Thursday, July 10, 2008
அருத்தம் அதாவது நீறு அவலம் அறுப்பது நீறு
அருத்தம் அதாவது நீறு அவலம் அறுப்பது நீறு
வருத்தம் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு
பொருத்தம் அதாவது நீறு புண்ணியர் பூசும் வெண்ணீறு
திருத்தகு மாளிகை சூழ்ந்த திருவாலவாயான் திருநீறே
அருத்தம் அதாவது நீறு - நீங்காத செல்வம் ஆவது திருநீறு
அவலம் அறுப்பது நீறு - துயரங்களை நீக்குவது திருநீறு
வருத்தம் தணிப்பது நீறு - மன வருத்தங்களை எல்லாம் தணிப்பது திருநீறு
வானம் அளிப்பது நீறு - வானுலகத்தை தருவது திருநீறு
பொருத்தம் அதாவது நீறு - அணிபவர்களுக்கெல்லாம் பொருந்துவது திருநீறு
புண்ணியர் பூசும் வெண்ணீறு - புண்ணியம் செய்தவர்கள் அணியும் வெண்ணீறு
திருத்தகு மாளிகை சூழ்ந்த திருவாலவாயான் திருநீறே - செல்வம் கொழிக்கும் மாளிகைகள் சூழ்ந்த திருவாலவாய் அப்பனின் திருநீறே.
***
நிலையில்லாச் செல்வங்களை வேண்டி நாம் அவனிடம் செல்லாமல் நிலைபேறான வைத்தமாநிதியான ஐயனையே வேண்டி செல்லும் படி நம்மைச் செய்வது திருநீறு. பெருஞ்செல்வத்தையே பெற்றுத் தருவதால் வேறு பொருட்செல்வமே தேவையில்லை; திருநீறே பொருள் என்னும் சொல்லுக்கே பொருளதாவது.
நிலையில்லாச் செல்வங்களைத் தேடி அலையும் போதும் துயரங்கள் வருகின்றன. அவை கிடைத்தாலோ அவற்றைக் காப்பாற்ற வேண்டுமே என்ற துயரம். அந்தச் செல்வங்கள் தொலைந்தாலோ பெருந்துயரம். இப்படிப்பட்டத் துயரங்களையெல்லாம் தீர்த்து பெருஞ்செல்வத்தையே பெற்றுத் தந்து அவலம் அறுப்பது திருநீறு.
நிலைபேறில்லாச் செல்வங்களால் வந்த மனவருத்தங்களும் வைத்தநிதி (வங்கிக்கணக்கு), பெண்டிர், மக்கள், குலம், கல்வி போன்றவற்றால் வந்த மனவருத்தங்களும் தணிப்பது திருநீறு.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் எனும் பொய்யாமொழிக்கேற்ப வையத்துள் வாழ்வாங்கு வாழவைத்து வானத்தையும் அளிப்பது திருநீறு.
உயர்வு தாழ்வு இன்றி எந்த வித வேறுபாடும் இன்றி யார் அணிந்தாலும் பொருத்தமாய் இருப்பது திருநீறு.
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்ற ஆன்றோர் மொழிக்கேற்ப அவன் அருள் பெறும் புண்ணியம் செய்தவர்கள் அணிவது வெண்ணிறத் திருநீறு.
இப்படிப்பட்ட திருநீறு அணிந்து பெருஞ்செல்வத்தை அடைந்து திருமகள் அருள் நிறைந்த அடியவர்கள் வாழும் திருமாளிகைகள் சூழ்ந்த திருவாலவாய் அப்பனின் திருநீறே இப்பெருமைகளை உடையது.
இந்த இடுகை 'திருநீற்றுப்பதிகம்' பதிவில் 11 நவம்பர் 2006 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:
ReplyDelete15 comments:
குறும்பன் said...
நல்ல விளக்கம் குமரன்.
/அருத்தம் அதாவது நீறு / நான் இதை "அருத் தவமாவது நீறு" என்றே இதுவரை படித்து வந்தேன்.
"திருவாலவாயான் திருநீறே" அல்லது "திரு ஆலவாயான் திருநீறே" வா?
8:48 AM, November 12, 2006
--
G.Ragavan said...
நல்ல விளக்கம் குமரன். மிகவும் எளிய வரிகள்.
// குறும்பன் said...
"திருவாலவாயான் திருநீறே" அல்லது "திரு ஆலவாயான் திருநீறே" வா? //
குறும்பன். இரண்டும் ஒன்றேதான். திரு ஆலவாய் என்பது புணர்ச்சி விதியின்படி திருவாலவாய் என்று வரும்.
9:54 AM, November 12, 2006
--
குமரன் (Kumaran) said...
நன்றி குறும்பன் & இராகவன்.
குறும்பனின் கேள்விக்குப் பதிலளித்தமைக்கு நன்றி இராகவன்.
10:00 AM, November 12, 2006
--
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//நிலையில்லாச் செல்வங்களை வேண்டி நாம் அவனிடம் செல்லாமல் நிலைபேறான வைத்தமாநிதியான ஐயனையே வேண்டி செல்லும் படி நம்மைச் செய்வது திருநீறு//
விபூதி (திருநீறு) என்பதற்கு "ஐசுவரியம்" என்றே பொருளும் உண்டு. குற்றமில்லாப் பொருளே ஐசுவரியம்! இல்லை என்றால் பணம், செல்வம் என்றும் சொல்லி விடலாமே!
வாரியார் வாழ்வில் ஒரு சுவையான நிகழ்ச்சி!
ஒரு பயணத்தில், சொற்பொழிவுக்குப் பின், சில மலை நாட்டவர்கள், சுவாமிகளைச் சூழ்ந்து கொண்டு, "சாமீ, ஐசுவரியம் தாங்க சாமீ", என்று கேட்க, வாரியார் உடன் இருந்தவர்கள் எல்லாம் பொருள் தெரியாமல் விழித்தனர்.
பணம், கிணம் ஏதாச்சும் இவிங்க கேக்கறாங்குளோ என்று கமெண்ட் அடிக்க, பின்னர் மலை நாட்டவர்களே, பூசுவது போல் சைகை காட்டினர்!
வாரியார் அவர்கள் எல்லாருக்கும் தன் கைப்பையில் உள்ள திருநீற்றை அள்ளி அள்ளிக் கொடுத்து ஆசி கொடுத்தும் அனுப்பினார்! பின்னர் உடன் இருந்தவர்களைப் பார்த்து, அவங்க சரியாத் தான் கேட்டாங்க! மெத்தப் படித்த நமக்குத் தான் அவங்க சொன்ன பொருள் விளங்கவில்லை என்று சொல்லிப், பின்னர் இந்த ஐசுவரியப் பொருள் பற்றி விளக்கினார்!
11:58 AM, November 12, 2006
--
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
குமரன்,
அருத்தம் என்பது "அர்த்தம்" வடமொழிச் சொல்லின் தமிழ் ஆக்கமாய் இருக்கலாமோ?
அப்படி என்றால்,
அர்த்தம் என்ற சொல்லுக்குப் பொருட்செல்வம் என்ற பொருளும் உண்டு!
அர்த்தம்=பொருட்செல்வம், பொருள்(மீனிங்), பாதி.
"அர்த்தம் அனர்த்தம் பாவய நித்யம்" என்று சங்கரரும், பின்னர் நம்ம குமரனும் (:-) பஜ கோவிந்தத்தில் சொல்லி உள்ளனரே!
அருத்தம் அதாவது நீறு!
வைத்த மா நிதியே நீறு!
12:04 PM, November 12, 2006
--
குமரன் (Kumaran) said...
ஆமாம் இரவிசங்கர். எனக்கும் அது தோன்றவே இல்லை. நித்ய விபூதி, லீலா விபூதி, உபய விபூதி நாதன் என்று பெருமாளைச் சொல்வதுண்டே. அங்கே ஐஸ்வர்யம் என்ற பொருள் தானே வருகிறது. நீங்கள் சொன்ன வாரியார் வாழ்வில் நடந்த நிகழ்ச்சியையும் படித்திருக்கிறேன். ஆமாம் நிலையான செல்வம் விபூதியே.
அருத்தம் என்பதை வடமொழி 'அர்த்தத்தின்' தமிழாகவே இங்கே பொருள் கொண்டிருக்கிறேன். அதனால் தான் செல்வம் என்று சொன்னேன். அர்த்தம் என்பதற்கு செல்வம், பொருள் (மீனிங்) என்ற இரு பொருள் தான் வடமொழியில். அர்த்த - பாதி என்பதில் உள்ள உச்சரிப்பு வேறு. ஒன்று arththam, இன்னொன்று ardham
1:13 PM, November 12, 2006
--
Merkondar said...
நல்ல விளக்கம் நீரு என்றால் சாம்பல் திரு நீரு என்றால் உயர்ந்த சாம்பல் என்று பொருள்
5:01 PM, November 12, 2006
--
குமரன் (Kumaran) said...
ஆமாம் என்னார் ஐயா. நீறு என்றால் சாம்பலே. நன்றிகள்.
5:34 PM, November 12, 2006
--
ஷைலஜா said...
யாராக இருந்தாலும் இறுதியில் சாம்பலாக வேண்டியதுதான். இந்த மாய வாழ்க்கையை விபூதி உணர்த்துகிறது. வைஷ்ணவர்கள் திருமண் இடுவார்கள்.மண்ணிலே பிறந்து நாம் மண்ணிலேதான் மடியப் போகிறோம் என்பதை நினைவுபடுத்திக்கொள்வதுதான் இது.
தீயில் இடப்படும் பொருட்கள் கருகிப் போகின்றன. அதன் பின்னும் தீயிலிட்டால் அது நீற்றுப் போய்வெளுத்துவிடுகிறது. அது மாறாத நிலை.
எந்தச் சாயமாக இருந்தாலுமது வெளுத்த பின் மிஞ்சுவது வெண்மை. அது ஒன்றுதான் உண்மை. பொய்யான இந்த உடம்பின் மீது மெய்யான தத்துவத்தின் அடையாளமான விபூதியை பூசிக் கொள்வதின் மூலம் அநித்தியத்தைவிட்டு நித்தியத்தைப் பற்றிச் சிந்தனை ஏற்பட வழி.
குமரனின் அருமையான பதிவு என்னையும் சற்றே சிந்திக்க வைத்து இங்கே எழுத வைத்தது நன்றி.
ஷைலஜா
6:14 PM, November 12, 2006
--
குமரன் (Kumaran) said...
திருவரங்கத்தில் பிறந்த ஒருவரின் பெயர் ஷைலஜாவா என்று ஒரு கணம் திகைத்தேன். பின்னர் தான் மைதிலி என்பதே உங்கள் பெயர் என்று அறிந்தேன். :-) முதல் வருகைக்கு நன்றி ஷைலஜா. என்னுடைய மற்ற வலைப்பதிவுகளையும் குறிப்பாக விஷ்ணு சித்தன், கோதை தமிழ் இரண்டினையும் நீங்கள் படிக்க விரும்புவீர்கள் என்று நினைக்கிறேன். முடிந்தால் படித்து உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்.
எல்லோரும் இறுதியில் ஒரு பிடிச் சாம்பலே என்பதை திருநீறும் எல்லோரும் இறுதியில் ஒரு பிடி மண்ணே என்பதைத் திருமண்ணும் உணர்த்துவதை நன்றாகச் சொன்னீர்கள். மிக்க நன்றி.
6:42 PM, November 12, 2006
--
ஷைலஜா said...
கோதைதமிழையும் விஷ்ணு சித்தனையும் விரைவில் படித்து மடல் இடுகிறேன். நன்றி குமரன்
ஷைலஜா
6:57 PM, November 12, 2006
--
Anonymous said...
அன்புக் குமரா!
ஈழத்தில்" இவன் அர்த்தமில்லாமல் பேசுகிறான்" என்போம்; அதாவது பொருளற்ற போச்சு; இந்த அர்த்தம் எல்லாப் "பொருளுக்கும் " பொருந்துகிறது.
நன்று
யோகன் பாரிஸ்
3:28 AM, November 13, 2006
--
குமரன் (Kumaran) said...
ஆம் யோகன் ஐயா. அர்த்தம் என்றதன் இரு பொருள்களும் தமிழில் பொருள் என்ற சொல்லுடன் ஒத்துப் போகிறது. நன்றிகள் ஐயா.
4:02 AM, November 13, 2006
--
Sivabalan said...
குமரன் சார்
நன்றாக விளக்கியுள்ளீர்கள்
7:44 AM, November 13, 2006
--
குமரன் (Kumaran) said...
நன்றி சிவபாலன்.
1:37 PM, November 13, 2006
வரிக்கு வரி பொருளை ஒரு வரியில் சொல்வதோடு மட்டுமன்றி, பின்னரும் நீங்கள் விளக்கியிருப்பது நன்றாக இருக்கிறது குமரா! நன்றி.
ReplyDeleteநன்றி கவிநயா அக்கா.
ReplyDelete