Saturday, December 24, 2011

Merry Christmas and Happy New Year!


We wish you a Merry Christmas!
We wish you a Merry Christmas!
We wish you a Merry Christmas!
And a Happy New Year!

From our little girl's keyboard and Malli family!



Thursday, December 22, 2011

மாணிக்கம் கட்டி வயிரம் இடை கட்டி - பெரியாழ்வார் திருமொழி 1.3

'நாலாயிரம் கற்போம்' பத்தித் தொடரில் நான்காவது பகுதி இது. பெரியாழ்வார் திருமொழியின் முதல் பத்தின் மூன்றாம் திருமொழி இந்த 'மாணிக்கம் கட்டி வயிரம் இடைகட்டி' என்று தொடங்கும் பத்துப் பாசுரங்கள்.

இந்தப் பத்துப் பாசுரங்களில் திருவாய்ப்பாடியில் எம்பெருமான் கண்ணன் பிறந்திருந்த போது அவனை யசோதை தாலாட்டியதைக் கூறுகிறார் பெரியாழ்வார்.
 
பாசுரம் 1 (22 Dec 2011)

மாணிக்கம் கட்டி வயிரம் இடை கட்டி

ஆணிப்பொன்னால் செய்த வண்ணச்சிறுதொட்டில்

பேணியுனக்குப் பிரமன் விடுதந்தான்

மாணிக்குறளனே தாலேலோ!

வையம் அளந்தானே தாலேலோ!


மாணிக்கங்களை இருபுறமும் கட்டி இடையில் வயிரங்களைக் கட்டி மாற்றில்லாத ஆணிப்பொன்னால் செய்த அழகிய சிறிய தொட்டிலை மிகவும் விருப்பமுடன் பிரமன் உனக்காகத் தந்தான்! உன்னுடைய உடைமைகளை இரந்து பெறுவதற்காக குள்ள மாணவனாக வந்த கண்ணனே தாலேலோ! உன்னுடைமைகளான மூவுலகங்களையும் பெற்ற மகிழ்ச்சியில் திரிவிக்கிரமனாக வளர்ந்து உலகங்களை எல்லாம் அளந்தவனே தாலேலோ!


---

பாசுரம் 2 (23 Dec 2011)


உடையார் கனமணியோடு ஒண்மாதளம்பூ

இடைவிரவிக் கோத்த எழில் தெழ்கினோடு

விடையேறு காபாலி ஈசன் விடுதந்தான்

உடையாய் அழேல் அழேல் தாலேலோ!

உலகம் அளந்தானே தாலேலோ!

உன் இடுப்பின் அழகிற்கு ஏற்ற அழகிய ஒலி எழுப்பும் பொன்மணிகளோடு அழகிய பொன் மாதுளம்பூ இடையிடையே விரவிக் கோத்த அரைஞானை, காளை வாகனம் ஏறும் மண்டையோடு ஏந்தியதால் காபாலி என்று பெயர் உடைய ஈசன் அனுப்பிவைத்தான். எம்மை உடைய தலைவனே அழாதே அழாதே தாலேலோ! உலகம் அளந்தவனே தாலேலோ!

கனகம் = பொன்; கனகமணி என்பது இங்கே கனமணியென்று வந்தது.

--- பாசுரம் 3 (23 Jan 2012)
என் தம்பிரானார் எழில் திருமார்வர்க்கு
சந்தம் அழகிய தாமரைத் தாளர்க்கு
இந்திரன் தானும் எழிலுடைக் கிண்கிணி
தந்துவனாய் நின்றான் தாலேலோ
தாமரைக்கண்ணனே தாலேலோ


என் தலைவனான அழகிய திருமார்பை உடைய, மணமும் விரிவும் நிறமும் அழகிய தாமரையைப் போல் உள்ள திருவடிகளை உடைய உனக்கு மூவுலகங்களுக்கும் தலைவனான இந்திரனும் அழகினை நிலையாக உடைய கிண்கிணியைத் தந்து உன் பெருமையை எண்ணி விலகி நிற்காமலும் உன் எளிமையை எண்ணி அணுகி நிற்காமலும் தகுந்த தொலைவில் உவனாக நின்றான் தாலேலோ! தாமரைக்கண்ணனே தாலேலோ!

அவன் என்று சுட்டும் படி விலகி நிற்கவில்லை. இவன் என்று சுட்டும் படி அணுகி நிற்கவில்லை. உவன் என்று சுட்டும்படி தனக்குத் தகுந்த தொலைவில் இந்திரன் நின்றான்.

Monday, November 07, 2011

ஆதித்ய ஹ்ருதயம், சுதர்ஸனாஷ்டகம் - தமிழில்...

அருள்தமிழ் அண்ணல், பாவலர் அருட்கவி திரு. ப. ஜானகிநாதன் எம்.ஏ., எம்.எட்., ஐயா அவர்கள் ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியர். வடமொழி பாராயண நூல்களான ஆதித்ய ஹ்ருதயம், சுதர்ஸனாஷ்டகம் என்ற இரு நூல்களை தமிழ்க்கவிதைகளாக மொழியாக்கம் செய்திருக்கிறார். அவற்றை அவருடைய மகன் திரு. ஜா. பழனிகுமார் அனுப்பியிருக்கிறார். அதனை இங்கே அன்பர்களுக்காக இணைக்கிறேன்.

ஆதித்ய ஹ்ருதயத்தின் மொழியாக்கத்தை இங்கே படிக்கலாம்.

சுதர்ஸனாஷ்டகத்தின் மொழியாக்கத்தை இங்கே படிக்கலாம்.

Wednesday, October 26, 2011

நல்லதை நினை மனமே!

நல்லதை நினை மனமே! - வீணாய்
பொல்லாததை நினையாதே! நீ (நல்லதை)

கணக்கிலா பொறாமை வைத்து காலத்தை நீ கழித்தால்
அடக்க முடியா கோபம் அடைந்திடுவாய்! நீ (நல்லதை)

தந்தையாம் பொறாமையும் தாயான கோபமும்
தவறாமல் பிறக்க வைக்கும் குழந்தைகள் எது மனமே?!
தீமை தந்திடும் பயமும் தீராத கவலையும்
அதுவே உலகினில் பொல்லாத வாழ்வைத் தரும்! (நல்லதை)



அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்!

Monday, August 22, 2011

நற்றிணையில் மாயோனும் வாலியோனும்...


கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலன்களாலும் காதல் கொண்டு தலைவனும் தலைவியும் பகலிலும் இரவிலும் ஒருவரை ஒருவர் தனிமையில் கண்டு கூடிக் குலாவி மகிழ்ந்து பின்னர் தலைவியைப் பிரிந்து தலைவன் சென்ற போது அவன் பிரிவை எண்ணி வருந்தும் தலைவியரையே சங்க இலக்கியத்தில் பல முறை காண்கிறோம். நற்றிணையில் தொகுக்கப்பட்டிருக்கும் இந்தப் பாடலோ கூடிப் பிரிந்த தலைவன் தலைவியை மீண்டும் காண்பதற்காக வருந்தி வரும் போது அவனை ஏதோ ஒரு காரணத்தால் மறுத்து விலகியிருக்கும் தலைவியைக் காட்டுகிறது.

மாயோன் அன்ன மால் வரைக் கவாஅன்
வாலியோன் அன்ன வயங்கு வெள்ளருவி!
அம்மலை கிழவோன் நம் நயந்து என்றும்
வருந்தினன் என்பதோர் வாய்ச்சொல் தேறாய்!
நீயும் கண்டு நுமரொடும் எண்ணி
அறிவறிந்து அளவல் வேண்டும்! மறுதரற்கு
அரிய! தோழி வாழி! பெரியோர்
நாடி நட்பின் அல்லது
நட்டு நாடார் தம் ஒட்டியோர் திறத்தே!


நற்றிணை 32ம் பாடல்
திணை: குறிஞ்சி
துறை: இது தலைவிக்குக் குறைநயப்புக் கூறியது
இயற்றியவர்: கபிலர் (பாடியவர் என்றும் சொல்லலாமோ?)


பாடலின் பொருள்: மாயோனைப் போல் கரு நிறம் கொண்டு ஓங்கி உயர்ந்து நிற்கும் மலையின் ஒரு பக்கத்தில் மாயோனின் முன்னவனாகத் தோன்றிய பலராமன் என்னும் வாலியோனின் நிறம் போல் வெள்ளை நிறம் கொண்ட அழகிய அருவி இருக்கிறது. அந்த மலையின் தலைவன் உன் உறவினை விரும்பி வேண்டி நமது அண்டையில் அடிக்கடி வந்து நின்று வருந்துகிறான் என்று நான் சொன்னால் அந்த வார்த்தையை நீ ஏற்றுக் கொள்ளவில்லை! நீயே அதனை நேரில் கண்டு உனது மற்ற தோழியரோடு சேர்ந்து சிந்தித்து அவனது காதலை உணர்ந்து அவனுடன் அளவளாவுதல் வேண்டும். அவனது காதல் மறுத்தற்கு அரியது. தோழி நீ வாழ்க! பெரியவர்கள் நட்பு கொள்வதற்கு முன்னர் நட்பு வேண்டி வந்தவர்களைப் பற்றி ஆராய்வார்கள்! உன்னைப் போல் நட்பு கொண்ட பின்னர் நட்பு கொண்டவர்களிடத்து ஆராய்ச்சியைச் செய்ய மாட்டார்கள்!

செல்வத்திலும் அறிவிலும் வலிமையிலும் ஆற்றலிலும் சிறந்த ஆளும் திறத்தவராகிய தலைமக்களே சங்க இலக்கியத்தில் பெரும்பாலும் பேசப்பட்டிருக்கிறார்கள். இந்தப் பாடலில் காதலன் 'மலைக் கிழவோன்' என்று குறிக்கப்படுவதன் வழி அவனும் அப்படி செல்வத்திலும் ஆட்சியிலும் மற்ற வகைகளிலும் சிறந்த ஒரு தலைமகன் என்பது சொல்லப்படுகிறது. அதனை இங்கே 'அவன் உனக்கு ஏற்றவன். அவன் மலையின் தலைவன். அதனால் உன் காதலைப் பெறும் தகுதியுடையவன்' என்று தோழி சுட்டிக் காட்டுவதன் மூலம் காதலியும் ஒரு தலைமகள் என்பதைக் காட்டுகிறது. சங்கப் பாடல்கள் பெரும்பாலும் தலைமக்களையும் அவர்தம் காதலையும் உணர்வுகளையுமே பேசியதால் தான் அவர்களைக் காதலன் காதலி என்று குறிக்காமல் தலைவன் தலைவி என்றும் கிழவன் கிழத்தி என்றும் பாடலை எழுதியவர்களும் உரையாசிரியர்களும் குறித்தார்கள் போலும்.

கபிலரின் இந்தப் பாடலில் வரும் 'பெரியோர் நாடி நட்பின் அல்லது நட்டு நாடார் தம் ஒட்டியோர் திறத்தே' என்னும் கருத்தே கொஞ்சம் மாற்றத்துடன் திருக்குறளில் 'நாடாது நட்டலின் கேடில்லை நட்டபின் வீடில்லை நட்பாளவர்க்கு' என்று (கருத்தை அழுத்தமாய் வலியுறுத்த?) எதிர்மறையாக வருவதைக் காணலாம். அதனால் 'ஆராய்ந்து நட்பு கொள்ள வேண்டும்; நட்டபின் ஆராய்தல் பிழை' என்பது ஒரு பழமொழியைப் போல் சங்க காலத்தில் வழங்கியிருத்தல் கூடும் என்று தோன்றுகிறது.

குறிஞ்சித் திணைப் பாடலாகிய இந்தப் பாடலில் முல்லைக்குரிய மாயோனும் அவனுடனே பெரும்பாலும் குறிக்கப்படும் வாலியோனும் பேசப்படுகிறார்கள். மக்கள் நன்கு அறிந்த ஒன்றையே உவமையாகக் கூறுவார்கள் என்பதால் மாயோன் என்னும் கண்ணனின் கருநிறமும் அவனது நெடிய தோற்றமும் இங்கே மலைக்கு உவமையாகவும், வாலியோன் என்னும் பலதேவனின் வெண்ணிறமும் அவனது வலிமையும் இங்கே அருவிக்கு உவமையாகவும் அமைந்திருக்கிறது.

Friday, July 29, 2011

பகிர்தல் - 2

பத்து நாளைக்கு முன்னாடி திடீர்ன்னு ஒரு நாள் நம்ம இரவி நான் ரொம்ப நாளைக்கு முன்னாடி எழுதுன இடுகைகளை (இடுகை 1) (இடுகை 2) படிச்சுட்டு 'நீங்க இன்னொரு ஜெயமோகன்'னு சொல்லி ஒரு மின்னஞ்சல் அனுப்புனார். 'என்னடா இவரு இந்த மாதிரி கேலி பண்றாரே'ன்னு நெனச்சுக்கிட்டு 'எதுக்கு அப்புடி சொல்றீங்க'ன்னு கேட்டா 'அவரு தான் இப்புடி டெக்னிகல் டெர்ம்ஸ் நெறைய போட்டு எழுதியிருப்பாரு. நீங்களும் அப்படி எழுதியிருக்கீங்க'ங்கறார். 'சரி. நாம எழுதுனதை முக்குனாலும் சரி மொனகுனாலும் சரி புரிஞ்சிக்க முடியாதுங்கறதைத் தான் நாசூக்கா இப்படி சொல்றாரு'ன்னு நெனைச்சுக்கிட்டேன்.

இன்னைக்கி வேணுவனத்துல சுகா எப்பவோ எழுதியிருந்த ஒரு இடுகையைப் படிக்கிறப்ப தான் எனக்கும் ஜெயமோகனுக்கும் இருக்கும் இன்னொரு ஒற்றுமையும் தெரிஞ்சிச்சு. (அப்பாடா! இரவி கிண்டலா சொன்னதையும் 'இன்னொரு'ன்னு இங்கே ஒரு சொல்லைப் போட்டு பெருமையா ஏத்துகிட்டாச்சு!). அவருக்கும் சைக்கிள் ஓட்டத்தெரியாதாம்! ஹேஹே ஓஹோ லாலலான்னு பாடாத கொறைதான்! (அந்தப் பாட்டுல சைக்கிள்லெயே ஊரைச் சுத்துவாங்க. அதுவும் இப்ப நினைவுக்கு வந்து படுத்துதே!)

இந்த வேனற்காலத்துல தோப்புக்கும் ஏரிக்கரைக்கும் நண்பர்கள் அவங்க குடும்பங்கள்ன்னு போறப்ப எல்லாம் அவங்கவங்க இந்த மிதிவண்டியைக் கொண்டு வர்றாங்க. எனக்கு ஓட்டத் தெரியாதுன்னு ஒவ்வொரு தடவையும் வெக்கத்தோட சொல்ல வேண்டியிருக்கு. அதெப்படிங்க எத்தனை தடவை சொன்னாலும் மறந்து போகுது. அதுல இன்னும் பாவம் என்னான்னா எனக்கு ஓட்டத் தெரியாததால என் முகத்தைப் பாத்துட்டு தங்கமணியும் ஒதுங்கிக்கிறாங்க. பாவம்.

ரெண்டு வாரத்துக்கு முன்னாடி பொண்ணு முந்நிலைப் போட்டியில (triathlon) கலந்துக்கிட்டான்னு சொன்னேன்ல. அப்ப எடுத்த படங்களை எல்லாம் எங்க அணியில இருக்குறவங்களுக்கு அனுப்பியிருந்தேன். எங்க துறைத் தலைவர் (VP) அன்னைக்கு காலையில தான் அவரும் முந்நிலைப் போட்டிகள்ல கலந்துக்குவார்ன்னு சொல்லியிருந்தாரு. உடனே ஆகா நம்ம பொண்ணும் கலந்துகிட்டான்னு சொல்லலாமேன்னு படங்களை அனுப்புனேன். படங்களைப் பாத்துட்டு மொதோ ஆளா பதில் மின்னஞ்சல் அனுப்புனார் 'அவங்கப்பாவையும் சீக்கிரம் இந்த மாதிரி போட்டிகள்ல கலந்துக்கச் சொல்லுன்னு உன் பொண்ணுக்கிட்ட சொல்லு'ன்னு எழுதியிருந்தார். அடப்பாவமே. முந்நிலை என்ன ஒரு நிலை போட்டியில கூட அவங்கப்பாவால கலந்துக்க முடியாதுன்னு தெரியாம எழுதுறாரேன்னு நெனைச்சுக்கிட்டேன். பின்ன? மிதிவண்டி ஓட்டவும் தெரியாது; நீச்சலும் தெரியாது; ஓட மட்டும் முடியும்; அதுவும் இந்த பெரிய உடம்பை வச்சுக்கிட்டு ஓடுனா கொஞ்ச தூரத்திலேயே இளைப்பு வந்திரும்! நம்மளைப் பத்தி ஒன்னுமே இவருக்குத் தெரியலையேன்னு நெனைச்சுக்கிட்டேன்.

**

ஞாயித்துக்கிழமை சாயங்காலம் போரடிச்சுக்கிட்டு உக்காந்துக்கிட்டிருக்கிறப்ப ஏதாவது படம் பாக்கலாம்ன்னு குறுந்தட்டுகளைப் புரட்டுனா குசேலன் தட்டு சிக்கிச்சு. படத்தைப் போட்டு எழுத்துங்க ஓடறப்ப 'ஐ. சிவாஜி படமா!'ன்னு பொண்ணுக்கு ஒரே சந்தோசம். எத்தனை தடவை சொன்னாலும் ரஜினி பேரை மறந்துட்டு சிவாஜின்னு தான் சொல்றா. ரெண்டு வாரத்துக்கு முன்னாடி திருவிளையாடல் பாக்குறப்ப 'இது சிவாஜி படம்'ன்னு சொன்னேன்; அவ ரஜினி படம்ன்னு நெனைச்சுக்கிட்டு எங்கே இன்னும் சிவாஜி வரலை சிவாஜி வரலைன்னு கேட்டுக்கிட்டு இருந்தா. பையன் தான் சிவபெருமானா வந்த சிவாஜியை காமிச்சு 'இதோ சிவா'ன்னு சொன்னான். ரெண்டு பேருக்கும் ஒரே சண்டை. 'இது லார்ட் சிவா. ஆனா சிவாஜி இல்லை'ங்கறா பொண்ணு. 'இது தான் சிவா'ங்கறான் பையன். நாங்க சிரிச்சுக்கிட்டே அவங்க சண்டையப் பாத்துக்கிட்டு இருந்தோம்.

குசேலன் படத்தைப் பத்தி சொல்ல ஆரம்பிச்சு திருவிளையாடலுக்குப் போயிட்டேன். குசேலன் படம் போட்டவுடனே பையன் 'இது என்ன படம்'ன்னு கேட்டான். ரஜினி படம்ன்னா அவனுக்கு புரியாதுன்னு வேணாம்ன்னு அழுவான்; அதனால 'இது குசேலன் கதை; கிருஷ்ணன் வருவான்'னு சொல்லிட்டேன். அவனும் கடைசி வரைக்கும் பொறுமையா உக்காந்து 'எப்ப பாலகிருஷ்ணன் வருவான்'ன்னு கேட்டுக்கிட்டே இருந்தான். பார்பர் பாலுவைக் காமிச்சு 'இவர் தான் பாலகிருஷ்ணன்'ன்னு சொன்னா 'இல்லை. இது பாலகிருஷ்ணன் இல்லை. பாலகிருஷ்ணன் சட்டை போட்டிருக்க மாட்டான்'ன்னு சொல்றான்.

எப்படியோ ரெண்டு பேரையும் அழுத்தி உக்கார வச்சு படம் பார்த்தேன். படம் கொஞ்சம் போர் தான். ரஜினி பள்ளிக்கூட கூட்டத்துல பேசுற காட்சிக்காக உக்காந்து பாத்துக்கிட்டிருந்தேன். அந்தக் காட்சி வந்தப்ப தங்கமணியும் வந்து குழந்தைகளுக்கு அந்தப்பக்கமா உக்காந்துக்கிட்டாங்க. காட்சி முடியற நேரம் ஒருத்தரை ஒருத்தர் திரும்பி பாத்துக்கிட்டா ரெண்டு பேருக்கும் சிரிப்பு தாங்கலை. ஏன்னா ரெண்டு பேரு கண்ணுலயும் தாரை தாரையா தண்ணி! ரஜினி என்ன சொன்னாரு; ஏன் அழறீங்க நீங்க ரெண்டு பேரும்ன்னு பொண்ணு கேட்டு படுத்தி எடுத்துட்டா.

இந்த மாதிரி படத்தைப் பாத்து கண்ணீர் விடறவங்க நெறைய பேரு இருங்காங்கன்னு தான் நினைக்கிறேன். நீங்க எப்படி?

**

கேட்டதில் பிடித்தது:



இந்தப் பாட்டைக் கேக்க பிடிக்கும். பாக்கப் பிடிக்காது. என்னமோ தெரியலை.

Monday, July 18, 2011

பகிர்தல் - 1

அலுவலகத்தில் வேலை அதிகம். தற்போது இருக்கும் target.com அமேசான் நிறுவனத்தின் இணைய வழங்கியில் அவர்களது மென்பொருளால் நடந்து கொண்டிருக்கிறது. நான் வேலை செய்யும் டார்கெட் நிறுவனமே சொந்தமாக மின்வணிக மென்பொருளையும் புதிய தளத்தையும் தற்போது எழுதிக் கொண்டிருக்கிறது. 2009ல் தொடங்கிய இந்த வேலை இன்னும் ஒரு மாதத்தில் முடிவடையும். இந்த திட்டப்பணிக் குழுவில் ஒரு உறுப்பினனாக நான் இருப்பதால் நிறைய வேலை. அதிகம் எழுத இயலவில்லை.

சுருக்கமாக சில பகிர்தல்களை இனி தொடர்ந்து எழுதலாம் என்று எண்ணுவதால் இதோ முதல் பகிர்தல். இரவிசங்கர் சிரிக்கப் போகிறார். இப்படி எத்தனை தொடர்களைத் தொடங்கிவிட்டு அம்போ என்று விட்டுவிட்டீர்கள். இன்னும் ஒரு தொடர் அந்த பட்டியலில் சேர்கிறதா என்று. :-)

**

வருடத்தில் எட்டு மாதங்களுக்கு மேலாக குளிராகவும், டிசம்பர் ஜனவரி மாதங்களில் கடுங்குளிராகவும் இருக்கும் எங்கள் ஊரில் சென்ற ஜூலையிலிருந்து நல்ல வெயில். அதனால் வாராவாரம் வார இறுதிகளில் முடிந்தவரை இங்கிருக்கும் பல இடங்களுக்கு மகிழுலா சென்று கொண்டிருக்கிறோம். எங்கள் ஊருக்கு 'ஆயிரம் ஏரிகளின் ஊர்' என்று பெயர். தடுக்கி விழும் இடங்களில் எல்லாம் குளம், குட்டை, ஏரிகள் தான். ஏரிக்கரைகளும், நீர்ப்பூங்காகளும் (Water Park) இங்கே நிறைய இருக்கின்றன. அது போக மிஸ்ஸிசிப்பி ஆற்றங்கரையும் உண்டு.

சில நாட்கள் வெயில் மிகவும் அதிகமாகப் போய் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடப்பதும் உண்டு. இந்த ஞாயிறு அப்படி அமைந்துவிட்டது. வீட்டிற்குள்ளேயே நிறைய வேலை இருக்கிறதே - நால்வரும் அவற்றை எல்லாம் செய்து கொண்டிருக்கிறோம். நால்வரும் என்றா சொன்னேன்?! பெரியவர்கள் வேலை செய்ய சிறியவர்கள் உதவி செய்கிறோம் என்ற பெயரில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் நல்லதிற்குத் தான். எங்களுக்கு உதவி செய்கிறோம் என்ற மன நிறைவும் அவர்களுக்குக் கிடைக்கிறது. எங்கள் வேலைகளைச் செய்யமுடியாமல் அவர்கள் தொந்தரவு கொடுப்பதும் குறைகிறது. :-)

**

ஜூன் ஒன்றாம் நாள் நான் அமெரிக்க குடியுரிமையை பெற்றேன். ஜூலை ஆறாம் நாள் என் மனைவி பெற்றார். சென்ற வியாழக்கிழமை அவரது பணியிடத்தில் அவரது குழுவினர் ஆலிக்குழைவினால் (Ice Cream) செய்யப்பட்ட இன்னப்பத்தைக் (cake) கொண்டு வந்து அவருக்கு எதிர்பாரா குறுவிருந்து தந்தனர். எனது குழுவினர் இதையெல்லாம் கண்டு கொள்ளவே இல்லை. புதிய தளம் அமைப்பதில் இரவு பகலாக எல்லோரும் வேலை செய்து கொண்டிருப்பதால் இதெல்லாம் கொண்டாட யாருக்கும் நேரம் இல்லை. கொஞ்சம் பொறாமையாகத் தான் இருந்தது. :-)

**
சனிக்கிழமை மகள் மூன்று நிலை போட்டி (Triathlon) ஒன்றில் கலந்து கொண்டாள். புற்று நோய் ஆராய்ச்சிக்கு உதவும் ஒரு நிறுவனம் வருடந்தோறும் இதனை நடத்துகிறது. அவளது பள்ளித் தோழி ஒருத்தி சிறுவயதில் புற்றுநோயிலிருந்து தேறியவள். தோழியின் பெயரில் ஒரு அணி அமைத்து அவளது பள்ளியிலிருந்து இருபது மாணவ மாணவியர் இந்தப் போட்டியில் கலந்து கொண்டனர். அங்கே செல்லும் வரை அவளுக்கு கொஞ்சம் படபடப்பாகத் தான் இருந்தது என்று நினைக்கிறேன்; ஆனால் அவள் அதனை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. நோகோமிஸ் ஏரியில் நான்கு நீச்சல் குள நீளத்திற்கு முதலில் நீச்சல்; அதைத் தொடர்ந்து மிதிவண்டியில் மூன்று மைல் ஏரிக்கரைச் சுற்று; அதைத் தொடர்ந்து ஒரு மைல் ஓட்டம். ஜூனில் ஒரே ஒரு முறை பயிற்சி செய்தாள். அப்புறம் பயிற்சியே செய்யவில்லை. ஆனால் எப்படியோ மூன்றையும் நிறைவு செய்துவிட்டு வெற்றிகரமாகத் திரும்பி வந்தாள்.

**

சென்ற வியாழன் குருபூர்ணிமா தினம். இரு வருடங்களுக்கு முன்பு குருபூர்ணிமா நாள் மாலை என் தந்தையார் இயற்கை எய்தினார். திதியின் படி அப்போது பூர்ணிமை முடிந்து பிரதமை வந்துவிட்டது. அதனால் இந்த வருடம் வெள்ளிக்கிழமை தான் சிரார்த்தம் செய்வதற்கான திதி நாள் என்று தம்பி சொல்லியிருந்தார்.

மதுரையில் தம்பி அந்த சடங்குகளை எல்லாம் என் சார்பிலும் முறையாகச் செய்ய, நான் இங்கு கோவிலுக்காவது சென்று வரலாம் என்று வெள்ளிக்கிழமை அலுவலகத்திற்கு விடுப்பு இட்டுவிட்டேன். மனைவியாரும் விடுப்பு எடுத்துக் கொண்டார். குழந்தைகள் இருவரையும் அவர்களின் வேனிற்பள்ளியில் விட்டுவிட்டுப் பின்னர் கோவிலுக்குச் செல்லலாம் என்று திட்டம். அவர்கள் இருவரையும் விடச் சென்ற போது அவர்களது ஆசிரியர் 'இருவர் தலையிலும் பேனும் ஈரும் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்; இங்கே பல சிறுவர்களுக்கு பேன் இருப்பதால் அவர்களை வீட்டிற்குத் திருப்பி அனுப்பிக் கொண்டிருக்கிறோம்' என்று சொன்னார். சரி பாருங்கள் என்று சொன்ன பின்னர், அவர் இருவர் முடியையும் சோதித்துவிட்டு இருவருக்கும் ஈர் இருக்கிறது என்று சொல்லித் திருப்பி அனுப்பிவிட்டார். எனக்கோ திட்டப்படி நடந்து கொள்ள முடியவில்லையே என்று வருத்தம். அது சினமாக மாறி அந்த ஆசிரியையிடம் 'இவர்களுக்கு பேன் தான் இல்லையே! ஒன்றிரண்டு ஈர்கள் தான் கண்களுக்குப் படுகின்றன. அவற்றையும் தேடிப் பிடிக்க வேண்டியிருக்கிறது. ஏன் தேவையில்லாமல் இருவரையும் திருப்பி அனுப்புகிறீர்கள்' என்று சண்டை இடத்தொடங்கிவிட்டேன். மகள் ஓடிப்போய் மகிழுந்தில் அமர்ந்திருந்த என் மனைவியை 'அப்பா டீச்சரிடம் சண்டை போடுகிறார்' என்று கூறி அழைத்து வந்துவிட்டார். அவர் வந்து 'ஏன் தேவையில்லாமல் ஆசிரியரிடமெல்லாம் சண்டை போடுகிறீர்கள். நாளெல்லாம் அவர்கள் தானே நம் குழந்தைகளைப் பார்த்துக் கொள்கிறார்கள்' என்று கூறி இழுத்துவந்துவிட்டார்.

சரி எல்லோரும் சேர்ந்தே கோவிலுக்குச் செல்வோம் என்று கிளம்பினால் சரியான மழை. கோவில் வீட்டிலிருந்து நாற்பத்தி ஐந்து மைல் தொலைவில். நெடுஞ்சாலையில் செல்லும் போது மழையால் முன்னால் செல்லும் உந்தும் தெரிய மாட்டேன் என்கிறது. பின்னிருக்கையில் இருவரும் விளையாட்டுச் சண்டை போடுகிறார்கள். 'சரி இந்த மழையில் இவர்களைக் கூட்டிக் கொண்டு கோவிலுக்குப் போய் வர இயலாது. காலையில் வீட்டில் வழக்கம் போல் சாமி கும்பிட்டோமே அதுவே போதும்' என்று சொல்லி உந்தை வீட்டிற்கே திருப்பிவிட்டேன்.

அப்பாவிற்கு ஊனுணவு பிடிக்கும். ஆனால் திதி அன்று அவற்றை நாங்களும் உண்ண முடியாது. அவருக்கும் படைக்க முடியாது. அதனால் அவருக்குப் பிடித்த உளுந்து வடை, பருப்பு வடை செய்து படைப்போம் என்று வடைகளைச் சுட்டு அவர் படத்திற்கு முன் வைத்து வணங்கினோம். மழை நேரத்தில் சூடான வடைகள் சுவையாக இருந்தன; அவருக்கும் அப்படியே இருந்திருக்கும்.

வார இறுதியில் இரண்டு நாட்களும் பேன்கொல்லி மருந்தைக் குழந்தைகள் தலையில் தடவி முழுக்காட்டி, செத்த பேன்களையும் ஈருகளையும் வாரி எடுப்பதிலேயே நிறைய நேரம் செலவழித்தார் மனைவியார். பெண் தலையில் கொஞ்சம் ஈர் இருந்தது. பையன் தலையில் சுத்தம். ஒன்று கூட இல்லை. 'நீங்க சண்டை போட்டது சரி தான். இவன் தலையில தேடுனாலும் கிடைக்க மாட்டேங்குது. இவனையும் திருப்பி அனுப்புனது தப்பு தான்'னு மனைவியார் பலமுறை சொல்லிவிட்டார். தேவையில்லாத இந்த வேலையைச் செய்ய வேண்டியிருக்கிறதே என்று கடுப்பும் அலுப்பும் அவருக்கு.

இன்று காலை எழுந்தவுடன் பையன் 'எனக்கு தலையில் பேன் இருக்கிறது' என்று சொல்லத் தொடங்கிவிட்டான். இன்னொரு நாள் விடுப்பு கிடைக்கும் என்று நினைக்கிறானோ என்னவோ. வழக்கமாக நான் தான் இருவரையும் அவர்கள் பள்ளியில் விடுவேன். 'இன்றைக்கும் நீங்கள் போனால் சண்டை போடுவீர்கள். நான் போய் விடுகிறேன்' என்று மனைவி குழந்தைகளை அழைத்துப் போயிருக்கிறார். திருப்பி அனுப்பாமல் இருப்பார்கள் என்று நம்புகிறேன். அப்படி அனுப்பினால் வேறு பள்ளி பார்க்க வேண்டியது தான். என்ன வேனிலுக்காகக் கட்டிய சிறப்புக் கட்டணத்தைத் திருப்பித் தரமாட்டார்கள்.

**

ஒரு கொட்டகையில் ஐம்பது மாடுகளும் இரு மேய்ப்பர்களும் இருக்கிறார்கள். இரு மேய்ப்பர்களும் கடிகாரம் அணிந்து கொண்டிருக்கிறார்கள். அங்கே மொத்தம் எத்தனை கால்கள் எத்தனை கைகள் இருக்கின்றன.

இந்தக் கேள்வியை மகளிடம் இன்று காலை கேட்டிருக்கிறேன். நான் வீட்டை விட்டு கிளம்பும் வரை யோசித்துக் கொண்டிருந்தாள். மாலையில் பதிலைச் சொல் என்று சொல்லிவிட்டு வந்திருக்கிறேன்.

பையன் சட்டென்று 'One thousand legs'ன்னு சொல்லிவிட்டான். :-)

**

"பாபா. Did you get a call?" என்று கேட்டாள் மகள் நேற்று.

"No. Did you grill it or fry it?" என்றேன் நான். அவளுக்குப் புரியவில்லை. உங்களுக்குப் புரிந்ததா?

Thursday, June 23, 2011

குலமகளும் அறம் தாங்கு மக்களும்...



ஒரு கல்லை எறிந்தால் மரத்தில் இருக்கும் பறவைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் பறப்பதைப் போல், ஏதோ ஒன்றினால் சிறு சலனம் ஏற்பட்ட போது எல்லா திசைகளிலும் பரந்து செல்லும் குளத்து நீர் வட்டங்களைப் போல், பாரதியார் இயற்றிய இந்த விநாயகர் நான்மணிமாலைப் பாடலைப் படித்த போதும் பல எண்ணங்கள் எல்லா திசைகளிலும் பரவுகின்றன.

துறந்தார் திறமை பெரிது அதனினும் பெரிதாகும் இங்கு
குறைந்தாரைக் காத்து எளியார்க்கு உணவு ஈந்து குலமகளும்
அறந்தாங்கு மக்களும் நீடுழி வாழ்க என அண்டம் எல்லாம்
சிறந்தாளும் நாதனைப் போற்றிடும் தொண்டர் செய்யும் தவமே

எளிமையான பாடல் தான்.

துறந்தார் திறமை பெரிது!

அதனினும் பெரிது உண்டு!

அது குறைந்தாரைக் காத்து, எளியார்க்கு உணவு ஈந்து, குலமகளும் அறம் தாங்கு மக்களும் நீடுழி வாழ்க என, அண்டம் எல்லாம் சிறந்து ஆளும் நாதனைப் போற்றிடும் தொண்டர் செய்யும் தவம்!

தவம் என்ற சொல்லைக் கேட்டவுடன் நினைவிற்கு வருவது துறவு தான். துறவிகள் தான் தவம் செய்வார்கள் என்பதே நம் மனத்தில் பதிந்திருக்கும் ஒரு ஆழமான புரிதல்!

அந்தக் காலத்தில் முனிவர்கள் தங்கள் மனைவியருடன் சேர்ந்து வாழ்ந்து கொண்டே தவங்களையும் செய்தார்கள் என்று மரபு வழி நூல்களில் படிக்கும் போது, துறவிகள் மட்டுமே தவம் செய்வார்கள் என்ற எண்ணத்தால் உந்தப்பட்டு சிறிது குழப்பம் அடைபவர்களும் உண்டு; உள்ளூர நமுட்டுச் சிரிப்பு சிரித்துக் கொள்பவர்களும் உண்டு.

முனிவர்கள் என்று அழைக்கப்பட்ட அந்தப் பெரியவர்கள் பலர் துறவியராகவும் இருந்திருக்கிறார்கள்; குருகுலம் அமைத்துக் கொண்டு தேடிவந்த மாணவர்களுக்குப் பாடம் சொல்லித் தந்த ஆசிரியர்களாகவும் இருந்திருக்கிறார்கள்; அரசுக்கு அறவுரை சொல்லும் குலகுருக்களாகவும் இருந்திருக்கிறார்கள்.

இப்படி பலவகைப்பட்டத் தொண்டுகள் செய்தவர்களை எல்லாம் முனிவர்கள் என்று சொல்வதைப் பார்க்கும் போது துறவிகள் என்பவர் முனிவர்களில் ஒரு பகுதியினர் ஒரு வகையினர் என்று மட்டுமே சொல்லலாமே ஒழிய முனிவர்கள் எல்லோரும் துறவிகள் இல்லை என்ற புரிதல் கிடைக்கிறது.

அந்தப் புரிதல் கிடைத்தால் குழப்பமும் வராது; நமுட்டுச் சிரிப்பும் வராது.

இந்தக் குழப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு துறவிகளாக வெளிவேடம் போட்டுவிட்டு மாட்டிக் கொள்ளும் போது ‘முனிவர்கள் தத்தமது மனைவியருடன் வாழ்ந்தனர்’ என்று கூறி தப்பிக்க முயல்பவர்களைப் பற்றி இங்கே பேசவில்லை; பேசத் தொடங்கினால் முடியாததொன்று அது!

தவம் செய்யும் முனிவர்களின் பெருமையை நம் மரபான நூல்கள் பரக்கப் பேசும். அவர்களால் ஆகாததொன்றும் இல்லை என்ற அளவிற்கு அப்பெருமைகள் பேசப்பட்டிருக்கும். அதெல்லாம் அங்கே விரிவாக ஏற்கனவே பேசப்பட்டுவிட்டதால் அவற்றையெல்லாம் இந்தப் பாடலில் விரிக்காமல் பாடலின் அரை அடியில் அதனை ‘துறந்தார் பெருமை பெரிது’ என்று சொல்லி அனைத்தையும் குறிப்பாக உணர்த்திவிட்டார் பாரதியார்.

துறந்தார் செய்யும் தவத்தை விட பெருமை வாய்ந்த தவம் வேறு ஒன்றுண்டு! இல்லறமல்லது நல்லறமன்று என்ற மூத்தோர் சொல் வழி வாழும் மனிதர் செய்யும் தவமே அது!

அப்படியென்றால் இல்லறத்தில் ஈடுபட்டுள்ள நான் செய்வது தவமா? அது துறந்தார் பெருமையை விட பெரியதா? நினைத்தால் உள்ளூர ஏளனச் சிரிப்பு தான் தோன்றுகிறது!

துறந்தார் பெருமையை விட சிறந்தது எது என்பதை மிகவும் விரிவாகச் சொல்கிறார் இந்தப் பாடலில்.

குறைந்தாரைக் காக்க வேண்டும்!

எந்த வகையில் குறைந்தவர்கள் என்று சொல்லாமல் எந்த வகையிலோ குறையை உடையவர்களை எல்லாம் காக்க வேண்டும். உடலில் குறை இருக்கலாம்; மனதில் குறை இருக்கலாம்; அறிவில் குறை இருக்கலாம்; எந்த வகையிலும் குறை இருக்கலாம்.

'இறைவன் தான் எக்குறையும் அற்றோன்! இங்கு எவருக்கு குறையில்லை? யார் முற்றும் கற்றோன்?' என்ற கவியரசர் கண்ணதாசன் பாடல் வரிகளும் இங்கே பொருந்தும்!

ஆக, குறை உள்ளவர் நாமும் நம்மைச் சுற்றியுள்ள அனைத்து உயிர்களுமே! ஒவ்வொன்றையுமே இயன்ற அளவில் காப்பதே பெருந்தவமாகும்! அது துறந்தார் பெருமையை விட பெரிதாகும்!

எளியார்க்கு உணவு ஈய வேண்டும்!

உற்றார் உறவினர் நண்பர்கள் என்று வீட்டிற்கு அழைத்து உணவு இடும் போது அது நமக்கு பெரிதாகத் தோன்றுவதில்லை. வாழ்க்கையில் இயல்பாக நடக்கும் ஒரு செயலாக அது இருக்கிறது.

நமக்கு உறவாகவோ நண்பராகவோ இல்லாமல் இருக்கும் ஒருவர் ஏழ்மையிலோ துன்பத்திலோ இருந்தால் அது நமக்கு உறைப்பதில்லை!

நம்மைச் சுற்றி எத்தனையோ பேர் ஏழ்மையில் வாடினாலும் அது நம் கண்களுக்குத் தென்படுவதில்லை!

அதனால் தான் எளியார்க்கு உணவு ஈவதைத் தவம் என்று தனித்துச் சொன்னார்கள் போலும். அந்தத் தவம் துறந்தார் பெருமையை விட பெரிதாகும்!

மனைவி குலமகளாக பண்பாடு காக்க வேண்டும்!

பண்பாடு என்றால் என்ன என்று விளக்கிச் சொல்லத் தேவையில்லை; அனைவருக்கும் அதில் ஒரு புரிதல் உண்டு.

விளக்கிச் சொல்வதும் எளிதான செயல் இல்லை. ஒன்றிலிருந்து ஒன்றாக கிளைத்துச் செல்லும் சங்கிலித் தொடராக அது நீளும்.

பண்பாடு காத்தல் என்பது இங்கே ஒருத்திக்கு ஒருவன் என்னும் கற்பு நெறி காப்பது மட்டும் இல்லை.

பெற்றோரிடமும் மூத்தோர்களிடமும் கற்றதை எல்லாம் வாழ்க்கையில் நடத்திக் கொண்டு தன் பிள்ளைகளுக்கும் அவற்றைக் கற்றுக் கொடுப்பதே பண்பாடு என்றும் கற்பு வாழ்க்கை என்றும் முன்னோர் வகுத்தனர்.

கற்றது என்ற சொல்லின் அடிப்படையில் அமையும் சொல் கற்பு. அந்தக் கற்பெனும் பண்பாட்டைக் காப்பவள் குலமகள்.

கற்பு நிலை என்று சொல்ல வந்தால் இரு கட்சிக்கும் அஃதை பொதுவில் வைப்போம்!

பெண்டிரை இப்பாடல் குறித்தால் இங்கே குலமகள் என்னாது குலமகன் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்!

மக்கள் அறம் தாங்குபவர்களாக இருக்க வேண்டும்!

அறம் என்பதும் விளக்கத் தொடங்கினால் நீளும்.

முன்னோர் வகுத்ததில் அறிவிற்கு முரணில்லாதவற்றை நடத்துவதும், அப்படி நடத்துவதுல் எந்த விதத் தடை வந்தாலும் தயங்காமல் ஊக்கத்துடன் நடத்திச் செல்வதும், தன்னலத்திற்கு எதிராக இருந்தாலும் பொது நலம் பேணினால் அதனை ஊக்கத்துடன் நடத்திச் செல்வதும் என்று பலவகையாக அறம் தாங்குதல் என்பதை விளக்கிச் செல்லலாம்.

தம் மக்கள் அப்படி அறந்தாங்குபவர்களாக இருக்கும் படி பெற்றோர் வளர்க்க வேண்டும்! அது தவம்! அந்தத் தவம் துறந்தார் பெருமையை விடப் பெரிதாகும்!

குலமகளான மனைவியும் அறம் தாங்கும் மக்களும் நீடுழி வாழ்ந்து பண்பாட்டையும் அறனையும் காக்க வேண்டும் என்று விரும்பித் தொழ வேண்டும்!

யாரைத் தொழுவது?

தனக்கொரு நாதன் நாயகன் இல்லாமல் தானே அனைத்திற்கும் நாயகனாய் இருக்கும் நாதனைத் தொழவேண்டும்!

அண்டம் எல்லாம் சிறந்தாளும் அந்த நாதன் அந்த நாயகன் விநாயகன்!

அப்படித் தொழுதல் தவம்! அந்தத் தவம் துறந்தார் பெருமையை விடப் பெரிதாகும்!

தொண்டு செய்ய வேண்டும்!

இறைவனைத் தொழுபவர் மட்டுமே தொண்டர் இல்லை! என்பும் உரியர் பிறர்க்கு என்ற வகையில் அன்புடையார் எல்லோரும் தொண்டரே! தொண்டர் தம் பெருமை சொல்லவும் அரிது! அப்படியெனில் அவர் செய்யும் தவம் துறந்தவர் பெருமையை விடப் பெரியது தானே?!

இப்பாட்டைப் படிக்கும் போதும் பின்னர் விளக்கத்தைப் படிக்கும் போதும் உங்களுக்குத் தோன்றிய எண்ணங்கள் என்ன?

Wednesday, June 22, 2011

It Gets Better: Target Team Members



இதில் வரும் சிலர் நாள்தோறும் நான் சந்திப்பவர்கள்; கூட வேலை செய்பவர்கள். அவர்கள் கதையை அறிந்ததில் மகிழ்ந்தேன். அதனைப் பகிர்ந்தும் கொள்கிறேன்.

Thursday, May 05, 2011

சிம்கார்ட் - பேசியட்டை

எழுத்தாளர், ஆசிரியர் திரு. பெருமாள் முருகன் தரும் சொல்லாக்கம் இது.

Thursday, April 28, 2011

ஐயப்பா என்று அவன் நாமம் நான் சொல்ல வேண்டும்!



மணியான ஒரு பாடல் வேண்டும்! - அது
மணிகண்டன் மீதிருக்க வேண்டும்! (மணியான)

துணையாக அவன் இருக்க வேண்டும்! - சபரி
மலை ஏற அருள் செய்ய வேண்டும்! (மணியான)

நடுக்காட்டில் துணையாக வேண்டும்! - நல்ல
வழிகாட்டியாய் இருக்க வேண்டும்!
அவன் நாமம் நான் சொல்ல வேண்டும்! - ஐயப்பா என்று
அவன் நாமம் நான் சொல்ல வேண்டும்! - மனம்
அருள் தேட வழி செய்ய வேண்டும் (மணியான)


Tuesday, April 12, 2011

அதுவும் அவன் பேரு தான்!

காலையில எந்திரிச்சதுல இருந்து ஒரே குதூகலமா இருக்கு மனசு. இராமநவமின்னாலே ஒவ்வொரு வருஷமும் மனசு சந்தோசத்துல குதிக்குது. நாள்பூரா பொழுது போறதே தெரியாம சொந்தக்காரங்களோட பொழுது போக்கலாம்.

எங்க பாட்டிவீட்டுக்காரங்க இராமநவமி அன்னிக்கு ஒவ்வொரு வருஷமும் (மதுரை சௌராஷ்ட்ர) ஹைஸ்கூல் எதிர்ல இருக்குற இராமர் கோவில்ல சாமி புறப்பாடு செய்வாங்க. அனுமார் வால் கோட்டை கட்டிக்கிட்டு மேலே உக்காந்திருக்கிற மாதிரி கோபுரம் இருக்குமே அந்த கோவில் தான். ஹைஸ்கூல்ல படிச்சவுங்க எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும். ஹைஸ்கூல்ன்னா கல் பள்ளிக்கூடம்; பசங்க பள்ளிக்கூடம். அனுப்பானடியில இருக்குற (சௌராஷ்ட்ர) பெண்கள் பள்ளிக்கூடம் இல்லை.



கோவிலுக்கு எல்லாரும் வந்துட்டாங்க. கல்யாணம் ஆனபின்னாடி புதுப் பொண்டாட்டியோட நான் வர்ற முதல் இராமநவமி திருவிழா இது. அதனால எங்க ரெண்டு பேருக்கும் சொந்தக்காரங்ககிட்ட கவனிப்பு கொஞ்சம் அதிகமா இருக்கு.

சாமி அலங்காரம் எல்லாம் முடிஞ்சு புறப்பாட்டுக்கு தயாரா இருக்கு. அய்யர், கோவில்காரங்க எல்லாரும் இருக்காங்க. ஆனா யாரையோ எதிர்பார்த்துக்கிட்டு இருக்குற மாதிரி இருக்கு. ஒரு சித்தப்பா இன்னும் வரலை. வீட்டு மாப்பிள்ளை வராம எப்படி சாமி புறப்பாடு செய்றது. அதனால எல்லாரும் காத்துக்கிட்டு இருக்காங்க. கோவில்ல போன் இல்லை. பக்கத்துவீட்டுக்காரங்க தெரிஞ்சவங்க தான். மாமாக்கள் மாத்தி மாத்தி போயி சித்தப்பாவுக்கு போன் பண்ணிட்டு வர்றாங்க. இந்த சித்தப்பா இப்படித் தான். கொஞ்சம் பிகு பண்ணிக்குவார். நான் வராம நீங்க சாமி புறப்பாடு பண்ணிடுவீங்களான்னு ஒரு நினைப்பு. பத்து மணி ஆனபின்னாடி மெதுவா அந்த சித்தப்பா வந்துட்டார். "என்ன மாப்பிள்ளை? உங்களுக்காக எம்புட்டு நேரம் காத்திருக்கிறது? எங்களுக்கெல்லாம் வேற வேலை இல்லையா?"ன்னு பெரியப்பாக்கள் எல்லாம் சிரிச்சுக்கிட்டே சத்தம் போடறாங்க. "போகட்டும் பாவா. பத்து மணி தானே ஆகுது'ன்னு சித்தப்பா சிரிச்சுக்கிட்டே பதில் சொல்றார்.

"ஆகட்டும் அய்யரே. ஆகட்டும் ஆகட்டும். எல்லாரும் வந்தாச்சு. சாமி புறப்பாடு செய்யலாம்"ன்னு தாத்தா அவசரப்படறார். அய்யரும் அவங்க அவசரத்துக்கு ஏத்தமாதிரி எல்லார்கிட்டயும் பேரு நட்சத்திரம் கேட்டு வேகவேகமா அர்ச்சனை பண்றார்.



சாமி புறப்பாடு ஆனபின்னாடி சாமி கூட கொஞ்ச தூரம் போயிட்டு, பஸ், ஸ்கூட்டர், ஆட்டோன்னு ஏறி எல்லாரும் பாட்டிவீட்டுக்கு வந்துட்டாங்க. வீட்டு அய்யர் (வாத்தியார்) வந்து தயாரா இருக்கார். மாமாக்கள், மாமிகள் எல்லாரும் கச்சம் வச்சுக் கட்டிக்கிட்டு ஹோமத்துக்குத் தயார் ஆகிட்டாங்க. தசரத மகாராஜன் குழந்தைங்க வேணும்ன்னு புத்ரகாமேஷ்டி யாகம் செஞ்சாரில்லையா? அந்த மாதிரி ஒரு ஹோமம் ஒவ்வொரு வருஷமும் எங்க பாட்டிவீட்டுல செய்வாங்க. முன்னாடி எல்லாம் தாத்தாக்கள் பாட்டிகள் ஹோமத்துல உட்காருவாங்க. இப்ப ரெண்டு மூணு வருஷமா மாமாக்கள் உட்கார்றாங்க.

புதுமாப்பிள்ளைன்னு என்னை பெரியப்பா சித்தப்பாக்களோட முன்னாடி உக்கார வச்சிட்டாங்க. சாமி விஷயம்ன்னா எனக்கு சின்ன வயசுல இருந்து பிடிக்குங்கறதால நானும் முன்னாடி உக்காந்துக்கிட்டு அய்யர் சொல்ற மந்திரமெல்லாம் கவனிச்சு கேட்டுக்கிட்டு இருக்கேன்.

மணி பன்னெண்டு ஆச்சு. எல்லாருக்கும் பசிக்கத் தொடங்கியாச்சு. "ஆகட்டும் அய்யரே. இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்?"ன்னு பாவாக்கள் கேட்கத் தொடங்கிட்டாங்க. "இதோ ஆச்சு"ன்னு அய்யர் வேகமா மந்திரம் சொல்றாரு.

திடீர்ன்னு "பகவான் பொறந்தாச்சு. இராமர் பொறந்தாச்சு"ன்னு அய்யர் சொன்னவுடனே, ஊர் கதையெல்லாம் பேசிக்கிட்டு இருந்த சொந்தக்காரங்க எல்லாரும் ஹோமத்தைக் கவனிக்கத் தொடங்கிட்டாங்க. "இராமரைத் தூளியில போட்டு ஆட்டனும். யாரு சாமிக்கு மாமாவா இருக்க போறீங்க?"ன்னு அய்யர் கேட்டவுடனே, பெரிய மாமா " தம்பிக்கு இப்பத் தான் கல்யாணம் ஆயிருக்கு. அவனே பெருமாளை தூளியில போட்டு ஆட்டட்டும்"ன்னு சொல்லி என்னைக் கூப்புட்டாங்க. நானும் சந்தோஷமா போயி மாமா குடுத்த வேட்டியைத் தோள்ல தூளியா போட்டுக்கிட்டு வீட்டுல கும்புடற பெருமாள் விக்ரஹத்தை தூளியில வைச்சு ஆட்டத் தொடங்கினேன். "யாராவது பொண்ணுங்க பாட்டு பாடுங்க"ன்னு அய்யர் சொன்னவுடனே எல்லா பொண்ணுகளும் ஒவ்வொருத்தர் முகத்தைப் பாக்குறாங்களே ஒழிய யாரும் பாடலை. கொஞ்ச நேரம் தயங்கிட்டு நான் பாட்டுப் பாடத் தொடங்கினேன்.

மன்னுபுகழ் கோசலை தன் மணிவயிறு வாய்த்தவனே!
தென்னிலங்கை கோன் முடிகள் சிந்துவித்தாய்! செம்பொன் சேர்
கன்னி நன் மா மதில் புடை சூழ் கணபுரத்தென் கருமணியே!
என்னுடைய இன்னமுதே! இராகவனே! தாலேலோ!

தாமரை மேல் அயன் அவனைப் படைத்தவனே! தசரதன் தன்
மாமதலாய்! மைதிலி தன் மணவாளா! வண்டினங்கள்
காமரங்கள் இசை பாடும் கணபுரத்தென் கருமணியே!
ஏமருவும் சிலை வலவா! இராகவனே! தாலேலோ!

தேவரையும் அசுரரையும் திசைகளையும் படைத்தவனே!
யாவரும் வந்தடி வணங்க அரங்க நகர் துயின்றவனே!
காவிரி நல் நதி பாயும் கணபுரத்தென் கருமணியே!
ஏவரி செஞ்சிலை வலவா! இராகவனே! தாலேலோ!


எல்லாரும் கவனிச்சுக் கேக்குறாங்கன்னு தெரியுது. நானும் சாவகாசமா பாட்டு பாடினேன். போதுமா இன்னும் ஒரு சரணம் பாடலாமான்னு நினைச்சுக்கிட்டே இருக்கிறப்ப அய்யர் "போதும்பா"ன்னு சொல்லிட்டார். "நல்லா இருந்துச்சுப்பா. யாரு எழுதுன பாட்டு?"ன்னு அய்யர் கேட்டார். எனக்கு ஒரே அதிர்ச்சி. இது குலசேகராழ்வார் பாசுரம்ன்னு அய்யருக்குக் கூட தெரியலையேன்னு. "எங்க பையனே பாட்டெல்லாம் நல்லா எழுதுவான்'னு இதுல பாட்டி வேற சொல்றாங்க. "இல்லை பாட்டி. இது நான் எழுதுனது இல்லை. குலசேகராழ்வார் பாசுரம்"ன்னு நான் சொல்ல வேண்டியிருந்தது. என்ன பண்றது? காலம் இப்படி ஆயிருச்சு.

"இப்ப பேரு வைக்கணும். என்ன பேரு வைக்கலாம்"ன்னு அய்யர் கேக்குறார். தாத்தா "ராமசந்த்ரமூர்த்தி'ன்னு சொன்னார். "அந்த பேரு ஒவ்வொரு வருஷமும் வைக்கிறது தானே தாத்தா. காகுஸ்தன்னு வைக்கலாம்"ன்னு சொல்லிட்டு நான் பெருமையா என் புதுப்பொண்டாட்டி பக்கம் பார்த்தேன். யாருக்கும் தெரியாம அவ மெதுவா தலையில அடிச்சுக்கிறா.

"இல்லைப்பா. எப்பவுமே ராமசந்த்ரமூர்த்தின்னு தான் பேரு வக்கிறது வழக்கம்"ன்னு பெரிய பெரியப்பா சொல்றார். "தெரியும் பெரியப்பா. என் மனசுல இந்த பேரு முன்னாடி வந்து நிக்குது. அதனால தான் சொல்றேன்"ன்னு சொன்னேன். 'புது மாப்பிள்ளை சொல்றான். ஆழ்வார் பாசுரம் எல்லாம் பாடறான். இவன் சொல்ற பேரு வைக்கிறதா பெரியவங்க சொல்ற பேரு வைக்கிறதா'ன்னு எல்லாரும் யோசனை பண்ணிக்கிட்டு இருக்காங்க. அய்யர் "அதுவும் அவன் பேரு தான். அந்த பேரே வைக்கலாம்"ன்னு சொல்லிட்டு "தம்பீ. நீயே பேரு வைச்சுருப்பா"ன்னு சொன்னார். நான் பெருமாள் காதுல மூணு தடவை "காகுஸ்த காகுஸ்த காகுஸ்த"ன்னு சொன்னேன்.



எல்லாரும் சாப்புட போனபின்னாடி அய்யர் தனியா என்கிட்ட "காகுஸ்தன்னா என்ன அர்த்தம்பா"ன்னு கேட்டதும் இந்த பேரு என் மனசுல எதுக்கு வந்ததுங்கறதை பின்னாடி நான் கண்டுபிடிச்சதையும் நான் உங்ககிட்ட சொல்லப் போறதில்லை!

**

முந்தைய இடுகையான 'தெல்லெ மெல்லி தெகொ நாவுஸ்!' என்ற சௌராஷ்ட்ர கதையின் மொழிபெயர்ப்பு.

Monday, April 11, 2011

தெல்லெ மெல்லி தெகொ நாவுஸ்!

ஸொலொபா4ர் ஹுடெ3வேள் ர்ஹி ஒன்டே3 குதூ3ஹலம்க3னூஸ் ஸே மொன்னு. ராமநவமி மெனெதி3ஸ் ஒக்க ஒக்கொ ஒர்ஸு மொன்னு ஸொந்தோ3ஸும் து4ங்க3ரஸ். விளுக்கு தி3ன்னு ஜாரியோஸ் களனாத்தக் சொந்த3ம் மென்க்யான் ஸெங்கா3டி தி3ன்னு க3வ்ன்டுவாய்.

அவ்ர அயிங்கே4ர்தெனு ராமநவமி தெந்தூ3ஸ் ஒக்க ஒக்கொ ஒர்ஸு ஹைஸ்கூல் வெது3ர் சே2த்த ராமர் த4வ்ராம் தே3வ் நிகு3ளடன். ஹன்மந்து3 புஸிடி கோட்டை ப3ந்தி3லி ஹொல்லொ பிஸிர்ய சோ3ன் கொபு3ர் ர்ஹாய் ந்ஹா தெல்ல த4வ்ரோஸ். ஹைஸ்கூலும் சொவ்த்3யாதெங்க பூரா கலய்யிர்ஹாய். ஹைஸ்கூல் மெனெதி3 தெ3ய்டா3 பொல்ட3ம். பெட்கானு பொல்ட3ம். அன்பனடிம் ஸேத்த பெட்கினு பொல்ட3ம் ந்ஹா.



த4வ்ராக் அஸ்கிதெனு அவ்டி3ராஸ். ஹொராட் ஹொயத்தெர் நொவ்ரி ஸெங்கா3டி மீ அவர்ய முது3ல்லா ராமநவமி எல்லெ. தெகஹால்தி3 அம்க தீதெங்கொ3 சொந்த3ம் மென்க்3யான் ஜொவள் க3ம்சினி ருவ்வொ வேன் ஸே.

தே3வ் அலங்கா3ர் ஹொயி நிகு3ளத்தக் தயார்கெ3ன் ஸே. அய்யான், த4வ்ரா கெரின் அஸ்கிதெனு ஸே. ஹொயெதி கொங்கக்கீ எது3ர்ஸிலேத் ஸேத்தெ ஸோன் லக3ரஸ். ஒன்டெ3 மௌஸபோ4 அங்குன் அவ்ரானி. கொ3ம்மா ஜொமயி அவ்னாத்தக் கோனக் தே3வ் நிகு3ளடத்தே. தெகோ3 ஹால்தி3 அஸ்கிதெனு ரஹ்கிலேத் ஸே. த4வ்ராம் ஃபோன் ந்ஹீ. லெகுத்தா கொ3ம்மொ கலயத்தெனூஸ். மமான் மச்சி மச்சி ஜீ மௌஸபா4க் ஃபோன் கெத்தி அவராஸ். எல்ல மௌஸபோ4 கொப்4பி4மூஸ் இஸோஸ். ருவ்வொ பி3கு3 கெர்ல்லன். மீ அவ்நாத்தக் துமி தே3வ் நிகு3ளட்டன் யா மெனி ஒன்ட3 ஹட்வன். தெ3ஸ்ஸு கெ3ண்டொ ஹொயத்தெர் ஹல்லு தெல்ல மௌஸபோ4 அவ்டியா. "காய் மௌளெ? துரவுச்சி இக்க கெ3டி ரஹ்க்க2த்தெ? அம்கொ3 பூரா துஸுர காம் ந்ஹியா?" மெனி மொட3 மௌஸபா4ன் பூரா ஹஸிலேத் கெ3டி பொ3வராஸ். "வெகோ3 ப4வா. தெ3ஸ்ஸு கெ4ண்டோ4 ந்ஹா ஹோரெஸ்" மெனி அவெ மௌஸபோ4 ஹஸிலேத் ஜெவாவ் ஸங்க3ராஸ். 'அமி பூரா அவ்ர பெ4ய்லல்னுக் த4க்கிலி சுரும் அவ்டியா. ஸொஸுரானுக் ரஹ்க்க2டத்தக் யெனோதீ3 ஸேனா' மெனி துஸுர மௌஸான் மொன்னும் மெல்லர்ய சொக்கட் களாரஸ்.

"வெகோ3 அய்யானு. வெகோ3 வெகோ3. அஸ்கிதெ3னு அவ்டி3ரியோ. தே3வ் நிகி3ளடெங்கோ' மெனி அய்ங்கெர்போ4 அவ்ஸர் பொட3ராஸ். அய்யான் மெள்ளி தெங்க3 அவ்சருக் தயதா3னுக் அஸ்கிதெங்கொ3 ஜொவள் நாவ் நெட்சத்துரு புஸி பி3ஸ்ஸொ அர்ச்சனொ கெரராஸ்.



தே3வ் நிகி3ளத்தெர் தே3வ் ஸெங்காடி ருவ்வ து3தூ3ர் ஜேடிகி3ன் பஸ்ஸுமு ஸ்கூட்டருமூ ஆட்டோம் மெனி அஸ்கிதெனு அய்ங்கே4ர் அவ்டியா. கொ3ம்மா அய்யொ அவி தயார்கொ3ன் ஸே. மமான் மமின் ஸெங்கா2டி கஸ்ட தயி பி2ல்லி ஹோமுக் தயார் கெல்யாஸ். த3சரத மஹரஜோ பிள்ளல்னு பஜெ மெனி புத்ரகாமேஷ்டி யாகு3 கெரயோ ந்ஹ்யா? த்யெ மாதிரி ஒன்டே ஹோம் ஒக்கொக்கொ ஒர்ஸு அவ்ர அயிங்கே4ர் கெரன். முந்த3டி3ம் அயிங்கெ4ர் பா4ன் அயிங்கெ3ர் அம்பா3ன் ஹோமுக் பி3ஸன். அத்தொ ஒண்டெ3 தி3ஸின் ஒர்ஸு தோன் மமான் பி3ஸர்யோ.

நொவொ நொவ்ரொ மெனி மொகொ4 மௌஸான் ஸெங்கா4டி சொம்மலொ பிஸட்யா. தே3வ் தெ4ரும் மெனத் மொகொ3 ந:ன்ன ஒர்ஸும் ர்ஹி ஒப்பாய் ஹால்தி மீ மெல்லி சொம்மலோ பிஸி அய்யான் சங்க3ர்ய மொந்துர்னு அஸ்கி க3ம்சி அய்கிலேத் ஸே.

கெ4ண்டோ பா3ரெ ஹொய்யொ. அஸ்கிதெங்கோ பூ3க் கெர மொல்லிட்யொ. "வெகொ3 அய்யானு அங்கு3ன் இக்கொ கெ4டி ஹோய்?" மெனி ப3வான் புஸ மொல்ட்யா. "யெலா ஹொய்யோ" மென்தி3 அய்யான் பி3ஸ்ஸோ மொந்துர் சங்க3ராஸ்.

திடீ3ர் கெரி "பக3வான் ஹுஜிலிட்ர்யோ. ராமர் ஹிஜிலிட்ர்யோ" மெனி அய்யான் ஸங்கு3னாத்திக்காம் கா3மு கெ2னின் அஸ்கி வத்தெ கெல்லேத் ஹொதெ3 சொந்த3ம் மென்க்3யான் அஸ்கி ஹோமுக் கம்ச்ச மொல்டியா. "ராமருக் பல்லாம் க3லி ஹிந்த3ல்னோ ஹோர்ய. கோன் தே3வுக் மமோ கோன் ரா:ன் ஜார்யோ" மெனி அய்யான் புஸுனாத்திக்காம், மொ:ட்டொ மமோ "ப3பு3க் அத்தோஸ் ஹொராட் ஹொய்ர்யோ. தெனோஸ் பெருமாளுக் பல்லாம் க3லி ஹிந்த3லந்தொக்" மெனி மொகொ3 பொ3வ்த்3யா. மீ மெல்லி ஸொந்தோ3ஷ்க3ன் ஜீ மமோ தி3யெ வேட் கா2ந்துர் பல்லக3ன் தய்லி கொ4ம்மொ பாய்ம்பொடர்யோ பெருமாள் விக்ரஹம் பல்லாம் தொ2வி ஹிந்த3லத்தக் நிகி3லெஸ். "கோன்ந்தி3 அம்மான் கீ3த் க3வோ" மெனி அய்யான் மென்னாதிக்காம் அம்மான் அஸ்கி ஓக்கு ஓக்கு தோன் ஸாராஸ் ஜதோ3 கொன்னி கீ3த் க3வரானி. ரொவ்வ கெ3டி பஸ்தொக்கிதி3 மீ கீ3த் க3வத்தெக் நிகி3லெஸ்.

மன்னுபுகழ் கோசலை தன் மணிவயிறு வாய்த்தவனே!
தென்னிலங்கை கோன் முடிகள் சிந்துவித்தாய்! செம்பொன் சேர்
கன்னி நன் மா மதில் புடை சூழ் கணபுரத்தென் கருமணியே!
என்னுடைய இன்னமுதே! இராகவனே! தாலேலோ!

தாமரை மேல் அயன் அவனைப் படைத்தவனே! தசரதன் தன்
மாமதலாய்! மைதிலி தன் மணவாளா! வண்டினங்கள்
காமரங்கள் இசை பாடும் கணபுரத்தென் கருமணியே!
ஏமருவும் சிலை வலவா! இராகவனே! தாலேலோ!

தேவரையும் அசுரரையும் திசைகளையும் படைத்தவனே!
யாவரும் வந்தடி வணங்க அரங்க நகர் துயின்றவனே!
காவிரி நல் நதி பாயும் கணபுரத்தென் கருமணியே!
ஏவரி செஞ்சிலை வலவா! இராகவனே! தாலேலோ!


அஸ்கி தெனு க3ம்சி அய்கராஸ் மெனி களாரஸ். மீ மெல்லி ஸவ்கா3ஸ்கென் கீ3த் க3வெஸ். பி2ஜ்ஜாய்கி அங்குன் ஒன்டெ சரணம் க3வெங்கோ3 மெனி மெல்லெத் ர:தோ அய்யானு "பி2ஜ்ஜாய் பா3" மென்ந்த்யா. "சொக்கட் ஹொதெஸ் பா3. கோன் லிக்கெ கீ3த்?" மெனி அய்யான் புஸ்யாஸ். மொகொ3 ஒன்டே3 அதி3ர்ச்சி. எல்லே குலசேகராழ்வார் பாஸுரம் மெனி அய்யானுக் மெல்லி களாரனினா மெனி. "அவ்ர ப3பூ3ஸ் கீ3துன் அஸ்கி சொக்கட் லிக்கெய்" மெனி எமாம் அய்ங்கெ4ரம்போ4 வேற ஸங்க3ராஸ். “ந்ஹீ அங்கெ4ர் அம்பா4. எல்லெ மீ லிக்கெயொ ந்ஹா. குலசேகராழ்வார் பாசுரம்" மெனி மீ சங்குனொ ஹொயெஸ். காய் கெரத்தெ. கலம் இஸொ ஹொய்யோ.

"அத்தொ நாவ் க3ல்னோ. காய் நாவ் தொவெங்கோ3" மெனி அய்யான் புஸராஸ். அய்ங்கெர் போ4 'ராமசந்த்ர மூர்த்தி' மெனாஸ். "த்யெ நாவ் ஒக்கொக்கொ ஒர்ஸு தொவர்யோ ந்ஹா அங்கெர்பா4. காகு3ஸ்தன் மெனி தொவெங்கெ3ன்" மெனி சங்கி3தி மீ பெருமைக3ன் மொர நொவ்ரி பொக்கட் ஸியெஸ். கொங்கிக் களனாத்தக் தெனொ ஹல்லு தொ3ஸ்கர் ஹல்லரிஸ்.

“ந்ஹீ பா4. கொப்3பி3மூ ராமசந்த்ர மூர்த்தி மெனிஸ் நாவ் தொவத்தெ வட்க" மெனி மொ:ட்டொ மௌஸொ ஸங்க்யாஸ். "களாய் மௌஸபா4. மொர மொன்னும் எல்லெ நாவ் சொம்மலொ அவி ஹிப்4பி4ரஸ். தெகொ3 ஹால்தீ3ஸ் ஸங்க3ர்யோ" மெனெஸ். 'நொவொ நொவ்ரோ ஸங்க3ரஸ். ஆழ்வார் பாசுரம் பூரா க3வரஸ். யென ஸங்கெ3 நாவ் தொவத்தெ கீ3 மொட்டான் ஸங்கெ நாவ் தொவத்தே' மெனி அஸ்கிதெனு யோசன கெல்லேத் ஸே. அய்யான் “தெல்லெ மெல்லி தெகொ நாவுஸ்" மென்தி3 “தெல்ல நாவுஸ் தொவங்கோ3" மெனி மென்தி3 "ப3பூ3. தூஸ் நாவ் தோவ் பா5" மெனாஸ். மீ பெருமாள் கானும் தீன் வாள் “காகு3ஸ்த காகு3ஸ்த காகு3ஸ்த” மெனி மெனெஸ்.




அஸ்கிதெனு கா2த்தக் ஜியெத்தெர் அய்யான் தனிகொ3ன் மொர ஜொவள் “காகு3ஸ்தன் மெனத் காய் அர்த்து பா4" மெனி புஸெய கி3ன் எல்ல நாவ் மொர மொன்னும் க3க3 அவயே மெனி பல்ஸாதுக் மீ தெ3க்கி தெ3ரய தி3ய்யோ மீ துரொ ஜொவள் ஸங்கு3னி!

Saturday, April 09, 2011

Murugalaya pattu Salem



முருகாலயாவின் இந்த விளம்பரத்தில் மூன்று மொழிகள் வருகின்றன. எந்த மொழிகள் என்று சொல்லுங்கள் பார்ப்போம்! :-)

Wednesday, March 23, 2011

சூரியன் ஹாட்டா இருக்குறதால ஸ்னோ ஃப்லை பண்ணி போகும்

ஸ்னோ பூரா கோஸே சேந்தன்? அஸ்கி ஸ்னோ தெ3க்கானி.

தெங்கொ3 கொ4ம்மொ ஜேட்ரியொ!

தெங்கோ3 கொ4ம்மொ கோட் ஸேத்தே?

ஸுரிது3ம் ஸேத்தே!

ஸுரிது3ம்-ஆ? ஸ்னோ திக்கெ து3தூ4ர் ச2லி ச2லி ஜேடையா?

ச2லி ஜானா! ஸ்னோக் பாய்ன் ந்:ஹி! ஃப்லை கெரி ஜாய்!

ஃப்லை கெரி ஜாய்யா?

ஹாய். சன் ஹாட்கன் ஜேத்தெ ஹால்தி ஸ்னோ ஃப்லை கெரி ஜாய்!


சௌராஷ்ட்ரத்தில் எழுதச் சொல்லி சௌராஷ்ட்ர அன்பர்கள் பல வருடங்களாகக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அண்மையில் ஒரு அன்பர் கடுமையாகக் கோவித்துக் கொண்டதில் இருந்து எழுத வேண்டும் எழுத வேண்டும் என்ற எண்ணம். ஆனால் எடுத்தவுடனேயே எழுதிவிட முடிகிறதா என்ன? அதனால் குழவி அடிகளுடன் (baby steps) தொடங்குகிறேன். 

மேலே இருப்பது இதோ தமிழில்...

ஸ்னோ எல்லாம் எங்கே சேந்தன்? எல்லா ஸ்னோவும் காணோம்.

அவங்க வீட்டுக்குப் போயிருச்சு.

அவங்க வீடு எங்கே இருக்கு?

சூரியனில் இருக்கு.

சூரியன்லயா? ஸ்னோ அவ்வளவு தூரம் நடந்து நடந்து போயிருச்சா?

நடந்து போகாது. ஸ்னோவுக்குக் கால் இல்லை. ஃப்லை பண்ணி போகும்.

ஃப்லை பண்ணி போகுமா?

ஆமாம். சூரியன் ஹாட்டா இருக்குறதால ஸ்னோ ஃப்லை பண்ணி போகும்.

Tuesday, March 22, 2011

அப்பாவும் சிக்கன் துண்டுகளும்....

அமெரிக்க வரலாற்றைப் பற்றிய கேள்வி பதில்களுடன் ஒரு குறுவட்டு இருக்கிறது. அதனை நேற்று மகிழுந்தில் கேட்டுக் கொண்டிருந்தேன். மகனும் மகளும் அப்போது வண்டியில் இருந்தார்கள். ஒவ்வொரு கேள்விக்கும் பின் ஒரு சிறு இடைவெளி விட்டு பின்னர் பதில் வந்து கொண்டிருந்தது. அப்போது வந்த இரு கேள்விகளும் அதற்கு சேந்தன் சொன்ன பதில்களும்:

Who is the Father of our country?

Baabaa

இரு குழந்தைகளும் என்னை பாபா என்று அழைப்பார்கள். ஃபாதர் என்ற சொல்லைக் கேட்டவுடன் உடனே என்னைத் தான் கேட்கிறார்கள் என்று நினைத்து இந்த பதிலைச் சொல்லிவிட்டான். நானும் மகளும் இந்தப் பதிலைக் கேட்டு வாய் விட்டு சிரித்துக் கொண்டிருக்கும் போது அடுத்த கேள்வி வந்தது.

What territory did the United States buy from France in 1803?

Chicken Nuggets

Purchase என்ற சொல் மட்டும் புரிந்தது போல. உடனே அவனது விருப்ப உணவைச் சொல்லிவிட்டான். விழுந்து விழுந்து சிரித்தோம்.

Friday, March 18, 2011

பங்குனி உத்திரத் திருநாள்!

இன்று பங்குனி உத்திரத் திருநாள். ஆன்மிக ஆர்வலர்களுக்கு இந்த நாளின் பெருமை மிக நன்றாகத் தெரியும். பலவிதங்களிலும் பெருமை வாய்ந்த திருநாள் இது.

கங்கையில் புனிதமான காவிரி நடுவில் உள்ள பூலோக வைகுண்டமாம் திருவரங்க நகரத்தில் பாம்பணையில் பள்ளி கொண்ட பெரிய பெருமாள் திருவரங்க நாதன் திருவரங்கநாயகித் தாயாருடன் சேர்த்தித் திருக்கோலத்தில் அமர்ந்து காட்சி தருவது இந்த உன்னதமான திருநாளில் தான். வருடத்தில் வேறு எந்த நாளிலும் இந்த திவ்விய தரிசனம் கிடைக்காது. அண்ணலும் அவளும் சேர்ந்து அமர்ந்திருக்கும் இந்தத் திருக்கோலத்தைத் தரிசிப்பவர் நினைப்பதெல்லாம் நடக்கும் என்பது காலம் காலமாய் வரும் நம்பிக்கை.




வைஷ்ணவ சம்ப்ரதாயத்தை நிலைநாட்டிய இளையபெருமாளாகிய இராமானுஜமுனி ஒரு முறை பங்குனி உத்திர மண்டபத்தில் இப்படி பெரிய பிராட்டியும் பெரிய பெருமாளும் சேர்ந்து காட்சி தரும் போது தான் கத்ய த்ரயம் (சரணாகதி கத்யம், வைகுண்ட கத்யம், ஸ்ரீரங்க கத்யம்) என்னும் மூன்று வடமொழி வசனகவிதைகளைப் பாடிச் சமர்ப்பித்தார். சரணாகதி கத்யத்தைச் சமர்ப்பித்த போது அரங்கன் அவருடைய சரணாகதியை ஏற்றுக் கொண்டு திருவாய் மலர்ந்தருளினான் என்றும் தாயார் அவரை உபய வீபூதிகளுக்கும் (கீழுலகம், மேலுலகம்) உடையவராய் நியமித்தார் என்றும் ஐதீகம். அன்றிலிருந்து இராமானுஜர் 'உடையவர்' என்ற திருநாமத்தாலும் அழைக்கப் படுகிறார்.

எம்பிரானை எந்தை தந்தை தந்தைக்கும்
தம்பிரானைத் தண் தாமரைக் கண்ணனை
கொம்பராவு நுண்ணேரிடை மார்வனை
எம்பிரானைத் தொழாய் மட நெஞ்சமே!

என் தலைவனை, என் தந்தை, அவர் தந்தை, அவர் தந்தை இப்படி என் முன்னோர் அனைவருக்கும் தலைவனை, குளிர்ந்த தாமரைக் கண்களை உடையவனை, பூங்கொம்பினை ஒத்த நுண் இடையாளான திருமகளைத் தன் மார்பில் உடையவனை, என் இறைவனைத் தொழாய் மட நெஞ்சமே!

நெஞ்சமே நல்லை நல்லை உன்னைப் பெற்றால்
என் செய்யோம் இனி என்ன குறைவினம்
மைந்தனை மலராள் மணவாளனை
துஞ்சும் போதும் விடாது தொடர் கண்டாய்!

என் மனமே! உன்னை நான் பெற்றதால் நன்றாகப் போனது. என்றும் இளையவனை, மலராளாகிய பெரியபிராட்டியின் மணவாளனை நான் தூங்கும் போதும் (என் உயிர் பிரியும் போதும்) நீ விடாது தொடர்ந்து போகிறாய். நன்று. நன்று. உன்னைப் பெற்று நான் என்ன தான் செய்ய முடியாது? இனி எனக்கு என்ன குறை?

நீயும் நானும் இந்நேர் நிற்கில் மேல் மற்றோர்
நோயும் சார்கொடான் நெஞ்சமே சொன்னேன்
தாயும் தந்தையுமாய் இவ்வுலகினில்
வாயும் ஈசன் மணிவண்ணன் எந்தையே

என் நெஞ்சமே! நீயும் நானும் இப்படி கூட்டணி அமைத்து அவனை வணங்கி வந்தால், இவ்வுலகத்தில் நமக்குத் தாயும் தந்தையுமாய் இருக்கும் ஈசன் மணிவண்ணன் என் தந்தை வேறெந்த பிறவி நோயும் நமக்கு வரும்படி விடமாட்டான். சொன்னேன் கேட்டுக் கொள்.

எந்தையே என்றும் எம்பெருமான் என்றும்
சிந்தையுள் வைப்பன் சொல்லுவன் பாவியேன்
எந்தை எம்பெருமான் என்று வானவர்
சிந்தையுள் வைத்துச் சொல்லும் செல்வனையே

வானவர்கள் எல்லாம் 'என் தந்தையே! என் தலைவனே' என்று தங்கள் சிந்தையில் வைத்து வணங்கும் செல்வனை (சம்பத் குமாரனை) இந்த உலகினில் பிறந்து எண்ணற்ற பாவங்களைச் செய்த நானும் 'எந்தையே' என்றும் 'எம்பெருமான்' என்றும் சொல்லி சிந்தையில் வைப்பேன். என்ன பேறு பெற்றேன்?

செல்வ நாரணன் என்ற சொல் கேட்டலும்
மல்கும் கண்பனி நாடுவன் மாயமே
அல்லும் நன்பகலும் இடைவீடின்றி
நல்கி என்னை விடான் நம்பி நம்பியே.

வழியில் போகும் ஒருவர் செல்வநாராயணன் என்று சொல்லவும் அதனைக் கேட்டு என் கண்களில் நீர் நிரம்பி வழியும். இது என்ன மாயம்? எவ்வளவு தாழ்ந்த நிலையில் இருந்த நான் எப்படி ஆகிவிட்டேன்? இரவும் பகலும் இடைவீடு இன்றி என்னை நம்பித் தன்னை எனக்குத் தந்து என்னை விடான் என் அழகிய மணவாள நம்பி.

(இவை மாறன் சடகோபனாகிய நம்மாழ்வாரின் திருவாய்மொழிப் பாசுரங்கள்)
***

கோதை பிறந்த ஊராம் தென்புதுவை நகரில் (ஸ்ரீவில்லிபுத்தூரில்) பங்குனிப் பெருவிழாவின் உச்சகட்டமாக அமைவது பங்குனி உத்திரத் திருநாளில் சுவாமி ரெங்க மன்னார் ஆண்டாளின் திருக்கரங்களைப் பற்றும் திருக்கல்யாண மகோற்சவம். கோதை நாச்சியாரும் ரெங்க மன்னாரும் மகிழ்ந்திருக்கும் காட்சி இங்கே.


கோதை பிறந்த ஊர் கோவிந்த வாழும் ஊர்
சோதி மணி மாடம் தோன்றும் ஊர் - நீதிசால்
நல்ல பக்தர் வாழும் ஊர் நான்மறைகள் ஓதும் ஊர்
வில்லிபுத்தூர் வேதக்கோனூர்

***

மதுரை வாழ் சௌராஷ்ட்ரப் பெருமக்களால் தங்கள் குலதெய்வமாகப் போற்றி வணங்கப் படும் தெற்கு கிருஷ்ணன் கோவில் ஸ்ரீ பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் பத்து நாட்கள் பங்குனி பிரம்மோற்சவம் கண்டு தீர்த்தவாரிக்காகக் குதிரை வாகனத்தில் ஏறி வைகை ஆற்றில் இறங்கும் புனித நன்னாளும் பங்குனி உத்திரத் திருநாளே.


(பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் ஆற்றில் இறங்கும் படம் இல்லாததால் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் படத்தை இங்கு இடுகிறேன்)

***

துர்வாச முனிவர் வந்து கொண்டிருக்கிறார். கோபத்திற்குப் பெயர் போனவர். ஆனால் இன்றோ மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார் போல் இருக்கிறது. அவரது திருக்கரத்தில் ஒளிவீசும் ஒரு அழகிய மலர் மாலை இருக்கிறது. அதனை மிகவும் பெருமையுடனும் பக்தியுடனும் ஏந்திக் கொண்டு வருகிறார். அப்போது அந்த வழியாகத் தேவர்களின் தலைவனான இந்திரன் தன் ஐராவதம் என்னும் யானையில் ஏறிக் கொண்டு பவனி வருகிறான். தேவர்களின் தலைவனான தன்னைப் பற்றி எல்லோரும் பெருமையாகப் பேசுவதைக் கேட்டுக் கேட்டு மிக்கப் பெருமிதம் அவன் முகத்தில் தெரிகிறது.
துர்வாச முனிவர் இந்திரனின் முன்னால் சென்று 'தேவேந்திரா. உன் புகழ் எல்லா உலகங்களிலும் நிறைந்து இருக்கிறது. இப்போது அன்னை மகாலக்ஷ்மியைத் தரிசித்துவிட்டு அவர் அன்போடு அளித்த இந்த மலர் மாலையுடன் வந்து கொண்டிருக்கிறேன். அன்னை கொடுத்த இந்த பிரசாதத்தை ஏற்றுக் கொள்ள தேவர்களின் தலைவனான உனக்குத் தான் உரிமை இருக்கிறது. இதோ வாங்கிக் கொள்' என்று சொன்னார்.

விண்ணோர் தலைவனும் அந்த மலர் மாலையை அலட்சியமாக அங்குசத்தால் வாங்கி ஐராவதத்தின் தலையில் வைத்தான். தேவர்களின் தலைவனான தான் கேவலம் இன்னொரு தெய்வம் கொடுத்த மலர்மாலையை பிரசாதம் என்று வணங்கி வாங்கி கொள்வதா என்ற எண்ணம். ஆனாலும் கொடுப்பவர் துர்வாசர் என்பதால் பேசாமல் வாங்கி கொண்டான். யானையோ தன் தலையில் வைக்கப்பட்ட மலர்மாலையை உடனே எடுத்துத் தன் கால்களின் கீழே போட்டு துவைத்துவிட்டது. அன்னையின் பிரசாதத்திற்கு ஏற்பட்ட அவமரியாதையைக் கண்டதும் வழக்கம் போல் துர்வாசருக்குக் கோபம் வந்து விட்டது.

'தேவேந்திரா. தேவர்களின் தலைவன், இத்தனைச் செல்வங்களின் தலைவன் என்ற மமதை, அகில உலகங்களுக்கும் அன்னையான மகாலக்ஷ்மியின் பிரசாதத்தையே அவமதிக்கும் அளவுக்கு உன்னிடம் இருக்கிறது. எந்த செல்வம் இருப்பதால் இந்த விதமாய் நீ நடந்து கொண்டாயோ அந்த செல்வங்கள் அனைத்தும் அழிந்து போகட்டும்' என்று சாபம் கொடுத்தார்.

துர்வாச முனிவரின் சாபத்தின் படி இந்திர லோகத்தில் இருந்த எல்லா செல்வங்களும் பாற்கடலில் வீழ்ந்துவிட்டன. அன்னை லக்ஷ்மியும் பாற்கடலில் மறைந்தாள். தேவர்கள் எல்லோரும் துன்பம் வரும்போது செய்யும் வழக்கம் போல் பாற்கடலில் பள்ளி கொண்டவனைப் போய் வணங்கினார்கள். இறைவனின் கட்டளைப்படி அசுரர்களின் உதவியோடு பாற்கடலைக் கடையத் துவங்கினார்கள்.

மந்தர மலையை மத்தாகவும் வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகவும் கொண்டு அசுரர்கள் ஒரு பக்கமாகவும் தேவர்கள் ஒரு பக்கமாகவும் பாற்கடலைக் கடைந்து கொண்டிருக்கின்றனர். நாட்கள் பல சென்று விட்டன. அழிந்து போன செல்வங்கள் திரும்பி வருவதைப் போல் தெரியவில்லை. ஆனால் திடீரென்று வெப்பம் அதிகமாகிவிட்டது. பாற்கடலில் இருந்து ஆலமென்னும் விஷம் வெளிவருகிறது. அதே நேரத்தில் வாசுகிப் பாம்பும் உடல்வலி தாங்காமல் விஷத்தைக் கக்குகிறது. இரண்டு விஷமும் சேர்ந்து கொண்டு ஆலகாலமாகி எல்லா உலகையும் அழித்துவிடும் போல் இருக்கிறது.

உலகங்களின் துன்பத்தைக் கண்டு பொறுக்காத கருணாமூர்த்தியாகிய மகேசன் உடனே அந்த ஆலகாலத்தை கையினில் ஏந்தி விழுங்கிவிட்டார். காலகாலனாகிய அவரை எந்த விஷம் என்ன செய்ய முடியும்? ஆனாலும் அன்னை பார்வதியால் அதனைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க முடியவில்லை. அண்ணல் உண்ட விஷம் கழுத்திலேயே தங்கிவிடும் படி அவரின் கழுத்தில் கையை வைத்தாள். விஷம் அங்கேயே நின்றது. விஷத்தின் வலிமையால் அண்ணலின் கழுத்து நீல நிறம் பெற்றது. அண்ணலும் 'நீலகண்டன்' என்ற திருப்பெயரைப் பெற்றார்.

இன்னும் சில நாட்கள் சென்றன. எல்லா செல்வங்களும் ஒவ்வொன்றாக பாற்கடலில் இருந்து வெளிவரத் தொடங்கின.



அன்னை மகாலக்ஷ்மியும் பாற்கடலில் இருந்து தோன்றினாள். அலைமகள் என்ற திருநாமத்தை அடைந்தாள். அப்படி அன்னை பாற்கடலில் இருந்து தோன்றிய பெருமை மிக்க திருநாள் பங்குனி உத்திரத் திருநாள். அன்னை பாற்கடலில் இருந்து தோன்றும் போதே கையில் ஒரு மலர்மாலையை ஏந்திக் கொண்டு தோன்றினாள். அதனை நேரே சென்று தன் கணவனாகிய திருமாலின் கழுத்தினில் இட்டாள். அதனால் பங்குனி உத்திரத் திருநாள் அன்னை மகாலக்ஷ்மியின் பிறந்த நாள் மட்டுமன்றி திருமண நாளாகவும் கொண்டாடப் படுகிறது.

***

மஹிஷியின் அட்டகாசம் தாங்க முடியவில்லை. அவள் வாங்கிய வரத்தின் படி சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்த மகனால் தான் அழிவு. ஆனால் ஆணும் ஆணும் சேர்ந்து பிள்ளை எப்படி பிறக்கும்? அது நடக்காத விஷயமாதலால் அவள் தன்னை அழிக்க யாருமில்லை என்று எண்ணிக் கொண்டு அளவில்லாத அட்டூழியங்கள் செய்துக் கொண்டிருக்கிறாள்.

பாற்கடலில் தோன்றிய அமுதத்தை தேவர்களுக்குக் கொடுப்பதற்காக விஷ்ணு மோகினியாக அவதாரம் எடுத்த போது மஹிஷி பெற்ற வரம் வேலை செய்யத் தொடங்கியது. மோகினிதேவியும் சிவபெருமானும் இணைந்ததால் ஹரிஹரசுதனான ஐயன் ஐயப்பன் பிறந்தான். மோகினிசுதன் பிறந்த தினம் பங்குனி உத்திரமாகிய திவ்வியத் திருநாள்.

***

சூரபதுமனும் அவன் தம்பியரும் செய்யும் தொல்லைகள் அளவிட முடியாமல் போய்விட்டன. சிவகுமாரனாலேயே தனக்கு அழிவு வரவேண்டும் என்று வரம் பெற்றதாலும் சிவபெருமான் காலகாலமாக அப்போது தவத்தில் மூழ்கி இருந்ததாலும் தனக்கு தற்போதைக்கு அழிவு இல்லை என்றெண்ணி அட்டகாசம் செய்து கொண்டிருக்கிறான் சூரன். அன்னை தாக்ஷாயிணி இமயமலைக்கரசன் மகளாய் பர்வத ராஜகுமாரியாய் பார்வதியாய் தோன்றி சிவபெருமானை மணக்க தவம் செய்து கொண்டிருக்கிறாள். சிவபெருமானோ அன்னை தாக்ஷாயிணியைப் பிரிந்ததால் மனம் வருந்தி யோகத்தில் நிலை நின்று விட்டார். சூரனின் அழிவு நேர வேண்டுமாயின் அன்னை பார்வதியை ஐயன் மணக்கவேண்டும். அதற்காக தேவர்களின் தூண்டுதலின் படி காமன் தன் கணைகளை ஐயன் மேல் ஏவி அவரின் நெற்றிக் கண்ணால் சுடப்பட்டு அழிந்தான். ஆனால் காமன் கணைகள் தன் வேலையைச் செய்தன. காமேஸ்வரன் அன்னை பார்வதியை மணக்க சம்மதித்துவிட்டார். ரதிதேவியின் வேண்டுகோளுக்கிணங்க மன்மதனும் உயிர் பெற்று எழுந்து ஆனால் உருவம் இல்லாமல் அனங்கன் ஆனான். அன்னையும் அண்ணலும் திருமணம் செய்து கொண்ட நன்னாள் பங்குனி உத்திரத் திருநாள். அதனால் இன்றும் பல சிவாலயங்களில் திருமண வைபவம் பங்குனி உத்திரத்தன்று நடைபெறுகிறது.

***


தைப்பூசம், கந்தர் சஷ்டி, திருக்கார்த்திகை, வைகாசி விசாகம் என்பன போல் பங்குனி உத்திரம் என்றாலே அது முருகன் கோவில் திருவிழா நாள் என்று தான் எல்லோருக்கும் உடனே தோன்றுவது. எங்கெல்லாம் முருகன் கோவில் கொண்டுள்ளானோ அங்கெல்லாம் பங்குனி உத்திரம் தவறாமல் கொண்டாடப்படுவதால் பங்குனி உத்திரம் என்றாலே குமரக்கடவுளின் நினைவு தான் நமக்கு வருகிறது. எனக்கும் அப்படித் தான். ஆனால் நாள் செல்லச் செல்ல நம் சமயத்தில் உள்ள மற்ற கடவுளர்களுக்கும் இந்த திருநாளில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதற்கும் மேலாக பல பெருமைகள் இந்தத் திருநாளுக்கு இருக்கலாம். படிப்பவர்கள் நான் எதையாவது விட்டிருந்தால் தயைசெய்து சொல்லுங்கள்.

***

எந்த காரணத்தினால் பங்குனி உத்திரம் முருகனுக்கு உகந்ததாகக் கொண்டாடப் படுகிறது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் எங்கள் குல தெய்வமான பழனியாண்டி அன்று தான் திருத்தேர் விழா கண்டருள்கிறான். முடிந்த வரை ஒவ்வொரு ஆண்டும் என் பெற்றோர் என் சிறு வயதில் பங்குனி உத்திரத் தேர்த் திருவிழாவிற்காக எங்களை (என்னையும் என் தம்பியையும்) பழனிக்குக் கூட்டிச் சென்றுள்ளனர். அதனால் பழனி தண்டாயுதபாணியின் மேல் எனக்குத் தனியொரு பாசம். இன்றும் ஒவ்வொரு முறை மதுரைக்குச் செல்லும் போது பழனிக்குச் செல்லத் தவறுவதில்லை. ஒவ்வொரு முறையும் அவனைப் பார்க்கும் போது கண் பனி சோரும்.

முருகன் குமரன் குகன் என்று மொழிந்(து)
உருகும் செயல் தன்(து) உணர்(வு) என்(று) அருள்வாய்
பொருபுங்கவரும் புவியும் பரவும்
குருபுங்கவ எண்குண பஞ்சரனே

கூகா என என் கிளை கூடியழப்
போகா வகை பொருள் பேசியவா
நாகாசல வேலவ நாலுகவித்
தியாகா சுரலோக சிகாமணியே

செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன் பிறவான் இறவான்
சும்மா இரு சொல் அற என்றலுமே
அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே

இந்தப் பாடல்களின் பொருளினை இராகவன், இராமநாதன் இவர்களின் பதிவில் பாருங்கள்.

***

இப்போது இதுவரை சொன்னதைப் பற்றியத் தொகுப்புரை:

1. திருவரங்கத்தில் திருவரங்கநாதனும் திருவரங்கநாயகியும் சேர்த்திச் சேவை அருளும் நாள்
2. வில்லிபுத்தூரில் ஆண்டாள் நாச்சியாரும் ரெங்கமன்னாரும் மணக்கோலத்தில் காட்சி தரும் நாள்
3. மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் வைகை ஆற்றில் எழுந்தருளும் நாள்
4. ஜனக ராஜ குமாரி ஜானகி இராகவனை மணந்த நாள்
5. நாமக்கல் இலட்சும் நரசிம்மப் பெருமாளும் நாமகிரித் தாயாரும் தேரில் பவனி வரும் நாள்
6. அன்னை திருமகள் பாற்கடலில் இருந்து தோன்றிய நாள்
7. மோகினி சுதனான ஐயன் ஐயப்பன் தோன்றிய நாள்
8. பார்வதி பரமேஸ்வரனை மணந்த நாள்
9. முருகனின் திருவருளால் மதுரை மாநகரில் உங்கள் அன்பிற்கினிய அடியேன் பிறந்த நாள்
10. முருகன் அருள் முன்னிற்க அடியேனின் அன்புத் திருமகள் பிறந்த நாள்

வணங்கி நிற்கிறோம். வாழ்த்துங்கள்.

கண்ட நாள் முதலாய்...

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு!



கண்ட நாள் முதலாய், காதல் பெருகுதடி!
கையினில் வேல் பிடித்த, கருணைச் சிவ பாலனை!
(கண்ட நாள் முதலாய்)

வண்டிசை பாடும் எழில் வசந்தப் பூங்காவில்
வந்து, சுகம் தந்த, கந்தனை, என் காந்தனை!
(கண்ட நாள் முதலாய்)

நீல மயில் தனை, நெஞ்சமும் மறக்கவில்லை!
நேசமுடன் கலந்த, பாசமும் மறையவில்லை!
கோலக் குமரர், மனக் கோயிலில் நிறைந்துவிட்டார்!
குறுநகை தனைக் காட்டி, நறுமலர் சூட்டி விட்டார்!
(கண்ட நாள் முதலாய்)

Thursday, March 17, 2011

ஆராவமுதே - சில கேள்விகள்!

ஆழ்வாரின் ஆராவமுதே திருவாய்மொழியில் முதல் பாசுரத்தின் பொருளை - முன்னோர் சொன்ன பொருளின் திரண்ட கருத்துகளை - மூன்று இடுகைகளில் எழுதியிருக்கிறேன். அவற்றைப் பதிவில் வந்தோ கூகிள் ரீடரிலோ படித்த அன்பர்களுக்கு சில கேள்விகள்:

1. எழுதியவை சுவையாக இருந்ததா? சுவை இன்னும் கூடுதலாக எழுத வேண்டுமா? அப்படியென்றால் என்ன செய்யலாம்?
2. எளிமையாக இருந்ததா? இன்னும் எளிமை வேண்டுமென்றால் என்ன செய்யலாம்?
3. இத்துடன் பாசுரப் பொருள் சொல்வதைத் தொடரலாமா? அப்படித் தொடர்வதென்றால் விரிவாக எழுத வேண்டுமா? சுருக்கமாக எழுதினால் போதுமா?
4. தொடரவேண்டாம் என்றால் என்ன வகையான பதிவுகள் எழுதலாம்? ஏற்கனவே நான் எழுதியிருக்கும் வகைகளில் இருந்து சொல்லுங்கள்.

Saturday, March 12, 2011

கல்யாணத் தேனிலா காய்ச்சாதப் பால்நிலா



கல்யாணத் தேனிலா காய்ச்சாதப் பால்நிலா
நீதானே வானிலா என்னோடு வா நிலா
தேயாத வெண்ணிலா உன் காதல் கண்ணிலா
ஆகாயம் மண்ணிலா (கல்யாணத் தேனிலா)

தென்பாண்டிக் கூடலா தேவாரப் பாடலா
தீராத ஊடலா தேன் சிந்தும் தூறலா
என் அன்புக் காதலா என்னாளும் கூடலா
பேரின்பம் மெய்யிலா நீ தீண்டும் கையிலா
பார்ப்போமே ஆவலா வா வா நிலா ஆ ஆ அ (கல்யாணத் தேனிலா)

உன் தேகம் தேக்கிலா தேன் உந்தன் வாக்கிலா
உன் பார்வை தூண்டிலா நான் கைதிக் கூண்டிலா
சங்கீதம் பாட்டிலா நீ பேசும் பேச்சிலா
என் ஜீவன் என்னிலா உன் பார்வை தன்னிலா
தேனூறும் வேர்ப் பலா உன் சொல்லிலா ஆ ஆ ஆ (கல்யாணத் தேனிலா)

இசை: இளையராஜா
பாடியவர்கள்: ஜேசுதாஸ், சித்ரா
திரைப்படம்: மௌனம் சம்மதம்

Saturday, March 05, 2011

ஆராவமுதே! - 3



"நெடுமால் ஆழ்வார் மேல் கொண்டுள்ள அன்பால் ஆழ்வாரின் உடலமும் அன்பாகி நீர்பண்டம் போல் உருகி நிற்கச் செய்தான். ஆனால் அவனது அந்த அன்பின் வெளிப்பாடாக குளிர நோக்குதல், வாவென்று அழைத்தல், நலம் வினவுதல், ஆரத் தழுவுதல் என்று ஒன்றுமே செய்யவில்லை. குளிர்ந்த காற்று வீசவும் அதில் மயங்கி உறங்குபவன் போல் தன் திருமேனியின் அழகெல்லாம் நன்கு திகழும்படி கிடந்தான். நீ கிடந்ததை மட்டும் தான் காண்கிறேன் என் தலைவனே; உன் அன்பின் வெளிப்பாடுகளைக் காணவில்லை என்கிறார் ஆழ்வார்"

"ஆழ்வார் இதனை எல்லாம் பாசுரத்தில் சொல்லியிருக்கிறாரா? ஆகா அருமை. எப்படி என்று விளக்குங்கள்".

"சீர் ஆர் செந்நெல் கவரி வீசும் செழுநீர்த் திருக்குடந்தை
ஏர் ஆர் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே

என்பவை இந்த பாசுரத்தின் அடுத்த அடிகள்.

தூமலர்த் தூவித் தொழுது, வாயினால் பாடி, மனத்தினால் சிந்தித்து என்று உடல், மொழி, மனம் என்ற மூன்றாலும் இறைவனுக்குத் தொண்டு செய்வதே உயிர்களின் இயல்பு என்று சான்றோர் சொல்வார்கள் அல்லவா? பகுத்தறிவு என்னும் ஆறாம் அறிவுள்ள உயிர்கள் மட்டுமின்றி ஓரறிவு முதல் ஐந்தறிவு வரை உள்ள உயிர்களுக்கும் அது தானே இயல்பு. அந்த இயல்பையே செந்நெல்லின் சீர் என்று ஆழ்வார் இங்கே குறிக்கிறார்.

காற்றில் இயல்பாக ஆடி அசையும் செந்நெல்லைக் கண்டு அது இறைவனுக்குக் கவரி வீசுவதாகச் சொல்லலாமே என்று ஒரு மறுப்பு எழலாம். அப்படி சொல்லலாம் தான். ஆனால் இந்த ஆழ்வாரும் ஆழ்வாரை அடிமை கொண்டுள்ள இறைவனும், உயிர்களுக்கும் இறைவனுக்கும் இயல்பாக அமைந்துள்ள உடைமை உடையவன் என்ற தொடர்பை நன்கு உணர்ந்தவர்கள் என்பதால் அவ்விருவர் பார்வைக்கும் காற்றில் அசையும் செந்நெல் இறைவனுக்குத் தொண்டு செய்வது போன்றே தோன்றுகிறது.

ஆழ்வார் என்றும் இறைவனுக்குத் தொண்டு செய்வதே தன் இயல்பு என்பதை உணர்ந்தவர் என்பதாலும் அதுவே எல்லா உயிர்களுக்கும் இறைவனுக்கும் உள்ள தொடர்பு என்று அறிந்ததாலும் செந்நெலும் இறைவன் உறங்க கவரி வீசித் தொண்டு செய்வதாக நினைக்கிறார்.

இயல்பாக உயிர்களிடத்தில் தனக்குத் தோன்றும் கருணையை வாரி வழங்க தற்செயலாக ஏதேனும் ஒன்றை உயிர் செய்யாதா என்று எப்போதும் பார்த்துக் கொண்டிருக்கும் இறைவனும் தற்செயலாக ஆடும் செந்நெல் தனக்கு கவரி வீசித் தொண்டு செய்வதாக எண்ணிக் கொண்டு அதற்கு தன் கருணை என்னும் செழுநீரை வாரி வழங்குகிறான்".

"ஆகா. ஆகா. அடுத்த முறை திவ்ய தேசங்களில் தற்செயலாக ஆடும் மரம் செடி கொடிகளைக் கண்டால் இந்த நினைவு வந்து தானே நம் கைகள் வணங்காதா?! அதனைக் கண்டு இறைவனும் ஆஆ என்று ஆராய்ந்து அருளானா?! அவன் திருவுள்ளம் தான் உகக்காதா?! ஆழ்வாரின் அமுத மொழிகள் நம் நினைவில் என்றும் நின்று அவன் உள்ளம் உகக்கும்படி செய்யட்டும்!"

"உண்மை தான் பகவரே. ஆழ்வார் பாசுரங்களில் ஒரு சொல் போதுமே உலகைக் கடைத்தேற்ற.

இப்படி தொண்டு என்னும் சீர் நிறைந்த செந்நெல் இறைவனின் அருள் என்று சொல்லலாம்படியான செழுமையான நீர் நிலைகளில் நின்று ஆடி அசைந்து கவரி வீசும் ஊர் திருக்குடந்தை. அந்த திருப்பதியில் தனது அழகெல்லாம் திகழும் படியாக இறைவன் உறங்குகின்றான்.

சிலரை நிற்கும் போது பார்த்தால் அழகாக இருப்பார்கள். சிலர் அமரும் போது அவர்களது அழகு வெளிப்படும். ஆனால் இவனுக்கோ இவனது ஒப்பில்லாத அழகு எல்லாம் கிடக்கும் போது தான் திகழ்ந்து விளங்குகிறது. அப்படி அழகெல்லாம் திகழும் படியாக இவன் திருக்குடந்தையிலே கிடக்கிறான். அதனைக் கண்டேன் என்கிறார் ஆழ்வார்".

"கண்டேன் எம்மானே என்று தானே சொன்னார். வருத்தப்படுவதாக தேவரீர் சொன்னீர்களே"

"ஆமாம் பகவரே. திகழக் கிடந்தாய் கண்டேன் அம்மானே என்று சொல்லும் போது என் உயிரையும் உடலையும் உருக்கும் திருக்கோலத்தைக் கண்டது மட்டும் தான் உண்டு; ஆனால் நான் எதிர்பார்த்து வந்தவை நடக்கவில்லை என்று சொல்வதாகத் தானே பொருள். வந்தாயா என்று அன்புடன் வினவுதல், தாமரைக்கண் திறந்து குளிரக் காணுதல், ஆரத்தழுவுதல் போன்றவை தானே இவர் விரும்பி வந்தவை. அவற்றை எல்லாம் காணேன். கிடந்ததை மட்டுமே கண்டேன் என்கிறார்.

வாரும் பிள்ளாய். அருகில் அமருக".

வந்த இளைஞன் இருவரையும் பணிந்து அமர்கிறான்.




"இவன் பெயர் கண்ணபிரான். எம்பெருமானார் திருவுள்ளம் எதையெல்லாம் விரும்பியதோ அவற்றை பற்றியே என்றும் சிந்திக்கும் உள்ளத்தவன்.

பிள்ளாய். ஆழ்வாரின் ஆராவமுதே பாசுரத்தின் பொருளைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்".

"ஐயா. அடியேன் தேவரீர் திருமாளிகைப் புறத்திலே நின்று தேவரீர் அருளியவற்றைக் கேட்டுக் கொண்டிருந்தேன். இடையில் புக வேண்டாம் என்று தயங்கி நின்றிருந்தேன்".

"பெரியோரை மதிக்கும் உன் பணிவைத் தான் இந்த ஊரே நன்கு அறியுமே. இடையில் புக வேண்டாம் என்று தயங்கிய நீ இப்போது வந்தது ஏனோ?"

"சீரார் செந்நெல் கவரி வீசும் என்ற ஆழ்வார் அருளிச்செயலின் இருக்கும் இன்னொரு அருத்த விசேஷமும் மனத்தில் தோன்றியதால் அதனை தங்களிடம் விண்ணப்பிக்க உள்ளே நுழைந்தேன். அடியேனை மன்னிக்கவேண்டும்"

"ஆகா. இன்னொரு அருத்த விஷேசமா? எம்பெருமானார் திருவுள்ளம் போன்ற உள்ளம் அல்லவா உன்னது. அந்தப் பொருளையும் சொல். கேட்போம்!"

"எம்பெருமானுக்குத் தொண்டு செய்வது தான் உயிர்களின் இயல்பு என்பதை லக்ஷ்மி சம்பன்னான இளைய பெருமாளும் பரதாழ்வானும் காட்டி நின்ற போது எம்பெருமான் தொண்டு என்பதோ நம் இயல்புக்கு சத்ரு எம்பெருமான் அடியார்களுக்குத் தொண்டு செய்வதே நம் இயல்பு என்று நின்றானே சத்ருக்கனாழ்வான். அவனைப் போன்றது இந்த சீரார் செந்நெல்".

"ஆகா. ஆகா. ஆழ்ந்த பொருள் சொன்னாய் கண்ணபிரான். இன்னும் எளிமையாக விளக்கமாகச் சொல்".

"இறைவனுக்குத் தொண்டு செய்வது உயிர்களின் இயல்பு. பெருமாள் காட்டில் வாழ்ந்த காலம் எல்லாம் இளைய பெருமாள் தொண்டே வடிவாக இருந்து உயிர்களின் இயல்பினை விளக்கும் ஓர் அரிய எடுத்துக் காட்டாக இருந்தான்".

"ஆமாம்".

"ஆனால் அவனும் காட்டுக்கு என்னுடன் வராதே என்ற காகுத்தனின் சொல்லை மறுத்து அடம் பிடித்து அவனுடன் காட்டுக்கு ஏகி நிலையான தொண்டினைச் செய்தான். தொண்டிலே அவனுக்கு ஊக்கம்".

"ஆமாம்".

"பரதனோ சுவர்க்கமோ நரகமோ நாடோ காடோ எங்கே நீ என்னை இருத்துகிறாயோ அங்கேயே இருக்கிறேன் என்று பரமன் சொல்படி பாதுகா ராஜ்யம் என்னும் மகா பாரத்தைச் சுமந்தான். அவன் இளையபெருமாளை விட ஒரு படி ஏற்றம்".

"ஆமாம்".

"இவ்விரு வகையில் இறைவனுக்குத் தொண்டு செய்வது இதனை விட உயர்ந்ததான அடியவருக்குத் தொண்டு செய்யும் பேற்றினை அடையாமல் செய்துவிடும். அதனால் பகவத் கைங்கர்யம் என்பதே மகாவிரோதி! சத்ரு! இப்படி எண்ணிக் கொண்டு இராகவனுக்கு மட்டுமே தொண்டு செய்யாமல் அவன் அடியார்களுக்குத் தொண்டு செய்வதே சிறப்பு என்று பரதனுக்குத் தொண்டு செய்தான் சத்ருக்னன். பகவத் கைங்கர்யம் என்னும் மகாசத்ருவை வென்று பாகவத கைங்கர்யம் என்னும் அடியவர் தொண்டில் ஆட்பட்டதால் அன்றோ அவன் சத்ருக்களை வென்றவன் சத்ருக்னன் என்று புகழ் பெற்றான்"

"ஆகா. உண்மை. உண்மை. சீரார் செந்நெல் எந்த வகையில் சத்ருக்னனைப் போன்றது என்றும் விளக்கமாகச் சொல்".

"ஆடி அசையும் செந்நெல் இலக்குவனைப் போல் தனக்கு கவரி வீசித் தொண்டு செய்வதாக எம்பெருமான் நினைத்துக் கொள்கிறான். அருகில் இருந்து தொண்டு செய்ய இயலாமல் செழுநீர்க் குளத்தில் இருந்து கவரி வீசுவதால் பரதனைப் போல் என்று ஆழ்வார் எண்ணிக் கொள்கிறார். ஆனால் இவ்விரண்டையும் இந்த சீர் பெறும் செந்நெல் செய்யவில்லை. அடியவர்களின் தலைவரான ஆழ்வார் திருக்குடந்தையில் நுழைவதைக் கண்டு அவருக்குத் தானே கவரி வீசி வரவேற்கிறது இந்த செந்நெல்! அதனைத் தான் சொன்னேன்!"

"ஆகா. ஆகா. என்ன அற்புதமான விளக்கம். ஐயோ கண்ணபிரான் அறையோ இனிப் போனாலே!"

Monday, February 28, 2011

ஸௌராஷ்டிர பாஷா கலாசாலோ - ௨௦௧௧, ஸௌராஷ்டிர மொழிப் பட்டறை - 2011



நண்பர் சுரேஷ் தன் பதிவில் சௌராஷ்ட்ர மொழியின் வரலாற்றைப் பற்றி சுருக்கமாகவும் தெளிவாகவும் சொல்லியிருக்கிறார். எழுத்துகள் இருந்தாலும் அவை இருப்பதே தெரியாமலும், தெரிந்தாலும் கற்றுக் கொள்ளாமலும் (நான் இந்த வகையில் இருக்கிறேன்), கற்றிருந்தாலும் புழங்காமலும் ஒரு பேச்சு மொழியாக மட்டுமே சௌராஷ்ட்ரம் இப்போது இருக்கிறது. மொழி நிலைத்திருக்க வேண்டுமெனில் இந்த நிலை மாற வேண்டும். மொழி வெறும் தகவல் தொடர்பு சாதனம் மட்டுமே இல்லை; அதில் பண்பாடும் அடங்கியிருக்கிறது. எழுதத் தொடங்கும் போது இலக்கியங்களும் புதிது புதிதாகத் தோன்றும். மொழியும் நிலைபெறும். இந்த நோக்கங்களை மனத்தில் கொண்டு பலரும் ஊக்கத்துடன் செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்த பட்டறையை மதுரை சௌராஷ்ட்ரக் கல்லூரியில் நடத்த நண்பர் சுரேஷும் அவருடைய செயற்துணைவர்களும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். மேல்விவரங்களை அவருடைய பதிவில் பார்க்கலாம்.

Wednesday, February 23, 2011

மொழி எதற்காக? - ஜெயமோகன்

எழுத்தாளர் ஜெயமோகன் மொழி பற்றி எழுதிய இந்த கட்டுரையை இன்று படித்தேன். அதனைப் படித்ததில் பிடித்தது வகையில் பகிர்ந்து கொள்கிறேன்.

http://www.jeyamohan.in/?p=11623

என் மக்கள் இருவரும் மிக நன்றாக சௌராஷ்ட்ரம் பேசுவார்கள். எட்டு வயது மகளுக்குத் தமிழ் கற்று கொள்ள வேண்டும் என்று ஆர்வம்; என் பணிச்சுமையால் அவளுக்குக் கற்றுக் கொடுக்க இயலவில்லை. விரைவில் அதனையும் வாழ்வின் ஒரு முக்கியப் பகுதியாக எடுத்துக் கொண்டு சொல்லிக் கொடுக்க வேண்டும். ஜெயமோகன் சொல்லும் நுண்ணுணர்வுள்ள குழந்தைகள் தான் என் மக்கள். அவர்களுக்கு தமிழைக் கற்றுக் கொடுக்காமல் ஒரு இழப்பு ஏற்படுத்தக் கூடாது என்ற ஊக்கம் இக்கட்டுரையைப் படித்த போது தோன்றுகிறது!

Monday, January 24, 2011

ஆராவமுதே! - 2

"பரம், வியூஹம், விபவம், அந்தர்யாமி, அர்ச்சை என்னும் இறைவனின் ஐந்து நிலைகளிலும் அவன் ஆராவமுதன் என்று அழகாகச் சொன்னீர்கள். இந்தப் பாசுரத்தின் அடுத்த சொல்லைக் கேட்க ஆவலாக இருக்கிறது".

"அடுத்த சொல் இன்னும் மிகவும் அழகானது உலகரே! எளிமையாக எல்லோரும் கூடியிருந்து குளிர்ந்து அனுபவிக்கும்படி ஆராவமுதமாக இருக்கும் நிலையைக் கண்டு நான் அடிமையானேன் என்று சொல்வது போல் தன்னை அடியேன் என்று ஆழ்வார் சொல்கிறார்"

"ஆகா ஆகா. அடியேன் என்று தன்னை அழைத்துக் கொள்வதற்கும் ஒரு அருமையான இடம் பார்த்தாரே! ஆராவமுதே அடியேன் என்று இரண்டையும் சேர்த்துச் சொல்லும் போது ஆராவமுதமாக இருக்கும் அந்த அனுபவிக்க உகந்த தன்மைக்கு அடிமையானேன் என்று சொல்லாமல் சொன்னாரே!"

"அது மட்டும் இல்லை உலகசாரங்கரே. ஆத்ம வஸ்து சத் சித் ஆனந்த மயம் என்று வேதங்கள் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்க அதனை எல்லாம் தனக்கு அடையாளமாக வைக்காது ஆத்ம வஸ்துவுக்கு அடையாளமாக அமைவது என்றென்றும் இறைவனுக்குத் தொண்டு செய்யும் நிலையே என்று சொல்வது போல் இங்கே அடியேன் என்ற் சொல்லைப் புழங்குகிறார் ஆழ்வார்"



"அடடா. மிக ஆழ்ந்த பொருளைச் சொல்கிறீர்கள் போலிருக்கிறதே. இன்னும் கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள்".

"சாதாரண மனிதர்கள் 'நான்' என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும் போது ஆத்மவஸ்துவைக் குறிக்காமல் பெயர் உருவம் குணம் கொண்ட தனது உடலையும் மனத்தையும் சேர்த்தே தானே சொல்கிறார்கள்"

"ஆமாம்"

"இறைவனாலேயே மயக்கம் இல்லாத தெளிவு நிலை என்னும் மயர்வற மதிநலம் அருளப்பெற்றவர் ஆழ்வார். அவர் 'நான்' என்று சொல்ல நினைக்கும் போது தனது உடலையும் மனத்தையும் குறிக்காமல் ஆத்மவஸ்துவையே குறிக்கிறார்"

"அப்படி சொல்வது எதனை வைத்து?"

"அடுத்த சொல்லை வைத்து. அடியேன் உடலம் என்று சொல்கிறாரே. எனது சட்டை என்றால் நானும் சட்டையும் வெவ்வேறு என்று ஆகிறதே. அதே போல் அடியேன் உடலம் என்னும் போது தானும் உடலும் வெவ்வேறு என்று சொல்லாமல் சொல்கிறார். அதனால் இங்கே தன்னை உடல் என்று எண்ணும் மயக்கம் இல்லாதவர் ஆழ்வார் என்பது தெளிவு"

"ஆமாம்"

"அப்படி தன் ஆத்மவஸ்துவைக் குறிக்கும் போது அதன் குணங்களாக வேதங்கள் விரித்துரைக்கும் என்றும் அழியாமல் இருத்தல் (சத்), அறிவே வடிவாகவும் குணமாகவும் இருத்தல் (சித்), என்றும் மகிழ்ச்சியும் இருத்தல் (ஆனந்தம்) என்ற குணங்களை விட இறைவனுக்குத் தொண்டு செய்வதே ஆத்மனுக்கு இயற்கை குணம் என்பதால் அதனை முதன்மைப்படுத்தி அடியேன் என்று சொல்கிறார்"

"ஆகா ஆகா. நன்கு சொன்னீர்கள். நன்கு சொன்னீர்கள். அடியேன் என்ற சொல் தான் எத்தனை ஆழமான பொருளைத் தருகிறது. அடியேன் என்று வாயாரச் சொல்லும் எல்லோரும் இனி மேல் இந்த ஆழ்ந்த பொருளை நினைவில் வைத்துக் கொண்டு ஒவ்வொரு முறையும் சொன்னால் அது அவர்களுக்கு பெரும்பதத்தைத் தந்துவிடுமே!"




"உண்மை. நாராயண நாமம் தராததையும் இந்த அடியேன் என்ற சொல் தந்துவிடும்!"

"அடுத்து வரும் சொற்களையும் சொல்லியருள வேண்டும்"

"அடியேன் உடலம் நின் பால் அன்பாயே நீராய் அலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே"

"என்ன விந்தை இது? ஆராவமுதமாய் இருக்கும் அனுபவ நிலையைக் கண்டு அதில் மயங்கிவிழுந்து புற்கவ்வி மண்கவ்வி அடியேன் என்று அடிமை புகுதல் ஆத்மவஸ்துவிற்கு இயல்பு. அந்த நெகிழ்ச்சியில் ஆத்மாவிற்கு அருகாமையில் இருக்கும் மனமும் புத்தியும் நெகிழ்வதுவும் உண்டு. அறிவே இல்லாத ஊனுடல் உருகுவதும் உண்டோ?!"

"நன்கு கேட்டீர்! உணவால் பிறந்து உணவால் வளர்ந்து உணவாகி மடியும் உடல் என்பதால் அதனை அன்னமயம் என்றார்கள் பெரியோர்கள். அந்த அன்னமயமான உடலும் இந்த ஆராவமுதனின் மேல் அன்பே உருவாகியது. அன்னமயம் என்பது போய் அன்புமயம் ஆனது. அதனால் அறிவில்லாத ஊன் உடலும் உருகுகின்றது"

"எப்படி அதனைச் சொல்கிறீர்கள்?"

"ஆழ்வார் சொல்வதைக் கவனித்துப் பாருங்கள். அடியேன் உடலம் நின் பால் அன்பாயே என்கிறார். நின் பால் என் உயிரும் மனமும் புத்தியும் மட்டும் இல்லை என் உடலமும் அன்பே ஆக ஆகி நின்றது என்கிறார். அப்படி உடலும் அன்பே உருவாக ஆனதால் தான் நீராய் அலைந்து கரைந்துவிட்டது"

"அடடா. ஆழ்வாரின் நிலை தான் என்னே! அவரது உடலும் ஆராவமுதன் மேல் அன்பாகி உருகுகின்றதே!"

"நாம் அப்படி நினைக்கிறோம். ஆனால் அடியேன் என்று ஆத்மாவின் முதன்மைக் குணத்தைச் சொன்ன ஆழ்வார் அப்படி சொல்லவில்லை. அவரது உடல் தானே உருகவில்லை. அதனைச் செய்தததும் அவனே என்று சொல்கிறார். நீராய் அலைந்து கரைய உருக்குகின்ற என்று சொல்வதை பாருங்கள். என் செயல் ஆவது யாதொன்றும் இல்லை என்று பெரியோர் விரித்துச் சொன்னதை இங்கே சுருங்கச் சொன்னார் ஆழ்வார்!"

"அடடா அடடா. மனிசர்க்குத் தேவர் போல் தேவர்க்கு தேவன் ஆராவமுதன் என்பதால் அடுத்து நெடுமாலே என்றார் போலும். அந்த பெருமையும் இவர் உடல் நீராய் கரைய உருக்கும் தன்மை கொண்டதன்றோ?"

"உண்மை தான். இறைவன் மிகப்பெரியவன். மனிதர்களுக்கு தேவர்கள் எப்படியோ அப்படி தேவர்களுக்கு எல்லாம் தேவனான தேவதேவன். சர்வேஸ்வரன். ஆனால் இங்கே அதனைச் சொல்லவில்லை ஆழ்வார்."

"அப்படியா? என்னில் எந்த பொருளில் சொல்கிறார்?"

"உமக்கு எப்போது ஒருவர் மேல் அன்பு பிறக்கும்? அந்த ஒருவருக்கு உம்மேல் அன்பு இருக்கும் போது தானே? நின் பால் அன்பாயே என்று இவர் சொல்லும் போதே அதனை விட பலமடங்கு அன்பு அவனுக்கு இவர் மேல் இருக்கின்றதையும் அறிந்து சொல்கிறார். மால் என்றால் மயக்கம். இவர் மேல் அவனுக்கு ஆழ்ந்த மயக்கமும் அன்பும் உண்டு. அந்த பன்மடங்கு அன்பு அவனுக்கு இவர் மேல் இருப்பதால் அது இவரது உடலையும் அன்பு மயமாக்கி உருக்கும் தன்மை கொண்டது. அப்படி ஆழ்ந்த மயக்கம் இவர் மேல் அவன் கொண்டதால் அவனை 'நெடுமாலே' என்கிறார்"

"நன்கு சொன்னீர்கள். நன்கு சொன்னீர்கள்"

"அப்படி இவரையும் இவர் உடலையும் உருக்கும் அளவிற்கு ஆழமான அன்பை இவர் மேல் உடையவன் இவரைப் பார்த்தவுடன் என்ன செய்வான்?"

"இவர் வரும் திசை நோக்கி வருவான். நலமா என்று விசாரிப்பான். கட்டி அணைப்பான்"

"அதனை எல்லாம் அவன் செய்தானா? இல்லையே! அதனைத் தான் அடுத்த இரு வரிகளில் கூறுகிறார் ஆழ்வார்!"

(தொடரும்)

Friday, January 14, 2011

ஆராவமுதே! - 1


எனது உயிருக்கும் மேலான அன்பை உடைய அண்ணனைப் பிரிந்தேன். அதனாலே துன்பம் வந்தது!

அப்படிப் பிரிந்ததால் அவனுடைய திருவடிகளில் பணிந்துத் தொண்டு செய்யும் வாய்ப்பும் கிட்டாமல் போனது. அதனாலே மேலும் துன்பம் வந்தது!

இப்படி அண்ணன் காட்டிற்குச் செல்ல நேர்ந்ததற்கு நானே காரணம் என்ற பழிச்சொல்லுக்கும் ஆளானேன். அதனால் மேன்மேலும் துன்பம் வந்தது!

இப்படி ஒன்றிற்கு மேல் ஒன்றாக வந்த துன்பங்களெல்லாம் வனம் சென்ற பெருமாள் திருவடிகளைக் கண்டு சரணடைந்தால் தீரும்! நிச்சயம் தீரும்!

இப்படி பரதாழ்வான் எண்ணிக் கொண்டு வனம் சென்ற சக்ரவர்த்தித் திருமகன் திருவடிகளிலே சரண் புகுந்தான்.

அது போல தாமும் திருக்குடந்தைக்குச் சென்று ஆராவமுதன் திருவடிகளைச் சேர்ந்தால் தமது மனத்தில் இருக்கும ஆசைகள் எல்லாம் அமையும் என்று எண்ணினார் நம்மாழ்வார். எல்லாவிதங்களிலும் குறைவில்லாத பெரும்பதமான பரமபதம் இருக்க அதனை விட்டு திருக்குடந்தையிலே வந்து கண் வளர்ந்தருளுவது குறைகளை உடையவர்களின் குறைகளைத் தீர்ப்பதற்காகவே அன்றோ?! அதனால் நம் ஆசைகளையும் குறைகளையும் ஆராவமுதன் கட்டாயம் தீர்ப்பான் என்று எண்ணி இங்கே வருகிறார்.

அப்படியே திருக்குடந்தைப் பெருமாளைக் காண வந்தால், பரதனிடம் பெருமாள் 'ஆட்சியை குறையில்லாமல் நடத்துகிறாயா? மந்திரிகளிடம் கலந்து கொண்டு அனைத்தையும் செய்கிறாயா?' என்று வார்த்தை சொன்னதைப் போல் இல்லாமல், இவருடைய துன்பம் தீர தனது திருவாயைத் திறந்து ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. பரதனைக் கண்குளிரப் பார்த்தத் தன் திருக்கண்களாலே இவர் நிற்கும் திசையையும் நோக்கவில்லை. எதிரியான கம்சனிடம் பணிசெய்து அவன் சோறு உண்டு வாழ்ந்த அக்ரூரை அவர் தனது பக்தன் என்றதை மட்டுமே கொண்டு எதிர் கொண்டு சென்று தழுவியதைப் போல இவரையும் தழுவுவார் என்று இவர் இருக்க அதுவும் செய்யவில்லை. உலக இன்பங்களையே பெரிதென்று இருப்பவர்களை எப்படி நடத்துவானோ அப்படியே இவரையும் நடத்தியதால் மிகவும் மனத்துன்பம் கொண்டு புலம்புகிறார்!



சொந்தப் பிள்ளை தாய்ப்பாலை வேண்டிக் காலடியே வந்து தழுவும் போது பெற்ற தாய் அக்குழந்தையைக் கண்டு கொள்ளாமல் தள்ளினால் அக்குழந்தை கதறி அழுமே அது போல் அவனுடன் கலந்து பரிமாறும் தமது ஆசை நிறைவேறாமையாலே கதறி அழைக்கிறார்!

***

(நம்மாழ்வாரின் திருவாய்மொழி ஓர் ஆயிரத்தில் ஐந்தாம் பத்தில் வரும் எட்டாம் திருவாய்மொழியான திருக்குடந்தைத் திருவாய்மொழிக்குப் பொருள் எழுதலாம் என்று சடாரிதேவரின் திருவடி நிலைகளைச் சரண் புகுந்து தொடங்குகிறேன். எத்தனை இடுகைகள் செல்லுமோ அத்தனை இடுகைகளும் அவரே அடியேன் மூலம் எழுதிக் கொள்ள வேண்டும்! )

***



சுவாமி! அடியேன்! தேவரீர் திருவடிகளுக்கு தண்டன்!

பிள்ளாய்! உன் பெயர் என்ன? எங்கிருந்து வருகிறாய்?

அடியேன் சுந்தரராம இராமானுச தாசன். தென்னாட்டில் இருந்து வருகிறேன். தேவரீர் திருப்பெயரை இங்கே வடநாட்டில் அனைவரும் பேசக் கேட்டு தண்டனிட வந்தேன்.

தென்னாட்டில் என்ன விஷேசம்?

திருவாய்மொழி என்றொரு பிரபந்தம் பிறந்திருக்கிறது. அதனை அடியவர்கள் மிகவும் போற்றிக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்!

அப்படியா? அந்தப் பிரபந்தத்தில் ஒரு பாசுரம் சொல். கேட்போம்.

அடியவர்கள் அப்பிரபந்தத்தை ஓத தொலைவிலிருந்து கேட்டிருக்கிறேன். அதில் எனக்கு நினைவிருப்பது ஒரே ஒரு சொல் தான்.

எங்கே அச்சொல்லையாவது சொல்.

ஆராவமுதே.

அடடா. என்ன சுவையான திருப்பெயர். நாராயண வாசுதேவ விஷ்ணு போன்ற திருநாமங்கள் எல்லாம் வேதங்களிலும் வேதாந்தங்களிலும் பரக்கப் பேசப்பட்டிருக்க அந்த நாமங்களில் இல்லாத சுவையைக் காட்டும் இந்த திருநாமம் நடையாடுகின்ற நாட்டில் அல்லவா வாழவேண்டும்! சிறுபேர் நடையாடும் நாட்டில் இவ்வளவு நாள் வாழ்ந்தோமே! இப்போதே தென் திசைக்குச் சென்று இத்திருவாய்மொழியை நன்கு கற்போம்!

***



வாரும் லோகசாரங்கமுனிகளே! வடநாட்டில் வெகுநாட்கள் வாழ்ந்த நீங்கள் தென்னாட்டிற்கு எழுந்தருளியது எதற்காக?

திருவாய்மொழி என்றொரு பிரபந்தம் இங்கே பிறந்திருக்கிறதாமே! அதில் ஒரு சொல் கேட்டேன்! ஓடோடி வந்தேன்!

அப்படியா? நல்லது தான். அப்பிரபந்தத்தில் என்ன சொல் கேட்டீர்?

ஆராவமுதே என்ற சொல். அருமையாக இருக்கிறது. தேவரீரிடத்தில் அத்திருவாய்மொழியைப் பொருளுடன் கற்றுக் கொள்ள வந்தேன்.

அடியேன் செய்த நல்வினை. உடனே தொடங்குவோம்.

***

ஆகால தத்வம் அச்ராந்தம் ஆத்மனாம் அநுபச்யதாம் அத்ருப்த் அம்ருத ரூபாய என்று பின் வந்தவர்கள் பாடியது இந்த ஒரு சொல்லைக் கொண்டு தானே! காலம் என்னும் ஒன்று இருக்கும் வரையில் பதட்டமே இல்லாமல் ஆற அமர அனுபவித்தாலும் திகட்டாத அமுதம் போன்ற உருவம் உடையவன் அல்லவோ எம்பெருமான்! அதனால் அவனுக்கு ஆராவமுதன் என்ற திருப்பெயர் ஆயிற்று!

ஒரு குடத்தில் இருக்கும் அமுதத்தை பத்து பேர் உண்ணலாம். பெரிய குடம் என்றால் இன்னும் சிலர் கூட உண்ணலாம். இப்பிரபஞ்சத்தில் இருப்பவர்கள் எல்லோரும் சேர்ந்து காலம் காலமாய் அனுபவித்தாலும் தீராத அமுதம் போல் இருப்பவனன்றோ எம்பெருமான்! அதனால் அவனுக்கு ஆராவமுதன் என்ற திருப்பெயர் ஆயிற்று!

ஒன்றை அனுபவிப்பதிலும் முறை என்று உண்டு. முதலில் பார்த்தல், பின்னர் நெருங்குதல், பின்னர் தொடுதல், இப்படித் தானே அனுபவிப்பதிலும் முறை என்று இருக்கிறது. ஆனால் அந்த முறைகளை எல்லாம் ஒவ்வொன்றாக காலக்கிரமத்தில் செய்யும் பொறுமை மற்ற விஷயத்தில் வேண்டுமானால் இருக்க முடியும். எம்பெருமான் விஷயத்தில் அது முடிவதில்லை. எந்த முறையையும் பார்க்க முடியாதபடி, முறைப்படி செய்வோம் என்று ஆறியிருக்க முடியாதபடி இருக்கும் அமுதமானவன் என்பதால் எம்பெருமானுக்கு ஆராவமுதன் என்ற திருப்பெயர் ஆயிற்று.

அமுதம் அமுதம் என்கிறோமே அந்த அமுதம் இவனுடன் ஒப்பிட்டால் கடலில் பிறந்த உப்புச்சாறு தானே! அந்த உப்புச்சாற்றான அமுதத்தை உண்ண வேண்டும் என்றால் தேவர்களாகப் பிறக்க வேண்டும்! அதற்கு கடுமையான தவங்கள் செய்ய வேண்டும்! அவ்வளவும் செய்தால் சில நேரம் பலிக்கலாம்; சில நேரம் பலிக்காது! எம்பெருமானோ அப்படியின்றி எல்லோரும் அனுபவிக்கக் கூடியவனாக, எல்லா காலத்திலும் அனுபவிக்கக் கூடியவனாக, சொர்க்கம், கைவல்யம், மோட்சம் போன்றவற்றையும் கொடுக்கக் கூடியவனாக இருப்பதால் அவனுக்கு ஆராவமுதன் என்ற திருப்பெயர் ஆயிற்று.



ஆழம் எவ்வளவு என்று தெரியாத குளத்தில் இறங்குபவர்கள் ஒரு கொம்பையோ கொடியையோ பிடித்துக் கொண்டு இறங்குவார்கள். அது போல தன்னைத் தானே அனுபவிக்க எம்பெருமான் நினைத்தால் தனக்குத் துணையாக வரும் கொம்பாகக் கொடியாகப் பிராட்டியை அழைத்துக் கொள்கிறான். அயோத்தியில் இராகவப் பெருமாள் பெரிய பெருமாளை அனுபவிக்கப் போகும் போது தனியாகவா சென்றான்?! ஸஹபத்ந்யா விசாலாக்ஷ்யா நாராயணமுபாகமத். பெரிய பெருமாள் என்னும் ஆராவமுதைக் காண கொழுகொம்பாக சீதாபிராட்டியை அழைத்துச் சென்றான் இராமன். பெருமாளுக்குப் பெரியபெருமாள் மேல் உண்டான அன்பின் ஆழத்தைக் கண்டு, தன்னை அணைக்கும் போதை விட இங்கே அன்பு அதிகமாக இருக்கிறதே என்று வியந்து விசாலமான கண்ணை உடையவள் ஆனாள் சீதை. அப்படிப்பட்ட எம்பெருமானுக்குத் தானே ஆராவமுதன் என்ற திருப்பெயர் ஆயிற்று!

ஆராவமுதே! ஆராவமுதே! ஆராவமுதே! அடடா! அடடா! அடடா! எப்படி பொருளை அடுக்கிக் கொண்டே போகிறீர்கள்! அருமை அருமை. ஆத்மனாம் அனுபச்யதாம் என்று ஆத்ம தத்துவத்தில் கொண்டு அவனை அனுபவித்தாலும் அவன் ஆராவமுதனே! கூடியிருந்து குளிர்வதைப் போல் எல்லோரும் ஒரே நேரத்தில் அனுபவித்தாலும் அவன் ஆராவமுதனே! முறையெல்லாம் பார்க்க முடியாதபடி ஆறியிருக்கமுடியாதபடி அனுபவித்தாலும் அவன் ஆராவமுதனே! எளிமையிலும் எளிமையாக எங்கும் கிடைப்பதாக இருக்கும் அவன் ஆராவமுதனே! அவனே அனுபவிக்க இறங்கினாலும் காலம் காலமாக ஆழங்காண முடியாதபடி இருப்பதால் துணை கொண்டு இறங்கும் வகையில் இருக்கும் அவன் ஆராவமுதனே!

இதில் ஒரு ஐயம் ஐயா. இறைவன் ஐந்து நிலைகளில் இருப்பதாகச் சொல்கிறார்களே. அவற்றில் எந்த நிலையில் அவன் ஆராவமுதன்?

அடடா! மிக அருமையான கேள்வியைக் கேட்டீர்.

ஸதா பச்யந்தி ஸூரய: என்றல்லவோ வேதம் முழங்குகிறது! வேண்டிய உருவெல்லாம் எடுத்து வேண்டிய வகையிலெல்லாம் அவனுக்குத் தொண்டு செய்யும் போது நித்யர்களும் முக்தர்களும் கண் கொட்டாமல் பார்க்கும் பரமபத நாதனும் ஆராவமுதனே! அதனால் அன்றோ சுரர்களான நித்யர்களும் முக்தர்களும் சதா அவனைக் கண்டு கொண்டே இருக்கிறார்கள் என்று வேதம் முழங்குகின்றது!

தேவர்களும் முனிவர்களும் அபயம் அபயம் என்று கூக்குரலிட்டு ஓடி வரும் திருப்பாற்கடலில் அறிதுயில் கொள்பவனும் அனந்தன், கருடன், தும்புரு, நாரதன், பிரம்மன் முதலானவர்கள் என்றும் அனுபவிக்கத்தக்கவனாக இருக்கும் ஆராவமுதனே!

ஆணாய் பிறந்ததால் இவன் வடிவழகென்னும் அமுதத்தை முழுமையாகப் பருக முடியவில்லையே என்று முனிவர்கள் வரம் வேண்டி கோபியர்களாகப் பிறந்து இவனை அனுபவிக்கும் வகையில் அமைந்த இராமன், கிருஷ்ணன் முதலான அவதார திருவுருவமும் ஆராவமுதனே!

கண் மூடி மனத்தை நிலை நிறுத்தி நீண்ட காலம் அசையாமல் அமர்ந்து யோகிகள் தங்கள் இதயத்தில் இருக்கும் தகராகாச சோதியாகக் கண்டு அனுபவிக்கும் அந்த அந்தர்யாமியான இறைவனும் ஆராவமுதனே!

நீரும் நானும் என எல்லோரும் கூடியிருந்து அனுபவிக்கலாம்படி நம் இல்லங்களிலும் திருக்கோவில்களிலும் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானும் ஆராவமுதனே!

(தொடரும்)

***

அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்! பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக!