இந்த மாலையில் இருக்கும் மலர்களுக்குத் தான் எத்தனை மகிழ்ச்சி. அழகனின் திருமார்பிலும் திருவடிகளிலும் திருமுடியிலும் துலங்கி அழகுக்கு அழகு சேர்க்கப் போகிறோம் என்ற மகிழ்ச்சி. சிற்றஞ்சிறு காலே இன்று எழுந்ததால் எல்லா மாலைகளையும் நேரத்தோடு தொடுத்து இறைவனின் திருப்பணிக்காகக் கொண்டு செல்ல முடிகிறது.
அடடா. இது என்ன இது? தலைமுடி போல் தெரிகிறதே. அபச்சாரம். அபச்சாரம். இறைவனுக்காகத் தொடுத்த மலர்மாலையில் தலைமுடியா? நீண்டு இருப்பதைப் பார்த்தால் ஒரு பெண்ணின் கூந்தல் முடியைப் போல இருக்கிறதே. மலர் மாலையை அடியேன் தொடுத்தேன். வீட்டில் அடியேனை விட்டால் கோதை மட்டும் தானே உண்டு. அவள் தோட்டத்தில் தானே இருந்தாள்?! அவள் இந்த மலர்மாலைகளைத் தொட்டிருக்க வாய்ப்பில்லையே. எப்படி இந்தத் தலைமுடி வந்தது?
அந்த ஆராய்ச்சியைப் பின்னர் செய்து கொள்ளலாம். நல்ல வேளையாக புதிய மலர்மாலைகளைத் தொடுத்துக் கொண்டு திருக்கோயிலுக்குச் செல்ல இன்னும் பொழுதிருக்கிறது. உடனே போய் மலர்களைப் பறித்து மலர்மாலைகளைத் தொடுக்க வேண்டும்.
***
மலர்மாலைகளை இன்னொரு முறை தொடுத்து வேக வேகமாக திருக்கோயிலுக்குச் சென்று மாலைகளை அர்ச்சகரிடம் கொடுக்கிறார் பெரியாழ்வார்.
***
'வாருங்கள் பட்டர்பிரானே. இப்போது தான் திருமஞ்சனம் செய்ய தீர்த்தம் எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறேன்.'
'ஆகா. ஆனந்தம். ஆனந்தம். மிக்க மகிழ்ச்சி பட்டரே. திருமஞ்சனம் செய்யுங்கள். இதோ எம்பெருமானுக்குச் சூட்ட திருத்துழாய் மாலைகளும் மலர் மாலைகளும். நீங்கள் நெருநல் சொன்னது போல் கொஞ்சம் திருத்துழாயைத் தனியாகவும் எடுத்துக் கொண்டு வந்திருக்கிறேன்.'
'ஆகட்டும் பட்டர் பிரானே. மிக்க மகிழ்ச்சி'.
***
வடபெருங்கோயிலுடையானுக்கு அர்ச்சகர் திருமுழுக்காட்டுகிறார். பட்டர்பிரானும் மற்ற அடியவர்களும் அந்தத் திருக்காட்சியைக் கண்குளிரச் சேவிக்கின்றனர். திருமஞ்சனத்திற்குப் பிறகு திரையை இட்டுவிட்டு அர்ச்சகர் நன்கு காய்ந்த மென்மையான வெண்பருத்தியாடையால் எம்பெருமான் திருமேனியைத் துவட்டிவிட்டு அழகிய மஞ்சள் பட்டாடையை எம்பெருமானின் திருவரையில் சாற்றுகிறார். கஸ்தூரி திலகத்தை திருப்புருவங்களின் நடுவில் இட்டுவிட்டு திருவாபரணங்களையும் சூட்டிவிட்டு ஒவ்வொன்றாக எல்லா மலர் மாலைகளை அணிவிக்கிறார்.
***
'என்ன இது. எம்பெருமான் ஏதோ மனக்குறையுடன் இருப்பது போல் தோன்றுகிறதே. அன்றொரு நாள் திருத்துழாய் மாலைகளைச் சூட்டிய பின்னரும் எம்பெருமானின் திருமுகவாட்டம் தீராமல் இருந்து பின்னர் மலர்மாலைகளைச் சூட்டிய பின் திருமுகவாட்டம் தீர்ந்ததே. இன்று திருத்துழாய் மாலைகளையும் சூட்டிவிட்டோம். எல்லா மலர்மாலைகளையும் சூட்டிவிட்டோம். ஆனாலும் திருமுகவாட்டம் மாறவில்லையே. பெரியாழ்வாரையும் கேட்போம்'.
திரையை விலக்கிய பின் பட்டர்பிரானின் திருமுகத்தைப் பார்க்கிறார் அர்ச்சகர். எம்பெருமானின் திருமுக தரிசனம் எனும் அமுதத்தைப் பருக காத்துக் கொண்டிருந்த பட்டர்பிரானின் திருமுகம் முதலில் மலர்ந்து பின்னர் கொஞ்சம் சுணங்குகிறது. விட்டுசித்தரின் திருப்புருவங்கள் கொஞ்சம் நெரிகின்றன.
'பட்டரே. என்ன இது? எம்பெருமானுக்கு ஏதாவது மனக்குறையா? திருமுகமண்டலம் வாட்டமுற்றதைப் போல் தோன்றுகிறதே'.
'விட்டுசித்தரே. அடியேனுக்கும் அப்படியே தோன்றியது. உங்களைக் கேட்கலாம் என்று நினைத்தேன். தாங்களும் அதனையே சொல்கிறீர்கள். எம்பெருமானே. உமக்கு என்ன மனக்குறை? அடியோங்கள் அறியத் தரலாகாதோ?'
'மாலே. மணிவண்ணா. இன்று முதலில் தொடுத்த மலர்மாலைகளில் தலைமுடி இருந்ததைக் கண்டு புதிய மலர்மாலைகளைத் தொடுத்து வந்தேனே. இன்னும் ஏதாவது அபச்சாரம் நேர்ந்துவிட்டதா? அடியோங்கள் அறியாமல் செய்த எல்லாப் பிழைகளையும் பொறுத்தருள வேண்டும்.'
இப்படி பலவிதமாக பெரியாழ்வாரும் பட்டரும் அங்கு கூடியிருந்த அடியார்கள் எல்லாம் எம்பெருமானின் திருமுக வாட்டம் நீங்க வேண்டிக்கொண்டிருந்தனர். எம்பெருமானின் திருமுக வாட்டம் நீங்கவில்லை. ஏனென்றே புரியாமல் மன வருத்தத்துடன் பட்டர்பிரானும் மற்றவர்களும் தங்கள் இல்லம் திரும்பினர்.
***
அருஞ்சொற்பொருள்:
சிற்றஞ்சிறு காலே - அதிகாலையிலே
திருமஞ்சனம், திருமுழுக்காட்டு - சென்ற பதிவைப் பாருங்கள்.
நெருநல் - நேற்று
அடியோங்கள் - நாங்கள்
***
***
(2007ல் எழுதியதன் மறுபதிவு)
2 comments:
Comments from the original post:
12 comments:
வெற்றி said...
குமரன்,
நல்ல பதிவு. பல நல்ல தமிழ்ச் சொற்களை இப் பதிவிலிருந்து அறிந்து கொண்டேன். மிக்க நன்றி.
January 27, 2007 10:01 PM
குமரன் (Kumaran) said...
நன்றி வெற்றி. இப்போது தான் உங்கள் பதிவில் ஈழத்துச் சொற்களைப் படித்துவிட்டுப் பின்னூட்டம் இட்டுவிட்டு வந்தேன். இங்கே வந்தால் உங்கள் பின்னூட்டம். :-)
January 27, 2007 10:18 PM
ENNAR said...
பெரியாழ்வரை தாங்கள் பார்த்ததுண்டா நான் கண்டதுண்டு அவர்தான் நடிகர் திலகம் என்னமாய் நடித்துள்ளார் அந்த படத்தில் பாருங்கள்
January 27, 2007 10:55 PM
Sivabalan said...
குமரன் சார்,
பதிவுக்கு நன்றி!
January 27, 2007 11:00 PM
குமரன் (Kumaran) said...
உண்மை தான் என்னார் ஐயா. நடிகர் திலகம் பெரியாழ்வாராக மட்டுமின்றி மற்ற ஆழ்வார்களாகவும் மிக நன்றாக திருமால் பெருமை திரைப்படத்தில் நடித்திருப்பார். அதே போல் திருவருட்செல்வரில் அவர் அந்த அந்த நாயன்மார்களாகவே மாறியிருப்பார்.
January 28, 2007 3:15 PM
குமரன் (Kumaran) said...
நன்றி சிவபாலன்.
January 28, 2007 3:18 PM
ennataa vambu said...
அன்பு குமரா,
//சிற்றஞ்சிறு காலே - அதிகாலையிலே//
இதை "உதயத்தில்" என பலுக்கிப் பழகலாமே! கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த அருமையான பழஞ்சொல் வட்டார வழக்கில் உள்ளது.
February 04, 2007 8:20 PM
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//திரும்பி வந்ததே திருமுக வாட்டம்!//
அடியேனும் இதோ
திரும்பி வந்தேன்!
பெருமாளின் வாட்டம் காண
ஆழ்வாரின் தோட்டம் காண
கோதையின் நாட்டம் காண!
//அந்த ஆராய்ச்சியைப் பின்னர் செய்து கொள்ளலாம். நல்ல வேளையாக புதிய மலர்மாலைகளைத் தொடுத்துக் கொண்டு திருக்கோயிலுக்குச் செல்ல இன்னும் பொழுதிருக்கிறது//
நல்லடியார்களின் இயல்பு இது குமரன்! பிரச்னை நேர்ந்தாலும் முதலிலேயே அதைப் பிடித்துக் கொண்டு தொங்காமல், அனைத்தும் ஆவன செய்து விட்டுப் பின்னரே, ஆராய்ச்சிக்கு எல்லாம் வருவார்கள்! பெரியாழ்வார் குணநலனை அழகாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளீர்கள்!
படத்தில் உள்ள ஆழ்வார் திருவுருவச்சிலை, வில்லிபுத்தூரா? இளமையாகத் தெரிகிறாரே அதனால் கேட்டேன்! :-)
February 09, 2007 2:25 PM
குமரன் (Kumaran) said...
ஞானவெட்டியான் ஐயா. கட்டாயம் உதயத்தில் என்ற சொல்லையும் பலுக்கிப் பழகலாம். நன்றி.
February 11, 2007 3:48 PM
குமரன் (Kumaran) said...
ஆமாம் இரவிசங்கர். புதுவைக்கோனின் திருவுருவச்சிலை புதுவை நகரில் இருப்பது தான்.
February 11, 2007 3:49 PM
Radha said...
//நெருநல் - நேற்று //
"நேற்றைக்கு திருநீர்மலையில் பார்த்தோம். இன்று கண்ணமங்கை சென்று காண்போம்" என்பதாக வரும் ஒரு திருமங்கை மன்னன் பாசுரம் நினைவிற்கு வருகிறது குமரன்.
ஒரு நல் சுற்றம், எனக்கு உயிர், ஒண்பொருள்
வரும்நல் தொல்கதி ஆகிய மைந்தனை
நெருநல் கண்டது நீர்மலை; இன்று போய்
கருநெல் சூழ் கண்ணமங்கையுள் காண்டுமே !
(பெரிய திருமொழி - 10.1)
July 11, 2009 8:03 AM
குமரன் (Kumaran) said...
பாசுர அறிமுகத்திற்கு நன்றி இராதா. நல்லதொரு எளிய பாசுரம்.
August 14, 2009 3:05 PM
Post a Comment