Friday, February 29, 2008

வீக் எண்ட் பதிவு - 2

பார்த்தும் கேட்டும் மகிழுங்கள்......

Thursday, February 28, 2008

உடுக்கை இழந்தவன் கை - 6 (பாரி வள்ளலின் கதை)

எப்படிப்பட்ட நண்பர்களாக இருந்தாலும் அவர்களுக்குள் கருத்து வேற்றுமை ஏற்பட்டே தீர வேண்டும் என்பது நியதி போலும். பாரி தன் குடியைப் பற்றி கொண்டிருக்கும் பெருமித உணர்வு ஏற்கனவே கபிலருக்குத் தெரியும் என்றாலும் அதைப் பற்றிப் பேசி விவாதிக்க வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்படும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. ஆனால் உயிரினும் மேலாகப் பழகும் நண்பர்கள் தங்களிடையே இருக்கும் கருத்து வேற்றுமைகளைக் கடைசியில் மறந்துவிட்டு ஒருவருக்கொருவர் ஆதரவாகத் தான் தொடர்கிறார்கள்.

மாளிகைத் தோட்டத்தில் பாரியும் கபிலரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். மதுரைக்குச் சென்றிருந்த இரு வார காலத்தில் பறம்பில் நடந்த நிகழ்வுகளைப் பற்றி பாரி சொல்லிக் கொண்டிருந்தான். அப்போது தான் மாறி மாறி மூவேந்தர்களிடம் இருந்தும் பாரி மகளிரைப் பெண் கேட்டு வந்த விவரத்தைச் சொன்னார். மதுரையில் இருக்கும் போது பாண்டியன் இதனைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே என்று வியந்தார் கபிலர். மொழி ஆய்வில் இருக்கும் போது அரசியலும் அந்தரங்கமும் பேசவேண்டாம் என்று விட்டுவிட்டானோ என்னவோ என்று எண்ணிக் கொண்டார்.

"இது என்ன வேடிக்கையாக இருக்கிறது பாரி?! முடியுடை மூவேந்தர்களுள் ஒருவர் உன் மக்களைப் பெண் கேட்டால் அவருக்கு மணம் செய்து கொடுக்கலாம். இப்படி மூவரும் கேட்டால் யாருக்குப் பெண் கொடுப்பது? இது என்ன சங்கடமான நிலைமை?"

"கபிலரே. மூவரும் பெண் கேட்டு வந்ததில் எனக்கு எந்த கவலையும் இல்லை. நான் இந்த மூவரில் யாருக்குமே பெண் கொடுக்கப் போவதில்லை"

"ஏன் பாரி? ஒருவருக்கோ இருவருக்கோ உன் மக்களை மணம் முடித்தால் மற்றவர் பகை ஏற்படும் என்பதாலா?"

"அவர்கள் பகையைப் பற்றி எனக்குக் கவலையில்லை கபிலரே. அவர்கள் யாருமே என் பெண்களைத் திருமணம் செய்து கொள்ளும் தகுதி இல்லாதவர்கள். அதனால் தான் அவர்களுக்குப் பெண் தர மாட்டேன் என்கிறேன்"

"என்ன சொல்கிறாய் பாரி? உன்னைப் போன்ற குறுநில மன்னவன் பெண்களை வழி வழியாக பெரும் நிலப்பரப்பை ஆண்டுவரும் இந்த மூவரும் பெண் கேட்டு மணப்பது நடைமுறையில் உள்ள ஒன்று தானே? இவர்களுக்கு ஏன் உன் மக்களை மணக்கும் தகுதி இல்லை என்று நினைக்கிறாய்? செல்வத்தில் குறைந்தவர்களா? வீரத்தில் குறைந்தவர்களா? புலவர்களையும் பாணர்களையும் புரப்பதில் குறைந்தவர்களா? எவ்விதத்திலும் எனக்கு அவர்களிடம் குறை தோன்றவில்லையே?!"

"கபிலரே. நான் சிற்றரசன் தான். அவர்கள் வேந்தர்கள் தான். பெரும் நிலப்பரப்பை பல்லாண்டு காலங்களாய் ஆண்டு வருபவர்கள் தான். அவர்களின் செல்வத்திலும் வீரத்திலும் பாவலர்களைப் புரப்பத்திலும் எந்த குறையும் இல்லை. ஆனால் இவற்றை எல்லாம் தாண்டி இன்னொரு குறை இருக்கிறது. வேளிர் குடியில் பிறந்த என் மக்களை மணக்கும் தகுதி இம்மூவருக்கும் கிடையாது"

இதனைக் கேட்டுப் பெரும் அதிர்ச்சி அடைந்தார் கபிலர்.

"பாரி. மூவரில் மூத்த குடியான பாண்டியனுக்குமா உன் மக்களை மணக்கும் தகுதி இல்லை என்கிறாய்?"

"ஆம் ஐயனே. மூவரில் முதல்வன் ஆனாலும் பாண்டியனின் குடியும் வேளிர் குடிக்குப் பிற்பட்டதே. தமிழக வரலாற்றை நான் உங்களுக்குச் சொல்ல வேண்டிய தேவை இருக்காது என்று எண்ணுகிறேன்"

"பாரி. தமிழக வரலாறு எனக்கும் தெரியும். வடவேங்கடம் தென்குமரி இடைப்பட்டத் தமிழ் கூறும் நல்லுலகில் முடிவேந்தர் பரம்பரை மூன்று இருக்கின்றன. வஞ்சிக்காவலன் சேரனும் புகார்க்காவலன் சோழனும் கூடல்காவலன் பாண்டியனும் என்று இந்த மூவரும் பல்லாண்டு காலமாக ஆண்டு வருகின்றனர். அவர்களுக்கு அடங்கியும் அடங்காமலும் எண்ணற்ற சிற்றரசர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்கு அடங்காமல் தன்னாட்சி செய்துவருபவர்களில் நீயும் ஒருவன். உன் வேளிர் குடி இந்தப் பறம்பு நாட்டை மூவேந்தர்களுக்கும் முந்தைய காலம் முதல் ஆண்டு வருகிறது. அப்படி மூத்த குடியாய் இருப்பது ஒரு தனிப்பெருமை தான். ஆனால் அந்தப் பெருமை மூவேந்தர்களுக்குப் பெண் கொடுக்க மறுக்கும் அளவிற்குச் செல்ல வேண்டுமா? வேண்டாம் பாரி வேண்டாம். இது விபரீதம் விளைவிக்கும்"

"கபிலரே. எந்த விதமான தொல்லைகள் நேரிட்டாலும் நான் இந்த முடிவில் உறுதியாக இருக்கிறேன்."

"பாரி. இது சரியில்லை. மூவேந்தர்கள் ஆளத் தொடங்குவதற்கு முன்னர் தமிழகம் முழுவதும் வேளிர்கள் தானே ஆண்டார்கள். வேளிர் குடியில் பிறந்தவன் நீ மட்டும் இல்லையே? வேறு அரசர்களும் இருக்கிறார்களே. அவர்கள் எல்லாம் மூவேந்தர்களுக்கும் பெண் கொடுத்துக் கொண்டு தானே இருக்கிறார்கள். நீ மட்டும் ஏன் மறுக்கிறாய்?"

"கபிலரே. வேளிர் குடியில் பிறந்த மற்ற அரசர்கள் வேந்தர்களுக்குப் பெண் கொடுக்கிறார்கள் என்பதை அறிவேன். அது ஏன் என்பது உங்களுக்கும் தெரியும். வேளிர் குடிப்பெருமையை அறிந்த வேந்தர்கள் தங்கள் குடிகளுக்கும் அந்தப் பெருமை வேண்டும் என்பதற்காகத் தானே வேளிர் பெண்களை விரும்பிக் கேட்டு மணக்கிறார்கள். அவர்களின் படைவலுவைக் கண்டு வேளிர்களும் பெண் கொடுக்கிறார்கள். அப்படிப் பெண் கொடுக்கும் வேளிர்கள் யாருமே வேந்தர் குடிப் பெண்களை எடுப்பதில்லை என்பதையும் கவனித்திருப்பீர்கள். அது ஏன்? வேந்தர்களின் குடி வேளிர்களின் குடியை விடக் குறைந்தது என்பதற்காகத் தானே? நான் மட்டும் இல்லை கபிலரே. என்னைப் போல் வேந்தர்களின் படைவலிமைக்கு அஞ்சாமல் பெண் தர மறுக்கும் வேளிர்களும் இருக்கிறார்கள். அவர்களின் கருத்தினையே நானும் கொண்டிருக்கிறேன். வேளிர்கள் வேந்தர்களிடமிருந்து பெண் எடுப்பதும் கூடாது; கொடுப்பதும் கூடாது"

"பாரி. இப்படி நீ மறுத்தால் மூவேந்தர்களின் சினத்திற்கும் ஆளாக வேண்டியிருக்கும். உன் குடிப்பெருமை உன் நாட்டையும் உன்னையும் உன் சுற்றத்தையும் அழிக்கும். அது வேண்டாம் பாரி. மூவரில் ஒருவருக்கோ இருவருக்கோ உன் மக்களை மணம் முடித்து வை"

"கபிலரே. நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை. அவை அனைத்தையும் விட குடிப்பெருமை காக்க வேண்டும் என்று தான் ஒவ்வொரு வேளிர் குடியில் பிறந்தவனும் நினைப்பான்."

"பாரி. வள்ளல்கள் என்றாலே வேளிர்கள் என்று சொல்லும் அளவிற்கு வேந்தர்களை விட வேளிர்கள் வள்ளல்களாக இருக்கிறீர்கள். அது தான் வேளிர்குடிக்குத் தனிப்பெருமை என்று எண்ணினேன். நீயோ மூத்தகுடி, தொன்று தொட்டு ஆண்ட குடி என்று சொல்லி வேந்தர்களுக்குப் பெண் தர மறுக்கிறாய். வேதனையாக இருக்கிறது"

"ஐயனே. உங்களைப் போன்ற நல்ல நண்பர்களை வேதனைப்படுத்த நேர்வதற்கு வருந்துகிறேன். வேந்தர்களைப் பற்றிய கவலை உங்களுக்கு இருந்தால் தாங்கள் பறம்பு நாட்டிலிருந்து விலகி பாதுகாப்பான வேறெங்காவது சென்று விடுங்கள்"

"என்ன வார்த்தை சொன்னாய் பாரி? நமக்குள் இருக்கும் நட்பு அவ்வளவு தாழ்வானதா? தமிழறிஞன் என்பதை விட உன் நண்பன் என்பதில் தானே எனக்குத் தனிச்சிறப்பு கிடைக்கிறது. அப்படிப்பட்ட நட்பைத் துறந்துவிட்டு உயிர் பிழைக்க ஓடிப் போவேன் என்றா எண்ணினாய்? நீ இவ்வளவு உறுதியாக இருந்தால் அந்த உறுதியை நானும் ஏற்றுக் கொள்கிறேன். உன் எண்ணப்படியே நடந்து கொள்வோம்"

"தாங்கள் என் அருகிலேயே இருக்க நினைப்பதை எண்ணி மகிழ்கிறேன் கபிலரே. பெண் கேட்டு வந்தவர்களிடம் மறுப்பு தெரிவித்து அனுப்பியிருக்கிறேன். இந்தத் திங்களே மூவரும் படையெடுத்து வர ஆயத்தம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று ஒற்றர்கள் மூலம் அறிந்தேன்."

"அப்படியா? அவையில் பரிசில் வழங்கும் உன் கைவண்மையைக் கண்டிருக்கிறேன். களத்தில் உன் கைவன்மையைக் காணும் நாளும் நெருங்கியதோ"

வருத்தத்துடன் கபிலர் சொன்னதைக் கேட்டு பாரி புன்னகை புரியும் போது அங்கவையும் சங்கவையும் தோட்டத்தில் நுழைந்தனர்.

Friday, February 22, 2008

வீக் எண்ட் பதிவு - 1

பார்த்தும் கேட்டும் மகிழுங்கள்......


Wednesday, February 20, 2008

உடுக்கை இழந்தவன் கை - 5 (பாரி வள்ளலின் கதை)

நிலா ஒளி முற்றத்தில் நன்கு வீசியது. உயரம் மிகக் குறைந்த மரத்தாலான இருக்கைகளில் பாரியும் கபிலரும் அமர்ந்திருக்க பருத்தியாலும் பட்டினாலும் செய்யப்பட்ட இருக்கைகளில் பாரி மகளிர் அமர்ந்திருந்தனர். பேச்சும் சிரிப்புமாக ஊனுணவையும் தேறலையும் அருந்திக் கொண்டிருந்தார்கள்.

"பெரியப்பா. இந்த முறை மதுரைக்குச் சென்ற போது ஏதேனும் புதுமையைக் கண்டீர்களா?"

"மதுரையில் எதுவும் புதுமையாகக் காணவில்லை அங்கவை. எப்போதும் போல் தமிழ் அங்கே கோலோச்சிக் கொண்டிருக்கிறது. இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் மதுரையில் தமிழின் ஆட்சி குறையவே குறையாது என்று நினைக்கிறேன். அங்கிருக்கும் தமிழின் ஆளுமை வருவோரை எல்லாம் கவர்ந்திழுத்துத் தனக்குள் புதைத்துக் கொண்டுவிடும். யவனரும் வடநாட்டாரும் தமிழை மிக அருமையாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களே சொல்லாத வரை அவர் தமிழரில்லை என்று தெரிந்து கொள்வது இயலாததொன்று. ஆனால் இந்த முறை புலவர்கள் எல்லாம் தமிழைப் பற்றிப் பேசியதை விட மற்றொன்றைப் பற்றியே அதிகமாகப் பேசினார்கள்"

"என்ன சொல்கிறீர்கள்? வியப்பாக இருக்கிறதே. தமிழ்ச்சங்கத்தில் புலவர்கள் எல்லாம் சங்கப்பலகையில் ஏறி இலக்கியத்தை ஆராய்வது தானே வழக்கம். நீங்கள் சொல்வது புதுமையாக இருக்கிறது கபிலரே"

"பாரி. வழக்கம் போல் புலவர்கள் இலக்கிய ஆராய்ச்சியில் தான் ஈடுபட்டார்கள். என்னையும் அதற்காகத் தான் அழைத்தார்கள். ஆய்வுக்காக வந்திருந்த செய்யுள்களில் சில குறிஞ்சித்திணையிலும் இருந்தன. அதனால் என்னைச் சிறப்பாக அழைத்திருந்தார்கள் என்று தான் எண்ணினேன்"

"ஆமாம். அப்படித் தான் நானும் எண்ணினேன் கபிலரே. குறிஞ்சித் திணையில் நூற்றுக்கணக்கான பாடல்களைப் புனைந்துள்ள உங்களைத் தானே குறிஞ்சித் திணையில் அமைந்த பாடல்களை ஆய்வதற்கு அழைக்க வேண்டும்?!"

"நீயும் நானும் எண்ணியது தவறு பாரி. குறிஞ்சிப்பாட்டெழுதுபவன் என்ற முறையில் மட்டும் எனக்கு சிறப்பு தரப்படவில்லை அங்கே. இன்னொரு முதன்மைக் காரணமும் இருந்தது. அதனைச் சொன்னால் வியந்து போவாய்"

"நீங்கள் சொல்லும் காரணம் எனக்குத் தெரியும் பெரியப்பா"

"நினைத்தேன் குழந்தாய். சங்கவைக்கு மட்டும் அந்தக் காரணம் புரிந்திருக்கும் என்று நினைத்தேன். இளையவர்கள் அதிகம் பேசாமல் இருந்தாலும் சுற்றிலும் நடப்பதை நன்கு கூர்ந்து கவனிக்கின்றார்கள். மூத்தவர்கள் பேசிப் பேசிக் குழம்பிப் போகும் போது இந்த இளையவர்கள் பேசும் வாய்ப்பு அவ்வளவாக கிட்டாவிட்டாலும் தங்கள் கவனிப்பால் நடப்பதை நன்கு புரிந்து கொள்கிறார்கள்"

அதைக் கேட்டவுடன் அங்கவையின் முகத்தில் சிறு சுணக்கம் ஏற்பட்டது.

'எப்போதுமே இந்தப் பெரியப்பா இப்படித் தான். தங்கையைத் தலையில் வைத்துக் கொண்டாடுவார். அவர் சொல்வதற்கு ஏற்றாற்போல் இன்றைக்கும் நான் தான் பேச்சை முதலில் தொடங்கினேன்'

அக்காவின் எண்ணப்போக்கை அறிந்து கொண்டாள் தங்கை.

"அக்கா. பெரியப்பா இப்படித் தான் எப்போதும் என்னைக் கேலி செய்வார். அவர் அந்தக் காரணத்தைச் சொல்லும் முன்பாகவே நான் துடுக்குத்தனமாக எனக்குத் தெரியும் என்று சொல்லிவிட்டேன் அல்லவா? அது தான் என்னைக் கேலி செய்கிறார்"

"ஹாஹாஹா. சங்கவை. அப்படி இல்லையம்மா. உனக்கு கட்டாயம் அந்தக் காரணம் தெரிந்திருக்கும் என்று தான் நினைக்கிறேன். என்ன காரணம் என்று நீ நினைக்கிறாய்? சொல்"

"பெரிய தமிழ்ப் புலவராக நீங்கள் இருந்தாலும் உங்களை ஒத்த, கல்வியில் உங்களையும் மிஞ்சிய தமிழ்ப்புலவர்கள் பலர் தமிழ்ச்சங்கத்தில் இருக்கிறார்கள். அவர்களில் பலருக்கும் குறிஞ்சித் திணையில் பாட்டு எழுதுவது கை வந்த கலை. அதனால் பெரும்புலவர் என்பதால் மட்டும் உங்களுக்குத் தமிழ்ச்சங்கத்தில் சிறப்பு கிட்டவில்லை"

பெரும்புலவரை இப்படி நேரடியாகக் குறைத்துப் பேசுகிறாளே தங்கை என்று அக்கைக்கு வியப்பாக இருந்தது. பாரியும் 'என்ன சொல்கிறாள் இவள்?' என்ற கேள்வியுடன் பார்த்தான். கபிலர் மட்டும் அவள் சொல்வதை ஆமோதிப்பதைப் போல் தலையை அசைத்தார்.

"வடவேங்கடம் தென்குமரி இடையில் தமிழ் கூறும் நல்லுலகம் எல்லாம் போற்றும் நம் மன்னர் பாரிவேளின் திருத்தோழராக நீங்கள் இருப்பது தான் உங்களுக்குப் பெரும் பெருமையைத் தேடித் தந்திருக்கிறது"

தான் சொன்னால் பாரி நம்பமாட்டான் என்று நினைத்திருந்த ஒன்றை அவன் மகளே சொன்னதில் கபிலருக்குப் பெரும் மகிழ்ச்சி.

"அருமையாகச் சொன்னாய் அம்மா. சிறு பெண்ணாக இருந்தாலும் கூர்மையாகக் கவனித்திருக்கிறாய். உண்மை தான். வள்ளல் என்று சொன்னாலே உன் தந்தையின் பெயரைத் தான் எல்லோரும் சொல்கிறார்கள். மற்ற வள்ளல்களின் பெயர்கள் எல்லாம் அவன் பெயருக்குப் பின்னால் தான். கொடையில் உன் தந்தையை மிஞ்ச ஆளில்லை என்பதை பாண்டியனும் உணர்ந்திருக்கிறான். முத்தமிழ்ச் சங்கங்களை அமைத்துத் தமிழை வளர்த்து வரும் மரபில் பிறந்த தனது புகழை விட பாரியின் புகழ் வானளாவிப் பரந்திருக்கிறது என்பதைப் பாண்டியனும் அறிந்திருக்கிறான். அவனுடைய சொற்களில் உன் தந்தையின் மேல் பொறாமை இழையோடுவதையும் பார்த்தேன்"

"முடியுடை வேந்தர்களில் ஒருவரான பாண்டிய மன்னருக்கு தந்தை மேல் பொறாமையா? நம்ப முடியவில்லையே பெரியப்பா"

"ஆமாம் அங்கவை. அது உண்மை தான். பாண்டியன் நேரடியாக உன் தந்தை மேல் இருக்கும் ஒளவியத்தை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. ஆனால் அவனுக்கும் அவன் சுற்றத்திற்கும் பாரியின் புகழ் உறுத்துகிறது என்பது நன்கு தெரிகிறது. புலவர்களும் என்னைப் பார்த்தவுடன் என்னைப் பற்றியும் என் படைப்புகளைப் பற்றியும் பேசியதை விட பாரியைப் பற்றிக் கேட்டதே அதிகம். பாரியைப் புகழாத வாயில்லை"

"பெரியப்பா. தந்தையார் கொடைக்குணத்தில் யாருக்கும் குறைவில்லாதவர் தான். ஆனால் எனக்கென்னவோ உங்களைப் போன்ற புலவர்கள் தந்தையாரின் வள்ளற்தன்மையை அளவுக்கு மீறிப் புகழ்ந்து தள்ளுகிறீர்களோ என்று தோன்றுகிறது. தந்தையாரைப் போன்ற வள்ளல்கள் நானிலத்தில் எங்குமே இல்லையா என்ன?"

"ஹாஹாஹா. உண்டு அம்மா உண்டு. சங்கவை. உன் கேள்வி மிக அருமையான கேள்வி. இந்தப் புலவர்கள் எல்லோரும் பாரி பாரி என்று என்னவோ இவன் மட்டும் தான் வள்ளல் என்பதைப் போல் புகழ்ந்து தள்ளுகிறார்கள். ஆனால் இவனை விட்டால் இன்னொரு வள்ளலும் உண்டு என்பதை அவர்கள் மறந்துவிட்டார்கள்"

'பாரியைப் போல் இன்னொரு வள்ளலா' என்று வியந்து போனாள் அங்கவை. கிண்டல் செய்கிறார் கபிலர் என்பது புரிந்துவிட்டது பாரிக்கு. அதனால் ஒன்றும் சொல்லாமல் அவர்கள் பேசுவதைக் கவனித்துக் கொண்டிருந்தான். சங்கவைக்கோ கபிலர் பகிடி செய்கிறாரா உண்மையிலேயே இன்னொருவர் இருக்கிறாரென்று சொல்கிறாரா என்று புரியவில்லை.

"யார் அது என்று சொல்லுங்கள் பெரியப்பா" ஆர்வம் குரலில் தொனிக்கக் கேட்டாள்.

"சங்கவையின் ஆர்வத்தைப் பார். சொல்கிறேன் குழந்தாய். விரட்டாதே.

பாரி பாரி என்று பல ஏத்தி
ஒருவற் புகழ்வர் செந்நாப்புலவர்
பாரி ஒருவனும் அல்லன்..."

இங்கே சிறிது நேரம் நிறுத்தினார் கபிலர். சங்கவையால் பொறுமையாக இருக்க இயலவில்லை.

"சொல்லுங்கள் பெரியப்பா. யார் அந்த வள்ளல்?"

"மாரியும் உண்டு ஈண்டு உலகு புரப்பதுவே"

பாடலைக் கேட்டவுடன் எல்லோரும் ஒரே குரலில் ஓங்கிச் சிரித்தார்கள்.

அவர்களுடன் சேர்ந்து நிலவும் சிரித்தது. எல்லோரின் சிரிப்பும் வெகு நேரம் தொடர்ந்தது. இவர்களின் குதூகலத்தைக் கண்டு நாணியவள் போல் நிலா மெல்லிய மேகத் துணியின் பின்னர் போய் மறைந்து கொண்டாள். என்னைப் போல் இன்னொருவர் என்று எல்லோரும் பேச இங்கே இந்தப் புலவர் இன்னொருவர் போல் நான் என்று சொல்கிறாரே என்று சினந்ததைப் போல் சுணங்கிச் சுணங்கி மழையரசனும் தூறலைப் போட்டான். மலைச்சாரல் மாளிகை முற்றத்தில் அமர்ந்து கொண்டு இந்த நால்வரும் மழைச்சாரலையும் அனுபவித்தார்கள்.

***

பாடற்குறிப்பு:

புறநானூறு 107ம் பாடல். கபிலர் பாரிவள்ளலைப் பாடியது. திணை: பாடாண் திணை (தலைவனைப் புகழ்ந்து பாடுவது). துறை: இயன்மொழித் துறை (உள்ளதை உள்ளபடியே பாடுவது).

பாடலின் திரண்ட பொருள்: பாரி பாரி என்று சொல்லி அவனது பல புகழ்களையும் வாழ்த்தி அவ்வொருவனையே புகழ்வர் செவ்விய நாவினையுடைய அறிவுடையவர்கள். பாரியாகிய ஒருவன் மட்டும் அல்லன். இங்கே உலகத்தைக் காப்பதற்கு மாரியெனும் மழையும் உண்டு.

தமிழ் இணையப் பல்கலைகழகம் - அறிமுகம்

ஒரு வருட காலமாக பழந்தமிழ் இலக்கியங்களைக் கற்க வேண்டும் என்ற ஆவல் மிகுந்த போது மதுரைத் திட்டத்தில் இருக்கும் நூல்களை எடுத்துப் படிக்கத் தொடங்கினேன். ஆனால் அவை மூல நூல்களாக மட்டுமே இருந்தன. உரைகள் இல்லை. உரைகள் இன்றிச் சங்க நூற்களைக் கற்பது கடினமாக இருந்தது. ஜூனில் மதுரை சென்ற போது இலக்கியப் பண்ணையிலிருந்து பல நூற்களை வாங்கி வந்தேன். அவையும் சுருக்கமாகச் சங்க நூற்களைப் பற்றிப் பேசினவே ஒழிய நான் விரும்பும் அளவிற்கு விரிவாக இல்லை. தற்செயலாக தமிழ் இணையப் பல்கலைகழக நூலகத்தைக் கண்டேன். விரும்பியது விரும்பிய அளவிற்குக் கிடைக்கிறது. நாலைந்து மாதங்களாக எழுதும் பெரும்பாலான இடுகைகளுக்குத் தேவையான செய்திகளை இந்த நூலகத்தில் இருந்து தான் பெறுகிறேன்.

இரண்டு நாட்களுக்கு முன்னர் தமிழ் இணையப் பல்கலைகழக நூலகத்திற்கு ஒரு அருமையான அறிமுகக் கட்டுரையைக் கண்டேன். அது எல்லோருக்கும் பயன் தரலாம் என்று எண்ணியதால் இதனை இங்கே எடுத்து இடுகிறேன்.

நன்றி: திண்ணை & முனைவர். திரு. க. துரையரசன்.

***

Friday April 7, 2006

தமிழ் இணையப் பல்கலைக்கழக மின்நூலகம் - வசதிகளும் வாய்ப்புகளும்

முனைவர் க.துரையரசன்





முன்னுரை


உலகு தழுவி வாழும் தமிழ் மக்கள், தமிழ் ஆர்வலர்கள், தமிழறிஞர்கள் மற்றும் ஆய்வாளர்கள் பயன்கொள்ளும் வகையில் தமிழக அரசால் உருவாக்கப்பட்டு, தமிழ் இணையப் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இப்பல்கலைக்கழகம் அரிச்சுவடி முதல் ஆராய்ச்சி வரையிலான படிப்புகளை வழங்கும் செயல் திட்டத்துடன் இயங்கி வருகிறது. இப்படிப்புகளுக்கான பாடங்கள் கணிப்பொறியின் பல்லூடக வசதிகளைப் பயன்படுத்தி எழுத்து வடிவம், ஒலிவடிவம், ஒளி வடிவம் முதலியவற்றின் வாயிலாக படிப்பவர்களுக்கு ஆர்வமூட்டும் வகையில் அமைக்கப்பட்டு வழங்கப்படுகின்றன. தமிழ் இணையப் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் சேர்ந்து பயில்வோர் மட்டுமின்றி விரும்புகின்ற அனைவரும் பயன்பெறுகின்ற வகையில் மிகச் சிறந்த மின்நூலகம் ஒன்று இப்பல்கலைக்கழக இணையத் தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. நூல்களில் இடம்பெற்றுள்ள செய்திகளைப் பயனாளர் தேவைக்கேற்ப பெறுகின்ற வகையில் பல்வேறு தேடுதல் வசதிகளுடன் இம்மின்நூலகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்ஙனம் தேடுதல் வசதிகளுடன் இந்நூலகம் அமைந்திருப்பது இதன் தனிச் சிறப்பாகும். இந்நூலகத்தின் வசதிகளும் வாய்ப்புகளும் குறித்துத் தொடர்ந்து நோக்கலாம்.



மின் நூலகம்


தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் மின் நூலகம் தமிழ் இலக்கண, இலக்கிய நூல்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்களின் ரோமன் வடிவம், அகராதிகள், பண்பாட்டு நிகழ்ச்சிகள், கலைச்சொற்களம், பிற இணையத்தளங்களுக்குரிய இணைப்புகள் ஆகிய கூறுகளை உள்ளடக்கி உள்ளது.


நூல்கள்


சங்க காலம் முதல் இன்றுவரையிலான இலக்கண, இலக்கிய நூல்கள் அனைத்தும் இணையத்தளத்தில் சேர்க்கப்பட்டு வருகின்றன. இதுகாறும் 93817 பக்கங்களைக் கொண்ட 208 நூல்கள் இணையத்தில் இடப்பெற்றுள்ளன. மேலும் 51852 பக்கங்களைக் கொண்ட 110 நூல்கள் இணையத்தில் சேர்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.


இந்நூலகத்தில் இலக்கணம் என்ற தலைப்பின் கீழ், தொல்காப்பியம், புறப்பொருள் வெண்பாமாலை, தண்டியலங்காரம், வீரசோழியம், நம்பியகப்பொருள் விளக்கம், நன்னூல் ஆகிய நூல்கள் உரைகளுடன் கொடுக்கப்பட்டுள்ளன.


சங்க இலக்கியங்களும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களும் முழுமையாக உரைகளுடன் அமைக்கப்பட்டுள்ளன.


காப்பியங்கள் என்ற தலைப்பின் கீழ், ஐம்பெரும் காப்பியங்கள், ஐஞ்சிறுகாப்பியங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் பெருங்கதை, கம்பராமாயணம், வில்லிபாரதம், இரட்சணியமனோகரம், திருவிளையாடற்புராணம், கந்தபுராணம் ஆகியவையும் இதன்கண் உள்ளன.


சமய இலக்கியங்கள் என்ற தலைப்பில், சைவ இலக்கியங்களான பன்னிரு திருமுறைகள், வைணவ இலக்கியமான நாலாயிர திவ்ய பிரபந்தம், கிறித்துவ இலக்கியங்களான தேம்பாவணி, இரட்சணிய யாத்திரிகம், திருஅவதாரம், இயேசு காவியம், இரட்சணியமனோகரம், இசுலாமிய இலக்கியங்களான சீறாப்புராணம், நெஞ்சில் நிறைந்த நபிமணி ஆகியவை இணையத்தளப் படுத்தப்பட்டுள்ளன.


சிற்றிலக்கியங்கள் என்னும் தலைப்பின்கீழ், குமரேச சதகம், அபிராமி அந்தாதி, மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், தண்டலையார் சதகம், திருக்கருவைப்பதிற்றுப்பந்தாதி, கச்சிக்கலம்பகம், குற்றாலக்குறவஞ்சி, தியாகேசர் குறவஞ்சி, கொங்கு மண்டலச் சதகம், பாண்டிமண்டலச் சதகம், திருசெந்தூர் பிள்ளைத்தமிழ், சேக்கிழார் பிள்ளைத்தமிழ், புலவராற்றுப்படை, இரணியவதைப்பரணி, அரிச்சந்திரபுராணம், தணிகைப்புராணம், அஷ்ட பிரபந்தங்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன.


திரட்டு நூல்கள் என்னும் தலைப்பின் கீழ், சிவப்பிரகாச சுவாமிகள் பனுவல் திரட்டு, இராமலிங்க சுவாமிகள் நூல்கள், தாயுமானவர் சுவாமிகள் நூல்கள் ஆகியவை அமைந்துள்ளன.


நெறி நூல்கள் என்ற தலைப்பில், ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி, வெற்றிவேற்கை, உலகநீதி, நீதிநெறிவிளக்கம், அறநெறிச்சாரம் ஆகிய நூல்கள் தரப்பட்டுள்ளன.


இருபதாம் நூற்றாண்டு கவிதை இலக்கியங்கள் என்ற தலைப்பில், பாரதியார் கவிதைகள், பாரதிதாசன் கவிதைகள், கண்ணதாசனின் இயேசுகாவியம், கவிமணியின் நீதிநூல் ஆகிய கவிதைகளும், இருபதாம் நூற்றாண்டு உரைநடை இலக்கியங்கள் என்ற தலைப்பின் கீழ், பாரதியார் கதைகள் மற்றும் கட்டுரைகள். சமணமும் தமிழும், பெளத்தமும் தமிழும், தம்மபதம், பெண்மதிமாலை, தமிழ் இலக்கிய வரலாறு, தமிழ்மொழி வரலாறு, பாவாணர் படைப்புகள் ஆகியவையும் இடம் பெற்றுள்ளன.


நாட்டுப்புற இலக்கியங்கள் வரிசையில் தமிழர் நாட்டுப்பாடல்கள், மலையருவி, காத்தவராயன் கதைப்பாடல் ஆகியவையும் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் பலவும் தமிழ் இணையப் பல்கலைக்கழக இணையத் தளத்தில் உள்ளன.


உரைகள்


பழந்தமிழ் இலக்கண நூல்களும், சங்க இலக்கிய நூல்களும் அனைவரும் எளிதில் படிப்பதற்குரிய வகையில் பதம் பிரித்து வழங்கப்பட்டுள்ளன. அதுபோல் ஆய்வாளர்களுக்கும் அறிஞர்களுக்கும் துணை செய்யும் பல்வேறு உரைகளும் தளத்தில் இடப்பட்டுள்ளன.


எடுத்துக்காட்டாக, தொல்காப்பியத்தைப் பொறுத்த வரை இளம்பூரணர், நச்சினார்க்கினியர், பேராசிரியர் ஆகியோர் உரைகள் தளத்தில் இடப்பட்டுள்ளன. மேலும், தெய்வச்சிலையார், கல்லாடர், பாவலர் பாலசுந்தரம், ஆ.சிவலிங்கனார் ஆகியோர் தம் உரைகளும் சேர்க்கப்பட உள்ளன.


அதுபோல் திருக்குறளுக்குப் பரிமேலழகர், மணக்குடவர், மு.வரதராசன், தேவநேயப்பாவாணர் ஆகியோரின் உரைகளும் ஜி.யு.போப், சுத்தானந்த பாரதி ஆகியோரின் மொழிபெயர்ப்புகளும் தளத்தில் இடப்பட்டுள்ளன.


தொல்காப்பியம், திருக்குறள் போன்றே பிற இலக்கண, இலக்கிய நூல்களுக்குப் பல்வேறு உரைகளையும், கடின நடை கொண்ட உரைகளைப் பதம்பிரித்தும் வழங்கும் எண்ணம் தமிழ் இணையப் பல்கலைக்கழகத்துக்கு உண்டு.


தேடுபொறி வசதிகள்


தமிழ் இணையப் பல்கலைக்கழக மின்நூலகத்தின் சிறப்புக் கூறுகளுள் தலையாயது தேடுபொறி வசதிகள் அமைந்துள்ளமையாகும். இத்தேடுதல் வசதிகளின் துணை கொண்டு தேவையான நூல்களிலிருந்து வேண்டிய செய்திகளை எளிதில் பெறலாம். எடுத்துக்காட்டாக, திருக்குறளை எடுத்துக் கொள்ளலாம்.


திருக்குறளுக்கு மேற்சுட்டியவாறு அறுவரின் உரைகள் உள்ளன. இவற்றில் வேண்டிய உரைகளைத் தேர்வு செய்தும் தகவல்களைப் பெறலாம்; அல்லது அறுவரின் உரைகளையும் ஒருசேரப் பார்க்க வேண்டுமானாலும் தேர்வு செய்து பார்க்கலாம். அதாவது ஒருகுறளைப் படிப்பதற்கு முன் தேவையான உரைகளைத் தேர்வு செய்து கொண்டு படிக்கலாம். இது ஒரு முறை.


சில வேளைகளில் திருக்குறளைப் படித்துக் கொண்டே செல்கின்ற போது உரைகளின் மூலம் தெஒளிவு பெற வேண்டிய அவசியம் ஏற்படலாம் அவ்வேளையில் வேண்டிய உரைகளைப் பெறுகின்ற வசதியும் இத்தளத்தில் செய்து தரப்பட்டுள்ளது.


மேலும், எண் தேடல், சொல் தேடல், அதிகாரம் தேடல் ஆகிய தேடுபொறி வசதிகளும் திருக்குறளுக்குச் செய்து தரப்பட்டுள்ளன. சொல் தேடல் என்பதில் திருக்குறளில் பயின்றுவரும் ஏதேனும் ஒரு சொல்லைக் கொடுத்துக்கூட தேடிப்பெறலாம். இதன் மூலம் ஒரு சொல் திருக்குறளில் எத்தனை இடத்தில் பயின்று வந்துள்ளது; ஒரு சொல் குறளின் தொடக்கத்தில் - இடையில் - இறுதியில் எத்தனை முறை பயின்று வந்துள்ளது என்பன போன்ற புள்ளி விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம். அதாவது திருக்குறளில் தெரிந்த ஒரு சொல்லை மட்டுமே கொண்டு ஒருவர், அது குறித்து தேவையான தகவல்களைப் பெறக்கூடிய வகையில் திருக்குறளில் தேடுதல் வசதி அமைந்துள்ளது சிறப்பாகும். இதுபோலவே எண் தேடல், அதிகாரம் தேடல் என்ற வகையிலும் கூட குறள்களையும் அவற்றிற்கான உரைகளையும் பெறலாம்.


மேலும் ஓர் எடுத்துக்காட்டு


எட்டுத்தொகையில் ஒன்றான நற்றிணை என்ற நூல், எண், பாடியோர், பாடப்பட்டோர், வள்ளல்கள், மன்னர்கள், திணை, கூற்று, பாடல் முதற்குறிப்பு, மரங்கள், செடிகள், கொடிகள், மலர்கள், தானியங்கள், பழங்கள், விலங்குகள், பறவைகள், மீன்கள் முதலிய தேடுதல் வசதிகளுடன் இணையத் தளப்படுத்தப்பட்டுள்ளன. இத்தேடுதல் வசதிகளின் துணை கொண்டு நற்றிணையில் இடம் பெற்றுள்ள மலர்கள் எத்தனை - அவை எந்த பாடல்களில் எல்லாம் பயின்று வந்துள்ளன - எத்தனைமுறை பயின்று வந்துள்ளன என்றெல்லாம் கணக்கிட்டுவிட முடியும். இது போலவே மீன்கள், விலங்குள், பறவைகள் ஆகிய அனைத்தையும் கண்டறிந்து புள்ளி விவரங்களாக்கி விட முடியும். இவை மட்டுமின்றி நற்றிணையில் இடம் பெற்றுள்ள சில சிறப்புச் செய்திகளைக் கொண்டு - உதாரணமாக, புலியின் முன்னங்கால்கள் சிறியவை என்ற தகவலை மட்டுமே கொண்டுகூட அப்பாடலைக் கண்டறிந்து கொள்ளும் வகையில் தேடுதல் வசதி செய்து தரப்பட்டுள்ளமை வியக்கத்தக்க ஒன்றாகும்.


திருக்குறள், நற்றிணை போன்றே இத் தளத்தில் உள்ள வெவ்வேறு நூல்களும் ஆய்வாளர்களின் நலன் கருதி பல்வேறு தேடுதல் வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன.



ரோமன் வடிவம்


தொல்காப்பிய நூற்பாக்கள் மற்றும் சங்க இலக்கியப் பாடல்கள் முழுவதும் ரோமன் வடிவத்தில் வழங்கப்பட்டுள்ளன. மேலும் பல நூல்கள் ரோமன் வடிவத்தில் வழங்கப்பட உள்ளன.


அகராதிகள்


மாணவர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் அகராதிகள் பெரிதும் பயனளிக்கக் கூடியவை என்பதில் கருத்து வேறுபாடுகள் கிடையாது. இக் கருத்தை ஒட்டியே தமிழ் இணையப் பல்கலைக்கழக மின் நூலகத்தில் தற்பொழுது நான்கு அகராதிகள் இடம் பெற்றுள்ளன. அவை;


(i) சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் - தமிழ் - ஆங்கிலப் பேரகராதி

(ii) பழனியப்பா சகோதர்களின் ஆங்கிலம் - தமிழ் - பால்ஸ் அகராதி

(iii) சென்னைப் பல்கலைக் கழகத்தின் ஆங்கிலம் - தமிழ் அகராதி

(iv) பேராசிரியர் மு.சண்முகம்பிள்ளை அவர்களின் தமிழ் - தமிழ் அகராதி.


இவ்வகராதிகள் சொல் தேடல், பக்கம் தேடல், அகரவரிசைப்படி சொற்களைப் பார்த்தல் ஆகிய தேடுதல் வசதிகளுடன் கூடியவை.


தமிழ்ச் சொற்களைத் தட்டச்சுச் செய்வது பலருக்கும் கடினமாக இருக்கும். இதனைக் கருத்தில் கொண்டு இவ்வகராதிகளைப் பார்ப்பவர்கள் தமிழில் எளிதாகத் தட்டச்சுச் செய்யும் வகையில் தமிழ் விசைப்பலகை (Tamil Key Board) கணினித் திரையில் தெரியும். அவ்விசைப் பலகையில் உள்ள எழுத்துகளைச் சுட்டியின் (Mouse) துணைகொண்டு தேர்வு செய்து வேண்டிய சொற்களுக்கு உரிய பொருளைக் காணும் வசதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.


மேலும், இத் தளத்தில் தமிழ்-தமிழ், தமிழ்-பிறமொழி, பிறமொழி - தமிழ் என்ற பல வகையான அகராதிகள் இடம் பெற உள்ளன.


பண்பாட்டு நிகழ்ச்சிகள்


உலகெங்கும் வாழும் தமிழர்கள் தங்களுடைய மரபுகளையும், விழுமியங்களையும், பண்பாட்டையும் அறிந்து கொள்வதிலும் பாதுகாப்பதிலும் மிகுந்த ஆர்வம் உடையவர்களாக இருக்கின்றார்கள். அவர்களது ஆர்வத்தை மதிக்கின்ற வகையில் தமிழர்களுக்கே உரிய பண்பாட்டு நிகழ்வுகளைக் காட்டும் ஒலி - ஒளிக் காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, காவடியாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், மயிலாட்டம், கரகாட்டம், புலியாட்டம், தெருக்கூத்து, பாவைக்கூத்து, நாதஸ்வரம், ஜல்லிக்கட்டு, பரதநாட்டியம் போன்ற நிகழ்ச்சிகள் இடம் பெற்றுள்ளன. இவை போன்ற இன்னும் பிற தமிழ்நாட்டுக் கலைகள் இடம் பெற உள்ளன.


கோயில்களுக்குப் பெயர் போனது தமிழகம். அவ்வகையில் தமிழகத்தில் உள்ள தேர்ந்தெடுத்த கோயில்களின் படக் காட்சிகளும் (Photo Clippings), ஒளிக் காட்சிகளும் (Video Clippings) தமிழ் இணையப் பல்கலைக்கழக இணையத் தளத்தில் உள்ளன. இதுவரை 137 சைவ, வைணவக் கோயில்களின் படக்காட்சிகளும், ஒளிக்காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இதன்கண் மேலும் பல கோயில்கள் சேர்க்கப்பட உள்ளன. சைவ, வைணவக் கோயில்கள் மட்டு மன்றி கிறித்தவ ஆலயங்கள் மற்றும் இசுலாமியரின் பள்ளிவாசல்களும் விரைவில் சேர்க்கப்பட உள்ளன.



கலைச் சொற்களம்


சமுதாயவியல், மருத்துவவியல், கால்நடை மருத்துவவியல், உயிரியல் தொழில்நுட்பவியல், கலை மற்றும் மானிடவியல், தகவல் தொழில் நுட்பவியல், பொறியியல் மற்றும் தொழில் நுட்பவியல், வேளாண்மைப் பொறியியல், அறிவியல், சட்டவியல், மனைஇயல் ஆகிய பல்வேறு துறைகளைச் சார்ந்த 2.5 இலட்சத்திற்கும் மேற்பட்ட கலைச் சொற்கள் இணையத்தளத்தில் இடம் பெற்றுள்ளன. மேலும் 61,786 சொற்கள் விரைவில் இடம் பெற உள்ளன. இக் கலைச் சொற்களம், கலைச் சொல்லாக்கத்தில் ஈடுபடுவோர்க்கும் அதனைத் தரப்படுத்த விழைவோர்க்கும் மிகுந்த பயனளிக்கக் கூடிய ஒன்றாகும்.


பிற இணையத் தளங்களுக்கான இணைப்புகள்


தமிழ் இணையப் பல்கலைக்கழக இணையத்தளத்திலிருந்து பிற இணையத் தளங்களுக்குச் செல்வதற்குரிய இணைப்பு வசதிகள் அமைத்துத் தரப்பட்டுள்ளன. இதன் வழி தற்பொழுது Project Madurai, Upenn, Tamilnet99 ஆகியவற்றிற்கான இணைப்புகள் கொடுக்கப் பட்டுள்ளன. மேலும், தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தோடு இணைப்பு வசதி ஏற்படுத்திக் கொள்ள விரும்புவோர் கட்டணம் ஏதுமின்றி இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அதாவது தமிழ் இணையப் பல்கலைக்கழகம் தமது இணையத்தளத்தில் பிற தளங்களுக்கான இணைப்புகளை வழங்கவும், பிற இணையத்தளங்களில் தமது தளத்திற்கு இணைப்பு வழங்கவும் தயாராக உள்ளது.



முடிவுரை


தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் மின் நூலகம், தமிழ் நூல்களைக் கொண்ட பிற இணையத்தளங்கள் அளிக்கின்ற வசதிகளை விட, கூடுதலான வசதிகளைக் கொண்டதாக உள்ளதைக் குறிப்பாக சுட்டிக்காட்ட வேண்டும். தமிழ் நூல்களைக் கொண்ட இணையத் தளங்கள் பெரிதும் தமிழ் நூல்களின் பட்டியலைத் தரக் கூடியனவாக உள்ளன அல்லது தமிழில் உள்ள சில நூல்களைப் பக்கம் பக்கமாகப் பார்த்துப் படிக்கின்ற வகையில் அமைந்துள்ளன. ஆனால், தமிழ் இணையப் பல்கலைக்கழக மின் நூலகம், தமிழ் இலக்கண, இலக்கிய நூல் களின் பாடுபொருள்களைப் பயனாளர் தேவை கருதி ஒரு சில வினாடிகளில், அவர்கள் தேடிப் பெறுகின்ற வகையில் தேடுதல் வசதிகளுடன் அமைந்துள்ளது. தமிழக அரசின் நிதியுதவியுடன், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி இயக்ககத்தின் ஒரு பகுதியாக செயல்படும் தமிழ் இணையப் பல்கலைக்கழகம், அதன் மின் நூலகத்தை மிகுந்த பொருள்செலவில் வடிவமைத்துள்ளது. இருப்பினும்கூட இப்பல்கலைக்கழகத்தின் மின்நூலகத்தைப் பயனாளர்கள் எவரும் - எங்கிருந்தும் - எப்பொழுதும் - எவ்விதக் கட்டணமுமின்றி பயன்படுத்திக்கொள்ள இணையக் கதவுகளைத் திறந்தே வைத்துள்ளது.


இணையக் கதவின் திறவுகோல் : www.tamilvu.org


தமிழ் இணையப் பல்கலைக்கழக மின்நூலகத்தைப்


பார்ப்பீர்... பயன்பெறுவீர்... கருத்துரை வழங்குவீர்...


முனைவர் க.துரையரசன்

உதவி இயக்குநர்

த.இ.ப., சென்னை - 113.

darasan2005@yahoo.com


----

Friday, February 15, 2008

நாலாயிரம் கற்போம்!!!

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தங்களின் பொருளை விரிவாக எழுத வேண்டுமென்ற எண்ணம் வலையில் எழுத வந்த நாள் முதல் உண்டு. விரிவாக எழுதுவதென்றாலே அதற்கு உழைப்பும் நேரமும் தேவைப்படுகிறது. இரண்டுமே தேவையான அளவிற்கு இல்லாததால் என்றோ தொடங்கிய கோதை தமிழ் வலைப்பதிவும் விஷ்ணு சித்தன் வலைப்பதிவும் தொடராமல் நின்று கொண்டிருக்கின்றன. திருவாய்மொழிக்கும் ஒரு கூட்டுப் பதிவு வேண்டும் என்று என் குருநாதர்களில் ஒருவரும் வெகு நாட்களாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால் நேரமில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன். சரி. விரிவாக எழுதத் தான் நேரமில்லை; சுருக்கமாகவாவது எழுதுவோம் என்று இன்று இந்த 'நாலாயிரம் கற்போம்' தொடரைத் தொடங்குகிறேன். இந்த கூடல் வலைப்பதிவின் வலப்பக்கத்தில் இந்த பகுதி இடம் பெறும். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை அடுத்த அடுத்த பாசுரங்களாக எழுதி வருகிறேன். வலைப்பதிவில் எழுதுவதற்கும் இங்கு வலப்பக்கத்தில் எழுதுவதற்கும் ஒரு வேறுபாடு - வலைப்பதிவில் எழுதுவது பல நாட்களுக்கு நின்று வருங்காலத்தில் வந்து படிப்பவர்களுக்கும் உதவும்; வலப்பக்கத்தில் எழுதுவது அப்படி இல்லை. குறையொன்றும் இல்லாத கோவிந்தனைப் பாடிப் பரவிய ஆழ்வார்களின் அமுதத்தைப் பருக அந்தக் குறை தடையாக இருக்க வேண்டாம்.

ஆழ்வார் எம்பெருமானார் தேசிகன் ஜீயர் திருவடிகளே சரணம்

****

வலப்பக்கம் எழுதப்படுபவை இந்த இடுகையிலெயே சேர்த்து வைக்கப்படும்.

****
15 - பிப்ரவரி - 2008 அன்று எழுதப்பட்டது:

பெரியாழ்வார் திருமொழி தனியன்கள்:

1. நாதமுனிகள் அருளிச் செய்தது:

குருமுகம் அனதீத்ய ப்ராஹவேதான் அசேஷான்
நரபதி பரிக்லுப்தம் சுல்கம் ஆதாது காம:
ஸ்வஸுரம் அமர வந்த்யம் ரங்கநாதஸ்ய சாக்ஷாத்
த்விஜகுல திலகம் தம் விஷ்ணுசித்தம் நமாமி

குருவின் மூலம் கற்றுக் கொள்ளாமல் இருந்தாலும் அனைத்து வேதங்களையும் குறைவின்றி அறிந்து, மக்கள் தலைவனான பாண்டியன் கட்டிவைத்த பொற்கிழியை அடைந்த, தேவர்களால் வணங்கப்பெறும் திருவரங்கநாதனுக்கு மாமனாரான, வேதியர் குலத் திலகமான, விஷ்ணுசித்தராம் பெரியாழ்வாரை போற்றுகிறேன்.


***

17 - பிப்ரவரி - 2008 அன்று எழுதப்பட்டது:

பெரியாழ்வார் திருமொழி தனியன்கள்:

2. பாண்டிய பட்டர் அருளிச் செய்தது:

மின்னார் தடமதில் சூழ் வில்லிபுத்தூர் என்றொருகால்
சொன்னார் கழற்கமலம் சூடினோம் - முன்னாள்
கிழியறுத்தான் என்றுரைத்தோம் கீழ்மையினில் சேரும்
வழியறுத்தோம் நெஞ்சமே வந்து


மனமே - நீயும் நானும் - ஒளிவீசும் பெரிய மதில்கள் சூழ்ந்த வில்லிபுத்தூர் என்று ஒரு முறையேனும் சொன்னவர்களின் திருவடிகளைத் தலையின் மேல் சூடினோம்; முன்பொரு நாள் பொறிகிழியை அறுத்தான் என்று அவன் புகழ் உரைத்தோம்; அதனால் கீழ்மையினில் சேரும் வழியை அடைத்துவிட்டோம்.


***

18 - பிப்ரவரி - 2008 அன்று எழுதப்பட்டது:

பெரியாழ்வார் திருமொழி தனியன்கள்:

3. பாண்டிய பட்டர் அருளிச் செய்தது:


பாண்டியன் கொண்டாடப் பட்டர் பிரான் வந்தானென்று
ஈண்டிய சங்கம் எடுத்தூத - வேண்டிய
வேதங்கள் ஓதி விரைந்து கிழியறுத்தான்
பாதங்கள் யாமுடைய பற்று.



வல்லப தேவ பாண்டியன் கொண்டாடும் வகையில் பட்டர்பிரானான பெரியாழ்வார் மதுரைக்கு வந்தார் என்று போற்றி வகை வகையாக பெரும் எண்ணிக்கையில் இருக்கும் சங்குகளை பலரும் ஊத, பரம்பொருள் யார் என்று நிறுவும் வகையில் வேண்டிய வேதங்களை எல்லாம் ஓதி பொற்கிழியை அறுத்தவராம் பெரியாழ்வாரின் திருவடிகளே எங்களுக்கான பற்றுதல்.


***

20 - பிப்ரவரி - 2008 அன்று எழுதப்பட்டது:

பெரியாழ்வார் அருளிச் செய்த திருப்பல்லாண்டு:

பாசுரம் 1.

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம் - மல்லாண்ட
திண் தோள் மணிவண்ணா உன்
சேவடி செவ்வி திருக்காப்பு.


வாழ்க பல்லாண்டு. வாழ்க பல்லாண்டு. வாழ்க பல்லாயிரத்தாண்டு. வாழ்க பல கோடி நூறாயிரம் ஆண்டு. முஷ்டீகன், சாணூரன் போன்ற மல்லர்களை வென்ற திண்மையான திருத்தோள்களை உடைய கருமணியைப் போன்ற நிறத்தை உடையவா! உன்னுடைய செம்மையான திருவடிகளின் அழகிற்கு குறைவற்ற பாதுகாப்பு உண்டாகட்டும்!

***

நல்லவரும் அல்லவரும் நிறைந்த பூவுலகில் பெருமாளுக்குத் தீங்கு நேர்ந்துவிடுமோ என்ற தாயுள்ளதோடு பல்லாண்டு பாடுகிறார் ஆழ்வார். அதனைக் கண்ட பெருமாள் தன்னுடைய மல்லாண்ட திண் தோள்களை ஆழ்வார் பயம் நீங்கும்படி காட்ட, அதுவே ஆழ்வாரின் பயத்தைக் கூட்டுகிறது. மகன் தீரனாயிருந்தால் 'ஒருவரையும் பொருட்படுத்தாமல் போர் புரியப் போய்விடுவானே. யாராலே என்ன கெடுதி நேர்ந்துவிடுமோ' என்று தாயுள்ளம் பதறுவதைப் போல் பதறி மேலும் பல்லாண்டு பாடுகிறார் ஆழ்வார்.


***

பாசுரம் 2. (23 Feb 2008)

அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் நின் வலமார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு
படை போர் புக்கு முழங்கும் அப்பாஞ்சசன்னியமும் பல்லாண்டே

உன் அடியார்களான எங்கள் எல்லோருக்கும் உன்னோடு எந்த காலத்திலும் எந்த நிலையிலும் பிரிவில்லாமல் இருக்கும் தொடர்பு ஆயிரம் பல்லாண்டு காலங்கள் என்றென்றும் தொடர்ந்து இருக்க வேண்டும். அழகு தேவதையாக, நீயே பரம்பொருள் என்று நிறுவும் ஒரு அடையாளமாக, உன்னுடைய திருமார்பின் வலப்பக்கத்தில் என்றும் நிலையாக வாழ்கின்ற இளமையும் அழகும் பெருமையும் மிக்க மங்கையான திருமகளும் என்றென்றும் பல்லாண்டு இருக்க வேண்டும். அழகுடைய திருவுருவம் கொண்டு தனது பேரொளி உன்னுடைய திருமேனி எங்கும் பரவி வீசும்படியாக இருக்கும் உன் வலக்கை உறையும் சுடர் வீசும் திருவாழி ஆழ்வானும் என்றென்றும் பல்லாண்டு இருக்க வேண்டும். படைகள் போர் செய்கின்ற போது அங்கே புகுந்து முழங்குகின்ற தன்னிகரில்லாத அந்த பாஞ்சஜன்யம் என்னும் திருச்சங்காழ்வானும் என்றென்றும் பல்லாண்டு இருக்க வேண்டும்.

***

அடியோமோடும் என்று சொல்லி இறைவனின் லீலா விபூதி என்று சொல்லப்படும் இந்த பிரபஞ்சத்தில் வாழ்பவர்கள் எல்லோருக்கும் இறைவனோடு இருக்கும் தொடர்பை சொன்னார். திருமகள், திருவாழியாழ்வான், திருச்சங்காழ்வான் என்றிவரைச் சொல்லி இறைவனின் நித்ய விபூதி என்று சொல்லப்படும் பரமபதத்தில் வாழ்பவர்கள் எல்லோருக்கும் இறைவனோடு இருக்கும் தொடர்பை சொன்னார். இதனால் இந்தப் பாசுரத்தில் லீலா விபூதி, நித்ய விபூதி என்று இரண்டு விபூதிகளுக்கும் இறைவன் இவன் என்று சொன்னார்.


&&&

பாசுரம் 3. (26 Feb 2008)

வாழாட்பட்டு நின்றீர் உள்ளீரேல் வந்து மண்ணும் மணமும் கொண்மின்
கூழாட்பட்டு நின்றீர்களை எங்கள் குழுவினில் புகுதல் ஒட்டோம்
ஏழாட்காலும் பழிப்பிலோம் நாங்கள் இராக்கதர் வாழ் இலங்கை
பாழாகப் படை பொருதானுக்குப் பல்லாண்டு கூறுதுமே


உய்ந்து போவதற்கு ஒரே வழியான இறைவனின் அடிமைத் தொழிலில் ஈடுபட்டு அதிலேயே நிலைத்து நிற்பவர்களே! நீங்கள் எங்களோடு வந்து இறைவனுடைய திருவடிச் சேவைகளைச் செய்யுங்கள்; அந்தச் சேவைகளில் ஈடுபாடு கொண்டிருங்கள். கூழினை (சோற்றினை) வேண்டி பிறருக்கு அடிமைத் தொழில் செய்திருப்பவர்களை எங்கள் குழுவினில் சேர்த்துக் கொள்வது இயலாது. நாங்கள் ஏழு தலைமுறைகளாக ஒரு வித குற்றமும் இல்லாதவர்கள். இராக்கதர்கள் வாழ்ந்த இலங்கை பாழாகும் படி படையெடுத்துப் போர்புரிந்தவனுக்குப் பல்லாண்டு கூறுவோம்.

***

தனித்திருந்து இறைவனுக்குப் பல்லாண்டு பாடுவதில் நிறைவு பெறாமல் உலகத்தில் இருக்கும் மற்றவர்களையும் துணைக்கு அழைத்துக் கொள்கிறார் ஆழ்வார். சாவா மருந்தெனினும் மற்றவர்களோடு சேர்ந்து உண்ண வேண்டும் என்றும் கூடி இருந்து குளிர்ந்து உண்ண வேண்டும் என்றும் பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள் அல்லவா?

உலகத்தில் இருக்கும் மக்களில் மூன்று வகையினர் இருக்கிறார்கள். இறைவனையே வேண்டுபவர்கள், கைவல்யமாகிய ஆத்மானுபவத்தை வேண்டுபவர்கள், செல்வங்களை வேண்டுபவர்கள் என்று மூன்று வகையினரில் இந்தப் பாசுரத்தில் முதல் வகையினரைப் பல்லாண்டு பாட அழைக்கிறார். ஆழ்வாரும் அந்த முதல் வகையினரில் ஒருவர் என்பதால் தன்னையும் அந்தக் குழுவில் அங்கமாகக் கொண்டு 'கூறுதுமே' என்று தன்மைப் பன்மையில் கூறுகிறார்.

இங்கே மண்ணும் மணமும் கொள்மின் என்று சொன்னதில் மண் கொள்ளுகையாவது இறைவனின் தொண்டில் ஈடுபடுவது; மணம் கொள்ளுகையாவது அந்தத் தொண்டில் வேண்டா வெறுப்பாக ஈடுபடாமல் முழு மன நிறைவோடு ஈடுபடுவது.

&&&


பாசுரம் 4. (02 Mar 2008)

ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம் வந்து எங்கள் குழாம் புகுந்து
கூடும் மனம் உடையீர்கள் வரம்பொழி வந்து ஒல்லைக் கூடுமினோ
நாடும் நகரமும் நன்கறிய நமோ நாராயணாயவென்று
பாடும் மனமுடைப் பத்தருள்ளீர் வந்து பல்லாண்டு கூறுமினே.


(உயிரற்ற) உடலை நிலத்தில் கிடத்தும் முன்னரே இங்கு வந்து எங்கள் குழுவினில் புகுந்து எங்களுடனும் இறைவனுடனும் கலந்துவிட எண்ணம் கொண்டவர்களே! எந்த விதமான தடைகள் இருந்தாலும் அவற்றை எல்லாம் மீறி விரைவில் வந்து எங்களுடன் சேருங்கள். நாட்டிலுள்ளவர்களும் நகரத்தில் உள்ளவர்களும் நன்கு அறியும் படி எட்டெழுத்து மந்திரமான திருமந்திரத்தைச் சொல்லி பாட வேண்டும் என்ற மனத்தையுடைய பக்தர்களே! இங்கே வந்து இறைவனுக்குப் பல்லாண்டு கூறுங்கள்.

***

கைவல்யமாகிய ஆத்மானுபவத்தை வேண்டி இறைவனைத் தொழுபவரை இங்கே பல்லாண்டு பாட அழைக்கிறார் பட்டர்பிரான்.

ஏடு என்னும் சூக்ஷ்ம உடலை கைவல்ய நிலத்தில் இடுவதன் முன்னம் வேறு ஒன்றையும் வேண்டாமல் இறைவனையே வேண்டும் எங்கள் குழுவினில் வந்து புகுந்து நீங்களே உங்களுக்கு வகுத்து வைத்துக் கொண்ட வரம்புகளை எல்லாம் மீறி எங்களுடன் கூடும் மனத்துடன் விரைவாக வந்து சேர்ந்து கொள்ளுங்கள். கைவல்ய அனுபவத்தை மட்டுமே வேண்டி பிரணவமந்திரத்தை மட்டுமே ஓதும் வரம்பை ஒழித்து பிரணவம் இயற்கையாகவே கூடியிருக்கும் எட்டெழுத்து மந்திரமான திருமந்திரத்தை நாடும் நகரமும் நன்கு அறிய பாடும் மனம் கொண்டு இங்கே வந்து இறைவனுக்குப் பல்லாண்டு கூறுங்கள்.

கைவல்யத்தை விரும்புபவர்கள் வேறு குழுவினைச் சேர்ந்தவர்கள் என்பதால் ஆழ்வார் இங்கே 'கூறுமினே' என்று படர்க்கை பன்மையில் சொல்கிறார்.


&&&

&&&

பாசுரம் 5. (09 Mar 2008)

அண்டக்குலத்துக்கு அதிபதியாகி அசுரர் இராக்கதரை
இண்டைக்குலத்தை எடுத்துக் களைந்த இருடீகேசன் தனக்கு
தொண்டக்குலத்தில் உள்ளீர் வந்து அடி தொழுது ஆயிர நாமம் சொல்லி
பண்டைக்குலத்தைத் தவிர்ந்து பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்மினே


பற்பலவாய் நிற்கின்ற அண்டங்களுக்கெல்லாம் அதிபதியானவன் எம்பெருமான். அசுரர்கள், இராக்கதர்கள் இவர்களுடைய அளவில்லாத கூட்டத்தை களையெடுத்தவன் எம்பெருமான். அதோடு மட்டுமின்றி புலன்களுக்கும் தலைவன் அவன். (ஹ்ருஷிகேச: = இருடிகேசன் = புலன்களை நடத்துபவன்). அவனுக்கு அடியவராக இருக்க விருப்பம் உடைய குழுவினில் இருப்பவர்களே. நீங்கள் இங்கே வந்து அவன் திருவடிகளைத் தொழுது அவனுடைய ஆயிர நாமங்களை சொல்லி உங்களுடைய பழைய அடையாளங்களை எல்லாம் தவிர்த்து (அடியார் என்ற அடையாளம் மட்டுமே பெற்று) இறைவனுக்குப் பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்று சொல்லுங்கள்.

***

மூன்றாம் பாசுரத்தில் தான் அங்கமாக இருக்கும் 'இறைவனை அன்றி மற்ற எந்த பயனும் வேண்டோம்' என்றிருக்கும் அடியார்கள் கூட்டத்தை அழைத்து 'நாமெல்லாம் பல்லாண்டு பாடுவோம்' என்றார். நான்காம் பாசுரத்தில் சமாதி நிலையடைந்து ஆத்மாவை அனுபவிக்க விரும்பும் கைவல்யத்தை விரும்பும் அடியவர்கள் கூட்டத்தை அழைத்து 'பல்லாண்டு பாடுங்கள்' என்று சொன்னார். இந்தப் பாசுரத்தில் மூன்றாவது வகையான அடியவர்கள் - செல்வத்தை விரும்புபவர்கள் - கூட்டத்தை அழைத்துப் 'பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்று பாடுங்கள்' என்கிறார்.

செல்வத்தை விரும்பும் அடியவர்கள் இருவகையினர். 1. புதிதாகச் செல்வம் விரும்புபவர்கள். 2. முன்பு செல்வம் பெற்று அதனை இழந்து மீண்டும் பெற விரும்புபவர்கள். அண்டக்குலங்களுக்கு இறைவன் அதிபதி என்று சொன்னது புதிதாக செல்வம் பெற விரும்பும் அடியவர்களுக்காக. அசுரர் இராக்கதரை எடுத்துக் களைந்தவன் என்று சொன்னது அப்படிப்பட்ட தடைகளால்/வினைப்பயன்களால் செல்வத்தை இழந்து அதனை மீண்டும் பெற விரும்பும் அடியவர்களுக்காக.

&&&
பாசுரம் 6. (18 Mar 2008)

எந்தை தந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன் ஏழ்படிகால் தொடங்கி
வந்து வந்து வழி வழி ஆட்செய்கின்றோம் திருவோணத் திருவிழவில்
அந்தியம்போதில் அரியுருவாகி அரியை அழித்தவனை
பந்தனை தீரப் பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்று பாடுதுமே


நான், என் தந்தை, அவர் தந்தை, அவர் தந்தை, அவர் தந்தை, அவரது தந்தையும் பாட்டனாரும் என ஏழு தலைமுறைகளாக வழி வழியாக இறைவன் திருமுன் வந்து அவனுக்குத் தொண்டு செய்கிறோம். அழகிய மாலைப் பொழுதில் நரசிம்ம உருவம் கொண்டு இரணியனை அழித்தவனை அப்போது தோன்றிய அசதி தீரும் படி திருவோணத் திருவிழாவில் பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்று போற்றிப் பாடுவோம்.

***

மூன்றாம் பாசுரத்தில் தான் அங்கமாக இருக்கும் 'இறைவனை அன்றி மற்ற எந்த பயனும் வேண்டோம்' என்றிருக்கும் அடியார்கள் கூட்டத்தை அழைத்து 'நாமெல்லாம் பல்லாண்டு பாடுவோம்' என்றார். அப்போது ஏழாட்காலும் பழிப்பிலோம் என்றார். அதனையே இங்கு மீண்டும் ஏழ்படிகால் தொடங்கி வந்து வழி வழி ஆட்செய்கின்றோம் என்று கூறுகிறார். இறைவனை அன்றி வேறொன்றையும் வேண்டாத அந்த ஞானிகளின் கூட்டத்தில் இருக்கும் ஆழ்வார் அவர்களுடன் சேர்ந்து தானும் பல்லாண்டு கூறுவதை 'கூறுதுமே' என்று தன்மைப் பன்மையில் இங்கே குறித்தார்.

ஆழ்வார் காலத்தில் திருவோணத் திருவிழா பெரும் விழாவாக இருந்தது என்பது இந்தப் பாசுரத்தின் மூலம் அறிகிறோம். திருவோணம் என்ற பண்டிகை இன்று கேரளத்தில் மட்டும் பெரும் ஈடுபாட்டோடு கொண்டாடப் படுகிறது. அந்தத் திருவிழா வாமன அவதாரம், மாவலிப் பேரரசன் இவர்களின் தொடர்புடையதாகக் கொண்டாடப்படுகிறது. இங்கே ஆழ்வார் திருவோணத் திருவிழவில் என்று கூறும் போது நரசிம்ம அவதாரத்தை நினைவில் கொள்வதைப் பார்த்தால் திருவோணத் திருவிழாவிற்கும் நரசிம்ம அவதாரத்திற்கும் தொடர்பு இருக்கிறது என்று தோன்றுகிறது.

&&&

பாசுரம் 7. (1 Apr 2008)

தீயிற் பொலிகின்ற செஞ்சுடராழி திகழ் திருச்சக்கரத்தின்
கோயிற் பொறியாலே ஒற்றுண்டு நின்று குடி குடி ஆட்செய்கின்றோம்
மாயப் பொருபடை வாணனை ஆயிரம் தோளும் பொழி குருதி
பாய சுழற்றிய ஆழிவல்லானுக்குப் பல்லாண்டு கூறுதுமே.


'இறைவனுக்கு நாங்கள் அடிமைகள்' என்று கூறும் விதமாகத் திருக்கோவிலிலே தீயில் வெம்மையாக்கப்பட்டதால் ஒளி பெற்று பொலிகின்ற சிவந்த சுடர் வீசும் திருவாழி ஆழ்வானின் திருவுருவச் சக்கரத்தின் பொறியாலே எங்கள் தோள்களில் அடையாளம் செய்து கொண்டு குடும்பம் குடும்பமாக இறைவனுக்குத் தொண்டு செய்கிறோம். மாயங்கள் பல செய்து போர் செய்யும் வாணாசுரனை அவனது ஆயிரம் தோள்களும் குருதி பாயும் படி திருவாழியாலே வெட்டி வீழ்த்திய வல்லவனுக்குப் பல்லாண்டு கூறுவோம்.

***

நான்காம் பாசுரத்தில் 'ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம்' என்று தொடங்கி தன் ஆத்மாவை அனுபவிப்பது என்னும் கைவல்யத்தில் ஆசை கொண்டுள்ளவர்களை 'வரம்பொழித்து வந்து விரைவில் கூடுங்கள்' என்றும் 'நாடும் நகரமும் நன்கறிய நமோ நாராயணாய என்று பாடும் மனமுடை பக்தர் ஆகுங்கள்' என்றும் அழைத்தார். அவர்கள் இப்போது நாடும் நகரம் நன்கறிய திருச்சக்கரத்தின் கோயிற்பொறியாலே ஒற்றுண்டு தங்களது வரம்பை ஒழித்து குடி குடி ஆட்செய்ய வந்ததனால் தன்னையும் அவர்கள் கூட்டத்தில் ஒருவராகக் கொண்டு 'கூறுதுமே' என்று தன்மைப் பன்மையால் சொன்னார் ஆழ்வார்.

&&&

எட்டாம் பாசுரத்தைச் சேமிக்க மறந்தேன். மன்னிக்கவும்.
&&&

பாசுரம் 9. (17 Apr 2008)

உடுத்துக் களைந்த நின் பீதகவாடை உடுத்துக் கலத்தது உண்டு
தொடுத்த துழாய் மலர் சூடிக் களைந்தன சூடும் இத்தொண்டர்களோம்
விடுத்த திசைக்கருமம் திருத்தித் திருவோணத் திருவிழவில்
படுத்த பைந்நாகணைப் பள்ளிகொண்டானுக்குப் பல்லாண்டு கூறுதுமே


இறைவா! நீ உடுத்துக் களைந்த உன்னுடைய பொன்னாடையை உடுத்துக் கொண்டும், நீ அமுது செய்த பின் மிகுந்திருக்கும் உணவை நீ உண்ட கலத்தில் இருந்து உண்டு கொண்டும், தொடுத்த துளசி மாலைகளை நீ சூடிக் களைந்த பின் சூடிக் கொண்டும் உனக்கே அடிமைகளாக நாங்கள் இருக்கிறோம். நீ எந்த திசையில் சென்று என்ன செயல் செய்ய ஆணையிடுகிறாயோ அவற்றை மிகத் திறமையுடன் திருத்தமாகச் செய்து அகன்று பரந்திருக்கும் படமெடுத்த பாம்புப் படுக்கையில் பள்ளி கொண்ட உனக்கு திருவோணத் திருவிழா நாளில் பல்லாண்டு கூறுவோம்.

***

'வாழாட்பட்டு', 'எந்தை தந்தை தந்தை' என்று தொடங்கிய பாசுரங்களால் சொல்லப்பட்ட 'இறைவனைத் தவிர வேறொன்றும் வேண்டாத' பாகவதர்கள் இறைவனை நோக்கிப் பல்லாண்டு பாடுவதை இந்தப் பாசுரம் சொல்கிறது. வேறொரு பயனும் வேண்டாமையால் அவர்களின் வாழ்க்கைக்கு வேண்டிய எல்லாமும் - அடிப்படைத் தேவைகளான உடை, உணவு, இருப்பிடம் எல்லாமும் - அவன் திருக்கோவிலிலேயே அவர்களுக்குக் கிடைக்கிறது. அதனால் அவர்கள் தங்களுக்கு என்று வேறொன்றும் செய்ய வேண்டியதின்றி இறைவனின் ஆணைப்படியான செயல்களையே செய்து கொண்டிருக்கிறார்கள்.

&&&

பாசுரம் 10. (22 Apr 2008)

எந்நாள் எம்பெருமான் உன் தனக்கு அடியோம் என்று எழுத்துப்பட்ட
அந்நாளே அடியோங்கள் அடிக்குடில் வீடு பெற்று உய்ந்தது காண்
செந்நாள் தோற்றித் திருமதுரையுள் சிலை குனித்து ஐந்தலைய
பைந்நாகத் தலைப் பாய்ந்தவனே உன்னைப் பல்லாண்டு கூறுதுமே

எம்பெருமானே. எந்த நாளில் நாங்கள் உனக்கு அடிமைகள் என்று எழுதிக் கொடுத்தோமோ அந்த நாள் முதலாகவே அடியவர்களாகிய எங்களின் உடைமைகளும் உரியவர்களும் (குடும்பம், உறவினர், முன்னோர், வழி வருவோர் என அனைவரும்) விடுதலை பெற்று நல்ல நிலையை அடைந்துவிட்டது. செம்மையுடைய திருநாளில் தோன்றி திருமதுரையாம் வடமதுரையில் கம்சனுடைய யாகசாலையிலிருந்த வில்லை வளைத்து முறித்து, படமெடுத்தாடும் ஐந்து தலைகளை உடைய காளிய நாகத்தின் தலை மேல் குதித்து ஆடியவனே! உன்னை பல்லாண்டு கூறி வாழ்த்துகின்றோம்.

***

'ஏடு நிலத்தில்', 'தீயிற் பொலிகின்ற' என்று தொடங்கும் பாசுரங்களில் சொல்லப்பட்ட 'தன் ஆத்மாவை தனித்து உணர்ந்து அனுபவிக்கும்' கைவல்ய மோக்ஷத்தை வேண்டி நின்றவர்கள் இறைவனுக்குப் பல்லாண்டு பாடுவதில் ருசி உண்டாகி அவனை நோக்கிப் பாடுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கைவல்ய மோக்ஷத்தை அடைந்திருந்தால் அவர்கள் மட்டுமே உய்ந்து போயிருப்பார்கள். இறைவனுக்கு அடியவர் என்று எழுத்துப்பட்டதால் அவர்களின் அடிக்குடில், அவர்களின் தொடர்பு கொண்ட யாவரும் எவையும் உய்ந்து போயின. முன்பு 'வரம்பொழித்து வந்து ஒல்லை கூடுமின்' என்று ஆழ்வாரால் அழைக்கப்பட்டு 'கோயிற் பொறியாலே ஒற்றுண்டு குடிகுடியாட் செய்கின்றோம்' என்று வந்தார்கள் கைவல்யத்தை விரும்பியவர்கள். அப்படி குடிகுடியாட்செய்ததால் விளைந்த பயனைப் பற்றி இங்கே மகிழ்ச்சியுடன் பேசி நிற்கின்றார்கள்.

&&&

பாசுரம் 11. (29 Apr 2008)

அல்வழக்கொன்றுமில்லா அணிகோட்டியர்கோன் அபிமானதுங்கன்
செல்வனைப் போலத் திருமாலே நானும் உனக்குப் பழவடியேன்
நல்வகையால் நமோ நாராயணாயவென்று நாமம் பல பரவி
பல்வகையாலும் பவித்திரனே உன்னைப் பல்லாண்டு கூறுவனே


திருமகள் கேள்வனே! மேலோர் கடிந்த வழிமுறைகள் ஒன்றையும் செய்யாத, அழகிய திருக்கோஷ்டியூரில் வாழ்பவர்களுக்குத் தலைவனான, உன்னுடைய அளவில்லாத அன்பைப் பெற்ற செல்வ நம்பியைப் போலவே நானும் உனக்கு பழமையான அடியவன். அடியேனுக்கு நன்மை உண்டாகும் படி 'நமோ நாராயணா' என்று உன்னுடைய திருநாமங்கள் பலவற்றைப் பாடிப் பரவி பல வகைகளிலும் குற்றமொன்றில்லாத கோவிந்தனே உனக்குப் பல்லாண்டு கூறுகிறேன்.

***

'அண்டக்குலத்துக்கு', 'நெய்யிடை' என்று தொடங்கிய பாசுரங்களில் பேசப்பட்ட உலக செல்வங்களை விரும்பும் ஐஸ்வர்யார்த்திகள் திருந்தி எம்பெருமானுக்குப் பல்லாண்டு கூறுவதை இந்தப் பாசுரம் கூறுகிறது.

செல்வநம்பி என்பார் பெரியாழ்வாரின் ஆசாரியர் என்றும் அவர் பாண்டியனுக்கு அமைச்சராக இருந்தார் என்றும் ஒரு செய்தி உண்டு.

&&&

பாசுரம் 12. (07 May 2008)

பல்லாண்டென்று பவித்திரனைப் பரமேட்டியை சார்ங்கமென்னும்
வில்லாண்டான் தன்னை வில்லிபுத்தூர் விட்டுசித்தன் விரும்பிய சொல்
நல்லாண்டென்று நவின்று உரைப்பார் நமோ நாராயணாய என்று
பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்திருந்து ஏத்துவர் பல்லாண்டே



பல்லாண்டு பல்லாண்டு என்று தூயவனை, உயர்ந்த நிலையாம் பரமபதத்திற்குரியவனை, சார்ங்கம் என்னும் வில்லை உடையவனை, வில்லிபுத்தூர் விஷ்ணு சித்தர் விரும்பிச் சொன்ன இந்த பாசுரங்கள் கிடைத்தது நம் பேறு என்று சொல்லி, அந்தப் பாசுரங்களால் வணங்கி 'நமோ நாராயணாய' என்று எட்டெழுத்து மந்திரத்தை உரைப்பவர் பரமாத்மனான எம்பெருமானை எல்லா நேரங்களிலும் சூழ்ந்து இருந்து பல்லாண்டு காலங்களும் வணங்கிக் கொண்டிருப்பார்கள்

***

பன்னிரண்டாவது பாசுரமாகிய இந்தப் பாசுரம் 'நூற்பயன்' கூறுகிறது. தூயவனும் பரமபத நாதனும் ஆன எம்பெருமானை இந்தப் பாசுரங்களால் போற்றித் துதித்தால் அந்த பரமபதமே கிடைக்கும் என்பது நூற்பயன். முதல் இரண்டு பாசுரங்களும் எம்பெருமானை நோக்கி ஆழ்வார் பாடுவதாக அமைந்திருக்கிறது. அடுத்து மும்மூன்று பாசுரங்களால் 'எம்பெருமானையே கதியும் பயனுமாகக் கொண்டவர்கள்', 'தன்னுடைய ஆத்மாவை அனுபவிக்க விரும்புபவர்கள்', 'உலக செல்வங்களை விரும்புபவர்கள்' என்ற மூவகை பக்தர்களைச் சொன்னார். முதல் மூன்றால் (3,4,5) அப்படிப்பட்டவர்களைப் பல்லாண்டு பாட அழைத்தார். அடுத்த மூன்றால் (6,7,8) அந்த மூவகையினரும் பல்லாண்டு பாட வந்து சேர்ந்ததைக் கூறினார். அடுத்த மூன்றால் (9,10,11) அந்த மூவகையினரும் எம்பெருமானை நோக்கிப் பாடுவதாக அமைந்திருக்கிறது. கடைசிப் பாசுரமான இந்தப் பாசுரம் (12) நூற்பயனைக் கூறுகிறது.

இந்தப் பாசுரத்துடன் பெரியாழ்வார் அருளிச் செய்த 'திருப்பல்லாண்டு' நிறைவு பெறுகிறது. அடுத்து 'பெரியாழ்வார் திருமொழி' பாசுரங்களைப் பார்க்கலாம். இங்கே சுருக்கமாகச் சொல்லிச் சென்ற விளக்கங்களை இன்னும் விரித்து 'விஷ்ணு சித்தன்' வலைப்பதிவில் எழுத எண்ணியிருக்கிறேன். எம்பெருமானின் திருவருள் முன்னிற்கட்டும்.

Thursday, February 14, 2008

மூழ்காத ஷிப்பே ப்ரெண்ட்ஷிப்பா....

அன்பென்றால் அதில் காதல் மட்டுமா அடங்கும். நட்பும் அன்பு தானே. அதனால் தானோ என்னவோ நட்பினைப் பற்றிய இந்த கவிதைகளை மின்னஞ்சலில் இன்று ஒருவருக்கொருவர் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள் நண்பர்கள். அந்தக் கவிதைகளில் இரண்டு எனக்குப் பிடித்தன. அவற்றை இங்கே இடுகிறேன். எழுதியவர் யார் என்று தெரியாது.

நீ என்னிடம் பேசியதை விட
எனக்காகப் பேசியதில் தான்
உணர்ந்தேன் நமக்கான நட்பை.


தேர்வு முடிந்த கடைசி நாளில்
நினைவேட்டில் கையொப்பம் வாங்குகிற
எவருக்கும் தெரிவதில்லை
அது ஒரு
நட்பு முறிவிற்கான
சம்மத உடன்படிக்கை என்று.

Wednesday, February 13, 2008

பண்டைய தமிழகத்தில் காதல் திருவிழா - Valentines Day

அனைவருக்கும் இனிய காதலர் திருநாள் நல்வாழ்த்துகள்.

இன்றைக்கு நாம் காதலர் தினம் என்று ஒரே ஒரு நாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். அதற்குக் கூட 'வெளிநாட்டு இறக்குமதி; நம் பண்பாட்டிற்கு ஒவ்வாதது' என்றொரு மறுப்பும் சொல்லப்படுகிறது. இன்றைய நிலை இப்படி இருக்க பண்டைத் தமிழகத்தில் காதல் திருவிழா ஏறக்குறைய ஒரு மாத காலத்திற்கு நடந்தது என்று சொன்னால் அது பலருக்கும் வியப்பாக இருக்கலாம். ஆனால் பழந்தமிழ் இலக்கிய மரபை அறிந்தவர்க்கு அதில் வியப்புற ஒன்றுமில்லை. காதலையும் வீரத்தையும் இரு கண்களாகக் கொண்டு அகம், புறம் என்று இலக்கிய வகைகளைக் கொண்டிருந்த தமிழகம் காதலை ஒரு மாத காலம் கொண்டாடியிருக்கும் என்பதில் ஐயமில்லை.

மாசி மாத சித்திரை நட்சத்திர நாளிலிருந்து பங்குனி மாத சித்திரை நட்சத்திர நாள் வரை மொத்தம் இருபத்தி எட்டு நாட்கள் பழந்தமிழகத்தில் காதல் திருவிழா நடைபெற்றிருக்கிறது. இப்படி இருபத்தி எட்டு நாட்கள் விழா நடந்தது என்பதை மணிமேகலை 'நால் ஏழ் நாளினும் நன்கு அறிந்தீர்' என்று சொல்கிறது.

இந்தத் திருவிழா எந்த விழா என்று கேட்கிறீர்களா? இதனைக் காமன் விழா என்று அழைத்திருக்கிறார்கள். காமனின் கரும்புவில்லைப் போற்றுவது போல் வில் விழா என்றும் அழைத்திருக்கிறார்கள். இன்னொரு பெயரைச் சொன்னால் எல்லோருக்கும் இந்தக் காதல் திருவிழா எந்த விழா என்று புரியும். அதற்கு இந்திர விழா என்றும் பெயர் இருந்திருக்கிறது.

இந்திர விழாவைப் பற்றி சிலப்பதிகாரமும் மணிமேகலையும் நன்கு சொல்லியிருக்கிறது. அந்த விழா எப்படிக் கொண்டாடப்பட்டது, யாரால் தொடங்கப்பட்டது, எங்கெல்லாம் கொண்டாடப்பட்டது, அந்த விழாவிற்கான ஏற்பாடுகள் எப்படி இருந்தன என்றெல்லாம் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. புகார் நகரத்தில் நடந்த அந்த இந்திர விழாவைப் பற்றிப் பேசும் சிலப்பதிகாரம் கூடல்மாநகரான மதுரையில் நடந்த வில் விழாவைப் பற்றியும் பேசுகிறது.

இந்த இடுகையை ஒரு முன்னோட்டமாக இடுகிறேன். இங்கே சொன்னவற்றை எல்லாம் இன்னும் நன்கு விரித்து இலக்கியப் பகுதிகளை எல்லாம் எடுத்து எழுதி ஒரு தொடராக இடலாமா என்றொரு எண்ணமும் இருக்கிறது. ஆனால் இதனை இப்போது செய்வதற்கு நேரம் இருக்கிறதா என்று தெரியவில்லை. படிக்க ஆவலுடன் மக்கள் இருந்தால் எழுத நேரத்தை உண்டாக்கிக் கொள்வேன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதைப் பொறுத்து இந்தத் தொடர் தொடங்கப்படும். :-)

உடுக்கை இழந்தவன் கை - 4 (பாரி வள்ளலின் கதை)

மாலை நேரம் ஆகிவிட்டது. பறம்பு மலையில் ஏறிக் கொண்டிருந்த கபிலருக்கு இருட்டுவதற்குள் பாரியின் மாளிகையைச் சென்றடைய வேண்டுமே என்ற கவலை. முடிந்த அளவு விரைவாக மலையேறிக் கொண்டிருக்கிறார். புலவரின் நடை வேகத்தை மலையின் ஏற்றமோ பாதையில் கிடந்த சிறு கற்களோ குறைக்க வில்லை. பாரியைக் காணும் ஆவலும் புலவரின் நடையை விரைவுபடுத்தியது. என்ன தான் நடையில் விரைவைக் காட்டினாலும் தானாகப் புலன்களின் வழியே உள் நுழைந்து மனத்தை மயக்கும் பறம்பு மலையின் இயற்கை அழகும் நறுமணமும் நல்லொலிகளும் புலவரின் விரைவை அவ்வப்போது மட்டுப்படுத்திக் கொண்டிருந்தன.

திரும்பிய திசை எல்லாம் இயற்கையின் வளம் கொட்டிக் கிடந்தது. மரங்களில் வேங்கையும் சந்தனமும் நிறைந்து வளர்ந்திருந்தன. மலர்களிலோ விதவிதமான மலர்கள். எத்தனை வண்ணங்கள். எத்தனை மணங்கள். பட்டியலிட்டு முடியாது. விதவிதமான மலர்கள் என்றென்றும் மலர்ந்து இருக்கும் என்பதற்கு அடையாளமாக மரங்கள் தோறும் தேனடைகள். எத்தனை முறை பார்த்தாலும் இந்த அழகைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் இருந்தது. இப்படி பிரான் மலையின் அழகை வியந்து கொண்டே முடிந்த வரை விரைவாக கபிலர் நடந்து கொண்டிருந்தார்.

இந்த மலை வளத்தை எல்லாம் காணும் போது இந்த மலையில் மாளிகை மட்டுமே பாரிக்குரியது என்பதும் மற்றபடி இந்த மலையில் இருக்கும் ஊர்களை எல்லாம் பரிசிலர்களுக்கு ஏற்கனவே பாரி வழங்கிவிட்டான் என்பதும் நினைவிற்கு வந்தது. தனக்குரியதை எல்லாம் இப்படி வாரி வழங்கிவிட்டு பெயருக்கு இந்த பறம்பு நாட்டிற்கு அரசன் என்று வாழ்கிறானே இந்த பாரி என்று தோன்றியது. இனி மேலும் புலவர்களும் பாணர்களும் வந்தால் என்ன கொடுப்பான் பாரி என்றும் கேள்வி எழுந்தது.

இந்த எண்ணங்களோடு நடந்து கொண்டிருந்த கபிலரை அருகில் இருந்த வேங்கை மரத்திலிருந்து வந்த நறும்புகை கவர்ந்தது. வேங்கை மரத்திற்கு இவ்வளவு மணமா என்று வியப்பு கூடியது.



'வேங்கை மரம் வலுவுள்ளது என்று அறிவேன். ஆனால் அது நறுமணமும் மிக்கதோ? இந்த நறும்புகை எங்கிருந்து வருகிறது? ஓ இது வேங்கையிலிருந்து வரும் புகை இல்லை. மரத்தின் அருகில் ஒரு குறத்தி குளிர் காய்வதற்காக சிறு நெருப்பு மூட்டியிருக்கிறாள். அதிலிட்ட விறகு சந்தன மர விறகானதால் இந்த நறுமணம்.'

தனக்குள் சிரித்துக் கொண்டார் கபிலர்.

'இப்படித் தானே பாரியும் நடந்து கொள்கிறான். சந்தன மர விறகு தான் எரிந்து வேங்கை மரத்திற்கு நறுமணம் ஊட்டுவது போல் பாரி தன்னிடம் இருக்கும் உடைமைகளை எல்லாம் பரிசிலர்களுக்கு அளித்து விட்டு தானும் பரிசிலாக மாறி நிற்கிறானே. என்னே இவன் பெருமை'

மனத்தில் தோன்றிய இந்த எண்ணங்கள் ஒரு பாடலாக மாறியது. அழகிய அந்த இயற்கைச் சூழலுக்கு ஏற்ற வகையில் இயன்மொழியாக அமைந்த அந்த பாடலை வாய்விட்டுப் பாடினார் புலவர்.

குறத்தி மாட்டிய வறற்கடைக் கொள்ளி
ஆரம் ஆதலில் அம்புகை அயலது
சாரல் வேங்கைப் பூஞ்சினை தவழும்
பறம்பு பாடினரதுவே அறம் பூண்டு
பாரியும் பரிசிலர் இரப்பின்
வாரேன் என்னான் அவர் வரையன்னே.


(குறத்தி ஏற்படுத்திய காய்ந்த விறகின் கொள்ளி ஆரம் எனும் சந்தனம் ஆதலால் அதன் நறும்புகை அருகில் இருக்கும் சாரலில் வளர்ந்த வேங்கையின் பூவினையுடைய கிளைகளிலும் தவழும். பறம்பு மலை முழுக்க பாடிப் பரிசில் கொண்ட பாணர்களின் உடைமை. வழங்குதல் எனும் அறம் பூண்ட பாரியும் பரிசிலர் வேண்டினால் தன்னையே கொடுப்பான்; அவர்கள் பின்னே வரமாட்டேன் என்று சொல்லான். வேண்டியவர்கள் எல்லையில் சென்று நிற்பான்.)

வியப்பும் மகிழ்ச்சியும் பாடலும் பொருளும் என்று பாரியின் மாளிகையை நோக்கிச் சென்று கொண்டிருந்ததால் நடைக் களைப்பு எதுவும் தோன்றவில்லை கபிலருக்கு. அன்றைய நாள் முழு நிலவு நாளாகவும் இருந்ததால் இருள் கவியத் தொடங்கினாலும் பாதை நன்கு தெரிந்தது. இன்னும் அரை நாழிகையில் பாரியின் மாளிகையை அடைந்துவிடலாம் என்று இன்னும் நடையினை விரைவுபடுத்தினார் கபிலர்.

***

தாயில்லாப் பிள்ளைகள் என்று பெயர் தானே ஒழிய அங்கவைக்கும் சங்கவைக்கும் தாயில்லா குறையே தெரியவில்லை. தாயுமாகித் தந்தையுமாகி நல்சுற்றமுமாகி பாரி அவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டான். போதாததற்கு பெரியப்பா கபிலர் வேறு. நல்லாசானாக அவர்களுக்கு நல்ல கல்வியும் கேள்வியும் அமையுமாறு பார்த்துக் கொண்டார் கபிலர். என்ன தான் தாய், தந்தை, ஆசானாக இவர்கள் இருந்தாலும் நல்ல நட்பு ஒன்றிருந்தால் வேறெந்த குறையும் தெரியாது இல்லையா? ஒத்த வயதினர் நட்பாக இருக்கும் போது நல்லது கெட்டது தெரியாமல் புரியாமல் எல்லாவற்றையும் அனுபவித்துத் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கும். அதுவே கொஞ்சம் வயதில் மூத்தவர் நட்பாக இருந்தால் நல்லது கெட்டது சொல்லி அன்போடு நல்வழி காட்டுவார்கள் இல்லையா? அப்படி மூத்தவர்கள் நட்பாக இருப்பது எல்லோருக்கும் அமைவதில்லை. அங்கவையும் சங்கவையும் அந்த வகையில் நல்லூழைக் கொண்டிருக்கிறார்கள். பாரியும் கபிலரும் அவர்களுக்கு நல்ல நண்பர்களாகவும் விளங்கினார்கள்.

ஒவ்வொரு முழு நிலவு இரவும் மாளிகையின் நிலா முற்றத்தில் தான் இரவு உணவு அருந்திவிட்டு நால்வரும் அமர்ந்து இரவு நான்கு நாழிகை வரையில் பேசிக் கொண்டிருப்பார்கள். இன்று முழு நிலவு நாள். மாலை மயங்கிவிட்டது. இன்னும் கபிலரைக் காணவில்லை. அவர் தமிழ் சங்க அழைப்பின் பேரில் மதுரைக்குக் கிளம்பி ஒரு பட்சம் ஆகிவிட்டது. அவர் கிளம்பிச் சென்ற சில நாட்களுக்கு ஒன்றும் தெரியவில்லை. ஆனால் நாட்கள் செல்லச் செல்லப் பாரிக்கும் அவன் பெண்களுக்கும் கபிலர் இல்லாத குறை நன்கு தெரியத் தொடங்கிவிட்டது. எப்படியும் முழு நிலவு நாளுக்குள் திரும்பி வந்துவிடுவார் என்ற உறுதி இருந்ததால் அவர் வரும் நாளையும் பொழுதையும் எதிர் நோக்கிக் காத்துக் கொண்டிருந்தார்கள்.

நேரம் செல்லச் செல்ல பாரிக்கு பரபரப்பு அதிகமானது. இரு வீரர்களை அழைத்து கபிலர் வரும் வழியில் சென்று பார்க்குமாறு சொன்னான். அவர்களும் சிறிது தொலைவு சென்றுவிட்டு கபிலரைக் காணவில்லை என்று வந்துவிட்டார்கள். கபிலருக்கு ஏதேனும் தீங்கு நேர்ந்திருக்குமோ என்ற கவலையும் பாரிக்குச் சேர்ந்து கொண்டது.

முழு நிலா நாளன்று ஒரு இளமையான ஆடாகப் பார்த்து அறுத்து அதன் குருதியையும் புலாலையும் தனித் தனியே சமைத்து மிகுந்த குருதியையும் புலாலையும் இட்டு சமைத்த செஞ்சோற்றுடன் அவற்றை வேலனுக்குப் படைத்து உண்பதும் பல நாட்களாகத் தொடர்ந்து வரும் வழக்கம். இன்று மாலை வேலனுக்கு குருதியும் புலாலும் செஞ்சோறும் படைத்து வேலனின் வெறியாட்டமும் முடிந்துவிட்டது. வேலவன் கோட்டத்தில் நின்று வேலனைத் தொழுதுக் கொண்டிருந்த அந்த நேரத்திலாவது கபிலர் வந்துவிடுவார் என்று பாரி எண்ணினான். தந்தையின் பரபரப்பை அப்போது கண்ட மகள்கள் இருவரும் அவரது துடிப்பைப் புரிந்து கொண்டனர். கபிலருக்கு எந்த தீங்கும் நேரக் கூடாது என்று அவர்கள் இருவரும் கந்தனை வேண்டிக் கொண்டனர்.


இறைவனைத் தொழுது முடித்த பின்னர் பாரி உடனே அந்த இடத்தை விட்டு நகன்றுவிட்டான். பாரி மகளிர் இருவரும் சிறிது நேரம் கூடுதலாக அங்கு தங்கி இறை வழிபாட்டைத் தொடர்ந்து கொண்டிருந்தனர். வேலனுக்குப் படைத்த உணவு நறவுடன் சேர்த்து உண்ணப்படுவதற்காக நிலா முற்றத்திற்கும் சென்று அடைந்துவிட்டது. கபிலர் வராமல் எப்படி நிலா முற்றத்தில் உணவுண்பது என்ற தயக்கமும் கபிலருக்கு என்னவாயிற்றோ என்ற கலக்கமும் கொண்டு பாரி நிலை கொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்தான்.

அந்த நேரத்தில் ஒரு வீரன் ஓடி வந்து வணங்கி கபிலரின் வருகையைச் சொன்னான். சேந்தனுக்கு மனமார நன்றி சொல்லிவிட்டு கபிலரைக் காண விரைந்தான் பாரி.

"வாருங்கள் நண்பரே. ஏன் இந்த தாமதம்? எங்கே நீங்கள் இன்று வராமல் நின்றுவிடுவீர்களோ என்று தவித்துப் போனேன்"

"பாரி. அதெப்படி நான் வராமல் போவேன்? இன்று முழு நிலவு நாளல்லவா? சொன்னபடி இரவு உணவிற்கு வந்துவிட்டேன் பார்"

"கபிலரே. நீங்கள் வரத் தாமதம் ஆனதால் வீரர்களை அனுப்பி வழி பார்த்து வரச் சொன்னேன். உங்களைக் காணவில்லை என்று சொன்னார்களே?"

"அவர்கள் நான் வழக்கமாக வரும் வழியில் சென்று பார்த்திருப்பார்கள். விரைவாக இங்கு வர வேண்டும் என்பதற்காக நான் வேறு வழியின் வந்தேன் பாரி"

எல்லா பரபரப்பும் கவலையும் இப்போது நீங்கிவிட்டன. கபிலர் சொன்னதைக் கேட்டு புன்சிரிப்பு உதிர்த்தான் பாரி.

"கபிலரே. வேலன் வெறியாட்டமும் முடிந்து உணவு நிலா முற்றத்திற்குச் சென்றுவிட்டது. நீங்கள் எப்போது சொல்கிறீர்களோ அப்போது நாம் எல்லோரும் சென்று உணவருந்தலாம்"

"உடனே செல்லலாம் பாரி. நடந்த களைப்பிற்கு ஊனையும் நறவையும் உண்டால் வெகு நன்றாக இருக்கும். இதோ கை, கால், முகம் அலம்பி வருகிறேன். எங்கே என் மகள்கள்?"

"அவர்கள் இருவரும் இன்னும் சேயோனைத் தொழுது கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குச் சொல்லி அனுப்புகிறேன்"

***

பாடற்குறிப்பு:

புறநானூறு 108ம் பாடல். திணை: பாடாண்திணை (தலைவனைப் புகழ்ந்து பாடுவது), துறை: இயன்மொழி (உள்ளதை உள்ளபடி பாடுவது); பாடியவர்: கபிலர். பாடப்பட்டவர்: பாரிவேள்.

Thursday, February 07, 2008

ஆய்தம்

அண்மையில் ஆய்தத்தைப் பற்றிய சிறு கட்டுரை ஒன்றைப் படித்தேன். அதிலிருந்த செய்திகளில் என் மனத்தில் நின்றவற்றை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

ஆய்த எழுத்தைப் பற்றி நம் அனைவருக்கும் தெரியும். தற்போதைய பயன்பாட்டில் நாம் ஃ என்ற ஆய்த எழுத்தை அவ்வளவாகப் புழங்காவிட்டாலும் தமிழ் கற்றுக் கொள்ளும் போது அதனையும் கற்றுக் கொள்கிறோம்; இலக்கியங்களிலும் அந்த எழுத்து புழங்குவதைக் கண்டிருக்கிறோம். இந்த எழுத்துக்கு ஏன் ஆய்த எழுத்து என்ற பெயர் வந்தது என்பதற்கு இந்தக் கட்டுரையாளர் நல்லதொரு விளக்கம் சொல்லியிருந்தார்.

இந்தக் கட்டுரையைப் படிக்கும் வரை சின்ன வயதில் எனக்கு யாரோ சொன்னது போல் இது கேடயத்தில் இருக்கும் முக்கோணப் புள்ளிகளைப் போல் எழுதப் படுவதால் ஆயுத எழுத்து என்றிருந்து ஆய்த எழுத்தாகியது என்று தான் நினைத்திருந்தேன். ஆனால் தமிழறிஞர்களும் இலக்கிய உரைகளும் எங்கேயும் இதனை ஆயுத எழுத்து என்று சொல்ல வில்லை; ஆய்த எழுத்து என்றே சொன்னார்கள். அதனால் மனதில் ஐயம் இருந்தது. பதிவுகளிலும் ஆய்தம் என்றே எழுதி வந்தேன்.

ஆய்தம் என்பது ஆய்தல் என்ற சொல்லிலிருந்து வந்திருக்கலாம்; ஆய்தல் என்பதற்கு நுணுகிய ஓசை என்ற பொருளுண்டு என்று கட்டுரையாளர் சொல்லிவிட்டுப் பின்னர் வேறுவகையில் இந்தப் பெயருக்கு விளக்கம் தருகிறார்.

ஆய்தத்திற்கு யகர மெய்யொலி (ய்) இயல்பானது என்று சொல்கிறார். அதற்கு எடுத்துக்காட்டாக

செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃகதனில் கூரிய தில்


என்னும் திருக்குறள் 759 குறட்பாவைக் காட்டுகிறார். இங்கே எதுகை இலக்கணப்படி செய்க என்ற சொல்லிற்கு எஃக என்ற சொல்லை வள்ளுவர் புழங்கியிருப்பதால் இது ய் என்பதற்கு ஒட்டிய ஓசையைக் கொண்டிருந்தது என்கிறார்.

அ - அகரம் எனப்படுவது போல் தொடக்கத்தில் ஃ - அஃதம் எனப்பட்டிருக்க வேண்டும். அஃதத்தின் யகர மெய் ஒலிப்பினால் அஃதம் அய்தம் என பலுக்கப்பட்டு பின்னர் ஆய்தம் ஆகியிருக்க வேண்டும் என்று சொல்கிறார்.

இந்த மாற்றங்கள் தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே ஏற்பட்டிருக்க வேண்டும் என்று சொல்கிறார். ஏன் அப்படி சொல்கிறார் என்று தரவுகள் இல்லை. தேடிப் பார்த்தால் கிடைக்கும்.

திருவாய்மொழியிலிருந்து இன்னொரு எடுத்துக்காட்டும் தருகிறார்.

இஃதே யானுன்னைக் கொள்வது எஞ்ஞான்றும் என்
மைதோய் சோதி மணிவண்ண எந்தாய்
எய்தா நின்கழல் யானெய்த ஞானக்
கைதா காலக் கழிவு செய்யேலே.


இந்தப் பாசுரத்திலும் இஃதே என்பது எதுகை இலக்கணப்படி யகர் மெய்யாக எடுத்தாளப்பட்டிருக்கிறது. மைதோய், எய்தா, கைதா என்ற அடுத்த மூன்று அடிகளிலும் இருக்கும் சொற்களைப் பார்க்கும் போது இங்கும் ஆய்தம் யகர மெய்யொலி கொண்டது என்பது தெரிகிறது.

இப்படி இரண்டு எடுத்துக்காட்டுகளால் எப்படி ஆய்தம் யகர மெய்யொலி பெறுகிறது என்று காட்டுவதன் மூலம் அஃதம் --> அய்தம் --> ஆய்தம் என்ற தன் கருத்துக்கு வலு சேர்க்கிறார். ஆனால் அதே நேரத்தில் ஆய்தம் குகர ஒலியையும் பெறுவதை இலக்கிய எடுத்துகாட்டுகளால் காட்டுகிறார்.

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள் வைப்புழி (குறள் 226)

அற்றால் அளவறிந்துண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு (குறள் 943)

இந்த இரண்டு இடங்களிலும் ஆய்தம் யகர மெய்யொலி பெற்றால் தளை பிறழ்ந்துவிடும். குகரவொலி ஏற்றால் மாமுன் நிரையென வெண்பா இலக்கணம் பிறலாது. (இந்தப் பகுதி எனக்கு முழுவதும் புரியவில்லை. அவர் சொன்னதையே சொல்லிவிட்டேன்)

இவ்வளவு அருமையான கருத்தைச் சொன்ன கட்டுரையாளரின் பெயர் தான் அந்த கட்டுரையில் கிடைக்கவில்லை. அவர் யாராக இருந்தாலும் அவருக்கு என் நன்றிகள்.

உடுக்கை இழந்தவன் கை - 3 (பாரி வள்ளலின் கதை)



முன்கதை சுருக்கம்: வழியில் ஒரு பாணரையும் விறலியையும் கபிலர் சந்திக்கிறார். கடையேழு வள்ளல்களைப் பற்றி அவர்களுக்குச் சொன்ன பின்னர் விறலி தன் மனத்தில் வெகு நாட்களாக இருக்கும் ஆசையைப் பற்றி கூறுகிறாள். தொடர்ச்சி இங்கே.

***

"பொன்னணி பெற வழியிருக்கிறதா?"

"உண்டு அம்மையே. நம் பாரி வேள் இருக்க பயமேன்?"

"ஐயா. தங்களைப் போன்ற புலவர் பெருமக்களும் இசை வல்லுனர்களான பாணர்களும் விறலியர்களும் சென்று கேட்டால் நம் மன்னர் பரிசில் தர வாய்ப்புண்டு. நானோ இரண்டு வகைகளிலும் இல்லை. ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை என்பது போல் எங்கள் வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது"

"தயக்கமே வேண்டாம் அம்மையே. யாராக இருந்தாலும் எத்தன்மையராக இருந்தாலும் இரவலராகச் சென்றால் பாரி கட்டாயம் பரிசில் வழங்குவான்"

"எந்த வித திறமையும் இன்றி மன்னர் முன்பு சென்று இரக்க தயக்கமாகத் தான் இருக்கிறது ஐயா"

"தயக்கமே வேண்டாம். பாரியின் தன்மையை ஒரு உவமையின் மூலம் சொல்கிறேன். கேளுங்கள். பெண்மக்களும் ஆண்மக்களும் என நாம் அணியும் பூக்களில் நல்லவை தீயவை என்று சில பிரிவுகள் செய்து வைத்திருக்கிறோம் அல்லவா?"

"ஆம் ஐயா. மணம் வீசும் மலர்கள் நல்லவை என்றும் மணமில்லாமல் ஆனால் கண்ணைக் கவரும் வண்ணங்கள் உடைய மலர்கள் அல்லவை என்றும் பிரித்து வைத்திருக்கிறோம்"

"இவற்றில் எருக்கம் பூ எந்த வகையைச் சார்ந்தது?"

"அது நல்லதும் இல்லை தீயதும் இல்லை ஐயா"

"சரியாகச் சொன்னீர்கள் அம்மா. நல்லதும் தீயதும் என்று மக்கள் அணியும் பூக்களைச் சொல்கிறோம். ஆனால் எருக்கம் பூவினை மக்கள் அணிவதில்லை. அது நல்லதும் இல்லை; தீயதும் இல்லை. ஆனால் அந்தப் பூவைக் கடவுளுக்குச் சூட்டினால் கடவுள் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று சொல்கிறதா?"



"இல்லை ஐயா. எருக்கம் பூவினை விரும்பி ஏற்கும் கடவுளும் உண்டு"

"அது போலத் தான் தாயே. அறிவே இல்லாதவராயினும் வறுமை கொண்டவர் வேண்டிச் சென்றால் பாரியின் கைவண்மை அவரையும் ஏற்றுக் கொண்டு அவர்கள் விரும்பியதைக் கொடுக்கும்

நல்லவும் தீயவும் அல்ல குவியிணர்ப்
புல்லிலை எருக்கம் ஆயினும் உடையவை
கடவுள் பேணேம் என்னா ஆங்கு
மடவர் மெல்லியர் செல்லினும்
கடவன் பாரி கைவண்மையே
"

பாடலைக் கேட்டவுடன் பாணரின் மனம் மிக மகிழ்ந்தது. பாடலை உடனே மனத்தில் நிறுத்தி அதன் சுவையைப் பருகத் தொடங்கியது.

'ஆகா. என்ன அழகான பாடல் இது. புலவர் என்றால் இவரல்லவோ புலவர். ஒரு அழகான உவமையைக் கூறினாரே. எருக்கம் பூவை இகழ்வார் நடுவே எருக்கம் பூவினையும் ஏற்றுக் கொள்ளும் கணங்களின் தலைவனான கடவுளைப் பாரிக்கு உவமையாகச் சொன்னாரே. பெண்ணிடம் சொன்னதால் அவளுக்கு எளிதில் புரியும் ஒரு உவமையும் சொன்னாரோ? குவிந்த இணர் - குவிந்த மொட்டு, புல்லிலை - பச்சை இலை என்று எருக்கத்திற்கும் அழகு கூட்டிச் சொன்னாரே. எதுகைச் சுவையும் மோனைச் சுவையும் கூடிய இந்தப் பாடலை எளிதாக மனத்தில் நிறுத்தலாமே'

நாகையாரின் மனமோ இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை.

"ஐயா. நீங்கள் சொன்னது நன்கு புரிகிறது. எளியவளான நான் சென்று கேட்டாலும் நம் மன்னர் வேண்டியதைத் தருவார் என்று சொல்கிறீர்கள். ஆனால் ஏற்றுக் கொள்ளத் தான் இன்னும் என் மனம் மறுக்கிறது. எந்தவித சிறப்பும் இல்லாத நான் எந்த முகத்தோடு பாரிவேளிடம் சென்று பொன்னிழை இரப்பேன்?"

புன்னகை செய்தார் கபிலர். அவளது தயக்கம் நன்கு புரிந்தது. எந்தவித கையுறையும் இல்லாமல் அரசனைக் கண்டு எப்படி இரப்பது என்று தயங்குகிறாள். சிறிது நேரம் சிந்தித்ததில் ஒரு எண்ணம் தோன்றியது கபிலருக்கு.

"அம்மையே. எனக்கு ஒரு வழி தோன்றுகிறது. கையுறை இல்லாமல் எப்படி அரசன் முன் நின்று வேண்டுவது என்று நீ தயங்குகிறாய். ஒரு நல்ல பாடலுடன் சென்று அதனைப் பண்ணிசைத்துப் பாடினால் அவன் மனம் மகிழ்வானே. நான் ஒரு பாடலை இயற்றித் தருகிறேன். அதனைப் பாடிப் பரிசில் பெறுங்கள்"

அவர் சொல்வதும் சரி தான் என்று தோன்றியது விறலிக்கு. ஆனாலும் எப்படி வாய் திறந்து எனக்கு இந்தப் பரிசில் தான் வேண்டும் என்று கேட்பது. அரசன் கொடுப்பதை மனம் மகிழ்ந்து வாங்கிக் கொண்டு வர வேண்டுமே. குறிப்பாக இது தான் வேண்டும் என்று எப்படி கேட்பது?

தன் எண்ணத்தைக் கபிலரிடம் சொன்னாள்.

"அதற்கும் வழியிருக்கிறது அம்மையே. குறிப்பாக பொன்னிழை தான் வேண்டும் என்பதைப் பாடலிலேயே குறிப்பாக வைத்துவிடுகிறேன். இதோ பாடல்.

சேயிழை பெறுகுவை வாணுதல் விறலி
தடவுவாய்க் கலித்த மாயிதழ்க் குவளை
வண்டுபடு புதுமலர்த் தண் சிதர் கலாவப்
பெய்யினும் பெய்யாதாயினும் அருவி
கொள் உழு வியன்புலத்து உழைகாலாக
மால்புடை நெடுவரைக் கோடு தோறு இழிதரும்
நீரினும் இனிய சாயல்
பாரி வேள் பாற் பாடினை செலினே
"

பாடலைக் கேட்டவுடன் பாணர் இசையமைக்கத் தொடங்கிவிட்டார். பொன்னிழை வேண்டும் என்ற குறிப்பு பாடலின் முதல் வரியிலேயே இருப்பதைக் கண்டு மனம் மகிழ்ந்தாள் நாகை. இது வரை இருந்த தயக்கமெல்லாம் நீங்கிவிட்டது. பொன்னிழை கிடைப்பது உறுதி என்றும் தெரிந்தது.

"ஐயா. தங்களின் அறிவுரைப்படியே இந்தப் பாடலுக்கு இசை அமைத்துப் பாரிவேளிடம் பாடிப் பரிசில் பெறுகிறோம். எங்களுக்காக இந்தப் பாடலைப் பாடி அருளிய தங்களுக்கு நாங்கள் என்ன கைமாறு செய்யப் போகிறோம்?"

"அம்மையே. தாங்கள் அன்போடு அளித்த தேனும் தினைமாவும் தித்திப்பாய் இன்னும் என் நாவிலும் நெஞ்சிலும் நிற்கிறதே. அந்த அன்பும் ஆதரவும் போதாதா?"

மேலும் சிறிது நேரம் இருவருடனும் பேசிவிட்டு தன் வழியே தொடர்ந்து சென்றார் கபிலர்.

***

"அன்பரே. நேற்றிலிருந்து இந்தப் பாடலைப் பாடிப் பயின்று வருகிறோம். இரவு முழுவதும் இதே சிந்தனை. இந்தப் பாடலே மனத்தில் ஓடிக் கொண்டிருந்தது. இப்போது காலை உணவு ஏற்கும் நேரமும் வந்துவிட்டது. ஆனால் இன்னும் என் மனத்தில் பாடலின் சொற்கள் முழுவதுமாக நிற்கவில்லை. ஏன் இப்படி?"

"நாகை. உன் மனத்தில் பாடலின் வரிகள் நிற்காததற்குக் காரணம் ஒன்று தோன்றுகிறது எனக்கு. பாடலின் பொருள் உனக்கு முழுதும் புரிந்துவிட்டதா?"

"இல்லை அன்பரே. முதலும் கடைசியுமாக சில வரிகள் புரிகின்றன. மற்ற வரிகளுக்கு முழுப் பொருளும் புரியவில்லை."

"நல்லது. பாடலின் பொருளைச் சொல்கிறேன். கேள். பொருள் புரிந்து பாடினால் பாடலின் வரிகள் மனத்தில் எளிதாக நிற்கும்.

தட உவாய் என்றால் மிகப்பெரிய குளம். அந்தக் குளத்தில் கரிய நிற இதழ்களைக் கொண்ட குவளைப்பூக்கள் நிறைந்து இருக்கின்றனவாம். அவற்றைத் தான் தட உவாய்க் கலித்த மா இதழ்க் குவளை என்கிறார். மாயோன் என்று கரிய நிறம் கொண்டவனையும் மாயோள் என்று கரிய நிறம் கொண்டவளையும் சொல்லுவோமே. இங்கே கரிய இதழை மாயிதழ் என்று சொல்கிறார் புலவர். "


"மாயிதழ் என்பது கரிய இதழா. இப்போது புரிகிறது. குவளைப்பூவிற்கு சிறு இதழ் தானே இருக்கும் இங்கே பெரிய இதழ் என்று பாடியிருக்கிறாரே என்ற குழப்பம் இருந்தது"

"ஆமாம். முதல் பார்வையில் அப்படித் தான் தோன்றுகிறது. ஆனால் இங்கே குவளையைக் கூறியதால் சீறிதழ் என்று சொல்லாமல் மாயிதழ் என்று சொன்னது அளவைச் சொல்லவில்லை நிறத்தைச் சொன்னது என்று புரிகிறது.

அந்தக் குவளைப் பூக்களில் வண்டுகள் மொய்க்கின்றன. அப்படி வண்டுகள் மொய்க்கும் போது அந்த மலரில் இருக்கும் மகரந்தத்துகள்கள் மேலெழும்பி பறக்கின்றன. அந்த நேரத்தில் மழை பெய்தால் அந்த மழைத்துளிகளில் அந்த மகரந்தத் தூள்கள் கலந்து வண்டுகளின் மீதும் குளத்தின் மீதும் சுற்றிலும் படரும். சில காலங்களில் அப்படி மழை பெய்வதில்லை. இந்தக் கருத்துகளைத் தான் அடுத்த சில வரிகளில் சொல்கிறார். குவளை வண்டு படு புதுமலர்த் தண் சிதர் கலாவ பெய்யினும் பெய்யாதாயினும் என்று. "

"ஆமாம். மழை பெய்யும் போது மழைத்துளி மலர்களின் மேல் வண்ணம் மாறி அமர்ந்திருப்பதை நானும் கண்டிருக்கிறேன். எத்தனை நுட்பமான பார்வை. இயற்கையுடன் இணைந்திருந்து வாழ்ந்திருந்தால் தான் இப்படி எல்லாம் பாட முடியும்"


"உண்மை தான் விறலி. அப்படி மாரி பொய்த்தாலும் கொள் விதைக்கப் பட்டிருக்கும் மலை நிலத்தின் பக்கத்தில் ஓடும் வாய்க்காலாக பறம்பு மலையின் சிகரங்கள் தோறும் அருவிகள் சிறிதேனும் பெய்து கொண்டிருக்கும். மாரி பொய்த்தாலும் அருவி பொய்க்காது என்று சொல்வதற்காக கொள் உழு வியன் புலத்து உழை காலாக மால்பு உடை நெடுவரைக் கோடு தோறும் இழி தரும் அருவி என்று சொல்கிறார்"

"மழையையும் அருவியையும் இங்கே சொல்ல வேண்டிய அவசியம் என்ன?"

"அதனைத் தான் அடுத்த வரிகளில் சொல்கிறார். மழை தான் எல்லா வளங்களும் தரும் பெரும் வள்ளல் என்பது எல்லோரும் ஒத்துக் கொள்வதாயிற்றே. நீரின்றி அமையாது உலகு என்றும் பெரியோர் சொல்வார்களே. அப்படிப்பட்ட மழையும் பொய்ப்பதுண்டு. ஆனால் பறம்பு மலையில் இருக்கும் அருவிகள் பொய்ப்பதில்லை. ஒடுங்கி வாய்க்காலாக மாறினாலும் ஓடிக் கொண்டிருக்கும் தன்மை உடையவை. அவை போன்ற குணம் கொண்டவன் பாரி என்கிறார் அடுத்த வரியில். அருவி நீரினும் இனிய சாயல் பாரி வேள் என்று சொல்லி உன் மனக்குறையைத் தீர்க்கிறார். நீ அவனிடம் பாடிச் சென்றால் சேயிழை பெறுகுவை என்று முதல் வரியோடு கூட்டிக் கொள்ள வேண்டும்."

"ஆகா. அருமை அருமை. என் ஐயத்தைத் தீர்க்கும் பாடலாக இந்தப் பாடலை வடித்துவிட்டு அதில் அழகாக நான் விரும்புவதையும் குறிப்பாகச் சொன்னாரே. அருமை. அதோடு மட்டுமின்றி பாடினை செலினே சேயிழை பெறுகுவை என்று இந்தப் பாடலின் கடைசி வரியை முதல் வரியோடு இணைத்துப் பொருள் கொள்ளும் படியாக சங்கிலி போல் அமைத்து நான் விரும்புவது தங்கச் சங்கிலி என்பதை கூறும் இன்னொரு குறிப்பாக அமைத்திருக்கிறாரே. இப்போதே பொன்னிழை பெற்றது போல் உணர்கிறேன். மகிழ்ச்சி. மகிழ்ச்சி"

***
பாடற்குறிப்புகள்:

இந்த இடுகையில் இருக்கும் இரண்டு பாடல்களும் கபிலர் பாரிவேளைப் பாடியவை. இரண்டிற்கும் திணை பாடாண்திணை (தலைவனைப் பாராட்டிப் புகழ்ந்து பாடுவது); முதல் பாடலின் துறை இயன்மொழி (உள்ளதை உள்ளபடி பாடியது); இரண்டாவது பாடலின் துறை விறலியாற்றுப்படை (விறலியிடம் ஒரு வள்ளலின் இருப்பிடத்திற்கு வழி சொல்வது). முதல் பாடல் புறநானூறு 106ஆம் பாடல். இரண்டாவது பாடல் புறநானூறு 105ம் பாடல்.