பல நாட்களாக சிந்தித்துக் கொண்டிருந்த இரு குறட்பாக்களைப் பற்றி இன்று தான் இங்கே எழுத இயன்றது. செல்வத்தை அருள்பவள் திருமகள், வறுமையைத் தருபவள் அவள் அக்கா மூதேவி என்ற தொன்மம் திருக்குறளில் இருப்பதைப் போல் தோற்றம் தரும் ஒரு குறட்பா இருக்கிறது. இன்னொரு குறட்பா நல்லவன் கடின வாழ்க்கை வாழ்வதும் கெட்டவன் எளிய வாழ்க்கை வாழ்வதும் 'நினைக்கப்படும்' என்று சொல்கிறது. இவ்விரு குறட்பாக்களுக்கும் உரையாசிரியர்கள் சொல்லும் விளக்கம் என்ன என்று படித்துப் பார்க்க வேண்டும் என்று குறித்து வைத்துக் கொண்டிருந்தேன். இன்று அவற்றைப் படித்தேன். பகிர்ந்து கொள்கிறேன். இடையிடையே அவற்றைப் படித்த போது தோன்றும் / தோன்றிய எண்ணங்களையும் பகிர்ந்து கொள்கிறேன்.
***
முதல் குறட்பா 167வது குறட்பா.
அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்
இதற்கு விளக்கம் தரவந்த பரிமேலழகர் 'அழுக்காறு உடையானை - பிறர் ஆக்கம் கண்டவழிப் பொறாமையுடையானை; செய்யவள் அவ்வித்துத் தவ்வையைக் காட்டிவிடும் - திருமகள் தானும் பொறாது, தன் தவ்வைக்குக் காட்டி நீங்கும். (தவ்வை: மூத்தவள்.)' என்று சொல்கிறார். அதற்கு மேல் அவர் விளக்கம் தரவில்லை.
மணக்குடவரோ 'அழுக்காறுடையானைத் திருமகள் தானும் அழுக்காறு செய்து, தன் தவ்வையாகிய மூதேவிக்குக் காட்டி இவன்பாற் செல்லென்று போம்' என்று சொல்லிவிட்டு அடுத்து இன்னொரு வரியை இடுகிறார். 'இது நல்குரவிற்குக் காரணங் கூறிற்று'. நல்குரவு என்றால் வறுமை. இந்தக் குறள் செல்வத்திற்கு காரணமாக அழுக்காறின்மையையும் வறுமைக்குக் காரணமாக அழுக்காறுடைமையையும் கூறியதாக விளக்கம் தருகிறார்.
தேவநேயப் பாவாணர் 'அழுக்காறு உடையானை-பிறராக்கங் கண்டவிடத்துப் பொறாமை கொள்பவனை; செய்யவள் அவ்வித்துத் தவ்வையைக் காட்டி விடும்-செங்கோலத்தினளாகிய திருமகள் தானும் பொறாது தன் அக்கையாகிய மூதேவிக்குக் காட்டி விட்டு நீங்கும்' என்று பொருள் உரைத்துவிட்டு 'அவ்வை அக்கை. தம் அவ்வை தவ்வை; தம் அக்கை தமக்கை என்பது போல. திருமகளின் அக்கை வறுமைக்குத் தெய்வமாதலின், அவளுக்குக் காட்டுதல் என்பது இரண்டாம் வேற்றுமையுருபு நாலாம் வேற்றுமைப் பொருளில் வந்த வேற்றுமை மயக்கம்' என்று மேலும் விளக்குகிறார்.
கலைஞர் கருணாநிதி 'செல்வத்தை இலக்குமி என்றும், வறுமையை அவளது அக்காள் மூதேவி என்றும் வர்ணிப்பதுண்டு. பொறாமைக் குணம் கொண்டவனை அக்காளுக்கு அடையாளம் காட்டிவிட்டுத் தங்கை இலக்குமி அவனைவிட்டு அகன்று விடுவாள்' என்று சொல்கிறார்.
ஆக எந்த வித சார்பும் உடையவர் என்று எண்ணப்படாத மணக்குடவரும், வடவர்களின் கொள்கைகளை உரையில் இட்டு எழுதிவிட்டார் என்று சொல்லப்படும் பரிமேலழகரும், திராவிட கருத்தாக்கத்தின் முன்னோடியான தேவநேயப் பாவாணரும், தற்கால திராவிட கருத்தாக்க முன்னவரான கலைஞர் கருணாநிதியும் இந்தக் குறளுக்கு ஒரே பொருளைத் தான் தருகிறார்கள். ஆக எல்லோரும் இந்தத் தொன்மம் திருக்குறள் காலத்திலேயே தமிழரிடையே மிகுந்த செல்வாக்குடன் திகழ்ந்தது என்று ஒத்துக் கொள்கிறார்கள்.
***
அடுத்த குறட்பா 169வது குறட்பா
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்
இதற்குப் பரிமேலழகர் தரும் விளக்கம் 'அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் - கோட்டத்தினைப் பொருந்திய மனத்தை உடையவனது ஆக்கமும், செவ்வியான் கேடும் நினைக்கப்படும் - ஏனைச் செம்மையுடையவனது கேடும் உளவாயின், அவை ஆராயப்படும். (கோட்டம்: ஈண்டு அழுக்காறு. 'உளவாயின்' என்பது எஞ்சி நின்றது. ஆக்கக் கேடுகள் கோட்டமும் செம்மையும் ஏதுவாக வருதல் கூடாமையின், அறிவுடையரால், 'இதற்கு ஏது ஆகிய பழவினை யாது?' என்று ஆராயப்படுதலின்' 'நினைக்கப்படும்' என்றார். "இம்மைச் செய்தன யான் அறி நல்வினை; உம்மைப் பயன்கொல்ஒருதனி உழந்துஇத் திருத்தகு மாமணிக்கொழுந்துடன் போந்தது" (சிலப். 15: 91௯3) என நினைக்கப்பட்டவாறு அறிக.)'.
அதாவது அழுக்காறு கொண்டவனுக்கு ஆக்கமும் நல்லவனுக்கு கேடும் உளவாகாது. அப்படி எப்போதாவது பார்த்தால் அதனை அறிஞர்கள் ஆராய்வார்கள் என்று விளக்கம் சொல்லி 'உளவாயின்' தொக்கி நின்றது என்று கூறுகிறார். அப்படி ஆராயும் அறிஞர்கள் என்ன பதில் சொல்வார்கள் என்பதையும் சொல்கிறார். அது 'பழவினை'. ஆரியக் கருத்து புகுந்துவிட்டது போல் தெரிகிறதே?! ஹும் பார்ப்போம் மற்றவர் என்ன சொல்கிறார்கள் என்று.
மணக்குடவர் வழக்கம் போல் மிக எளிமையாக 'அழுக்காற்று நெஞ்சத்தானுடைய ஆக்கமும் செவ்விய நெஞ்சத்தானுடைய கேடும் விசாரிக்கப்படும்' என்று சொல்லிப் போந்தார்.
தேவநேயர் கட்டாயம் பரிமேலழகரின் பித்தலாட்டத்தைக் காட்டி உண்மைப் பொருளைத் தந்திருப்பார் என்று எதிர்பார்ப்புடன் அவர் சொன்னதைப் படித்தேன். அவர் தான் வழக்கம் போல் மிக விரிவாகச் சொல்லியிருந்தார். அவர் சொல்லியிருந்தது:
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும்-பொறாமை மனத்தானது செல்வமும்; செவ்வியான் கேடும்-பொறாமை கொள்ளாத செவ்விய மனத்தானது வறுமை அல்லது துன்பமும்; நினைக்கப்படும்-எக்கரணியம் பற்றி நேர்ந்தன வென்று ஆராயப்படும்.
இரு நிலைமையும் இயற்கைக்கும் அறநூற் கொள்கைக்கும் மாறாயிருப்பதால் அவற்றிற்குக் கரணியம் பழவினையே என்பது ஆராய்ச்சியால் அறியப்படும்.
"இம்மைச் செய்தன யானறி நல்வினை
யும்மைப் பயன்கொ லொருதனி யுழந்தித்
திருத்தகு மாமணிக் கொழுந்துடன் போந்தது"
என்னும் மாடலன் கூற்றும் (சிலப். 15;91௯3.)
"என்செய லாவதி யாதொன்று மில்லை யினித்தெய்வமே
உன்செய லேயென் றுணரப்பெற் றேனிந்த வூனெடுத்த
பின்செய்த தீவினை யாதொன்று மில்லைப் பிறப்பதற்கு
முன் செய்த தீவினை யோவிங்ங னேவந்து மூண்டதுவே".
என்னும் பட்டினத்தார் பாடலும், இவ்வகை யாராய்ச்சியைக் குறிக்கும்.
ஆகா இதென்ன கொடுமை. அப்படியே பரிமேலழகர் சொன்னதையே தமிழ் வழியில் உரையெழுதிய பாவாணரும் சொல்லியிருக்கிறாரே. ஆரிய மாயையில் இவரும் மயங்கிவிட்டாரா? பரிமேலழகர் சொன்ன பொருளை அப்படியே ஏற்று எழுதி மேலும் எடுத்துக்காட்டுகளும் தருகிறாரே.
சரி இவரை விடுவோம்; கலைஞர் கைவிடமாட்டார் என்றெண்ணி அவர் சொன்னதைப் படித்தேன்.
அவர் சுருக்கமாக 'பொறாமைக் குணம் கொண்டவனின் வாழ்க்கை வளமாக இருப்பதும், பொறாமைக் குணம் இல்லாதவனின் வாழ்க்கை வேதனையாக இருப்பதும் வியப்புக்குரிய செய்தியாகும்' என்று சொல்லி முடித்துவிட்டார்.
வியப்பு தான். :-)
ஹா ஹா ஹா
ReplyDeleteதேவநேயப் பாவாணரே - இன்னுமொரு நூற்றாண்டு இரும்!
டாக்டர் கலைஞரே - இன்னுமொரு நூற்றாண்டு இரும்!
குமரன்,
கலைஞரின் பொருளுரையில் "இலக்குமியா"? இடைச்செருகல் ஏதுமில்லையே! எல்லாம் சரி பார்த்து விட்டு தானே இடுகையை இட்டீர்கள்? :)
//இரண்டாம் வேற்றுமையுருபு நாலாம் வேற்றுமைப் பொருளில் வந்த வேற்றுமை மயக்கம்//
இப்ப எனக்கு வருகுது மயக்கம்! :))
இணையப் பல்கலைக்கழக நூலகத்தில் உரைகள் இருக்கின்றன இரவிசங்கர். யார் வேண்டுமானாலும் படித்துக் கொள்ளலாம்.
ReplyDeleteமயக்கம் வருவதற்குள் அங்கேயே இலக்கணப் பாடமும் படித்துக் கொள்ளலாம். :-)
//மயக்கம் வருவதற்குள் அங்கேயே இலக்கணப் பாடமும் படித்துக் கொள்ளலாம். :-)//
ReplyDeleteஇதுக்குத்தான் நான் அதெல்லாம் படிக்கிறதில்ல :)
:-)
ReplyDeleteஅவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
ReplyDeleteகேடும் நினைக்கப் படும்
இந்தக் குறளுக்கு
"
தீயவர்கள் சீருடனும்
நல்லவர்கள் நலிவுடனும் இருக்கும்
நிகழ்வுகளை நினைக்கையில்
ஊழ்வினை தான் என்று
உரைக்க தான் தேன்றுகிறது "
என்னும் உரை கொஞ்சம் பொருத்தமற்றதாக தான் படுகிறது
செல்வத்தைப் பற்றி சொல்லும்பொழுது
அது ஊக்கம் உடையவரிடம் தானாக செல்லும் என்பதை
ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையா னுழை
என்று வள்ளுவர் உரைப்பார்
தீயவர்களிடம் சேரும் செல்வம் ஊருக்கு ஊறு விளைவிக்கும் என்பதை
பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலந்தீமை யால்திரிந் தற்று
என்று சொல்வார்.
மேலும் கெட்டவரிடம் செல்வம் தஞ்சம் புக வாய்ப்பே இல்லை என்பதை
அழுக்காறு உடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
ஒழுக்கம் இலான்கண் உயர்வு.
என்றும் விளம்புவார்.
வாழ்வியலைப் பார்த்தால் விரைவில்
தீயவர்கள் செல்வந்தர்கள் ஆகுவதும்,
நல்லவர்கள் நற்பெயரை இழப்பதையும்
அழிவுக்கு அறிகுறி என்பதை அறிந்தாலே வள்ளுவர்
"
கெட்டவரிடம்
குவியும் செல்வமும்
நல்லவர்களுக்கு
நிகழும் தீமையும்
ஆராயப்பட வேண்டும்,அது
அல்லலுக்கே வழி வகுக்கும்
என்று சொல்லிருக்க முடியும் என்பது தான் பொருத்தமாக இருக்கும் என்று
இயம்பத் தோன்றுகிறது
நல்ல விளக்கம் திகழ்மிளிர். வள்ளுவர் 'நினைக்கப்படும்' என்று மட்டும் விட்டுவிட்டதால் அவர் சொன்னது என்ன என்பதற்கு அவரவர் புரிதலுக்கேற்ற விளக்கங்கள் வரும். பரிமேலழகரும் தேவநேயப்பாவாணரும் முன்வினை தான் காரணம் என்ற பொருள் சொல்கிறார்கள். நீங்கள் காட்டிய குறட்பாக்களை எல்லாம் தேவநேயப் பாவாணர் 'இரு நிலைமையும் இயற்கைக்கும் அறநூற் கொள்கைக்கும் மாறாயிருப்பது' என்று சொல்வதில் அடக்குகிறார். அதற்குப் பின்னர் அந்த நிலைமைகளுக்குக் காரணம் பழவினை என்று சொல்கிறார். 'நினைக்கப்படும்' என்பதற்கு ஆராயப்படும் என்ற பொருளைக் கொண்டதால் காரணத்தைச் சொல்கிறார்கள் அவர்கள். மணக்குடவரும் அதே பொருளைக் கொள்கிறார் - ஆனால் காரணத்தைச் சொல்லாமல் விடுக்கிறார். கலைஞர் கருணாநிதி 'நினைக்கப்படும்' என்பதற்கு 'வியப்புக்குரிய செய்தி' என்று பொருள் கொள்வதால் காரணத்தைச் சொல்லாமல் விடுக்கிறார். நீங்கள் 'கெடுதலுக்கு அது வழிவகுக்கும்' என்ற பொருள் கொள்கிறீர்கள். பலவகையான விளக்கங்கள்.
ReplyDeleteநீங்கள் சொல்லும் விளக்கம் 'கெட்டவரிடம் குவியும் செல்வம்' என்பதற்கு வேண்டுமானால் விளக்கமாக நீங்கள் காட்டிய குறட்பாக்களினாலே அமையலாம். ஆனால் அந்த விளக்கம் 'நல்லவர்களுக்கு ஏற்படும் கேட்'டிற்கு விளக்கம் ஆகுமா?
மு.வ. உரை ஒண்ணு இருக்கே?? அது படிக்கலை??? :)))))))
ReplyDeleteமு.வ. உரை ரொம்ப எளிதா, நிறைய விளக்கங்கள் இல்லாததா இருக்கு கீதாம்மா. எனக்கு நிறைய விளக்கங்களும் தேவைப்படறதால மு.வ. உரையைப் பாக்குறதில்லை. இந்த ரெண்டு குறள்களுக்கும் மு.வ. சொல்றதைக் கீழ தர்றேன்.
ReplyDeleteஅவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்.
பொறாமை உடையவனைத் திருமகள் கண்டு பொறாமைப்பட்டுத் தன் தமக்கைக்கு அவனைக் காட்டி நீங்கி விடுவாள்.
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்.
பொறாமை பொருந்திய நெஞ்சத்தானுடைய ஆக்கமும், பொறாமை இல்லாத நல்லவனுடைய கேடும் ஆராயத் தக்கவை.
/இன்று அவற்றைப் படித்தேன். பகிர்ந்து கொள்கிறேன். இடையிடையே அவற்றைப் படித்த போது தோன்றும் / தோன்றிய எண்ணங்களையும் பகிர்ந்து கொள்கிறேன்./
ReplyDeleteஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டுள்ளேன்.
/குமரன் (Kumaran) said...
'கெட்டவரிடம் குவியும் செல்வம்' என்பதற்கு வேண்டுமானால் விளக்கமாக நீங்கள் காட்டிய குறட்பாக்களினாலே அமையலாம். ஆனால் அந்த விளக்கம் 'நல்லவர்களுக்கு ஏற்படும் கேட்'டிற்கு விளக்கம் ஆகுமா?/
எனக்கு உள்ள்த்தில் தோன்றும் அவ்வொழுது எழுதவும் விழைக்கின்றேன்
வாழ்த்துகள்
/அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
ReplyDeleteதவ்வையைக் காட்டி விடும்/
இந்தக் குறளுக்கும் நான் புரிந்துக் கொண்டதை மற்றும் அறிந்துக் கொண்டதை வைத்து தங்களின் பின்னோட்டத்தில் எழுதுகின்றேன்
எழுதுங்கள் திகழ்மிளிர். நன்றி.
ReplyDeleteகுமரன்
ReplyDeleteஅவ்விய நெஞ்கத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும நினைக்கப் படும்
தீயவன் நான் பெரும் செல்வம் உடையவன் என்றும் .
நல்லான் எனக்கு ஏன் இவவறுமை என்றும் மனதினுள்
என்னவே அழிந்து விடும் அதாவது அவரவர் மனதில் எண்ணம் தோன்றிய
உடனேயே தீயவன் செல்வமும் நல்லவன் வறுமையும் படும் . படும் என்றால் அழியும் கேடும என்று பொருள் ---- வண்ணான்