Friday, May 31, 2013

திருப்பாவை அறிமுகம் - 2

பேரொளி வீசும் ஸ்ரீவைகுண்டம். சூரிய சந்திர அக்னிகளின் ஒளி தேவையில்லாத சுயம்பிரகாசமான திவ்யதேசம். பரவாஸுதேவனான பகவான் நித்யசூரிகளாலும் முக்தர்களாலும் மங்களாசாசனம் செய்யப்பட்டு தன் தேவியர்களான லக்ஷ்மிதேவி, பூதேவி, நீளாதேவி ஆகியோருடன் ஆதிசேஷன் என்னும் திவ்யாசனத்தில் வீற்றிருக்கும் திருமாமணிமண்டபம்.

எங்கும் இன்பம் ததும்பும் இந்த சூழலில் இறைவன் முகத்தில் மட்டும் ஏதோ ஒரு சுணக்கம். திருத்தேவியர்களுக்கு அது ஆச்சரியமாய் இருந்தது.

பெரிய பிராட்டி லக்ஷ்மிதேவி: சுவாமி! தங்கள் திருமுகத்தில் ஏதோ ஒரு கவலை இருப்பது போல் தோன்றுகிறதே. என்னவென்று அடியேனுக்குச் சொல்லலாமா?

பெருமாள்: தேவி. இந்த மனிதர்கள் நாம் அவர்களுக்கு அருளிய சுதந்திரத்தைக் கொண்டு நல்வழியை அடையாமல் தீயவழியிலேயே சென்று துன்பமுறுகிறார்களே. அதைக்கண்டு தான் எனக்கு வருத்தம். எல்லாம் வல்ல நம் அருளைக்கொண்டு அவர்கள் எல்லாரையும் நல்லவழியில் திருப்பிவிட முடியும். ஆனால் அது அவர்களுக்கு நாம் அருளிய சுதந்திரத்துக்கு எதிராக முடியுமே. அவர்களாக நல்வழியில் திரும்பினால் தானே நன்றாய் இருக்கும்.

பூதேவி: சுவாமி. சரியாகச் சொன்னீர்கள். இதற்கு என்ன தான் வழி?

வாஸுதேவன்: தேவி. நானும் அதைத்தான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். நாம் நால்வரும் கூடி ஆலோசித்தால் ஏதாவது ஒரு நல்ல வழி தென்படலாம்.

நான் இதுவரை கணக்கற்ற அவதாரங்கள் எடுத்து விட்டேன். அந்த அவதாரங்களின் முக்கிய நோக்கங்கள் தீயவர்களை அழிப்பதும், நல்லவர்களைக் காப்பதும், தருமத்தை நிலைநாட்டுவதும் ஆக இருந்தாலும், கிருஷ்ணாவதாரத்தில் அருச்சுனனை முன்னிட்டு கீதையையும் உபதேசித்துவிட்டேன். அதில் மக்கள் நற்கதி அடைய உள்ள பல வழிகளையும் சொல்லியிருக்கிறேன். ஆனாலும் அவர்கள் கேட்டமாதிரி தெரியவில்லை.

ஒருவேளை நான் கடவுளாக வந்து சொல்வதால் அவர்களுக்கு என் பேச்சினை கேட்டு நடக்க கடினமாக உள்ளதோ என்று எண்ணி எனக்கு திவ்யாபரணங்களாகவும் திவ்யாயுதங்களாகவும் இருந்து சேவை செய்யும் நித்யர்களையும் ஆழ்வார்களாக பிறக்கவைத்தேன். அவர்களும் மண்ணுலகில் மனிதர்களாகப் பிறந்து இனிய தமிழ்ப் பாடல்களால் மனமுருகப் பாடி நல்வழி காட்டினர். அந்த பக்திபூர்வமான நாலாயிர திவ்ய ப்ரபந்தங்களைக் கேட்டு சிலர் நல்வழி சேர்ந்தனர். ஆனால் பெரும்பான்மை மக்கள் இன்னும் 'தன் பெண்டு தன் பிள்ளை சோறு வீடு சம்பாத்யம் இவையுண்டு தானுண்டு' என்று தான் இருக்கிறார்கள்.

எல்லாரும் பின்பற்றும் படி நல்வழியை எப்படி காண்பிப்பது? நான் மீண்டும் அவதாரம் எடுக்கவேண்டிய நேரம் வந்துவிட்டதா என்று தான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

நீளா தேவி: சுவாமி. நீங்கள் அருளிய சுதந்திரத்தால் நம் குழந்தைகளாகிய உலக மக்களுக்கு ஒரு குணம் வளர்ந்து உள்ளது. நீங்களே மனிதனாகப் பிறந்து 'நானே கடவுள். என்னை நன்றாய் சரணடை' என்று கூறினால், 'மனிதன் எப்படி கடவுளாக முடியும். அது சாத்தியம் இல்லை. நீர் என்னை ஏமாற்றுகிறீர்' என்று சொல்லி உங்கள் பேச்சைக் கேட்கமாட்டார்கள். நீங்களும் தலைகீழாக நின்றாலும் அவர்களை நம்பவைப்பது குதிரைக்கொம்பு. நீங்கள் கீதையில் எங்கு எடுத்தாலும் 'என்னையே வணங்கு. என்னையே சரணடை. நான் உன்னை எல்லா பாவங்களிலும் இருந்து கடைத்தேற்றுவேன்' என்று தான் கூறியிருக்கிறீர்கள். அது உண்மைதான் என்றாலும் அது மனித இயல்பிற்கு மாற்றாக இருப்பதால் 'எப்படி இந்த இடையன், இடைப்பெண்களின் காதலில் திளைத்தவன் கடவுளாக முடியும்' என்றெண்ணி இந்த மக்கள் கீதையில் சொன்னதை கேட்பதில்லை.
ஸ்ரீதேவி: நீளா சொன்னது உண்மைதான் சுவாமி. மக்கள் குணம் அப்படி தான் இருக்கிறது. ஆழ்வார்கள் மனிதர்களாக இருந்து 'இறைவன் இவனே. இவனிடம் இப்படி தான் பக்தி கொண்டு வழிபடவேண்டும்' என்று வாழ்ந்து காட்டினர். அதனால் அவர்கள் கொஞ்சமாவது மக்களை நல்வழியில் திருப்புவதில் வெற்றி பெற்றார்கள்.

நாராயணன்: அப்படி என்றால் நான் அவதாரம் எடுப்பதைவிட இன்னொரு ஆழ்வார் பிறப்பது தான் சரி என்று சொல்கிறீர்களா?

மண்மகள்: ஆமாம் சுவாமி. அது தான் சரி. ஆனால் இது வரை ஆண்கள் தான் ஆழ்வார்களாகப் பிறந்துள்ளார்கள். என்ன தான் தந்தை நல்வழியில் நடந்து காண்பித்தாலும் குழந்தைகள் தாய் காட்டிய வழியை தான் எளிதாகப் பின்பற்றுவர். ஒவ்வொருவரும் தமக்குரிய நல்ல குணங்களைப் பட்டியலிட்டு அதனை தாங்கள் எங்கு கற்று கொண்டோம் என்று பார்த்தால் அது தாய்மார்களிடமிருந்தோ, பாட்டிமார்களிடமிருந்தோ, அத்தைமார்களிடமிருந்தோ, தமக்கைகளிடமிருந்தோ தான் கற்றிருப்பதைக் காணலாம். அதனால் இப்போது பிறக்கப் போகும் ஆழ்வார் ஒரு பெண்ணாக இருந்தால் அது சிறப்பாய் இருக்கும்.

கேஸவன்: ஆஹா. அற்புதமான யோசனை. அப்படியே செய்யலாம். யாரை பெண் ஆழ்வாராகப் பிறக்க சொல்லலாம் என்று ஏதாவது யோசனை இருக்கிறதா? அப்படி பிறப்பவர் வெறும் பெண்ணாக மட்டும் இல்லாமல் சர்வ லோகத்துக்கும் தாயாகவும் இருந்தால் இன்னும் கருணையுடன் நல்வழியைக் காட்ட முடியும் அல்லவா? உங்களில் யாராவது ஒருவர் பிறந்தால் என்ன?

திருமகள்: சுவாமி. எங்கள் மூவரில் ஒருவர் பிறப்பது தான் சரி. நானோ 'அகலகில்லேன் இறையும்' என்று உங்களுடனேயே இருப்பவள். நீங்கள் அவதாரம் எடுக்கும் போதெல்லாம் நானும் உங்களைத் தொடர்ந்து சீதையாகவும் ருக்மணியாகவும் அவதாரம் செய்வேன். நீங்கள் இப்போது அவதாரம் செய்யப் போவதில்லையாதலால் நான் உங்களைப் பிரிந்து அவதரிப்பது என்பது ஆகாது.

மாதவன்: ஆமாம் லக்ஷ்மி. நீ சொல்வது சரிதான். நீ என்னுடன் எப்போதும் இருப்பதால் தானே என்னை மாதவன் என்றும் திருமாலவன் என்றும் 
ஸ்ரீமந் நாராயணன் என்றும் எல்லோரும் வணங்குகிறார்கள்.

அலைமகள்: சுவாமி. நம் குழந்தைகள் உம்மை சரணடையும் போது அவர்கள் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப நீங்கள் அவர்களுக்கு அருள் செய்வது வழக்கம். அப்படி அவர்கள் செய்த பாவங்களைப் பார்த்து நீங்கள் அவர்களுக்கு அருள் செய்யாமல் முகத்தை திருப்பிக் கொள்ளும் போது, உங்கள் கருணையின் வடிவமான நான் உங்கள் அருகில் இருந்து 'அவர்கள் நம் குழந்தைகள் அல்லவா. அவர்கள் எத்தனைதான் குற்றங்கள் செய்திருந்தாலும் அவர்களை மன்னித்து ஏற்று கொள்வது தான் பெற்றோர்களாகிய நமக்கு பெருமை' என்று சிபாரிசு செய்வது வழக்கம். அப்போது அந்தப் பக்கத்தில் அமர்ந்திருக்கும் மண்மகளோ 'என்ன? குற்றம் செய்தனரா? இல்லையே. நம் குழந்தைகள் எப்படி குற்றம் செய்வார்கள்?' என்று சொல்லும் அளவுக்கு பொறுமை உடையவள். நான் 'குற்றம் செய்திருந்தாலும் மன்னித்து விடுங்கள்' என்று சொல்லும் போது அவள் 'குற்றமே செய்யவில்லை. பின் எப்படி மன்னிப்பது?' என்பாள். அதனால் தானே அவளை பொறுமையின் சிகரம் பூமாதேவி என்று சொல்லுகிறார்கள். அதனால் மண்மகள் மண்ணில் மானிட வடிவம் தாங்கி தாயன்புடன் மக்களுக்கு நல்வழி காட்டுவதே நல்லது.

நிலமகள்: ஆம் சுவாமி. நீங்கள் கட்டளையிட்டால் நான் பூமியில் அவதரிக்கிறேன்.

அச்யுதன்: நல்லது பூமா. நம் பக்தனாகிய விஷ்ணுசித்தனுக்கு திருமகளாகப் பிறந்து மக்களுக்கு நல்வழி காட்டி பின் திருவரங்கத்தில் என்னை அடைவாய்.


(2005ல் எழுதியதன் மறுபதிவு)

Thursday, May 30, 2013

திருப்பாவை அறிமுகம் - 1

சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மாமதுரையின் தெற்கே ஏறக்குறைய 75 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள அழகிய சிறு நகரம் ச்ரீவில்லிபுத்தூர். பாண்டியன் கொண்டாட, வேண்டிய வேதங்கள் ஓதி விரைந்து பொற்கிழி அறுத்த, பட்டர்பிரான் விஷ்ணுசித்தன் பெரியாழ்வாரும் அவர்தம் அருமைத் திருமகள் கோதை ஆண்டாளும் வாழ்ந்து இறைவனை வழுத்திய ஊர். சிறு வயதிலிருந்தே கண்ணனைப் பற்றி தன் தந்தையார் பாடிய பாடல்களையும் அவனின் பாலலீலைகளை அவர் மூலமாய்க் கேட்டும் அந்த கண்ணனையே தன் காதலனாய் வரித்துவிட்டாள் கோதை. அவள் பாடிய 30 பாடல்கள் தான் திருப்பாவை.

கோதை பாடிய மற்ற பாடல்களும் அமுதம் போன்றவையே. அவை 'நாச்சியார் திருமொழி' என்ற பெயரில் தொகுக்கப் பட்டுள்ளது. ஆனாலும் திருப்பாவை என்னும் இந்த 30 பாடல்கள் தான் மக்கள் நடுவில் பெரும்பெயர் பெற்று விளங்குகிறது. அதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் முக்கிய காரணம் இறைவனை அடையும் வழியை தன் தகப்பனைக்காட்டிலும் மிக எளிதாக இந்த சங்கத் தமிழ் மாலை முப்பதிலும் ஆண்டாள் சொல்லியிருப்பது தான்.

(2005ல் எழுதியதன் மறுபதிவு)

Tuesday, May 28, 2013

பெரியாழ்வார் என்று அழைப்பது ஏன்?

ஆசார்யன்: கேசவா. உனக்கு ஏதோ சந்தேகம்; கேட்கவேண்டும் என்று சொன்னாயே. என்ன சந்தேகம்?

சிஷ்யன்: அடியேன். நீங்கள் நேற்றுவரை பெரியாழ்வாரின் திவ்ய சரித்திரத்தைச் சொன்னீர்கள். அதில் தான் எனக்கு ஒரு சந்தேகம். ஆழ்வார்கள் பதின்மர் இருக்கும்போது விஷ்ணுசித்தரை மட்டும் பெரியாழ்வார் என்பது ஏன்?

ஆசார்யன்: நல்ல கேள்வி கேட்டாய் கேசவா. பெரியாழ்வார் என்று பட்டர்பிரானை அழைப்பதற்கு பல காரணங்கள் உண்டு. ஒவ்வொன்றாய் சொல்கிறேன். கவனத்துடன் கேள்.

இவர் விஷ்ணுவிடம் எப்போதும் தன் சித்தத்தை வைத்திருந்த படியாலும் விஷ்ணுவின் சித்தம் இவர் மேல் இருந்த படியாலும் இவருக்கு விஷ்ணுசித்தன் என்று பெயர்.

எல்லாருக்கும் எம்பெருமான் ரக்ஷகன். அவனே எல்லா உலகங்களையும் உயிர்களையும் காப்பவன். அப்படிப்பட்ட இறைவனுக்கே தீயவர் கண்பட்டு ஏதாவது தீங்கு நேர்ந்துவிடுமோ என்று பதறி அவனைக் காக்கும் பொறுப்பை தன்னில் ஏற்றுக்கொண்டதால் இவர் பெரியாழ்வார்.

மற்ற ஆழ்வார்கள் எல்லாம், தன்னை அவன் காக்கவேண்டும் என்று எண்ணியிருக்க, இவர் யசோதையின் நிலையடைந்து கண்ணனை தாலாட்டி சீராட்டிக் காக்கும் பொறுப்பை ஏற்றதால் இவர் பெரியாழ்வார்.

மற்ற ஆழ்வார்கள் 'தான்' என்னும் எண்ணத்தைக் கொஞ்சமாகவேனும் கொண்டிருந்தனர்.
'வையம் தகளியாய் வார்கடலே நெய்யாக...சூட்டினேன் சொல்மாலை', 'அன்பே தகளியாய் ஆர்வமே நெய்யாக...ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணர்க்கு ஞானத் தமிழ் புரிந்த நான்', 'திருக்கண்டேன், பொன்மேனி கண்டேன்...என்னாழி வண்ணன் பால் இன்று' என்றார்கள் முதலாழ்வார்களான பொய்கையாழ்வாரும் பூதத்தாழ்வாரும் பேயாழ்வாரும்.

அகலகில்லேன் இறையுமென்று அலர்மேல் மங்கை உறை மார்பா
நிகரில் புகழாய் உலகம் மூன்றும் உடையாய் என்னை ஆள்வானே
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே
புகலொன்றில்லா அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே


என்றார் நம்மாழ்வாரும். இப்படி இவர்கள் 'நான்' என்ற எண்ணம் கொஞ்சமாவது கொண்டிருந்தபடியால் இவர்களை சிறந்தவராகச் சொல்லமுடியவில்லைபோலும். விஷ்ணுசித்தரோ 'பல்லாண்டு பல்லாண்டு' என்று பாடியவர். அப்படி பல்லாண்டு பாடுவது மற்ற ஆழ்வார்களுக்கு எப்போதோ ஏற்படும் உணர்வு. ஆனால் இவருக்கோ அதுவே இயற்கை. அதனால் இவர் பெரியாழ்வார்.

மற்ற ஆழ்வார்கள் எம்பெருமான் திருமேனி அழகைக் கண்டு, தம்மில் பெண்மையை ஏறிட்டுக்கொண்டு, அதன் மூலம் தாங்கள் சுகம் பெற விழைந்தனர். அப்படியின்றி இவரோ அதே திருமேனி அழகைக் கண்டவுடன் அவனைப் பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்திப்பாட ஆரம்பித்துவிட்டார். அந்தப் பல்லாண்டு பாடுவதன் பலனைக் கூறும்போது கூட

பல்லாண்டென்று பவித்திரனைப் பரமேட்டியை சார்ங்கமென்னும்
வில்லாண்டான் தன்னை வில்லிபுத்தூர் விட்டுசித்தன் விரும்பிய சொல்
நல்லாண்டென்று நவின்றுரைப்பார் நமோ நாராயணாயவென்று
பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்திருந்தேத்துவர் பல்லாண்டே


என்று என்றும் பரமனைச் சூழ்ந்திருந்து பல்லாண்டு பாடி ஏத்துவதே பல்லாண்டு பாடுவதன் பயன்; மற்றொன்றில்லை என்று திடமாய்க் கூறியவர். தன் சுகத்தை எதிர்பார்த்தாரில்லை. அதனால் இவர் பெரியாழ்வார்.

அது மட்டும் இன்றி எம்பெருமானின் கட்டளைப்படி கோதை நாச்சியார் தான் சூடிக் கொடுத்த மாலையை பெருமாளுக்குச் சமர்ப்பித்து இறைவனருள் பெற்றவர். கோதை நாச்சியாரின் தந்தையாகவும் ஆசார்யனாகவும் இருக்கும் பேறு பெற்றவர். அதனால் அழகிய மணவாளனையே மருமகனாகப் பெறும் பேறு பெற்றவர். அழகிய மணவாளனோ பெரிய பெருமாள். அவனை மருமகனாகப் பெற்ற இவரோ பெரியாழ்வார்.

(2005ல் எழுதியதன் மறு பதிவு)

Tuesday, May 14, 2013

காரேய் கருணை இராமானுச!


காரேய் கருணை இராமானுச! இக்கடலிடத்தில்
ஆரே அறிபவர் நின்னருளின் தன்மை?! அல்லலுக்கு
நேரே உறைவிடம் நான்! வந்து நீ என்னை உய்த்த பின் உன்
சீரே உயிர்க்குயிராய் அடியேற்கு இன்று தித்திக்குமே!

கருமேகத்தை ஒத்த கருணையை உடைய இராமானுசரே! கடல் சூழ்ந்த இந்த உலகத்தில் யார் தான் உன் கருணையின், அருளின் ஆழத்தை அறிந்தவர்கள்?! யாரும் இல்லை!

அடியேன் எல்லா துன்பங்களுக்கும் இயற்கையான உறைவிடம்! நீர் வந்து என்னை ஏற்றுக்கொண்டு நல்வழியில் செலுத்திய பின்னர் உமது பெருமைகளே அடியேனின் உயிருக்கு உயிராக நின்று இப்போதெல்லாம் இனிக்கின்றதே!

(இன்று சித்திரை திருவாதிரை! இராமானுசரின் திருநட்சத்திரம்/பிறந்த நாள்)