Monday, December 24, 2012

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!




நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்?!
நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறை தரும் புண்ணியனால் பண்டு ஒரு நாள்
கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகருணனும்
தோற்றும் உனக்கே பெரும் துயில் தான் தந்தானோ?!
ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே!
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்!

நோன்பு நோற்றுச் சுவர்க்க உலகம் புகுவேன் என்று சொன்ன எங்கள் தலைவியே! வாசல் கதவைத் தான் திறக்கவில்லை; பதிலாவது சொல்லக் கூடாதா?

நறுமணம் மிகுந்த துளசியை திருமுடியில் சூடிய நாராயணன் நம்மால் போற்றப்பட்டு நாம் வேண்டியதெல்லாம் தருவான். அந்த புண்ணியனால் முன்பு ஒரு நாள் எமனின் வாயில் விழுந்த கும்பகருணன் தான் உன்னிடம் தோற்று அவனது பெரும் தூக்கத்தை உனக்குத் தந்தானோ?

அளவிடமுடியாத பெரும் தூக்கத்தை உடையவளே! அழகிய கும்பத்தைப் போன்ற அழகுடையவளே! உறக்கம் தெளிந்து வந்து கதவை திறப்பாய்!

2 comments:

இராஜராஜேஸ்வரி said...


நறுமணம் மிகுந்த துளசியை திருமுடியில் சூடிய நாராயணன் நம்மால் போற்றப்பட்டு நாம் வேண்டியதெல்லாம் தருவான். அந்த புண்ணியனால் முன்பு ஒரு நாள் எமனின் வாயில் விழுந்த கும்பகருணன் தான் உன்னிடம் தோற்று அவனது பெரும் தூக்கத்தை உனக்குத் தந்தானோ?/

அழகான படம் .. அருமையான பகிர்வுகள் ..பாராட்டுக்கள்..

குமரன் (Kumaran) said...

நன்றி இராஜராஜேஸ்வரி.