Friday, July 11, 2008

அஞ்சத்துவசம் உயர்த்தோன் செந்நாவும் அகமும் வெள்ளைக் கஞ்சத்தவிசு ஒத்திருந்தாய்


பஞ்சு அப்பு இதம் தரும் செய்ய பொற் பாத பங்கேருகம் என்
நெஞ்சத்தடத்து அலராதது என்னே? நெடுந்தாள் கமலத்து
அஞ்சத்துவசம் உயர்த்தோன் செந்நாவும் அகமும் வெள்ளைக்
கஞ்சத்தவிசு ஒத்திருந்தாய் சகலகலாவல்லியே

நெடுந்தாள் கமலத்து அஞ்சத்துவசம் உயர்த்தோன் - நீண்ட அழகிய இதழ்களைக் கொண்ட தாமரையில் அமர்ந்திருக்கும் மென்மை மிகுந்த அன்னப் பறவையை கொடியாக உடைய பிரம்ம தேவனின்

செந்நாவும் - செம்மையான திருநாவையும்

அகமும் - உள்ளத்தையும்

வெள்ளைக் கஞ்சத் தவிசு ஒத்திருந்தாய் சகலகலாவல்லியே - வெள்ளைத் தாமரையால் செய்த சிம்மாசனமாகக் கொண்டு வீற்றிருந்தாய் சகலகலாவல்லியாகிய கலைவாணியன்னையே!

பஞ்சு அப்பு இதம் தரும் செய்ய பொற் பாத பங்கேருகம் - பஞ்சினைப் போல் இனிமைதரும் மென்மையான உன் திருவடித் தாமரைகள்

என் நெஞ்சத் தடத்து அலராதது என்னே? - என் நெஞ்சமாகிய நீர்நிலையில் மலராதது என்ன காரணத்தினால்?

***********

அன்னப் பறவை மென்மையானது. தூய்மையானது. அசுத்தங்களைக் கண்டு அஞ்சுவது. அதனால் அன்னக் கொடியை அஞ்சத் துவசம் என்கிறார். துவசம் என்பது த்வஜம் என்னும் வடமொழிச் சொல்லின் தமிழ் வடிவம்.

அன்னை கலைவாணி பிரம்ம தேவனின் நாவிலும் மனத்திலும் தங்கியுள்ளாள் என்பது ஐதிகம். மும்மூர்த்திகளும் தம் தம் தேவியரை தம் உடம்பில் ஒரு பகுதியில் வைத்திருக்கிறார்கள். பிரம்மதேவன் கலைமகளை நாவிலும், நாராயணன் அலைமகளை நெஞ்சிலும், சிவபெருமான் மலைமகளை உடலின் இடப்புறத்திலும் வைத்திருக்கிறார்கள்.

***

11 ஜூலை 2008 அன்று சேர்க்கப்பட்டது:

த்வஜன் என்ற வடசொல் துவசம் ஆனது போல் ஹம்ஸம் என்ற வடசொல் அம்சம் ஆகி இங்கே அஞ்சம் ஆகியிருக்கிறது என்று தோன்றுகிறது. ஆகையினால் அஞ்சத்துவசம் என்பது ஹம்ஸத்வஜம் என்ற வடசொல்லின் தமிழ்வடிவமே என்று தோன்றுகிறது.

பஞ்சைப் போல் மெல்லிய தாமரைப் பாதங்கள் என் நெஞ்சத்தில் மலரக் கூடாதா என்று கேட்கும் போது 'உன் நெஞ்சம் கல்லைப் போல் இருக்கின்றதே - என் பஞ்சு மலர்ப்பாதங்கள் நோகுமே' என்று அன்னை சொல்லிவிட்டால்? அதனால் தான் அன்பினால் உருகி நீர்நிலையைப் போல் ஆகிவிட்டது அம்மா என் நெஞ்சம் என்று குறிப்பதைப் போல் நெஞ்சத்தடத்தில் என்கிறார் போலும் குமரகுருபரர்.

5 comments:

  1. இந்த இடுகை 'சகலகலாவல்லிமாலை' பதிவில் 12 பிப்ரவரி 2006 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:

    6 comments:

    G.Ragavan said...
    நல்ல விளக்கம்.

    துவசம் என்பது துவஜத்தின் தமிழ்த் திரிபே. மலையத்துவன் என்று கூடச் சொல்வார்களே. ஆனால் அவன் உண்மையான பெயர் வேறு. எனக்கு மறந்து விட்டது. யாருக்காவது தெரியுமா?

    6:51 AM, February 13, 2006
    --

    சிவமுருகன் said...
    மற்ற வலைகளையும் பார்த்து வருகிறேன்,

    சகலகலாவல்லி மாலை படித்தேன், முதல் முறையாக சரஸ்வதி தேவியின் தமிழ் ஸ்தொத்திரங்களை படிக்கிறேன். (பாரதியின் 'வெள்ளை தாமரை' பாடல் தவிர). நன்றாக உள்ளது. தொடர்ந்து எழுதவும்.

    சிவமுருகன்.

    9:48 PM, February 13, 2006
    --

    குமரன் (Kumaran) said...
    இராகவன், அன்னை அங்கயற்கண்ணியை மலயத்துவசன் மகள் என்று புகழ்வதைக் கேட்டிருக்கிறேன். மலயத்துவச பாண்டியனாருக்கு இயற்பெயரே அது தான் என்று நினைக்கிறேன். வேறு எந்தப் பெயரும் திருவிளையாடல் புராணத்திலோ வேறு இடத்திலோ படித்ததாய் நினைவில்லை.

    4:05 AM, February 14, 2006
    --

    குமரன் (Kumaran) said...
    மற்ற வலைப்பூக்களையும் பார்ப்பதற்கு மிக்க நன்றி சிவமுருகன். ஆமாம். நீங்கள் சொல்வது போல் அன்னை கலைவாணியின் மேல் இருக்கும் தமிழ்ப் பாடல்கள் பலருக்குத் தெரியாது. குமரகுருபரர் எழுதிய இந்த சகலகலாவல்லி மாலை போக கம்பர் எழுதிய பாடல்களும் இருக்கின்றன. அவற்றை வலையில் தேடிப்பார்க்கவேண்டும். கிடைத்தால் அவற்றிக்கும் பொருள் எழுதலாம். டூயட் படத்தில் 'மெட்டுப் போடு...மெட்டுப் போடு...என் தாய் கொடுத்தத் தமிழுக்கில்லைத் தட்டுபாடு' பாட்டின் ஆரம்பத்தில் கம்பரின் வரிகள் வரும். கேட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

    நீங்கள் சொன்ன மாதிரி பாரதியின் 'வெள்ளைத் தாமரை பூவில் இருப்பாள்' பாடல் பலருக்கும் தெரிந்த ஒரு பாடல்.

    உங்கள் தனிமடலும் அன்னை கலைவாணியின் படங்களும் கிடைத்தன. அடுத்தப் பதிவில் அந்தப் படங்களை இடுவதற்கு முயல்கிறேன். மிக்க நன்றி.

    4:11 AM, February 14, 2006
    --

    Senthu said...
    தங்களுடைய சகலகலா வல்லி மாலை முயற்சி அருமை. சகலகலா வல்லி மாலையை குமர குருபரர் பாடித்தான் அராபிய மொழியை நொடியில் பேச கற்றுகொண்டாராம். அதுதான் "தேக்கும் செந்தமிழ் செல்வமும்" என்று வருகிறதா? தேக்கு என்பது இங்கு துருக்கி மொழிக்கு குருபரர் வளங்கும் பெயராய் இருக்குமோ என்கிறசந்தேகம் எனக்குண்டு.

    மலையரசன் மகள் பார்வதி அம்மை என்று சிறுவயதில் படித்த நினைவுண்டு. மலையத்துவசனுக்கு இமவான் என்கிற இயற்பெயர் இருப்பதாகவும் நினைவு.

    வாழ்த்துக்கள் முயற்சி தொடரட்டும்!

    -செந்து

    7:53 PM, February 26, 2006
    --

    குமரன் (Kumaran) said...
    பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி செந்து. நீங்கள் சொல்லும் வரலாற்றை நானும் படித்திருக்கிறேன். ஆனால் தேக்கு என்றால் துருக்கிய மொழியா என்று தெரியவில்லை. இருக்காது என்று தான் எண்ணுகிறேன்.

    நீங்கள் சொல்வது போல் மலையரசன் மகள் தான் பார்வதி அம்மை. பார்வதி என்றால பருவத ராஜனின் மகள் என்று பொருள். மலையரசனுக்கு ஹிமவான் (இமவான்) என்றொரு பெயரும் உண்டு. ஆனால் மலையரசனும் மலையத்துவசனும் ஒருவரல்லர். மலையத்துவசன் என்பது மீனாக்ஷி அம்மையின் தந்தையான பாண்டிய அரசனின் பெயர். மலைய பருவதம் எனப்படும் பொதிகை மலையை துவசத்தில் (கொடியில்) கொண்டவன் என்பது அந்தப் பெயரின் பொருள்.

    6:17 PM, February 27, 2006

    ReplyDelete
  2. விட்டுப் போன இடுகைகள் அனைத்தையும் படித்தேன், இந்த இடுகை மீள் பதிவா? மறந்திருக்கேன், ஆனால் இதன் பின்னூட்டங்கள் நல்லா இருக்கே? இடுகையிலேயே சேர்த்திருக்கலாமோ?

    ReplyDelete
  3. //பஞ்சு அப்பு இதம் தரும் செய்ய பொற் பாத பங்கேருகம் என்
    நெஞ்சத்தடத்து அலராதது என்னே?//

    ஆஹா. என்ன அழகான வரிகள். அருமையான விளக்கத்துக்கு நன்றி குமரா.

    ReplyDelete
  4. ஆமாம் கீதாம்மா. நிறைய மீள்பதிவுகள் செஞ்சுக்கிட்டு இருக்கேன் இப்ப. வேற வலைப்பதிவுகளில இருந்து எல்லாவற்றையும் கூடலுக்கு நகர்த்திக் கொண்டிருக்கிறேன்.

    பின்னூட்டங்களைப் பின்னூட்டங்களாகவே எடுத்துத் தொகுத்துப் போட்டுவிடுகிறேன் அம்மா.

    ReplyDelete
  5. ஆமாம் கவிநயா அக்கா. மிக அருமையான வரிகள் தான் அவை.

    ReplyDelete