நின்றால்
உட்காரச் சொல்கிறது,
உட்கார்ந்தால்
வயிறு மடிந்து
சாயச் சொல்கிறது,
சாய்ந்து கொள்ள நினைக்கையில்
காணாமல் போகிறது உன் தோள்.
நின்றும், உட்கார்ந்தும், சாய்ந்தும்
சரிப்படாத தருணங்களை
நடக்கத் தேர்ந்தெடுக்கிறேன்.
எடுத்துவைத்தது எட்டடியாகக் கூட இருக்காது,
நெற்றியில் வியர்வை,
ஒற்றி எடுக்க, எங்கே உன் உதடுகள்?
யாரோடோ பேச நினைக்கையில்
உள்ளுக்குள்
காலால் உதைத்து தன்னோடு
பேச அழைக்கிறது குழந்தை,
தடவிக் கொடுக்க எங்கே உன் கைகள்?
எப்படிக் கழியும் விநாடிகள்,
வேதனையில் இதயம் வெறுமை சுமக்க,
'உர்'ருனு உட்காராதே என
அறிவுரை கூறுபவையா உன் வார்த்தைகள்?
சாப்பிடும் சோறு,
பேசும் பேச்சு,
சிரிக்கும் சிரிப்பு
எல்லாம் குழந்தைக்காக என
கரு சுமந்து...
நாளை
உன்னோடு வண்டியில்
முன்நின்று சிரித்து வர,
உன் இனிசியல் போட்டுக் கொள்ள,
உனக்கு பிள்ளை பெற்றுத் தருவேன்
கேட்டால் கிடைக்கும் தான்
உன் முத்தம்,
உன் அரவணைப்பு,
உன் ஆறுதல்.
பச்சப்புள்ள கேட்டா
பாலூட்டுகிறோம்?
கரு சுமந்து
குழந்தைத் தவம் இருக்கும் பெண்களைச்
சுமக்க
எந்த ஆணுக்கு உள்ளது கருப்பை?
- வெண்ணிலா
('நீரிலலையும் முகம்' என்ற தொகுப்பிலிருந்து என்ற குறிப்புடன் 2002 ஆண்டு 'தினம் ஒரு கவிதை' யாஹூ குழுமத்தில் வந்த கவிதை. அப்போது முதல் குழந்தை உண்டான நேரம். சேமித்து வைத்திருந்தேன். இன்று தற்செயலாக வேறு ஏதோ தேடப்போக இது கிடைத்தது. படித்த போது இன்னும் சுட்டது. )