ்ப்பாடல்கள் எழுதுவார்கள்; அருள் பெறாதவர்களும் எழுதுவார்கள். அருள் பெற்றவர் எழுதுவது தீம்பால் அமுதமென இருக்கும். மற்றவர் எழுதுவது வெறும் நீரென இருக்கும். அவை இரண்டினையும் பிரித்து நமக்கு தீம்பால் அமுதத்தை தெளிவாக்கிக் கொடுக்கும் அன்னப் பறவை போன்றவள் கலைவாணி.

Thursday, July 17, 2008

போலே ராம் ஆஜா ராம் போலே ராம்!

கானகம் நடுவே கண்மூடிக் கைவிதிர்த்து
நானழும் போதினில் நாயகன் வருவான்!
தானவர் சூழும் தரணியாம் காட்டினில்
தான் அவன் துணையாய் தமையனாய் வருவான்!



காணிலம் அவனை! கண்டவர் உளரோ?
மாநிலம் முழுவதும் மயங்கியே கேட்கும்!
நானிலம் எங்குமே நாயகன் உள்ளான்!
ஞானியர் சொல்லும் ஞானமே வாழ்க!

Wednesday, July 16, 2008

எழுத்தாளினி ஏகாம்பரிக்கு ஏதுமறியாதவனின் பதில் (கேள்வி பதில் 4)


எழுத்தாளினி உஷா எப்பவோ கேட்ட கேள்விகள் இவை. கேள்விகளைக் கேட்ட அவருக்கே அந்தக் கேள்விகள் இன்னேரம் மறந்து போயிருக்கும். அவர் மறந்தாலும் மறக்கலாம்; நாங்கள் மறக்க மாட்டோம் என்று ஒரு சில நண்பர்கள் 'எங்கே மற்ற கேள்விகளுக்குப் பதில்கள்' என்று துளைத்து எடுக்கிறார்கள். அதனால் இதோ மீண்டும் பதில்களைச் சொல்லத் தொடங்கிவிட்டேன்.

உஷா கேட்ட கேள்விகளும் அதற்கு ஏதுமறியா பாலகனின் பதில்களும்:

1- ஆன்மீகம் என்றால் பதிவுலகில் குமரன்,கே ஆர் எஸ், கீதா, வல்லி, ஜீரா என்று வரிசைக்கட்டி சொல்கிறார்கள். ஆனால்
நீங்கள் எல்லாம் எழுதுவது பக்திசார்ந்த இந்து மத நம்பிக்கைகளை வலியுறுத்தி எழுதுவதில்லையா? மத நம்பிக்கை வேறு ஆன்மீகம் வேறு இல்லையா?


மதத்திற்கும் ஆன்மிகத்திற்கும் வேறுபாடுகளும் உள்ளன. ஒற்றுமைகளும் உள்ளன. ஆன்மிகத்தைச் சுற்றியே மதங்களும் அவற்றின் கோட்பாடுகளும் கட்டப்படுகின்றன. ஆன்மிகத்தைத் தவிர்த்து வெறும் வெளிச்சடங்குகளில் மட்டுமே நாட்டமும் வெறியும் கொள்ளும் போது அங்கே பெரும்கேடுகள் விளைகின்றன. வெளிச்சடங்குகளில் இருக்கும் ஆன்மிகக் கோட்பாடுகளை உணர்ந்து அவற்றில் நாட்டம் கொள்ளும் போது பெரும்நன்மைகள் விளைகின்றன. மதங்களைக் குறை சொல்பவர்களைப் பார்த்தால் தெரியும்; அவர்கள் எல்லோரும் பெரும் கேடுகளை விளைவிக்கும் ஆன்மிகம் தவிர்த்த வெளிச்சடங்குகளைத் தான் சொல்கிறார்கள் என்பது.

இங்கே நீங்கள் வரிசைப்படுத்தியிருக்கும் பதிவர்கள் வெளிச்சடங்குகளில் உறைந்திருக்கும் ஆன்மிகத்தைப் பேசுகிறார்கள். வெளிப்பார்வைக்கு வெறும் மதத்தைப் பற்றி மட்டுமே பேசுவது போல் தெரிந்தாலும் அவர்கள் பேசுவதெல்லாம் அந்த மதங்களில் இருக்கும் ஆன்மிகத்தையே. அதனால் அவர்களை ஆன்மிகப் பதிவர்கள் என்று சொல்வதில் தவறில்லை. அப்படிச் சொல்வதில் தயக்கம் இருப்பவர்கள் அவர்களை இந்து மதப் பதிவர்கள் என்று சொன்னாலும் சரி தான். அவரவர் வசதிப்படி சொல்லிக் கொள்ள வேண்டியது தான்.

பக்தி சார்ந்த இந்து மத நம்பிக்கைகளைப் பற்றி எழுதுபவர்களை ஆன்மிகப்பதிவர்கள் என்று சொல்லக்கூடாது என்று நீங்கள் சொல்வது போல் தோன்றுகிறது. பக்தி சார்ந்த இந்து மத நம்பிக்கைகளை எழுதுவதாலேயே இவர்கள் எல்லாம் ஆன்மிகம் பேசுவதில்லை என்று ஆகிவிடுகிறதா?

மத நம்பிக்கை வேறு ஆன்மிகம் வேறு இல்லை. மதத்தில் ஆன்மிகமும் இருக்கிறது; அதைச் சுற்றி இருக்கும் சடங்குகளும் இருக்கின்றன; அவற்றின் மேல் எழுப்பப்பட்ட நிறுவனங்களும் இருக்கின்றன. அதே நேரத்தில் எந்த மதத்த்திலும் சேராமல் எந்த மத சடங்குகளிலும் ஈடுபடாமல் எந்த நிறுவனத்திலும் பங்கேற்காமலும் ஆன்மிக வழி நிற்க முடியும். இப்படி ஆன்மிகத்தைத் தவிர்த்து மதங்களின் சில பகுதிகளும் மதங்களைத் தவிர்த்து சில வேளைகளில் ஆன்மிகமும் இருப்பதால் அவை இரண்டும் வெவ்வேறு என்று சொல்ல இயலாது. அதனால் இந்து மத நம்பிக்கைகளையே பெரும்பான்மையாக எழுதுபவர்களையும் ஆன்மிகப் பதிவர்கள் என்று சொல்லுவதிலும் தவறிருக்க முடியாது.

கீதாம்மாவிற்குப் பதில் சொன்ன பின்னூட்டத்தில் 'குரான், பைபிள் விஷயங்களைப் பேசும் பதிவுகளை ஏன் ஆன்மிகப் பதிவுகள் என்று சொல்வதில்லை' என்று கேட்டிருக்கிறீர்கள். அவர்களையும் ஆன்மிகப் பதிவர்கள் என்று சொல்வதில் தவறில்லை.

2- உங்கள் குழந்தைகளுக்கு உங்கள் நம்பிக்கையை சொல்லி தருவீர்களா? குழந்தை மனதில் அது திணிப்பு/ முளைசலவையில்லையா?

சொல்லித் தந்து மட்டும் தான் குழந்தைகள் கற்றுக் கொள்கிறார்களா? நாம் முனைப்போடு சொல்லித் தருபவற்றை விட அவர்கள் மிகுதியாகக் (அதிகமாக) கற்றுக் கொள்வது நம் நடத்தையில் இருந்து தானே? நம் செயல்கள் எல்லாமும் நம் அடிப்படை நம்பிக்கைகளையும் குணங்களையும் பொறுத்து அமையும் போது அவற்றில் இருந்து குழந்தைகள் கற்றுக் கொள்வதைத் தவிர்க்க முடியுமா? என் அனுபவத்தில் நான் சொல்லித் தந்து என் குழந்தைகள் கற்றுக் கொண்டதை விட பெற்றோர்களான எங்களின் செயல்களைக் கண்டு அவர்கள் கற்றுக் கொள்வதே அதிகம்.

எங்கள் வீட்டில் நான் ஆன்மிகத்தில் பற்று கொண்டிருந்தாலும் தினமும் இறைவனை வணங்குவது, அடிக்கடி கோவில் செல்வது போன்றவற்றில் ஈடுபடுவதில்லை; ஆனால் பெரும்பாலும் இறைப்பாடல்களையே கேட்கிறேன். தங்கமணி எப்போதாவது இறைவனை வணங்குவார்; நாங்கள் எல்லோரும் கோவிலுக்குச் செல்லும் போது அவரும் செல்வார். பாடல்கள் என்றால் திரைப்பாடல்கள் மட்டுமே. குழந்தைகள் இருவரின் செயல்களைப் பார்த்தும் கற்றுக் கொள்கின்றன. எங்கள் இருவரில் யார் திணிக்கிறோம், மூளைச்சலவை செய்கிறோம் என்று சொல்ல முடியுமா?

இறை மறுப்பு, பெண்ணியம், சம உரிமை என்று ஒரு பட்டியலே இடலாம். பல நேரங்களில் இவையும் நம்பிக்கையின் பாற்பட்டவையே. அவற்றை ஒருவர் தங்கள் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்தால் அது திணிப்பு ஆகுமா? அவர்களின் செயல்கள் மூலம் குழந்தைகள் கற்றுக் கொண்டால் அது திணிப்பு ஆகுமா?

எந்த ஒரு கருத்துமே அப்படித் தான் பெற்றோரிடமிருந்து குழந்தைகளுக்குச் செல்கின்றன. அவற்றைத் தவிர்க்க இயலாது. ஆன்மிகம், மதம், மத நம்பிக்கை இவை தீண்டத்தகாதவையாக உங்களுக்குத் தோன்றுவதால் அவற்றை என் குழந்தைகள் என்னிடமிருந்து கற்றுக் கொண்டால் அது உங்களுக்கு திணிப்பாகவும் மூளைச்சலவையாகவும் தோன்றுகிறது. அதே நேரத்தில் அரசியலில் ஈடுபாடுடைய பெற்றோரின் குழந்தையும் அரசியலில் ஈடுபாடு கொள்வதையும், இறை மறுப்பு பேசுபவர் குழந்தையும் இறை மறுப்பு பேசுவதையும் கண்டால் அது இயற்கையாகப் படுகிறது. அங்கே திணிப்பு என்று தோன்றுவதில்லை. மாறியும் நடப்பதுண்டு. வாத்தியார் பையன் மக்கு என்பதைப் போல். அப்போது அங்கே என்ன நடந்தது? திணிப்பு நடக்கவில்லையா?

அவரவர் கருத்தின் படி அவரவர் நடக்கும் போது அவற்றிலிருந்து குழந்தைகள் கற்றுக் கொள்வது தவிர்க்க முடியாமல் நடக்கும். அதனைத் திணிப்பென்றும் மூளைச்சலவை என்றும் சொல்வது அவரவர் அரசியல் சார்ந்ததொன்று. :-)

3-நம் புராணங்களில், வழி வழி வந்த நம்பிக்கைகளில் கடவுள்களுக்கு தந்த உருவங்கள் உண்மை என்று நம்புகிறீர்களா? ஆம்,
என்றால் இவர்கள் தேவலோகம்/ வைகுண்டம்... இவைகளில் ஆகாயத்தில் வசிக்கிறார்களா? ஆம் என்றால் சுவனம், ஹெவன்
ஆகாயத்தில் எங்கு உள்ளன?


என் தனிப்பட்ட நம்பிக்கையைக் கேட்டால் 'ஆமாம். இந்த இறை உருவங்கள் உண்மை' என்றே சொல்வேன். இறைவனுக்கு ஓருரு ஒரு பெயர் என்றில்லை. 'ஆணல்லன் பெண்ணல்லன் அல்லால் அலியுமல்லன்' என்று சொன்ன நம்மாழ்வார் அதே பாசுரத்திலேயே 'பேணும் போது பேணும் உருவாகும் அல்லனுமாம்' என்பார். அதுவே என் நம்பிக்கையும். இறைவன் இந்த உருவங்கள் எல்லாமுமாகவும் இருக்கிறான். ஆனால் இந்த உருவங்களில் மட்டுமே அவன் நின்றுவிடுவதில்லை. கல்லூரிக் காலத்தில் நான் நண்பர்களுக்குச் சொன்ன கருத்து நினைவிற்கு வருகிறது. முருகன், கண்ணன், சிவன், ஐயப்பன், அம்பிகை, இயேசு என்று சமயங்கள் சொல்லும் உருவங்களை வணங்கினால் மட்டுமே இறையருள் கிட்டும் என்பதில்லை. புதிதாக ஏதோ ஒரு படத்தை எடுத்து வைத்துக் கொண்டு வணங்கினாலும் அதே பயன் கிட்டும். அந்த வகையில் சிறு தெய்வங்கள் என்று சொல்லப்படும் தெய்வங்களுக்கும் பெரும் தெய்வங்கள் என்று சொல்லப்படும் தெய்வங்களுக்கும் வேறுபாடு இல்லை. இறைவனின் திருவுருவங்கள் தான் இவை எல்லாம். இறைவன் எல்லா வல்லமையும் படைத்தவன் என்பதால் அடியவன் போற்றும் எல்லா திருவுருவங்களையும் தன்னுருவமாகக் கொள்ளும் வல்லமையும் படைத்தவன்.

இவர்கள் தேவலோகம்/வைகுண்டம் போன்ற இடங்களில் வசிக்கிறார்களா என்ற கேள்விக்கும் பதில் 'ஆமாம்'. தேவலோகமும் வைகுண்டமும் சிவலோகமும் பருப்பொருட்களாக (ஸ்தூல இடங்களாக) எண்ணிக் கொண்டாலும் சரி; ஒருவர் உடலிலும் உள்ளத்தில் இருக்கும் உட்பொருளாக (சூக்கும இடங்களாக) எண்ணிக் கொண்டாலும் சரி எல்லாம் வல்ல இறைவனால் அவற்றின் இருப்பையும் ஏற்படுத்த இயலாதா என்ன?

சுவனம், ஹெவன் ஆகாயத்தில் எங்கே இருக்கின்றன என்று எனக்குத் தெரியாது. அவை ஆகாயத்தில் தான் இருக்கிறதா அன்றி காயத்தில் (உடலில்) தான் இருக்கிறதா என்றும் தெரியாது. ஈரேழு பதினாறு உலகங்களும் ஸ்தூல வடிவில் இருக்கின்றன என்றும் அவை உடலில் இருக்கும் சூக்கும உலகங்களே என்றும் ஆன்மிக நூற்கள் சொல்வதைப் படித்திருக்கிறேன். தேடிப் பார்க்க வேண்டும். கிடைத்தால் சொல்கிறேன். சொல்ல முடியுமா என்று தெரியவில்லை - கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர் - என்றும் சொல்லிச் சென்றிருக்கிறார்கள். அதனால் நீங்களும் தேடிப் பாருங்கள். :-)

4- உலகைப் படைத்தவன் இறைவன் ( இங்கு எந்த பெயரை வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளுங்கள்) என்றால்
கடவுள் மகா சாடிஸ்ட் இல்லையா?


அப்படித் தான் தோன்றுகிறது. :-)

என் நம்பிக்கையைக் கேட்டால் இறைவனும் உலகங்களும் உயிர்களும் என்றுமே காலம் காலமாக இருப்பவர்கள். புதிதாகப் படைக்கப்படுபவர்கள் இல்லை. விளக்கத் தொடங்கினால் விரிவாகச் செல்லும். தத்துவம் கேட்கும் மனநிலை இருந்தால் சொல்லுங்கள். இன்னொரு வாய்ப்பில் பேசுகிறேன்.

இராவணன் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு


இராவணன் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு
பராவணம் ஆவது நீறு பாவம் அறுப்பது நீறு
தராவணம் ஆவது நீறு தத்துவம் ஆவது நீறு
அராவணங்கும் திருமேனி ஆலவாயான் திருநீறே


இராவணன் மேலது நீறு - இரவின் வண்ணம் கொண்ட இராவணன் பக்தியுடன் தன் அங்கமெங்கும் அணிவது திருநீறு

எண்ணத் தகுவது நீறு - தியானிக்க ஏற்றது திருநீறு

பராவணம் ஆவது நீறு - பாராயணம் செய்யப்படுவது திருநீறு

பாவம் அறுப்பது நீறு - பாவங்கள் என்னும் தளைகளை அறுப்பது திருநீறு

தராவணம் ஆவது நீறு - தரா என்னும் சங்கின் வண்ணம் ஆவது திருநீறு

தத்துவம் ஆவது நீறு - எல்லாவற்றிற்கும் அடிப்படையானத் தத்துவமாய் இருப்பது திருநீறு.

அராவணங்கும் திருமேனி ஆலவாயான் திருநீறே - அரவுகள் (பாம்புகள்) வணங்கும் (நிறைந்திருக்கும்) திருமேனியை உடைய திருவாலவாயான் திருநீறே.

Monday, July 14, 2008

அன்பர் கண்ணும் கருத்தும் நிறைந்தாய் சகலகலாவல்லியே


பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் பனுவலும் யான்
எண்ணும் பொழுது எளிது எய்த நல்காய் எழுதா மறையும்
விண்ணும் புவியும் புனலும் கனலும் வெங்காலும் அன்பர்
கண்ணும் கருத்தும் நிறைந்தாய் சகலகலாவல்லியே


பண்ணும் - இசையும்

பரதமும் - ஆடலும்

கல்வியும் - எல்லாவிதமான கலைகளும் கல்விகளும்

தீஞ்சொல் பனுவலும் - இனிமையான சொற்கள் நிறைந்து மீண்டும் மீண்டும் (பன்னிப் பன்னிப்) பாடும் படியான பாடல்களும்

யான் எண்ணும் பொழுது எளிது எய்த நல்காய் - நான் நினைத்தவுடனே எளிதாய் எய்துமாறு அருளுவாய்!

எழுதா மறையும் - நூலைச் செய்தவர் யாருமே இல்லாத வேதங்களும்

விண்ணும் புவியும் புனலும் கனலும் வெங்காலும் - வான், மண், நீர், நெருப்பு, காற்று என்னும் ஐம்பூதங்களும்

அன்பர் கண்ணும் கருத்தும் நிறைந்தாய் சகலகலாவல்லியே - உன் அன்பர் கண்களிலும் கருத்தினிலும் நிறைந்தாயே கலைவாணியே!

Sunday, July 13, 2008

அயிலைப் பொலிதரு சூலத்து ஆலவாயான் திருநீறே


எயிலது அட்டது நீறு இருமைக்கும் உள்ளது நீறு
பயிலப்படுவது நீறு பாக்கியமாவது நீறு
துயிலைத் தடுப்பது நீறு சுத்தமதாவது நீறு
அயிலைப் பொலிதரு சூலத்து ஆலவாயான் திருநீறே

எயிலது அட்டது நீறு - திரிபுராசுரர்களின் முப்புரம் எனும் மூன்று கோட்டைகள் சிரித்தெரி கொளுத்தியது திருநீறு.

இருமைக்கும் உள்ளது நீறு - இம்மை மறுமை எனும் இருமைக்கும் உறுதுணையாக உண்மையாக உள்ளது திருநீறு.

பயிலப்படுவது நீறு - கல்வி கரையில கற்பவர் நாள் சில என்ற நிலையில் கல்வி கரையின்றி இருக்கும் போது எதனைக் கற்றால் எல்லாவற்றையும் கற்றதாகுமோ அப்படிப்பட்டது திருநீறு.

பாக்கியமாவது நீறு - இம்மைக்கும் மறுமைக்கும் நல்வினைப்பயனாவது திருநீறு.

துயிலைத் தடுப்பது நீறு - அறியாமையையும் அந்தகன் கைப் பாசத்தால் வரும் அருந்துயிலையும் தடுப்பது திருநீறு.

சுத்தமதாவது நீறு - அணிபவர்களையும் நினைப்பவர்களையும் பேசுபவர்களையும் சுத்தம் ஆக்கும் சுத்தங்களில் சுத்தம் அதாவது திருநீறு.

அயிலைப் பொலிதரு சூலத்து ஆலவாயான் திருநீறே - கூர்மையான ஒளிவீசும் திருசூலத்தை ஏந்திய திருவாலவாயான் திருநீறே!

Friday, July 11, 2008

அஞ்சத்துவசம் உயர்த்தோன் செந்நாவும் அகமும் வெள்ளைக் கஞ்சத்தவிசு ஒத்திருந்தாய்


பஞ்சு அப்பு இதம் தரும் செய்ய பொற் பாத பங்கேருகம் என்
நெஞ்சத்தடத்து அலராதது என்னே? நெடுந்தாள் கமலத்து
அஞ்சத்துவசம் உயர்த்தோன் செந்நாவும் அகமும் வெள்ளைக்
கஞ்சத்தவிசு ஒத்திருந்தாய் சகலகலாவல்லியே

நெடுந்தாள் கமலத்து அஞ்சத்துவசம் உயர்த்தோன் - நீண்ட அழகிய இதழ்களைக் கொண்ட தாமரையில் அமர்ந்திருக்கும் மென்மை மிகுந்த அன்னப் பறவையை கொடியாக உடைய பிரம்ம தேவனின்

செந்நாவும் - செம்மையான திருநாவையும்

அகமும் - உள்ளத்தையும்

வெள்ளைக் கஞ்சத் தவிசு ஒத்திருந்தாய் சகலகலாவல்லியே - வெள்ளைத் தாமரையால் செய்த சிம்மாசனமாகக் கொண்டு வீற்றிருந்தாய் சகலகலாவல்லியாகிய கலைவாணியன்னையே!

பஞ்சு அப்பு இதம் தரும் செய்ய பொற் பாத பங்கேருகம் - பஞ்சினைப் போல் இனிமைதரும் மென்மையான உன் திருவடித் தாமரைகள்

என் நெஞ்சத் தடத்து அலராதது என்னே? - என் நெஞ்சமாகிய நீர்நிலையில் மலராதது என்ன காரணத்தினால்?

***********

அன்னப் பறவை மென்மையானது. தூய்மையானது. அசுத்தங்களைக் கண்டு அஞ்சுவது. அதனால் அன்னக் கொடியை அஞ்சத் துவசம் என்கிறார். துவசம் என்பது த்வஜம் என்னும் வடமொழிச் சொல்லின் தமிழ் வடிவம்.

அன்னை கலைவாணி பிரம்ம தேவனின் நாவிலும் மனத்திலும் தங்கியுள்ளாள் என்பது ஐதிகம். மும்மூர்த்திகளும் தம் தம் தேவியரை தம் உடம்பில் ஒரு பகுதியில் வைத்திருக்கிறார்கள். பிரம்மதேவன் கலைமகளை நாவிலும், நாராயணன் அலைமகளை நெஞ்சிலும், சிவபெருமான் மலைமகளை உடலின் இடப்புறத்திலும் வைத்திருக்கிறார்கள்.

***

11 ஜூலை 2008 அன்று சேர்க்கப்பட்டது:

த்வஜன் என்ற வடசொல் துவசம் ஆனது போல் ஹம்ஸம் என்ற வடசொல் அம்சம் ஆகி இங்கே அஞ்சம் ஆகியிருக்கிறது என்று தோன்றுகிறது. ஆகையினால் அஞ்சத்துவசம் என்பது ஹம்ஸத்வஜம் என்ற வடசொல்லின் தமிழ்வடிவமே என்று தோன்றுகிறது.

பஞ்சைப் போல் மெல்லிய தாமரைப் பாதங்கள் என் நெஞ்சத்தில் மலரக் கூடாதா என்று கேட்கும் போது 'உன் நெஞ்சம் கல்லைப் போல் இருக்கின்றதே - என் பஞ்சு மலர்ப்பாதங்கள் நோகுமே' என்று அன்னை சொல்லிவிட்டால்? அதனால் தான் அன்பினால் உருகி நீர்நிலையைப் போல் ஆகிவிட்டது அம்மா என் நெஞ்சம் என்று குறிப்பதைப் போல் நெஞ்சத்தடத்தில் என்கிறார் போலும் குமரகுருபரர்.

Thursday, July 10, 2008

அருத்தம் அதாவது நீறு அவலம் அறுப்பது நீறு


அருத்தம் அதாவது நீறு அவலம் அறுப்பது நீறு
வருத்தம் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு
பொருத்தம் அதாவது நீறு புண்ணியர் பூசும் வெண்ணீறு
திருத்தகு மாளிகை சூழ்ந்த திருவாலவாயான் திருநீறே

அருத்தம் அதாவது நீறு - நீங்காத செல்வம் ஆவது திருநீறு

அவலம் அறுப்பது நீறு - துயரங்களை நீக்குவது திருநீறு

வருத்தம் தணிப்பது நீறு - மன வருத்தங்களை எல்லாம் தணிப்பது திருநீறு

வானம் அளிப்பது நீறு - வானுலகத்தை தருவது திருநீறு

பொருத்தம் அதாவது நீறு - அணிபவர்களுக்கெல்லாம் பொருந்துவது திருநீறு

புண்ணியர் பூசும் வெண்ணீறு - புண்ணியம் செய்தவர்கள் அணியும் வெண்ணீறு

திருத்தகு மாளிகை சூழ்ந்த திருவாலவாயான் திருநீறே - செல்வம் கொழிக்கும் மாளிகைகள் சூழ்ந்த திருவாலவாய் அப்பனின் திருநீறே.

***

நிலையில்லாச் செல்வங்களை வேண்டி நாம் அவனிடம் செல்லாமல் நிலைபேறான வைத்தமாநிதியான ஐயனையே வேண்டி செல்லும் படி நம்மைச் செய்வது திருநீறு. பெருஞ்செல்வத்தையே பெற்றுத் தருவதால் வேறு பொருட்செல்வமே தேவையில்லை; திருநீறே பொருள் என்னும் சொல்லுக்கே பொருளதாவது.

நிலையில்லாச் செல்வங்களைத் தேடி அலையும் போதும் துயரங்கள் வருகின்றன. அவை கிடைத்தாலோ அவற்றைக் காப்பாற்ற வேண்டுமே என்ற துயரம். அந்தச் செல்வங்கள் தொலைந்தாலோ பெருந்துயரம். இப்படிப்பட்டத் துயரங்களையெல்லாம் தீர்த்து பெருஞ்செல்வத்தையே பெற்றுத் தந்து அவலம் அறுப்பது திருநீறு.

நிலைபேறில்லாச் செல்வங்களால் வந்த மனவருத்தங்களும் வைத்தநிதி (வங்கிக்கணக்கு), பெண்டிர், மக்கள், குலம், கல்வி போன்றவற்றால் வந்த மனவருத்தங்களும் தணிப்பது திருநீறு.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் எனும் பொய்யாமொழிக்கேற்ப வையத்துள் வாழ்வாங்கு வாழவைத்து வானத்தையும் அளிப்பது திருநீறு.

உயர்வு தாழ்வு இன்றி எந்த வித வேறுபாடும் இன்றி யார் அணிந்தாலும் பொருத்தமாய் இருப்பது திருநீறு.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்ற ஆன்றோர் மொழிக்கேற்ப அவன் அருள் பெறும் புண்ணியம் செய்தவர்கள் அணிவது வெண்ணிறத் திருநீறு.

இப்படிப்பட்ட திருநீறு அணிந்து பெருஞ்செல்வத்தை அடைந்து திருமகள் அருள் நிறைந்த அடியவர்கள் வாழும் திருமாளிகைகள் சூழ்ந்த திருவாலவாய் அப்பனின் திருநீறே இப்பெருமைகளை உடையது.

Tuesday, July 08, 2008

வடநூல்கடலும் தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர் செந்நாவில் நின்று காக்கும் கருணைக் கடலே!


தூக்கும் பனுவல் துறைதோய்ந்த கல்வியும் சொற்சுவைதோய்
வாக்கும் பெருகப் பணித்தருள்வாய்! வடநூல்கடலும்
தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர் செந்நாவில் நின்று
காக்கும் கருணைக் கடலே! சகலகலாவல்லியே!


தூக்கும் பனுவல் துறைதோய்ந்த கல்வியும் - எல்லோரும் பாடிப் பரவும் பாடல்களும், எல்லாத் துறைகளிலும் இயங்கும் கல்வியும்,

சொற்சுவைதோய் வாக்கும் - சொல்லும் ஒவ்வொரு சொல்லும் இனிமையுடன் வலிமை பொருந்தி நிற்கும் பேச்சுத்திறமையும்,

வடநூல்கடலும் - வடதிசையில் வாழ்ந்தவர் இயற்றிய கடல் போன்ற நூல்களும் (வடமொழியில் இருக்கும் கடல் போன்ற நூல்களும்),

தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் - இன்பத்தையும் அறிவையும் தேக்கி நிற்கும் செழுமையான தமிழ்ச் செல்வங்களான நூல்களும்,

பெருகப் பணித்தருள்வாய்! - எனக்கு கிடைத்து நின்று நிலைத்துப் பெருக நீ அருள் புரிவாய்!

தொண்டர் செந்நாவில் நின்று காக்கும் கருணைக் கடலே! சகலகலாவல்லியே!

Monday, July 07, 2008

பூச இனியது நீறு புண்ணியம் ஆவது நீறு


பூச இனியது நீறு புண்ணியம் ஆவது நீறு
பேச இனியது நீறு பெரும் தவத்தோர்களுக்கெல்லாம்
ஆசை கெடுப்பது நீறு அந்தமதாவது நீறு
தேசம் புகழ்வது நீறு திருவாலவாயான் திருநீறே

பூச இனியது நீறு - நெற்றியிலும் உடலெங்கும் பூசுவதற்கு இனியது திருநீறு

புண்ணியம் ஆவது நீறு - நல்வினைப்பயன்களைத் தருவ்து திருநீறு

பேச இனியது நீறு - பெருமைகளை எடுத்துப் பேச இனிமையாக இருப்பது திருநீறு

பெரும் தவத்தோர்களுக்கெல்லாம் ஆசை கெடுப்பது நீறு - பெரும் தவம் செய்யும் அடியவர்களுக்கெல்லாம் அவர் தம் 'மற்றை நம் காமங்களைத்' தீர்ப்பது திருநீறு

அந்தமதாவது நீறு - இறுதி நிலையாவது திருநீறு

தேசம் புகழ்வது நீறு - ஊர் உலகமெல்லாம் புகழ்வது திருநீறு

திருவாலவாயான் திருநீறே - மதுரையில் வாழும் இறைவனின் திருநீறே.

***

மிக எளிமையான பாடல்.

அதிகாலை எழுந்ததும் இறைவன் திருவடிகளைத் தொழுது நெற்றி மணக்கத் திருநீறு பூசினால் எவ்வளவு இனிமையாக இருக்கிறது. பூசி உணர்ந்தவர்களுக்குத் தெரியும் அதன் இனிமை. அந்த திருநீறை அணிந்து கொண்டு யார் முன்னால் சென்றாலும் அதனைப் பார்ப்பவர்களுக்கும் அதன் புனிதத்தால் நல்ல உணர்வுகள் தோன்றி நல்ல செயல்கள் செய்ய நல்ல தூண்டுதல் கிடைக்கிறது. நமக்கும் திருநீறு அணிந்ததால் உள்ளம் தூய்மை பெற்று நல்வினைகளில் ஈடுபாடு தோன்றுகிறது. அப்படி புண்ணியங்கள் ஆவது திருநீறு. இதன் பெருமைகளைப் பேசத் தொடங்கினால் கேட்பதற்கும் இனியதாக இருக்கிறது. பேசுவதற்கும் இனியதாக இருக்கிறது. திருநீறின் பெருமைகளே பெருமை. முற்பிறவித் தவத்தாலும் நம் முன்னோர் செய்த தவத்தாலும் நமக்குத் திருநீறு அணியும் எண்ணம் தோன்றி நம் ஆசைகளை அறுக்கிறது. ஐயன் வள்ளுவன் சொன்னதைப் போல் பற்றற்றானின் பற்றைப் பற்றி மற்ற பற்றுகளை விட அணி செய்கிறது திருநீறு. எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்று என்று இறைவனை வேண்டத் தூண்டுகிறது திருநீறு. ஆதி பகவன் முதற்றே உலகு என்று எல்லோருக்கும் தெரியும். அந்தமும் அவனே என்று சொல்லாமல் சொல்லி நிற்பது திருநீறு. தோன்றிற் புகழொடு தோன்றுக என்றார் பொய்யாமொழிப் புலவர். ஊர் உலகம் தேசமெல்லாம் போற்றிப் புகழும் படி நிற்பது திருநீறு. இவ்வளவு பெருமையும் உடையது திருவாலவாயாம் மதுரையம்பதி வாழும் மீனாட்சி சுந்தரேசனின் மடைப்பள்ளித் திருநீறே.

Thursday, July 03, 2008

இங்கேயும் ஒரு யசோதை

'நாலாயிரம் கற்போம்ன்னு எழுதத் தொடங்கினேன். ஆனா வாரத்துக்கு ஒரு பாசுரம் கூட எழுத முடியலையே. இன்னைக்காவது அடுத்த பாசுரத்தைப் பாக்கணும்'

கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும்
எடுத்துக் கொள்ளில் மருங்கை இறுத்திடும்
ஒடுக்கிப் புல்கில் உதரத்தே பாய்ந்திடும்
மிடுக்கிலாமையால் நான் மெலிந்தேன் நங்காய்


'பெரியாழ்வார் இந்தப் பாசுரத்துல என்ன சொல்றார்? படுக்க வச்சா தொட்டில் கிழிந்து போகிற மாதிரி உதைக்கிறான். எடுத்து வச்சிக்கலாம்ன்னா இடுப்பை முறிக்கிறான். நல்லா இறுக்கிக் கட்டிப் பிடிச்சா வயித்தில பாயுறான். இதை எல்லாம் தாங்குறதுக்கு எனக்கு பலம் இல்லை. அதனால நான் மெலிஞ்சு போனேன்னு யசோதை சொல்ற மாதிரி பாடியிருக்காரா?

இதெல்லாம் சின்ன குழந்தைங்க செய்றது தானே? இதைக் கூடவா ஒரு அம்மாவால தாங்க முடியாது. அதைப் போயி இன்னொருத்தர் கிட்ட முறையிடுவாங்களா? உண்மையிலேயே இதைத் தான் யசோதா சொல்றதா பெரியாழ்வார் எழுதியிருக்காரா? கண்ணா புரியலையே'

"என்ன பண்றீங்க? எப்பவும் தமிழ்மணம் தானா? குடும்பத்து மேல கொஞ்சம் கூட அக்கறையில்லையா?"

"இப்ப என்ன ஆச்சு? ஏன் திரும்பவும் இந்தப் பல்லவியைத் தொடங்குற?"

"பின்ன? பையனைப் பத்தி கொஞ்சமாவது கவலை இருக்கா?"

"அவனைப் பத்தி என்ன கவலை? அவன் பாட்டுக்கு விளையாடிக்கிட்டு இருக்கான்"

"ஆமாம். அவன் பாட்டுக்கு ஆடிக்கிட்டு தான் இருக்கான். நீங்க அவனோட கொஞ்சம் ஆடுனா என்ன?"

"என்ன சொல்ற நீ? என்னம்மோ நான் அவன் கூட விளையாட்றதே இல்லைங்கற மாதிரியில்ல சொல்ற?"

"அவனோட விளையாண்டா அவன் என்ன என்ன பண்றான்னு தெரியுமே. சொல்லுங்க அவன் என்ன என்ன பண்றான்?"

"அவன் பாட்டுக்கு அவன் விளையாடிக்கிட்டு இருக்கான். அவ்வளவு தானே?"

"அவ்வளவு தானா? எப்பப் பாரு காலை சுத்திக்கிட்டே இருக்கான். தூக்கி வச்சுக்கணுமாம். தூக்கி இடுப்புல வச்சிக்கிட்டாலோ இந்தப் பக்கமும் அந்தப்பக்கமும் தாவிக் குதிக்கிறான். இடுப்பு முறிஞ்சிரும் போல இருக்கு"

"அதனால என்ன? குழந்தைங்கன்னா அப்படித் தான் இருப்பாங்க"

"படுக்குறதுன்னா அவன் கூடவே நாமளும் படுத்துக்கணும். பக்கத்துல படுத்திருக்கிறவங்களை உதைச்சு உதைச்சே வயிரு வலி வந்துறும்"

"இதெல்லாம் குழந்தைங்க செய்றது தானேம்மா. இதை எல்லாமா குறையா சொல்லுவாங்க?"

"இதெல்லாம் செய்யட்டுங்க. வேணாங்கலை. ஆனா ஒழுங்கா சாப்புடணுமே. ஒன்னுமே சாப்புடறதில்லை. அப்புறம் எப்படி உடம்புல பலம் இருக்கும். பலமே இல்லாம இப்படி எல்லாம் பண்றானேன்னு தான் கவலை. அவன் சாப்புட்றானா இல்லைன்னு கூட நீங்க பாக்குறதில்லை"

'ஓ இது தான் மிடுக்கிலாமையால் நான் மெலிந்தேனுக்கு அருத்தமா? கண்ணனுக்கு மிடுக்கிலாமையால் நான் மெலிந்தேன்னு புலம்புறாங்களா யசோதை. ம்'

Tuesday, July 01, 2008

கண்ணன் பாட்டு 100வது இடுகைக்கு திருமதி. நாகி நாராயணன் அவர்களின் வாழ்த்துகள்


திருமதி. நாகி நாராயணன் அவர்கள் ஒரு தேர்ந்த கருநாடக இன்னிசைப் பாடகி. இவர் இரவிசங்கர் கண்ணபிரான் எழுதிய பாடலை தனது தோழி திருவரங்கப்ரியா ஷைலஜா அவர்களுடன் இணைந்து பாடியதை இந்த இடுகையில் கேட்கலாம்.

இனி அவரது வாழ்த்துச்செய்தி:

அன்புள்ள திரு.கண்ணபிரான் ரவிசங்கர் அவர்களுக்கு, கண்ணன் பாட்டு
எண்ணிக்கை நூறு ஆனதில் மட்டற்ற மகிழ்ச்சி.
அதைத் தெரிவித்துக் கொள்ள ஒரு சிறு கவிதை முயற்சி !!!

கண்ணனின் அற்புத லீலைகளும் - மணி
வண்ணனின் திவ்யப் பண்களும்
கண்ணன் பாட்டுப் பதிவகத்தில்
எண்ணிக்கை நூறை எட்டியதில்
மண்ணெங்கும் பரவசமடைந்து
விண்ணை எட்டும் குரலில்
உண்மையாக உரைப்போம்
வாழ்க உம் பணி, வளர்க உங்கள் தொண்டு !!!!

- வாழ்த்துக்களுடன்,
நாகி நாராயணன்.