Wednesday, February 20, 2008

உடுக்கை இழந்தவன் கை - 5 (பாரி வள்ளலின் கதை)

நிலா ஒளி முற்றத்தில் நன்கு வீசியது. உயரம் மிகக் குறைந்த மரத்தாலான இருக்கைகளில் பாரியும் கபிலரும் அமர்ந்திருக்க பருத்தியாலும் பட்டினாலும் செய்யப்பட்ட இருக்கைகளில் பாரி மகளிர் அமர்ந்திருந்தனர். பேச்சும் சிரிப்புமாக ஊனுணவையும் தேறலையும் அருந்திக் கொண்டிருந்தார்கள்.

"பெரியப்பா. இந்த முறை மதுரைக்குச் சென்ற போது ஏதேனும் புதுமையைக் கண்டீர்களா?"

"மதுரையில் எதுவும் புதுமையாகக் காணவில்லை அங்கவை. எப்போதும் போல் தமிழ் அங்கே கோலோச்சிக் கொண்டிருக்கிறது. இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் மதுரையில் தமிழின் ஆட்சி குறையவே குறையாது என்று நினைக்கிறேன். அங்கிருக்கும் தமிழின் ஆளுமை வருவோரை எல்லாம் கவர்ந்திழுத்துத் தனக்குள் புதைத்துக் கொண்டுவிடும். யவனரும் வடநாட்டாரும் தமிழை மிக அருமையாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களே சொல்லாத வரை அவர் தமிழரில்லை என்று தெரிந்து கொள்வது இயலாததொன்று. ஆனால் இந்த முறை புலவர்கள் எல்லாம் தமிழைப் பற்றிப் பேசியதை விட மற்றொன்றைப் பற்றியே அதிகமாகப் பேசினார்கள்"

"என்ன சொல்கிறீர்கள்? வியப்பாக இருக்கிறதே. தமிழ்ச்சங்கத்தில் புலவர்கள் எல்லாம் சங்கப்பலகையில் ஏறி இலக்கியத்தை ஆராய்வது தானே வழக்கம். நீங்கள் சொல்வது புதுமையாக இருக்கிறது கபிலரே"

"பாரி. வழக்கம் போல் புலவர்கள் இலக்கிய ஆராய்ச்சியில் தான் ஈடுபட்டார்கள். என்னையும் அதற்காகத் தான் அழைத்தார்கள். ஆய்வுக்காக வந்திருந்த செய்யுள்களில் சில குறிஞ்சித்திணையிலும் இருந்தன. அதனால் என்னைச் சிறப்பாக அழைத்திருந்தார்கள் என்று தான் எண்ணினேன்"

"ஆமாம். அப்படித் தான் நானும் எண்ணினேன் கபிலரே. குறிஞ்சித் திணையில் நூற்றுக்கணக்கான பாடல்களைப் புனைந்துள்ள உங்களைத் தானே குறிஞ்சித் திணையில் அமைந்த பாடல்களை ஆய்வதற்கு அழைக்க வேண்டும்?!"

"நீயும் நானும் எண்ணியது தவறு பாரி. குறிஞ்சிப்பாட்டெழுதுபவன் என்ற முறையில் மட்டும் எனக்கு சிறப்பு தரப்படவில்லை அங்கே. இன்னொரு முதன்மைக் காரணமும் இருந்தது. அதனைச் சொன்னால் வியந்து போவாய்"

"நீங்கள் சொல்லும் காரணம் எனக்குத் தெரியும் பெரியப்பா"

"நினைத்தேன் குழந்தாய். சங்கவைக்கு மட்டும் அந்தக் காரணம் புரிந்திருக்கும் என்று நினைத்தேன். இளையவர்கள் அதிகம் பேசாமல் இருந்தாலும் சுற்றிலும் நடப்பதை நன்கு கூர்ந்து கவனிக்கின்றார்கள். மூத்தவர்கள் பேசிப் பேசிக் குழம்பிப் போகும் போது இந்த இளையவர்கள் பேசும் வாய்ப்பு அவ்வளவாக கிட்டாவிட்டாலும் தங்கள் கவனிப்பால் நடப்பதை நன்கு புரிந்து கொள்கிறார்கள்"

அதைக் கேட்டவுடன் அங்கவையின் முகத்தில் சிறு சுணக்கம் ஏற்பட்டது.

'எப்போதுமே இந்தப் பெரியப்பா இப்படித் தான். தங்கையைத் தலையில் வைத்துக் கொண்டாடுவார். அவர் சொல்வதற்கு ஏற்றாற்போல் இன்றைக்கும் நான் தான் பேச்சை முதலில் தொடங்கினேன்'

அக்காவின் எண்ணப்போக்கை அறிந்து கொண்டாள் தங்கை.

"அக்கா. பெரியப்பா இப்படித் தான் எப்போதும் என்னைக் கேலி செய்வார். அவர் அந்தக் காரணத்தைச் சொல்லும் முன்பாகவே நான் துடுக்குத்தனமாக எனக்குத் தெரியும் என்று சொல்லிவிட்டேன் அல்லவா? அது தான் என்னைக் கேலி செய்கிறார்"

"ஹாஹாஹா. சங்கவை. அப்படி இல்லையம்மா. உனக்கு கட்டாயம் அந்தக் காரணம் தெரிந்திருக்கும் என்று தான் நினைக்கிறேன். என்ன காரணம் என்று நீ நினைக்கிறாய்? சொல்"

"பெரிய தமிழ்ப் புலவராக நீங்கள் இருந்தாலும் உங்களை ஒத்த, கல்வியில் உங்களையும் மிஞ்சிய தமிழ்ப்புலவர்கள் பலர் தமிழ்ச்சங்கத்தில் இருக்கிறார்கள். அவர்களில் பலருக்கும் குறிஞ்சித் திணையில் பாட்டு எழுதுவது கை வந்த கலை. அதனால் பெரும்புலவர் என்பதால் மட்டும் உங்களுக்குத் தமிழ்ச்சங்கத்தில் சிறப்பு கிட்டவில்லை"

பெரும்புலவரை இப்படி நேரடியாகக் குறைத்துப் பேசுகிறாளே தங்கை என்று அக்கைக்கு வியப்பாக இருந்தது. பாரியும் 'என்ன சொல்கிறாள் இவள்?' என்ற கேள்வியுடன் பார்த்தான். கபிலர் மட்டும் அவள் சொல்வதை ஆமோதிப்பதைப் போல் தலையை அசைத்தார்.

"வடவேங்கடம் தென்குமரி இடையில் தமிழ் கூறும் நல்லுலகம் எல்லாம் போற்றும் நம் மன்னர் பாரிவேளின் திருத்தோழராக நீங்கள் இருப்பது தான் உங்களுக்குப் பெரும் பெருமையைத் தேடித் தந்திருக்கிறது"

தான் சொன்னால் பாரி நம்பமாட்டான் என்று நினைத்திருந்த ஒன்றை அவன் மகளே சொன்னதில் கபிலருக்குப் பெரும் மகிழ்ச்சி.

"அருமையாகச் சொன்னாய் அம்மா. சிறு பெண்ணாக இருந்தாலும் கூர்மையாகக் கவனித்திருக்கிறாய். உண்மை தான். வள்ளல் என்று சொன்னாலே உன் தந்தையின் பெயரைத் தான் எல்லோரும் சொல்கிறார்கள். மற்ற வள்ளல்களின் பெயர்கள் எல்லாம் அவன் பெயருக்குப் பின்னால் தான். கொடையில் உன் தந்தையை மிஞ்ச ஆளில்லை என்பதை பாண்டியனும் உணர்ந்திருக்கிறான். முத்தமிழ்ச் சங்கங்களை அமைத்துத் தமிழை வளர்த்து வரும் மரபில் பிறந்த தனது புகழை விட பாரியின் புகழ் வானளாவிப் பரந்திருக்கிறது என்பதைப் பாண்டியனும் அறிந்திருக்கிறான். அவனுடைய சொற்களில் உன் தந்தையின் மேல் பொறாமை இழையோடுவதையும் பார்த்தேன்"

"முடியுடை வேந்தர்களில் ஒருவரான பாண்டிய மன்னருக்கு தந்தை மேல் பொறாமையா? நம்ப முடியவில்லையே பெரியப்பா"

"ஆமாம் அங்கவை. அது உண்மை தான். பாண்டியன் நேரடியாக உன் தந்தை மேல் இருக்கும் ஒளவியத்தை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. ஆனால் அவனுக்கும் அவன் சுற்றத்திற்கும் பாரியின் புகழ் உறுத்துகிறது என்பது நன்கு தெரிகிறது. புலவர்களும் என்னைப் பார்த்தவுடன் என்னைப் பற்றியும் என் படைப்புகளைப் பற்றியும் பேசியதை விட பாரியைப் பற்றிக் கேட்டதே அதிகம். பாரியைப் புகழாத வாயில்லை"

"பெரியப்பா. தந்தையார் கொடைக்குணத்தில் யாருக்கும் குறைவில்லாதவர் தான். ஆனால் எனக்கென்னவோ உங்களைப் போன்ற புலவர்கள் தந்தையாரின் வள்ளற்தன்மையை அளவுக்கு மீறிப் புகழ்ந்து தள்ளுகிறீர்களோ என்று தோன்றுகிறது. தந்தையாரைப் போன்ற வள்ளல்கள் நானிலத்தில் எங்குமே இல்லையா என்ன?"

"ஹாஹாஹா. உண்டு அம்மா உண்டு. சங்கவை. உன் கேள்வி மிக அருமையான கேள்வி. இந்தப் புலவர்கள் எல்லோரும் பாரி பாரி என்று என்னவோ இவன் மட்டும் தான் வள்ளல் என்பதைப் போல் புகழ்ந்து தள்ளுகிறார்கள். ஆனால் இவனை விட்டால் இன்னொரு வள்ளலும் உண்டு என்பதை அவர்கள் மறந்துவிட்டார்கள்"

'பாரியைப் போல் இன்னொரு வள்ளலா' என்று வியந்து போனாள் அங்கவை. கிண்டல் செய்கிறார் கபிலர் என்பது புரிந்துவிட்டது பாரிக்கு. அதனால் ஒன்றும் சொல்லாமல் அவர்கள் பேசுவதைக் கவனித்துக் கொண்டிருந்தான். சங்கவைக்கோ கபிலர் பகிடி செய்கிறாரா உண்மையிலேயே இன்னொருவர் இருக்கிறாரென்று சொல்கிறாரா என்று புரியவில்லை.

"யார் அது என்று சொல்லுங்கள் பெரியப்பா" ஆர்வம் குரலில் தொனிக்கக் கேட்டாள்.

"சங்கவையின் ஆர்வத்தைப் பார். சொல்கிறேன் குழந்தாய். விரட்டாதே.

பாரி பாரி என்று பல ஏத்தி
ஒருவற் புகழ்வர் செந்நாப்புலவர்
பாரி ஒருவனும் அல்லன்..."

இங்கே சிறிது நேரம் நிறுத்தினார் கபிலர். சங்கவையால் பொறுமையாக இருக்க இயலவில்லை.

"சொல்லுங்கள் பெரியப்பா. யார் அந்த வள்ளல்?"

"மாரியும் உண்டு ஈண்டு உலகு புரப்பதுவே"

பாடலைக் கேட்டவுடன் எல்லோரும் ஒரே குரலில் ஓங்கிச் சிரித்தார்கள்.

அவர்களுடன் சேர்ந்து நிலவும் சிரித்தது. எல்லோரின் சிரிப்பும் வெகு நேரம் தொடர்ந்தது. இவர்களின் குதூகலத்தைக் கண்டு நாணியவள் போல் நிலா மெல்லிய மேகத் துணியின் பின்னர் போய் மறைந்து கொண்டாள். என்னைப் போல் இன்னொருவர் என்று எல்லோரும் பேச இங்கே இந்தப் புலவர் இன்னொருவர் போல் நான் என்று சொல்கிறாரே என்று சினந்ததைப் போல் சுணங்கிச் சுணங்கி மழையரசனும் தூறலைப் போட்டான். மலைச்சாரல் மாளிகை முற்றத்தில் அமர்ந்து கொண்டு இந்த நால்வரும் மழைச்சாரலையும் அனுபவித்தார்கள்.

***

பாடற்குறிப்பு:

புறநானூறு 107ம் பாடல். கபிலர் பாரிவள்ளலைப் பாடியது. திணை: பாடாண் திணை (தலைவனைப் புகழ்ந்து பாடுவது). துறை: இயன்மொழித் துறை (உள்ளதை உள்ளபடியே பாடுவது).

பாடலின் திரண்ட பொருள்: பாரி பாரி என்று சொல்லி அவனது பல புகழ்களையும் வாழ்த்தி அவ்வொருவனையே புகழ்வர் செவ்விய நாவினையுடைய அறிவுடையவர்கள். பாரியாகிய ஒருவன் மட்டும் அல்லன். இங்கே உலகத்தைக் காப்பதற்கு மாரியெனும் மழையும் உண்டு.

29 comments:

  1. இந்தத் தொடர்கதையின் 4ம் பகுதியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எல்லாம் இன்னும் பதில் சொல்லி முடியவில்லை. விரைவில் அந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லிவிட்டு அதனை இங்கும் வந்து சொல்கிறேன். பொறுமைக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. ingum me the firshtuuuuuu:-)
    உங்க பி.க எல்லாம் கணக்குல வராது! :-)

    //பாரி பாரி என்று பல ஏத்தி
    ஒருவற் புகழ்வர் செந்நாப்புலவர்
    பாரி ஒருவனும் அல்லன்...//

    சங்கப் பாடல்களிலேயே மிகவும் எளிமையான பாடல் அல்லவா குமரன்! இதுக்கு உரையே தேவையில்லை! கொஞ்சம் தமிழ் தெரிந்தவர்களே படித்து மகிழலாம்!
    இப்படி எளிமையான செய்யுள்களையும் சங்கப் புலவர்கள் யாத்தார்கள் என்பது மிகவும் பெருமைக்குரிய ஒன்று!

    //இயன்மொழித் துறை (உள்ளதை உள்ளபடியே பாடுவது)//

    ஹூம். இதில் அணி வகை ஏதும் இல்லையா என்ன?
    இகழ்வது போல் புகழ்வதும் வஞ்சப் புகழ்ச்சி-ன்னு தான் நினைக்கிறேன்!

    ReplyDelete
  3. ரவி சொல்வது போல் ரொம்ப எளிமையான பாடல் இல்லையா. நல்ல நயம்படச் சொல்லி இருக்கிறீர்கள்.

    ReplyDelete
  4. //பாரி பாரி என்று பல ஏத்தி
    ஒருவற் புகழ்வர் செந்நாப்புலவர்
    பாரி ஒருவனும் அல்லன்...//


    ஹை! எனக்குக் கூட தெரியுமே இந்த வரி. :)

    ஒளவியம் போன்ற சொற்களை படிக்கவே அழகாக இருக்கு. நன்றி குமரன்.

    ReplyDelete
  5. உண்மை தான் இரவிசங்கர். மிகவும் எளிமையான பாடல் தான். பாரதியார் பாடலைப் போல் கொஞ்சமே தமிழ்ப்பழக்கம் இருப்பவர்களுக்கும் இந்தப் பாடல் புரியும். எளிமையாக இருப்பதால் பரவலாகப் பயிலப்படும் பாடலும்.

    சங்கப்புலவர்கள் இந்த மாதிரி எளிமையாக யாத்தார்கள் என்று சொல்லியிருக்கிறீர்கள். எனக்கு வேறு மாதிரி தோன்றுகிறது. சங்கப் புலவர்களிடம் இந்தப் பாடலையும் கபிலரின் வேறு பாடல்களையும் கொடுத்திருந்தால் எல்லாமும் ஒரே அளவிற்குத் தான் எளிமையாக இருக்கிறது என்று சொல்லியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். புலவர்கள் மட்டும் இன்றிப் புரவலர்களும் புரிந்து கொள்ளும் வகையில் தான் அன்றையப் பாடல்கள் எல்லாமும் அமைந்திருந்தன என்று நினைக்கிறேன். அன்று புழங்கிய சொற்களில் பல இன்று வழக்கொழிந்து போனதால் நமக்கு அவை புரிவதில்லை. இந்தப் பாடலில் வழக்கொழியாத சொற்கள் பெரும்பான்மையாகப் பயின்று வந்திருப்பதால் எளிமையாகத் தோன்றுகிறது. சரியா?

    பெருமைக்குரிய ஒன்றும் இருக்கிறது. செம்மொழிகளிலேயே 2000 வருடங்களுக்கு முன்னர் புழங்கிய சொற்களுடன் இன்றும் மக்கள் பேச்சு மொழியாகவும் இருக்கும் பெருமை தமிழுக்கு இருக்கிறது.

    துறையின் படி இந்தப் பாடலை இயன்மொழித்துறையாக வகுத்திருக்கிறார்கள். ஆனால் அணி இலக்கணத்தின் படி நீங்கள் சொன்னது போல் இந்தப் பாடல் வஞ்சப்புகழ்ச்சி அணியைத் தான் கொண்டிருக்கிறது. இகழ்வது போல் புகழ்ந்தார் என்பதைத் தான் கதை வடிவிலும் சொல்லியிருக்கிறேன். அது நன்கு வெளிப்பட்டதா தெரியவில்லை. :-)

    ReplyDelete
  6. நன்றி கொத்ஸ். படித்துக் கொண்டு தான் இருக்கிறீர்களா? ஆளைக்காணவில்லையே என்று நினைத்திருந்தேன். பாடலுக்கேற்ற எளிமை இந்தக் கதைப்பகுதியிலும் இருக்கிறதா?

    ReplyDelete
  7. இந்த இலக்கியத் தொடர்களை எல்லாம் படித்துவிட்டு வடமொழி வித்தகர் செந்தமிழ் வித்தகராகவும் ஆகிவிடுவீர்கள் என்பது தெரியும் மௌலி. :-)

    ஒளவியத்தைப் பற்றி சொல் ஒரு சொல்லில் ஒரு இடுகை இருக்கிறது. அதனை இணைக்க வேண்டும் என்று எண்ணினேன். மறந்துவிட்டேன். இணைத்துவிடுகிறேன்.

    ReplyDelete
  8. //இந்த இலக்கியத் தொடர்களை எல்லாம் படித்துவிட்டு வடமொழி வித்தகர் செந்தமிழ் வித்தகராகவும் ஆகிவிடுவீர்கள் என்பது தெரியும் மௌலி. :-)//

    ஏதேது நீங்களும் என்னை கிண்டல் பண்ண கிளம்பிட்டீங்களா?.

    ஆமாம் யார் சொன்னா நான் வடமொழி வித்தகர்ன்னு?. :-)

    நல்லாயிருங்க சாமி, நல்லாயிருங்க. :-)

    ReplyDelete
  9. @குமரன் மாரி நல்ல உதாரணம் பாரிக்கு.மாரியும் எல்லாமனிதர்களுக்கும் வித்தியாசம் பாராது வாரி வழங்கும்.யார் சொன்னது குமரன் வடமொழி வித்தகர் என்று பன்மொழி வித்தகர்

    ReplyDelete
  10. நானும் படித்துக் கொண்டிருக்கிறேன் குமரன்,
    இல்லை இல்லை,
    தமிழ்ச்சுவையை பருகிக் கொண்டிருக்கிறேன்!

    ReplyDelete
  11. மிக நன்றாக போய்க்கொண்டிருக்கிறது. துணைப்பாடநூல் போல் பாடமும் கதையுமாக அருமையாக இருக்கிறது.

    ReplyDelete
  12. //அன்று புழங்கிய சொற்களில் பல இன்று வழக்கொழிந்து போனதால் நமக்கு அவை புரிவதில்லை. இந்தப் பாடலில் வழக்கொழியாத சொற்கள் பெரும்பான்மையாகப் பயின்று வந்திருப்பதால் எளிமையாகத் தோன்றுகிறது. சரியா?//

    உண்மைதான். மற்றொரு காரணம் சொற்புணர்ச்சிகள் அதிகமாக இல்லை. பல பாடல்கள் ஒழுங்காக பதம் பிரித்துவிட்டாலே விளங்கக் கூடியவைதான்.

    இப்பாடல் நேரடிப் புகழ்ச்சிபோல்தான் தோன்றுகிறது. வஞ்சப் புகழ்ச்சி தென்படவில்லை.

    ReplyDelete
  13. அருமையான எழுத்து நடை.

    பாரி பாரி என்று பலவேத்தி.....ம்ம்ம்ம்... எனக்கு மிகவும் பிடித்த செய்யுட்களில் ஒன்று. அழகானது.

    பாரி பாரின்னு சொல்றீங்களே... பாரி மட்டுந்தான் ஒலகத்தக் காப்பானா? இன்னொருத்தன் இருக்கான்...அதான் மாரி. அதுல என்ன தெரியுது? மாரி எப்படிப் பாகுபாடு பாக்காதோ.. அப்படித்தான் பாரியும். நல்லவன் கெட்டவன்..நண்பன்..பகைவன்...இப்பிடி எந்தப் பாகுபாடும் பாராப் பாரி. அதுனாலதான் புகழ் சோராப் பாரி. அவப்பெயர் சேராப் பாரி.

    ReplyDelete
  14. வந்தேன், படித்தேன், செல்கின்றேன்.

    ReplyDelete
  15. தமிழின்பம் பருகப் பருக மேன்மேலும் இனிமையளிக்கிறது.

    நன்றி குமரன்!

    ReplyDelete
  16. நான் கிண்டல் செய்கிறேனா? உண்மையைத் தானே சொல்கிறேன் மௌலி. உங்க வாழ்த்துக்கு ரொம்ப நன்றி. :-)

    ReplyDelete
  17. உண்மை தான் தி.ரா.ச. எந்த வேறுபாடும் பார்ப்பதில்லை மாரி. பாரியும் அப்படித் தான் என்று இந்தப் பாடலால் தெரிகிறது.

    மௌலி பன்மொழி வித்தகர் தானே. சொன்னால் கேட்கமாட்டேன் என்கிறார்.:-)

    ReplyDelete
  18. தொடர்ந்து படித்து வருவதற்கு நன்றிகள் ஜீவா.

    ReplyDelete
  19. துணைப்பாடநூலில் தான் இப்படி பாட்டும் கதையுமாகச் சொல்லக் கற்றுக் கொண்டேன் போல Sridhar Narayanan. சரியாகத் தான் சொல்லியிருக்கிறீர்கள். :-)

    ReplyDelete
  20. உண்மை ஓகை ஐயா. பதம் பிரித்துப் படித்தால் பல பாடல்கள் எளிதில் புரிந்துவிடும்.

    முழுப்பாடலையும் படிக்கும் போது நேரடியாக மாரியைவிடப் பாரி என்பது போல் நேரடிப் புகழ்ச்சி தோன்றுகிறது. ஆனால் கதையில் காட்டியபடி முதல் மூன்று வரிகளை மட்டும் முதலில் சொன்னால் என்னவோ இகழ்வது போல் தோன்றி கடைசி வரியைச் சேர்த்தவுடன் புகழ்ச்சியாக மாறிவிடுகிறது. அதனால் வஞ்சப்புகழ்ச்சி என்றேன்.

    ReplyDelete
  21. நன்றி இராகவன். முன்பு வைத்த வேண்டுகோளை ஏற்று மீண்டும் இலக்கியத்தில் இறை தொடரைத் தொடர்வதற்கும் நன்றிகள்.

    புகழ் சோராப் பாரி - இது சரி தான்.
    அவப்பெயர் சேராப் பாரி - இது சரி தானா? கொடுத்தே கெட்டான் பாரி என்று இந்தக் காலத்தில் சில நண்பர்கள் சொன்னதைப் பார்க்கவில்லையா? குடிப்பெருமை பார்த்தான் என்றொரு அவப்பெயரும் இருக்கிறதே?!

    ReplyDelete
  22. வந்ததற்கும் படித்ததற்கும் அதனைச் சொல்லிச் சென்றதற்கும் நன்றிகள் கீதாம்மா.

    ReplyDelete
  23. கொஞ்சம் தாமதம் இந்த முறை படிப்பதற்கு..எனக்கும் இந்தப் பாடல் ஏற்கனவே பள்ளியில் படித்த நினைவு வந்தது..ஔவியம்..பொறாமைதானா என்ற சந்தேகம் இருந்தது..இப்போது சரியான அரித்தம் தெரிந்து கொண்டேன்..

    ReplyDelete
  24. நன்றி பாசமலர். இந்தப் பாடலை நான் அண்மையில் தான் படித்தேன். பள்ளியில் படித்ததில்லை.

    ஒளவியம் என்பதற்கு 'சொல் ஒரு சொல்' பதிவில் ஒரு இடுகை இருக்கிறது. அதனையும் படித்தீர்களா?

    ReplyDelete
  25. குமரா!
    பாரி..பாரி என்ற பாடல் படித்துள்ளேன்; அதைவைத்து அழகான காட்சிவிரிப்புச் செய்துள்ளீர்கள்.
    சுணக்கம் எனும் சொல்லுக்கு இப்படியும் ஒரு கருத்து இருக்கிறதா??

    //சுணங்கிச் சுணங்கி மழையரசனும் தூறலைப் போட்டான்//

    இப்படி மழை தூறுவதை என் பேத்தியார் " நாள் பூரா சிணுங்கிக் கொண்டிருக்கென்பார்"

    எல்லாம் கிட்டமுட்டப் போல் உள்ளது.

    ReplyDelete
  26. சுணக்கம் என்பதற்கு சோம்பல், வாட்டம், தடை, தாமதம் என்று அகராதியில் பொருள் சொல்லியிருக்கிறார்கள் ஐயா.

    நானும் பெரியவர்கள் மழை நாளெல்லாம் தூறிக் கொண்டிருப்பதை 'சிணுங்கிக் கொண்டிருக்கிறது' என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்

    ReplyDelete
  27. நன்றி..சொல் ஒரு சொல் விளக்கமும் படித்தேன்..

    ReplyDelete
  28. மகிழ்ச்சி பாசமலர். நன்றி.

    ReplyDelete