எப்படிப்பட்ட நண்பர்களாக இருந்தாலும் அவர்களுக்குள் கருத்து வேற்றுமை ஏற்பட்டே தீர வேண்டும் என்பது நியதி போலும். பாரி தன் குடியைப் பற்றி கொண்டிருக்கும் பெருமித உணர்வு ஏற்கனவே கபிலருக்குத் தெரியும் என்றாலும் அதைப் பற்றிப் பேசி விவாதிக்க வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்படும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. ஆனால் உயிரினும் மேலாகப் பழகும் நண்பர்கள் தங்களிடையே இருக்கும் கருத்து வேற்றுமைகளைக் கடைசியில் மறந்துவிட்டு ஒருவருக்கொருவர் ஆதரவாகத் தான் தொடர்கிறார்கள்.
மாளிகைத் தோட்டத்தில் பாரியும் கபிலரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். மதுரைக்குச் சென்றிருந்த இரு வார காலத்தில் பறம்பில் நடந்த நிகழ்வுகளைப் பற்றி பாரி சொல்லிக் கொண்டிருந்தான். அப்போது தான் மாறி மாறி மூவேந்தர்களிடம் இருந்தும் பாரி மகளிரைப் பெண் கேட்டு வந்த விவரத்தைச் சொன்னார். மதுரையில் இருக்கும் போது பாண்டியன் இதனைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே என்று வியந்தார் கபிலர். மொழி ஆய்வில் இருக்கும் போது அரசியலும் அந்தரங்கமும் பேசவேண்டாம் என்று விட்டுவிட்டானோ என்னவோ என்று எண்ணிக் கொண்டார்.
"இது என்ன வேடிக்கையாக இருக்கிறது பாரி?! முடியுடை மூவேந்தர்களுள் ஒருவர் உன் மக்களைப் பெண் கேட்டால் அவருக்கு மணம் செய்து கொடுக்கலாம். இப்படி மூவரும் கேட்டால் யாருக்குப் பெண் கொடுப்பது? இது என்ன சங்கடமான நிலைமை?"
"கபிலரே. மூவரும் பெண் கேட்டு வந்ததில் எனக்கு எந்த கவலையும் இல்லை. நான் இந்த மூவரில் யாருக்குமே பெண் கொடுக்கப் போவதில்லை"
"ஏன் பாரி? ஒருவருக்கோ இருவருக்கோ உன் மக்களை மணம் முடித்தால் மற்றவர் பகை ஏற்படும் என்பதாலா?"
"அவர்கள் பகையைப் பற்றி எனக்குக் கவலையில்லை கபிலரே. அவர்கள் யாருமே என் பெண்களைத் திருமணம் செய்து கொள்ளும் தகுதி இல்லாதவர்கள். அதனால் தான் அவர்களுக்குப் பெண் தர மாட்டேன் என்கிறேன்"
"என்ன சொல்கிறாய் பாரி? உன்னைப் போன்ற குறுநில மன்னவன் பெண்களை வழி வழியாக பெரும் நிலப்பரப்பை ஆண்டுவரும் இந்த மூவரும் பெண் கேட்டு மணப்பது நடைமுறையில் உள்ள ஒன்று தானே? இவர்களுக்கு ஏன் உன் மக்களை மணக்கும் தகுதி இல்லை என்று நினைக்கிறாய்? செல்வத்தில் குறைந்தவர்களா? வீரத்தில் குறைந்தவர்களா? புலவர்களையும் பாணர்களையும் புரப்பதில் குறைந்தவர்களா? எவ்விதத்திலும் எனக்கு அவர்களிடம் குறை தோன்றவில்லையே?!"
"கபிலரே. நான் சிற்றரசன் தான். அவர்கள் வேந்தர்கள் தான். பெரும் நிலப்பரப்பை பல்லாண்டு காலங்களாய் ஆண்டு வருபவர்கள் தான். அவர்களின் செல்வத்திலும் வீரத்திலும் பாவலர்களைப் புரப்பத்திலும் எந்த குறையும் இல்லை. ஆனால் இவற்றை எல்லாம் தாண்டி இன்னொரு குறை இருக்கிறது. வேளிர் குடியில் பிறந்த என் மக்களை மணக்கும் தகுதி இம்மூவருக்கும் கிடையாது"
இதனைக் கேட்டுப் பெரும் அதிர்ச்சி அடைந்தார் கபிலர்.
"பாரி. மூவரில் மூத்த குடியான பாண்டியனுக்குமா உன் மக்களை மணக்கும் தகுதி இல்லை என்கிறாய்?"
"ஆம் ஐயனே. மூவரில் முதல்வன் ஆனாலும் பாண்டியனின் குடியும் வேளிர் குடிக்குப் பிற்பட்டதே. தமிழக வரலாற்றை நான் உங்களுக்குச் சொல்ல வேண்டிய தேவை இருக்காது என்று எண்ணுகிறேன்"
"பாரி. தமிழக வரலாறு எனக்கும் தெரியும். வடவேங்கடம் தென்குமரி இடைப்பட்டத் தமிழ் கூறும் நல்லுலகில் முடிவேந்தர் பரம்பரை மூன்று இருக்கின்றன. வஞ்சிக்காவலன் சேரனும் புகார்க்காவலன் சோழனும் கூடல்காவலன் பாண்டியனும் என்று இந்த மூவரும் பல்லாண்டு காலமாக ஆண்டு வருகின்றனர். அவர்களுக்கு அடங்கியும் அடங்காமலும் எண்ணற்ற சிற்றரசர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்கு அடங்காமல் தன்னாட்சி செய்துவருபவர்களில் நீயும் ஒருவன். உன் வேளிர் குடி இந்தப் பறம்பு நாட்டை மூவேந்தர்களுக்கும் முந்தைய காலம் முதல் ஆண்டு வருகிறது. அப்படி மூத்த குடியாய் இருப்பது ஒரு தனிப்பெருமை தான். ஆனால் அந்தப் பெருமை மூவேந்தர்களுக்குப் பெண் கொடுக்க மறுக்கும் அளவிற்குச் செல்ல வேண்டுமா? வேண்டாம் பாரி வேண்டாம். இது விபரீதம் விளைவிக்கும்"
"கபிலரே. எந்த விதமான தொல்லைகள் நேரிட்டாலும் நான் இந்த முடிவில் உறுதியாக இருக்கிறேன்."
"பாரி. இது சரியில்லை. மூவேந்தர்கள் ஆளத் தொடங்குவதற்கு முன்னர் தமிழகம் முழுவதும் வேளிர்கள் தானே ஆண்டார்கள். வேளிர் குடியில் பிறந்தவன் நீ மட்டும் இல்லையே? வேறு அரசர்களும் இருக்கிறார்களே. அவர்கள் எல்லாம் மூவேந்தர்களுக்கும் பெண் கொடுத்துக் கொண்டு தானே இருக்கிறார்கள். நீ மட்டும் ஏன் மறுக்கிறாய்?"
"கபிலரே. வேளிர் குடியில் பிறந்த மற்ற அரசர்கள் வேந்தர்களுக்குப் பெண் கொடுக்கிறார்கள் என்பதை அறிவேன். அது ஏன் என்பது உங்களுக்கும் தெரியும். வேளிர் குடிப்பெருமையை அறிந்த வேந்தர்கள் தங்கள் குடிகளுக்கும் அந்தப் பெருமை வேண்டும் என்பதற்காகத் தானே வேளிர் பெண்களை விரும்பிக் கேட்டு மணக்கிறார்கள். அவர்களின் படைவலுவைக் கண்டு வேளிர்களும் பெண் கொடுக்கிறார்கள். அப்படிப் பெண் கொடுக்கும் வேளிர்கள் யாருமே வேந்தர் குடிப் பெண்களை எடுப்பதில்லை என்பதையும் கவனித்திருப்பீர்கள். அது ஏன்? வேந்தர்களின் குடி வேளிர்களின் குடியை விடக் குறைந்தது என்பதற்காகத் தானே? நான் மட்டும் இல்லை கபிலரே. என்னைப் போல் வேந்தர்களின் படைவலிமைக்கு அஞ்சாமல் பெண் தர மறுக்கும் வேளிர்களும் இருக்கிறார்கள். அவர்களின் கருத்தினையே நானும் கொண்டிருக்கிறேன். வேளிர்கள் வேந்தர்களிடமிருந்து பெண் எடுப்பதும் கூடாது; கொடுப்பதும் கூடாது"
"பாரி. இப்படி நீ மறுத்தால் மூவேந்தர்களின் சினத்திற்கும் ஆளாக வேண்டியிருக்கும். உன் குடிப்பெருமை உன் நாட்டையும் உன்னையும் உன் சுற்றத்தையும் அழிக்கும். அது வேண்டாம் பாரி. மூவரில் ஒருவருக்கோ இருவருக்கோ உன் மக்களை மணம் முடித்து வை"
"கபிலரே. நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை. அவை அனைத்தையும் விட குடிப்பெருமை காக்க வேண்டும் என்று தான் ஒவ்வொரு வேளிர் குடியில் பிறந்தவனும் நினைப்பான்."
"பாரி. வள்ளல்கள் என்றாலே வேளிர்கள் என்று சொல்லும் அளவிற்கு வேந்தர்களை விட வேளிர்கள் வள்ளல்களாக இருக்கிறீர்கள். அது தான் வேளிர்குடிக்குத் தனிப்பெருமை என்று எண்ணினேன். நீயோ மூத்தகுடி, தொன்று தொட்டு ஆண்ட குடி என்று சொல்லி வேந்தர்களுக்குப் பெண் தர மறுக்கிறாய். வேதனையாக இருக்கிறது"
"ஐயனே. உங்களைப் போன்ற நல்ல நண்பர்களை வேதனைப்படுத்த நேர்வதற்கு வருந்துகிறேன். வேந்தர்களைப் பற்றிய கவலை உங்களுக்கு இருந்தால் தாங்கள் பறம்பு நாட்டிலிருந்து விலகி பாதுகாப்பான வேறெங்காவது சென்று விடுங்கள்"
"என்ன வார்த்தை சொன்னாய் பாரி? நமக்குள் இருக்கும் நட்பு அவ்வளவு தாழ்வானதா? தமிழறிஞன் என்பதை விட உன் நண்பன் என்பதில் தானே எனக்குத் தனிச்சிறப்பு கிடைக்கிறது. அப்படிப்பட்ட நட்பைத் துறந்துவிட்டு உயிர் பிழைக்க ஓடிப் போவேன் என்றா எண்ணினாய்? நீ இவ்வளவு உறுதியாக இருந்தால் அந்த உறுதியை நானும் ஏற்றுக் கொள்கிறேன். உன் எண்ணப்படியே நடந்து கொள்வோம்"
"தாங்கள் என் அருகிலேயே இருக்க நினைப்பதை எண்ணி மகிழ்கிறேன் கபிலரே. பெண் கேட்டு வந்தவர்களிடம் மறுப்பு தெரிவித்து அனுப்பியிருக்கிறேன். இந்தத் திங்களே மூவரும் படையெடுத்து வர ஆயத்தம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று ஒற்றர்கள் மூலம் அறிந்தேன்."
"அப்படியா? அவையில் பரிசில் வழங்கும் உன் கைவண்மையைக் கண்டிருக்கிறேன். களத்தில் உன் கைவன்மையைக் காணும் நாளும் நெருங்கியதோ"
வருத்தத்துடன் கபிலர் சொன்னதைக் கேட்டு பாரி புன்னகை புரியும் போது அங்கவையும் சங்கவையும் தோட்டத்தில் நுழைந்தனர்.
டிஸ்கி: இந்த இடுகையில் இருக்கும் கதைப்பகுதிக்கு ஏற்ற இலக்கியத் தரவுகள் ஏதும் என்னிடம் இல்லை. ஆனால் வேளிர்கள்/வேந்தர்கள் கொடுக்கல் வாங்கல்களைப் பற்றியும் பாரி மகண்மறுத்ததற்குச் சொல்லப்படும் காரணத்தையும் வேறு தமிழாராய்ச்சியாளர்கள் எழுதிய கட்டுரைகளில் படித்திருக்கிறேன். அவற்றை வைத்து இந்தக் கதைப்பகுதியை எழுதியிருக்கிறேன்.
ReplyDelete//அவையில் பரிசில் வழங்கும் உன் கைவண்மையைக் கண்டிருக்கிறேன். களத்தில் உன் கைவண்மையைக் காணும் நாளும் நெருங்கிறதோ//
ReplyDeleteமுன்னது கைவண்மை - சரி
பின்னது கைவ"ன்"மை அல்லவா, குமரன்?
//பெண் கொடுக்கும் வேளிர்கள் யாருமே வேந்தர் குடிப் பெண்களை எடுப்பதில்லை என்பதையும் கவனித்திருப்பீர்கள்//
ஹூம்...
கொடுப்பாங்க! ஆனா எடுக்க மாட்டாங்களாமா?
தம் குடியில் கலப்படமே கூடாது என்ற வினோத மனப்பான்மை கொண்ட கூட்டங்கள் பல அப்பவே இருந்திருக்கு போல! :-(
பல நல்ல குணங்கள் எல்லாம் அமையப் பெற்ற பாரி, குடிப்பெருமை என்று ஐயன் சொன்னதைத் தப்பாகப் புரிந்து கொண்டானோ? இல்லை அவனும் கால வழக்கத்துக்கு ஏற்ப நடந்து கொண்டானோ?
ஒழுக்கமும் வாய்மையும் நாணும்-இம் மூன்றும்
ReplyDeleteஇழுக்கார் குடிப் பிறந்தார்.
நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும்-குலம்வேண்டின்
வேண்டுக யார்க்கும் பணிவு
மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர்-கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர்.
குடிப்பெருமை குறள் ஞாபகம் வந்துருச்சுங்க! பாரியா இப்படி-ன்னு முதலில் தோன்றியது!
அது சரி, பாரியும் மனுசன் தானே! இந்த ஒன்னை மட்டும் வச்சி, அவன் மற்ற குணங்களைக் குறைத்து மதிப்பிட முடியாது! குழந்தைகளை யானையின் காலால் இடறச் செய்தவனும் ஒரு கடையேழு வள்ளல் தான்! அப்படித் தான் எடுத்துகிட்டுப் போகணும் போல!
ஆமாம் இரவிசங்கர். ஊண், ஊன் இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை பல மாதங்களுக்கு முன்னர் இராகவன் சொல்லிக் கொடுத்தார். வண்மை, வன்மை இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை இன்று நீங்கள் சொல்லிக் கொடுத்தீர்கள். :)
ReplyDeleteஇடுகையிலும் மாற்றிவிடுகிறேன்.
அப்படி எண்ணித் தான் பாரி மகண்மறுத்தான் என்று படித்திருக்கிறேன் இரவிசங்கர். திருக்குற்றாலக் குறவஞ்சியிலும் வேடுவர் குலப் பெண்ணைக் கேட்டு வரும் குறுநில மன்னனுக்கு மகண்மறுப்பதாக வரும் தானே? பள்ளிப்பாடத்தில் படித்ததாக நினைவு.
பாரி அவன் காலத்திற்கேற்ப நடந்து கொண்டான் என்று தான் நினைக்கிறேன். புகழ் சோரா பாரி நம் பார்வையில் இன்று புகழ் சோர்ந்து போகிறான். அன்றைய பார்வையில் அது பீடுடைத்தாக இருந்திருக்குமோ?
குடிப்பெருமை குறட்பாக்கள் எனக்குத் தெரியாது. நீங்கள் சொல்லியிருக்கும் குறட்பாக்களை இப்போதே படிக்கிறேன். மேல், கீழ் என்று குடிகளில் வேற்றுமை இருந்ததாகச் சுட்டுகிறதோ மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும் கீழல்லார் கீழல்லவர் என்னும் குறள்? ஒழுக்கமும் வாய்மையும் நாணும் குடிப்பிறந்தார் இழுக்கார் என்றதால் நற்குடியில் பிறக்காதவர் அவை இழப்பர் என்று சொல்கிறாரோ? இல்லை நற்குடியில் பிறந்தவராக இருந்தாலும் இவற்றை இழந்தால் அவர் குடிபிறந்தாரில்லை என்று சொல்கிறாரா? நிறைய கேள்விகள் எழுகின்றன இரவிசங்கர். நான் இந்தக் குறட்பாக்களைத் தவறாகப் புரிந்து கொள்கிறேனோ?
டிஸ்கியைப் படித்தீர்கள் என்று எண்ணுகிறேன். பாரி குடிப்பெருமையைக் கொண்டு தான் மகண்மறுத்தான் என்பதற்கு இலக்கியத் தரவுகளை நான் காணவில்லை. மற்றவர் எழுதிய கட்டுரைகளை மட்டுமே கண்டிருக்கிறேன். நான் கண்ட இலக்கியத் தரவுகளில் மகண்மறுத்தல் சொல்லப்படுகிறது; ஆனால் எதற்காக மறுத்தான் என்று சொல்லப்படவில்லை.
சட்டென்று ஒரு வேகம் வந்திருக்கிறது இப்பகுதியில்...பெண் எடுப்பதற்கும்..கொடுப்பதற்கும் கடைப்பிடிக்கப்படும் விதி மாறுபாடுகள் அப்போதே இருந்திருக்கின்றனவே..
ReplyDeleteஇலக்கியப் பாடல் அடுத்த பகுதிக்குக் கிடைக்க வேண்டும்..ஒவ்வொரு பகுதியிலும் அதை எதிர்பார்ப்பது வழக்கமாகி விட்டது..
பாடல்கள் இல்லாவிட்டால் என்ன, நீங்க படித்த, எல்லோருக்கும் தெரியாத (கொடுக்கல்-வாங்கல்) செய்திகளை தந்திருக்கிறீர்கள் அல்லவா... :)
ReplyDeleteஒரு வேளை பாடல் எதுவும் இல்லாதது சட்டென்று வேகம் எடுத்தது போல் தோன்றக் காரணமாக இருக்கலாம் பாசமலர். அப்போதே இப்படிப்பட்ட வழக்கங்கள் இருந்ததாகப் படித்திருக்கிறேன். ஆனால் தகுந்த தரவுகள் இப்போது என்னிடம் இல்லை.
ReplyDeleteஅடுத்தப் பகுதியும் கொஞ்சம் வேகமாகச் செல்லும் என்று நினைக்கிறேன். அடுத்தப் பாடலை அடுத்தப் பகுதியிலேயே சொல்லிவிடலாமா என்பது அடுத்தப் பகுதியின் நிகழ்ச்சிகளைப் பொறுத்தது. பார்க்கிறேன் எப்படி அமைகிறதென்று.
நன்றி மௌலி.
ReplyDeleteகுமரா!
ReplyDeleteபாரியின் மகள்மார் ஆதரவற்றோரானதன் ஆரம்பம் இதுவா??
தொடருங்கள்.
அப்படித் தான் நினைக்கிறேன் ஐயா. யாரிடமிருந்தெல்லாம் மறுப்பு வரும் என்று நினைத்தேனோ அவரகள் எல்லாம் இன்னும் பேசாமல் இருப்பதும் அதை உறுதி செய்கிறது. :-)
ReplyDelete