மார்கழி மாதத்தில் வரும் தமிழின் திருநாளாம் திருவாய்மொழி திருமொழித் திருநாளைப் பற்றி திரு. மோகனரங்கன் அவர்கள் எழுதிய கட்டுரையை இங்கே 'படித்ததில் பிடித்தது' வகையில் தருகிறேன்.
***
திருமொழித் திருவாய்மொழித் திருநாள்
தமிழின் திருநாள்
சார்! வைகுண்ட ஏகாதசி வரது போல இருக்கே! ஸ்ரீரங்கம் போகப்போறீங்களா? என்றார் நண்பர் தொலைபேசியில். கூப்பிட்டால் போகலாம் என்றேன். 'என்ன சார் இதுக்கெல்லாம் கூப்பிடுவாங்களா? நாமேதான் போகவேண்டும்' என்று உபதேசம் செய்தார். 'ஆமாம் சரிதான்' என்று சொல்லிவைத்தேன். ஆனால் நான் மட்டுமன்று. நெடுங்காலம் ஸ்ரீரங்கத்திலேயே ஊறிப்போனவர்கள் யாரை நீங்கள் கேட்டாலும் இது போன்ற பதில்தான் வரும். இப்பொழுது டி வி சானல்கள் வந்து எல்லாவற்றையும் மழுங்க அடித்திருக்குமோ என்னவோ. உண்மையான ஸ்ரீரங்கத்துக்காரர் என்றால் அப்படித்தான். 'அவனுக்கு என்ன சார் எதைப் பற்றியுமே கவலையில்லாமல் படுத்துண்டு இருக்கான்' என்று சொன்னால் நீங்கள் ஸ்ரீரங்கத்தில் 'யாரு? வீட்டிலயா? பையனா? மாமாவா? தோப்பனாரா? ' என்றெல்லாம் கேட்டுக்கொண்டிருக்கக் கூடாது. பூலோக வைகுண்டம் என்று ஸ்ரீரங்கத்தைச் சொல்வது ஏதோ உபசாரமாக அன்று. ஸ்ரீவைஷ்ணவ ஆகமங்களில் ஸ்ரீவைகுண்டம் என்பது என்ன விவரணைகளோடு அமைந்திருக்கிறதோ அதனுடைய ஆர்கிடெக்ட் மாடல் போன்றதுதான் ஸ்ரீரங்கம். ஏன் பாரமேஸ்வர சம்ஹிதையில் என்னென்ன திக்பாலர்கள், அதிஷ்டான தேவதைகள், கிரியா பாதத்தின் படி என்னென்ன மூர்த்தி பேதங்கள், உற்சவாதிகளின் தாத்பர்யம் அனைத்தையும் நுணுக்கமாக பாரமேஸ்வர சம்ஹிதை கோவிந்தாச்சாரியார் ஸ்வாமி ஒரு காலத்தில் விளக்கமாகச் சொல்லிக் கொண்டிருந்தார். அவரிடம் அந்த நுணுக்கங்களை எழுதி வாங்கிப் பாதுகாக்க வேண்டும் என்று பல மகனீயர்கள் சொல்லிக்கொண்டு இருந்தனர். அதற்குள் காலங்கள் மாறிவிட்டன.
ஆகமங்களில் ஜீவனின் முக்தி அடைதலைப் பற்றிய விவரணைகள் வரும். அர்ச்சிராதி கதியில் சென்று ஜீவன் முக்தியை அடைகிறான் என்பது செய்தி. அர்ச்சிர் என்றால் ஒளி. ஓளிமயமான வழியில் உயிரின் கடைத்தேற்றத்திற்கான பயணம் என்பது எத்தனை ஆரோக்கியமான ஒரு சித்திரம்.! நாம் தான் எல்லாவற்றையும் 60 வயதிற்கு மேல் பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டு, 60 வருவதற்கு முன்னரே, சார் கண் பிரச்சனை, ரொம்ப நேரம் படிக்க முடியலை, உட்கார்ந்த முதுகு பிடிக்கறது, நடந்தா உடம்பு கூட வருகிறது, கால் எல்லாம் விண் விண் என்று இழுக்கிறது, அதிக நேரம் உட்கார்ந்து கேட்க முடியலை, சார் ஏதாவது நல்ல ஸத் விஷயமா காதுல விழுந்தா அப்பா என்ன சுகமா தூக்கம் வருதுங்கிறீங்க, ---இப்படித்தான் நமது ததவார்த்த ரீதியான விஷய்ங்களில் அக்கறையும், கொடுப்பினையும் இருந்து கொண்டிருக்கிறது. 'சார் என்ன நினைச்சிண்டு இருக்கீங்க? அதற்கெல்லாம் ஏது சார் நேரம்? வயிற்றுப் பாடே பெரும் பாடு. அது போதாதுன்னு ஏகப்பட்ட பிக்கல் பிடுங்கல், வீட்டில், ஆபீசில். ஆனால் கிரிக்கட் பார்க்க இதெல்லாம் தடையாவதில்லை. சினிமா நட்சத்திரங்கள் ஆட்டம் பாட்டங்களைப் பார்க்க எதுவும் தடையில்லை. இதில் எதுவும் தப்பில்லை. ஏனெனில் லோகோ பின்ன ருசி: ஆயினும் 'கிளரொளி இளமை கெடுவதன் முன்னம் வளரொளி மாயோன் மருவிய கோயில் தளர்விலராகில் சார்வது சதிர்' என்று போய்ப்பார்த்தால், அதுவும் மார்கழி மாதத்தில் விடியற் பொழுதின் பனிப்படலத்தில், அன்றாடம் பொங்கிய பொங்கலும், பொழியும் இசையும், வழியும் கதிரொளியுமாய் ஸ்ரீரங்கம் ஸ்ரீவைகுண்டமேதான் என்று சொல்ல வேண்டியிருக்கும். ஸ்ரீரங்கநாதனோ ஆகமங்களில் சொல்லியபடி ஜீவன் முக்தி அடையும் அர்ச்சிராதி மார்க்கத்தைத் தானே முக்தனாக வேஷம் போட்டுக் காண்பித்து நடித்துக்க்கொண்டிருப்பான்.
மார்கழி முதல் தேதி முதல் தொடங்கும் திருப்பாவை நம்மை ஸர்வ அவஸ்தைகளினின்றும் துயிலெழத் தூண்டியபடியே இருக்கும். பகல் பத்து இராப் பத்து என்று 21 நாட்கள் மக்கள எல்லாம் கோவிலை நோக்கிப் போவதும், அர்ஜுன மண்டபத்தில், திருமாமணி மண்டபத்தில் என்று மாறி மாறி அரங்கத்தரவின் அணையான் அக்காவின் தொணப்பல் தாங்காமல் ஒருவழியாய் எழுந்து சுறுசுறுப்பாகக் கிளம்பித் தமிழை உன்னிப்பாகக் கேட்டுக்கொண்டிருப்பான். தமிழை அவனுக்கு எடுத்துச் சொல்லும் அரையர்களோ மகாராஜாக்கள் போல் தலையில் கிரீடம் தரித்து நின்று சொல்வார்கள். இந்த டியூஷன் படிக்கற பிள்ளை சமத்தாகத் தன் கூட்டாளிகளை எல்லாம் செட் சேர்த்துக்கொண்டு உட்கார்ந்து கேட்கும். இந்த ட்யூஷன் வாத்யார்கள் எல்லாம் மிகவும் கண்டிப்பு. கொஞ்சம் விட்டால் பிள்ளையாண்டான் தூங்கப் போய்விடும் என்று தெரியும்.
அது சரி. இந்த மாதிரி கோவிலில் தெய்வத்திற்குத் தமிழைச் சொல்வது என்பது நாம் விளையாட்டாகச் சொல்லி விட முடிகிறது. ஆனால் எந்தக் காலத்தில் யார் ஏற்படுத்தினது? உலக மதங்களிலேயே இன்றும் பொருள் தெரிகிறதோ இல்லையோ கடவுளுக்கு என்று புராதன மொழியில்தான் சொல்ல வேண்டும் என்பது பெரிதும் மாறாமல் இருக்கும் போது இங்கு மட்டும் சாந்தமாக ஒரு புதுமை. கவிதை சொட்டச் சொட்டப் பைந்தமிழில் கடவுள் காதலைக் கைங்கர்ய பரர்கள் விண்ணப்பம் செய்ய அவன் சற்று அங்கும் இங்கும் திரும்பினாலும் ம்ம்ம்ம் 'மெய் நின்று கேட்டருளாய்' என்று அதட்டி அன்போடு ஸேவிக்கின்றார்கள். யார் இதற்கெல்லாம் அடிப்படை இட்டது தெரியுமா?
வேறு யார் திருமங்கை மன்னன் தான். ஊரை வளைத்து மதிலைக் கட்டினார். உண்மையை வளைத்துத் தமிழைக் கட்டினார். உறங்கிய பக்தியை துயிலெழுப்பினாள் அக்கா. உறங்காத தெய்வம் விழித்துக் கொண்டது. தமிழ் பின் சென்ற பெருமாள் தண் தமிழ்க் கொண்டல் பொழிய திருவோலக்கம் இருந்து நனைகின்றான். திருமங்கை மன்னனுக்குத் திருவாய்மொழி என்றால் கொள்ளை ஆசை. நம்மாழ்வாரின் பக்திப்பெருக்கில் அமிழ்ந்தார். தம்முடைய திருவாய்மொழியைக் கேட்டு ஆரார் வானவர்கள் என்று சடகோபன் சொன்னது அவர் மனத்தில் ரீங்காரம் இட்டுக்கொண்டு இருந்தது. நிதய சூரிகளே இங்கிருப்போர் அங்கு சென்றால் 'உங்களுக்குத் திருவாய்மொழி தெரியுமா? சொல்லுங்கள் சொல்லுங்கள் என்று சொல்லச் சொல்லிக் கேட்டு திருப்தி அடைய மாட்டார்களாம். ஸ்ரீவைகுண்டத்திலேயே இந்த கதி என்றால் பூலோக வைகுண்டத்தில் நிச்சயம் அது நடைமுறைக்கு வரவேண்டுமே என்று நினைத்தவர் சமயத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். ஒரு நாள் அரஙகனின் அருளப்பாடு வந்தது. 'கலியன் என்ன வேண்டும் உமக்கு?' சரியான சமயம். கலியன் விடுவாரா? 'நாயன் தே! வடமொழி வேதங்களை நீர் அத்யயனத் தொடக்கம் தொடங்கி செவி மடுப்பது போல் திராவிட வேதமாகிய திருவாய்மொழியையும் அதற்கு முந்தைய பத்து நாட்கள் தேவிமார் பரிஜனங்கள் உடனே திருவோலக்கமாக வீற்றுக் கேட்டருள வேண்டும்.' என்றார். வானிளவரசு வைகுந்தக் குட்டன்
வரந்தரும் பெருமாள் ஆனார்.
அன்று தொடங்கி ஆழ்வார் திருநகரியிலிருந்து நம்மாழ்வாரை எழுந்தருளப் பண்ணிக்கொண்டு வந்து திருவாய்மொழித் திருநாள் நடத்தும் வழக்கம் நடந்தது. அதற்கு நம்மாழ்வாருக்கு அழைப்பு ஓலை பெருமாள் கைப்பட எழுதி அனுப்புவது திருக்கார்த்திகை தீபத்தின் அன்று. பின் காலம் இருட்டாகி திருவாய்மொழி மறைந்து, நாதமுனிகள் 'ஆராவமுதே' பத்துப்பாட்டின் பின் தொடர்ந்து சென்று ,
திருவாய்மொழி, திருமங்கை மன்னன் மற்ற ஆழ்வார்கள் அனைவரது பாடல்களையும் மீட்டது ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாய வரலாறு.
நாதமுனிகள் திவ்ய பிரபந்தங்களை மீட்டு, நின்று போயிருந்த தமிழ்த் திருநாளை மீண்டும் தொடங்கி, பண்டை நாளைவிட இன்னும் விமரிசையாக தேவ கானம் என்ற புதிய இசை முறையில் ஆழ்வார் பாடல்களை இசையமைத்து உரியவரைப் பயிற்றி பெரும் ஓலக்கமாகச் செய்து திருவிழாவாக ஆக்கிவிட்டார். திருவாய்மொழிக்கு திருநாள் கண்ட கலியனின் திருமொழிகளையும், மற்றுமுள்ள ஆழ்வார்களின் பாசுரங்களையும் திருவாய்மொழி பத்துநாளுக்கு முந்தைய பத்துநாளும் பகலில் விண்ணப்பம் செய்ய ஏற்பாடு செய்து, திருமொழித் திருவாய்மொழித் திருநாளாக வளர்த்தெடுத்த பெருமை நாதமுனிகளைச் சேரும். மங்கை மன்னன் வேற் கலியன் மான வேல் பரகாலன் கண்ட கனா அவர் காலத்திலேயே வேரூன்றி நாதமுனிகள் காலத்தில் கப்பும் கிளையும் கனியும் தட நிழலுமாய் விரிந்து எம்பெருமானார் காலத்திலோ பெரும் கற்பக விருட்சமாய் விச்வரூபம் எடுத்ததுதான் சங்கத் தமிழ் ரங்கத் தமிழாகித் திருவோலக்கம் வீற்று இன்றும் இனியும் விண்ணும் ஆண்டு நிற்கிறது மண்ணூடே.
சூடிக்கொடுத்த சுடர்க் கொடி
சொல்லிக் கொடுத்த நெறிப்படி
சங்கத் தமிழ்ச் சங்கமத்தில்
சாத்வத நூல் சையோகத்தில்
வேதாந்தம் விளையுதம்மா
விண்ணும் இங்கே தெரியுதம்மா
மார்கழித் திங்கள்
மதி நிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ !
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
***
//சங்கத் தமிழ் ரங்கத் தமிழாகி//
ReplyDeleteஹா ஹா ஹா
நடத்துங்க! நடத்துங்க! :)
//அர்ச்சிராதி கதியில்//
ReplyDeleteஅர்ச்சிர் = ஒளி
அர்ச்சிர் ஆதி-ன்னா என்ன குமரன்?
//ஜீவன் முக்தி அடையும் அர்ச்சிராதி மார்க்கத்தைத் தானே முக்தனாக வேஷம் போட்டுக் காண்பித்து நடித்துக்க்கொண்டிருப்பான்//
ReplyDeleteசரியான வேஷதாரியா இருப்பான் போல இருக்கே? :))
என்ன மாதிரி வேஷம், என்ன கெட் அப், யார் கிட்ட போயி சரணாகதி பண்ணுவான், குமரன்?
//ஆனால் எந்தக் காலத்தில் யார் ஏற்படுத்தினது?
ReplyDeleteஉலக மதங்களிலேயே இன்றும் பொருள் தெரிகிறதோ இல்லையோ கடவுளுக்கு என்று புராதன மொழியில்தான் சொல்ல வேண்டும் என்பது பெரிதும் மாறாமல் இருக்கும் போது
இங்கு மட்டும் சாந்தமாக ஒரு புதுமை.
கவிதை சொட்டச் சொட்டப் பைந்தமிழில் கடவுள் காதலைக் கைங்கர்ய பரர்கள் விண்ணப்பம் செய்ய
அவன் சற்று அங்கும் இங்கும் திரும்பினாலும்
ம்ம்ம்ம் 'மெய் நின்று கேட்டருளாய்' என்று அதட்டி
அன்போடு ஸேவிக்கின்றார்கள்//
சூப்பரோ சூப்பர்!
அடியேன் மெய் நின்று கேட்டேன்! :)
//யார் இதற்கெல்லாம் அடிப்படை இட்டது தெரியுமா?
ReplyDeleteவேறு யார் திருமங்கை மன்னன் தான்//
அச்சோ! ச்சோ ஸ்வீட் ராபின்ஹூட் ஆழ்வார்! :)
உன் கையில் "வேல்" இருக்கே! நீ செய்யாம வேறு யாரு தமிழுக்குச் செய்வது? :)
//அரங்கத்தரவின் அணையான் அக்காவின் தொணப்பல் தாங்காமல் ஒருவழியாய் எழுந்து சுறுசுறுப்பாகக் கிளம்பித் தமிழை உன்னிப்பாகக் கேட்டுக்கொண்டிருப்பான்//
ReplyDeleteMay I know, Who is this "akka"? :)
//திருமங்கை மன்னனுக்குத் திருவாய்மொழி என்றால் கொள்ளை ஆசை. நம்மாழ்வாரின் பக்திப்பெருக்கில் அமிழ்ந்தார்//
ReplyDeleteபின்னே, இருக்காதா?
முன்னவர் வைகாசி விசாகன்!
பின்னவர் கையில் வேல்!
அதான் கனெக்சன்! :)
முருகா! முருகா!
//நிதய சூரிகளே இங்கிருப்போர் அங்கு சென்றால் 'உங்களுக்குத் திருவாய்மொழி தெரியுமா? சொல்லுங்கள் சொல்லுங்கள் என்று சொல்லச் சொல்லிக் கேட்டு//
ReplyDeleteஆகா!
திருவாய்மொழிக்கு உருகாதார்
ஒருவாய்மொழிக்கும் உருகார்!
அப்படின்னா நான் திருவாய்மொழி படிச்சிட்டுப் போகணும் போல இருக்கே! நித்ய சூரிகளை ஏமாற்றம் அடைய வைக்க மனசு வராதே!
// வடமொழி வேதங்களை நீர் அத்யயனத் தொடக்கம் தொடங்கி செவி மடுப்பது போல்
ReplyDeleteதிராவிட வேதமாகிய திருவாய்மொழியையும் அதற்கு முந்தைய பத்து நாட்கள் திருவோலக்கமாக வீற்றுக் கேட்டருள வேண்டும்.//
ராபின்ஹூட் ஆழ்வார் கலக்கி இருக்காரு போல!
எத்தனை பேர் எதிர்ப்பையும் பொல்லாப்பையும் சம்பாதித்து, இதைப் பெற்றுக் கொடுத்தாரோ?
எத்தனை பேர்?
எத்தனை பேறு??
//நாதமுனிகள் திவ்ய பிரபந்தங்களை மீட்டு, நின்று போயிருந்த தமிழ்த் திருநாளை மீண்டும் தொடங்கி//
ReplyDeleteஅருமை!
//பண்டை நாளைவிட இன்னும் விமரிசையாக தேவ கானம் என்ற புதிய இசை முறையில்//
இது இன்னும் உரக்க எடுத்துச் சொல்லப்பட வேணும்!
நாதமுனிகள் "தேவகானம்" என்று இசை வடிவாகத் தான், ஆழ்வார் பாசுரங்களைத் தொகுத்து வைத்தார்! அரையர்களும் அவ்வண்ணமே இசை-நடனமாகப் பாடினர்! சந்தை முறையில் அல்ல!
சந்தை முறையில் வேதம் போல் ஓதுவது என்பது பூசைகளில் மட்டுமே! மற்ற இடங்களில் எல்லாம் இசை முறையில் தான்!
பின்னாளில் இசை முறை மறைந்து போய், முழுக்கவே சந்தை முறை என்று ஆகி விட்டது! :(
அதுக்குப் பேரே பா-சுரம் = கவி+இசை!
இசை கூட்டிப் பாடுவது என்பது அண்மைக் காலமாக ஆர்வலர்களால் முயற்சிக்கப்படுகிறது!
மறைந்த அரையர் ராமா பாரதி அவர்கள் இதற்குப் பெரிதும் முயற்சி எடுத்தார்!
ஆடி ஆடி அகம் கரைந்து
இசை பாடிப் பாடி...நாடி நாடி
//மங்கை மன்னன் காலத்திலேயே வேரூன்றி
ReplyDeleteநாதமுனிகள் காலத்தில் கப்பும் கிளையும்
எம்பெருமானார் காலத்திலோ பெரும் கற்பக விருட்சமாய்
சங்கத் தமிழ் ரங்கத் தமிழாகித்
திருவோலக்கம் வீற்று இன்றும் இனியும் விண்ணும் ஆண்டு நிற்கிறது மண்ணூடே//
பல்லாண்டு பல்லாண்டு சங்கத் தமிழ் அரங்கத் தமிழாய்க் கொலு வீற்றிருக்கட்டும்!
அடியார்கள் வாழ
அரங்கநகர் வாழ
சடகோபன் தண் -தமிழ் வாழ
இன்னுமொரு நூற்றாண்டு இரும்!
//'அவனுக்கு என்ன சார் எதைப் பற்றியுமே கவலையில்லாமல் படுத்துண்டு இருக்கான்' என்று சொன்னால் நீங்கள் ஸ்ரீரங்கத்தில் 'யாரு? வீட்டிலயா? பையனா? மாமாவா? தோப்பனாரா? ' என்றெல்லாம் கேட்டுக்கொண்டிருக்கக் கூடாது.//
ReplyDelete:)
Very nice post.:)
//அர்ச்சிர் ஆதி-ன்னா என்ன குமரன்?//
ReplyDeleteஉங்கள் அறிவினாவிற்கு இதோ விடை இரவி. முக்தி அடையும் தகுதி பெற்ற உயிர் (ஜீவன்) ஒளி முதலியவற்றை வழியாகக் கொண்டு முக்தி அடைவதாக வேதங்கள் சொல்கின்றன - அந்த வழி ஒளியை முதலாகக் கொண்ட வழி - அர்ச்சிர் ஆதி கதி. முக்திக்குத் தகுதியில்லாத உயிர் புகை முதலியவற்றை வழியாகக் கொண்டு செல்ல வேண்டிய மேல் கீழ் உலகங்களுக்குச் சென்று பின்னர் மீண்டும் பிறக்கும் என்றும் வேதங்கள் சொல்கின்றன - அந்த வழி புகையை முதலாகக் கொண்ட வழி - தூம ஆதி கதி. சரி தானா? :-)
--
இரவி, அந்த வேடதாரியைப் பார்க்க வேண்டும் என்றால் திருவரங்கத்திற்குச் செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். அங்கே போய் பார்த்தால் என்ன மாதிரி வேடம், யாரிடம் சரணாகதி என்பதெல்லாம் புரிந்தால் புரியலாம். :-)
--
இரவி,
தமிழென்றால் அங்கே முருகன் தொடர்பு இருந்தால் தான் ஆகும் என்று நீங்களும் எண்ணுவது போல் இருக்கிறதே? மாறனுக்கும் நீலனுக்கும் வேலனுக்கும் உள்ள தொடர்புகளைச் சொல்வது வேறு, அந்த தொடர்பு இருப்பதாலேயே தான் தமிழுக்கு மாறனும் நீலனும் தொண்டாற்றினார்கள் என்று சொல்வது வேறு. நுண்ணிய அந்த வேறுபாடு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். கண்ணனும் தமிழ்க்கடவுள் என்பதால் அவன் அடியார்களான காரிமாறனும் கலியனும் தமிழுக்குச் செய்தார்கள்! விசாகனாய் இருப்பதும் வேலனாய் இருப்பதும் கூடுதலாகச் சொல்லலாமே ஒழிய அவையே தனிச்சிறப்புகளாகச் சொல்லிச் சென்றால் 'முருகன் மட்டுமே தமிழ்க்கடவுள்' என்று அவமே சாதிப்பவர்களின் கருத்திற்கு நம்மையறியாமல் துணை செல்பவர்கள் ஆவோம்.
--
உங்க தோழியைத் தான் மோகனரங்கன் ஐயா அக்கான்னு சொல்றார் போல.
--
என்னமோ திருவாய்மொழியே படிக்காத மாதிரியில்ல சொல்றீங்க?!
--
திராவிட வேதத்தைத் திருவோலக்கமாக அமர்ந்து கேட்டருள வேண்டும் என்று திருமங்கைமன்னன் திருவரங்கனை வேண்டி இத்திருநாளைத் தொடங்கிய போது அங்கே எதிர்ப்புகளும் பொல்லாப்புகளும் இருந்தனவா? படித்த நினைவில்லை. அப்படி இருந்திருந்தால் கோயிலொழுகு போன்ற நூல்களில் அவை பதியப் பெற்றிருக்கும். உங்களுக்கு ஏதேனும் தெரியுமா இரவி? இல்லை ஊகம் மட்டும் தானா?
நன்றி இராதா.
ReplyDelete//உங்களுக்கு ஏதேனும் தெரியுமா இரவி? இல்லை ஊகம் மட்டும் தானா?//
ReplyDeleteஊகம் மட்டுமே இல்லை குமரன்!
ஊக்கமும் கூட! :)
திருமங்கை துவங்கின தமிழ் விழா எப்படி நின்று போனது?
நாதமுனிகள் எப்படி அதை ஓரளவு மீட்டுக் கொடுத்தார்?
பிற்பாடு இராமானுசர், எப்படி ஆகமத்தை மாற்றி, தென்னரங்கன் செல்வம் முற்றும் திருத்தி வைத்து...
அதை என்றும் நிலைத்திருக்கும் வண்ணம் ஏற்படுத்தி வைத்தார்?
இதெல்லாம் கொஞ்சம் கோயிலொழுகிலே காணக் கிடைத்தாலும்,
நிறைய வரலாற்றுச் செய்திகள், சீடர்கள் எழுதிச் சென்ற வரலாற்றுக் குறிப்புகளில் அதிகம் காணலாம்!
குறிப்பாக
அனந்தாழ்வான்,
பின்பழகிய பெருமாள் ஜீயர்
ககனகிரி முனி குரு பரம்பரா பிரபாவம்...போன்றவற்றில் கிடைக்கும்!
//உங்க தோழியைத் தான் மோகனரங்கன் ஐயா அக்கான்னு சொல்றார் போல//
ReplyDeleteஆகா!
நீ எப்படீ அக்கா ஆன? :)
உனக்குப் 400 வருசம் பின்னாடி பொறக்கறவங்களுக்கு கூட நீ எப்பமே தங்கச்சி தானே? :))
அம்புட்டு Youth நீ! :))
//இரவி,
ReplyDeleteதமிழென்றால் அங்கே முருகன் தொடர்பு இருந்தால் தான் ஆகும் என்று நீங்களும் எண்ணுவது போல் இருக்கிறதே?//
* முருகன் தொடர்பு என்பது இல்லாமல் தமிழ்த் தொடர்பு என்பதே இல்லை!
* தமிழ்த் தொடர்பு என்பது இல்லாமல் முருகன் தொடர்பு என்பதே இல்லை!
தமிழாய் ஆகி நிற்பவன் முருகன்!
தமிழைத் தரணிக்குக் கொணர்ந்தவனும் அவனே!
தமிழுக்கு ஒரு ஏற்றம் என்றால், அதில் முருகனின் ஊற்றம் என்றுமே உண்டு! அது ஆழ்வார் அருளிச் செயல்கள் உட்பட!
//'முருகன் மட்டுமே தமிழ்க்கடவுள்' என்று அவமே சாதிப்பவர்களின் கருத்திற்கு நம்மையறியாமல் துணை செல்பவர்கள் ஆவோம்.//
ReplyDelete:)))
அப்படியே துணையாகிப் போனாலும் ஒன்றும் ஆகி விடாது! :)
Two Things in this World - You can never hide!
* One is Pregnancy :)
* Other is Merit!
இரண்டுமே, என்றோ ஒரு நாள் தானாய் வெளிப்பட்டு விடும்!
திருமாலு"ம்" தமிழ்க் கடவுளே - என்பது போல!
முன்பே சொன்னது தான் குமரன் அண்ணா!
"புரட்சித் தலைவர்" என்ற அடைமொழி இல்லாததால், பெரியார், புரட்சித் தலைவர் இல்லை என்று ஆகி விடுமா என்ன? :)
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்!
சமய அளவில் வேண்டுமானால் "வைணவம்" என்று மக்கள் ஒரு பெயரை வைத்துக் கொண்டாலும்,
ReplyDeleteஅதிலும் தன்னை அறியாமல், தன்னையே தமிழாய் வெளிப்படுத்துகிறான் என் முருகப் பெருமான்!
சமயங்களாய்ப் பிரித்துக் கொண்டதால், முருகன் வைணவத்தில் இல்லாதது போல் இருக்கலாம்! ஆனால் அங்கும் அவனே தமிழாய் இருக்கிறான்!
1. குல முதல்வன் மாறன் - வைகாசி "விசாகத்தில்" முருகனைப் போலவே தோன்றினான்.
* முருகன் தமிழைப் பொதுவாக்கி வைத்தான்.
* மாறன், தமிழால், மறையைப் பொதுவாக்கி வைத்தான்!
2. குல ஏறு, திருமங்கை - "கார்த்திகையில்" தான் தோன்றினான்!
ஒரு மன்னன், வாள் ஏந்திய கோலத்தில் இல்லாது,
இன்றும் வேல் ஏந்திய கோலத்தில் தான் உள்ளான்!
அதுவும் முருகனின் அம்சமாய் வந்த சீகாழிப் பிள்ளை தந்த வேல் என்றே சொல்லப்படுவது!
இதனால் எல்லாம், முருகன் தான் ஆழ்வார்களாய் தோன்றினான் என்று நான் சொல்ல வரவில்லை! :)
ஆனால், தமிழைத் தழைக்கும் முயற்சிகளில் எல்லாம், முருகனருள் அவன் அம்சங்களாய்த் தானாய் வெளிப்பட்டது என்றே சொல்ல வருகிறேன்!
இன்னும் ஆய்வுக்குக் கூடச் செல்லலாம்!
* அகத்தியருக்குத் தமிழ் கற்பித்து, இலக்கணம் எழுதுவித்து,
* மாயோனின் வேளிர் குடிகளைத் துவராபதியில் இருந்து பொதிகை ஏகுவித்து,
* தமிழ் மரபு வளர்வித்த முறைமை எல்லாம் கூட உண்டு!
தொல்காப்பியம்-பொருளதிகாரத்தில்(34) நச்சினார்க்கு இனியர் உரையில், இதெல்லாம் உண்டு!
இப்படி "நெடு முடி அண்ணல்" மாயவனும், என் முருகனும், தமிழ் முயற்சிகளில் எல்லாம், தங்களைத் தாமே பலவாறு வெளிப்படுத்தி உள்ளனர்! சமயக் கதைகளில் இல்லையென்றாலும் கூட!
* தமிழ்க் கடவுள் முருகவேள் தொடர்பு இன்றி தமிழ் இல்லை!
* தமிழ்க் கடவுள் மாயோன் இன்றித் தமிழர் நிலமே இல்லை!
* சமயங்களுக்குள் மட்டுமே இவர்கள் அடங்குவதும் இல்லை!
எம்பெருமான்
இருந்தமிழ் நன்மாலை இணையடிக்கே சொன்னேன்
பெருந்தமிழன் நல்லேன் பெரிது!
நாரணற்கு ஞானத் தமிழ் புரிந்த நான்!
அர்ச்சிர் = ஒளி
ReplyDeleteஅர்ச்சிர் ஆதி-ன்னா என்ன குமரன்?
'अर्चिरादि गति:' -அர்ச்சிராதி கதி
அர்ச்சிஸ் ஆதி கதி
தூமாதி கதி, அர்ச்சிராதி கதி என இரு வித மார்கங்கள் - கீதை 8/24ல் இது பற்றிக் கூறுகிறார்.
அர்ச்சிஸ் என்பவன் அபிமானி தேவதை;பகல் , இரவு என்னும் அபிமானி தேவதைகள்.
முக்தாத்மா ஒவ்வொரு அபிமானி தேவதையின் ஆளுமையிலும் இருந்துவிட்டு க்ரமமாக முக்தி பெறுகிறான்.
தேவ்
விளக்கத்திற்கு நன்றி தேவ் ஐயா.
ReplyDelete//வேறு யார் திருமங்கை மன்னன் தான். ஊரை வளைத்து மதிலைக் கட்டினார். உண்மையை வளைத்துத் தமிழைக் கட்டினார். உறங்கிய பக்தியை துயிலெழுப்பினாள் அக்கா. உறங்காத தெய்வம் விழித்துக் கொண்டது. தமிழ் பின் சென்ற பெருமாள் தண் தமிழ்க் கொண்டல் பொழிய திருவோலக்கம் இருந்து நனைகின்றான்.//
ReplyDeleteஅருமையோ அருமை
வாங்க கைலாஷி ஐயா. மோகனரங்கன் ஐயா ரொம்ப அழகா எழுதுவார்.
ReplyDelete