Saturday, July 06, 2013

சூடிக் கொடுப்பாயா சுடர்கொடி?


'இரு கோமளவல்லி. என்ன இவ்வளவு விரைவில் கிளம்பிவிட்டாய்? உன் நாயகர் வீட்டிற்கு வர இன்னும் கொஞ்சம் நாழிகை செல்லுமே. இரு. அதோ அரங்கநாயகியும் வருகிறாள். அவளிடமும் கொஞ்சம் பேசலாம்'.

'கமலவல்லி. கோமளவல்லி. உங்களைத் தேடித் தான் வந்தேன். சேதி தெரியுமா?'

'அரங்கநாயகி. கோதை செய்த குறும்பைத் தானே சொல்கிறாய்? அது தான் நன்கு தெரிந்ததாயிற்றே'

'கமலவல்லி. உங்களுக்கு நேற்றைய நிலவரம் தான் தெரியும் போலிருக்கிறது. இன்றைய நிலவரம் தெரியாதா?'

'இன்றைய நிலவரமா? என்ன சொல்கிறாய் அரங்கநாயகி?'

'நேற்று இரவு வடபெருங்கோவிலுடைய தேவர் திருத்தலத்தார் கனவிலும் விட்டுசித்தர் கனவிலும் வந்து கோதை சூடிக் கொடுத்த மாலைகள் தான் தனக்கு விருப்பமானது என்று சொல்லியிருக்கிறார்'.

'என்ன கனவில் பெருமாள் வந்தாரா? கொஞ்சம் விவரமாகச் சொல் அரங்கநாயகி.'

'கோமளவல்லி. இன்று உதயத்தில் திருக்கோவிலை நோக்கி விட்டுச்சித்தர் மிகுந்த பரவசத்துடன் ஓடோடிப் போவதைக் கண்டு என்னவர் பின்னாலேயே சென்றார். பெரியாழ்வார் நேராக அர்ச்சகர், திருத்தலத்தார் எல்லோரும் கூடியிருக்கும் இடத்திற்குச் சென்றார். அங்கேயோ ஏற்கனவே அவர்கள் மிகுந்த பரவசத்துடன் பேசிக் கொண்டிருந்தனராம். பெரியாழ்வாரைப் பார்த்தவுடன் அவர்களும் ஓடி வந்து எதிர் கொண்டு அவர்கள் கண்ட கனவினைப் பற்றிச் சொன்னார்களாம்.

திருத்தலத்தார் அனைவரின் கனவிலும் அர்ச்சகர் கனவிலும் பெரியாழ்வார் கனவிலும் ஒரே நேரத்தில் பெருமாள் வந்து கோதையின் கூந்தல் மணம் இல்லாத மாலைகளைச் சூடியதால் தான் கடந்த இரண்டு நாட்களாக தன் முகம் வாட்டம் கொண்டிருந்தது என்றும் இனிமேல் நாள் தோறும் கோதை சூடிக் கொடுக்கும் மலர்மாலைகளையே தனக்குச் சூட்ட வேண்டும் என்றும் சொன்னாராம். யாராவது ஒருவர் கனவில் மட்டும் பெருமாள் வந்து இப்படி சொன்னார் என்றால் அதனை மற்றவர் ஐயுற்றிருப்பார்கள். ஆனால் ஒரே இரவில் அனைவரின் கனவிலும் வந்து ஒரே விதமாகச் சொல்லியிருப்பதால் யாரும் இதனை ஐயுறவில்லை'

'உண்மை தான் அரங்கநாயகி. ஒரே இரவில் எல்லார் கனவிலும் வந்து பெருமாள் சொல்லியிருக்கிறார் என்றால் அதனை நம்பாமல் இருக்க முடியுமா? என்ன கமலவல்லி. இப்போதாவது கோதையின் மேல் நீ கொண்ட சினத்தை மாற்றிக் கொள்கிறாயா?'

'கோதையின் மேல் எனக்கென்ன சினம் கோமளவல்லி? நான் அறிந்த வரை சொன்னேன். அவள் குழல் மணத்தை கோவிந்தனே விரும்புகிறான் என்றால் நாம் என்ன சொல்லிவிட முடியும்? அரங்கநாயகி. என்ன செய்வதாக திருத்தலத்தார் முடிவு செய்திருக்கிறார்கள்?'

'பெருமாளே சொன்ன பிறகு திருத்தலத்தார் வேறு என்ன முடிவு செய்வார்கள் கமலவல்லி? பெரியாழ்வார் இன்று முதல் கோதை சூடித்தந்த மாலைகளையே பெருமாளுக்குச் சமர்ப்பிக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். பட்டர்பிரானும் மிக்க மகிழ்ச்சியுடன் மாலைகளைத் தொடுக்க வீட்டிற்குச் சென்றிருக்கிறார். இன்னும் சிறிது நேரத்தில் மாலைகளை எடுத்துக் கொண்டு திருக்கோவிலுக்கு விரைந்துவிடுவார்'.

'அப்படியா? அப்படியென்றால் கோதை மலர்மாலைகளைச் சூடித் தரும் நேரம் ஆகிவிட்டதே. விரைவில் கோதையின் இல்லத்திற்குச் சென்று அந்த அரிதான காட்சியைக் காணலாம். வாருங்கள்'.

***

அருஞ்சொற்பொருள்:

திருத்தலத்தார் - கோவில் அதிகாரிகள்; ஸ்தலத்தார் என்றும் சொல்வதுண்டு.

4 comments:

குமரன் (Kumaran) said...

comments from original post:

25 comments:

சிவபாலன் said...
குமரன் சார்,

பதிவுக்கு நன்றி
February 24, 2007 9:36 PM
குமரன் (Kumaran) said...
நன்றி சிவபாலன்
February 24, 2007 10:24 PM
ஞானவெட்டியான் said...
இசைத் தமிழை நாடகத் தமிழாகத் தரும் முயற்சி வாழ்க!
February 24, 2007 10:29 PM
அபி அப்பா said...
குமரன்!!! மிக அருமையான ஆன்மீக பதிவு.மனதில் பதியும் பதிவு. வாழ்த்துக்கள்.
February 24, 2007 10:30 PM
MeenaArun said...
அந்த காலத்திற்க்கெ சென்றார் போல் உள்ளது.மிகவும் அருமை

மீனாஅருண்
February 24, 2007 10:36 PM
வல்லிசிம்ஹன் said...
கோதையைப் பார்க்கக் கூப்பிட்டு விட்ட்டீர்கள் ,இங்கே இருக்கும் என் ஆண்டாளுக்கு பாசி மாலையாவது போடுகிறேன்,;-)
தமிழ் பாடிய பொக்கிஷம் அவள்.
மிக மிக நன்றி குமரன்.சூடிக் கொடுத்த சுடர் நம்மை என்னாளும் ஆளட்டும்.
February 25, 2007 6:14 AM

குமரன் (Kumaran) said...

குமரன் (Kumaran) said...
தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி ஞானவெட்டியான் ஐயா.
February 25, 2007 8:12 AM
குமரன் (Kumaran) said...
நன்றி அபி அப்பா. நீங்கள் வலையுலகிற்குப் புதியவரா?
February 25, 2007 8:14 AM
குமரன் (Kumaran) said...
நன்றி மீனா அருண். தமிழ்மணத்திற்குத் திரும்பி வந்ததன் பயன் தெரிகிறது. நீங்கள் இந்த இடுகையை விரும்பிப் படித்ததற்கு நன்றி.
February 25, 2007 8:16 AM
குமரன் (Kumaran) said...
வல்லியம்மா. இங்கே நான் மானசீகமாகத் தான் மாலைகளை நம் ஆண்டாளுக்கு அணிவிக்க வேண்டும். சூடிக்கொடுத்த சுடர்கொடியின் அருள் நம்மைச் சூழட்டும்.
February 25, 2007 8:18 AM
MeenaArun said...
ஆம் குமரன் ,நீங்கள் தமிழ்மணத்த்ற்க்கு வாராதிருந்தால் இதை நான் கண்டிப்பாக் இழந்திருப்பேன்.தொடரடும் உங்கள் பணி,இது வரை வந்த பதிவுகளை ஒரே மூச்சில் படித்துவிட்டேன்.மிக்க நன்றி

மீனாஅருண்
February 25, 2007 8:29 AM
குமரன் (Kumaran) said...
ஒரே மூச்சில் எல்லா இடுகைகளையும் படித்து முடித்ததற்கு நன்றி மீனா அருண்.
February 25, 2007 8:35 AM
Mathuraiampathi said...
மார்கழி தைலக்காப்பு உற்ச்சவத்தின் போது ஆண்டாளூக்கு தைலம் சாற்றி, மலர் மாலைகள் அணிவித்து, பாசுரங்கள் பாடி, அவளுக்கு கண்ணாடி சேவை செய்வார்கள்...தங்களது இந்த பதிவினை படித்தவுடன் அது மனதில் தோன்றியது.....நன்றி குமரன்.....
February 26, 2007 12:44 AM
அபி அப்பா said...
ஆமாம் குமரன்!! பிரஷ்.. ரொம்ப புதுசு!!
February 26, 2007 6:22 AM
குமரன் (Kumaran) said...
கோதை சூடிக் கொடுப்பதைப் பார்க்க நீங்களும் வல்லியம்மாவைப் போல் கிளம்பி விட்டீர்களா மௌலி ஐயா?! :-) உங்களால் (உங்கள் பின்னூட்டத்தைப் படித்ததால்) நானும் அந்தக் காட்சியைக் கண்டேன். நன்றி.

***

அபி அப்பா, நீங்க புதுசு தானா? என்னமோ ஐயமாவே இருக்கு. உங்களை ஏற்கனவே பாத்த மாதிரி இருக்கு. :-)
February 26, 2007 12:44 PM
G.Ragavan said...
multicasting, broadcasting எல்லாம் இறைவன் திருச்செயலில் அன்றே கண்டது உலகம். அதான் அனைவரும் அறிய அன்பைச் சொல்லியிருக்கிறான். கோதையின் பாதையை நாமும் கொண்டால் வாதையை வெல்லலாம்.
February 27, 2007 10:27 AM
enRenRum-anbudan.BALA said...
குமரன்,
வாழ்க ! வளர்க !
February 27, 2007 11:46 AM
யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
குமரா!
இக் கதையைக் கேட்டுள்ளேன். எனினும் இவ்வளவு விபரமாக இப்பதிவில் தான் படித்தேன்.
நன்றி!
February 27, 2007 3:41 PM
குமரன் (Kumaran) said...
நல்ல உவமை சொன்னீர்கள் இராகவன். :-) நன்றி.

*

வாழ்த்துகளுக்கு நன்றி பாலா சீனியர்

*

ஆமாம் யோகன் ஐயா. இந்தக் கதை நிறைய பேருக்குத் தெரிந்திருக்கும். ஒரே இடுகையில் சொல்லி முடித்து விடலாம். ஆனால் நன்றாகத் தெரிந்த கதையைக் கற்பனையில் கண்டு அதன் படி எழுதிப் பார்ப்போம் என்ற முயற்சியில் இறங்கினே. இதுவரை 28 இடுகைகள் வந்திருக்கின்றன. இன்னும் எத்தனை இடுகைகள் இந்தக் கதை எடுத்துக் கொள்ளும் என்று தெரியாது. கதையின் நடுவில் திருப்பாவை விளக்கங்களும் வரும்.
February 27, 2007 4:32 PM

வெற்றிவேல் said...

அறியாத கதை... அழகு. ஏன் கடந்த சில தினங்களாக பழைய பதிவுகளையே போடுகிறீர்கள் என்று நான் அறிந்து கொள்ளலாமா?

குமரன் (Kumaran) said...

வெற்றிவேல். கோதைத்தமிழ் என்றொரு பதிவில் இந்த இடுகைகளை எல்லாம் எழுதியிருந்தேன். அவற்றை அங்கிருந்து இந்தப் பதிவிற்கு மாற்றிவிட்டு அந்தப் பதிவை மூடிவிடலாம் என்ற எண்ணம். அதனால் அங்கிருந்து பழைய இடுகைகளை எடுத்து இங்கே இட்டுக் கொண்டிருக்கிறேன்.