Wednesday, July 23, 2008

உன்போல் கண்கண்ட தெய்வம் உளதோ? சகலகலாவல்லியே!


மண்கொண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும் என்
பண்கண்ட அளவில் பணியச் செய்வாய்! படைப்போன் முதலாம்
விண்கண்ட தெய்வம் பல்கோடி உண்டேனும் விளம்பில் உன்போல்
கண்கண்ட தெய்வம் உளதோ? சகலகலாவல்லியே!

மண் கொண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும் - மண்ணுலகில் மன்னர்கள் எல்லாரும் தம் அரசாட்சியின் சின்னமாக வெண்கொற்றக் குடையின் கீழ் சிம்மாசனத்தில் வீற்றிருக்கின்றனர். சிற்றரசர்களின் வெண்குடைகள் பேரரசர்களின் கீழ் அமைகின்றன. அவ்வாறு மண்ணுலகில் உள்ள எல்லா வெண்குடைகளும் தனக்குக் கீழாக பேரரசனாக விளங்குகின்ற மன்னரும்

என் பண்கண்ட அளவில் பணியச் செய்வாய் - என் பாடல்களைக் கண்டவுடனே தகுந்த மரியாதை கொடுத்துப் பணியும் படி அருள் செய்வாய்.

படைப்போன் முதலாம் விண்கண்ட தெய்வம் பல்கோடி உண்டேனும் - படைக்கும் கடவுளான பிரம்மதேவன் முதற்கொண்டு விண்ணில் வாழும் தெய்வங்கள் பலகோடி இருப்பினும்

விளம்பில் உன்போல் கண்கண்ட தெய்வம் உளதோ சகலகலாவல்லியே - உன்னைப் போல் கண்கண்ட தெய்வம் உள்ளதோ? சொல்லுவாய் கலைவாணியே!

7 comments:

  1. இந்தப் பாடலுடன் குமரகுருபரர் இயற்றிய 'சகலகலாவல்லிமாலை' நிறைவு பெறுகிறது.

    இந்த இடுகை 'சகலகலாவல்லிமாலை' பதிவில் 5 ஏப்ரல் 2006 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:

    25 comments:

    SK said...
    நல்ல படிப்பும் பெருமையும் வரவேண்டி, இப்பாடலைப் பாடுதல் வழக்கம்.

    இதில் சிறப்பம்சம் கடைசி இரண்டு வரிகளில் உள்ளது.

    'விண்கண்ட தெய்வம் பல்கோடி உண்டேனும்',
    அவர்களைப் பாடவோ, அழைக்கவோ, துதிக்கவோ, ஏவவோ, எல்லாவற்றிற்கும் 'வாக்தேவி'யின் உதவியன்றி இயலாது.

    எனவேதான், இவளை 'கண்கண்ட தெய்வம்' என அழைத்தார் .

    11:13 AM, April 05, 2006
    --

    செல்வன் said...
    எஸ்.கே,
    வாக்தேவி என்றால் "வாக்குக்கு தேவி" என்ற பொருளிலா சொல்கிறீர்கள்?வாக்கு என்பது தமிழ் சொல்லா சமஸ்கிருத சொல்லா?

    7:35 PM, April 05, 2006
    --

    செல்வன் said...
    படைப்போன் முதலாம் விண்கண்ட தெய்வம் பல்கோடி உண்டேனும் /

    சரஸ்வதியின் கணவரான பிரம்மனை இங்கு முன்னிலைபடுத்தி அவரை விட உயர்ந்தவராக சரச்வதி தேவியை சொன்னதற்கு ஏதேனும் ஆழ்ந்த காரணம் உண்டா?

    7:37 PM, April 05, 2006
    --

    இலவசக்கொத்தனார் said...
    மற்ற செல்வங்களை விடக் கல்வி செல்வமானது சிறப்பானது. ஏனென்றால் அது ஒரு முறை வசப்பட்டால் போகவே போகாது.

    அதனால்தான் ஒரு முறை கண்ணால் கண்டால் அதன் பின் நம்முடனே இருக்கும் கல்வி தெய்வம் கலைவாணியை கண்கண்ட தெய்வமாகச் சொல்கிறாரோ?

    8:48 PM, April 05, 2006
    --

    வெளிகண்ட நாதர் said...
    நல்ல பொருள் விளக்கம், எனது அன்பு குமரனே!

    9:33 PM, April 05, 2006
    --

    ஞானவெட்டியான் said...
    அன்பு குமரன்,
    வாக்கு என்பது தமிழ்ச்சொல்லே.

    12:01 AM, April 06, 2006
    --

    சிவமுருகன் said...
    அழகான விளக்கம்.

    12:09 AM, April 06, 2006
    --

    தி. ரா. ச.(T.R.C.) said...
    நன்றாகச் சொன்னீர்கள் இலவசகொத்தனார் அவர்களே. செல்வம்,வீரம் மற்றும் கல்வியில். கல்விச்செல்வத்தையே உயர்வாக்கொள்ளவேண்டும். மற்றச் செல்வங்கள் அழிவுக்கு உட்பட்டது.கல்விக்கு அழிவே கிடையது. ஒருவனைப்பார்த்து இவன் முன்பு கோடிஸ்வரன் இன்று பிச்சை எடுக்கிறான் என்றும்,இன்னொருவனை இவன் முன்பு மிகப்பெரிய பலசாலி இன்று ஒரு துரும்பைக்கூட துக்க் முடியாது என்றும் கூறுவார்கள். ஆனால் யாரைப்பார்த்தாவது இவன் ஒருகாலத்தில் பிஏ, ம்.ஏ., தமிழில் டாக்டர் பட்டம் வங்கியவன் இன்று அதெல்லாம் போய் இன்று இவன் ல்.கே.ஜி., யு.கே.ஜி என்று கூறுவ்ர்களா? தி. ரா.ச

    12:42 AM, April 06, 2006
    --

    SK said...
    வடமொழியில் 'வாக்[G]' என்றும், தமிழில் 'வாக்கு[k]' எனவும் வழங்கும் சொல் இது.

    "வாக்[G] தேவ்யை நம:" [Sanskrit]

    'வாக்குண்டாம்; நல்ல மனமுண்டாம்"

    என்ற உதாரணங்களை நோக்கவும்.

    7:28 AM, April 06, 2006
    --

    rnateshan. said...
    பாடலும் புகைப்படமும் பிரமாதம்!!

    7:56 AM, April 06, 2006
    --

    Ram.K said...
    முதலில் தனது ஆசையைச் சுருக்கமாகப் புரியும்படி சொல்லிவிட்டு, ஆசை நிறைவேறும் என்ற நம்பிக்கையுடன் புகழ்ச்சியில் உடனே இறங்கிவிடுவது ஒரு நல்ல மனிதத்தனமான (!) அணுகுமுறை அந்நாளிலேயே கையாளப்பட்டுவிட்டது.

    12:06 PM, April 06, 2006
    --

    குமரன் (Kumaran) said...
    உண்மை தான் எஸ்.கே. அன்னையின் அருள் இருந்தால் தான் நல்ல வாக்கு கிடைக்கும். விண்கண்ட தெய்வம் எல்லோரையும் வணங்க முடியும். விளக்கத்திற்கு மிக்க நன்றி.

    8:22 PM, April 07, 2006
    --

    குமரன் (Kumaran) said...
    செல்வன், நீங்கள் கேட்கும் கேள்வியைப் பார்த்தால் உங்களுக்கு ஏதோ ஆழ்ந்த காரணம் தோன்றுவது போல் இருக்கிறதே. என்ன என்று எங்களுக்கும் சொல்லுங்கள்.

    8:24 PM, April 07, 2006
    --

    குமரன் (Kumaran) said...
    கொத்ஸ். அருமையான விளக்கம். மிக்க நன்றி.

    எப்படிய்யா? எப்ப்ப்ப்டி? வெண்பா எழுதிக் கலக்குறீங்க. இங்க வந்து அருமையான விளக்கம் குடுக்கிறீங்க? எப்ப்ப்டி இதெல்லாம்?

    8:25 PM, April 07, 2006
    --

    குமரன் (Kumaran) said...
    ரொம்ப நன்றி வெளிகண்ட நாதர் சார்.

    8:25 PM, April 07, 2006
    --

    குமரன் (Kumaran) said...
    ஆமாம் ஞானவெட்டியான் ஐயா. வாக்கு என்பது தமிழ்ச்சொல்லே.

    8:26 PM, April 07, 2006
    --

    குமரன் (Kumaran) said...
    நன்றி சிவமுருகன்.

    8:26 PM, April 07, 2006
    --

    குமரன் (Kumaran) said...
    மிக்க நன்றி தி.ரா.ச. கொத்ஸ் சொன்ன அருமையான விளக்கத்திற்கு இன்னும் அருமையாக எடுத்துக்காட்டுக்களுடன் விளக்கம் கொடுத்துவிட்டீர்கள்.

    8:27 PM, April 07, 2006
    --

    குமரன் (Kumaran) said...
    மிக்க நன்றி எஸ்.கே. வடமொழி 'வாக்'கும் தமிழ் 'வாக்கும்' ஒன்றே.

    8:28 PM, April 07, 2006
    --

    குமரன் (Kumaran) said...
    ரொம்ப நன்றி நடேசன் சார்.

    8:28 PM, April 07, 2006
    --

    குமரன் (Kumaran) said...
    வடமொழி வேதங்களும் தமிழ் வேதங்களும் இந்த முறையை எப்போதும் கடைபிடித்து வந்துள்ளது இராம்பிரசாத் அண்ணா. ஆசைப் பட்டதை விரும்பிக் கேட்பதும் இறைவனைப் புகழ்வதும் ஒரே மூச்சில் எப்போதும் நடக்கிறது.

    8:30 PM, April 07, 2006
    --

    ஜெயஸ்ரீ said...
    //இவன் முன்பு கோடிஸ்வரன் இன்று பிச்சை எடுக்கிறான் என்றும்,இன்னொருவனை இவன் முன்பு மிகப்பெரிய பலசாலி இன்று ஒரு துரும்பைக்கூட துக்க் முடியாது என்றும் கூறுவார்கள். ஆனால் யாரைப்பார்த்தாவது இவன் ஒருகாலத்தில் பி.ஏ, எம்.ஏ., தமிழில் டாக்டர் பட்டம் வங்கியவன் இன்று அதெல்லாம் போய் இன்று இவன் எல்.கே.ஜி., யு.கே.ஜி என்று கூறுவார்களா? //

    தி.ரா.ச கல்வியின் சிறப்பை மிக அழகான உதாரணத்துடன் சொல்லிவிட்டீர்கள். கல்விச்செல்வம் ஒன்றே வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது, கொடுத்தாலும் நிறைவொழியக் குன்றாது. மற்ற செல்வங்கள் அடுத்தவருக்கு கொடுக்கும்போது குறையும். கல்விச்செல்வமோ கொடுக்கக் கொடுக்க மேன்மேலும் வளரும். அள்ள அள்ளக் குறையாத செல்வம் இது ஒன்றே.

    கேடுஇல் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
    மாடல்ல மற்றை யவை


    மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
    மன்னனிற் கற்றோன் சிறப்புடையன் - மன்னற்குத்
    தன் தேச மல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
    சென்றவிட மெல்லாம் சிறப்பு

    அந்த கல்விச்செல்வத்தை அள்ளிஅள்ளி அளிப்பவளல்லவா கலைவாணி ?

    விளம்பில் உன்போல் கண்கண்ட தெய்வம் உளதோ சகலகலாவல்லியே ? என்று குமரகுருபரர் கூறுவதில் வியப்பென்ன?

    1:37 PM, April 15, 2006
    --

    குமரன் (Kumaran) said...
    தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி Jayashree

    5:21 AM, April 16, 2006
    --

    johan-paris said...
    எங்கள் ஈழத்தில்;சகல சைவக் கல்வி நிலையங்களிலும் நவராத்திரி காலத்தில் தினமும் ஒருவர் வரிவரியாகப் சொல்ல எல்லோரும் திரும்பச் சொல்வோம். "சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து எத்தனை பேர் சொன்னார்களோ ,யானறியேன்; ஆனால் உங்கள் விளக்கங்களைப் படிக்கும் வரை அடியேன் பெரிதாகப் பொருளறிய முற்பட்டதுமில்லை; தங்கள் விளக்கம் எனக்கு; மிக நிறைவைத் தந்தது. அதனல் பலருக்கு பிரதியிட்டனுப்பினேன்.
    தொடரவும்.
    நன்றி
    யோகன்
    பாரிஸ்

    1:49 PM, April 16, 2006
    --

    குமரன் (Kumaran) said...
    தங்கள் பாராட்டுரைக்கு மிக்க நன்றி யோகன் சார்.

    2:46 PM, April 17, 2006

    ReplyDelete
  2. //"சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து எத்தனை பேர் சொன்னார்களோ ,யானறியேன்; ஆனால் உங்கள் விளக்கங்களைப் படிக்கும் வரை அடியேன் பெரிதாகப் பொருளறிய முற்பட்டதுமில்லை; தங்கள் விளக்கம் எனக்கு; மிக நிறைவைத் தந்தது.//

    ரிப்பீட்டேய்!! உங்களுக்கு எப்படித்தான் நன்றி சொல்வது குமரா!

    ReplyDelete
  3. கண்கண்ட தெய்வமாம் கல்விவல்லி காத்தருள

    எண்ணமெலாம் ஓங்கும் உயர்வு.

    ReplyDelete
  4. அடியேனுக்கு நன்றிகள் சொல்லத் தேவையில்லை அக்கா. தானே தன்னை எழுதுவித்துக் கொண்டாள்.

    ReplyDelete
  5. உம்ம பணி தொடர வாழ்த்துகள் குமரம் அவர்களே! இதுபோல் அழகிய விளக்கங்களுடன் மென்மேலும் எதிர்பார்க்கிறேன். வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. நன்றி அகரம்.அமுதா.

    ReplyDelete