Tuesday, July 22, 2008

செம்பொருட்டுணிவே! சீருடைக்கழலே! செல்வமே! சிவபெருமானே!


உம்பர்கட்கரசே! ஒழிவற நிறைந்த
யோகமே! ஊத்தையேன் தனக்கு
வம்பெனப் பழுத்தென் குடி முழுதாண்டு
வாழ்வற வாழ்வித்த மருந்தே!
செம்பொருட்டுணிவே! சீருடைக்கழலே!
செல்வமே! சிவபெருமானே!
எம்பொருட்டுன்னைச் சிக்கெனப்பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!

உம்பர்கட்கரசே - தேவர்களுக்கு அரசனே!

ஒழிவற நிறைந்த யோகமே - இல்லாத இடமே இல்லையெனும் படியாய், தோற்றம் இறுதி இல்லாமல், எக்காலத்தும், எங்கும், எல்லாப் பொருளினிலும் எல்லா உயிரினிலும் நிறைந்து கலந்தவனே

ஊத்தையேன் தனக்கு - கேவலமான, அழுக்கான எனக்கு

வம்பெனப் பழுத்து - வீம்பாய் அருள் புரிந்து, பழுக்கும் காலமில்லாத காலத்தில் சீக்கிரமே பழுத்த பழம் போல தகுதி இல்லாவிடினும் எனக்கு அருள் புரிந்து

என் குடி முழுதாண்டு - என் குடும்பம், குலம், உற்றார், உறவினர், எல்லோரையும், உன் அடிமையாய் ஆண்டு

வாழ்வு அற வாழ்வித்த - நிலையில்லா வாழ்வு போகும்படி நிலையான வாழ்வு அளித்த

மருந்தே - அமுதம் போன்றவனே

செம்பொருள் துணிவே - பெரியோர்களால் உண்மைப் பொருள் என்று முடிவு செய்யப் பட்ட பொருளே; செம்பொருளாகிய வேதங்களால் முழுமுதல் என முடிவு செய்யப்பட்டவனே

சீருடைக்கழலே - அழகிய பெருமையுடைய சிறந்த திருவடிகளை உடையவனே

செல்வமே - என் செல்வமே

சிவபெருமானே

எம் பொருட்டு - எங்கள் பொருட்டு

உன்னைச் சிக் எனப்பிடித்தேன்

எங்கு எழுந்து அருளுவது இனியே - நீர் எங்கே சென்று விட முடியும்?

தேவர்களின் அரசனே! நீர் எங்கும் எப்பொருளும் விடாமல், இல்லாத இடமே இல்லை எனும்படியாய், நீக்கமற நிறைந்துள்ளீர். உமக்கு தொடக்கம் என்றும் முடிவு என்றும் இல்லாமல் எங்கும் எப்போதும் நிறைந்துள்ளீர். நிலையில் மிகவும் குறைந்தவனான கேவலமான எனக்கு பழுக்கும் காலத்திற்கு முன்பே பழுத்த இனிய பழம் போல அருள் புரிந்தவரே. நீர் எம்மை மட்டும் அல்ல என் குலம், நண்பர், உறவினர் என அனைவரையும் உன் அடியார்களாய் ஆக்கிக் கொண்டீர். எங்கள் நிலையில்லாத வாழ்வை நீக்கி, என்றும் நிலைக்கும் பெருவாழ்வைக் கொடுத்த அமுதம் போன்றவரே! ஞானிகளாலும், வேதங்களாலும் மெய்ப்பொருள் என்று துணியப் பட்டவரே! நீரே எல்லோருக்கும் அழியாத பெருஞ்செல்வம். சிவபெருமானே! எங்கள் நலனுக்காக நான் உமது திருவடிகளைச் சிக் எனப் பிடித்தேன். நீர் எங்கு செல்ல முயல்கிறீர். நான் உமது பாதங்களை பிடித்துவிட்டதால் நீர் எங்கும் தப்பிச் சென்று விட முடியாது.

7 comments:

  1. இந்த இடுகை 'திருவாசகம் ஒரடொரியொ' பதிவில் 18 அக்டோபர் 2005 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:

    10 comments:

    சிவா said...
    நன்றி குமரன். தொடர வாழ்த்துக்கள். //**செம்பொருள் துணிவே**//இதில் துணிவு என்பது என்ன பொருளில் வருகிறது?. துணிவு என்றால் "வீரம்" என்றும் ஒரு பொருள் வருமே!

    October 19, 2005 12:45 PM
    --

    குமரன் (Kumaran) said...
    சிவா,

    நன்றாய் ஆழ்ந்து படித்து கேள்விகள் கேட்கிறீர்கள். நீங்கள் சொன்னது போல் 'துணிவு' என்பது 'வீரம்' என்ற பொருளிலும் வரும். ஆனால் இங்கே, 'எண்ணித் துணிக' என்பதில் உள்ள 'ஆராய்ந்து முடிவு செய்யுங்கள்' என்னும் பொருளில் வருகிறது.

    எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
    எண்ணுவம் என்பதிழுக்கு.

    நன்றாய் ஆராய்ந்து முடிவு செய்து ஒரு காரியத்தை தொடங்குங்கள். முடிவு செய்தபின் ஆராய்ந்து கொள்ளலாம் என்று இருப்பது இழுக்கு என்கிறார் இறையனார்.

    அது போல இங்கு 'செம்பொருள் துணிவே' என்றால் 'செம்பொருள் என்று ஞானிகளால் முடிவு செய்யப்பட்டு துதிக்கப் படுபவனே' என்றோ, 'செம்பொருளாகிய வேதங்களால் துணியப் பட்டவனே' என்றோ பொருள் கொள்ளலாம்.

    October 19, 2005 2:42 PM
    --

    Thiruppathi said...
    nalla kaariyam panreenga. melum thodarungal.

    October 20, 2005 11:44 AM
    --

    G.Ragavan said...
    சிவா, துணிவு என்பதும் வீரம் என்பதும் வெவ்வேறு. துணிவு என்பது ஒன்றை முனைப்புடம் செய்யும் திண்மை.

    செம்பொருள் துணிவே என்றால் செம்மையான செயல்களைச் (அல்லது பொருட்களை) முனைப்புடன் செய்யும் திண்மையே என்று பொருள் கொள்ளலாம்.

    இறைவன் அருளின்றி செம்மையான செயல்களைச் செய்ய முடியாது என்பதால் இறைவன் அருளையே செம்மை என்று சொல்லும் வழக்கம் இது.

    குமரன், உங்கள் பொருளுரை நன்றாக வந்திருக்கிறது.

    October 21, 2005 3:46 AM
    --

    G.Ragavan said...
    // ஊத்தையேன் தனக்கு - கேவலமான, அழுக்கான எனக்கு //

    இந்த வரியில் இருந்து மாணிக்கவாசகர் பாண்டி நாட்டார் என்பது விளங்கும்.

    ஊத்தை என்பது இழிந்ததைக் குறிக்கும் பாண்டி நாட்டுச் சொல். இன்றைக்கும் தெற்கில் ஊத்தைப் பல் என்று காலையில் எழுந்து பல் துலக்காதவரைச் சொல்வது வழக்கம்.

    இதுபோலத்தான் திருப்பாவையிலும் காணலாம். ஏலே என்று அழைப்பது தூத்துக்குடி, திருநவேலி பக்கங்களில் உண்டு. பக்கத்தில்தானே திருவில்லிபுத்தூர். அதான் ஆண்டாளும் "எல்லே இளங்கிளியே" என்று தோழிகளைக் கூப்பிடுகிறார். அந்த எல்லே மருவி இன்று ஏலே ஆனது.

    October 21, 2005 3:50 AM
    --

    குமரன் (Kumaran) said...
    உங்கள் விளக்கங்களுக்கு மிக்க நன்றி ராகவன்.

    October 21, 2005 5:49 AM
    --

    Anonymous said...
    ஊத்தை - இச்சொல் சோழ நாட்டிலும் (இன்றைய தஞ்சை, திருச்சி, தென் ஆற்காடு மாவட்டங்கள்) மிகப்பரவலாக உள்ள வார்த்தை.

    January 02, 2006 6:09 AM
    --

    குமரன் (Kumaran) said...
    ஆமாம் பெயர் சொல்லாமல் கருத்தை மட்டும் சொல்லிச் சென்ற அன்பரே. சோழ நாட்டில் மட்டுமின்றி தமிழ் நாடு முழுவதும் இந்த சொல் வழக்கில் இருந்த இருக்கும் சொல்.

    January 02, 2006 9:48 AM
    --

    வெற்றி said...
    குமரன்,
    இப்போது தான் உங்களின் திருவாசகப் பொழிப்புரையை வாசிக்கத் துவங்கியுள்ளேன். நல்ல முயற்சி. அருமையான விளக்கம். மிக்க நன்றி.

    January 02, 2007 2:45 PM
    --

    குமரன் (Kumaran) said...
    தொடர்ந்து படித்துத் தங்கள் கருத்துகளைக் கூறுங்கள் வெற்றி.

    January 25, 2007 8:49 PM

    ReplyDelete
  2. செம்பொருள் துணிவே என்பதற்கான விளக்கங்கள் நன்று. எனதருமைத் தம்பியே, எனக்காகவே நீங்க எழுதினதெல்லாம் மீள்பதிவு போடற மாதிரி இருக்கு :) மனமார்ந்த நன்றிகள்!

    ReplyDelete
  3. உங்களுக்காக மட்டும் இல்லை அக்கா. எனக்காகவும் தான் என்று நினைக்கிறேன். இரண்டு வருட இடைவெளியில் எண்ணங்கள் எல்லாம் எந்த அளவிற்கு மாறியிருக்கின்றன என்பதை காணவும் மீண்டும் அந்த மனநிலைக்குச் சென்று தொடர்ந்து இறையெண்ணத்துடன் இருப்பதற்கும் ஒரு பயிற்சியாக இந்த மீள்பதிவுகள் அமைகின்றன. இறையருள் அப்படி அமைத்துக் கொடுத்திருக்கிறது. :-)

    ReplyDelete
  4. சித்தத்தை சிவன் பால் வைத்த சீர்வரிசையே வாழ்க.//

    ReplyDelete
  5. நன்றி திரு. இராமசந்திரன்.

    ReplyDelete
  6. கீதம் இனிய குயிலே..குயில் பத்து .திருவாசகம்./தெளிவுரை அரிய ஆ ர்வம் உள்ள வாசகி .//சித்ரம்

    ReplyDelete