தமிழக வைணவ குருபரம்பரையில் திருமால், திருமகள், சேனை முதல்வர், நம்மாழ்வார், நாதமுனிகள், உய்யக்கொண்டார் ஆகியோரின் வாழித் திருநாமங்களை இதுவரைப் பார்த்திருக்கிறோம். இன்று உய்யக்கொண்டாரின் சீடரான மணக்கால் நம்பியின் வாழித் திருநாமத்தைப் பார்க்கப் போகிறோம்.
"இராதா மோகன். இரவி உய்யக்கொண்டாரைப் பற்றி சொல்லும் போது அவருடைய சீடரான மணக்கால் நம்பியைப் பற்றி உங்களுக்கு நன்றாகத் தெரியும் என்று சொன்னார். அவரைப் பற்றி சொல்லுங்களேன்".
"என்ன குமரன் விளையாடுகிறீர்களா? உங்களுக்கு மணக்கால் நம்பியைப் பற்றி தெரியாதா என்ன?"
"கொஞ்சம் தெரியும் இராதா. அவர் உய்யக்கொண்டாருடைய சீடர் என்றும் நாதமுனிகளின் பேரனான ஆளவந்தாருடைய ஆசாரியர் என்று தெரியும். மற்ற படி ஒன்றும் தெரியாது".
"சரி. எனக்கு அவரைப் பற்றித் தெரிந்த சிலவற்றைச் சொல்கிறேன்.
மணக்கால் நம்பியின் இன்னொரு பெயர் இராமமிச்ரர். பரசுராமன், இராமன், பலராமன் இம்மூவரையும் முதல் மூன்று இராமர்கள் என்றும் இவரை நான்காவது இராமர் என்றும் சொல்வார்கள். திருச்சிக்கு அருகில் இருக்கும் அன்பில் என்ற கிராமத்தில் பிறந்தவர்."
"கூரத்தில் பிறந்தவர் கூரத்தாழ்வான் என்று பெயர் பெற்றதைப் போல் மணக்கால் என்ற ஊரில் பிறந்ததால் இவருக்கு மணக்கால் நம்பி என்று பெயர் வந்ததாக நினைத்தேனே. அது தவறா?"
"அதுவும் ஒரு வகையில் சரி தான் குமரன். அன்பில் என்ற ஊரில் இருந்த ஒரு பகுதிக்கு மணக்கால் என்ற பெயர் இருந்தது என்று சொல்லக் கேள்வி. ஆனால் மணக்கால் நம்பியின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சியால் அவருக்கு இந்தத் திருப்பெயர் வந்தது என்றும் சொல்வார்கள்".
"எந்த நிகழ்ச்சி அது இராதா?"
"உய்யக்கொண்டாரின் மனைவியார் மறைந்த பின்னர் உய்யக்கொண்டாரின் வீட்டு மேற்பார்வையையும் சமையல் வேலைகளையும் இராமமிச்ரரே ஏற்றுக் கொண்டார். உய்யக்கொண்டாருக்கு சிறுமியர்களான இரு மகள்கள் இருந்தனர். அவர்களை தாயைப் போல் வளர்த்தார் இராமமிச்ரர். ஒரு முறை அச்சிறுமியர் ஆற்றுக்குச் சென்று நீராடி வரும் போது வழியில் இருந்த சேற்றில் கால் வைக்கத் தயங்கினார்கள். அதனைக் கண்ட இராமமிச்ரர் அச்சேற்றில் தானே விழுந்து தன் உடலின் மேல் அச்சிறுமியர் ஏறிச் செல்லுமாறு சொன்னார். அதே போல் அவர்கள் செய்ய அவர்களின் காலடித் தடங்கள் அவர் உடலில் விழுந்தன. மணற்கால் தடங்கள் பெற்றதால் அவருக்கு மணக்கால் நம்பி என்ற பெயர் வந்தது".
"அடடா. அவருடைய ஆசாரிய பக்தியை என்றென்றும் எல்லோரும் நினைத்து நல்வழி காணும்படியாக அவருக்கு இந்தத் திருப்பெயரே நிலைத்துவிட்டது போலும்".
"ஆமாம் குமரன். ஆசாரியன் மட்டுமின்றி அவருக்குத் தொடர்புடைய எல்லோரும் நம்மை ஆளும் உரிமையுடையவர்கள் என்று எண்ணுவதும் அதே போல் நடந்து கொள்வதும் தான் சீடனுக்கு இலக்கணம் என்று சொல்வார்கள். அந்த இலக்கணத்திற்கு இலக்கியமாக அமைந்தவர் இந்த நான்காம் இராமர்".
"இராதா. வெகு நாட்களாக எனக்கு ஒரு ஐயம் உண்டு. நாதமுனிகளின் பேரர் தானே யமுனைத்துறைவனான ஆளவந்தார். அப்படியிருக்க நேரடியாகத் தன் பேரனுக்குத் தானே உபதேசம் செய்யாமல் ஏன் தன் சீடர்களிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்தார்?"
"குமரன். நாதமுனிகள் மறைந்த போது ஆளவந்தார் சிறுவர். அதனால் தான் தன் சீடர்களிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்தார்".
"ம்ம். அது சரி. ஆனால் தாத்தாவுக்கும் பேரனுக்கும் நடுவில் இரு ஆசாரியர்கள் வந்துவிடுகிறார்களே. ஏன் அப்படி?"
"உய்யக்கொண்டார் நாதமுனிகளை விட சில வருடங்களே இளையவர். மணக்கால் நம்பிகள் உய்யக்கொண்டாரை விட சில வருடங்களே இளையவர். ஒருவருக்கு அடுத்து ஒருவர் மறையும் காலம் வந்ததால் ஆளவந்தாருக்குக் குருவாய் இருக்கும் பொறுப்பை ஒருவர் அடுத்தவருக்குக் கொடுக்க வேண்டி வந்தது. நாதமுனிகள் நேரடியாகத் தன் பேரனுக்கு உபதேசம் தர விரும்பினார். ஆனால் காலம் வந்துவிட்டதால் அந்தப் பொறுப்பை உய்யக்கொண்டாருக்குத் தந்தார். அவரும் ஆளவந்தாரைச் சீடராய் அடையும் நேரத்திற்கு முன்னரே மறைய வேண்டி வந்ததால் மணக்கால் நம்பியிடம் அந்தப் பொறுப்பைத் தந்தார். அதனாலேயே நாதமுனிகளை ஆளவந்தாரின் நேரடி ஆசாரியராகச் சொல்லும் வழக்கமும் உண்டு".
"இப்போது புரிகிறது இராதா. நன்றி".
"இன்னொன்றும் சொல்ல வேண்டும் குமரன். சேனை முதலியாரின் அம்சம் நம்மாழ்வார் என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். சேனை முதல்வரான விஷ்வக்சேனரின் சேனைத்தலைவர்கள் கஜானனர், குமுதர், குமுதாட்சர், ஹரிவக்த்ரர் என்பவர்கள். கஜானனர் நாதமுனிகளாகவும், குமுதர் உய்யக்கொண்டாராகவும், குமுதாட்சர் மணக்கால் நம்பியாகவும், ஹரிவக்த்ரர் ஆளவந்தாராகவும் அவதரித்தார்கள் என்றும் சொல்லுவார்கள்".
"ஆகா. அருமை அருமை. மிக்க நன்றி இராதா. இப்போது மணக்கால் நம்பிகளுடைய வாழித் திருநாமத்தைப் படித்தால் நன்கு புரியும் என்று நினைக்கிறேன்".
***
தேசம் உய்யக் கொண்டவர் தாள் சென்னி வைப்போன் வாழியே
தென்னரங்கர் சீர் அருளைச் சேர்ந்திருப்போன் வாழியே
தாசரதி திருநாமம் தழைக்க வந்தோன் வாழியே
தமிழ் நாதமுனி உகப்பைத் தாபித்தான் வாழியே
நேசமுடன் ஆரியனை நியமித்தான் வாழியே
நீள் நிலத்தில் பதின்மர் கலை நிறுத்தினான் வாழியே
மாசி மகம் தனில் விளங்க வந்துதித்தான் வாழியே
மால் மணக்கால் நம்பி பதம் வையகத்தில் வாழியே
உலகம் உய்யும் வகையில் தமிழ் மறைகளை நிலை நாட்டியவரான உய்யக்கொண்டாரின் திருவடிகளைத் தன் தலையில் ஏந்திக் கொள்ளும் மணக்கால் நம்பி வாழ்க!
தென்னரங்கரின் சிறந்த அருளை என்றும் நினைத்திருப்பவர் வாழ்க!
தசரதன் மகனான இராமனின் திருநாமம் உலகில் தழைக்கும் வகையில் நான்காவது இராமனாக வந்தவர் வாழ்க!
தமிழ் மறைகளை மீட்டுத் தந்த நாதமுனிகளின் மகிழ்ச்சியை நிலைநாட்டியவர் வாழ்க!
அன்புடன் உயர்ந்தவரான ஆளவந்தாரை நல்வழியில் செலுத்தியவர் வாழ்க!
நீள் நிலத்தில் பத்து ஆழ்வார்களின் பாசுரங்களை நிலை நிறுத்தியவர் வாழ்க!
மாசி மகம் தன்னில் உலகம் விளங்க வந்து உதித்தவர் வாழ்க!
திருமாலே என்னும் படியான மணக்கால் நம்பி திருவடிகள் உலகத்தில் வாழ்க வாழ்க!
ஆசார்யன் திருவடிகளே சரணம்
ReplyDeleteஒ ! இப்பொழுது தான் புரிகிறது. :) ரவியும் உங்களுக்கு இப்படி தான் சந்தேக நிவர்த்தி செய்து வந்தானா ?
ReplyDelete"டகால்டி" என்ற பட்டம் இனி ரவியிடம் இருந்து குமரனுக்கு மாற்றம் செய்யப்படுகிறது. :)
~
ராதா
"எனக்கு வைணவம் தெரியும், நீ ஒன்றும் சொல்லி கொடுக்க தேவை இல்லை. போடா" என்று நான் யாரிடமாவது எங்காவது சொல்லி இருந்தால் அதனை வாபஸ் வாங்கி கொள்கிறேன். அந்த சமயத்தில் அம்மாதிரி சொல்ல வேறு காரணங்கள் இருந்து இருக்கும். :)
ReplyDelete//சேனை முதல்வரான விஷ்வக்சேனரின் சேனைத்தலைவர்கள் கஜானனர், குமுதர், குமுதாட்சர், ஹரிவக்த்ரர் என்பவர்கள். கஜானனர் நாதமுனிகளாகவும், குமுதர் உய்யக்கொண்டாராகவும், கும்தாட்சர் மணக்கால் நம்பியாகவும், ஹரிவக்த்ரர் ஆளவந்தாராகவும் அவதரித்தார்கள் என்றும் சொல்லுவார்கள்". //
இதெல்லாம் முற்றிலும் புதிய செய்திகள்.
ஆழ்வார் ஆசார்யர் திருவடிகளே சரணம். :)
ஆசார்யர்கள் சரிதங்களில் எனக்கு மிகவும் பிடித்தவை அவர்கள் செய்த த்யாகங்களே ஆகும். "யான் பெற்ற பேறு நாலூரானும் பெற வேணும்" என்று குரேசரால் எப்படி வேண்ட முடிந்தது? மணக்கால் நம்பி எப்படி தனது குருவின் குழந்தைகளை போற்றி வளர்த்து இருக்கிறார் ! அகந்தை சிறிதும் இன்றி, தனது குருவிற்கோ அல்லது இறைவனுக்கோ அல்லது பொது ஜனங்களுக்கோ தங்கள் வாழ்நாளை அர்ப்பணம் செய்த இவர்களின் த்யாக சரிதங்களை கேட்டே மனத் தூய்மை பெறலாம் என்று தோன்றும்.
ReplyDeleteகுமரன் திருவடிகளே சரணம்!
ReplyDeleteகுமர-குரு ராதா திருவடிகளே சரணம்!
இராமா மிஸ்ரனாகிய மணக்கால் நம்பிகள் திருவடிகளே சரணம்!
ReplyDelete//இராமமிச்ரர் அச்சேற்றில் தானே விழுந்து தன் உடலின் மேல் அச்சிறுமியர் ஏறிச் செல்லுமாறு சொன்னார். அதே போல் அவர்கள் செய்ய அவர்களின் காலடித் தடங்கள் அவர் உடலில் விழுந்தன. மணற்கால் தடங்கள் பெற்றதால் அவருக்கு மணக்கால் நம்பி என்ற பெயர் வந்தது//
உம்...
இப்படிச் செய்ய ஒரு மனுஷனுக்கு எவ்ளோ மெல்லிய மனசு இருக்கணும்!
இன்றைய காலத்தில் செய்தால், "புனித பிம்பம்" என்று பேசப்படுவார்கள்! :)
ஆனால் பேசப்படலோ, ஏசப்படலோ, எதையும் பார்க்காது,
இப்படி உள்ளம் குழைந்து, உத்தமன் பேர் பாடி வாழ முடியும் என்பதற்கு,
இவர்கள் தான் ஊக்க சக்தி!
நின் அருளே புரிந்து
இருப்பேன்
இனி என்ன திருக்குறிப்பே?
//நீள் நிலத்தில் பத்து ஆழ்வார்களின் பாசுரங்களை நிலை நிறுத்தியவர் வாழ்க!//
ReplyDeleteபத்து ஆழ்வார்களா? பன்னிரெண்டு பேராச்சே!
இது என்ன குமரன் புதுக்கதை?
மணக்கால் நம்பிகள், ஆளவந்தாருக்கு கீரை கொடுத்து மீட்ட கதையெல்லாம் சொல்ல மாட்டீங்களா குமரன்?
ReplyDeleteஆசார்யர்கள் வாழித் திருநாமம் படிப்பது ஒரு சுவை என்றாலும், அவர்கள் வாழ்வுக் கதைகளைக் கேட்கும் போது தான், இப்படியும் வாழ முடியுமா என்று ஒரு தாபம் ஏற்படுகிறது! அதனால் அவற்றையும் கூட கூடவே சொல்லுங்கள் என்று அடியேன் விஞ்ஞாபனம்!
அடுத்து ஆளவந்தரா?
ReplyDeleteஅதற்கு அடுத்து, ஆகா...நம் இராமனுசனா?
வேண்டுகோளை ஏற்று வரம்பொழி குமரனுக்கு மிக மிக நன்றி!
உய்யக் கொண்டார் அடியை உகந்து அடைந்தோன் வாழியே!
ReplyDeleteஒப்பில் மணக்கால் பதியில் உதித்து அருள்வோன் வாழியே!!
துய்ய கும்ப மகம் நாளில் தோன்றல் உற்றோன் வாழியே!
துயரில் குணக் குழுவாகிச் சகம் புகழ்ந்தோன் வாழியே!!
ஐயம் அற ஆளவந்தார்க்கு அருள் புரிந்தோன் வாழியே!
அவர் பணிய அரங்கன் அடி நிதி கொடுத்தான் வாழியே!!
செய்ய தமிழ் மாலைகளைச் சிந்திப்போன் வாழியே!
சீர் மணக்கால் நம்பிகள் தம் சேவடிகள் வாழியே!!
- இது அதே மணக்கால் நம்பிகளுக்கு இன்னொரு கலை வாழித் திருநாமம்!
வாங்க செல்வ நம்பி ஐயா.
ReplyDeleteஉய்யக்கொண்டார் இடுகையின் பின்னூட்டத்தில் சொன்னது நினைவிருக்கிறதா இராதா? ஒருவர் சொல்ல ஒருவர் எழுதும் வரிசையில் அடுத்த இரட்டையரை அடுத்த இடுகையில் பார்க்கலாம் என்று சொன்னேனே. அந்த இரட்டை தான் இது. :-)
ReplyDeleteடகால்டி பட்டத்திற்கு நன்றி. உண்மையில் இரவி தான் எனக்கு உய்யக்கொண்டாரைப் பற்றியும் மணக்கால் நம்பியைப் பற்றியும் சொன்னது. ஐயமிருந்தால் சொல்லுங்கள் - அந்த மின்னஞ்சலை அனுப்புகிறேன். :-)
//இதெல்லாம் முற்றிலும் புதிய செய்திகள்.
ReplyDelete//
எனக்கும் தான். இந்த இடுகையை எழுதும் போது தான் தெரிந்து கொண்டேன்.
மதுரகவியாழ்வார் நம்மாழ்வாரை மட்டுமே பாடினார்; பெருமாளைப் பாடவில்லை. ஆண்டாள் ஆழ்வாராகக் கருதப்படும் அதே நேரத்தில் நாச்சியாராகவும் கருதப்படுகிறார். அதனால் இவ்விருவரைத் தவிர்த்து மற்ற பத்து பேரை மட்டும் ஆழ்வார் என்று சொல்லும் ஒரு மரபும் இருக்கிறது இரவி. உங்களுக்குத் தெரிந்தது தான். :)
ReplyDeleteகீரை கதையை ஆளவந்தார் வாழித் திருநாமம் பார்க்கும் போது சொல்லலாம் என்று நினைத்தேன் இரவி.
ReplyDeleteமணக்கால் நம்பியின் மற்ற வாழித்திருநாமத்தைத் தந்ததற்கு நன்றி இரவி.
ReplyDeleteஉய்யக்கொண்டாரின் திருவடியை மகிழ்ந்து அடைந்தவன் வாழ்க!
ஒப்பில்லாத மணக்கால் என்ற ஊரில் உதித்து அருள்கின்றவன் வாழ்க!
தூய்மையான கும்ப மாத - மாசி மாத - மக நாளில் தோன்றியவன் வாழ்க!
துயர் இல்லாத குணங்களின் கூட்டமாகி உலகத்தால் புகழப்பட்டவன் வாழ்க!
ஐயம் தீர்ந்து போகும் படி ஆளவந்தாருக்கு அருள் புரிந்தவன் வாழ்க!
அவர் பணியும் படி திருவரங்கனின் திருவடிகள் என்னும் அழியா செல்வத்தை அருளியவன் வாழ்க!
செம்மையுடைய தமிழ் வேதங்களை சிந்திப்பவன் வாழ்க!
சிறந்த மணக்கால் நம்பிகளின் செம்மையுடைய திருவடிகள் வாழ்க!
மின்னஞ்சல் என்றாலே பயமாக இருக்கிறது குமரன். :)
ReplyDeleteநான் நீங்கள் சொல்வதை அப்படியே நம்பி விடுகிறேன். :)