ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெரும் செந்நெல் ஊடு கயல் உகள
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண் படுப்ப
தேங்காதே புக்கு இருந்து சீர்த்த முலை பற்றி
வாங்க குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்!
தனக்கு உரிமையான உலகங்களைத் தானே தானமாகக் கேட்க வேண்டியிருக்கிறதே என்று குறுகி குறள் உருவாக வாமனனாக வந்து, மாவலியிடம் மூவடி மண் தானமாகப் பெற்ற பின், தனது அடியார்களுக்காகத் தான் விரும்பி வந்த காரியம் நிறைவேறுகிறதே என்று மகிழ்ந்து ஓங்கி வளர்ந்து உலகங்களை அளந்த அந்த உத்தமனின் திருப்பெயர்களைப் பாடி, நாங்கள் நம் பாவை நோன்பில் செய்ய வேண்டியவற்றைச் சாற்றி நீராடினால், எல்லா வளங்களும் பெருகும்!
எல்லா தீங்குகளும் போய் நன்மைகள் விளையும் படி நாடெல்லாம் மாதம் மும்மாரி பெய்யும்! செந்நெல் கதிர்கள் ஓங்கி வளர்ந்திருக்கும் வயல்வெளிகளில் தேங்கியிருக்கும் நீரில் கயல்மீன்கள் திரியும்! அங்கு வளர்ந்திருக்கும் குவளைப்பூக்களில் புள்ளிகளை உடைய வண்டுகள் தேனை உண்டு அந்த மயக்கத்தில் கண் வளரும்! அருகில் அமர்ந்து பாலால் நிறைந்து பெருகி இருக்கும் மடுக்களைப் பற்றி வாங்கும் போது குடங்கள் நிறைய வள்ளல் பெரும்பசுக்கள் பாலை பொழிந்து நிறைக்கும்! நீங்காத செல்வம் எங்கும் நிறைந்து விளங்கும்!
No comments:
Post a Comment