Sunday, July 20, 2008

மாலொடு அயன் அறியாதது


மாலொடு அயன் அறியாத வண்ணமும் உள்ளது நீறு
மேலுறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு
ஏல உடம்பிடர் தீர்க்கும் இன்பம் தருவது நீறு
ஆலமதுண்ட மிடற்றெம் ஆலவாயான் திருநீறே


மாலொடு அயன் அறியாத வண்ணமும் உள்ளது நீறு - திருமாலும் பிரம்மனும் அறியமுடியாத வண்ணம் உள்ளது திருநீறு.

மேலுறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு - மேல் உலகங்களில் வாழும் தேவர்கள் தங்கள் உடலில் விளங்குவது வெண்ணிற திருநீறு

ஏல உடம்பு இடர் தீர்க்கும் இன்பம் தருவது நீறு - உடம்பினால் ஏற்படும் துன்பங்களைத் தீர்த்து நிலையான இன்பம் தருவது திருநீறு

ஆலமது உண்ட மிடற்று எம் ஆலவாயான் திருநீறே - ஆலகால விடத்தை உண்ட கழுத்தையுடைய எங்கள் திருவாலவாயான் திருநீறே.

3 comments:

  1. இந்த இடுகை 'திருநீற்றுப்பதிகம்' பதிவில் 25 நவம்பர் 2006 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:

    10 comments:

    Anonymous said...
    அன்புக் குமரா!
    சிவனாரின் திருநீறு!!தேவர்கள் மேலிருப்பதில் ;ஆச்சரியம் இல்லை.
    மால்- அயன் அறியாததற்கு சிறப்புக் காரணம் ஏதாவதுண்டா??
    யோகன் பாரிஸ்

    2:41 AM, November 27, 2006
    --

    குமரன் (Kumaran) said...
    யோகன் ஐயா. இது திருவண்ணாமலை தல புராணக்கதையைக் குறிப்பதாக உணர்கிறேன். அந்தக் கதையின் படி சிவபெருமான் ஒளி உருவில் அண்ட சராசரங்களைத் தாண்டி நிற்க அடியைக் காண்பதற்காக திருமால் வராகமாகவும் முடியைக் காண்பதற்காக பிரம்மதேவர் அன்னமாகவும் சென்று அடிமுடி அறிய முடியாமல் திரும்புவதாகச் சொல்வார்கள். அந்தக் கதையை தத்துவ உருவில் காணும் போது அடியேனுக்கு இப்படி தோன்றும்: கல்விக்கு அதிபதியான கலைமகளின் மணாளர் பிரம்மதேவர். செல்வத்திற்கு அதிபதியான திருமகளின் மணாளர் திருமால். இறைவனைக் காண்பதற்கு எத்தனை தான் படித்திருந்தாலும் சரி எவ்வளவு செல்வம் இருந்தாலும் சரி; அறிவாலும் செல்வத்தாலும் இறைவனைக் காண முடியாது; பணிவாலும் பக்தியாலும் மட்டுமே காண முடியும்.

    3:02 AM, November 27, 2006
    --

    G.Ragavan said...
    நல்லதொரு பதிவு.

    6:20 AM, November 27, 2006
    --

    ஞானவெட்டியான் said...
    அன்பு குமரா,
    சூக்குமத்திற்கு வாருங்கள்.

    //கல்விக்கு அதிபதியான கலைமகளின் மணாளர் பிரம்மதேவர்.//

    அவர்தான் விந்து தத்துவம். படைப்புக்கு.

    //செல்வத்திற்கு அதிபதியான திருமகளின் மணாளர் திருமால்.//

    அவர்தாம் மாயை. அதாவது முகுளம்.

    விந்து சக்தியாலும், மாயா சக்தியாலும், சிவ தத்துவமான உயிரை(ஆன்மாவை)க் காண இயலாது.

    இப்படிக் கொள்ளலாமா?

    7:15 AM, November 27, 2006
    --

    kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    //யோகன் ஐயா. இது திருவண்ணாமலை தல புராணக்கதையைக் குறிப்பதாக உணர்கிறேன்//

    குமரன்; நீங்கள் சொல்வது சரியே!
    இதில் திருமால் ஏன் திருவடிகளைத் தேடச் சென்றார்; அவரும் ஈசனாரின் முடியைத் தேடச் சென்றிருக்கலாமே? இதில் ஒரு தத்துவக் குறிப்பும், அரி அரன் தோழமையும் அடங்கியுள்ளது! இதை கார்த்திகை தீபப் பதிவில் அடியேன் தருகிறேன்!

    8:07 AM, November 27, 2006
    --

    kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    //ஏல உடம்பிடர் தீர்க்கும் //

    ஏல உடம்பு என்றால் என்ன குமரன்?

    8:09 AM, November 27, 2006
    --

    குமரன் (Kumaran) said...
    நன்றி இராகவன்.

    3:35 AM, November 28, 2006
    --

    குமரன் (Kumaran) said...
    சூக்குமப் பொருளை உரைத்ததற்கு நன்றி ஞானவெட்டியான் ஐயா.

    3:35 AM, November 28, 2006
    --

    குமரன் (Kumaran) said...
    கார்த்திகைத் தீபப் பதிவிற்காகக் காத்திருக்கிறேன் இரவிசங்கர்.

    3:36 AM, November 28, 2006
    --

    குமரன் (Kumaran) said...
    வாசனைத் திரவியங்களால் அழகுபடுத்தப்படும் உடம்பு என்று பொருள் கொள்ளலாம் இரவிசங்கர்.

    இருக்கும் போது நாமே வாசனைத் திரவியங்களைப் பூணுகிறோம். சென்ற பின் நம் உடல் கெடாமல் இருக்க மற்றவர் பூசுகிறார்கள்.

    3:37 AM, November 28, 2006

    ReplyDelete
  2. நல்ல விளக்கம் குமரா. எனக்குத் தோன்றிய கேள்விகளுக்கு பின்னூட்டங்களில் பதில் கிடைத்தது. கார்த்திகைத் தீபப் பதிவைத் தேடிப் படிக்கணும்... மாதவிப் பந்தல்ல இருக்குமா?

    ReplyDelete
  3. நீங்க அதைக் கேக்கப்போறீங்கன்னு நினைச்சேன் கவிக்கா. கேட்டுட்டீங்க. மாதவிப்பந்தல்ல தேடிப் பாருங்க. கிடைக்காட்டி உங்க கண்ணன்கிட்ட கேட்டா சொல்லுவார்.

    ReplyDelete