Tuesday, December 22, 2009

தன்னைத் தானே சுற்றுதல்!


சித்திரைத் திருவிழாவின் போது வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் போது ஆற்றிலும் ஆற்றங்கரையிலும் நின்று அந்தத் திருநாளைத் தரிசிக்கும் பேறு பெற்றவர்கள் வினோதமான ஒரு நிகழ்ச்சியைக் கண்டிருக்கலாம். தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் ஆற்றில் இறங்கிய சிறிது நேரத்தில் ஆற்றில் ஏற்கனவே வெள்ளி குதிரை வாகனத்தில் நின்று கொண்டிருக்கும் ஒரு பெருமாள் எதிர் வந்து கள்ளழகரை வரவேற்பதையும் கள்ளழகரை மூன்று முறை வலம் வந்து முதல் மரியாதைகளைப் பெறுவதையும் காணலாம். திருமலை நாயக்கர் காலம் முதலாக இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருவதாகச் சொல்கிறார்கள். அப்படி கள்ளழகரிடம் இருந்து ஆற்றில் இறங்கிய உடனே முதல் மரியாதை பெறுபவர் மதுரை தெற்கு மாசி வீதி வீரராகவப் பெருமாள்.

மதுரை கூடல் அழகர் திருக்கோவிலுக்குத் கிழக்கே சிறிது தொலைவில் மதுரை தெற்கு கிருஷ்ணன் திருக்கோவில் அமைந்திருக்கிறது. அதற்கும் கிழக்கே ஏறக்குறைய தெற்கு கிருஷ்ணன் கோவிலுக்கு நேர் முன்னர் இருப்பது வீரராகவப்பெருமாள் திருக்கோவில். சிறு வயதில் நவராத்திரியின் போது ஒவ்வொரு இரவும் தெற்கு கிருஷ்ணன் கோவில் தொடங்கி, வீரராகவப் பெருமாள் திருக்கோவில், தெற்கு மாசி வீதி காமாட்சி அம்மன் திருக்கோவில், தெற்கு மாசி வீதி திரௌபதி அம்மன் திருக்கோவில், தெற்கு மாசி வீதி தென் திருவாலவாய சுவாமி திருக்கோவில், மேல மாசி வீதி இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோவில், மேல மாசி வீதி மதனகோபால சுவாமி திருக்கோவில், கூடல் அழகர் திருக்கோவில் என்று வரிசையாகச் சென்று நவராத்திரி அலங்காரங்களைத் தரிசித்தது இப்போது நினைவிற்கு வருகிறது. வீரராகவப் பெருமாள் திருக்கோவிலில் வீரராகவப் பெருமாளும் திருவரங்கநாதனும் தனித்தனியே நவராத்திரிக் கொலு வீற்றிருப்பார்கள். திருக்கோலங்கள் காணக் கண் கோடி பெறும்.

திருமலை நாயக்கர் காலத்தில் சித்திரைத் திருவிழாவின் போது கள்ளழகர் வீற்றிருந்த தேனூர் மண்டபத்தில் தீ விபத்து ஏற்பட்ட போது தன் உயிரையும் பொருட்படுத்தாமல் தீயினுள் புகுந்து கள்ளழகர் திருமேனியைக் காத்தார் வீரராகவப் பெருமாள் கோவில் அர்ச்சகர். அந்தத் தீரச் செயலைப் பாராட்டி திருமலை மன்னர் தனக்குரிய முதல் மரியாதையை அர்ச்சகருக்கு வழங்க, அர்ச்சகரோ தன் வழிபடு தெய்வமான வீரராகவப் பெருமாளுக்கு அந்த முதல் மரியாதை கிடைக்க வேண்டும் என்று சொன்னார். அதன் படி அப்போதிலிருந்து சித்திரைத் திருவிழாவின் போது கள்ளழகர் வீரராகவருக்கு முதல் மரியாதை தருகிறார்.

கள்ளழகர் ஆற்றில் இறங்குவதற்கு முன்னரே வெள்ளி குதிரை வாகனத்தில் வீரராகவப் பெருமாள் மதுரையிலிருந்து கிளம்பி வந்து ஆற்றில் இறங்கி காத்திருப்பார். கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் ஆற்றில் எழுந்தருளியவுடன் வீரராகவர் எதிர் சென்று வரவேற்பார். பின்னர் மும்முறை கள்ளழகரைச் சுற்றி வருவார். பின்னர் கள்ளழகர் வீரராகவருக்கு மாலை, பரிவட்டம், தீர்த்தம் முதலியவற்றை அளிப்பார். வீரராகவருக்கு மாலையும் பரிவட்டமும் சூட்டப்படும். வீரராகவரின் பிரதிநிதியாக அர்ச்சகர் தீர்த்த பிரசாதம் பெற்றுக் கொள்வார்.

அடுத்த முறை சித்திரை திருவிழாவின் போது அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தைக் காண அழகர் அழைத்தால் இந்த நிகழ்ச்சியையும் கட்டாயம் கண்டு களியுங்கள்.

21 comments:

  1. நல்ல மலரும் நினைவுகள், அழகரையும் வீரராகவப் பெருமாளையும் பார்த்துட்டு ஓடியே வந்தேன். இந்த வீர ராகவப் பெருமாளை இன்னமும் கோழிச்சொல்லிப் பெருமாள்னு தான் சொல்லிட்டு இருக்காங்களா?? இதுக்காக சண்டையே போட்டிருக்கேன் எல்லாரோடயும், எங்க நண்பரான பரமசாமி வாத்தியாரின் மண்டகப்படியும், அங்கே சாப்பிட்ட புளியோதரை, சர்க்கரைப் பொங்கலும், மேலும் மேல ஆவணி மூலவீதி மொத்தத்துக்கும் அவங்க கட்டிக் கொடுத்ததும் நினைவில் வருது. நன்றி குமரன். அற்புதமான நாட்கள்.

    ReplyDelete
  2. தன்னைத் தானே சுற்றிக் கொள்ளும் கதை சூப்பரு! :)
    அப்படியே கள்ளழகரை தனக்குத் தானே வீரராகவருக்கு, ஆண்டாள் மாலையையும் பச்சைப் பட்டையும் குடுக்கச் சொல்லுங்க பார்ப்போம்! :)

    ReplyDelete
  3. //பின்னர் கள்ளழகர் வீர-ராகவருக்கு மாலை, பரிவட்டம், தீர்த்தம் முதலியவற்றை அளிப்பார்.

    வீர-ராகவருக்கு மாலையும் பரிவட்டமும் சூட்டப்படும்//

    கண்கொள்ளாக் காட்சியா இருக்குதே! ராகவா, ராகவா! :)

    //வீர-ராகவரின் பிரதிநிதியாக அர்ச்சகர் தீர்த்த பிரசாதம் பெற்றுக் கொள்வார்//

    ஏன் ராகவனே தீர்த்தம் வாங்கிக்கிட்டா தான் என்ன? :)

    ReplyDelete
  4. //சித்திரைத் திருவிழாவின் போது கள்ளழகர் வீற்றிருந்த தேனூர் மண்டபத்தில் தீ விபத்து ஏற்பட்ட போது தன் உயிரையும் பொருட்படுத்தாமல் தீயினுள் புகுந்து கள்ளழகர் திருமேனியைக் காத்தார் வீரராகவப் பெருமாள் கோவில் அர்ச்சகர்//

    அருமை!
    என் ஒரு மேனி ஈந்தாங்கு
    உன் திரு மேனி காத்திருப்பேன்!

    உன் முடிச்சோதி, அடிச்சோதி, படிச்சோதி, கடிச்சோதியாம் முகச்சோதியைத் தீயுண்ணத் தருவேனோ? நானுண்ண நாரணனே!

    ReplyDelete
  5. கள்ளழகர், வீரராகவப் பெருமாள் தர்சனம் கண்டேன்.

    ReplyDelete
  6. oh! very very interesting !!
    kumaran, have you already written posts regarding madurai temples? getting to know things from native people is always a treat i cherish very much.

    ReplyDelete
  7. பழைய நினைவுகளைக் தட்டி எழுப்பிட்டீங்க குமரன். நாங்க கூடலழகரில் ஆரம்பிச்சு இக் கோவில்கள் எல்லாம் போவோம். விரைவில் மதுரை போக இருக்கிறேன், ஒரு சுற்று எல்லாக் கோவில்களுக்கும் செல்ல தூண்டிவிட்டீர்கள், போய் வந்து சொல்கிறேன். :)

    ReplyDelete
  8. ஹும், இதெல்லாம் உங்க கூட இப்படி உங்க நினைவுகள்ல பார்த்தாதான் உண்டு :) நன்றி குமரன்.

    ReplyDelete
  9. பரசு ராமரும் விஷ்ணுவின் அவதாரம்;
    ஸ்ரீராமரும் விஷ்ணுவின் அவதாரம்.
    அறம் காக்கும் நோக்கத்தில் வந்த இவ்விருவரும் ஏன் சணடையிட்டுக் கொண்டனர் ?

    தேவ்

    ReplyDelete
  10. கோழிச்சொல்லி பெருமாளா? கேள்விபட்டதே இல்லையே கீதாம்மா. ஏன் அப்படி சொல்வாங்க?

    ReplyDelete
  11. நன்றி இரவி.

    நன்றி மாதேவி.

    இராதா. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலைப் பற்றி எழுதத் தொடங்கி இரண்டோ மூன்றோ இடுகைகள் இட்டேன். எழுத வந்த போது. அப்புறம் நிறைய தொடர்கள் எழுதத் தொடங்கி அது தொடராமல் விட்டுவிட்டேன். ஒவ்வொன்றாக எழுத வேண்டும்; அதற்குள் ஏதேனும் புதிதாக ஒரு தொடர் தொடங்காமல் இருக்க வேண்டும். :-)

    ReplyDelete
  12. போயிட்டு வந்து சொல்லுங்க மௌலி. இந்த முறை மதுரைக்குச் சென்ற போது நானும் தம்பியும் வடக்கு கிருஷ்ணன் கோவிலுக்குச் சென்று வந்தோம். எத்தனையோ முறை சிறுவயதில் அந்தப் பக்கம் சென்றிருந்தாலும் இந்த முறை தான் உள்ளே சென்று சின்னக் கண்ணனைத் தரிசிக்க முடிந்தது.

    ReplyDelete
  13. வாங்க அக்கா ஊருக்கு ஒரு தடவை. சித்திரை மாதம் வந்தா இதெல்லாம் பார்க்கலாமே. இல்லாட்டி தினமலரை சித்திரா பௌர்ணமிக்கு மறு நாள் பார்த்தால் அதில் வீரராகவப் பெருமாள் கள்ளழகரை வலம் வரும் காட்சிகள் படமாக வரும். இந்த இடுகைக்காகத் தேடினேன். கிடைக்கவில்லை.

    ReplyDelete
  14. நல்ல கேள்வி தேவ் ஐயா. ஏன்?

    ReplyDelete
  15. சரிதான், கேட்டதில்லையா குமரன்?? தங்கைக்கு ஆயிரம்பொன் சப்பரம் சீர் எடுத்து வரும் அழகரிடம் இந்தப் பெருமாள் முன்னால் போய் நீ வரதுக்குள்ளே உன் தங்கை கல்யாணம் முடிஞ்சாச்சு, உன்னை மதிக்கலை பாருனு சொல்லிக் கொடுப்பாராம். இதான் எதிர்சேவை என ஒரு கர்ணபரம்பரைக் கதை நாங்க குழந்தைகளா இருக்கும்போது சொல்லுவாங்க. அதான் அழகர் கோவிச்சிண்டு ஆயிரம் பொன் சப்பரத்தை வழியிலேயே விட்டுட்டு ஆத்தில் இறங்கின கையோடு திரும்பிடுவாராம். தனக்கு விஷயம் சொன்ன கோழிச் சொல்லிப் பெருமாளுக்கு மரியாதைகள் செய்வாராம். இதெல்லாம் எங்க வீட்டுப் பாட்டிமார் சொல்லும் கதைகள். விளையாட்டுக்குத் தான் என்றாலும் அந்த சம்பவங்களுக்குப் பொருந்தும்படியான கற்பனை வளம் அவங்களுக்கு. அந்த ஆயிரம் பொன் சப்பரம் சாலையிலேயே நின்னுட்டிருக்குமே, பார்த்திருக்கீங்க தானே???

    ReplyDelete
  16. கள்ளழகரை எதிர்கொண்டு வீரராகவர் அழைத்து சுற்றும் நிகழ்ச்சியை அற்புதமாக விளக்கியுள்ளீர்கள் நன்றி குமரன்.

    ReplyDelete
  17. நல்ல பாட்டி கதைகள் தான் கீதாம்மா. சித்திரை திருவிழாவிற்குத் தான் எத்தனை எத்தனை கதைகள். இறைவன் என்பவன் எங்கோ இருப்பவன் என்று எண்ணாமல் நமக்குள் ஒருவன் என்று எண்ணுவதால் தான் இப்படி எல்லாம் உரிமையுடன் பேச முடிகிறது. பக்தியால் விளையும் உரிமைகளும் கற்பனைகளும் காலம் செல்ல செல்ல சில நேரம் அறியாமையில் விழுந்து விடுகிறது; அப்போது அதனை வைத்துக் கொண்டு 'கள்ளழகரைக் கைது செய்' என்று அவமே கூச்சல் போட்டு குழப்பம் ஏற்படுத்த சில அறிவாளி(!)களுக்கு வாய்ப்பினையும் ஏற்படுத்திவிடுகிறது.

    ReplyDelete
  18. நன்றி கைலாஷி ஐயா.

    ReplyDelete
  19. குமரன்
    இம் முறை டிசம்பர்
    மதுரை திருபரங்குன்றம் அழகர் மலை ]குச்சானூர் தேக்கடி சென்று வந்தோம் .... கள்ளழகர் கோவிலில் முன் வாசல் மூடி வைத்து இருந்தது ...அதற்கு விளக்கம் ஏதோ சொன்னார்கள் புரிய வில்லை

    அந்த சமயம் ஒரு இ ளைஞன் கோபுர உச்சி யீல் ஏறி அமர்களம் செய்ய ஓரே கூட்டம் குரங்கள் அட்டகாசம்
    ஜாலி யாக தான் இருந்தது

    ...
    .சித்ரம்

    ReplyDelete
  20. //கள்ளழகர் கோவிலில் முன் வாசல் மூடி வைத்து இருந்தது ...அதற்கு விளக்கம் ஏதோ சொன்னார்கள் புரிய வில்லை //

    கள்ளழகர் கோயிலின் முன் வாசல் திறந்து தான் இருக்கும். நீங்கள் சொல்வது பதினெட்டாம்படிக்கருப்பண்ணசாமி சந்நிதியை என நினைக்கிறேன். கருப்பண்ணசாமியைத் தாண்டித்தான் உள்ளே செல்லவேண்டும். அந்தக் கதவுகள் தான் மூடி இருக்கும். முன்னெல்லாம் குறிப்பிட்ட சில நாட்களில் தான் தரிசனம். இப்போ பணம் கொடுத்துச் சீட்டு வாங்கலாம்னு இருக்கிறதா சொன்னாங்க. சீட்டு வாங்கித் தரிசிக்கலாம்னு ஏற்படுத்தப் பட்டுள்ளது. என்றாலும் இன்றும் கருப்பண்ணசாமியின் மகிமை குறையவில்லை. இன்றும் அங்கே பொய்ச்சத்தியம் செய்தவர்கள் கூட குற்றத்தை ஒப்புக் கொள்வார்கள். ஒரு காலத்தில் நீதிமன்றமே அந்தக் கோயிலின் முன்னால் சொல்லப் பட்ட வாக்குறுதிகளையும், தீர்ப்புகளையும் மதித்ததாக வரலாறு.

    ReplyDelete
  21. என்ன விளக்கம் சொன்னார்கள் சித்ரம்? கீதாம்மா சொன்ன விளக்கம் போலவா? வேறெதாவதா?

    ReplyDelete