இராவணன் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு
பராவணம் ஆவது நீறு பாவம் அறுப்பது நீறு
தராவணம் ஆவது நீறு தத்துவம் ஆவது நீறு
அராவணங்கும் திருமேனி ஆலவாயான் திருநீறேஇராவணன் மேலது நீறு - இரவின் வண்ணம் கொண்ட இராவணன் பக்தியுடன் தன் அங்கமெங்கும் அணிவது திருநீறு
எண்ணத் தகுவது நீறு - தியானிக்க ஏற்றது திருநீறு
பராவணம் ஆவது நீறு - பாராயணம் செய்யப்படுவது திருநீறு
பாவம் அறுப்பது நீறு - பாவங்கள் என்னும் தளைகளை அறுப்பது திருநீறு
தராவணம் ஆவது நீறு - தரா என்னும் சங்கின் வண்ணம் ஆவது திருநீறு
தத்துவம் ஆவது நீறு - எல்லாவற்றிற்கும் அடிப்படையானத் தத்துவமாய் இருப்பது திருநீறு.
அராவணங்கும் திருமேனி ஆலவாயான் திருநீறே - அரவுகள் (பாம்புகள்) வணங்கும் (நிறைந்திருக்கும்) திருமேனியை உடைய திருவாலவாயான் திருநீறே.
இந்த இடுகை 19 நவம்பர் 2006 அன்று 'திருநீற்றுப்பதிகம்' பதிவில் இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:
ReplyDelete27 comments:
Anonymous said...
குமரா!
நம் ராவணன் பெரும் சிவபக்தன் ;சிவனார் கோண மாமலையையே புரட்ட முற்ப்பட்டவன்; அவனைப் பற்றிக் கூறி எங்களைப் பெருமைப் படுத்தியுள்ளார்.
யோகன் பாரிஸ்
4:37 AM, November 20, 2006
--
G.Ragavan said...
ஆகா...குமரன்...வாயைக் கிண்டுறீங்களே...ஆனாலும் வாயை மூடிக்கிறேன். :-)
பராவணம், தராவணம் ஆகியவற்றிற்கு விளக்கம் சரிதானா குமரன்? ஏதோ குறைவது போலத் தெரிகிறது.
5:01 AM, November 20, 2006
--
ஜெயஸ்ரீ said...
பராவணம் ஆவது நீறு - பூசிக்கத் தகுந்தது திருநீறு
பராவணம் - பூசிக்கத் தகுந்த பொருள்
6:03 AM, November 20, 2006
--
குமரன் (Kumaran) said...
யோகன் ஐயா. சம்பந்தப் பெருமானின் பதிகங்களில் எல்லாம் எட்டாவது பாடலில் இராவணனைப் பற்றிக் கூறியிருப்பார். ஒன்பதாவது பாடலில் பௌத்தரையும் அமணரையும் சாடியிருப்பார். அதனை ஒரு முறையாக வைத்து காழிப்பிள்ளையார் பதிகங்கள் பாடியிருக்கிறார். கோளறு பதிகத்தின் பொருள் சொல்லிக் கொண்டிருக்கும் போது எஸ்.கே. இதனைச் சொன்னார். அதன் பிறகு சம்பந்தரின் பல பதிகங்கள் பார்த்தேன். ஏல்லா பதிகங்களிலும் அப்படியே இருக்கிறது.
8:11 AM, November 20, 2006
--
குமரன் (Kumaran) said...
என்ன இராகவன்? இராவணன் என்ற பெயரைப் பார்த்தாலே உங்களுக்கு வாயைக் கிண்டுகிறேன் என்று தோன்றுகிறதா? :-)
பராவணம், தராவணம் ஆகியவற்றிற்கு அடியேனுக்குத் தோன்றிய பொருளைச் சொன்னேன் இராகவன். தவறிருந்தால் சரி செய்யவும்.
8:12 AM, November 20, 2006
--
குமரன் (Kumaran) said...
பராவணம் - பரவும் வண்ணம் இருப்பது திருநீறு. பூசிக்கத் தகுந்தது திருநீறு. வடமொழியில் இதனையே பராயணம் செய்வது என்பார்கள். நாராயண பராயணர்கள் என்று நாராயணனை பூசிப்பவர்களைச் சொல்வதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். விளக்கத்திற்கு நன்றி ஜெயஸ்ரீ.
8:14 AM, November 20, 2006
--
கோவி.கண்ணன் [GK] said...
//இராவணன் மேலது நீறு - இரவின் வண்ணம் கொண்ட இராவணன் பக்தியுடன் தன் அங்கமெங்கும் அணிவது திருநீறு//
குமரன்,
திருநீறு ஏன் இராவணனை திருத்தவில்லை ?
5:01 PM, November 20, 2006
--
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//தராவணம் ஆவது நீறு//
சங்கைப் போல் வெண்மை என்கிறார்;
சங்கு சுட்டாலும் வெண்மை தரும் என்பார்கள்! நீறும் பூக்க பூக்க, மேலும் கனன்று வெண்மையே பயக்கும்! அதைத் தான் குறிப்பிடுகிறாரோ சம்பந்தப் பெருமான்!
9:06 AM, November 21, 2006
--
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
குமரன், யோகன் அண்ணா
ஆத்ம லிங்கத்தைச் சிவனாரிடம் வாங்கி வழிபட்ட இராவணனை, பல இடங்களில் சம்பந்தப்பெருமான் குறிப்பிட்டுள்ளார். இன்னும் விரிவாச் சொல்லுணும் என்றால், அவரின் பல தேவாரப் பதிகங்ளில் ஒரு அமைப்பு (pattern) தெரியும்!
4/5ஆம் பதிகம் = பெரும்பாலும் சிவ சக்தி தத்துவமாய் இருக்கும்
8ஆம் பதிகம் = இராவண கர்வ பங்கம், இராவணன் சிவனை பூசித்தது, இராவணன் நந்தி தேவரிடம் பெற்ற சாபம் என்று இராவணன் பற்றிய குறிப்புகள்!
"இலங்கை வாழ் வேந்தை
நாசம் செய்த நங்கள் பெருமான்", "மலை எடுத்த
உன்மத்தன்", "படை வேந்தன் இராவணன்" என்று பல குறிப்புகள்!
9ஆம் பதிகம் = மாலும் அயனும் ஈசனைத் தேடி அடையும் இறை விழைவு
10ஆம் பதிகம் = சமண/அமணக் கருத்துகளை மறுத்து உரைப்பது; மருள் அறிவு களைந்து அருள் ஞானம் பெறுவது பற்றி
11ஆம் பதிகம் = இறை விழைவினாலும், மேற்படி பதிகம் பாடுவதாலும் விளையும் பயன்கள்/நன்மைகள்
இவற்றை ஏன் 4/5,8,9,10,11 என்ற எண்களில் வைத்தார் என்பதற்கு சோதிட ரீதியாக விளக்கம் சொல்வார்கள் சைவப் பெரியார்கள்! கோளறு பதிகம் பாடியவரான சம்பந்தப் பெருமான், கோள் நிலைகளாக இதை வைத்ததாகக் கேட்டுள்ளேன்; சரியாக நினைவில்லை; மீண்டும் தேட வேண்டும்!
10:13 AM, November 21, 2006
--
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//கோவி.கண்ணன் [GK] said
குமரன்,திருநீறு ஏன் இராவணனை திருத்தவில்லை?//
மிக நல்ல கேள்வி ஜிகே சார்!
விடை வேண்டும் என்றால், நாம் முதல் பாடலுக்குத் தான் செல்ல வேண்டும்.
அங்கிருந்து தானே ஆரம்பிக்கிறது இந்த திருநீற்றுப் பதிகம்!
"மந்திரமாவது நீறு":
திருநீறே மந்திரமாக அமைவது!
பலர் பல விதமாக மந்திரம் சொல்கிறார்கள்! ஒப்புக்குச் சொல்வது, கடனே என்று சொல்வது, வயிற்றுப் பிழைப்புக்காகச் சொல்வது,
சொல்லிக் கொடுக்கப்பட்டதால் சொல்லுவது, பிடித்திருப்பதால் சொல்லுவது, உணர்ந்து சொல்லுவது என்று பல வகை!
நோக்கங்கள் பல வகை!
ஆனால் அந்த மந்திரம் எல்லாருக்கும் சித்திக்கின்றதா என்று பார்த்தால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
இராவணனுக்கும் மந்திரமான திருநீறு சித்திக்க வில்லை!
ஏன் சித்திக்கவில்லை? அடுத்த பாடலில் இருக்கு பாருங்க விடை.
"பேணி அணிபவர்க்கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு"
"பேணி" அணிய வேண்டும் என்கிறார்.
நலம் பேணி, நம சிவாய என்று நாவாலும், மனத்தாலும் சொல்லி அணிய வேண்டும்!
வாயினால் "பாடி", மனத்தினால் "சிந்திக்க" வேண்டும்!
இராவணன் இப்படிச் செய்தானா? இதற்கு, அடுத்த பாடலைப் பாருங்கள்!
"இராவணன் மேலது நீறு" என்கிறார்.
அவன் பூசுவது என்றோ, தரிப்பது என்றோ சொல்லவில்லை; அவன் மேல் நீறு என்கிறார்!
நீறு என்பதே நிலையாமைத் தத்துவம்;
ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களும் அணிய அணிய படிப்படையாகக் குறைய வேண்டும்;
"அப்படிக் குறைய வேண்டுமே என்று நினைத்து" அணிந்தால், மந்திரம் சித்திக்கும்!
ஆனால் நம் இராவணனோ கல்வி கேள்விகளில் வல்லவனாக இருந்தும், இந்த ஆணவம் ஒன்றினால், அறிவுக் கண்ணைத் தானே மூடிக் கொண்டார்(ன்)!
ஈசனின் அடியவரைத் துச்சமாக எண்ணும் போக்கு மாறாமல் நந்தி தேவரிடம் சாபம் பெற்றார்(ன்);
வரம் பெற்று விட்டோம், அதனால் என்றும் நிலைத்து இருப்போம் என்பது நிலையாமையை உணர்த்தும் நீறுக்கே எதிரானது அல்லவா?
அதனால் தான் அவனுக்குத் திருநீறு என்னும் மந்திரம் சித்திக்க வில்லை; பலன் தர வில்லை!
ஆனால் அவன் பாட்டன் மால்யவானுக்கும், மனைவி மண்டோதரிக்கும் சித்தித்தது!
எனவே இராவணன் என்று இல்லை; யாராயினும், நீறினைப் பேணித் தரிக்க வேண்டும்!
அப்படித் தரித்தால் நம்மைக் கொஞ்சம் கொஞ்சமாக திருத்தி, நமக்குச் சித்திக்கும் என்பதே உட்கருத்து!
அடியேனால் இயன்ற வரை விளக்கினேன், GK!
பெரியவர்கள் தான் வந்து கருத்து சொல்லி அறிவுறுத்த வேண்டும்!
2:18 PM, November 21, 2006
--
கோவி.கண்ணன் [GK] said...
குமரன் விளக்கமாக எழுதியதற்கு நன்றி ! ஒரு தனிப்பதிவாக எழுதவேண்டியதை எனக்காக பின்னூட்டமாக எழுதியிருக்கிறீர்கள் நன்றி !
இராவணனுக்கு திருநீற்றின் மகிமை தெரியால இருந்திருக்குமா ? அப்படி யென்றால் இந்த பாடலில் இராவணன் பெயர் இடம் பெற்றிருப்பதற்கு காரணம் என்ன ?
அவர் சிறந்த சிவ பக்தன் என்றும், வீணை மீட்டுவதில் வல்லவன் என்பதும் தெரியும் !
6:01 PM, November 21, 2006
--
குமரன் (Kumaran) said...
கோவி.கண்ணன் ஐயா. இரவிசங்கர் சொன்னதைக் கேட்டுவிட்டு குமரன் என்று விளித்து அதற்கு மறுமொழி சொன்னவர்கள் உங்களோடு இதுவரை இருவர் ஆகிறார்கள். :-) இரவிசங்கர் பதிவில் ஜயராமன் இப்படி செய்தார். இப்போது நீங்கள். :-) நீங்கள் கேட்ட கேள்விக்கு நான் இன்னும் விடையே சொல்லவில்லை. இரவிசங்கர் தான் விளக்கமாக பதில் சொல்லியிருக்கிறார். எனக்கு இனி அந்த வேலை இல்லை. :-)
வாயைக் கிளராதீர்கள் என்று மேலே ஒருவர் சொல்லிவிட்டுச் சென்றார். அவர் வந்து என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம். இனிமேலும் அவர் வாயை மூடிக் கொண்டிருப்பார் என்ற நம்பிக்கை எனக்கில்லை. :-)
நாரதர் கலகம் நன்மையில் முடியும். :-)
6:47 PM, November 21, 2006
--
கோவி.கண்ணன் [GK] said...
//குமரன் (Kumaran) said...
கோவி.கண்ணன் ஐயா. இரவிசங்கர் சொன்னதைக் கேட்டுவிட்டு குமரன் என்று விளித்து அதற்கு மறுமொழி சொன்னவர்கள் உங்களோடு இதுவரை இருவர் ஆகிறார்கள். :-) இரவிசங்கர் பதிவில் ஜயராமன் இப்படி செய்தார். இப்போது நீங்கள். :-) நீங்கள் கேட்ட கேள்விக்கு நான் இன்னும் விடையே சொல்லவில்லை. இரவிசங்கர் தான் விளக்கமாக பதில் சொல்லியிருக்கிறார். எனக்கு இனி அந்த வேலை இல்லை. :-)
வாயைக் கிளராதீர்கள் என்று மேலே ஒருவர் சொல்லிவிட்டுச் சென்றார். அவர் வந்து என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம். இனிமேலும் அவர் வாயை மூடிக் கொண்டிருப்பார் என்ற நம்பிக்கை எனக்கில்லை. :-)
நாரதர் கலகம் நன்மையில் முடியும். :-)
//
ரவி சங்கருக்கு நன்றி, கலக்குகிறார் அவர் பதிவிலும் நன்றாகவே எழுதுகிறார். பாரட்டுக்கள் ரவி சங்கர்.
அவர் கருத்தை நீங்கள் வழிமொழிவதாக சொல்லிவிட்டீர்கள்.
நானும் வாயை கிளறுகிறேன்.
நாரதர் என்று நீங்கள் குறிப்பிட்டது யாரை ?
:)
8:00 PM, November 21, 2006
--
குமரன் (Kumaran) said...
//நாரதர் என்று நீங்கள் குறிப்பிட்டது யாரை ?
//
நீங்கள் யாரென்று நினைத்தீர்கள் ஐயா? :-)
3:32 AM, November 22, 2006
--
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
// கோவி.கண்ணன் [GK]
ரவி சங்கருக்கு நன்றி, கலக்குகிறார் அவர் பதிவிலும் நன்றாகவே எழுதுகிறார். பாரட்டுக்கள் ரவி சங்கர்//
GK ஐயா, தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி! அப்பப்ப மாதவிப் பந்தலுக்கும் வாங்க!
//நானும் வாயை கிளறுகிறேன்.
நாரதர் என்று நீங்கள் குறிப்பிட்டது யாரை ?//
//குமரன் (Kumaran) said...
நீங்கள் யாரென்று நினைத்தீர்கள் ஐயா? :-)//
அடடா, பதிவில் இப்ப ராவணன் போய் நாரதர் வருகிறாரா?:-)
சரி வரட்டும், வரட்டும்!!
6:20 AM, November 22, 2006
--
நாமக்கல் சிபி said...
ஜி.ராவை இன்னும் காணோம்?
அப்பறம் நான் எப்படி கலந்துக்கறது???
சும்மா சொன்னேன் :-)
திருநீர் நான் தினமும் வைக்கும் போது மனதில் நினைப்பது இதுதான்...
டேய் பாலாஜி, நாளைக்கு நீயும் இப்படித்தான் சாம்பலாக போற ரொம்ப ஓவரா ஆடத!!!
7:49 AM, November 22, 2006
--
மலைநாடான் said...
குமரன்!
அழகு தமிழுரைக்கு , பாராட்டுக்கள்
அழகுக்கு அழகு சேர்த்திருக்கும் ரவிசங்கர் உங்களுக்கும்தான்.
நீங்கள் எதிர்பார்த்திருக்கும் நாரதரை நானும் எதிர்பார்த்திருக்கின்றேன்.:)
8:16 AM, November 22, 2006
--
குமரன் (Kumaran) said...
கோவி.கண்ணன் ஐயா. திருநீறு ஏன் இராவணனைத் திருத்தவில்லை என்ற மிக நல்ல கேள்வியைக் கேட்டிருக்கிறீர்கள். அடியேனுக்கு விடை தெரியவில்லை. இரவிசங்கர் விடை சொல்லியிருக்கிறார். நான் இன்னுமொரு முறை அதனைப் படித்துப் பார்க்க வேண்டும். அவர் சொன்ன விடை உங்களுக்குப் பொருத்தமாகத் தோன்றியதா?
5:08 AM, November 25, 2006
--
குமரன் (Kumaran) said...
இரவிசங்கர், தராவணத்திற்கு ஒரு நல்ல பொருள் சொன்னீர்கள். நன்றிகள்.
5:09 AM, November 25, 2006
--
குமரன் (Kumaran) said...
இரவிசங்கர்,
ஆளுடைய பிள்ளையாரின் பதிக அமைப்பைப் பற்றி விளக்கமாகச் சொன்னதற்கு மிக்க நன்றி. அடியேன் இதில் தெளிவில்லாமல் இதுவரை இருந்தேன்.
5:10 AM, November 25, 2006
--
குமரன் (Kumaran) said...
இரவிசங்கர்,
மிக அருமையாக கோவி.கண்ணன் ஐயாவின் கேள்விக்குப் பதில் சொல்லியிருக்கிறீர்கள். மிக்க நன்றி.
5:12 AM, November 25, 2006
--
குமரன் (Kumaran) said...
கோவி.கண்ணன் ஐயா. நாரதர் என்று என்னையே அழைத்துக் கொண்டேன். நான் தானே வாயைக் கிளராதீர்கள் என்ற இராகவனை வம்புக்கு இழுப்பது. :-)
இராவணன் சிறந்த சிவபக்தன் என்பதும் வீணை மீட்டுவதில் மட்டுமின்றி நான்கு வேதங்களை ஓதுவதிலும் வல்லவன் என்று வடமொழி தென்மொழி எம்மொழி இராமாயணமாகிலும் எங்கும் சொல்லியிருக்கிறார்கள். கல்வி கேள்விகளில் மிகச் சிறந்தவன் என்பதையும் அவன் பெருமைகளையும் எந்த வித மறைத்தலுமின்றிச் சொல்லியிருக்கிறார்கள். இராவணனுக்குத் திருநீற்றின் பெருமை தெரிந்தே இருந்திருக்கும். அப்படி தெரிந்திருப்பதே செயலில் தெரியவேண்டும் என்ற கட்டாயம் இல்லையே. அடியேனுக்கும் எத்தனையோ தெரிகிறது. எல்லாம் புத்தகப் படிப்பாய் மட்டுமே இருக்கிறதே ஒழிய செயலில் ஒன்றும் தெரிவதில்லையே. புத்தகப் படிப்பு மட்டுமே பயன் கொடுக்குமா? அப்படித் தான் ஆனதோ என்னவோ இராவணன் விதயத்திலும்.
5:16 AM, November 25, 2006
--
குமரன் (Kumaran) said...
வெட்டிப்பயலாரே. ஜீரா வந்தால் தான் நீங்கள் வருவீர்களா? என்ன அநியாயம்? உண்மையைத் தான் சொன்னீர்கள் போலும். இதுவரை அடியேன் பதிவுகளில் அவ்வளவாய் தலை காட்டாத நீர் நாரதரைக் கூப்பிட்டவுடன் வந்துவிட்டீரே! :-)
5:17 AM, November 25, 2006
--
குமரன் (Kumaran) said...
நன்றிகள் மலைநாடான் ஐயா. நாரதர் இங்கே தான் இருக்கிறேன். ஆனால் நாரதர் யாரை அழைத்தாரோ அவர் வர மறுக்கிறார். என்ன செய்ய? :-)
5:19 AM, November 25, 2006
--
கோவி.கண்ணன் [GK] said...
நன்றி குமரன்,
சிலுவையோ, பட்டையோ, நாமமோ வேறு எந்த மத அடையாளம் என்றாலும் அது அதைப் பின்பற்றுபவர்களை அடையாளம் காட்ட என்ற அளவில் தான் பயன்படுகிறது. மற்றபடி மேற்கண்ட ஸ்துல (இயல்பு ?)பொருள்களுக்கு மனத்தை (புத்தியை) சீர்செய்யும் சக்தியெல்லாம் கிடையாதென்றே நினைக்கிறேன்.
இப்பவெல்லாம் திரைப்படங்களில் கூட எதாவது மத சின்னம் அணிந்தவர்களைத்தான் வில்லனாகவே காட்டுகிறார்கள். குறிப்பாக பைனான்ஸ் கம்பெனி வைத்து ஏமாற்றும் வில்லன்கள், தாதாக்கள், அரசியல் வாதிகள் இவர்கள் பாத்திரத்துடன் எதாவது ஒரு மதச்சின்னம் இருக்கிறது
:)
குறைசொல்வதற்காக சொல்லவில்லை, குறையாக போய்விட்டது என்று சொல்ல முயன்றேன்.
6:36 AM, November 25, 2006
--
குமரன் (Kumaran) said...
கோவி.கண்ணன் ஐயா. நீங்கள் சொல்வதை ஒத்துக் கொள்கிறேன். ஆனால் இப்போது அப்படி இருக்கிறது என்பதால் காலம் காலமாக அப்படித் தான் என்று சொல்ல முடியாது. நீங்களும் அதனை ஒத்துக் கொள்வீர்கள் என்று எண்ணுகிறேன்.
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்ததொழித்து விடின்
என்று ஐயன் சொன்னதும் இங்கே நினைவிற்கு வருகிறது.
மதச் சின்னங்களுக்கு சக்தி இருக்கிறதா இல்லையா என்பதெல்லாம் அதனை அணிபவர் அணியும் போது கொள்ளும் மனநிலைக்கு ஏற்றது. புறச்சின்னம் அகத்தூய்மைக்கு அடிகோலுவதும் உண்டு. புறச்சின்னமாகவே தங்கிவிடுவதும் உண்டு.
6:44 AM, November 25, 2006
--
கோவி.கண்ணன் [GK] said...
//மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்ததொழித்து விடின்
என்று ஐயன் சொன்னதும் இங்கே நினைவிற்கு வருகிறது.
//
குமரன்,
திருகுறளை வைத்து அருமையான நினைவூட்டல், மற்றும் மேலும் உடனடியாக பின்னூட்டம் வெளியிட்டு, மறுமொழியிட்டதற்கும் நன்றி !
6:51 AM, November 25, 2006
ஆஹா, அருமையான பதிவு; மேலும் அருமையான பின்னூட்டங்கள். நன்றி குமரா. இராவணனுக்கு திருநீறு ஏன் சித்திக்கவில்லை என்ற பதிலைப் படிக்கையில் நானுமே அதனை நீங்கள்தான் எழுதியிருப்பதாக நினைத்தேன் :) பின்னால் வரும் பின்னூட்டங்களைப் படித்த பின்பே தவறு புரிந்தது :)
ReplyDelete//இராவணனுக்குத் திருநீற்றின் பெருமை தெரிந்தே இருந்திருக்கும். அப்படி தெரிந்திருப்பதே செயலில் தெரியவேண்டும் என்ற கட்டாயம் இல்லையே. //
உண்மை, உண்மை :( ஹும்...