Sunday, March 21, 2010

இன்பத்துப் பால்: நலம் புனைந்துரைத்தல் - 2

தலைவன் தலைவியின் அழகைப் பாராட்டிக் கூறுதல் இந்த அதிகாரத்தின் பொருள். இது சாதாரணமாக புணர்ச்சியின்பத்தின் பிறகு அளவில்லா மகிழ்ச்சியோடும் அடக்க முடியாத உணர்ச்சிகளோடும் நிகழ்வது இயற்கை. அதனால் இந்த அதிகாரத்தை 'புணர்ச்சி மகிழ்தல்' அதிகாரத்தின் பின் வைத்தார் வள்ளுவர் பெருமான்.

***

மதியும் மடந்தை முகனும் அறியா
பதியில் கலங்கிய மீன்


தங்களின் தலைமைச் சுடராகிய நிலவுக்கும் இந்தப் பெண்ணின் முகத்திற்கும் வேறுபாடு தெரியாமல் எது நிலவு என்று குழம்பி நிலைதிரிந்து ஓரிடத்தில் நில்லாமல் கலங்குகின்றன விண்மீன்கள்.

மதியும் - நிலவையும்

மடந்தை முகனும் - பெண்ணின் முகத்தையும்

அறியா - அறியாது

பதியில் கலங்கிய மீன் - தம்மிடத்தில் நில்லாத விண்மீன்கள்

விண்மீன்கள் பதியில் கலங்கின என்பதை வானத்தில் அவை ஒரே இடத்தில் நிற்காமல் ஒவ்வொரு இரவும் வெவ்வேறு இடத்தில் தோன்றுவதையோ மினுக்கி மினுக்கிச் சுடர்விடுவதையோ கூறுவதாகக் கொள்ளலாம். '

கண்ணிமைத்துக் காண்பார் தம் கண்ணென்ன கண்ணே' என்று இன்னோரிடத்தில் ஒரு பெருந்தமிழ்ப்புலவன் கூறினான். அவ்வாறு கண்ணிமைக்காமல் காணும் அழகினைப் போலின்றி தயங்கித் தயங்கி இமைத்து இமைத்துப் பார்க்கும் படி இருக்கிறது போலும் இந்தப் பெண்ணின் முக அழகு.

பதியில் கலங்கிய என்பதற்கு ஓரிடத்தில் நிற்காமல் திரியும் என்று பொருள் கொண்டால் இவள் முகம் மதியா நம்மிடையே இருக்கும் பெருஞ்சுடர் மதியா என்று திகைத்து அவை மற்ற விண்மீன்களைக் கலந்து கொள்ளத் திரிவதாகச் சொல்லலாம். அவ்வாறின்றி மினுக்கி மினுக்கிச் சுடர்விடுவதைக் கூறுகின்றது என்று பொருள் கொண்டால் மதிக்கும் முகத்திற்கும் வேறுபாடு புரியாமல் திகைத்து இமைக்கின்றன என்று கூறலாம்.

பதியில் கலங்கிய மீன் என்பது உண்மை நிகழ்ச்சி ஆதலால் அதனை இங்கே கூறியதன் மூலம் மதியும் இவள் முகமும் ஒன்றே என்பதும் உண்மை என்று காட்டினான் காதலன் என்கிறார் உரையாசிரியர் மணக்குடவர்.

***

அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல
மறு உண்டோ மாதர் முகத்து.

தேய்ந்தும் பின்னர் அந்த தேய்ந்த இடத்தில் நிறைந்தும் கிடக்கும் மதிக்கு இருப்பது போல மறு இந்தப் பெண்ணின் முகத்தில் உண்டா? இல்லையே!

அறுவாய் நிறைந்த - குறைந்த இடத்தில் நிறைவுற்ற

அவிர்மதிக்கு - முழுமதிக்கு

போல - இருப்பதைப் போல்

மறு உண்டோ மாதர் முகத்து - இந்தப் பெண்ணின் முகத்தில் மறு உண்டோ?

இந்தப் பெண்ணின் முகத்தையும் நிலவையும் கண்டு குழம்பி நிலை தடுமாறுகின்றன இந்த விண்மீன்கள். ஏனென்று புரியவில்லை. இந்த நிலவு தேய்வதும் வளர்வதுமாக இருக்கிறது. இந்தப் பெண்ணின் முக அழகு அப்படியில்லையே! பின் ஏன் இந்த விண்மீன்களுக்கு இந்தத் தடுமாற்றம்? அது மட்டுமா அந்த நிலவில் இருக்கும் களங்கம் இந்தப் பெண்ணின் முகத்தில் இல்லையே! இவ்வளவு வேறுபாடுகள் இருந்தும் இந்த விண்மீன்கள் தடுமாறுவது ஏன்?

***

மாதர் முகம் போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி.

இந்தப் பெண்ணின் முகத்தைப் போல் என்றும் தேய்வின்றியும் மறுவின்றியும் ஒளிவிட உன்னால் முடியும் என்றால் நீ வாழ்க நிலவே! நீயும் என் காதலுக்கு உரியவள்.

மாதர் முகம் போல் - இந்தப் பெண்ணின் முகம் போல்

ஒளிவிட வல்லையேல் - ஒளி வீசும் திறமை கொண்டிருந்தால்

காதலை - என் காதலுக்கு உரியவள் (நீ)

வாழி மதி - நீ வாழ்க நிலவே!

இந்தப் பெண்ணின் முகத்தைப் போல் என்றும் ஒரே தன்மையுடையதாய் ஒளி வீசிக் கொண்டிருந்தால் நீயும் என் காதலுக்கும் வாழ்த்துக்கும் உரியவள் நிலவே. இல்லையென்றால் என் காதலையும் வாழ்த்தையும் நீ இழக்கிறாய்.

இந்தப் பெண்ணை காதலித்து விட்டு நிலவை நோக்கியும் இந்தக் காதலன் நீ என் காதலுக்கு உரியவள் என்று கூறுகிறானே என்றால் இவளைப் போல் குறைவின்றி அந்த நிலவு இல்லையே; அதனால் இவளன்றி வேறு எவரையும் இந்தக் காதலன் காதலிக்க இயலாது என்று குறிப்பாகச் சொன்னான்.

***

மலர் அன்ன கண்ணாள் முகம் ஒத்தியாயின்
பலர் காணத் தோன்றல் மதி.


மலர் போன்றக் கண்கள் உடைய இவள் முகத்திற்கு ஒப்பாக இருக்கும் ஆசை உனக்கு இருந்தால், நிலவே, பலரும் காணும் படி தோன்றாதே.

மலர் அன்ன கண்ணாள் - மலர் போன்ற கண்களையுடையவள்

முகம் ஒத்தியாயின் - முகத்தை ஒத்து இருக்க வேண்டுமெனில்

பலர் காணத் தோன்றல் - பலரும் காணும் படி தோன்றாதே

மதி - நிலவே

இங்கே மலர் என்றது குவளையாகவும் சொல்லலாம் தாமரையாகவும் சொல்லலாம். அழகாக செவ்வரி ஓடி இருக்கும் கண்ணைத் தாமரைக்கண் என்றும் கரிய பெரிய கண்களை குவளைக்கண் என்றும் சொல்வதுண்டு.

நிலவே நீ ஒளியிலும் வடிவிலும் இவள் முகத்தை ஒத்திருந்தாலும் தேய்தல், மறு என்னும் குறைகள் உன்னிடம் இருக்கின்றன. அதனால் இவள் முகத்தை ஒத்தவள் என்ற பெயர் உனக்கு நிலைக்க வேண்டும் என்றால் எல்லோரும் காணும் படி தோன்றாதே. அப்படித் தோன்றினால் நீ இவள் முகத்திற்கு ஈடாக முடியாமல் தோற்றுப் போவாய்.

நிலவே. நீ ஒளியிலும் வடிவிலும் இவள் முகத்தை ஒத்து இருக்கலாம். ஆனால் இவளுக்கு மலர் போன்ற கண்கள் இருக்கின்றன. உனக்கு அவை இல்லை. அதனால் இவள் முகத்தை ஒத்தவள் என்ற பெயர் உனக்கு வேண்டுமென்றால் எல்லோரும் காணும் படி தோன்றாதே. அப்படித் தோன்றி உன் குறையைக் காட்டாதே.

நிலவே நீ ஒளியிலும் வடிவிலும் இவள் முகத்தை ஒத்திருந்தாலும் இன்னொரு வகையில் இவள் முகத்திற்கு ஒப்பாக மாட்டாய். இவள் முகம் நான் மட்டுமே கண்டு இன்புற்றது. நீயோ பொது மகள் போல் எல்லோரும் காணத் தோன்றுகிறாய். அதனால் இவள் முகத்திற்கு ஒப்பாக மாட்டாய். அப்படி இவள் முகத்திற்கு ஒப்பாக வேண்டும் என்ற ஆசை இருந்தால் நான் மட்டுமே காணும் படி தோன்றுவாய்; பலரும் காணும் படி தோன்றாதே.

***

அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்

மிக மெல்லியதென்று புலவர்கள் கூறும் அனிச்சம்பூவும் அன்னத்தின் வெள்ளிய சிறகும் இந்தப் பெண்ணின் மென்மையான கால்களுக்கு நெருஞ்சிமுள்ளினைப் போன்றவை.

அனிச்சமும் - அனிச்சம்பூவும்

அன்னத்தின் தூவியும் - அன்னப்பறவையின் தூய்மையான சிறகும்

மாதர் அடிக்கு நெருஞ்சிப்பழம் - இந்தப் பெண்ணின் கால்களுக்கு முற்றிய நெருஞ்சி முள்ளினைப் போன்றவை.

இவள் பாதங்கள் மிகவும் மென்மையானவை. மோந்தாலே குழையும் என்று சொல்லப்படும் அனிச்சம் பூவும் மிக மிக மென்மையான அன்னச்சிறகும் இவள் அடிகளை நோக வைக்கும். அப்படிப்பட்டவளை அழைத்துக் கொண்டு காட்டுவழியே செல்லச் சொல்கிறாயே தோழியே. அங்கே உண்மையாகவே நெருஞ்சி முற்கள் இருக்குமே.

***

இந்த இடுகையில் இருக்கும் விளக்கங்கள் எல்லாம் பரிமேலழகர், மணக்குடவர், தேவநேயப்பாவாணர் என்ற மூவரின் உரைகளைத் தழுவி எழுதப்பட்டவை. அவர்கள் சொல்லாத ஆனால் பொருத்தமெனத் தோன்றுகின்ற விளக்கங்களையும் சொல்லியிருக்கிறேன். அவற்றையும் கண்டுபிடித்துச் சுவைக்க வேண்டுகிறேன். :-)

2 comments:

  1. 4 comments:

    pathykv said...
    "kanDu piDittu"
    yaar kanDu piDikkappOkiraargal?
    K.V.Pathy

    October 11, 2008 4:27 AM
    --

    குமரன் (Kumaran) said...
    தொடர்ந்து நான் கிறுக்குபவற்றைப் படிக்கும் யாராவது கண்டுபிடிப்பார்கள் என்று தான் அப்படி சொன்னேன் பதி ஐயா. :-)

    October 11, 2008 4:30 AM
    --

    கவிநயா said...
    இப்பதான் இந்தப் பக்கம் வந்தேன் முதன்முறையா. நல்லாருக்கு விளக்கங்கள். மத்தவங்க உரையெல்லாம் படிச்சிருந்தாதானே நீங்க என்ன சேர்த்திருக்கீங்கன்னு தெரியும்? அதனால எனக்கு தெரியல :(

    October 11, 2008 8:32 AM
    --

    குமரன் (Kumaran) said...
    வருடத்துக்கு ஒரு இடுகைன்னு எழுதுனா நீங்க எப்படி இந்தப் பக்கம் வர முடியும்? :-)

    தேடிப் பாருங்க அக்கா. என்னோட 'இடைச்செருகல்' என்னன்னு தெரியும். :)

    October 11, 2008 8:57 AM

    ReplyDelete
  2. 'ஐயன் வள்ளுவனின் இன்பத்துப் பால்' பதிவில் இருந்த இடுகைகளை எல்லாம் இங்கே எடுத்து இட்டுவிட்டேன். இனி எப்போது நேரம் கிடைக்கும் போது அடுத்த அதிகாரங்களைப் படித்து எழுதுகிறேன். நன்றி.

    ReplyDelete