"நல்லா இருக்கேன் குமரன். எம்பெருமானார் வாழித் திருநாமத்தை எழுதி இரண்டு வாரத்திற்கு மேலாகிறதே. கூரத்தாழ்வானுடைய ஆயிரமாவது ஆண்டு நிறைவும் வந்துவிட்டது. இன்னும் அடுத்த பகுதி எழுதவில்லையே. ஏன்?"
"எம்பெருமானார் திவ்ய சரிதத்தைப் போல் கூரத்தாழ்வான் திவ்ய சரிதமும் எழுதிக் கொண்டே இருக்கலாம் போல் இருக்கிறது இராகவ். எதை எழுதுவது, எதை விடுவது என்று குழப்பமாக இருக்கிறது. அதனால் தான் தாமதம்".
"இதற்கு ஒரு வழி இருக்கிறது குமரன். வாழித் திருநாமத்தில் எந்த நிகழ்ச்சிகளைக் குறித்திருக்கிறார்களோ அதனை மட்டும் சொல்லுங்கள்".
"என் குழப்பத்தை நீக்க அது ஒரு நல்ல வழி தான் இராகவ். அந்தப் பாடல் சொல்லும் நிகழ்ச்சிகள் என்ன என்று தொடர்ச்சியாக நீங்களே சொல்லுங்கள்".
"கூரத்தாழ்வான் பெருமையைப் பேசக் கசக்குமா? கட்டாயம் சொல்கிறேன் குமரன்."
***
இன்றையிலிருந்து (3-Feb-2010)சரியாக ஆயிரம் வருடங்களுக்கு முன். சௌம்ய வருடம் (1010 CE), தை மாதம், ஹஸ்த நட்சத்திரம். காஞ்சிபுரத்திற்கு அருகில் இருக்கும் கூரம் என்ற ஊரில் வைணவத் தத்துவங்களை நிலை நாட்ட இவ்வுலகில் அவதரிக்கப் போகும் இராமானுசருக்கு அருந்துணையாக விளங்கப் போகும் ஒரு குழந்தை பிறந்தது. குழந்தைக்குத் திருமறுமார்பன் என்று பெயர் வைத்தார்கள். அத்திருப்பெயரை வடமொழியில் ஸ்ரீவத்ஸாங்க மிஸ்ரர் என்றும் சொல்வார்கள். பிற்காலத்தில் கூரத்தைச் சேர்ந்த ஆழ்வான் என்ற பொருளில் கூரத்தாழ்வான் என்ற திருப்பெயரே இக்குழந்தைக்கு நின்றது.
காஞ்சியில் இராமானுசர் தனது முப்பத்திரண்டாவது வயதில் வரதராசப் பெருமாளிடம் 'எதிராசர்' என்ற திருநாமத்துடன் கூடிய துறவினைப் பெற்றுத் திருக்கச்சி நம்பிகளால் ஒரு திருமடம் ஏற்படுத்தப்பட்டு அங்கே வாழ்ந்து வரும் போது கூரத்தில் வாழ்ந்த கூரத்தாழ்வான் அச்செய்தியை அறிந்து காஞ்சிபுரம் வந்து எதிராசரின் சீடரானார். வரதராசப் பெருமாள் திருவரங்கப் பெருமாளுக்கு இராமானுசரைத் தந்த போது, எதிராசருடன் கூரத்தாழ்வானும் அவரது தேவியாரான ஆண்டாளும் திருவரங்கம் வந்து சேர்ந்தனர். எப்போதும் இராமானுசரை விட்டுப் பிரியாமல் அவருடனே எங்கும் எப்போதும் இருந்தார் கூரத்தாழ்வான். இராமானுசரும் கூரத்தாழ்வானைப் பற்றிய நினைவினை எப்போதும் கொண்டிருந்தார். திருக்கோட்டியூர் நம்பிகளிடம் திருமந்திர உட்பொருளைக் கேட்கும் போது கூரத்தாழ்வானையும் முதலியாண்டனையும் கூட அழைத்துச் சென்றார். பிறிதொரு முறை திருக்கோட்டியூர் நம்பிகளிடம் சரம சுலோக உட்பொருளைக் கேட்கும் போது அவர் 'இதனை யாருக்கும் சொல்லக்கூடாது' என்று நிபந்தனை இட்ட போது, கூரத்தாழ்வானுக்கு மட்டும் சொல்ல அனுமதி பெற்றார். இப்படி ஒருவருக்கொருவர் மிகவும் அன்யோன்யமாக, அனந்தாழ்வானும் எம்பெருமானும் போல், இராமானுசரும் கூரத்தாழ்வானும் இருந்தார்கள்.
***
ஒரு முறை இராமானுசரின் ஆசாரியரான பெரிய நம்பிகள் இராமானுசரின் திருமடத்திற்கு வந்தார்.
"இளையாழ்வாரே. எனக்கு ஒரு உதவி வேண்டும்".
"சுவாமி. தேவரீர் கட்டளை எதுவோ அதனைத் தெரிவித்து அருள வேண்டும்".
"எம்பெருமானாரே. திவ்ய தேசங்களில் இருக்கும் பெருமாள் திருமேனிகளை எல்லாம் அகற்றிவிட்டால் வைணவ சமயம் அழிந்துவிடும் என்று எண்ணி அதற்கு முன்னர் அப்பெருமாள் திருமேனிகளில் இருக்கும் தெய்வ சாந்நித்யத்தை அழிக்க வேண்டும் என்று சில தீயவர்கள் முனைந்திருக்கிறார்கள். அதற்கு அரசனின் துணையும் இருக்கிறது. அதனைத் தடுக்க வேண்டும் என்றால் மந்திர பூர்வமாக சில கிரமங்களைச் செய்யவேண்டும். அதனைச் செய்ய நான் செல்கிறேன். அப்போது என் பின்னே ஒரு வித்வான் வர வேண்டும். அப்படி வந்தால் தான் அக்காரியங்கள் முழுப்பலனையும் தரும். அப்படி வருபவர் அனைத்துக் கல்வியும் பெற்றிருந்தாலும் இன்னொருவர் பின் செல்வதா என்று சிறிதும் எண்ணாதவராக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒருவரை நீர் என்னுடன் அனுப்ப வேண்டும்".
"சுவாமி. நம் குழாத்தில் அப்படிப்பட்டவர் யார் இருந்தாலும் அவரை நீங்களே தேர்ந்தெடுத்து அழைத்துக் கொள்ள வேண்டும்".
"உடையவரே. கூரத்தாழ்வானே அக்குணங்கள் எல்லாம் நிறைந்தவர். அவரைத் தர வேண்டும்".
குலப்பெருமை, செல்வப்பெருமை, கல்விப்பெருமை என்ற மூன்று குற்றங்களையும் கடந்த பெரும்புகழான் என்று கூரத்தாழ்வானை எல்லோரும் போற்றுவது உண்மை என்பது பெரிய நம்பிகள் கூரத்தாழ்வானைத் தேர்ந்தெடுத்ததில் நன்கு தெரிந்தது. குலப்பெருமையும் செல்வப்பெருமையும் கடத்தலே மிக அரிது. ஆனால் அவற்றைக் கடந்தவரும் உள்ளார்கள். அவற்றிலும் மிக அரிது கல்விப்பெருமையைக் கடப்பது. ஊரார் அறியாமல் அவரிடம் கல்வி கற்க வேண்டும் என்று வந்த கல்விப்பெருமை கூடிய ஒருவருக்கு ஒரு நூலைப் பயிற்றுவிக்கும் போது யாரோ அந்தப் பக்கம் வர, கற்க வந்தவரிடம் இருந்து நூலை வாங்கி வைத்துக் கொண்டு தான் அவரிடம் இருந்து கற்பதைப் போல் காட்டிக் கொண்ட கொஞ்சமும் கல்விப்பெருமை இல்லாத பணிவுக் குணம் மிக்கவர் கூரத்தாழ்வான்.
***
"கூரத்தாழ்வாரே. ஆளவந்தாரின் மனத்தில் இருந்த கடைசி ஆசைகளில் ஒன்று வேத வியாசர் எழுதிய பிரம்ம சூத்திரத்திற்குப் போதாயன ரிஷியின் குறிப்பு நூலான போதாயன விருத்தியின் அடிப்படையிலும் ஆழ்வார்களின் அருளிச்செயல்களின் அடிப்படையிலும் ஒரு பாஷ்யம் எழுத வேண்டும் என்பது. ஆழ்வார்களின் அருளிச்செயல்கள் நாதமுனிகளின் கருணையினால் நம்மிடம் இருக்கிறது. போதாயன விருத்தியோ காஷ்மீரத்தில் மட்டுமே தான் இருக்கிறது. அதனைப் பார்த்து குறிப்புகளை எடுத்துக் கொண்டு பாஷ்யம் எழுதலாம் என்று தான் நாம் இவ்வளவு தூரம் வந்தோம். அரசனின் அனுமதியையும் பெற்று நேற்று போதாயன விருத்தியைப் பெற்றோம். ஆனால் அதனை யாருக்கும் காட்டாமல் வைத்திருந்த வித்வான்கள் அரசனின் மனத்தை மாற்றி இன்று அதனை மீண்டும் எடுத்துக் கொண்டு சென்றுவிட்டார்களே? தெரிந்திருந்தால் முழு நூலையையும் நேற்றே படித்திருப்பேனே. இப்போது என்ன செய்வது?"
"சுவாமி. தேவரீர் வருந்த வேண்டாம். நேற்றிரவு அந்நூல் முழுவதையும் படித்துவிட்டேன்".
"ஆகா. அருமை அருமை. கூரத்தாழ்வாரே. நீர் ஏகசந்தகிராகியாயிற்றே. ஒரு முறை படித்தாலே முழுவதும் மனத்தில் நிறுத்திக் கொள்வீர். இனி கவலையில்லை. நாம் திருவரங்கம் சென்று அடைந்த பின்னர் பிரம்மசூத்திரத்திற்கு உரை எழுதத் தொடங்குகிறேன். ஏதேனும் ஐயம் வந்தால் உம்மிடம் கேட்கிறேன். போதாயன விருத்தி என்ன சொல்கிறது என்பதை அப்போது சொல்லும்".
"சுவாமி. தேவரீர் என் ஆசாரியன். உங்களுக்குத் தோன்றும் ஐயங்களைத் தீர்க்கும் அளவிற்கு அடியேன் அறிவுடையேன் இல்லை. அப்படி நினைத்தாலும் செய்ய முயன்றாலும் அது பெரும் தவறு".
"சரி. இப்படி செய்யலாம். நான் உரையைச் சொல்லச் சொல்ல நீர் எழுதும். எங்காவது நான் சொல்லும் பொருள் போதாயன விருத்திக்கு மாறுபாடாக இருந்தால் எழுதுவதை நிறுத்திவிடும். அதனை நான் புரிந்து கொள்கிறேன். போதாயன விருத்திக்கு ஏற்ற பொருளை நான் சொல்லும் வரை நீர் மீண்டும் எழுத வேண்டாம்"
"தங்கள் கட்டளை சுவாமி".
எம்பெருமானாரும் கூரத்தாழ்வானும் பிரம்மசூத்திரத்தின் உரையான ஸ்ரீபாஷ்யத்தை இந்த வகையில் எழுதி மீண்டும் காஷ்மீரத்திற்குச் சென்று அங்கிருக்கும் சரஸ்வதி பீடத்தில் அதனை அரங்கேற்றினர். சரஸ்வதி தேவியே அந்த உரையைப் பாராட்டி எம்பெருமானார்க்கு 'ஸ்ரீபாஷ்யக்காரர்' என்ற திருப்பெயரை அருளினாள்.
பிற்காலத்தில் தனது மகன்களான பராசர பட்டர், வேதவியாச பட்டர் உட்பட தன்னிடம் சீடர்களாக இருந்தவர்களுக்கு ஸ்ரீபாஷ்யத்தின் உட்பொருளை மிக நன்றாகப் போதித்தார் கூரத்தாழ்வான்.
ஆளவந்தாரின் இறுதி ஆசைகளான - 1. வேதங்களைத் தொகுத்த வேதவியாசரின் பெயர் விளங்கச் செய்வது, 2. பராசர ஸ்மிருதியும் விஷ்ணு புராணமும் இயற்றிய பராசரரின் பெயர் விளங்கச் செய்வது, 3. பிரம்மசூத்திரத்திற்கு உரை நூல் செய்வது என்ற மூன்று விருப்பங்களையும் இராமானுசர் நிறைவேற்ற கூரத்தாழ்வான் உறுதுணையாக இருந்ததை அவரது திருக்குமாரர்களின் திருப்பெயர்களிலிருந்தும் ஸ்ரீபாஷ்யம் இயற்றுவதிலும் பரப்புவதிலும் அவர் செய்த அருந்துணையிலிருந்தும் அறிந்து கொள்ளலாம்.
***
கூரத்தாழ்வானுக்கு ஏறக்குறைய எண்பத்தி எட்டு வயது ஆகிவிட்டது. எம்பெருமானாருக்கோ ஏறக்குறைய எண்பது வயது. எட்டு ஆண்டுகளாக சோழ தேசத்தை விட்டு மேல் நாட்டிற்கு எழுந்தருளியிருக்கிறார் இராமானுசர். கூரத்தாழ்வான் எம்பெருமானார் தரிசனத்திற்காக (வைணவ சமயத்திற்காக) தன் தரிசனத்தை (கண்ணை) இழந்து நிற்கிறார். வயதில் மிகவும் முதிர்ந்த, இராமானுசரின் ஆசாரியரான பெரிய நம்பிகள் சமயக் குழப்பங்களினால் வந்த கொடுமைகளைத் தாங்க இயலாமல் கூரத்தாழ்வானோடு அரசவைக்குச் சென்ற போது கண்கள் பிடுங்கப்பட்டத் துன்பம் தாங்காது அரசவையிலிருந்து வரும் வழியிலேயே தனது இன்னுயிரை விட்டுவிட்டார். இப்படி வைணவ சமயத்திற்கு திருவரங்கத்தில் ஒரு தாழ் நிலை ஏற்பட்ட காலம் இது.
ஒரு நாள் தட்டுத் தடுமாறி எம்பெருமானாரது திருவடிகளே தனது கண்களாகக் கொண்டு திருவரங்கன் திருக்கோவிலுக்கு வருகிறார் கூரத்தாழ்வான்.
"இது அரசகட்டளை. இராமானுசனைச் சேர்ந்தவர்கள் யாருக்கும் கோவிலில் நுழைய அனுமதியில்லை"
"ஆகா. இது என்ன கொடுமை? வாயில் காப்போரே. இவர் கூரத்தாழ்வான். யாருக்கும் எதிரி இல்லை இவர். எல்லாருக்கும் நல்லவர். இவரைத் தடுப்பது தகாது"
"ஐயா. நீங்கள் மிகவும் நல்லவர்; யாருக்கும் எதிரி இல்லை என்று எல்லோரும் சொல்கிறார்கள். எனக்கும் அது நன்கு தெரியும். உங்களுக்கு இராமானுச சம்பந்தம் இல்லை என்று சொன்னீர்கள் ஆயின் கோவிலுக்குள் நுழைய அனுமதி தரப்படும்"
"ஐயோ இது என்ன இப்படி ஒரு நிலை அடியேனுக்கு வந்ததே. அனைவருக்கும் நல்லவனாக இருத்தல் மிகப்பெரிய ஆத்ம குணம். அப்படிப் பட்ட ஆத்ம குணம் ஆசாரியருடன் சம்பந்தத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக இங்கே ஆசார்ய சம்பந்தத்தை விலக்குவதற்குப் பயனாகிறதே! ஐயா வாயில் காப்போரே! நம்பெருமாள் சம்பந்தம் போனாலும் போகட்டும்! எமக்கு எம்பெருமானார் சம்பந்தமே அமையும்!"
மிகுந்த வருத்தத்தோடு திருக்கோவிலை விட்டு வந்த கூரத்தாழ்வான் மேலும் அங்கே வசிக்க மனமின்றி திருமாலிருஞ்சோலைக்குச் சென்று அங்கே வசிக்கலானார்.
***
எம்பெருமானாருக்கு ஏறக்குறைய நூறு வயது. கூரத்தாழ்வானுக்கு நூற்றி எட்டு வயது. திருவரங்கத்திலும் சுற்று வட்டாரங்களிலும் வைணவ சமயத்திற்கு ஏற்பட்டிருந்த தாழ்வுகள் அகன்றுவிட்டன. அதனால் எம்பெருமானாரும் கூரத்தாழ்வானும் திருவரங்கம் திரும்பிவிட்டார்கள். திருமாலிருஞ்சோலையான அழகர்மலையில் வாழும் போது காஞ்சிபுரம் வரதராசப்பெருமாள் மேல் கூரத்தாழ்வான் வரதராஜ ஸ்தவம் என்ற ஒரு துதி நூலை இயற்றியிருந்தார். திருவரங்கத்தில் அதனைக் கண்ணுற்றார் இராமானுசர்.
"ஆகா. மிகவும் அருமையாக இருக்கிறதே. இதனைத் திருக்கச்சியில் வரதன் திருமுன் உரைத்தால் அவன் மிகவும் மகிழ்வானே. ஆழ்வானே. நீர் உடனே காஞ்சிக்குச் சென்று தேவராசப் பெருமாளின் திருமுன் இந்தத் துதியை விண்ணப்பம் செய்யும்"
"அப்படியே செய்கிறேன் சுவாமி"
"ஆழ்வான். அப்படி செய்தால் வரதன் மிகவும் மகிழ்வான். அப்போது என்ன வரம் வேண்டும் என்று கேட்பான். நீர் கண் பார்வையை வேண்டிப் பெற்றுக் கொள்ளும்"
***
திருக்கச்சி. வரதன் சன்னிதி. அர்ச்சகரின் மூலம் வரதனின் அருளப்பாடு கூரத்தாழ்வானுக்குக் கிடைக்கிறது.
"மிகவும் மகிழ்ந்தோம். உமக்கு என்ன வேண்டும்?"
"தங்கள் கிருபையே வேண்டும். அடியேனுக்கு வேறென்ன வேண்டும்?!"
"என் கிருபை என்றுமே உண்டு. வேறு என்ன வேண்டும்? ஏதேனும் நீர் கேட்டே ஆக வேண்டும்".
"அப்படியென்றால் அடியேன் பெற்ற பேறு நாலூரானும் பெற வேண்டும். பகவானிடம் அபசாரப்பட்டால் பக்தனிடம் சரணடைந்து உய்ந்து போகலாம். ஆனால் பக்தனிடம் அபசாரப்பட்டால் அந்த பகவானாலேயே காக்க இயலாது. இப்படித் தான் தேவரீர் பல இடங்களிலும் சொல்லியிருக்கிறீர். அறிந்தோ அறியாமலோ அரசனைத் தூண்டிவிட்டு இராமானுசர் முதலிய பல பக்தர்களுக்குத் துன்பத்தைத் தந்துவிட்டான் நாலூரான். அவனை நீர் கைவிடாது அவனுக்கு நல்லகதியை அருள வேண்டும்"
"அப்படியே தந்தோம்"
இராமானுசரும் பல அடியார்களும் திருவரங்கத்தை விட்டு செல்லவும், பெரிய நம்பிகளின் உயிர் வேதனையுடன் விலகவும், தான் கண்களை இழக்கவும் காரணமான நாலூரானுக்கும் நல்ல கதி வேண்டிப் பெறும் கூரத்தாழ்வானின் கருணை, 'தான் ஒருவன் நரகம் சென்றாலும் தகும். மற்றவர் எல்லோரும் நற்கதி பெறவேண்டும்' என்று அனைவருக்கும் திருமந்திரப் பொருளைச் சொன்ன எம்பெருமானாரின் கருணைக்கு ஈடாக இருக்கிறது. ஆசாரியனுக்குத் தகுந்த சீடன். சீடனுக்குத் தகுந்த ஆசாரியன்.
***
"என்ன? உமது கண்களை வேண்டிப் பெறவில்லையா? நாலூரானுக்கு முக்தி வேண்டினீரா? உமது இயல்புக்குத் தகுந்ததைச் செய்தீர் ஆழ்வான். திருவரங்கனிடமாவது கண்களை வேண்டிப் பெறும். நீர் கண் பார்வையின்றி வருந்துவது நமக்கு மிகுந்த வேதனையைத் தருகிறது"
இராமானுசரின் வாக்கின் படி திருக்கோவிலுக்குச் செல்கிறார் கூரத்தாழ்வான்.
"கூரத்தாழ்வான். அருளிச்செயல்களால் எம்மைத் துதித்ததில் மிகவும் மகிழ்ந்தோம். என்ன வரம் வேண்டும்?"
"தேவரீர் கருணையே போதும் சுவாமி. வேறொன்றும் வேண்டாம்".
"ஆழ்வான். உமக்கும் உம் சம்பந்தம் உடையாருக்கும் வைகுந்தம் நிச்சயம் தந்தோம்"
"ஆகா. ஆகா. ஆகா. நம் ஆசாரியனான திருக்கோட்டியூர் நம்பிகளின் ஆணையை மீறி அனைவருக்கும் வரம்பறுத்துத் திருமந்திரப் பொருளை உரைத்ததால் நம் கதி என்னவோ என்று இருந்தோம். இன்று ஆழ்வானுக்கு அரங்கன் உம் சம்பந்தம் உடையோருக்கு வைகுந்தம் நிச்சயம் என்றான். கூரத்தாழ்வான் சம்பந்தம் பெற்றதால் நமக்கும் வைகுந்தம் உண்டு. வைகுந்தம் உண்டு"
மிகுந்த மகிழ்ச்சியுடன் தனது காவி மேலாடையை மேலெறிந்து ஆனந்தக் கூத்தாடினார் எம்பெருமானார். இராமானுச சம்பந்தம் எந்த வழியிலேனும் கிடைக்காதா என்று பல்லாயிரக்கணக்கானோர் வேண்டியிருக்க, கூரத்தாழ்வான் சம்பந்தத்தை இராமானுசர் கொண்டாடினார்.
***
"மிக நன்று இராகவ். கூரத்தாழ்வான் திருக்கதையில் இருக்கும் முக்கிய நிகழ்ச்சிகளாக வாழித் திருநாமம் சொல்லும் பகுதிகளை மிக நன்றாகக் கூறினீர்கள். நம் இணைய எழுத்தாள நண்பர்கள் இரவிசங்கர், சுந்தர் அண்ணா, மௌலி, கைலாஷி ஐயா, ஷைலஜா அக்கா போன்றவர்கள் கூரத்தாழ்வானின் வைபவத்தை நிறைய இடுகைகளில் எழுதியிருக்கிறார்கள். நாமும் வருங்காலத்தில் எம்பெருமானாரின் ஆசாரியர்களைப் பற்றியும் சீடர்களைப் பற்றியும் நிறைய பேசலாம். இப்போது இருவரும் சேர்ந்து, கூரேசரது ஆயிரமாவது ஆண்டு நிறைவான இன்று (3-Feb-2010), அவரது வாழித் திருநாமத்தைப் பொருளுடன் சொல்லுவோம்"
சீராரும் திருப்பதிகள் சிறக்க வந்தோன் வாழியே!
தென்னரங்கர் சீர் அருளைச் சேருமவன் வாழியே!
பாராரும் எதிராசர் பதம் பணிந்தோன் வாழியே!
பாடியத்தின் உட்பொருளைப் பகருமவன் வாழியே!
நாராயணன் சமயம் நாட்டினான் வாழியே!
நாலூரான் தனக்கு முத்தி நல்கினான் வாழியே!
ஏராரும் தையில் அத்ததிங்கு வந்தான் வாழியே!
எழில் கூரத்தாழ்வான் தன் இணையடிகள் வாழியே!!
சீராரும் திருப்பதிகள் சிறக்க வந்தோன் வாழியே - சிறப்புகள் பொங்கும் திருமால் திருப்பதிகள் அனைத்தும் இன்னும் சிறப்பாக விளங்க பெரிய நம்பிகளுடன் பின் தொடர்ந்து வந்தவன் வாழ்க!
தென்னரங்கர் சீர் அருளைச் சேருமவன் வாழியே - 'உமக்கும் உம்மைச் சேர்ந்தவர்களுக்கும் வைகுந்தம் தந்தோம்' என்று தென்னரங்கரின் உறுதியைப் பெற்று அவரது சிறந்த திருவருளைச் சேர்கின்றவன் வாழ்க!
பாராரும் எதிராசர் பதம் பணிந்தோன் வாழியே - உலகெலாம் புகழும் எதிராசராம் எம்பெருமானார் இராமனுசரின் திருவடி சம்பந்தமே வேண்டும்; திருவரங்கன் சம்பந்தமும் வேண்டாம் என்று ஆசாரியன் திருவடிகளைப் பணிந்தவன் வாழ்க!
பாடியத்தின் உட்பொருளைப் பகருமவன் வாழியே - வேத வியாசரின் பிரம்ம சூத்திரத்திற்கு இராமானுசர் உரைநூல் (பாஷ்யம் - பாடியம்) எழுதும் போது அதன் உட்பொருளை அவர் உணரும் படி அவருக்கு உதவி, அந்த உரை நூல் காலமெல்லாம் நிலைக்கும் படி தன் மகன்களான பராசர பட்டர், வேதவியாச பட்டர் முதலியவர்களுக்கு பாடியத்தின் உட்பொருளைச் சொல்லுகின்றவன் வாழ்க!
நாராயணன் சமயம் நாட்டினான் வாழியே - அரசவையில் தன் கண்ணே போனாலும் வேத வேதாந்தங்களை எல்லாம் எடுத்துக் கூறி நாராயணன் சமயத்தை நிலை நாட்டியவன் வாழ்க!
நாலூரான் தனக்கு முத்தி நல்கினான் வாழியே - தனக்கும் பல அடியார்களுக்கும் தீங்கு ஏற்படுவதற்குக் காரணமாக நின்ற வைணவன் நாலூரானும் முக்தி அடைய பேரருளாளனை வேண்டி நாலூரானுக்கும் முக்தி தந்தவன் வாழ்க!
ஏராரும் தையில் அத்ததிங்கு வந்தான் வாழியே - ஏரின் பெருமை விளங்கும் தை மாதத்தில் அத்த (ஹஸ்த) நட்சத்திரத்தன்று உலகில் அவதரித்தவன் வாழ்க!
எழில் கூரத்தாழ்வான் தன் இணையடிகள் வாழியே - எழில் மிகுந்த கூரத்தாழ்வானின் திருவடிகள் வாழ்க வாழ்க!"
***
கூரத்தாழ்வானது ஆயிரமாவது ஆண்டு விழா நடப்பதைப் பற்றி சொல்லி கடந்த ஒரு வருடமாக கூரத்தாழ்வானின் ஆசாரிய பரம்பரையைப் போற்றும் இடுகைகளை இடும் வாய்ப்பை நல்கிய எம்பெருமானுக்கும் எம்பெருமானாருக்கும் கூரத்தாழ்வானுக்கும் இவர்கள் அனைவரின் இன்னருளையும் என்னிடம் கொண்டு வரும் இரவிசங்கருக்கும் அடியேனின் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
கூரத்தாழ்வான் பிறந்த நாளை முன்னிட்டு இரவிசங்கர் தரும் பிறந்த நாள் பரிசு!
இரவிசங்கர் அனுப்பிய சில படங்கள் இங்கே, இங்கே, இங்கே பார்க்கலாம்.
நன்றி: திரு. ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
கூரத்தாழ்வான் திருவடிகளே சரணம்.
ReplyDeleteஇடுகைக்கு நன்றி.
கூரத்தாழ்வான் திருநட்சத்திரத்தன்று அவருடைய பதிவு அருமை. இரவிசங்கரின் படங்களும் அருமை அருமை.
ReplyDeleteஎம்பெருமானார் இராமானுஜர் திருவடிகளே சரணம்.
கூரத்தாழ்வான் திருவடிகளே சரணம்.
அருமையாக உள்ளது குமரன். இவர் கண்ணிழந்த வரலாற்றையும், பின்னர் வரதரிடம் நாலூரான் நலன் வேண்டியதையும் முதன் முதலாக படித்த நாள் இன்றும் மறக்க முடியாதது. அந்த நிகழ்ச்சியை படித்த தாக்கம் கிட்ட திட்ட ஒரு வாரம் இருந்தது.
ReplyDeleteகிஞ்சித்காரம் டிரஸ்ட் வெளியிட்டு இருக்கும் காலேண்டர் அருமையாக உள்ளது.
ஆழ்வார் சரிதத்தை படங்களுடன் விளக்கியும், ஆழ்வார் எழுதிய ஸ்ரீ ஸ்தவம், வைகுண்ட ஸ்தவம் இவற்றில் இருந்து எல்லாம் பொருளுடன் ஸ்லோகங்களையும் இட்டு பிரமாதமான ஒரு நாள்காட்டியை வெளியிட்டுஇருக்கிறார்கள்.
கூரேசர் திருவடிகளே சரணம் !
கூரேசர் திருவடிகளே சரணம் !!
ReplyDeleteகூரத்தாழ்வாரின் பெருமைகளை கேட்டுக்கொண்டே இருக்கலாம். ஒவ்வொரு ஆசார்யரின் வாழி திருநாமத்தையும் மிகச் சிறப்பாக சொல்லியமைக்கு நன்றி குமரன்.. எப்புடியோ எங்களையும் கூரத்தாழ்வான் சம்பந்தம் ஏற்படுத்திட்டீங்க.
கூரேசர் ஜெயந்திப் பதிவு மிக அருமை.. இந்த தொடர் பதிவுகளால் ஸ்ரீவைஷ்ணவ ஆசார்யர்களை அறியச் செய்தமைக்கு நன்றி குமரன்.
ReplyDeleteஒரு சிறு விண்ணப்பம், முடிந்தால் தேசிகரது வாழித்திருநாமங்களையும் இதே போல அளியுங்கள் குமரன்.
ReplyDeleteHappy Birthday Dear Kuresa! :)
ReplyDeleteஇன்னும் பல நூற்றாண்டு இரும்!
இராமானுசரைப் பற்றிப் பேசி மாளலாம்! ஆனால் கூரேசனைப் பற்றிப் பேசி மாளாது என்று சொல்லுவார்கள்!
ReplyDeleteஇராமானுசரை விட அறிவிலும், புலமையிலும் ஒரு படி மேலே என்று சொல்லக் கூடிய அளவுக்கு இருந்த கூரேசன், வயதிலும் மூத்தவர்!
இருந்தாலும், மிக்க பணிவுடன், தன்னை விட இளையவரான இராமானுசரைப் பணிந்து, அவர் அருகில் சீடனாக நின்றது, அவர் அரும் பெரும் பணிவையே காட்டுகிறது!
பணியுமாம் என்றும் பெருமை! சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து!
அன்று சிவபெருமானுக்குக் கண்ணிழந்தான் கண்ணப்பன்!
ReplyDeleteஇன்றோ பெருமாளுக்குக் கண்ணிழந்தான் இந்தக் கண்ணப்பன்-கூரேசன்!
தரிசனத்துக்காகத் தரிசனத்தை இழந்த கூரத்தாழ்வான் திருவடிகளே சரணம்!
ஸ்வஸ்தி ஸ்ரீ தீசதாத்
ReplyDeleteஅசேஷ ஜகதாம் சர்கோபசர்கஸ்திதீம்!
கூரேசன்: "அம்மா...என்னை ஆசீர்வாதம் பண்ணு!"
தாயார்: "உன்னை என்ன-ன்னு சொல்லி ஆசிர்வதிப்பது கூரேசா? மங்களம்-ன்னு சொல்லட்டுமா? எனக்கும் என் பதிக்குமே மங்களம் சேர்த்த உனக்கா, நான் மங்களம் சொல்வேன்? என்னால முடியுமா?"
கூரேசன்: "அம்மா, நீயே அப்படிச் சொல்லக் கூடாது!
உனக்கு மங்களம்! உனக்கு மங்களம்!
அதைப் பாடியவர் உன் விபூதிகளை உடைய இராமானுசர்!
நான் அவர் பக்கலிலே இருந்தேன்! அவ்வளவு தான்!"
தாயார்: "பெத்த குழந்தையை அம்மா, கண்ணே-ன்னு வாய் வார்த்தையாகக் கூப்பிடலாம்!
ஆனா உன்னை நான் அப்படிக் கூப்பிடும் போது...
அதுக்கு வாய் வார்த்தை இல்லை கூரேசா, மன வார்த்தை தான் அது...
என்னையும் என்-அவரையும், அவர் சரணத்தையும் ஊருக்கே காட்டிக் கொடுத்த உனக்கு கண் இல்லையா என்ன?
நான் கூப்பிடுகிறேன் உன்னை...
உன் கண்ணே என்று சொல்லாமல்...
என் கண்ணே என்று சொல்கிறேன்!
அரங்க நாயகியின் கண்ணே! உனக்கு மங்களம்!
தரிசனத்தின் தரிசனமே! உனக்கு மங்களம்!
//பிற்காலத்தில் கூரத்தைச் சேர்ந்த ஆழ்வான் என்ற பொருளில் கூரத்தாழ்வான் என்ற திருப்பெயரே இக்குழந்தைக்கு நின்றது//
ReplyDeleteசம்பிரதாயத்தில்
ஆழ்வார்-ன்னு தனியாச் சொன்னா அது நம்மாழ்வார் மட்டுமே!
ஆழ்வான்-ன்னு தனியாச் சொன்னா அது கூரத்தாழ்வான் மட்டுமே!
நம்மாழ்வார் ஒருவரே ஆழ்வாரும்+ஆசார்யரும் ஆவர்!
அதே போல் கூரேசன் ஒருவனே ஆழ்வானும்+ஆசார்யனும் ஆவன்!
கூரேசன் திருவடிகளே சரணம்!
//மிகவும் அன்யோன்யமாக, அனந்தாழ்வானும் எம்பெருமானும் போல், இராமானுசரும் கூரத்தாழ்வானும் இருந்தார்கள்//
ReplyDelete"போல" இல்லை!
அதே தான்! :))
இலட்சுமணன் என்னும் ஆதிசேடனுக்கு நன்றி செலுத்திக் கைங்கர்யம் செய்ய,
* அடுத்த அவதாரத்தில் சேஷனை மூத்தவனாகப் (பலராமனாக) பிறப்பித்து,
* தான் இளையவனாகப் (கண்ணபிரான்) பிறந்து, பணி செய்யப் புகுந்தான்!
ஆனால் கண்ணனின் மாயங்களும், புகழும் எத்தனை மறைத்தாலும் மறைக்க முடியவில்லை!
அவை பலராமனுக்குப் பணி செய்யத் தடையாகவே இருந்தது!
பலராமன் புகழைக் கண்ணன் புகழ் முந்திக் கொண்டு மறைத்து விட்டது!
இதனால் தவித்த கண்ணபிரான்...
கிருஷ்ணாவதாரத்தின் ஒரு நோக்கம் நிறைவேறாமல் போகிறதே என்று தவித்து...
* பின்னாளில் கூரேசனாய் உதித்தான்!
* இலட்சமண/பலராமனோ, இலட்சுமண முனி-இராமானுசராய் உதித்தார்!
இப்போது மீண்டும், இலக்குவனை விட மூத்தவனாகவே உதித்தான்! (கூரேசன் இராமானுசரை விட வயதில் பெரியவர்)
தான் இடையறாது கைங்கர்யம் மட்டுமே செய்ய...
கூரேசன் எவ்வளவு தான் பெரும் பெரும் செயல்கள் செய்தாலும்...
கூரேசன் தனித்த புகழை விரும்பாது ஒதுங்கி,
அத்தனை புகழும் தன் இளையாழ்வானுக்குப் போய்ச் சேரும்படியே பார்த்துக் கொண்டான்!
கண்ணனின் அவதாரம் நிறைவேற்றி வைக்க முடியாததை
கூரேசனின் வாழ்வு நிறைவேற்றி வைத்தது!
எம்பெருமானார்க்குக் கைங்கர்யம் செய்த எம்பெருமானே...கூரேசா
உனக்குப் பல்லாண்டு பல்லாண்டு!
//குலப் பெருமையும் செல்வப் பெருமையும் கடத்தலே மிக அரிது//
ReplyDelete:)
முதலியாண்டானுக்கு இதைப் பாடங் காட்டி உணர்த்தினார் இராமானுசர்!
முதலியாண்டானும் தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொண்டு கோவித்துக் கொள்ளாமல், இதை உணர்ந்து திருந்திக் கொண்டார்!
முதலியாண்டான் தம் குல வழக்கப்படி செய்யும் சந்தியாவந்தனங்களை, தாம் இடைவிடாது செய்வதிலும், அதனால் தம்மிடையே ஒளிரும் "தேஜஸ்" பற்றியும் சற்றே பெருமை கொண்டார்!
அவரைத் திருத்த எண்ணிய இராமானுசர்...அவருக்குக் கூரேசனையும், வில்லிதாசனையுமே காட்டி, பாடம் உரைத்தார்...
"தினமும் காயத்ரீ சந்திப்போதில் நாம் ஜபிக்க,
அந்திசந்தியால் பயன் என்ன என்று அவர் மந்திர ரத்தினமான துவையத்தையே அனுசந்திப்பரே!
நாம் அக்னி முதலான சடங்கிற்கும் சேஷமாக இருக்க,
அவர்களோ கற்புள்ள பெண்ணைப் போலே, இறைவன் ஒருவனுக்கே சேஷம் உடையவராய், உடைமை உடையவராய் உறுதியுடன் இருப்பரே!"
- என்று முதலியாண்டானைத் திருத்தி ஆட்கொண்ட நிகழ்ச்சி ஒளிவு மறைவின்றி பிரபாவத்தில் பேசப்படுகிறது!
//அவற்றிலும் மிக அரிது கல்விப்பெருமையைக் கடப்பது//
ReplyDeleteஅது என்னமோ சரி தான்! :)
பாண்டித்யம் வந்து விட்டாலே...
சரணம்-ங்கிற மனப்பான்மை போய் விடுகிறதே!
//கற்க வந்தவரிடம் இருந்து நூலை வாங்கி வைத்துக் கொண்டு தான் அவரிடம் இருந்து கற்பதைப் போல் காட்டிக் கொண்ட கூரத்தாழ்வான்//
ஹா ஹா ஹா
புனித பிம்பம்-ன்னு இந்தக் காலத்தில் ஈசியாச் சொல்லிருவாங்க! :)
ஆனால் அதன் பின்னால் ஆழ்வானின் மனசைப் பார்த்தால், இது தெரிந்து விடும்! அப்படித் திருவாய்மொழியைக் கற்றுக் கொடுக்கும் போது தான்...
அடியார் அடியார் தம் அடியார் அடியார் தமக்கு
அடியார் அடியார் தம் அடியார் அடியோங்களே
என்ற பாசுரமும் வந்தது...
தன் பெருமை குறையாமல், யாருக்கும் தெரியாமல்...அதே சமயம் திருவாய்மொழி கற்க வேண்டும் என்று எண்ணிய அந்தப் பெரியவர்...
அட, தன் பெருமை குறைஞ்சாலும் பரவாயில்லை...
இன்னொரு எக்ஸ்ட்ரா ஆள் திருவாய்மொழியைக் கற்கிறாரே...அது போதாதா? என்று எண்ணிய கூரேசன்...
ஆகா!...
இப்படியெல்லாம் யோசிச்சி யோசிச்சிக் கைங்கர்யம் செய்ய, உனக்கு மட்டுமே தோனும் கூரேசா!...
உனக்குப் பல்லாண்டு! பல்லாண்டு!
//பிற்காலத்தில் தனது மகன்களான பராசர பட்டர், வேதவியாச பட்டர் உட்பட தன்னிடம் சீடர்களாக இருந்தவர்களுக்கு ஸ்ரீபாஷ்யத்தின் உட்பொருளை மிக நன்றாகப் போதித்தார் கூரத்தாழ்வான்//
ReplyDeleteஇது அப்படியே சுதர்சன சூரி வரை சென்று, அவர் தான் ஸ்ரீபாஷ்யத்துக்கே பாஷ்யம் எழுதினார் பின்னாளில்...
அந்நியர் படையெடுப்பின் போது, இந்த ஸ்ரீபாஷ்யத்தின் பாஷ்யத்தைக் காத்துக் கொடுத்த பெருமை, நம் வேதாந்த தேசிகரையே சாரும்!
//கூரத்தாழ்வானுக்கு ஏறக்குறைய எண்பத்தி எட்டு வயது ஆகிவிட்டது. எம்பெருமானாருக்கோ ஏறக்குறைய எண்பது வயது//
ReplyDeleteஅப்போ...இன்னும் எட்டு வருஷம் கழிச்சி...இராமானுசர் நூற்றாண்டா?
ஹை....
கூடல்-ல்ல சிறப்பு பதிவுக்கு...அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்! :))
எலே ராகவ், இதை நோட் பண்ணிக்கோ! :)
//அப்போ...இன்னும் எட்டு வருஷம் கழிச்சி...இராமானுசர் நூற்றாண்டா?//
ReplyDeleteஅப்போ...இன்னும் எட்டு வருஷம் கழிச்சி...இராமானுசர் ஆயிரமாவது ஆண்டா?-ன்னு கேட்டு இருக்கணும்...
கொஞ்சம் ஜாலில் Enthu ஆயிட்டேன்! :)
//ஐயா. நீங்கள் மிகவும் நல்லவர்; யாருக்கும் எதிரி இல்லை என்று எல்லோரும் சொல்கிறார்கள். எனக்கும் அது நன்கு தெரியும். உங்களுக்கு இராமானுச சம்பந்தம் இல்லை என்று சொன்னீர்கள் ஆயின் கோவிலுக்குள் நுழைய அனுமதி தரப்படும்//
ReplyDeleteஹா ஹா ஹா...
இயேசுபிரான் மறைவதற்கு முன்னால்...
அரசாங்க பயத்தினால், அத்தனை சீடர்களும் அவரை மறுதலித்தார்களாம்!
கிறிஸ்து பிரானுக்கு இனிய பேதுருவே (St Peter), அவரை மறுதலிக்கும் நிலைமை வந்ததாம்!
இவ்வளவு ஏன்...
இரண்யகசிபு-வுக்கு பயந்து, சந்தியாவந்தனத்தையே, அவன் பேருக்கு மாற்றிச் சொன்ன ஞான யோகிகள் எல்லாம் இருந்தார்களே! ஆனானப்பட்ட சனகாதி முனிவர்கள்...ஜயவிஜயர்களுக்குச் சாபம் விட்டவர்கள்...அவர்களே (ஓம்) இரண்யகசிபுவே நம-ன்னு சொன்னார்களே! :)
பிரகலாதன் என்னும் குழந்தையின் வைராக்கியமா, நம் கூரேசனுக்கு?
முந்தைய அவதாரங்களில் அடியவர்கள் பட்டதையெல்லாம்...அவர்கள் வைராக்கியத்தை எல்லாம்...
இப்போது, கூரேசன் உருவில்...எம்பெருமான் ஆசை தீர்த்துக் கொள்கிறான் போல! :)
//இராமானுச சம்பந்தம் இல்லை என்று சொன்னீர்கள் ஆயின் கோவிலுக்குள் நுழைய அனுமதி தரப்படும்//
ReplyDeleteஅடப் போங்கய்யா!
அரங்கனே இராமானுச சம்பந்தம் வேண்டி நிற்கிறான்...
இதுல இராமானுச சம்பந்தம் இல்லீன்னா அரங்கனைத் தரிசிக்கலாம்-ன்னு ஸ்பெஷல் டிக்கெட் அப்பவே போட்டு இருக்காங்க போல! :))
இதுக்குத் தான் சொல்றது...
தர்ம தரிசனம் தான் "தர்ம" தரிசனம்!
ஸ்பெஷல் டிக்கெட் = "அதர்ம" தரிசனம்! :))
ஸ்பெஷல் டிக்கெட் வாங்காத கூரேசா...
உனக்குப் ப்ல்லாண்டு பல்லாண்டு!
//அர்ச்சகரின் மூலம் வரதனின் அருளப்பாடு கூரத்தாழ்வானுக்குக் கிடைக்கிறது//
ReplyDeleteஅருளப்பாடு-ன்னா என்ன குமரன்?
இன்னிக்கி கூட, தீர்த்தம் தருவதற்கு முன்பு, அருளப்பாடு சொல்றாங்களே?
//அறிந்தோ அறியாமலோ அரசனைத் தூண்டிவிட்டு இராமானுசர் முதலிய பல பக்தர்களுக்குத் துன்பத்தைத் தந்துவிட்டான் நாலூரான். அவனை நீர் கைவிடாது அவனுக்கு நல்லகதியை அருள வேண்டும்//
ReplyDeleteஆகா!
வைதாரையும் ஆங்கே வாழ வைப்போன்-ன்னு என் முருகனைச் சொல்லுவாய்ங்க!
ஆனா, இங்கே நெசமாலுமே வைதாரையும் வாழ வைத்த கூரேசன் மனசு தான் என்னே!
கூரேசன் திரு-மனமே தஞ்சம்!
கூரேசன் திரு-மனமே சரணம்!
சொல்லப் போனால் நாலூரான் திட்டமிட்டு எல்லாம் சதி செய்யவில்லை!
ReplyDeleteவாய்த் துடுக்கு! வாய் வம்பு! அதனால் வந்தது தான் வினை!
நாலூரான்...
முன்பு கூரேசனின் "நெருக்கமில்லாச்" சீடர்களில் ஒருவன் தான்!
பின்னாளில், இந்த வைணவம் எல்லாம் வேணாம், நவக்கிரக பரிகாரம் கூட பண்ண விட மாட்டேங்குறாங்க! இங்கிட்டு சுகபோகமா இருக்க முடியாது-ன்னு ஓடி விட்டவன்!
அரசனிடம் சேர்ந்து, மதியூகி அமைச்சு வேலை பார்த்தவன்...
அரசனுக்கு அவ்வப்போது அரியும் சிவனும் ஒன்னு-ன்னு எடுத்துச் சொல்லியவன் தான்! திருக்கண்ணங்குடியில் விபூதி பூசிக் கொள்ளும் பெருமாள் கதை இங்கே!
கிருமி கண்ட சோழன், பல பேரை நெருக்கி, ஓலையில் கையொப்பம் வாங்கிய போது...
எப்பமே வாய் பேசி திரியும் துடுக்கால்...இந்த நாலூரான்...
இவிங்க எல்லாம் தூசு, இவிங்க கிட்ட கையொப்பம் வாங்கி ஒரு பிரயோஜனமும் இல்லை...
என்ன இருந்தாலும் இராமானுசர் கையொப்பம் மாதிரி வருமா?-ன்னு பேசப் போயி...
அத்தனையும் நடந்து முடிந்தது! :(((
//ஏரின் பெருமை விளங்கும் தை மாதத்தில்//
ReplyDeleteஏராரும்-க்கு இப்படி பொருள் எடுத்துக்கிட்டீங்களா? சூப்பரு! :)
//தை மாதத்தில் அத்த (ஹஸ்த) நட்சத்திரத்தன்று உலகில் அவதரித்தவன் வாழ்க!//
கார்த்திகையில் கார்த்திகை நாள் - திருமங்கை ஆழ்வார் பிறந்த நாளில் துவங்கும் அனத்யயனம்..(திருவரங்க அத்யயனம் - திருவாய்மொழி தமிழ் விழா)
கூரேசன் பிறந்த நாளான தை அத்தத்தில் தான் முழுமையாக ஒரு நிறைவுக்கு வரும்!
இது வரை கூரேசர் பற்றி வந்துள்ள நம் பதிவர்களின் பதிவுகள் இதோ:
ReplyDelete1. ஷைலஜா அக்கா எழுதிய, கூரேசன் சீர் கேளீரோ!
2. கைலாஷி ஐயா எழுதிய, கண் கொடுத்த கூரேசர்
3. மெளலி அண்ணாவின் வேண்டுகோளின் படிபரவஸ்து சுந்தர் அண்ணா எழுதிய, கூரத்தாழ்வாரை அறிவோம்...1000ம் ஆண்டு ஜெயந்தி சிறப்புப் பதிவுகள் (1-4)
4. குமரன் எழுதும், கூரத்தாழ்வானின் குரு பரம்பரை - 1
5. KRS, கண் இழந்த கண்ணப்பர் - 1000வது பிறந்தநாள்
இன்னும் பல தளங்களில் பல இடுகைகள்!
இவர்கள் அனைவருக்கும்...பல்லாண்டு பல்லாண்டு!
//ஆசாரிய பரம்பரையைப் போற்றும் இடுகைகளை இடும் வாய்ப்பை நல்கிய எம்பெருமானுக்கும் எம்பெருமானாருக்கும் கூரத்தாழ்வானுக்கும் இவர்கள் அனைவரின் இன்னருளையும் என்னிடம் கொண்டு வரும் இரவிசங்கருக்கும் அடியேனின் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்//
ReplyDeleteஆகா...ஒப்புக்க மாட்டேன்! ஒப்புக்க மாட்டேன்!
அவர்கள் அனைவரின் இன்னருளையும் கூடலில் கொண்டாந்து சேர்ப்பது...
இங்கு படித்தும், பின்னூட்டிக் கொண்டும் இருக்கும் அடியார்கள் தான்!
பதிவில் நீங்க தானே சொல்லி இருக்கீங்க? அதை நீங்களே மீறலாமா குமரன்? :)
//சுவாமி. தேவரீர் என் ஆசாரியன். உங்களுக்குத் தோன்றும் ஐயங்களைத் தீர்க்கும் அளவிற்கு அடியேன் அறிவுடையேன் இல்லை. அப்படி நினைத்தாலும் செய்ய முயன்றாலும் அது பெரும் தவறு//
//இன்று ஆழ்வானுக்கு, அரங்கன், உம் சம்பந்தம் உடையோருக்கு வைகுந்தம் நிச்சயம் என்றான்.
ReplyDeleteகூரத்தாழ்வான் சம்பந்தம் பெற்றதால் நமக்கும் வைகுந்தம் உண்டு. வைகுந்தம் உண்டு//
இதை எனக்கும் சொன்னதாகவே எடுத்துக் கொள்கிறேன், குமரன் அண்ணா!
அடியேனுக்கும் வைகுந்தம் உண்டு! வைகுந்தம் உண்டு!
இப்படி...கூரத்தாழ்வானை முன்னிட்டு, வாழித் திருநாமப் பதிவுகளைத் தொடர்ச்சியாக எழுதி....
ReplyDeleteஎங்கள் அனைவருக்கும் கூரேசன் சம்பந்தம் ஏற்படுத்திக் கொடுத்தீர்...
அதனால் எங்கள் அனைவருக்கும் வைகுந்தம் உண்டு. வைகுந்தம் உண்டு!!
கூரேசன் வாழித் திருநாமம் தொட்டு, அவர் முன்னுள்ள அத்தனை ஆசார்யர்களையும் அடியோங்களுக்குச் சொல்லி வைத்து...
ReplyDelete* கூரேச சம்பந்தம்...
* அதோடு கூடே அவர் ஆசார்ய சம்பந்தம்
என்று இரண்டு சம்பந்தங்களுமே அடியோங்களுக்கு எற்படுத்திக் கொடுத்த "குமரன்" ஆகிய நீவிர்...
சீராரும் பதிவுலகம் சிறக்க வந்தோன் வாழியே!
செஞ்சொற்பொன் தமிழால் இனியது கேட்பான் வாழியே!
ஏரார்ந்த கண்ணனுக்கு வலைப் பூ-முடிப்பான் வாழியே!
ஏற்றமிகு செளராட்டிரக் கவிசொல்வான் வாழியே!
முருகனருள் முன்னிற்க முனைந்து உரைப்பான் வாழியே!
முத்தான நாயகிமுனி அடி பணிவான் வாழியே!
சங்கத் தமிழ்ப் பாக்களினால் சரந் தொடுப்பான் வாழியே!
எங்கள் குமரன் அவனும் எந்நாளும் வாழியே!
வாழித் திருநாமப் பதிவுகளில்
ReplyDelete* வந்தார் எல்லார்க்கும்,
* வாயினால் வாசித்தார்க்கும்,
* பெருமானைச் சுவாசித்தார்க்கும்...
அடியவர்கள் அத்தனை பேரும்...
நல்ல பதத்தால் மனை வாழ்வர் கொண்ட பெண்டிர் மக்களே!!
நல்ல கோட்பாட்டு உலகங்கள் மூன்றி னுள்ளும் தான் நிறைந்த
அல்லிக் கமலக் கண்ணனை அந்தண் குருகூர்ச் சடகோபன்
சொல்லப் பட்ட ஆயிரத்துள் இவையும் பத்து வல்லார்கள்...
நல்ல பதத்தால் மனை வாழ்வர் கொண்ட பெண்டிர் மக்களே!
பல்லாண்டு பல்லாண்டு
உன் சேவடி செவ்வித் திருக்காப்பு!
அருமை குமரன். கூரத்தாழ்வாரின், எம்பெருமானாரின், திருவடிகள் பணிந்து கொண்டேன். மிக்க நன்றி.
ReplyDeleteகுமரன்! நிறைவான் ஓர் பதிவிட்டு நெஞ்சை நிறைத்துவிட்டீர்கள்! எளிமையும் அமைதியும் ஆணவமற்றதன்மையும் கொண்ட மகானின் பெருமையை நாம்தான் எழுத்தில் வடிக்க இயலுமோ!கே ஆர் எஸ் அளித்த பின்னூட்டங்களின் செய்திகள் பதிவிற்கு மகுடமாகிறது!
ReplyDeleteஉடையவரின் உடையவரை சரண் அடைவோம்!
//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ReplyDeleteகூரேசன் வாழித் திருநாமம் தொட்டு, அவர் முன்னுள்ள அத்தனை ஆசார்யர்களையும் அடியோங்களுக்குச் சொல்லி வைத்து...
* கூரேச சம்பந்தம்...
* அதோடு கூடே அவர் ஆசார்ய சம்பந்தம்
என்று இரண்டு சம்பந்தங்களுமே அடியோங்களுக்கு எற்படுத்திக் கொடுத்த "குமரன்" ஆகிய நீவிர்...
சீராரும் பதிவுலகம் சிறக்க வந்தோன் வாழியே!
செஞ்சொற்பொன் தமிழால் இனியது கேட்பான் வாழியே!
ஏரார்ந்த கண்ணனுக்கு வலைப் பூ-முடிப்பான் வாழியே!
ஏற்றமிகு செளராட்டிரக் கவிசொல்வான் வாழியே!
////
நியூயார்க் நாயகரே!
கண்னன்பாட்டினில் ஆயிரத்து ஒருவர் பதிவிட்ட எனக்கும் சின்ன வாழ்த்துப்பாடல் பாடுவீங்களா?:)(நண்பருக்குன்னா தானா சொல்லுவாரு அக்காக்குன்னா கேட்டு வாங்கவேண்டி இருக்குப்பா:):)
4. குமரன் எழுதும், கூரத்தாழ்வானின் குரு பரம்பரை - 1::))))
ReplyDeleteintha link varalaa some problem
தொடர்ந்து வந்ததற்கு நன்றி செல்வநம்பி ஐயா.
ReplyDeleteநன்ரி கைலாஷி ஐயா.
ReplyDeleteநன்றி இராதா.
ReplyDeleteஉங்களுக்கு இல்லாத கூரத்தாழ்வான் சம்பந்தமா இராகவ். :-)
ReplyDeleteதேசிகன் வாழித் திருநாமத்தை இரவி தான் தரவேண்டும் மௌலி. அவர் தான் எனக்கு இந்த ஆசார்யர்கள் வாழித் திருநாமங்களைத் தந்தவர். :-)
ReplyDeleteஅடியேனும் 'போல' என்று சொல்லிவிட்டு அனந்தாழ்வானும் எம்பெருமானும் தான் இராமானுசரும் கூரத்தாழ்வாரும் ஆகப் பிறந்தார்கள் என்று சொல்லும் படத்தை அங்கேயே இட்டிருக்கிறேன் இரவி. :-)
ReplyDeleteஅதனால் தானோ என்னவோ கூரத்தாழ்வார் கண்ணனைப் போலவே கருநிறம் கொண்டிருந்தார். :-)
அருளப்பாடு என்றால் இறைவனின் அழைப்பாக அருச்சகர் ஒருவரை அழைத்து முன் நிறுத்தி அவர் வேண்டுதல்களைச் செவி சாய்த்து தீர்த்தம், மாலை, பரிவட்டம் முதலிய பிரசாதங்களைத் தந்து அனுப்புவது. அப்படி செய்யும் போது அழைக்கப்படுபவரின் பெருமைகளை உரக்கச் சொல்வார்கள். அதுவே அருளப்பாடு.
ReplyDeleteவைணவ நூல்களில் பல இடங்களில் இறைவன் 'அருச்சக ரூபேண' பதில் சொன்னார்/கட்டளையிட்டார் என்று வரும். அந்த இடங்களில் எல்லாம் அருளப்பாடும் இருந்தது என்று எடுத்துக் கொள்ளலாம்.
இன்றைக்கும் ஆசாரியர்கள் போன்ற முக்கியமானவர்களுக்குத் தீர்த்த பிரசாதம் தருவதற்கு முன்னர் அவர்களை இறைவன் திருமுன் அழைக்கும் அருளப்பாடு நடக்கின்றது.
நன்றி கவிநயா அக்கா.
ReplyDeleteநன்றி ஷைலஜா அக்கா.
ReplyDeleteநீங்க கேட்ட பிறகும் வாழ்த்துப்பாடல் பாடாம இருக்காரு பாருங்க நியூயார்க் தம்பி. வேற எங்காவது சண்டை போடறாங்களான்னு பாருங்க; அங்கே புதுயார்க்கு தம்பி இருக்க வாய்ப்பு உண்டு. :-) :-)
//intha link varalaa some problem
ReplyDelete//
இடுகையில தொடுப்பு தர தெரியும். பின்னூட்டங்கள்ல தெரியாது. இரவி தான் வந்து சொல்லணும்.
//வேற எங்காவது சண்டை போடறாங்களான்னு பாருங்க; அங்கே புதுயார்க்கு தம்பி இருக்க வாய்ப்பு உண்டு. :-) :-)//
ReplyDeleteதோடா! சண்டையா? கல்வெட்டு-ன்னு கரெக்ட்டாச் சொல்லுங்க! அதுல "வெட்டு" இருக்குல்ல? :)
//தேசிகன் வாழித் திருநாமத்தை இரவி தான் தரவேண்டும் மௌலி. அவர் தான் எனக்கு இந்த ஆசார்யர்கள் வாழித் திருநாமங்களைத் தந்தவர். :-)//
மெளலி அண்ணா! நம்பாதீங்கோ! :)
//4. குமரன் எழுதும், கூரத்தாழ்வானின் குரு பரம்பரை - 1::))))
ReplyDeleteintha link varalaa some problem//
அச்சோ! மன்னிக்கவும்!
இந்த இடுகை தாங்க அது! அதுக்கு எதுக்கு Link? :)
Anyways...here we go, link for the series!
4. குமரனின், கூரத்தாழ்வானின் குரு பரம்பரை
மொத்த ஆசார்யர்களும் இங்கு திரண்டு இருப்பதால்.....
ReplyDeleteமெளலி அண்ணா விரும்பியபடி...
தேசிகன் வாழித் திருநாமத்தையும், இங்கேயே சேர்ப்பிக்கிறேன்!
உத்தமாம் புரட்டாசி ஓணத்தான் வாழியே!
ஓர் மதுரகவி பனுவல் உள்ளுரைத்தான் வாழியே!
தத்தில் முனிவாகன போகம் இழைத்தான் வாழியே!
தமிழ்மறைக்கு ஒண் பதினாயிரம் உரைத்தான் வாழியே!
எத்திசையும் எதிவரர் போல் ஏத்த நின்றான் வாழியே!
எழில் அரங்கர் இன் அருளுக்கு இலக்கு ஆனான் வாழியே!
தொத்து அறவே வாதிகளைத் தொலைத்திட்டான் வாழியே!
தூப்புல் கோன் திருவடிகள் துலங்க என்றும் வாழியே!
நானிலமும் தான்வாழ நான்மறைகள் தாம் வாழ
மாநகரில் மாறன் மறைவாழ - ஞானியர்கள்
சென்னி அணிசேர் தூப்புல் வேதாந்த தேசிகனே
இன்னுமொரு நூற்றாண்டு இரும்!
பூர்வாச்சாரியர்களில் இறுதி ஆசார்யராகத் திகழ்ந்த மணவாள மாமுனிகள் வாழித் திருநாமத்தையும் இங்கேயே சேர்ப்பிக்கின்றேன்!
ReplyDeleteஇப்புவியில் அரங்கேசர்க்கு ஈடு அளித்தான் வாழியே!
எழில் திருவாய் மொழிப்பிள்ளை இணை அடியோன் வாழியே!
ஐப்பசியில் திருமூலத்து அவதரித்தான் வாழியே!
அரவு அரசப் பெருஞ்சோதி அனந்தன் என்றும் வாழியே!
எப்புவியும் ஸ்ரீசைலம் ஏத்த வந்தான் வாழியே!
ஏராரும் எதிராசர் என உதித்தான் வாழியே!
முப்புரி நூல் மணிவடம் முக்கோல் தரித்தான் வாழியே!
மூதரிய மணவாள மாமுனிவன் வாழியே!
அடியார்கள் வாழ அரங்க நகர் வாழ
சடகோபன் தண் தமிழ் நூல் வாழ - கடல் சூழ்ந்த
மன்னுலகம் வாழ மணவாள மாமுனியே
இன்னுமொரு நூற்றாண்டு இரும்!
This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeletekumaran said...
ReplyDeleteஇடுகையில தொடுப்பு தர தெரியும். பின்னூட்டங்கள்ல தெரியாது.:::)))
how to add link in blog comments
என்ற வார்த்தையை type செய்து
கூகிள்-இல் search பண்ணுங்க
stampingmathilda – enra website-il solli taraanga
Thanks