Friday, March 19, 2010

இன்பத்துப் பால்: நலம் புனைந்துரைத்தல் - 1

தலைவன் தலைவியின் அழகைப் பாராட்டிக் கூறுதல் இந்த அதிகாரத்தின் பொருள். இது சாதாரணமாக புணர்ச்சியின்பத்தின் பிறகு அளவில்லா மகிழ்ச்சியோடும் அடக்க முடியாத உணர்ச்சிகளோடும் நிகழ்வது இயற்கை. அதனால் இந்த அதிகாரத்தை 'புணர்ச்சி மகிழ்தல்' அதிகாரத்தின் பின் வைத்தார் வள்ளுவர் பெருமான்.

***

நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம் வீழ்பவள்

அனிச்ச மலரே! சிறிதே மோந்துப் பார்த்தாலும் குழைந்து போவாய் நீ! அவ்வளவு மெல்லியவள் நீ என்று உலகத்தவர் சொல்லுவார்கள். நீயே மென்மையில் சிறந்தவள் என்ற செருக்கினைக் கொள்ளாதே. உன்னைவிட மென்மையானவள் ஒருத்தி இருக்கிறாள். அவள் நான் விரும்பும் என் காதலி.

நன்னீரை வாழி அனிச்சமே - அனிச்சமே நீ நல்லதொரு மென்மைக்குணத்தைக் கொண்டவள்; நீ வாழ்க.

நின்னினும் - ஆனால் உன்னை விட

மெல் நீரள் யாம் வீழ்பவள் - மென்மைக் குணம் கொண்டவள் யாம் விரும்பும் பெண்.

இங்கே சொன்ன மென்மைக்குணம் அனிச்சத்திற்கு புற மென்மையாக இருக்க தலைவிக்கோ அகமும் புறமும் மென்மை என நின்றது. அவள் மென்மையான குணத்தைக் கொண்டவள். மென்மையான உடலையும் கொண்டவள். இங்கே புணர்ச்சிக்குப் பின்னர் கூறுவதால் உடல் மென்மையைப் பெரிதும் பேசினான் தலைவன் என்று கொள்ளுதலும் தகும்.

அஃறிணையான அனிச்சம் பூ இவன் சொல்வதைக் கேட்கப் போவது போலும், சொல்வதைக் கேட்டுப் பதில் சொல்லப் போவது போலும் தலைவன் பேசுவது புணர்ச்சிக்குப் பின்னர் எழுந்த உணர்ச்சி வேகத்தால் வந்த மயக்கமாம்.

***

மலர் காணின் மையாத்தி நெஞ்சே இவள் கண்
பலர் காணும் பூ ஒக்குமென்று


நெஞ்சமே! இவளை விலகி நின்று பார்த்து மகிழ்ந்திருந்த காலத்தில் எல்லாம் பலரும் கண்டு மகிழும் தாமரை, குவளை போன்ற பூக்களைக் காணும் போதெல்லாம் இவள் கண்களைப் போல் அம்மலர்கள் இருக்கின்றன என்று சொல்லிக் கொண்டிருந்தாய். இன்று அவளை மிக அருகில் பார்த்து மகிழ்ந்த பின்னர் தானே தெரிகிறது இவள் கண்களுக்கு அம்மலர்கள் ஒப்புமை ஆகாது என்று. இனி மேலாவது அப்படி ஒப்பு கூறி மயங்காதே.

மலர் காணின் மையாத்தி நெஞ்சே - நெஞ்சமே! மலரைக் காணும் போது மயங்கி விடாதே

இவள் கண் பலர் காணும் பூ ஒக்குமென்று - இவளுடைய கண் பலரும் கண்டு மகிழும் பூக்களை ஒக்குமென்று சொல்லி.

இது நெஞ்சோடு கிளத்தல் ஆகும். அம்மலர்கள் பலரும் நெருங்கிச் சென்றுக் கண்டு இன்புன்று மகிழலாம்; ஆனால் இவள் கண்களோ தலைவன் மட்டுமே நெருங்கிக் கண்டு இன்புற்றவை - என்ற குறிப்பும் இங்கே இருக்கின்றது. அந்த வகையாலும் அம்மலர்கள் இவள் கண்களுக்கு ஒப்புமை ஆகா.

***

முறி மேனி முத்தம் முறுவல் வெறி நாற்றம்
வேல் உண்கண் வேய்த்தோளவட்கு


பச்சை மூங்கிலைப் போன்ற தோள்களை உடைய என் காதலிக்கு உடம்பு மாந்தளிர் போன்று மிக மெல்லியது; மாந்தளிர் போன்ற நிறமும் கொண்டது. புன்னகையோ முத்தினை ஒத்தது. அவள் உடலில் எழும் இயற்கையான நாற்றமும் (வாசனையும்) நறுமணமாக இருக்கின்றது. அவள் மை தீட்டிய கண்களோ வேலினைப் போல் உள்ளன.

முறி மேனி - உடல் மாந்தளிர் போன்றது (நிறத்தாலும் குணத்தாலும்)

முத்தம் முறுவல் - பல்லோ (புன்னகையோ) வெண்மையான முத்தினைப் போன்றது.

வெறி நாற்றம் - அவள் உடலில் எழும் மணம் நறுமணம்

வேல் உண்கண் - மையினை உண்ட கரிய கண்கள் வேல் போல் கூர்மையானவை

வேய்த் தோளவட்கு - மூங்கிலைப் போன்ற தோள் அவளுக்கு.

***

காணில் குவளை கவிழ்ந்து நிலன் நோக்கும்
மாணிழை கண் ஒவ்வேம் என்று


இந்தக் குவளைப் பூக்களுக்குக் காணும் கண்கள் மட்டும் இருந்தால் மாண்பு மிகுந்த அணிகலங்களை அணிந்த என் காதலியின் கண்களுக்குத் தாங்கள் ஒப்புமை ஆக மாட்டோம் என்று உணர்ந்து நாணி தலை கவிழ்ந்து நிலம் நோக்கியிருக்கும். அவற்றிற்குக் காணும் கண்களும் இல்லை; இவளைப் போன்ற நாணமும் இல்லை. அதனால் தான் அவை தலை நிமிர்ந்து நிற்கின்றன.

இயற்கையாகத் தலை நிமிர்ந்து நிற்கும் குவளை மலர்களைப் பார்த்து இப்படித் தன் கருத்தினை ஏற்றித் தலைவன் கூறுவது தற்குறிப்பேற்ற அணி.

காணில் குவளை கவிழ்ந்து நிலன் நோக்கும் - கண்கள் இருந்து காணில் குவளைப் பூக்கள் தலை கவிழ்ந்து நிலத்தை நோக்கி நிற்கும்

மாணிழை - மாண் + இழை; மாண்புடைய, அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த நகைகளை அணிந்து கொண்டிருக்கும் இந்தப் பெண்ணின்

கண் ஒவ்வேம் என்று - கண்களுக்கு ஒப்பாக மாட்டோம் என்று.

***

அனிச்சப்பூக் கால் களையாள் பெய்தாள் நுசிப்பிற்கு
நல்ல படாஅ பறை


ஆகா! இவள் என்ன காரியம் செய்தாள்? தன்னுடைய மென்மை இவள் அறியவில்லை போலிருக்கின்றதே! அனிச்சப்பூ என்ன தான் மென்மையான பூவாக இருந்தாலும் இப்படியா இவள் அதன் காம்பினை நீக்காமல் அணிந்து கொள்வாள். இந்தக் காம்புகளின் சுமையால் இவள் இடை இனி ஒடிந்து விடும். அந்த இடைக்கு இனி மங்கலப் பறை எதுவும் முழங்காது; அமங்கலப் படை தான் முழங்கும்.

அனிச்சப்பூக் கால் களையாள் பெய்தாள் - அனிச்சப்பூக்களின் காம்பினை எடுக்காமல் கூந்தலில் சூடிக் கொண்டாள்

நுசிப்பிற்கு - இவள் இடைக்கு

நல்ல படாஅ பறை - நல்ல பறை இனி மேல் முழங்காது

மக்கள் வாழும் போது மங்கலப் பறைகள் முழங்கும். அவர்கள் சாகும் போது அமங்கலப் பறை முழங்கும். இங்கே இடை இனி ஒடிந்து விடும் என்பதை நல்ல பறை இனி இந்த இடைக்கு ஒலிக்காது என்று சொல்வதன் மூலம் தலைவன் கூறுகிறான்.

தலைவியின் இடை இவ்வளவு மெல்லியது என்று சொல்ல விரும்பி அது ஒடிந்து விடும் என்று இடையின் மென்மையைப் பெரிது படுத்திக் கூறியதால் இது உயர்வு நவிற்சி அணி.

***

இந்த இடுகையில் இருக்கும் விளக்கங்கள் எல்லாம் பரிமேலழகர், மணக்குடவர், தேவநேயப் பாவாணர் என்ற மூவரின் உரைகளைத் தழுவி எழுதப்பட்டவை. இந்த ஐந்து குறட்பாக்களுக்கும் மூவர் உரையும் ஏறக்குறைய ஒன்றே போல் இருக்கின்றன. ஒருவர் சொன்னதை மற்றவர் மறுக்கவில்லை. வேறு பொருளும் கூறவில்லை.

5 comments:

  1. 20 comments:

    குமரன் (Kumaran) said...
    சோதித்துத் தான் பார்க்கிறேனே!

    November 22, 2007 6:35 PM
    --

    கோவி.கண்ணன் said...
    //இந்தக் காம்புகளின் சுமையால் இவள் இடை இனி ஒடிந்து விடும். //

    குமரன்,
    :))
    சிரிக்க முடியவில்லை. அப்படி கொடி இடையுடன் இருந்தால் அதன் பிறகு குழந்தையை வயிற்றிலும், பின் இடுப்பில் (இடையில்) சுமப்பது எப்படி ?

    மிஸ்டர் திருவள்ளுவர் இட் ஈஸ் டூ மச் !
    :))

    November 22, 2007 7:10 PM
    --

    குமரன் (Kumaran) said...
    நீங்க வேற கோவி.கண்ணன். மிஸ்டர் திருவள்ளுவராவது இடை இருக்கு; முறிந்துவிடும் என்றாவது சொல்கிறார். மிஸ்டர் கண்ணதாசன் இடையே இல்லை என்று தானே சொன்னார் - இடையோ இல்லை இருந்தால் என்று ஐயமாகத் தான் பாடினார். அடுத்து மிஸ்டர் குமரன் எழுதுன முதல் புதுக்கவிதையில உங்களுக்குப் பிடிச்ச சப்ஜெக்டை எழுதுனார்.

    கடவுளும் அவள் இடையும் ஒன்று
    சிலர் உண்டென்பர்
    சிலர் இல்லையென்பர்

    இப்பக் கூட ஒரு பாட்டுல 'இடையினம் தேடி இல்லை என்றேன்' என்று வருதே. இவங்களை எல்லாம் பாக்குறப்ப மிஸ்டர் திருவள்ளுவர் லாட் பெட்டர்.

    November 22, 2007 8:59 PM
    --

    கோவி.கண்ணன் said...
    இடையோ இல்லை இருந்தால் என்று..

    கடவுளும் அவள் இடையும் ஒன்று
    சிலர் உண்டென்பர்
    சிலர் இல்லையென்பர்//

    இடையைப் பற்றி(ய) மூன்று விடைகள் (காளைகள்) சொல்லி இருப்பது, நகைச்சுவைதான்.

    November 22, 2007 9:36 PM
    --

    கோவி.கண்ணன் said...
    இடையை இவ்வளவு சிறுசா சொல்லி இருக்கிறார்கள் அதே போன்று மத்த மத்த சமாச்சாரத்தையெல்லாம் (நன்றி பாக்கியராஜ்) பெருசா அதாவது 'பருத்த' என்ற அடைமொழியுடன் சொல்லி இருக்கிறார்கள்.

    பொய்யுரைப்போர் புலவர்.

    November 22, 2007 9:40 PM
    --

    குமரன் (Kumaran) said...
    கோவி.கண்ணன். நீங்களும் இந்த மாதிரி பொய் சொல்லிப் பாருங்கள். புலவரும் ஆகலாம். கை மேல் பயனும் கிடைக்கும் (அடி கிடைக்கும் என்று சொல்லவில்லை).

    ஆனால் இடையைப் பற்றி மட்டும் இனி மேல் சொல்லாதீர்கள். அது பொய் என்பது மிக நன்றாகத் தெரிந்து போய் விட்டது. வேறு புதிய பொய்களை இனிமேல் சொல்லவேண்டும். :-)

    November 22, 2007 9:43 PM
    --

    சிவபாலன் said...
    குமரன்

    உங்கள் பதிவுகளை முடிந்த வரை படித்துவிடுகிறேன்.

    இனி பின்னூடமும் இட முயல்கிறேன்.

    இந்த பதிவு மிக நல்ல பதிவு( அனைத்து இடுக்கைகளும்).

    மற்ற இடுக்கைகளையும் படித்துவிட்டு பின்னூடமிடுகிறேன்.

    தொடரட்டும் உங்கள் சேவை!

    மிக்க நன்றி!

    November 24, 2007 9:06 AM
    --

    G.Ragavan said...
    குமரன் ஒவ்வொரு குறளையும் ரசித்து ருசித்துப் படித்தேன். அனுபவித்து எழுதியிருக்கிறார் வள்ளுவர்.

    அதெப்படி உரையாசிரியர்கள் வேறுபடுவார்கள்? இது என்ன கடவுளா? காதலய்யா காதல்...அதான் அனைவரும் ஒன்றையே சொல்லியிருக்கிறார்கள். :)))))))

    முறிமேனி என்பதற்கு மாந்தளிர் போல என்று சொல்லலாமா என்று தெரியவில்லை. முறுவலான மேனி என்று சொல்லலாமா? பாத்தா அப்படியே சரவணபவன் தோசை மாதிரி மினுமினுன்னு இருப்பாய்யான்னு சொல்ற மாதிரி. ஆப்பிள் பழம் மாதிரி...அல்வாத்துண்டு மாதிரீன்னு பொலம்புற மாதிரி போல.

    முத்தம் முறுவல் நான் மிகவும் ரசித்த உவமை. முத்தைத் தரு பத்தித் திருநகையை வள்ளுவரும் ரசிச்சிருக்காரூய்யா.

    பித்தத்தைக் கொடுக்கும்
    முத்தத்தைக் கொடுத்தாள்
    மொத்தத்தையும் கொடுத்தேன் அப்படீன்னு எழுத வைக்கிறது இந்தக் குறள்கவிதைகள்.

    November 25, 2007 2:44 PM
    --

    G.Ragavan said...
    // கோவி.கண்ணன் said...
    //இந்தக் காம்புகளின் சுமையால் இவள் இடை இனி ஒடிந்து விடும். //

    குமரன்,
    :))
    சிரிக்க முடியவில்லை. அப்படி கொடி இடையுடன் இருந்தால் அதன் பிறகு குழந்தையை வயிற்றிலும், பின் இடுப்பில் (இடையில்) சுமப்பது எப்படி ?

    மிஸ்டர் திருவள்ளுவர் இட் ஈஸ் டூ மச் !
    :)) //

    கோவி...நீங்க சரியாப் புரிஞ்சிக்கலை. ஹி ஹி..இடை சாதாரணமாத்தான் இருக்கு. அதாகப்பட்டது அதாகப்பட்டதுகள் பெருசா இருக்கு. அத எப்படித் தாங்குது இதுன்னு இவருக்கு டவுட்டு. நீங்க அப்படியே அப்பாவியா பொருள் எடுத்துக்கிட்டீங்க போல.

    November 25, 2007 2:46 PM
    --

    ReplyDelete
  2. CVR said...
    ஜிராவின் பதிவில் இருந்து வந்தேன்!!
    அருமையாக இருக்கிறது உங்கள் பதிவு!!

    ஒவ்வொரு இடுகையயும் விரும்பி படித்தேன். தொடரட்டும் உங்கள் சேவை!! :-)

    November 26, 2007 1:56 PM
    --

    cheena (சீனா) said...
    நண்ப, குமர, குறளமுதம் அருமை. விளக்கங்கள் எளிமை. பின்னூட்ட விவாதப் பொறுமை வழக்கம் போல்.
    வாழ்த்துகள்.

    November 26, 2007 5:14 PM
    --

    குமரன் (Kumaran) said...
    முடிந்த வரை எல்லா இடுகைகளையும் படித்துவிடுகிறீர்கள் என்று தெரியும் சிவபாலன். மிக்க நன்றி. பின்னூட்டம் இடாவிட்டாலும் பரவாயில்லை.

    November 26, 2007 7:20 PM
    --

    குமரன் (Kumaran) said...
    இல்லையா பின்னே?! இந்த இடுகையைப் படித்த விளைவு தான் 'காதல் குளிர்' பத்தாம் பாகத்தில் வெளிப்பட்டதோ? :-) வள்ளுவரும் அனுபவித்து எழுதியிருக்கிறார். நீங்களும் இரசித்து உருசித்துப் படித்து உங்கள் இடுகையிலும் எழுதிவிட்டீர்கள். :-)

    இன்பத்துப் பாலில் உரையாசிரியர்கள் முரண்படுவதில்லை தான் போலும். இன்பத்துப் பால் நிறைவு பெற்ற பின் மற்ற இரண்டு பால்களையும் உரையாசிரியர்களின் உதவியோடு படிக்க வேண்டும். அங்கே முரண்பாடுகள் தென்படுமோ என்னவோ?!

    முறி என்பதற்கு மாந்தளிர் என்ற பொருள் தான் எல்லா உரையாசிரியர்களும் கொடுத்திருக்கிறார்கள் இராகவன். நானும் உரையின்றிப் படித்த போது முறிந்து போகும் மேனி என்று பொருள் கொண்டேன். நிறத்தாலும் தன்மையாலும் மாந்தளிர் போன்றவள் என்று உரையாசிரியர்கள் சொல்கிறார்கள். முறி என்ற சொல் ஓலைச்சுவடியையும் (ஏடு) குறிக்கும் என்று நினைக்கிறேன்.

    நீங்கள் முத்தத்திற்கு சித்தம் மட்டும் கொடுப்பீர்கள் என்று தான் நினைத்தேன். மொத்தத்தையும் தந்துவிட்டீர்களா? சரி தான்.

    November 26, 2007 7:20 PM
    ---


    குமரன் (Kumaran) said...
    இராகவன். கோவியாரும் பெருத்த தனங்களைப் பற்றிச் சொல்லியிருக்கிறாரே. 'இனி இங்கிது கண்டுலகென்படும் என்படும் என்றிடை திண்டாட' மலர் பங்கய மங்கை வசந்த சவுந்தரி தான் பந்து பயின்றாள். குறள்நாயகி மலர்க்காம்பின் பாரம் கூடத் தாங்காதவள் என்று தான் வள்ளுவர் சொல்கிறார்.

    November 26, 2007 7:20 PM
    ---

    குமரன் (Kumaran) said...
    இராகவன் பதிவில் இட்ட விளம்பரத்தைப் பார்த்து வந்ததற்கு நன்றி cvr. முடியும் போதெல்லாம் இந்தப் பதிவையும் மற்ற பதிவுகளையும் படித்து உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்.

    November 26, 2007 7:20 PM
    --

    குமரன் (Kumaran) said...
    பாராட்டுகளுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி சீனா ஐயா.

    November 26, 2007 7:21 PM
    --

    அகரம்.அமுதா said...
    அய்யா குமரன் அவர்களே! தங்களின் இன்பத்துப் பாலுக்கான விளக்கங்கள் அருமை. என்னை வியக்க வைக்கிறது. -அகரம்.அமுதா

    June 06, 2008 5:49 AM
    --

    குமரன் (Kumaran) said...
    வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றிகள் அகரம்.அமுதா.

    June 06, 2008 5:59 AM
    --

    Arul said...
    வள்ளுவனின் காமத்துப்பாலுக்கு உங்களுடைய விளக்கம் மிக அருமை...வார்த்தைக்கு வார்த்தை விளக்கம் மிக பயனுடையதாக உள்ளது.உங்களுடைய இந்த பதிவை சேமித்து வைத்து திரும்ப திரும்பப் படிக்கின்றேன்......எத்தனை முறைப் படித்தாலும் சலிக்காமல் சுவையூட்டக்கூடியதாக உள்ளது....
    உங்கள் சேவைக்கு மிக்க நன்றி....

    September 22, 2008 11:58 PM
    --

    குமரன் (Kumaran) said...
    நன்றி அருள். இந்தப் பதிவில் எழுதி ஏறக்குறைய ஒரு வருடம் ஆகிவிட்டது. விரைவில் அடுத்த இடுகையை இடவேண்டும் என்ற எண்ணத்தை உங்கள் பின்னூட்டம் தந்திருக்கிறது. :-)

    September 27, 2008 1:17 PM

    ReplyDelete
  3. எவரி காயின் ஹாஸ் டூ ஸைட்ஸ் என்பார்கள்.

    பிர பந்தங்கள் எல்லாம் நினைவுக்கு வரும்போது
    பிரபந்தங்கள் மறந்து போகின்றன.

    இன்பத்துப்பால்
    இடை இடையே
    படியுங்கள்.
    தடையில்லை. அதுவே என்று
    அகமகிழ்ந்து போய்விட்டால்
    ஆன்மீகம் மறந்து போம் ‍ = ஒரு
    அல்ப்ராக்ஸ் உண்ப‌வன் போல்
    அடிக்ஷனும் ஆகிவிடும் .

    உப்பு வேண்டியதுதான் எனினும்
    உப்பே உணவாகிடுமோ !!

    விடுக இப்போக்க‌தனை
    கடுகியே சென்று கால நேரம் தாழ்த்தாமல்,
    எதற்கும் இருக்கட்டும் கைவசம் என்று
    திவா ஸார் பதிவினிலே
    எந்நோய் தீரவும் மருந்தொன்று இருக்கிறதாம்.

    http://anmikam4dumbme.blogspot.com/2010/03/10.html

    சுப்பு ரத்தினம்.

    லைட்டர் வைனில் சொன்னேன் நான்.
    ஃபைட் பண்ண வரவேண்டாம்.




    .

    ReplyDelete
  4. // பிர பந்தங்கள் நினைவு ....//

    " பிற பந்தங்கள்..." என்று இருக்கவேண்டும்.
    அச்சுப்பிழை.

    நிற்க.
    ஒன்று சொல்ல மறந்துவிட்டேன்.

    உறுத்திக்கொண்டே இருப்பதால்,
    உடனே சொல்லிவிடுகிறேன்.

    அறத்துப்பால் எழுதிப்பின்
    பொருட்பாலும் எழுதியபின்னே
    ஆடியன்ஸ் கிடைக்காததால் தான்
    பொய்யா மொழியான்
    இன்பத்துப்பால் எழுதினாரோ ?

    ஆய்வாளர்களே அறிவர்.

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  5. ஐயா. தங்களின் நல்லெண்ணங்களுக்கு நன்றி. முன்பு எழுதியவற்றையே இங்கே எடுத்து இட்டேன். தொடர்ந்து காமத்துப் பாலில் மூழ்கிவிடவில்லை. இப்போது பாரதியாரின் பாடல்களைப் பற்றி எழுதிய இடுகைகளை 'பாட்டுக்கொரு புலவன் பாரதி' பதிவில் இருந்து இங்கே எடுத்து இட்டுக் கொண்டிருக்கிறேன். வருங்காலத்தில் நேரம் கிடைக்கும் போது மீண்டும் இன்பத்துப்பாலைப் படித்து எழுத எண்ணியிருக்கிறேன்.

    அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நால்பயன்களில் வீட்டுப்பயனைப் பாயிரத்தில் பாடிவிட்டு மற்ற முப்பயன்களை முப்பாலாகப் பாடினார் பொய்யாமொழியார் என்று புலவர்கள் சொல்வார்கள்.

    ReplyDelete