Thursday, November 29, 2007

புல்லாகிப் பூண்டாகி - அத்தியாயம் 3

முந்தைய அத்தியாயத்தை இங்கே பாருங்கள்.

பணத்தைக் கையில் வைத்துக் கொண்டு 'மோகன். வருடத்திற்கு எத்தனை தடவை இந்த மாதிரி எனக்குப் பணம் தருவ?' என்று கேட்டார் தாத்தா. கந்தனுக்கு திக்கென்றது. 'ஒரு தடவை ஐநூறு ரூபாய் கொடுத்தால் இன்னும் எத்தனை தடவை கொடுப்பாய் என்று கேட்கிறாரே இந்தத் தாத்தா? சரியான பணத்தாசை பிடித்தவராய் இருப்பார் போலிருக்கிறது.' ஒரு நொடியில் பலவிதமான சிந்தனைகள் ஓடின கந்தனின் மனத்தில். மென்று முழுங்கி 'நீங்களே சொல்லுங்க தாத்தா' என்றான். 'எனக்கு மாசாமாசம் கொடு. ஆனா ஐநூறு ரூபாயில்லை. உன்னால முடிஞ்சது கொடு' என்றார். 'அப்பாடா. அம்பதோ நூறோ கொடுத்துக்கலாம்' என்று நினைத்துக் கொண்டு 'சரி தாத்தா' என்றான் கந்தன்.

'கேசவா. நீ மாசாமாசம் அன்னதானம் செய்யுற இல்லை? எப்படி நடக்குது அது?' என்று கேசவனிடம் தாத்தா கேட்க, அவனும் 'ஆமாம் தாத்தா. இருபத்தஞ்சு பொட்டலம் புளியோதரையோ சாம்பார் சாதமோ செஞ்சு பஸ் ஸ்டாண்ட், கோவில்ன்னு போயி அவங்க கையில கொடுக்குறேன் தாத்தா' என்றான். 'கொஞ்சம் தயிர் சாதமும் கொண்டு போ. யாருக்கு எது வேணும்னு கேட்டுக் குடு. இந்தா இந்த ஐநூறு ரூபாயை அதுக்கு வச்சுக்கோ. மோகனும் இனிமே மாசாமாசம் உன்னோட சேர்ந்துக்குவான். மோகன். எனக்கு நீ கொடுக்குறேன்னு சொன்ன பணத்துல நீயும் கேசவனும் சேர்ந்து அன்னதானம் பண்ணுங்க' என்றார் தாத்தா. கந்தனும் தலையாட்டினான்.

'சரி வாங்க உள்ள போகலாம்' என்று அவர்களை அழைத்துக் கொண்டு பனையோலைகளாலும் தென்னங்கீற்றுகளாலும் ஆன வீட்டிற்குள் கூட்டிச் சென்றார். நீள் சதுரமாக இருந்தது அந்த அறை. ஒரே அறை தான். அங்கேயே ஓரத்தில் ஒரு சின்ன மண்ணெண்ணெய் அடுப்பு இருந்தது. ஒரு சின்ன டேப்ரிகார்டரும் சில காஸெட்டுகளும் கிடந்தன. ஒரு கயிற்றுக் கட்டில் சுவரோரமாக இருந்தது. இரண்டு மூன்று பாய்களும் இரு தலையணையும் இன்னொரு ஓரத்தில் கிடந்தன.



கோவில் என்று மணிகண்டன் சொன்னானே என்று கந்தன் எண்ணிக் கொண்டே இருக்கும் போதே 'மோகன். இதோ இந்த படியில ஏறி உள்ளே பாரு. இது தான் கோவில்' என்று சொன்னார் தாத்தா. அவனும் உள்ளே போய் பார்க்க ஒரே இருட்டாக இருந்தது. கருவறை போல் இருந்த ஒரு அறையில் ஒரு நட்டு வைத்தக் கல் இருந்தது. சிவலிங்கமா ஏதாவது சிலையா என்று தெரியவில்லை. மணிகண்டன் வந்து தீபத்தை ஏற்றிய பிறகு தான் அது லிங்கோத்பவர் சிலை என்று தெரிந்தது. சிவலிங்கம் போன்ற கல்லில் முன் பகுதியில் சிவபெருமானின் திருமுடியும் திருவடிகளும் கொஞ்சமே மறைந்திருக்க ஒரு அன்னப்பறவை திருமுடி பக்கத்திலும் ஒரு பன்றி திருவடிகள் பக்கத்திலும் இருந்தன. பார்த்துவிட்டு கை கூப்பி வேக வேகமாகக் கும்பிட்டுவிட்டு திரும்பி வந்தான் கந்தன். கேசவன் வெளியில் இருந்தே கைகூப்பி கும்பிட்டுவிட்டான்.

'உள்ளே என்ன இருக்கு?' என்று தாத்தா கேட்டவுடன் 'லிங்கோத்பவர்' என்று சொன்னான் கந்தன். 'கேசவா. லிங்கோத்பவர்ன்னா என்னன்னு தெரியுமா?' என்று தாத்தா கேட்க கேசவன் தெரியாது என்று தலையாட்டினான். தாத்தா கந்தனைப் பார்க்க 'பிரம்மாவும் விஷ்ணுவும் ஜோதி ரூபமா நின்ன சிவனோட அடியையும் முடியையும் பார்க்க ட்ரை பண்ற மாதிரி இருக்கிறது தான் லிங்கோத்பவர்' என்றான் கந்தன். புன்சிரிப்போடு 'அவ்வளவு தானா?' என்று தாத்தா கேட்க 'இவர் என்ன இப்படி கேட்கிறாரே? இன்னும் என்ன சொல்ல?' என்று ஒரு நிமிடம் திகைத்துவிட்டு திடீரென நினைவு வந்தவன் போல் கந்தன் 'அப்படி ஜோதி உருவமா சிவன் நின்ற இடம் தான் இந்த மலை. அந்த தீயே இப்ப மலையா நிக்குது. அதனால தான் இந்த மலையே சிவன்னு சொல்லுவாங்க' என்றான். தாத்தா ஆமோதிப்பதைப் போல் தலையாட்டிவிட்டு மீண்டும் 'அவ்வளவு தானா?' என்றார். கந்தனுக்கு அதற்கு மேல் சொல்லத் தெரியவில்லை. 'ஆமாம் தாத்தா' என்றான். தாத்தாவும் 'சரி போதும்' என்று சொல்லிவிட்டு 'எப்ப கோவிலுக்குப் போறீங்க?' என்று கேட்டார். கேசவன் என்ன சொல்லப் போகிறான் என்று ஆவலோடு பார்த்தான் கந்தன்.

அடுத்த அத்தியாயம் இங்கே

Monday, November 26, 2007

புல்லாகிப் பூண்டாகி - அத்தியாயம் 2

முதல் அத்தியாயத்தை இங்கே பாருங்கள்.




திருவண்ணாமலை பேருந்து நிலையம் வந்தவுடன் ஆவலுடன் அருணாச்சல மலையைப் பார்த்தான் கந்தன். பஞ்சபூதங்களில் நெருப்பு உருவம் இந்த மலை என்று படித்திருக்கிறான். எல்லா மலைகளும் ஒரு காலத்தில் நெருப்பாக இருந்தது தானே என்று நினைத்துக் கொண்டான். பின்னே எரிமலைக் குழம்பில் இருந்து தானே எல்லாம் மலையும் உருவானது?! கேசவனிடம் அதனைச் சொல்லியிருந்தால் இமயமலை அப்படித் தோன்றவில்லை என்று விளக்கியிருப்பான். ஆனால் அவனிடம் சொன்னால் திருவண்ணாமலை திருத்தலத்தைப் பற்றி கந்தன் கேலி செய்கிறான் என்று நினைத்துவிட்டால்? மனம் வருத்தப்பட்டால்? மனம் வருத்தப்படுகிறது என்று சொல்லி எதிர்த்து ஏதாவது சொல்பவனாக இருந்தாலாவது ஏதாவது பேசலாம். இந்தக் கேசவன் அது கூட செய்யமாட்டான். மனம் புண்பட்டாலும் ஒரு புன்சிரிப்பு மட்டும் தான். அப்படிப்பட்டவனை புண்படுத்தத் தான் மனம் வருமா? இவன் ரொம்பவே சாது என்று வழக்கம் போல் நினைத்துக் கொண்டான் கந்தன்.

கேசவனோ பேருந்தில் உட்கார்ந்தவாறே யாரையோ தேடிக் கொண்டிருந்தான். அவன் தேடியவர் கிடைத்துவிட்டார்கள் போலும். ஒரு புன்சிரிப்பு அவன் முகத்தில் தவழ்ந்தது. 'மணிகண்டா. மணிகண்டா' என்று யாரையோ அழைத்தான். அந்தப் பெயரைக் கேட்டவுடன் தான் கந்தனுக்கு மணிகண்டனுடைய ஊர் திருவண்ணாமலை என்பதும் மணிகண்டனின் குடும்பம் தான் தாத்தாவுக்குத் தினமும் உணவு சமைத்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் நினைவிற்கு வந்தது.

மணிகண்டன் பேருந்திற்குப் பக்கத்தில் வந்து 'வாங்க அண்ணா. வாங்க கந்தன் அண்ணா. நல்லா இருக்கீங்களா?' என்று நலம் விசாரித்தான். கந்தன் ஒரே ஒரு முறை தான் மணிகண்டனைப் பார்த்திருக்கிறான். பல ஆண்டுகள் பழகியவரையே எளிதில் மறந்துவிடுகின்றவனுக்கு ஒரு முறை பார்த்தவர்களா நினைவில் இருப்பார்கள்?! அன்பாக விசாரித்த மணிகண்டனை அப்போது தான் முதன்முதலில் பார்ப்பது போல் பார்த்து 'நல்லா இருக்கேன் மணிகண்டன். நீ எப்படி இருக்கிறாய்?' என்று விசாரித்தான்.

மணிகண்டன் அதற்கு பதில் சொல்லாமல் இருவரும் கொண்டு வந்த சின்ன பைகளை கையில் எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டான். இருவரும் அவனைப் பின் தொடர்ந்தார்கள். கொஞ்ச நேர நடைக்குப் பின் கோவில் வாசல் வந்தது. கந்தனுக்கு உடனே உள்ளே நுழையத் தான் ஆசை. ஆனால் மணிகண்டன் கோவிலின் இடப்பக்கமாகப் போவதைப் பார்த்துப் பேசாமல் நடந்தான். கோவிலின் இடப்புறம் இருக்கும் ஒரு தெருவில் இருக்கும் வீட்டிற்கு அவர்களை அழைத்துச் சென்றான். 'அம்மா. கேசவன் அண்ணாவும் கந்தன் அண்ணாவும் வந்தாச்சு' என்று குரல் கொடுத்தான்.

உள்ளிருந்து நடுத்தர வயது அம்மா ஒருவர் வெளியே வந்து 'வாங்கப்பா. பஸ் பிரயாணம் எல்லாம் எப்படி இருந்தது?' என்று கேட்டு வீட்டிற்குள் அழைத்துச் சென்றார்கள். கந்தன் ஒரு புன்னகையோடு நிறுத்திக் கொள்ள கேசவன் தான் பயணத்தைப் பற்றி சொன்னான். மோர் வேண்டுமா காபி வேண்டுமா என்று கேட்டு கந்தனுக்கு மோரும் கேசவனுக்குக் காப்பியும் தந்தார்கள்.

கந்தன் மோர் குடித்துக் கொண்டிருக்கும் போதே 'கந்தன். உங்களுக்கு திருப்புகழ் நல்லா தெரியும்ன்னு மாமா சொல்லியிருக்கார். அப்படியா?' என்று கேட்டார்கள். அவர்கள் தாத்தாவைத் தான் மாமா என்று கூறுகிறார்கள் என்று கந்தனுக்கு ஏற்கனவே தெரியும். கேசவன் தான் தாத்தாவிடம் கந்தனுக்குத் திருப்புகழ் தெரியும் என்று சொல்லியிருப்பான் என்று நினைத்துக் கொண்டான். 'அம்மா. என்னை சும்மா வா போன்னே பேசுங்க. மரியாதையெல்லாம் வேண்டாம்' என்று சொல்லிவிட்டு, 'ஆமாம் அம்மா. கொஞ்சம் கொஞ்சம் தெரியும்' என்று சொன்னான். எங்கே திருப்புகழ் பாடச் சொல்லிடுவாங்களோ என்று உள்ளூரப் பயந்தான். நல்ல வேளையாக அவர்கள் ஒன்றும் கேட்கவில்லை.

மோரும் காப்பியும் குடித்து முடித்த பிறகு, 'இப்பவே மாமாவைப் பார்க்க போறீங்களா இல்லை சாப்புட்டுட்டுப் போறீங்களா?' என்று கேட்டார். கந்தனுக்கோ முதலில் கோவிலுக்குச் செல்ல வேண்டும் என்று ஆவல். ஆனால் கேசவன் பேசட்டும் என்று சும்மா இருந்துவிட்டான்.

கேசவன், 'இப்பவே தாத்தாவைப் பார்க்கப் போகிறோம் அம்மா' என்று சொன்னவுடன் சரி என்று சொல்லி மணிகண்டனையும் கூட அனுப்பினார்கள். மலையில் கொஞ்ச தூரம் ஏறிப் போனால் 'அடிமுடி கோவில்' என்றொரு சிறிய கோவில் இருக்கிறது. கோவிலுக்கு முன்னால் கோவிலை ஒட்டியபடியே ஒரு சின்ன குடிசையும் இருக்கிறது. அங்கே தான் தாத்தா வசிக்கிறார். மணிகண்டன் வேக வேகமாக மலையில் ஏறிவிட்டான். கேசவனும் கந்தனும் அந்த மலையில் ஏறுவது இது தான் முதல் தடவை என்பதால் கொஞ்சம் மெதுவாகத் தான் ஏறினார்கள். போகும் வழியில் ஒருவர் சில ஆடுகளின் பின்னே வந்தார். அவரிடன் மணிகண்டன் 'தாத்தாவைப் பாத்தீங்களா?' என்று கேட்க அவரும் 'பாத்தேன் தம்பி. சாமி வெளிய தான் உக்காந்திருக்குது' என்று சொன்னார். அவரும் ஆடுகளும் கடந்து போகும் வரை கந்தனும் கேசவனும் அசையாமல் நின்றிருந்தார்கள். மணிகண்டன் 'நல்ல வேளை தாத்தா தூங்கலை போலிருக்கு. இப்பத் தான் தாத்தாவுக்குச் சாப்பாடு குடுத்துட்டு வந்தேன். சாப்புட்டுட்டு கொஞ்ச நேரம் படுத்திருப்பார் தாத்தா. அதான் கேட்டேன்' என்று விளக்கினான்.

அடி முடி கோவிலுக்குப் பக்கத்தில் வந்த போது தாத்தா புன்னகையுடன் கால் மேல் கால் போட்டபடி ஒரு சின்ன பாறை மேல் உட்கார்ந்து கொண்டிருந்தார். கேசவனும் கந்தனும் வந்து தாத்தாவை வணங்கியவுடன் 'வா மோகன். நல்லா இருக்கியா?' என்று கந்தனை விசாரித்தார். கந்தன் 'நல்லா இருக்கேன் தாத்தா' என்று சொன்னான். கேசவனை ஒன்றும் கேட்கவில்லையே என்று கந்தன் எண்ணிக் கொண்டிருக்க, கேசவனோ புன்னகையுடன் தாத்தாவையே பார்த்தபடி நின்று கொண்டிருந்தான்.

கையில் இருந்த பையில் இருந்து எதையோ எடுத்தான் கேசவன். அவன் கையில் ஒரு பை இருந்ததையே அப்போது தான் பார்த்தான் கந்தன். பையில் இருந்து ஒரு வேட்டியும் அங்கவஸ்திரமும் வந்தன. அவற்றை தாத்தாவின் காலடியில் வைத்து அதன் மேல் ஒரு நூறு ரூபாய் நோட்டையும் வைத்தான் கேசவன். பின்னர் தாத்தாவிடம் 'தாத்தா. இந்த நூறு ரூபாயை உங்க மருந்து செலவுக்கு வைத்துக் கொள்ளுங்கள்' என்றான். 'ஆகா பழி வாங்கிவிட்டானே. சொல்லியிருந்தால் நானும் ஏதாவது வாங்கி வந்திருப்பேனே' என்று நினைத்தான் கந்தன். மூவாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் கேசவன் நூறு ரூபாய் தாத்தாவுக்குக் கொடுக்கும் போது எட்டாயிரம் சம்பளம் வாங்கும் தான் அதைவிடக் குறைவாகக் கொடுக்கக் கூடாது என்று ஒரு ஐநூறு ரூபாய்த் தாளை எடுத்து வேட்டி அங்கவஸ்திரத்தின் மேல் வைத்தான். பின்னர் தாத்தாவை அவன் பார்த்த போது கண்ணில் ஓரத்தில் ஒரு சின்ன கருவம் தெரிந்தது போல் இருந்தது.

தாத்தா, 'மணிகண்டா. இதை எடுத்து வை.' என்று சொன்னார். கந்தனுக்கும் கேசவனுக்கும் மகிழ்ச்சி. மணிகண்டன் அவற்றை எடுத்து வைக்கும் போது 'இங்கே வா' என்று கூப்பிட்டு கந்தன் வைத்த ஐநூறு ரூபாயை எடுத்து வைத்துக் கொண்டார். கந்தனுக்கு சுருக்கென்றது. ஒரு வேளை தான் கருவத்துடன் வைத்தது தாத்தாவிற்குத் தெரிந்துவிட்டதோ; அதனால் அந்தப் பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிடப் போகிறாரோ என்ற கலக்கம் கந்தனிடம் வந்தது.

அடுத்த அத்தியாயம் இங்கே

Saturday, November 24, 2007

புல்லாகிப் பூண்டாகி (பாகம் 1)


கந்தன் திருவண்ணாமலைக்குப் போவது இது இரண்டாவது தடவை. இதற்கு முன் பள்ளிக்காலத்தில் அப்பா, அம்மா, தங்கச்சி என்று எல்லாருடனும் சுற்றுலா சென்ற போது போனது. அதற்குப் பின்னால் திருவண்ணாமலை செல்லும் வாய்ப்பே கிடைக்கவில்லை. அதனால் தான் கேசவன் கேட்டவுடனே 'சரி போகலாம்' என்று கிளம்பிவிட்டான். கேசவன் கந்தனின் கல்லூரித் தோழன். கல்லூரி விடுதியில் இவர்கள் இருவரும் போட்ட சாமியார் வேஷங்கள் இவர்கள் கல்லூரியை விட்டு வந்து மூன்று வருடங்கள் ஆன பின்னரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். கந்தனைச் சின்ன சாமி என்றும் கேசவனை பெரிய சாமி என்றும் நண்பர்கள் கிண்டல் செய்யும் அளவிற்கு இவர்களின் ஆட்டம் இருந்தன.

போன வருடம் தான் சென்னையில் மீண்டும் கேசவனைப் பார்த்தான் கந்தன். நடுவில் இரண்டு வருடங்கள் யார் எங்கே இருக்கிறார்கள் என்ற விவரங்கள் எல்லாம் நண்பர்கள் மூலம் தெரிந்திருந்தாலும் ஒருவருடன் ஒருவர் பேசவில்லை; பார்க்கவில்லை. கந்தன் எப்போதுமே இப்படித் தான். எவ்வளவு தான் நெருங்கிப் பழகியவர்கள் என்றாலும் கண்ணை விட்டு நகர்ந்துவிட்டால் மறந்துவிட்டதைப் போல் நடந்து கொள்வான்.

கேசவனைப் பார்த்தவுடன் மீண்டும் அவனுடன் ஒட்டிக் கொண்டான் கந்தன். வேலை பார்க்க வந்திருக்கும் சென்னையில் வீட்டுச் சாப்பாடு கேசவன் வீட்டில் கிடைக்கவே அடிக்கடி கேசவன் வீட்டிற்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டுவிட்டான். சரியான சாப்பாட்டு ராமன்.

நேற்று கேசவன் 'டேய் கந்தா. தாத்தாவைப் பார்க்க திருவண்ணாமலை போறேன். நீயும் வர்றியா?' என்று கேட்டவுடன் ஒரு நிமிடம் யோசித்துவிட்டு உடனே வருகிறேன் என்று சொல்லிவிட்டான். நினைத்தாலே முக்தி கிடைக்குமாமே. அது மட்டுமா எத்தனை எத்தனை மகான்கள் இந்த திருவண்ணாமலை மலையிலும் அடிவாரத்திலும் வசிக்கிறார்கள். ஒரு முறை இரமணாச்ரமம், யோகி ராம்சுரத்குமார் ஆச்ரமம் என்று எல்லா இடத்திற்கும் சென்று வந்துவிட வேண்டியது தான் என்று எண்ணிக் கொண்டான்.

தாத்தாவைப் பார்க்கப் போகிறோம் என்று கேசவன் சொன்னானே; அவர் கேசவனின் சொந்தத் தாத்தா கிடையாது. அவர் பெயர் இராமன் ஐயப்பன். எப்படி அவர் கேசவனின் வீட்டிற்கு வந்தார் என்று தெரியாது. கேசவன் வீட்டிற்குப் போகும் போது இரண்டு மூன்று முறை அவரை கந்தன் பார்த்திருக்கிறான். வெள்ளை வேட்டி, சட்டை போட்டுக்கொண்டு வெள்ளை தாடியுடன் திருநீறு அணிந்த நெற்றியுடன் இருப்பார். கந்தன் எத்தனை முறை தன் பெயரைச் சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டாலும் மோகன் என்றே அழைப்பார். ஏன் என்று தான் கந்தனுக்குப் புரிவதில்லை. கந்தன் இல்லாத நேரத்தில் கேசவனிடம் கந்தனைப் பற்றி நிறைய பேசியிருக்கிறாராம். தெய்வ அருள் பெற்றவன் மோகன் என்று பத்து தடவையாவது சொல்லியிருப்பாராம். கேசவன் சொன்னான்.

அந்தத் தாத்தாவைப் பார்க்கத் தான் கேசவன் திருவண்ணாமலைக்குப் போகிறான். கந்தனும் அதற்குத் தான் வருகிறான் என்று நினைத்துவிட்டான். ஆனால் கந்தன் செல்வதோ அண்ணாமலையாரையும் உண்ணாமுலையம்மையையும் பார்க்க.

(தொடரும்)

அடுத்த அத்தியாயம் இங்கே

Friday, November 23, 2007

தமிழின் பாதுகாப்பில் சௌராஷ்ட்ரம் - சாகித்ய அகாடமி தலைவர் பாராட்டு


சாகித்ய அகாடமி விருது பெற்ற இரு சௌராஷ்ட்ர அறிஞர்களைப் பாராட்டி மதுரையில் நடந்த சாகித்ய அகாடமியின் கூட்டத்தில் சாகித்ய அகாடமியின் தலைவர் திரு. கோபி சந்த் நராங்க் சொன்னவை ஹிந்து இதழில் வந்திருக்கிறது.

திரு. தாடா சுப்ரமணியன் அவர்களும், திரு.கே.ஆர். சேதுராமன் அவர்களும் சாகித்ய அகாடமி விருதினைப் பெற்றதைப் பற்றி முன்பொரு இடுகை இட்டிருந்தேன். சென்ற செவ்வாயன்று மதுரையில் அகாடமி தலைவர் திரு.கோபி சந்த் நராங்க் தலைமையில் இவர்கள் இருவரையும் பெருமைப்படுத்தும் கூட்டம் நடைபெற்றது.

அரசியல் சட்டத்தில் 13ம் பட்டியலில் இருக்கும் மொழிகளைத் தவிர்த்து இந்தியாவில் குறிப்பிட்ட அளவு மக்கள் தொகையால் பேசப்படும், இலக்கணமும் இலக்கியமும் உடைய சிறுபான்மை மொழிகள் நிறைய இருக்கின்றன. அம்மொழியில் இருக்கும் இலக்கிய படைப்பாளர்களைப் பெருமைப்படுத்தும் விதமாக இந்த பாஷா சம்மான் விருதுகள் 1996ல் இருந்து வழங்கப்படுகின்றன என்று அகாடமி தலைவர் சொன்னார்.

அந்த விழாவில் அகாடமி தலைவர் சொன்னது: Mr. Narang commended the liberalism and pluralism of Tamils for protecting and helping Sourashtra language flourish reflecting the spirit of the nation.


நன்றி: தி ஹிந்து

Thursday, November 22, 2007

நன்றி சொல்லும் நன்னேரம்!

என்னை அறிந்தவராய் யான் அறிந்தவராய்
என்னை அறியாதவராய் யான் அறியாதவராய்
என்னைப் புரிந்தவராய் யான் புரிந்தவராய்
என்னைப் புரியாதவராய் யான் புரியாதவராய்

என்னைப் பெற்றவராய் யான் பெற்றவராய்
என்னை உற்றவராய் யான் உற்றவராய்
என்னை மறுத்தவராய் யான் மறுத்தவராய்
என்னை உடையவராய் யான் உடையவராய்

எல்லாமும் ஆகி யார் எவரும் ஆகி
உள்நின்றொளிர்கின்ற உத்தமனே உன்னை
நல்லதோர் பெருநாளாம் நன்றி கூறும் நன்னாள்
உள்ளத்தின் உவப்பாலே உனைப் போற்றி நின்றேன்

யானேயாகி என்னதும் ஆகி
தானே எங்கும் தக்கதெலாம் ஆகி
வானோர் பெருமானாய் வீற்றிருக்கும் உன்னை
வந்தே தொழுதேன்! வளம் பெற்று வாழ்க!

***

இன்று இங்கே அமெரிக்காவில் Thanks Giving day என்ற விடுமுறை நாள்.

Monday, November 19, 2007

சிவவாக்கிய சித்தர் போற்றும் இராம நாமம்

சிறு வயதில் 'அருள் வழித் துதிகள்' என்று ஒரு புத்தகத்தை அம்மா அறிமுகம் செய்து வைத்தார்கள். மதுரைக் கோவிலிலும் திருப்பரங்குன்றம் கோவிலிலும் அந்த புத்தகம் கிடைக்கும். இப்போதும் கிடைக்கின்றது என்று நினைக்கிறேன். பல துதிப்பாடல்கள் எனக்கு அறிமுகம் ஆனது அந்தப் புத்தகம் மூலமாகத் தான்.

ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய

என்று தொடங்கி சிவவாக்கிய சித்தரின் பாடல்கள் சில அறிமுகம் ஆனதும் அந்தப் புத்தகத்தின் மூலமாகத் தான். சந்தத்தில் இந்தப் பாடல்கள் மிக அருமையாக இருக்கும். வலைப்பதிவு எழுத வந்த பின் ஞானவெட்டியான் ஐயா சிவவாக்கியரின் பாடல்கள் எல்லாவற்றையும் வலையேற்றுவதைக் கண்டு மிக மகிழ்ந்து தொடர்ந்து படிக்கத் தொடங்கினேன். சிவவாக்கியரின் பாடல்களில் இருக்கும் சந்தத்தை வெகு நாட்களாக எந்தப் பாடலிலும் கண்டதில்லை. திருமழிசையாழ்வார் பாசுரங்களைப் படிக்கும் வரை. அந்தப் பாசுரங்கள் எல்லாம் அதே சந்தத்தில் வரும். சிவவாக்கியரே திருமழிசையார் என்றொரு வழக்கும் உண்டு.

ஐந்தெழுத்து மந்திரத்தின் பெருமையைப் பலவாறாகப் பேசிவரும் சிவவாக்கியரின் பாடல்கள்.

அஞ்செழுத்திலே பிறந்து அஞ்செழுத்திலே வளர்ந்து
அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள்!
அஞ்செழுத்திலோர் எழுத்து அறிந்து கூற வல்லீரேல்
அஞ்சல் அஞ்சல் என்று நாதன் அம்ப்லத்தில் ஆடுமே


போன்ற பாடல்கள் எல்லாம் அருமையாக இருக்கும்.



அப்படி அஞ்செழுத்து மந்திரத்தைப் போற்றும் சிவவாக்கிய இராம நாமத்தையும் போற்றி சில பாடல்கள் பாடியிருக்கிறார்.

அந்தி காலம் உச்சி மூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்
சந்தி தர்ப்பணங்களும் தபங்களும் செபங்களும்
சிந்தை மேவு ஞானமும் தினம் செபிக்கும் மந்திரம்
சிந்தை ராம ராம ராம ராம என்னும் நாமமே

அந்தி காலங்கள் இரண்டிலும் (காலை, மாலை) உச்சிப் பொழுதிலும் தீர்த்தம் ஆடி செய்யும் சந்தியா வந்தனமும், தர்ப்பணங்களும், தபங்களும், செபங்களும், இவற்றால் சிந்தையில் மேவும் ஞானமும் எல்லாமும் சிந்தையால் தினம் தினம் இராம இராம இராம என்ற நாமத்தை செபிப்பதால் கிட்டும்.

சதாவு பஞ்ச பாதகங்களைத் துரந்த மந்திரம்
இதாம் இதாம நல்லவென்று வைத்துழலும் மோழைகாள்
ச்தா விடாமல் ஓதுவார் தமக்கு நல்ல மந்திரம்
இதாம் இதாம ராம ராம ராம என்னும் நாமமே


எப்பொழுதும் பஞ்சமாபாதகங்களைச் செய்து விட்டு அந்தப் பாவங்களைத் தீர்க்க 'இது தான் சிறந்த மந்திரம்', 'இது தான் சிறந்த மந்திரம்' என ஒவ்வொன்றாக நினைத்துக் குழம்பும் மடமை உடையவர்களே. இராம இராம என்ற மந்திரமே இதாம் இதாம் என்று சொல்லி மகிழ்ந்து சதா காலமும் விடாமல் ஓதுவார்க்கு நல்ல மந்திரமாகும்.


நானதேது நீயதேது நடுவில் நின்றதேதடா
கோனதேது குருவதேது கூறிடும் குலாமரே
ஆனதேது அழிவதேது அப்புறத்தில் அப்புறம்
ஈனதேது ராம ராம ராம என்ற நாமமே

நான் என்றும் நீ என்றும் நாம் பேசும் பொருட்கள் எல்லாம் ஏது? நம் இருவருக்கும் நடுவில் நாம் இருவரும் அல்லாமல் இருப்பது எது? கோனாகிய தலைவன் யார்? குரு யார்? கூறிடுவீர்கள். ஆனது எது? அழிவது எது? எல்லாப் பொருள்களையும் உட்கொண்டு அப்புறத்தில் அப்புறமாக கடைசியிலும் நிற்பது எது? அது இராம இராம என்னும் நாமமே.

போதடா எழுந்ததும் புலனாகி வந்ததும்
தாதடா புகுந்ததும் தானடா விளைந்ததும்
ஓதடா அஞ்சும் மூன்றும் ஒன்றதான அக்கரம்
ஓதடா விராம ராம ராம என்னும் நாமமே


காலையில் (பொழுதில்) எழுந்ததும் (கதிரவன்), மலராக எழுந்ததும் (போது - மொட்டு), கண்ணுக்குப் புலனான ஒளியாக வந்ததும், தாது என்னும் மகரந்தமாகியும் (உயிர்ச்சக்தியாகியும்) உள்ளே புகுந்ததும், தானாக விளைந்ததும் எது? அந்த மந்திரத்தை ஓது. ஐந்தும் மூன்றும் (5+3) ஒன்று சேர்ந்த எட்டெழுத்து மந்திரத்தை ஓது. இராம இராம இராம என்ற மந்திரத்தை ஓது.

Saturday, November 17, 2007

பரிமேலழகரைப் பற்றி தேவநேயப் பாவாணர்...

வள்ளுவப் பெருந்தகையின் இன்பத்துப் பால் குறட்பாக்களுக்கு விளக்கம் எழுதத் தொடங்கிய போது பல நேரங்களில் புரியாத சொற்கள் வரும் போது உரை நூலைப் பக்கத்தில் வைத்திருக்காத குறை பெரிதும் உணர்ந்திருக்கிறேன். இந்தக் காரணத்தால் சில நாட்கள் எந்த இடுகையும் அந்தப் பதிவில் இடாமலும் இருந்திருக்கிறேன். அண்மையில் தமிழ் இணைய பல்கலைக்கழக நூலகம் கண்ணில் தட்டுப்பட்டது. ஒரு பெரும் இலக்கியச் சுரங்கமாக அது அமைந்திருக்கிறது. அங்கு பல நூற்களுக்கு உரை நூற்களும் இருக்கின்றன. திருக்குறளுக்கும் பல உரைகள் அங்கே கிடைக்கின்றன. பரிமேலழகர் உரை, கலைஞர் உரை, தேவநேயப் பாவாணர் உரை என்று பல உரைகள் இருப்பதால் இப்போதெல்லாம் இன்பத்துப் பால் குறட்பாக்களுக்கு ஒவ்வொருவரும் எந்த வகையில் பொருள் சொல்லியிருக்கிறார்கள் என்று படித்துப் பின்னர் இடுகையில் எழுதுவது ஒரு சுவையான பயிற்சியாக இருக்கிறது.

தவறான பொருளுடன் கூடிய ஒரு உரை நூல் வெளிநாட்டவர் ஒருவரால் திருக்குறளுக்கு எழுதப்பட்டு அது மதுரையில் பாண்டித்துரையாரின் கண்ணில் பட அவர் அந்த உரை நூலின் எல்லா பிரதிகளையும் வாங்கி கொளுத்திவிட்டார் என்ற நிகழ்ச்சியைப் பற்றி அண்மையில் ஒரு இடுகையில் எழுதியிருந்தேன். அப்போது பின்னூட்டம் இட்ட நண்பர் ஒருவர் பாண்டித்துரையார் போன்ற ஒருவர் பரிமேலழகர் உரையை எரிக்க இல்லாமல் போய்விட்டார் என்று சொன்னார். நானும் அப்போது அந்த அளவிற்கு பரிமேலழகர் உரையை வெறுக்க வேண்டிய காரணம் என்னவோ என்று மனத்தில் வியந்தேன்.

அப்புறம் தான் தமிழ் இணையப் பல்கலைகழகத்தில் தேவநேயப் பாவாணரின் திருக்குறள் உரையைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. அவரது உரை நூலின் முன்னுரையைப் படித்துக் கொண்டு வரும் போது அவர் பரிமேலழகரைப் பற்றி சொல்கிறார். அவர் சொன்னதை இங்கே எடுத்து எழுதுகிறேன்.

'திருக்குறள் முப்பது மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. அவையுட்பட அந்நூலுரைகள் ஏறத்தாழ நூறு உள்ளன. ஆயினும், இன்னும் பரிமேலழகர் உரையே தலை சிறந்ததெனவும் எவ்வுரையாலும் வீழ்த்தப்படாதது எனவும் பொதுவாகக் கருதப்பட்டு வருகின்றது. அது பெரும்பாலும் ஏனையுரைகளெல்லாவற்றினும் சிறந்ததென்பதும், சில குறள்கட்கு ஏனைய உரையாசிரியர் காணமுடியாத உண்மைப் பொருளைப் பரிமேல் அழகர் நுண்மையாக நோக்கிக் கண்டுள்ளார் என்பதும் உண்மையே.'

இப்படிச் சொன்னவர் நடுநிலைமையோடு காண்பவர்கள் என்ன என்ன குறைகளை பரிமேலழகர் உரையில் காண்கிறார்கள் என்பதையும் எடுத்துக்காட்டுகளுடன் தருகிறார்.

'பரிமேலழகர் வழுவியுள்ள வழிகள்:

1. ஆரிய வழி காட்டல்: எ-டு: 'தத்துவம் இருபத்தைந்தினையும் தெரிதலாவது...சாங்கிய நூலுள் ஓதியவாற்றான் ஆராய்தல்'; 'இவர் பொருட்பாகுபாட்டினை அறம் பொருள் இன்பமென வடநூல் வழக்குப்பற்றி ஓதுதலான்'

2. பொருளிலக்கணத் திரிப்பு: எ-டு: 'வடநூலுட் போசராசனும்...யாம் கூறுவதின் இன்பச்சுவை ஒன்றனையுமே என இதனையே மிகுத்துக் கூறினான். இது புணர்ச்சி பிரிவென இருவகைப்படும்'. தமிழ் அகப்பொருள் நூல்களும் திருக்குறள் இன்பத்துப்பாலும் கூறுவது இன்ப வாழ்க்கையே அன்றி இன்பச்சுவை மட்டுமன்று. இவ்வாழ்க்கை களவு கற்பு என்றே இருவகைப்படும்.

3. ஆரியவழிப் பொருள் கூறல்: எ-டு: 'பிதிரராவார் படைப்புக் காலத்து அயனால் படைக்கப்பட்டதோர் கடவுட்சாதி'

4. ஆரியக் கருத்தைப் புகுத்துதல்: எ-டு: 'இயல்புளிக் கோலோச்சு மன்னவனாட்ட பெயலும் விளையுளும் தொக்கு (குறள் 545), முறைகோடி மன்னவன் செய்யின் உறை கோடி ஒல்லாது வானம் பெயல் (குறள் 559) என்று உடன்பாட்டு வடிவிலும் எதிர்மறை வடிவிலும் செங்கோலே மழை வருவிக்கும் என்று ஆசிரியர் கூறியிருப்பவும், பசுக்கள் பால் குன்றிய வழி அவியின்மையாலும், அது கொடுத்தற்குரியார் மந்திரம் கற்பமென்பன ஓதாமையாலும் வேள்வி நடவாதாம்; ஆகவே வானம் பெயல் ஒல்லாதென்பதாயிற்று என்று பரிமேலழகர் 'ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல் மறப்பர் காவலன் காவான் எனின்' என்னும் குறளுரையில் தலைகீழாய்க் கருமகத்தைக் கரணமெனக் கூறியிருத்தல் காண்க.

5. தென்சொல்லை வடசொல் மொழிபெயர்ப்பெனல்: எ-டு: 'உழையிருந்தான்' எனப்பெயர் கொடுத்தார், அமாத்தியர் என்னும் வடமொழிப் பெயர்க்கும் பொருண்மை அதுவாகலின். குடங்கர் என்பது குடங்கமென்னும் வடசொற் திரிபு.

6. தென்சொற்கு வடமொழிப் பொருள் கூறல்: எ-டு: அங்கணம் = முற்றம்

7. சொற்பகுப்புத் தவறு: எ-டு: பெற்றத்தால் - 'பெற்ற' என்பதனுள் அகரமும் அதனால் என்பதனுள் அன் சாரியையும் தொடை நோக்கி விகாரத்தால் தொக்கன

8. சொல் வரலாற்றுத் தவறு: எ-டு: அழுக்காறென்பது ஒரு சொல் - அச்சொல் பின் அழுக்காற்றைச் செய்யாமை என்னும் பொருள்பட எதிர்மறை ஆகாரமும் மகர வைகார விகுதியும் பெற்று அழுக்காறாமையென நின்றது.

9. சொற்பொருள் தவறு: எ-டு: இனிது = எளிது.

10. அதிகாரப் பெயர் மாற்று: எ-டு: மக்கட்பேறு = புதல்வரைப் பெறுதல்

11. சுட்டுமரபறியாமை: எ-டு: அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும். அஃதும் = ஏனைத் துறவறமோ எனின்.

12. இருகுறளைச் செயற்கையாக இணைத்தல்: எ-டு: 631, 632ம் குறட்பாக்கள்.

ஆயின், பரிமேலழகர் உரையால் ஒரு பெருநன்மையும் இல்லையோ எனில், உண்டு. அது எதுவெனில் அவர் உரைத் தொடர்பால் திருக்குறள் இதுவரை அழிக்கபடாதிருந்ததே என்க. '


தேவநேயப் பாவாணர் சொன்னவற்றை பச்சை நிறத்திலும் பரிமேலழகர் சொன்னவை என்று எனக்குத் தோன்றுபவற்றை நீலத்திலும் குறித்துள்ளேன்.

Tuesday, November 13, 2007

தண்தமிழ் வாழ மணவாள மாமுனியே இன்னுமொரு நூற்றாண்டு இரும்!!!




முதன்மை வைணவ ஆசாரியர்களில் ஒருவரும், இராமானுஜரின் மறுபிறப்பு என்று போற்றப்படுபவரும், தண்டமிழ் வேதமாம் திருவாய்மொழிக்குத் திருவரங்கன் திருமுன்பு விரிவுரை ஆற்றி அவனாலேயே குருவாகப் போற்றப்பட்டவரும் ஆன மணவாளமாமுனிகளின் பிறந்த நாள் இன்று (ஐப்பசி திருமூலம்) என்று நண்பர் இரவிசங்கர் உரைத்தார். மணவாளமாமுனிகளின் வாழ்க்கையைப் பற்றியும் அவர் தமிழுக்கும் வைணவத்திற்கும் ஆற்றிய தொண்டுகளைப் பற்றியும் அவர்தம் பெருமைகளைப் பற்றியும் பேசிக் கொண்டே செல்லலாம். வருங்காலத்தில் பெருமாள் திருவருளாலும் ஆசாரியன் திருவருளாலும் அவற்றைப் பேசும் பாக்கியம் எங்களுக்குக் கிட்டட்டும்.

செந்தமிழ் வேதியர் சிந்தை தெளிந்து சிறந்து மகிழ்ந்திடும் நாள்
சீருலகாரியர் செய்தருள் நற்கலை தேசு பொலிந்திடும் நாள்
மந்தமதிப் புவிமானிடர் தங்களை வானில் உயர்த்திடும் நாள்
மாசறு ஞானியர் சேர் எதிராசர் தம் வாழ்வு முளைத்திடும் நாள்
கந்தமலர்ப் பொழில் சூழ் குருகாதிபன் கலைகள் விளங்கிடும் நாள்
காரமர் மேனி அரங்க நகர்க்கிறை கண்கள் களித்திடும் நாள்
அந்தமில் சீர் மணவாளமுனிப்பரன் அவதாரம் செய்திடும் நாள்
அழகு திகழ்ந்திடும் ஐப்பசியில் திருமூலமதெனும் நாளே

செந்தமிழ் நாட்டு வேதியர்கள் சிந்தை தெளிந்து சிறந்து மகிழ்ந்திடும் நாள்; பெருமை மிகு 'பிள்ளை லோகாசாரியர்' என்ற ஆசாரியர் செய்து அருளிய நூற்கள் எல்லாம் வெளிச்சம் பெற்றுப் பொலிந்திடும் நாள்; மந்த மதி கொண்ட புவி வாழ் மானிடர்கள் எல்லோரையும் வான நாட்டிற்கு உயர்த்திடும் நாள்; குற்றமில்லா ஞானியர் சேரும் எதிராசராம் இராமானுஜ முனிவர் மீண்டும் வாழ்வு கொள்ளும் நாள்; வாசம் மிகுந்த மலர் பூங்காக்கள் சூழ்ந்த குருகை என்னும் ஆழ்வார் திருநகரியில் பிறந்த அதன் தலைவனாம் மாறன் சடகோபன் நம்மாழ்வாரின் பாசுரங்கள் உலகத்தில் விளங்கிடும் நாள்; மேகம் போல் திருமேனி கொண்ட அரங்க நகரத்து இறைவனின் கண்கள் களித்திடும் நாள்; முடிவே இல்லாத பெரும் புகழ் கொண்ட மணவாள மாமுனிகள் அவதாரம் செய்திடும் நாள்; அழகு திகழ்ந்திடும் ஐப்பசியில் வரும் திருமூலம் என்னும் நன்னாளே!

இப்புவியில் அரங்கேசர்க்கு ஈடளித்தான் வாழியே
எழில் திருவாய்மொழிப்பிள்ளை இணையடியோன் வாழியே
ஐப்பசியில் திருமூலத்தவதரித்தான் வாழியே
அரவரசப் பெருஞ்சோதி அனந்தன் என்றும் வாழியே
எப்புவியும் சீசைலம் ஏத்த வந்தோன் வாழியே
ஏராரும் எதிராசர் என உதித்தோன் வாழியே
முப்புரி நூல் மணி வடமும் முக்கோல் தரித்தோன் வாழியே
மூதறிவன் மணவாள மாமுனிவன் வாழியே


இந்தப் புவியில் திருவரங்கத்திறைவனுக்கு 'ஈடு' என்னும் திருவாய்மொழியின் விரிவுரையை வழங்கியவன் வாழ்க! அழகு மிகும் திருவாய்மொழிப்பிள்ளை என்னும் ஆசாரியரின் திருவடிகளைத் தாங்குபவன் வாழ்க! ஐப்பசியில் திருமூலத்தில் அவதரித்தான் வாழ்க! பாம்பு அரசன் பெருஞ்சோதி வடிவான அனந்தன் ஆதிசேஷனின் திருவுருவமே வாழ்க! எல்லோரும் சீலைலம் என்று அரங்கன் பாடி அளித்தப் பாடலைப் பாடிப் போற்றும் படி வந்தவன் வாழ்க! இராமானுஜ மாமுனியின் மறுபிறப்பே எனும் படி உதித்தவன் வாழ்க! முப்புரி நூல், மணி வடம், முக்கோல் இவற்றைத் தரித்தவன் வாழ்க! மூதறிவுடைய மணவாள மாமுனிவன் வாழ்க வாழ்க!


திருவரங்கன் ஒரு சிறுவன் உருவில் வந்து திருவாய்மொழி விரிவுரையின் கடைசி நாளில் பாடி அளித்த பாடல் இதோ!

ஸ்ரீசைலேச தயாபாத்ரம் தீ பக்த்யாதி குணார்ணவம்
யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்ய ஜாமாதரம் முனிம்

ஸ்ரீசைலேசர் என்று போற்றப்படும் திருவாய்மொழிப்பிள்ளை என்னும் ஆசாரியரின் கருணைக்குப் பாத்திரமானவர்; அறிவு, அன்பு (பக்தி) போன்ற நற்குணங்களின் கடல்; இராமானுஜரின் வழியை பின்பற்றி அதனை எங்கும் பரவும் வகை செய்ததால் யதீந்த்ர பிரவணர் என்று போற்றப்படுபவர்; அப்படிப்பட்ட அழகிய மணவாள மாமுனிகளை வணங்குகிறேன்.

இப்படி திருவரங்கனே தன் ஆசாரியனாக ஏற்றுப் போற்றும் பெருமை பெற்றவர் மணவாள மாமுனிகள்.

அடியார்கள் வாழ, அரங்க நகர் வாழ
சடகோபன் தண் தமிழ் நூல் வாழ-கடல் சூழ்ந்த
மண்ணுலகம் வாழ மணவாள மாமுனியே
இன்னுமோர் நூற்றாண்டு இரும்.

Friday, November 09, 2007

உதயசூரியனின் ஒளி எத்திசையும் பரவும்!!!


'எங்கும் இருள் சூழ்ந்திருந்த நேரத்தில் உலகத்தோர் எல்லோரும் மகிழும்படி மெதுவாகக் கதிரவன் கடலின் மேல் தோன்றினாற் போல' என்று ஒரு அருமையான உவமையை முருகப்பெருமானின் திருவுருவத் தோற்றத்திற்குத் தந்து தன் அழகு மிகு நூலைத் தொடங்கினார் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார். அப்படித் தோன்றிய கதிரவன் எந்த எந்த வகையில் முருகனுக்கு உவமையாக அமைகின்றது என்பதை சென்ற இடுகையில் கண்டோம். அப்படி கந்தக்கடவுளின் தோற்றத்தைப் பற்றி சொன்ன திருமுருகாற்றுப்படை அந்தப் பெருமானின் திருமேனி ஒளியையும் அதே உவமை கொண்டு விளக்கிச் செல்கிறது.

ஓவற இமைக்கும் சேண் விளங்கு அவிரொளி

பகலவன் தோன்றியவுடன் ஒளி வெள்ளம் எல்லாத் திசைகளிலும் தோன்றி விளங்குகிறது. எங்கும் ஒழிவற கண் காணும் தூரம் வரை எங்குமே ஒளி வீசி நிற்பதைப் போல விளங்குகிறது பகலொளி. அந்தப் பகலொளியைப் போலவே காண்போர் கண் செல்லும் அளவிற்கும் (சேண் - சேய்மை - தூரம்) விளங்கி எங்கும் ஒழிவற (ஓவற) விளங்கி நிற்கின்ற ஒளியை உடையவன் திருமுருகன்.

இருள் சூழ்ந்து இருந்த காலத்திலிருந்து சிறிதே நேரத்தில் எங்கும் ஒளி சூழ்ந்த காலம் வந்ததால் கண்களால் அந்த ஒளியை உடனே நோக்க இயலவில்லை. அதனால் பல முறை இமைத்து இமைத்து நோக்குகின்றன அந்தக் கண்கள். அப்படி ஓவற இமைக்கும் படி அமைந்திருக்கிறது எங்கும் வீசும் பெரும் ஒளி (அவரொளி). கட்புலனுக்கு மட்டுமே இந்த உவமையைக் கூறவில்லை ஆசிரியர். கதிரவன் தோன்றும் போது கட்புலன் மட்டுமே இமைக்கின்றது. ஆனால் முருகன் தோன்றும் போது ஒழிவற எல்லா புலன்களுமே தங்கள் தொழில்களை மறந்து இமைத்து இமைத்து திருமுருகனின் திருமேனி ஒளியையே எல்லாத் திசைகளிலும் நோக்குகின்றன.

சங்கப் புலவர்களின் அணி நயத்தைப் பற்றி ஒரு கருத்து உண்டு. முடிந்த வரை இயல்பாக நடப்பதை உவமையாகக் கூறுவதை அவர்கள் விரும்பியிருக்கிறார்கள் என்றும் உயர்வுநவிற்சி அணியை சுவை கூட்டல் பொருட்டு மட்டுமே பயன்படுத்தியிருக்கிறார்கள் என்றும் ஒரு கருத்து உண்டு. பிற்கால இலக்கியங்களில் இறைவனைப் போற்றும் போது பல நூறு, பல்லாயிரம், பல கோடி சூரியன்கள் எழுந்தாற்போன்ற ஒளியுடையவன் இறைவன் என்று கூறியிருக்கிறார்கள். அப்படி இன்றி ஒரு சூரியன் உதித்தால் எப்படி இருக்குமோ அப்படி உதித்தான் முருகன் என்று இயல்பாக உள்ளதை உவமையாக இங்கே கூறுகிறார் நக்கீரனார். அப்படி உயர்வு நவிற்சி இன்றிக் கூறும் இடத்தும் பல அழகிய பொருட்களை ஒவ்வொரு சொல்லிலும் சொல்லி அழகு பெற திருமுருகன் தோற்றத்தை வருணித்திருக்கிறார். மூன்றே வரிகளில் எவ்வளவு ஆழ்ந்த பொருள்?

***

இந்த வரிக்கு நண்பர் இரத்னேஷ் இன்னொரு முறையில் பொருள் கூறினார். ஓவற என்றதும் சேண் விளங்கு என்றதும் ஒரே நேரத்தில் முருகப்பெருமான் எப்போதும் தன்முனைப்பு நீங்கிய உயிர்களின் திருவுள்ளத்தில் விளங்குவதையும் அவர்களாலும் புரிந்து கொள்ள இயலாத அளவிற்கு தூரத்தில் விளங்குவதையும் காட்டுகிறது என்றார். இந்த விளக்கம் அருமையாக இருந்தாலும் 'பத்துடை அடியவர்க்கெளியவன் மற்றவர்களுக்கரிய நம் அரும்பெறல் அடிகள் - பத்தியுடைய அடியவர்களுக்கு எளியவன்; மற்றவர்களுக்கு அரியவன்' என்று வேறோரிடத்தில் படித்திருப்பதால் இந்த விளக்கம் என் மனத்திற்குவந்த முதல் விளக்கமாக இல்லை. ஆயினும் இந்த அடியைப் படிக்கும் இடத்தே அந்த விளக்கத்தையும் தருவது பொருத்தமுடையது என்பதால் அவர் எழுதிய விளக்கத்தை அப்படியே எடுத்து இங்கே இடுகிறேன்.

***

முதல் இரண்டு அடியுடன் ஏன் நிறுத்தி விட்டீர்கள்? மூன்று அடிகள் சேர்ந்த கூட்டுப் பொருள் அல்லவா சூரிய - முருக ஒப்புமை?

"ஓஅற இமைக்கும் சேண்விளங்கு அவிரொளி"

என்கிற மூன்றாவது வரியையும் சேர்ந்துப் பாருங்கள் (ஓ என்றால் தங்குதல்; அற என்றால் ஆணவம் அறுத்த மனங்களில் என்கிற பொருள். அம்மாடியோ)

"உயிர்கள் மகிழும்படி மேருமலையை வலமாக எழுந்து திரிகின்ற, பலசமயத்தவரும் புகழ்கின்ற சூரியன் கிழக்குக் கடலில் தோன்றக் கண்டாற் போல், ஆணவம் அகன்ற அடியார்களின் உள்ளத்தில் விளங்குவதும் அவர்தம் கருத்துக்குத் தொலைவில் நின்று விளங்குவதும் ஆகிய இயற்கை ஒளியானவன்" என்று முருகனை நக்கீரர் விவரிக்கும் அழகை என்னென்பது!

மூன்று வரிகளுக்குள் எவ்வளவு விஷயங்கள்!

1. சூரியன் இருள் போக்குவது போல், முருகன் அறியாமை இருள் போக்குபவன்
2 எல்லாம் அவன் செயல் எனும்படி முனைப்படங்கிய உயிர்களில் சென்று தங்குபவன்
3. அவர்களின் உள்ளத்தில் தங்கினாலும் அவர்களின் கருத்துக்குப் பிடிபடாமல் வெகு தொலைவில் இருப்பவன்

கூடுதலான ஒரு பார்வை: ஒளிர்தல் என்கிற பொருளுக்கு இமைத்தல் என்கிற வார்த்தையைப் பயன்படுத்தி உள்ளார். இமைப்பது மட்டுமே ஒளிர்வுக்கு சான்று. என்ன உவமானம்!

Wednesday, November 07, 2007

நம்மாழ்வாரின் பெருமானும் அருணகிரிநாதரின் பெருமாளும்...

இது சென்ற இடுகையின் தொடர்ச்சி.

வைணவர்கள் தங்கள் குல முதல்வன் என்று போற்றும் மாறன் சடகோபன் நம்மாழ்வாரின் பாசுரங்களில் பல இடங்களில் அரனை அயனை அரியை என்று மூவரையும் சேர்த்துப் பாடுகிறார்.


இறைவனைப் போற்றும் போது...

ஒளி மணிவண்ணன் என்கோ ஒருவன் என்று ஏத்த நின்ற
நளிர் மதிச் சடையன் என்கோ நான்முகக் கடவுள் என்கோ
அளிமகிழ்ந்து உலகம் எல்லாம் படைத்தவை ஏத்த நின்ற
களிமலர்த்துளவன் எம்மான் கண்ணனை மாயனையே


ஒளிவீசும் கரு மாணிக்கம் போல் நிறம் கொண்ட திருமால் என்பேனோ? ஒரே இறைவன் என்று உலகத்தவர் எல்லாம் போற்றிப் புகழ நின்ற அமுதம் நிரம்பிய மதியைச் சடையில் வைத்திருக்கும் சிவபெருமான் என்பேனோ? நான்முகக் கடவுளான பிரம்மன் என்பேனோ? உலகத்தை எல்லாம் படைத்து எல்லா உலகங்களும் போற்ற நின்ற திருத்துழாயாம் துளசி மாலை அணிந்த என் இறைவன் கண்ணனை மாயனையே!

கண்ணனை மாயனை ஒளி மணிவண்ணன், நளிர்மதிச் சடையன், நான்முகக் கடவுள் என்றவர் கீழே சொல்லபப்டும் பாடலில் மூவரையும் போற்றுங்கள் என்கிறார்.

ஒன்றென பலவென அறிவரும் வடிவினுள் நின்ற
நன்றெழில் நாரணன் நான்முகன் அரன் என்னும் இவரை
ஒன்ற நும் மனத்து வைத்து உள்ளி நும் இருபசை அறுத்து
நன்றென நலம் செய்வது அவனிடை நம்முடை நாளே


ஒன்று, பல என்று யாரும் அறிவதற்கு அரிதாக பற்பல வடிவில் நின்று அருளும் நற்குணங்களால் நிரம்பிய நாரணன், நான்முகன், அரன் என்னும் இந்த மூவரை ஒன்றி உம் மனத்தில் வைத்து என்றும் அவரைப் போற்றி பாவம், புண்ணியம் என்ற இரு பாசங்களையும் அறுத்து நன்று நன்று என்று நலம் செய்யும் நாளே நாமும் அவனும் கலந்து ஆனந்தம் அனுபவிக்கும் நாளாகும். (ஜீவாத்ம பரமாத்ம ஐக்கியம் பேசப்படுகிறது)

தான் மூவராலும் அருளப்பட்டவன் என்று தானே சொல்கிறார் இன்னொரு பாடலில்.

தெருளும் மருளும் மாய்த்துத் தன்
திருந்து செம்பொற் கழலடிக்கீழ்
அருளி இருத்தும் அம்மானாம்
அயனாம் சிவனாம் திருமாலால்
அருளப்பட்ட சடகோபன்
ஓராயிரத்துள் இப்பத்தால்
அருளி அடிக் கீழ் இருத்தும் நம்
அண்ணல் கருமாணிக்கமே


மயககமும் தெளிவும் மாறி மாறி வரும் நிலையை மாற்றி தனது செம்பொற்கழலடிகளின் கீழ் அருள் செய்து இருத்தும் தலைவனாம் நான்முகனாம் சிவனாம் திருமாலாம் எம்பெருமானால் அருளப்பட்ட சடகோபனாகிய நான் எழுதிய இந்த ஓர் ஆயிரம் பாடல்களில் இப்பத்துப் பாடல்களைப் பாடுவதால் நம் அண்ணல் கருமாணிக்கம் பாடியவரை எல்லாம் தன் திருவடிகளின் கீழ் அருள் செய்து இருத்துவான்.

இன்னொரு இடத்தில் தனக்கு அருளிய இறைவன் தன்னை விட்டு நீங்கக் கூடாது என்று கூவும் போது இவ்வாறு உருகுகிறார்.

முனியே நான்முகனே முக்கண்ணப்பா என் பொல்லா
கனி வாய் தாமரைக்கண் கருமாணிக்கமே என் கள்வா
தனியேன் ஆருயிரே என் தலைமிசையாய் வந்திட்டு
இனி நான் போகலொட்டேன் ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே


என் தலைவனே! நான்முகனே! முக்கண்ணப்பனே! என் பொல்லாத கனி போன்ற திருவாயை உடைய தாமரைக்கண்களை உடைய கருமாணிக்கமே! என் கள்வனே! என்னுடைய ஆருயிரே! என் தலைமிசையாய் உன் திருவடிகளை நீ வைத்த பின் இனி நான் உன்னை போக விடமாட்டேன். ஒரு மாயமும் என்னிடம் செய்யாதே.

தன் திருவாய்மொழி ஆயிரம் பாடல்களை நிறைக்கும் போதும் மூவரும் நினைவிற்கு வருகின்றனர் நம்மாழ்வாருக்கு.

அவாவறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி
அவாவற்று வீடுபெற்ற குருகூர்ச் சடகோபன் சொன்ன
அவாவிலந் தந்தாதிகளால் இவையாயிரமும் முடிந்த
அவாவிலந் தாதி பத்தறிந்தார் பிறந்தார் உயர்ந்தே.


அவா நீங்கும் படி சூந்து வரும் திருமாலை, நான்முகனை, சிவபெருமானைப் போற்றிப் பாடி, அவா நீங்கி வீடு பெற்ற குருகூரின் சடகோபனாகிய நான் சொன்ன அவா நீக்கும் அந்தாதித் தொடையால் அமைந்த இந்த ஆயிரம் பாடல்களை நிறைவு செய்த அவா நீக்கும் அந்தாதியான இந்தப் பத்துப் பாடல்களையும் பாடியவர்கள் வீடு பேறு பெற்று உயர்ந்தார்கள் என்றே கொள்ளலாம்.

இந்தப் பாசுரங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இடுகை இடும் அளவிற்கு அழ்ந்த பொருள் உடையது. இங்கே எடுத்துக் கொண்ட பொருள் கருதி சுருக்கமாகப் பொருளுரைத்தேன்.

***

நம்மாழ்வார் இப்படி பல பாசுரங்களில் சிவபெருமானையும் போற்றிப் பாடும் போது, முருகப்பெருமானைப் பாடப் புகுந்த, 'பெருமாளே' என்று ஒவ்வொரு பாடலையும் நிறைவு செய்த, ஓசைமுனி அருணகிரிநாதர் நிறைய திருப்புகழ் பாடல்களிலும் மாமனைப் போற்றிய பின்னரே மருகனைப் போற்றுகிறார். இங்கே ஒரு பாடலைப் பார்ப்போம்.


முத்தைத் தரு என்று முருகப்பெருமானால் எடுத்துத் தரப்பட்டு அருணகிரியார் பாடிய 'முத்தைத் தரு பத்தித் திருநகை' பாடலிலும்

பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் ...... இரவாகப்

பத்தற்கிர தத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்


என்று பச்சைப்புயலைப் போற்றுகிறார்.

'இராவணனுடைய பத்துத் தலைகள் அழிக்கக் அம்பு தொடுக்கும், மந்தர மலையை மத்தாக வைத்துப் பாற்கடலைக் கடையும், பட்டப்பகலில் அருச்சுனனைக் காப்பதற்காக சக்கரம் கொண்டு சூரியனை மறைக்கும், பக்தனாகிய அருச்சுனனுக்கு சாரதியாக தேரோட்டும், பச்சைப்புயல்' என்கிறார்.

***

இப்படி அருளாளர்கள் எல்லாம் தெய்வங்களை மாற்றி மாற்றிப் போற்றியிருக்கும் போது எப்போதோ நடந்த சமயச் சண்டைகளில் இப்போதும் மனம் செலுத்தி நம்மை நாமே குழப்பிக் கொள்ள வேண்டாம் என்று வேண்டி இத்துடன் இந்த இடுகையை நிறைவு செய்கிறேன்.

***

அனைவருக்கும் இனிய தீபத் திருநாள் வாழ்த்துகள்