'நாலாயிரம் கற்போம்' பத்தித் தொடரில் மூன்றாவது பகுதி இது. பெரியாழ்வார் திருமொழியின் முதல் பத்தின் இரண்டாம் திருமொழி இந்த 'சீதக் கடலுள் அமுதன்ன தேவகி' என்று தொடங்கும் பத்துப் பாசுரங்கள்.
இந்தப் பத்துப் பாசுரங்களில் திருவாய்ப்பாடியில் எம்பெருமான் கண்ணன் பிறந்திருந்த போது அவனது திருவுறுப்புகளின் அழகினை அங்கிருக்கும் ஆய்ச்சியர்களை அழைத்து ய்சோதை காட்டியதைக் கூறுகிறார் பெரியாழ்வார்.
***
பெரியாழ்வார் திருமொழி 1.2:
பாசுரம் 1 (04 Aug 2008)
சீதக்கடலுள் அமுதன்ன தேவகி
கோதை குழலாள் அசோதைக்குப் போத்தந்த
பேதைக்குழவி பிடித்துச் சுவைத்துண்ணும்
பாதக்கமலங்கள் காணீரே
பவளவாயீர் வந்து காணீரே
குளிர்ந்த திருப்பாற்கடலில் தோன்றிய அமுதினைப் போன்ற தேவகிப் பிராட்டியார் மலர்மாலைகளைச் சூடிய கூந்தலை உடைய யசோதையாகிய எனக்குப் பரிசாகத் தந்த பேதையாகிய இந்தக் குழந்தை தன் திருக்கைகளால் பிடித்து சுவைத்து உண்ணும் திருவடித் தாமரைகளைப் பாருங்கள். பவளம் போல் சிவந்த உதடுகளை உடைய பெண்களே வந்து பாருங்கள்.
***
திருப்பாற்கடலில் தோன்றிய அமுதங்கள் இரண்டு. ஒன்று வெளியமுதாகிய அமிர்தம். அது தேவர்களுக்காகத் தோன்றியது. இறைவனின் திருமேனியில் நின்று இலகும் உள்ளமுதாகத் தோன்றியவள் திருமகள். அவளைப் போன்றவள் தேவகிப் பிராட்டியார் என்பதை இன்னொரு இடத்தில் 'திருவின் வடிவொக்கும் தேவகி' என்பார் பெரியாழ்வார். அதையே இங்கே மறைப்பொருளாகக் குறிப்பதற்கு 'சீதக்கடல் அமுது' என்று சொல்லி நிறுத்தாமல் 'சீதக்கடல் உள்ளமுது' என்றார் போலும்.
எல்லோரும் திருவடிகளின் இனிமையைப் போற்றுகின்றாரே; ஆழ்வாரும் 'தேனே மலரும் திருப்பாதம்' என்கிறாரே - அப்படிப்பட்ட தன் திருவடிகளின் இனிமையைத் தானும் அனுபவிக்கத் துடித்தாற்போலே தன் திருவடிகளில் ஒன்றைப் பிடித்துச் சுவைத்து உண்கிறான் இந்தப் பேதைக்குழவி. தன்னடியார்களுக்காகத் தன்னைத் தாழவிட்டுக் கொள்பவன் அன்றோ அவன்? அப்படிப்பட்டவன் தன்னனுபவத்திற்காகவா தன் திருவடியைச் சுவைக்கிறான். இல்லை இல்லை. தன் திருவயிற்றில் இருக்கும் உலகங்களுக்கெல்லாம் உயர்வு ஏற்படும் படி தன் திருவடித் திருவமுதத்தைச் சுவைக்கிறான் இந்தக் கள்வன்.
***
பாசுரம் 2 (10 Sep 2008)
முத்தும் மணியும் வயிரமும் நன்பொன்னும்
தத்திப்பதித்துத் தலைப்பெய்தாற்போல் எங்கும்
பத்து விரலும் மணிவண்ணன் பாதங்கள்
ஒத்திட்டிருந்தவா காணீரே
ஒண்ணுதலீர் வந்து காணீரே
முத்துக்கள், மாணிக்கங்கள், வயிரங்கள், பொன் என்று மாற்றி மாற்றி பதித்ததைப் போல் உடலெல்லாம் கருமாணிக்கம் போல் நிறம் கொண்ட மணிவண்ணனின் திருப்பாதங்களில் இருக்கும் பத்து விரல்களும் அவன் உடல் நிறத்தை ஒத்து இருப்பதையும் ஒவ்வொரு விரலும் மற்ற விரல்களுக்கு ஒத்து இருப்பதையும் காணுங்கள். ஒளி மிகுந்த நெற்றியை உடையவர்களே பாருங்கள்.
***
திருப்பாதங்களில் இருக்கும் பத்து விரல்களும் முத்துக்களே என்றும் இல்லை மாணிக்கங்களே என்றும் வயிரங்களே என்றும் பொன்னால் ஆனவை என்றும் சொல்லலாம் படி அழகுடன் விளங்குகின்றன என்றும் சொல்லலாம். தத்திப்பதித்துத் தலைப்பெய்தாற் போலே என்றதனால் சொல்லப்பட்ட எல்லா இரத்தினங்களையும் பொன்னில் பதித்ததைப் போல் விளங்குகின்றன மணிவண்ணன் கால் விரல்கள் என்றும் சொல்லலாம். பத்து விரல்கள் இருக்க மூன்று இரத்தினங்களை மட்டுமே ஆழ்வார் சொல்லியிருக்கிறாரே என்றால் இங்கே சொன்ன மூன்று இரத்தினங்களும் நவரத்தினங்கள் எல்லாவற்றையும் குறிக்கின்றன - நவரத்தினங்களான கோமேதகம், நீலம், பவழம், புட்பராகம், மரகதம், மாணிக்கம், முத்து, வைடூரியம், வைரம் என்பவற்றில் முத்து, மாணிக்கம், வைரம் இம்மூன்றை மட்டும் சொல்லி எல்லா நவரத்தினங்களையும் சொன்னார் - அந்த எல்லா நவரத்தினங்களும் பத்துவிரல்களில் ஒன்பது விரல்களாக விளங்குகின்றன; கடைசி ஒரு விரலாக நன்பொன் விளங்குகின்றது என்றும் சொல்லலாம்.
எம்பெருமான் திருப்பாதங்களின் அழகை எப்படிப் போற்றினாலும் போற்றுவார் போற்றல் எல்லாம் அவன் திருப்பாதங்களின் பெருமைக்கு ஈடாகாது என்றே இருக்கும். ஆனாலும் உலக வழக்கில் சிறந்தவை என்று எண்ணப்படுபவற்றைக் கொண்டு உவமை கூறி அவன் திருப்பாத அழகை அனுபவிப்பது நன்று தானே.
***
பாசுரம் 3 (17 Sep 2008)
பணைத்தோள் இளவாய்ச்சி பால் பாய்ந்த கொங்கை
அணைத்து ஆரவுண்டு கிடந்த இப்பிள்ளை
இணைக்காலில் வெள்ளித் தளை நின்று இலங்கும்
கணைக்கால் இருந்தவா காணீரே
காரிகையீர் வந்து காணீரே
மூங்கிலைப் போன்ற தோள்களையுடைய இந்த இளைய ஆய்ச்சியின் பால் நிறைந்த கொங்கைகளை தன் திருக்கைகளால் அணைத்துக் கொண்டு தன் திருவயிறு நிறையும் படி பாலை உண்டு அந்த நிறைவிலும் மகிழ்விலும் அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கும் இந்தச் சிறு பிள்ளையின் இணையான திருக்கால்களில் வெள்ளியணி விளங்கும் கணைக்கால் எவ்வளவு அழகாக இருக்கின்றன என்று பாருங்கள். அழகில் சிறந்த காரிகையர்களே வந்து பாருங்கள்.
***
மூங்கிலைப் போன்ற அழகுடைய தோள்கள் கொண்டவள், இளமையில் சிறந்தவள் என்றெல்லாம் இங்கே யசோதைப் பிராட்டியார் பேசப்படுவது அந்த அழகுக்கும் இளமைக்கும் இயற்கையான போகங்களில் ஆழாமல் அவள் தன் திருக்குமாரனை நேசித்துக் கிடந்ததைப் போல் அழகிலும் இளமையிலும் சிறந்தவர்களாக இருப்பவர்களும் இந்தக் கண்ணனின் நினைவில் ஆழ்ந்து கிடக்கவேண்டும் என்று காட்டுவதற்காக.
அப்படிப் பட்ட அன்பு இந்தக் கண்ணன் மேல் இருந்ததால் 'நின்று பால் சொரியும்' என்றாற் போல இவள் கொங்கைகளும் 'பால் பாய்ந்த கொங்கை'கள் ஆயிற்று.
காரிகை என்ற சொல்லுக்கு அழகு என்று பொருள். அழகுடைய மங்கையருக்கும் அது பெயராக ஆகிவந்தது. அழகின் பெருமை அறிந்தவர்கள் என்பதாலும் கண்ணனின் திருமேனி அழகினைக் கண்டு அனுபவிப்பதில் ஈடுபாடு கொண்டவர்கள் என்பதாலும் அப்பெண்களை அழைத்தாள் இந்த இளவாய்ச்சி.
----
பாசுரம் 4 (23 Sep 2008)
உழந்தாள் நறுநெய் ஓரோ தடா உண்ண
இழந்தாள் எரிவினால் ஈர்த்து எழில் மத்தின்
பழந்தாம்பால் ஓச்சப் பயத்தால் தவழ்ந்தான்
முழந்தாள் இருந்தவா காணீரே
முகில் முலையீர் வந்து காணீரே
உழந்து உழந்து (நிறைய வேலை செய்து) சேர்த்து வைத்த நறுமணம் மிக்க நெய்யை ஒரு பெரும் பானை நிறைய கண்ணன் உண்ண, பானை நெய்யையும் விழுங்கினானே இவன் என்னாவான் என்று பயந்து அவனை இழுத்து வைத்து அழகிய மத்தைக் கடையும் பெரிய தாம்புக்கயிற்றால் அவனை அடிப்பதற்காக ஓங்க அதைக் கண்டு பயத்தாலே தப்பிச் செல்வதற்காகத் தவழ்ந்த இந்தக் கண்ணனின் முழங்கால்களின் அழகைக் காணுங்கள்; முகிழ்த்த முலையுடைய பெண்களே வந்து காணுங்கள்.
***
பாலைக் கறந்து, காய்ச்சி, உறையிட்டு, தயிரான பின்பு கடைந்து வெண்ணெய் எடுத்து அதனை உருக்கி நறுநெய்யாக்கி பெரிய தடாவில் சேர்த்து வைத்த அவ்வளவு வேலைகளையும் சொல்வதற்காக 'உழந்தாள்' என்று சொல்கிறார் ஆழ்வார்.
பயத்தினால் தவழ்ந்தான் என்றால் அவனது முழங்காலை எப்படிப் பார்க்க முடியும்? அதில் தானே தவழ்ந்து சென்றிருப்பான்? இங்கும் யசோதைப்பிராட்டியின் தாயுள்ளத்தைக் குறிப்பாகச் சொன்னார் ஆழ்வார். அவன் பயத்தால் தவழ்ந்தவுடன் 'அடடா. அவன் தவழ்கிறானே. முழந்தாள் மென்மையானதாயிற்றே. அது வலிக்குமே' என்று பதறி அவன் முழந்தாளினை நோக்கினாள். அப்போது அந்த முழந்தாளின் அழகால் மயங்கி முகிழ்முலையார்களையும் அழைத்துக் காட்டினாள்.
---
பாசுரம் 5 (25 Oct 2008)
பிறங்கிய பேய்ச்சி முலை சுவைத்து உண்டிட்டு
உறங்குவான் போலே கிடந்த இப்பிள்ளை
மறம் கொள் இரணியன் மார்வை முன் கீண்டான்
குறங்குகளை வந்து காணீரே
குவிமுலையீர் வந்து காணீரே
முன்னொரு காலத்தில் பெரும் வீரத்துடன் எதிர்த்து வந்த இரணியனின் மார்வினை சிங்கப்பிரானாகி வந்து கீண்டவன் இவன். இப்போதோ பெரும் ஒளியுடன் வந்த பேய்ச்சியாம் பூதனையின் விஷம் தோய்ந்த முலையை சுவைத்து உண்பவன் போல அவள் உயிரையும் பசையற உண்டான். அச்செயல்களை எல்லாம் செய்தவன் ஒன்றும் அறியாத சிறு பிள்ளை போல் இங்கே உறங்குகிறான். அவனுடைய திருத்தொடைகளின் அழகினை காணுங்கள். குவிந்த முலையை உடைய பெண்களே வந்து பாருங்கள்.
***
சென்ற பாட்டில் ஆய்ச்சியர் கண்ணனின் முழந்தாளைக் கண்டு அனுபவித்ததைப் பாடினார் ஆழ்வார். இந்த பாசுரத்தில் அவனது திருத்தொடைகளின் அழகினைப் பாடுகிறார். திருத்தொடைகளைக் கண்டவுடன் முன்னொரு நாள் இரணியனைக் கொல்லும் போது இதே தொடைகளின் மேல் கிடத்தித் தானே கொன்றான் என்று நினைவிற்கு வந்தது போலும்.
---
பாசுரம் 6 (27 Oct 2008)
மத்தக் களிற்று வசுதேவர் தம்முடை
சித்தம் பிரியாத தேவகி தன் வயிற்றில்
அத்தத்தின் பத்தாம் நாள் தோன்றிய அச்சுதன்
முத்தம் இருந்தவா காணீரே
முகிழ்நகையீர் வந்து காணீரே
மதம் கொண்ட யானைகளையுடைய வசுதேவரின் எண்ணத்தில் என்றென்றும் பிரியாது இருக்கும் தேவகிப் பிராட்டியின் திருவயிற்றில் ஹஸ்த நட்சத்திரத்தின் பத்தாவது நாளான ஒரு நாளில் உலகத்தில் தோன்றிய இந்த அச்சுதனின் முத்து போன்ற மறை அங்கத்தைக் காணுங்கள். புன்னகையுடைய பெண்களே பாருங்கள்.
***
திருத்தொடையின் அழகைக் கண்ட போது அங்கே தோன்றிய சிறு குழந்தையாம் கண்ணனின் ஆண் குறியைக் கண்டு அதனைப் போற்றுகிறாள் யசோதைப் பிராட்டி. முத்தம் என்றும், மொட்டு என்று சிறு குழந்தைகளின் ஆண்குறியை குறிப்பது மரபு.
இறைவனுக்கு கெட்டவர்களால் எந்த கெடுதலும் நேர்ந்துவிடலாகாது என்று பல்லாண்டு பாடியவர் இந்த ஆழ்வார் என்பதால் இவனுடைய திருநட்சத்திரம் எது என்று உடனே தெரிந்துவிடாத படி 'அத்தத்தின் பத்தாம் நாள்' என்கிறார். ஹஸ்த நட்சத்திரத்தில் தொடங்கி எண்ணிக் கொண்டு வந்தால் பத்தாவது நட்சத்திரமாக சிராவண நட்சத்திரம் அமையும். ஹஸ்தத்தில் தொடங்கி பின்பக்கமாக எண்ணிக் கொண்டு வந்தால் பத்தாவது நட்சத்திரமாக ரோஹிணி அமையும். இவனுக்கு இரண்டு நட்சத்திரமும் அமையும் என்பதால் ஆழ்வார் சொன்னது இரண்டிற்கும் பொருத்தமாம்.
---
பாசுரம் 7 (17 Nov 2008)
இருங்கை மதகளிறு ஈர்க்கின்றவனைப்
பருங்கிப் பறித்துக் கொண்டு ஓடும் பரமன் தன்
நெருங்கு பவளமும் நேர் நாணும் முத்தும்
மருங்கும் இருந்தவா காணீரே
வாணுதலீர் வந்து காணீரே
நீண்ட துதிக்கையினை உடைய மதயானையான குவலயாபீடத்தைக் கண்ணனைக் கொல்லும் நோக்கத்துடன் செலுத்திக் கொண்டு வந்த யானைப்பாகனைக் கொன்று யானையின் தந்தங்களை முறித்துக் கொண்டு ஓடிய பரமனான கண்ணனின் இடையில் விளங்கும் நெருங்கிய பவள வடத்தையும் சிறந்த அரைநாணையும் முத்து வடத்தையும் பாருங்கள்; ஒளி மிகுந்த நெற்றியை உடைய பெண்களே பாருங்கள்.
***
முத்தத்தின் அழகைப் போற்றிய பின்னர் கண்ணனின் மருங்கு/இடையின் அழகைப் போற்றுகிறார் ஆழ்வார். மருங்கைக் காணும் போது அங்கிருக்கும் பவள வடமும் முத்து வடமும் அரைநாணும் தென்படுகின்றன. அவற்றால் மருங்கிற்கு அழகா மருங்கால் அவற்றிற்கு அழகா என்று கேட்கும்படியாக அமைந்திருக்கின்றன. அதனால் அவற்றையும் இங்கே பாடுகிறார் ஆழ்வார்.
குவலயாபீடத்தை நடத்திக் கொண்டு வந்தவனைக் கொன்று அதனை கொம்புகளைப் பறித்துக் கொண்டு ஓடினான் என்ற பொருளைப் போல் இன்னொரு பொருளையும் பெரியவர்கள் இந்தப் பாசுரத்திற்குச் சொல்லியிருக்கிறார்கள். விளையாட்டுத் தோழர்களில் சிலரை மதயானையைப் போன்று முழந்தாளிடச் செய்து அவர் மேல் ஏறி வலம் வருகிறானாம் கண்ணன். இன்றைக்கும் நாமெல்லாம் இந்த விளையாட்டை ஆடுகின்றோமே. அப்படி மற்றவர்களை யானையாக்கி நடத்துவதோடு மட்டும் இன்றி அவர் தம் விளையாட்டுப் பொருட்களையும் பறித்துக் கொண்டு ஓடுகின்றானாம் இந்தக் குறும்பில் சிறந்த பரமன். அவனது மருங்கைக் காண வாருங்கள் என்று வாணுதல் கொண்ட பெண்களை அழைக்கிறாள் யசோதைப் பிராட்டியார்.
****
பாசுரம் 8 (12 Dec 2008)
வந்த மதலைக் குழாத்தை வலி செய்து
தந்தக் களிறு போல் தானே விளையாடும்
நந்தன் மதலைக்கு நன்றும் அழகிய
உந்தி இருந்தவா காணீரே
ஒளி இழையீர் வந்து காணீரே
தன்னுடன் விளையாட வந்த பெரிய குழுவாகிய குழந்தைகளை எல்லாம் வென்று தான் மட்டும் நிலையாக நின்று விளையாடும் நந்தனின் குழந்தையின் மிகவும் அழகிய தொப்புளைக் காணுங்கள்; ஒளி மிகுந்த அணிகளை அணிந்த பெண்களே வந்து காணுங்கள்.
***
கண்ணனுடன் விளையாட என்றெண்ணி ஒரு பெரிய கூட்டமாக வந்த சிறுவர்களை 'வந்த மதலைக் குழாம்' என்கிறார் ஆழ்வார். இவனைப் போலவே அவர்களும் மதலைகளாக இருக்க இவனோ அவர்கள் எல்லாம் ஒரு புறமாகவும் இவன் மட்டுமே இன்னொரு புறமாகவும் தனியாக நின்று அவர்களுடன் விளையாடும் அளவிற்கு வலிமை உடையவனாக இருக்கின்றான். தந்தங்களுடன் கூடிய யானைக்குட்டியைப் போல் இருக்கிறது அந்த வலிமை. அதனை 'வலி செய்து தந்தக் களிறு போல் தானே விளையாடும்' என்று கூறுகிறார் ஆழ்வார்.
விளையாடும் இடத்தில் அப்படி தந்தக் களிறு போல் இருக்கும் இவன் தன் தந்தையான நந்தகோபரின் திருமுன் தந்தைக்கு அடங்கிய திருமகனாக இருப்பதைக் காட்ட 'நந்தன் மதலை' என்றார். அப்படிப்பட்டவனுடைய திருவுந்தி (தொப்புள்) இந்த உலகங்களுக்கு எல்லாம் நல்லது செய்வது. அந்த உந்தியிலிருந்து தானே உலகங்களைப் படைக்கும் படைப்புக்கடவுள் தோன்றினான் அதனால் தான் அந்தத் திருவுந்தியை 'நன்றும் அழகிய உந்தி' என்றார் போலும்.
---
பாசுரம் 9 (26 Dec 2008)
அதிரும் கடல் நிற வண்ணனை ஆய்ச்சி
மதுர முலை ஊட்டி வஞ்சித்து வைத்துப்
பதரப் படாமே பழந்தாம்பால் ஆர்த்த
உதரம் இருந்தவா காணீரே
ஒளிவளையீர் வந்து காணீரே
அதிரும் கடல் போன்ற நிறத்தைக் கொண்ட கண்ணனை ஆய்ச்சியாகிய யசோதைப்பிராட்டியார் இனிமையான முலைப்பாலை ஊட்டி அந்தச் சுவையில் அவன் மயங்கிக் கிடக்குமாறு அவனை ஏமாற்றி தான் முன் எண்ணியபடி பழைய தாம்புக்கயிற்றால் கட்டினாள்; அப்படி அவள் கட்டிய தாம்புக்கயிற்றின் தழும்பு இருக்கும் வயிற்றின் அழகைக் காணுங்கள். ஒளி பொருந்திய வளையல்களை அணிந்த பெண்களே வந்து காணுங்கள்.
***
இவன் கடல்வண்ணன் என்பது உலகில் பிரசித்தம். அதனால் கடல்வண்ணன் என்று சொல்வதே போதுமாக இருக்க 'அதிரும் கடல் வண்ணன்' என்று ஆழ்வார் சொன்னது ஏனென்றால் இவனது குறும்புகளும் அடங்காமையும் அந்தக் கடல் அதிர்வது போல் இருக்கின்றன என்று காட்டுவதற்காக.
அப்படி அடங்காமல் இருப்பவனை அடக்கிக் கட்டிப் போட வேண்டுமென்றால் அதற்கு மதுர முலைப்பாலே வழி என்று ஆய்ந்து தேர்ந்த யசோதைபிராட்டியார் அவ்வண்ணமே அவனுக்கு முலைப்பால் ஊட்டி அவன் அப்படி மயங்கும்படி அவனை ஏமாற்றிப் பழந்தாம்பால் கட்டிப்போட்டாள். அந்தத் தாம்பின் தழும்பைத் தன் திருவயிற்றில் தாங்கியதால் இவனுக்குத் தாமோதரன் என்ற திருப்பெயரும் உண்டாயிற்று.
------------
பாசுரம் 10 (31 Dec 2008)
பெருமா உரலில் பிணிப்புண்டு இருந்து அங்கு
இருமாமருதம் இறுத்த இப்பிள்ளை
குருமாமணிப் பூண் குலாவித் திகழும்
திருமார்வு இருந்தவா காணீரே
சேயிழையீர் வந்து காணீரே
மிகப்பெரிய உரலில் பிணிக்கப்பட்டிருந்த வேளையில் அவ்வுரலையும் இழுத்துக்கொண்டு அங்கு வளர்ந்திருந்த இரண்டு பெரிய மருத மரங்களின் இடையே சென்று அவ்விரு மரங்களையும் முறித்த இந்தப் பிள்ளையினுடைய மிகச்சிறந்த மாணிக்க நகைகள் விளங்கும் திருமார்வம் இருந்த படியைப் பாருங்கள். செம்மையுடைய நகைகளை அணிந்த பெண்களே காணுங்கள்.
***
பிணிப்புண்டிருந்த உரலும் மிகப்பெரியது; இடையே சென்று முறித்த மருத மரங்களும் பெரியவை; ஆனால் இவனோ சிறு குழந்தை என்று இந்நிகழ்ச்சியின் முரண்பாடுகள் தோன்ற பெருமாவுரல் என்றும் இருமாமரம் என்று சொன்னதோடு இப்பிள்ளை என்றும் சொல்கிறார் ஆழ்வார். உரலும் பெரியதாக இருக்க மரங்களும் பெரியவைகளாக இருக்க இச்சிறுபிள்ளை இவ்வுரலை இழுத்துச் சென்று அம்மரங்களை முறித்தது தான் என்னே என்று வியப்பது போல.
இவன் திருமார்பகத்தில் 'அகலகில்லேன் இறையும்' என்று வாழும் அலர்மேல் மங்கையுடன் திருமறுவும் கௌஸ்துப மணியும் திகழ்கின்றன. இவை மூன்றும் இவன் திருமார்பில் எந்த நிலையிலும் எந்த அவதாரத்திலும் இருப்பவை. இந்தப் பாசுரத்தில் ஜீவகோடிகளின் உருவமான மிகச்சிறந்த கௌஸ்துப மணியை மட்டும் சொல்லி மற்ற இரண்டையும் குறிப்பால் உணர்த்துகிறார் ஆழ்வார்.
------------
பாசுரம் 11 (4 Feb 2009)
நாள்கள் ஓர் நாலைந்து திங்கள் அளவிலே
தாளை நிமிர்த்துச் சகடத்தைச் சாடிப் போய்
வாள் கொள் வளை எயிற்று ஆருயிர் வவ்வினான்
தோள்கள் இருந்தவா காணீரே
சுரிகுழலீர் வந்து காணீரேருமா
பிறந்த பின்னர் ஒரு நாலு ஐந்து மாதங்கள் சென்ற பின்னர் தன்னுடைய திருவடியினை நிமிர்த்தி சகடாசுரனை உதைத்து அழித்து விட்டு ஒளி பொருந்திய வளைந்த கோரப்பற்களைக் கொண்ட பூதனையின் அரிய உயிரை அவள் முலைப்பாலுடன் எடுத்துக் கொண்டவனின் அழகான தோள்கள் இருந்தவாறைக் காணுங்கள். சுருண்ட தலைமுடியை உடைய பெண்களே வந்து பாருங்கள்.
***
நாலு ஐந்து என்று கூறியது நான்காம் மாதத்திலோ, ஐந்தாம் மாதத்திலோ, நாலு + ஐந்து = ஒன்பதாம் மாதத்திலோ, நாலு * ஐந்து = இருபதாம் மாதத்திலோ இந்த அதிசயங்களைச் செய்தான் என்று கூறும் படி உள்ளது. சின்னஞ்சிறு வயதில் இவ்வளவான அதிசயங்கள் செய்தான் என்று கூறினால் கண்ணெச்சில் (திருஷ்டி) பட்டுவிடுமோ என்று அஞ்சுபவர் 'பல்லாண்டு பாடிய இதத் தாயான இந்த ஆழ்வார்' என்பதால் இவ்வாறு கூறினார் என்னலாம். உயிரெழுத்துகளுக்கே 'ஓர்' என்ற சொல் பயன்படவேண்டும் என்ற இலக்கண விதியை கொண்டு இவர் சொல்ல வந்தது ஒன்பதாம் மாதம் என்றும் உய்த்து அறியலாம்.
திருவடிகளால் வாழ்விப்பது உண்டு; அழிப்பதும் உண்டோ என்றால் சகடன் தீய எண்ணம் கொண்டு வந்தான் ஆகையால் அதே திருவடிகள் அவனை அழித்து ஆட்கொண்டது என்பதில் குறையில்லை.
பூதனையை அழித்தது முதலாகவும் சகடத்தை இறுத்தது அடுத்ததாகவும் வர ஆழ்வார் மாற்றிப் பாடுகிறாரே என்றால் இங்கே சொல்ல வந்தது இவனது அதிசய சக்திகளையே; கால வரிசையை இல்லை என்பதால் குறையில்லை.
--------------
பாசுரம் 12 (20 Mar 2009)
மைத்தடங்கண்ணி அசோதை வளர்க்கின்ற
செய்த்தலை நீல நிறத்துச் சிறுப்பிள்ளை
நெய்த்தலை நேமியும் சங்கும் நிலாவிய
கைத்தலங்கள் வந்து காணீரே
கனம் குழையீர் வந்து காணீரே
கரிய பெரிய திருக்கண்களை உடைய அசோதைப் பிராட்டியார் வளர்க்கின்ற சிறந்த நிலத்திலே மலர்ந்திருக்கும் நீலம் என்ற பெயர் கொண்ட கருநெய்தல் பூவைப் போன்ற நிறத்தைக் கொண்ட சிறு பிள்ளையாம் கண்ணனின் கூரிய முனைகளைக் கொண்ட திருச்சக்கரமும் திருச்சங்கும் என்றும் வீற்றிருக்கும் திருக்கைத்தலங்களைக் காணுங்கள். கனமான காதணிகளையுடைய பெண்களே காணுங்கள்.
***
சென்ற பாசுரத்தில் திருத்தோளின் அழகை அனுபவித்த பின்னர் இந்தப் பாசுரத்தில் திருக்கைத்தலத்தின் அழகை அனுபவிக்கிறார்.
இயற்கையாகவே கருநிறம் கொண்ட திருக்கண்களையுடையவள் அசோதைப் பிராட்டியார் என்பதை மைத்தடங்கண்ணி என்று குறிக்கிறார்; மையணிந்து அழகு பெற்ற பெரிய கண்களை உடையவள் என்று சொன்னாலும் பொருந்தும். திருவாய்ப்பாடியில் கண்ணனை எடுத்து வளர்ப்பதற்கு நிறைய பேர் இருந்தாலும் யாரிடமும் கண்ணனைக் கொடுக்காமல் தானே அவனை இவள் வளர்ப்பதால் 'அசோதை வளர்க்கின்ற' என்று சொன்னார். அப்படி அவளே அவனைச் சீராட்டி வளர்க்கும் போது வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருப்பதால் அவள் திருக்கண்களின் கருநிறம் இவன் திருமேனி எங்கும் பரவியது என்று சொல்லலாம் படி இருக்கின்றது. அதனால் நீலநிறத்துச் சிறுப்பிள்ளை என்றார் கண்ணனை.
கூர்மையான முனைகளை கொண்ட திருச்சக்கரமும் திருச்சங்கும் இவன் திருக்கைகளில் என்றும் நீங்காமல் இருந்தாலும் அவ்வப்போது அவற்றை அசோதைப்பிராட்டியாருக்குக் காட்டுகிறான் இவன். இவன் திருக்கைகளின் வெண்ணெயில் திளைத்ததால் நெய்த்தலை நேமி ஆனது என்றாலும் பொருந்தும். இவன் கருதிய இடத்திற்கு சென்று பகைவரை அழித்து மீண்டும் வரும் திருச்சக்கரத்தைப் போன்று இல்லாமல் இவன் திருக்கைத்தலத்தை விட்டு விலகாமல் தனது பெரும் ஓசையினாலேயே பகைவரை நடுநடுங்கச் செய்யும் திருச்சங்கமும் நிலையாகத் திருக்கைகளில் கொண்டவன் கண்ணன். அன்றி இவன் திருக்கைத்தலங்களில் மகாபுருஷ லட்சணமாகிய சங்கு சக்கர ரேகைகள் உள்ளன என்று சொன்னாலும் பொருந்தும்.
-----
பாசுரம் 13 (1 Apr 2009)
வண்டமர் பூங்குழல் ஆய்ச்சி மகனாக
கொண்டு வளர்க்கின்ற கோவலக் குட்டற்கு
அண்டமும் நாடும் அடங்க விழுங்கிய
கண்டம் இருந்தவா காணீரே
காரிகையீர் வந்து காணீரே
அழகிய பூக்களைச் சூடியதால் வண்டுகள் என்றும் நிலைத்து வாழும்படியான குழலை உடைய அசோதைப் பிராட்டியார் 'தன் மகன்' என்று மிகவும் அன்புடன் வளர்த்து வருகின்ற கோபாலச் சிறுவனுக்கு, அண்டங்களையும் நாடுகளையும் அவற்றுள் நிலைத்த அனைத்துப் பொருட்களையும் உயிர்களையும் எல்லாவற்றையும் விழுங்கிய திருக்கழுத்து இருக்கும் அழகைக் காணுங்கள். அழகிய பெண்களே வந்து காணுங்கள்.
***
சென்ற பாசுரத்தில் திருக்கைத்தலத்தின் அழகை அனுபவித்தப் பின்னர் இந்தப் பாசுரத்தில் திருக்கழுத்தின் அழகை அனுபவிக்கிறார் ஆழ்வார்.
கைக்குழந்தைகளுக்கு அனுக்கம் (மன வருத்தம்) ஏற்படாதிருக்க வேண்டி தாய்மார்கள் தங்களை அலங்கரித்துக் கொள்வார்களாம். அப்படியே யசோதைப்பிராட்டியும் அந்த அந்தக் காலங்களில் பூக்கும் மலர்களை தன் திருமுடியில் சூட்டிக் கொண்டு தன்னை அலங்கரித்துக் கொள்கிறாள். அம்மலர்களைப் பூத்தவுடன் அணிந்து கொள்வதால் அம்மலர்களில் இருக்கும் மதுவினை உண்ண வரும் வண்டுகளுக்கு அவள் குழலே வசிக்கும் இடமாக ஆகிவிடுகிறது.
அந்த யசோதைப் பிராட்டி 'தன் மகன்' என்றே எண்ணிக் கொண்டு அன்பு செய்து வளர்த்துவருகின்ற பிள்ளை கோவலக் குட்டன். இவன் தேவகிபுத்திரன் என்பது ஆழ்வாருக்குத் தெரியும் ஆதலால் இப்படி சொல்கிறார்.
அந்த அழகிய கோவலக் குட்டன் சிறுவன் மட்டும் இல்லை. எல்லா அண்டங்களையும் அவற்றில் வாழ் உயிர்களையும் நிலைத்த பொருட்களையும் ஒக்க விழுங்கிய அழகிய திருக்கழுத்தை உடையவன். அந்தத் திருக்கழுத்தின் அழகைக் காண அவ்வழகிற்கு ஏற்ற அழகுடைய பெண்களை 'காரிகையீர்' என்று அழைத்துக் காணச் சொல்கிறார் ஆழ்வார்.
***
பாசுரம் 14 (22 May 2009)
என் தொண்டை வாய்ச் சிங்கம் வாவென்று எடுத்துக் கொண்டு
அந்தொண்டை வாய் அமுது ஆதரித்து ஆய்ச்சியர்
தம் தொண்டை வாயால் தருக்கிப் பருகும் இச்
செந்தொண்டைவாய் வந்து காணீரே
சேயிழையீர் வந்து காணீரே
'கொவ்வைப் பழம் போன்ற சிவந்த உதடுகளை உடைய எங்கள் சிங்கக்குட்டியே' என்று அன்புடன் கூவி இந்தக் கண்ணக்குமரனை ஒக்கலையில் (இடுப்பில்) எடுத்துக் கொண்டு அந்த அழகிய கொவ்வைக்கனி அதரங்களில் ஊறும் அமுதத்தை விரும்பித் தமது கொவ்வைக்கனி அதரங்களில் ஏந்தி மிகப்பெருமையுடன் பருகுகின்றனர் ஆய்ச்சியர்கள். அப்படிப்பட்ட சிவந்த கொவ்வைக் கனிவாய் அதரங்களைக் காண வாருங்கள். சிவந்த அணிகலன்களை அணிந்த பெண்களே வாருங்கள்.
***
இவனுக்கும் கொவ்வைப்பழம் போன்ற உதடுகள். ஆய்ச்சியர்களுக்கும் கொவ்வைப்பழம் போன்ற உதடுகள். சிறு குழந்தையான இவனை தங்கள் ஒக்கலையில்/இடுப்பில் ஏந்திக் கொண்டு ஒருவர் மாற்றி ஒருவர் நெருங்கி அவனது வாய் அமுதத்தைப் பருகினார்களாம். இப்போதல்லவா தெரிகிறது அந்தக் கோதைப் பெண் இவ்வளவு துடுக்காகப் பேச எங்கே கற்றுக் கொண்டாள் என்று. தந்தையாரே மாற்றி மாற்றி கொவ்வைக் கனி கொவ்வைக் கனி தொண்டை வாய் தொண்டை வாய் என்று பாடினால் பாவம் சிறு பெண் அவள் தான் என் செய்வாள்? அவளும் அதே தொண்டை வாய் ஊறும் அமுதத்தைப் பருக ஆசைப்பட்டாள். அவ்வமுதத்தைத் தருக்கி உண்ணும் சங்காழ்வானிடம் பொறாமையும் கொண்டாள்.
-----
பாசுரம் 15 (07 June 2009)
நோக்கி யசோதை நுணுக்கிய மஞ்சளால்
நாக்கு வழித்து நீராட்டும் இந்நம்பிக்கு
வாக்கும் நயனமும் வாயும் முறுவலும்
மூக்கும் இருந்தவா காணீரே
மொய்குழலீர் வந்து காணீரே
அசோதைப் பிராட்டியார் இந்த நம்பியில் மென்மையான நாக்கிற்குத் தகுந்த படி பார்த்து பார்த்து நுணுக்கிய மஞ்சள் காப்பினால் நாக்கினை வழித்து நீராட்டும் அழகுடைய இந்த நம்பிக்கு வாக்கும், கண்களும், வாயும், முறுவலும், மூக்கும் இருந்த அழகினைக் காணுங்கள். அடர்த்தியான தலைமுடியை உடைய பெண்களே வந்து காணுங்கள்.
***
மிகவும் மென்மையான அவையங்களைக் கொண்டவன் கண்ணன். அவனது மென்மையான நாக்கிற்கு ஏற்றபடி பார்த்துப் பார்த்து மஞ்சளை அரைத்துக் குழம்பாக்கிக் கொண்டு அதனைக் கொண்டு அவன் நாக்கினை வழித்து அவனை நீராட்டுகிறாள் அசோதைப்பிராட்டியார். அப்படிப்பட்ட அழகில் சிறந்த நம்பியான கண்ணன் தன் தாய் தந்தையரை அம்மா, அப்பா என்று தன் அழகிய மழலையால் அழைக்கிறான்; அந்த அழகைக் காணுங்கள். 'கண்ணா. என்னைப் பார். இங்கே பார்' என்று அழைப்பார்களுக்கு அவர்கள் மகிழும்படி குளிரக் காணும் அவனது திருக்கண்களின் அழகைக் காணுங்கள். அதோடு அவர்களைப் பார்த்து புன்முறுவல் புரியும் அந்த அதரங்களையும் முறுவலையும் பாருங்கள். கற்பகப் பூவின் மொட்டு போல் இருக்கும் அவனது மூக்கின் அழகைக் காணுங்கள். நன்கு அடர்த்தியாக வளர்ந்திருக்கும் குழலைக் கொண்டிருக்கும் பெண்களே காணுங்கள்.
----
பாசுரம் 16 (03 Oct 2009)
விண் கொள் அமரர்கள் வேதனை தீர
முன் மண் கொள் வசுதேவர் தம் மகனாய் வந்து
திண் கொள் அசுரரைத் தேய வளர்கின்றான்
கண்கள் இருந்தவா காணீரே
கனவளையீர் வந்து காணீரே
வானுலகத்தில் வாழும் தேவர்களின் வேதனை தீர மண்ணுலகத்தில் வாழும் வசுதேவரின் திருமகனாகப் பிறந்து வலிமையுடைய அசுரர்கள் தேயும் படி வளர்கின்றான் இந்தக் கண்ணன். இவனது கண்களின் அழகைக் காணுங்கள். பொன்னால் செய்யப்பட்ட வளையல்களை அணிந்த பெண்களே காணுங்கள்.
கண்ணன் நல்லவர்களைக் காப்பதற்கும் அல்லவர்களை அழிப்பதற்கும் அவதாரம் செய்கின்றான். அப்படி அவன் அவதாரம் செய்யும் போது சுவர்க்கம் முதலான வானுலகங்களில் வாழும் இந்திரன் முதனான தேவர்களின் துயரங்களை மட்டும் நீக்கவில்லை; மண்ணில் பிறந்து சிறையில் வாடும் தன் தந்தையான வசுதேவர் முதலான நல்லவர்களின் துயரங்களையும் நீக்குகின்றான். 'தந்தை காலில் விலங்கு அற வந்து தோன்றிய தோன்றல்' என்று இவனைச் சொல்லுவார்கள்.
அதோடு மட்டுமின்றி உடல் பலத்திலும் மனோபலத்திலும் வலிமையுடைய அசுரர்கள் எல்லாம் இவன் வளர்ந்து வரும் போதே தேய்ந்து போகத் தொடங்கினார்கள். 'தேய வளர்கின்றான்' என்று முரண் தோன்ற அழகாக ஆழ்வார் கூறுகிறார்.
இவ்வாறு நல்லவர்களை காக்க அவர்கள் தழைக்கும்படியும் தீயவர்களை அழிக்க அவர்கள் தேயும்படியும் கதிர்மதியமாக ஒரே நேரத்தில் விளங்கும் திருக்கண்களின் திருவழகைக் காணுங்கள் என்று அனைவரையும் அழைக்கிறார் ஆழ்வார்.
**
பாசுரம் 17 (30 Oct 2009)
பருவம் நிரம்பாமே பாரெல்லாம் உய்ய
திருவின் வடிவு ஒக்கும் தேவகி பெற்ற
உருவு கரிய ஒளி மணிவண்ணன்
புருவம் இருந்தவா காணீரே
பூண் முலையீர் வந்து காணீரே
இளமைப்பருவம் வருவதற்கு முன்னரே சிறு குழந்தையாக இருக்கும் போதே உலகத்து மக்களைக் காக்கும் பொருட்டு தீயவர்களை அழித்த, திருமகளை ஒத்த அழகுடைய தேவகி தவம் செய்து பெற்ற, கரிய நிறம் கொண்ட திருமேனியும் ஒளி மிகுந்த மணி வண்ணமும் கொண்ட கண்ணனின் திருப்புருவம் இருந்த அழகைக் காணுங்கள்; அணிகலன்கள் அணிந்த முலைகளை உடைய பெண்களே காணுங்கள்.
***
சக்ரவர்த்தித் திருமகன் ஆன இராமன் இளமைப்பருவம் வந்த பின்னரே விசுவாமித்திரரின் வேள்வி காக்கச் சென்று தீயவர்களை அழித்தான்; தேவகியின் இளஞ்சிங்கமான இந்தக் கண்ணனோ அப்படியின்றி இளமைப்பருவம் அடைவதற்கு முன்னரே சிறு குழந்தையாக இருக்கும் போதே சென்ற பாசுரத்தில் பெரியாழ்வார் சொன்னது போல் 'திண் கொள் அசுரர்கள் தேய' வளர்கின்றான். அந்த வேறுபாட்டை பாசுரத்தின் முதல் அடியில் சொல்கிறார் ஆழ்வார்.
பாற்கடல் உள் அமுது அன்ன தேவகி என்று முன்னொரு பாசுரத்தில் சொன்ன போது பாற்கடலில் பிறந்த அமுதினைத் தவிர அதே பாற்கடலில் பிறந்த உள் அமுது திருமகள் என்ற பொருள் வெளிப்படையாகத் தோன்றவில்லை; இங்கே மிகத் தெளிவாக அங்கே உள்ளமுது என்று சொன்னது திருமகளைத் தான் என்பதை 'திருவின் வடிவொக்கும் தேவகி' என்று சொல்லிவிடுகிறார் ஆழ்வார்.
அணிகலன்கள் பூண்டதாலே தான் உங்கள் முலைகள் அழகுடன் விளங்குகின்றன; கரிய திருமேனியும் ஒளி வீசும் மணிவண்ணமும் கொண்ட இந்தக் கண்ணனின் திருப்புருவங்கள் எந்த வித ஆபரணங்களும் இல்லாமல் அழகுடன் இருக்கின்றன என்று சொல்வதைப் போலும், உங்கள் பூண்முலைகளைத் துளைக்கும் மதனனின் கரும்பு வில்லைப் போன்றவை இவன் திருப்புருவங்கள் என்று சொல்வதைப் போலவும் 'புருவம் இருந்தவா காணீரே; பூண்முலையீர் வந்து காணீரே' என்கிறார் ஆழ்வார்.
---
பாசுரம் 18 (11 Nov 2009)
மண்ணும் மலையும் கடலும் உலகேழும்
உண்ணும் திறத்து மகிழ்ந்து உண்ணும் பிள்ளைக்கு
வண்ணம் எழில் கொள் மகரக் குழை இவை
திண்ணம் இருந்தவா காணீரே
சேயிழையீர் வந்து காணீரே
மண்ணுலகையும் மலைகளையும் கடல்களையும் ஏழு உலகங்களையும் பிரளய காலத்தில் காப்பாற்ற வேண்டிய பொழுது மிகவும் மகிழ்வுடன் அவற்றை உண்ணும் இந்த பிள்ளையின் அழகிய நிறம் கொண்ட மகரக்குழைகளின் திண்மையைக் காணுங்கள்; சிறந்த அணிகலன்களைப் பூண்டவர்களே வந்து பாருங்கள்.
***
இவ்வுலகில் இருக்கும் அனைத்தையும் தாங்கும் பூமியையும், அந்த பூமிக்கு ஆதாரமாக இருக்கும் மலைகளையும், அந்த பூமியைச் சூழ்ந்து காக்கும் கடல்களையும், மற்றும் இருக்கும் ஏழு உலகங்களையும், பிரளய காலத்தில் அழிந்து போகாத படி காப்பதற்குக் கண்ணன் அவற்றை உண்டு தன் வயிற்றில் வைத்துக் கொள்கிறான். அப்படி அவற்றைக் காப்பாற்றும் வாய்ப்பு கிடைக்கிறதே என்பதில் அவனுக்கு மிகவும் மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சி தோன்ற அவற்றை உண்கிறான்.
அப்படிப்பட்ட கண்ணனின் பெருமை தோன்றும் வகையில் அழகிய திருநிறம் கொண்ட மகரக் குழைகளின் திண்மையைக் காணுங்கள்; ஏழுலகும் உண்டவனின் திண்மைக்கேற்ற திண்மை இந்தக் குழைகளுக்கு இருக்கிறது. சிறந்த அணிகலன்களைப் பூண்ட பெண்களே! உங்கள் அணிகளைக் காட்டிலும் திண்மை உடையவை இந்த மகரக் குழைகள்.
----
பாசுரம் 19 (30 Dec 2009)
முற்றிலும் தூதையும் முன் கை மேல் பூவையும்
சிற்றில் இழைத்துத் திரிதருவோர்களைப்
பற்றிப் பறித்துக் கொண்டு ஓடும் பரமன் தன்
நெற்றி இருந்தவா காணீரே
நேரிழையீர் வந்து காணீரே
மண்ணால் சிறு வீடு கட்டி விளையாடும் சிறு பெண்களைப் பிடித்து அவர்கள் வைத்துக் கொண்டிருக்கும் மணல் கொழிக்கும் சிறு முறத்தையும் (முற்றில்) மணல் சோறு ஆக்குகின்ற சிறு பானைகளையும் (தூதை) அவர்கள் கைகளில் கொஞ்சும் சிறு பறவைகளையும் (பூவை) பறித்துக் கொண்டு ஓடும் குறும்பில் தலைவனான கண்ணனின் நெற்றியின் அழகைக் காணுங்கள்! சிறந்த அணிகளை அணிந்த பெண்களே காணுங்கள்!
***
சிறு பெண்கள் மண்ணால் சிறு வீடு கட்டி விளையாடிப் பொழுது போக்குபவர்கள். அவர்கள் சிற்றில் இழைத்துத் திரிதருவோர்கள். அவர்களைப் பற்றி இழுத்து அவர்கள் வைத்திருக்கும் முற்றிலும் தூதையும் அவர்கள் முன் கை மேல் இருக்கும் பூவையும் பறித்துக் கொண்டு ஓடுகிறான் தீம்பில்/குறும்பில் தலைவனான/பரமனான கண்ணன். அப்படி அவன் பிடிக்க முடியாத படி ஓடும் போது அவன் திருநெற்றியில் சிறு வியர்வைத் துளிகள் தோன்றி அவன் திருநெற்றியின் அழகை மிகுதியாக்குகிறது. அந்த திருநெற்றியை வந்து பாருங்கள் என்று அழைக்கிறார் ஆழ்வார்.
---
பாசுரம் 20 (15 Dec 2011)
அழகிய பைம்பொன்னின் கோல் அங்கைக் கொண்டு
கழல்கள் சதங்கை கலந்தெங்கும் ஆர்ப்ப
மழகன்றினங்கள் மறித்துத் திரிவான்
குழல்கள் இருந்தவா காணீரே
குவிமுலையீர் வந்து காணீரே
அழகிய பசும் பொன்னால் செய்யப்பட்ட கோலை அழகிய திருக்கையிலே வைத்துக் கொண்டு, திருவடிகளில் அணிந்திருக்கும் வீரக்கழல்களும் சதங்கையும் ஒன்றோடு ஒன்று கலந்து ஒலிக்க, ஓடி ஓடி இளைய பசுங்கன்றுகளை ஓடவிடாமல் மறித்துத் திரிகின்றவனுடைய திருமுடிக்கற்றைகளின் அழகினைக் காணுங்கள். குவிந்த முலைகளை உடைய பெண்களே வந்து காணுங்கள்.
***
பசுங்கன்றுகள் காணாமல் போய்விடாமல் அவற்றை மறித்து மேய்த்துக் கொண்டு வருவதற்குப் பொன்னால் ஆன கோலை தனது அழகிய திருக்கைகளில் வைத்திருக்கிறான் கண்ணன். அந்த கோலினைக் கையில் வைத்துக் கொண்டு கன்றுகளை ஓட விடாமல் மறிப்பதற்காக அங்கும் இங்கும் ஓடுகிறான். அப்போது அவனது கால்களில் இருக்கும் கழல்களும் சதங்கையும் ஒலிக்கின்றன. ஓடும் வேகத்தில் அவனது குழல் கற்றைகள் முன்னும் பின்னும் அசைகின்றன. கேசவனது திருமுடிக்கற்றைகளின் அழகும் கண்டுகொண்டே இருக்கலாம் போல் இருக்கிறது.
---
பாசுரம் 21 (17 Dec 2011)
சுருப்பார் குழலி அசோதை முன் சொன்ன
திருப்பாத கேசத்தைத் தென்புதுவைப் பட்டன்
விருப்பால் உரைத்த இருபதோடு ஒன்றும்
உரைப்பார் போய் வைகுந்தத்து ஒன்றுவர் தாமே
***
வண்டுகள் மொய்க்கும் மலர்களைச் சூடிய குழலை உடைய அசோதைப் பிராட்டியார் கிருஷ்ணாவதார காலத்தில் அண்டை அயலில் உள்ள பெண்களை அழைத்து கண்ணனின் திருவடி முதல் திருமுடி வரையில் உள்ள அழகினைக் காட்டியதை தென்புதுவையாம் வில்லிப்புத்தூர் வாழ் பட்டர்பிரான் விரும்பி உரைத்த இந்த இருபத்தியொரு பாசுரங்களையும் உரைப்பவர்கள் வைகுந்தம் சென்று அவன் திருவழகை அனுபவித்து ஒன்றுவார்கள்.
***
கண்ணன் அவதரித்த காலத்தில் அவனது அழகை அசோதைப் பிராட்டியார் சொன்னார். அதனை ஆழ்வார் விரும்பி மீண்டும் உரைத்தார். அசோதைப் பிராட்டியார் புறக்கண்ணாலும் கண்டு அனுபவித்ததை ஆழ்வார் அகக்கண்ணால் கண்டு அனுபவித்தார். இருவர் நிலையும் உயர்வானது. அந்நிலை எல்லோருக்கும் அமைவதில்லை. ஆனாலும் அவ்விருவரும் சொன்ன இந்த இருபத்தியொரு பாசுரங்களையும் உரைத்து வருபவர்கள் அவன் அழகை நேரில் அனுபவிக்கும்படியாக வைகுந்தம் சென்று அங்கேயே நிலைத்திருப்பார்கள் என்று ஆழ்வார் இந்த பாசுரங்களின் பலனைச் சொல்லி நிறைவு செய்கிறார்.
***
ஆலிலை கண்ணனையும், அற்புதமான பாசுராமும் எளிதில் விளங்குமாறு உள்ளது.
ReplyDeleteஆலிலையில் படுத்துக் கொண்டு, தன் கால் கட்டை விரலை சுவைத்த்ஹ்க் கொண்டு காட்சி தருவதற்கு ஏதாவது சிறப்பான காரணம் உண்டா குமரன்?. இல்லை ஒரு குழந்தையின் செயலா?
கண்ணனின் எல்லா செயல்களுள்ளும் ஒரு அர்த்தம் பொதிந்திருக்க வேண்டுமல்லவா..
பிரளய காலத்தில் பரந்தாமன் ஆலிலையில் சிறு குழந்தையாக கால் கட்டை விரலை சுவைத்துக் கொண்டு வரும் காட்சியைத் தான் யசோதை சொல்கிறாளா இல்லை தன் வீட்டில் தவளும் கண்ணனை சொல்கிறாளா? அடியேனுக்கு சற்று விளக்கினால் தெரிந்து கொள்வேன்.
ReplyDeleteயசோதை பாடுவது தன் குழந்தையைப் பற்றி தான் இராகவ். பொருத்தமான படம் என்று ஆலிலைக் கண்ணன் படத்தை இட்டேன். எல்லாக் குழந்தைகளும் இதனைச் செய்வதைக் காணலாம்.
ReplyDelete//குமரன் (Kumaran) said...
ReplyDeleteயசோதை பாடுவது தன் குழந்தையைப் பற்றி தான் இராகவ். பொருத்தமான படம் என்று ஆலிலைக் கண்ணன் படத்தை இட்டேன். எல்லாக் குழந்தைகளும் இதனைச் செய்வதைக் காணலாம்.//
நன்றி குமரன். ஆலிலைக் கண்ணன் பற்றிய பாசுரங்கள் உள்ளனவா ? ஆலிலையில், கால் விரலை சுவைத்துக் கொண்டு வரும் அர்த்தம் என்ன?
ஆலிலைக்கண்ணனைப் பற்றிய பாசுரங்கள் இருக்கின்றன இராகவ். திருவாய்மொழியில் படித்ததாக நினைவு. கால் விரலைச் சுவைக்கும் பொருள் என்ன என்று தேடிப் பார்த்துத் தான் சொல்ல வேண்டும். உடனே நினைவிற்கு வரவில்லை.
ReplyDeleteஇரவிசங்கர் வந்தால் பொருளும் வரலாம். :-)
ஆலிலைக் கண்ணனின் அழகே அழகு. கோதை குழலாளின் நல்லூழே நல்லூழ்.
ReplyDeleteஅருமையான பாசுரம் குமரன்!
ReplyDeleteஇரண்டாம் பத்து இனிதே தொடங்கி விட்டது! வாழ்த்துக்கள்! :)
உள்ளமதில் உள்ளமுது விளக்கம் சுவைத்தேன்! சுவையோ சுவை! :)
//ஒன்று வெளியமுதாகிய அமிர்தம். அது தேவர்களுக்காகத் தோன்றியது//
ReplyDeleteஇல்லை!
பொதுவில் தோன்றியது தான்! அவரவர் சாதனைக்குப் பலனாகத் தோன்றியது தான்!
களவாடி உண்ண எண்ணியதால் சாதனை வீணில் சிந்தி விட்டது! அம்புட்டே! :)
தேவகி கோதை குழலாள் அசோதைக்குப் போத்தந்த
ReplyDeleteசீதக்கடலுள் அமுதன்ன = பேதைக்குழவி
என்பதே சரியாக வரும் குமரன்!
பூட்டு விற் பொருள் கோள்! :)
இங்கே அமுதம் என்பது கண்ணன் தான்! :)
அமுதம் தீயதை அடையாமல், எங்கு அடைந்தால் நன்மையோ, அங்கு அடைந்தது!
அதே போல் கண்ணன் அமுதத்தை, கம்சனும் எதிர்பார்த்தான், நல்லோரும் எதிர்பார்த்தார்கள்! ஆனால் அது எங்கே அடையணுமோ ஆங்கே அடைந்தது!
கோதைக் குழலாள் மோகினியாய் தேவகி, யசோதைக்குப் போத்தந்தாள் கண்ணமுதை!
//நன்றி குமரன். ஆலிலைக் கண்ணன் பற்றிய பாசுரங்கள் உள்ளனவா ?//
ReplyDeleteகோல விளக்கே கொடியே விதானமே
ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்
ஆலமா மரத்தின் இலை மேல் ஒரு பாலகனாய்
ஞாலம் ஏழும் உண்டான் அரங்கத்து அரவின் அணையான்...
This comment has been removed by the author.
ReplyDeleteபாதாரவிந்தாம்ருதம்!
ReplyDeleteஅதற்கான தரவுகள் மார்க்கண்டேய புராணம், மற்றும் ஸ்ரீமத் பாகவதம் போன்றவற்றில் வரும் ஊழிக்கால குறிப்புகள்!
மார்க்கண்டேய முனிவர், ஆலிலைக் குழந்தையுடன் பேசுவதும், குழந்தையின் மூச்சில் உள்ளே சென்று, வெளியே வருவதுமான குறிப்புகளைப் படித்தால் இன்னும் நுட்பமாகச் சொல்ல முடியும்!
நினைவில் இருந்ததை மட்டும் அடியேன் முன்வைத்தேன்!
ரொம்ப நன்றி ரவி அண்ணா மற்றும் குமரன் (ஐயா சொல்லலை, சரிதானே).
ReplyDeleteஆழ்வார்களின் அமுதக்கடலின் ஆழம் தெரிந்தவர்கள் நீங்கள். நான் இப்போது தான் தரிசிக்க வந்துள்ளேன். பகவானை பற்றி அவன் அடியார்களிடம் மட்டுமே தெரிந்து கொள்ள முடியும். திகட்டாத சுவையாயிற்றே அவன் பெருமைகள். ஆதலால் தான் கேள்வி மேல் கேள்விகள். "@ரவி அண்ணா, ஆட்டோ அனுப்பினாலும் கேள்விகள் தொடரும்".
பதில்களுக்கு மிக்க நன்றி. ஐயம் தெளிவுற்றேன்.
//ஆலிலைக் கண்ணனின் அழகே அழகு. கோதை குழலாளின் நல்லூழே நல்லூழ்.
ReplyDelete//
நமக்கும் அப்படித் தானே அக்கா. நமக்கும் நல்லூழ் உண்டு தான். :-)
விட்டா 'என்ன தவம் செய்தனை'ன்னு பாடத் தொடங்கிருவீங்க போலிருக்கே. :-)
அதிர்ஷ்டம்ன்னு சொல்லாம நல்லூழ்ன்னு சொன்னதற்கு நன்றிகள். இப்படிப் புழங்கத் தொடங்கினாத் தான் இந்த சொல் மீண்டு வரும். :-)
சுவைத்ததற்கு நன்றிகள் இரவிசங்கர். போற்றுவார் போற்றுதல் எல்லாம் போகட்டும் காஞ்சிபுரம் பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியர் சுவாமிகளுக்கே. அடியேன் கிளிப்பிள்ளை.
ReplyDelete//கோதைக் குழலாள் மோகினியாய் தேவகி, யசோதைக்குப் போத்தந்தாள் கண்ணமுதை!
ReplyDelete//
இந்த விளக்கமும் நல்லா இருக்கு இரவிசங்கர்.
இரவிசங்கர். இராகவனுக்குச் சொன்னது போல் நீங்கள் வந்து நல்லதொரு பொருளை உரைத்துவிட்டீர்கள். ஒரே ஒரு சிறு பிழைத்திருத்தம். சேஷி பகவான்; சேஷர்கள் நாம். நீங்கள் தலைகீழாகச் சொல்லிவிட்டீர்கள். நீங்கள் சொன்னதில் சேஷி என்று வரும் இடத்தில் எல்லாம் சேஷன் என்று சேஷன் என்று வரும் இடத்தில் எல்லாம் சேஷி என்றும் மாற்றி இட்டுக் கொண்டால் பொருள் பொருத்தம். சரி தானே.
ReplyDelete//கராரவிந்தேன பாதாரவிந்தம்
ReplyDeleteமுகாரவிந்தேன பாதாரவிந்தம்
வடஸ்ய பத்ரஸ்ய பூதே சயனம்
பாலாம் முகுந்தம் மனசா ஸ்மராமி//
இங்கேயும் நீங்கள் நினைவிலிருந்து இந்த சுலோகத்தைச் சொல்லியிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன் இரவிசங்கர்.
கராரவிந்தேன பதாரவிந்தம் (திருக்கைத் தாமரைகளில் திருவடித்தாமரை)
முகாரவிந்தேன விநிவேஷயந்தம் (திருவாய்த் தாமரையில் நிவேதனமாகியது)
வடஸ்ய பத்ரஸ்ய குடே சயாநம் (ஆல இலையில் குழந்தையாக சாய்தல்)
பாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி (பாலன் முகுந்தனை மனத்தில் வணங்குகிறேன்)
//ஆழ்வார்களின் அமுதக்கடலின் ஆழம் தெரிந்தவர்கள் நீங்கள்.//
ReplyDeleteஹாஹாஹா. பாற்கடலின் ஓரத்தில் நின்று கொண்டு ஒரு பூனை நினைத்துக் கொண்டதாம் 'இந்தப் பாலை எல்லாம் குடித்துத் தீர்க்கப் போகிறேன்' என்று. அது போல் அருளிச்செயல்களை முழுவதும் அனுபவித்துவிட அடியேன் விரும்பலாம். ஆனால் பூனைக்கு ஆகும் செயலா அது? இதில் எங்கிருந்து ஆழம் தெரிந்தவன் ஆவது? :-)
//ஐயா சொல்லலை, சரிதானே//
ReplyDeleteசரி தான். நன்றி இராகவ். :-)
//சேஷன் என்று சேஷன் என்று வரும் இடத்தில் எல்லாம் சேஷி என்றும் மாற்றி இட்டுக் கொண்டால் பொருள் பொருத்தம். சரி தானே//
ReplyDeleteஅச்சச்சோ! தவறு நடந்து விட்டது! மன்னியுங்கள், மன்னியுங்கள்!
எண்ணத்தின் வேகத்துக்கு ஈடு கொடுக்கமுடியாமல், பணிகளுக்கு ஊடே, பட பட வென்று தட்டச்சினேன்! இப்படி விபரீதமாகச் சொற்கள் இடம் மாறி விட்டனவே!
இறைவன் அல்லவோ விஸ்வ சேஷி!
ஜீவர்கள் அவனுக்கு சேஷ பூதர்கள் ஆயிற்றே!
பின்னூட்டத்தைத் திருத்தி இன்னொரு முறை இடுகிறேன்! மன்னியுங்கள்!
//ஆலிலையில், கால் விரலை சுவைத்துக் கொண்டு வரும் அர்த்தம் என்ன?//
ReplyDeleteபிரளய காலத்தில் சகலமும் எம்பெருமானிடம் ஒடுங்குவதால் சேஷன்-சேஷியில், சேஷி மட்டுமே உள்ளான்! சேஷர்கள் இல்லாமல் சேஷிக்குத் தனியாகச் சேஷத்வம் ஏது?
சேஷன்களைப் பிரிந்த நிலையில், சேஷிக்குப் பிரிவாற்றும் மாமருந்து எது?
எது சேஷன்களுக்கு மாமருந்தாக அமைந்ததோ,
அதையே தாமும் உண்டு தான் பார்ப்போமே,
ஒரே ஒரு கால், வலக் கால் பெரு விரலை மட்டும் வைத்துச் சுவைக்கிறான் எம்பெருமான்.
பிரளய முடிவுக்குப் பின் தோற்றம். அதான் குழந்தையின் ரூபமாக உள்ளான்!
குழந்தைக்குத் திருவடி வணக்கம் தெரியாது! முலைப்பால் தான் அறியும்! அதனாலேயே திருவடிகளைப் பற்றத் தெரியாமல், திருவடி முலைகளை உண்கிறான்!
திருவடி முலை அமுதம் எம்பெருமானுக்கே சேஷத்வம் சாதிக்கிறது! ஒடுக்கம் ஒடுங்கித் துவக்கம் துவங்குகிறது!
அதனால் தான் செவ்வடி செவ்வித் திருக்காப்பு!
பல்லாண்டு, பல்லாண்டு, பல்லாயிரத்தாண்டு, பல கோடி, நூறாயிரம், ஊழியோடு ஊழியாகச்
***செவ்வடி செவ்வித் திருக்காப்பு!***
கராரவிந்தேன பாதாரவிந்தம்
முகாரவிந்தேன விநிவேஷயந்தம்
வடஸ்ய பத்ரஸ்ய குடே சயனம்
பாலாம் முகுந்தம் மனசா ஸ்மராமி
ஹரி ஓம்!
முத்தும் மணியும் வயிரமும் நன் பொன்னும்
ReplyDeleteதத்திப் பதித்துத் தலைப் பெய்தாற் போல் எங்கும்
பத்து விரலும் மணிவண்ணன் பாதங்கள்
ஒத்திட்டிருந்தவா காணீரே
ஒண்ணுதலீர் வந்து காணீரே
எங்கே? எங்கே? அடுத்து எங்கே குமரன்? :)
அடுத்து பாசுரத்தைத் தான் படிக்க வேண்டும் இரவிசங்கர். :-)
ReplyDelete//பத்து விரலும் மணிவண்ணன் பாதங்கள்//
ReplyDelete//ஒத்திட்டிருந்தவா//
பத்து விரலும் ஒன்னோடு ஒன்னைப் போலவே இருந்தன!
இதைச் சாமுத்திரிகா லட்சணம் கொண்டு விளக்குங்கள் குமரன் :)
எனக்கு அதெல்லாம் தெரியாது இரவிசங்கர். நீங்க சொல்லித் தந்தீங்கன்னா இதே பாசுரத்தை இன்னும் விளக்கமா 'விஷ்ணு சித்தன்'ல எழுதும் போது எழுதிடலாம். :)
ReplyDeleteகுமரன் பாசுர இன்பத்தை உங்கள் மூலமாக எளிய விதத்தில் புரிந்து கொள்ள முடிகிறது. விஷ்ணு சித்தரையும், கோதை தமிழையும் தொடரும் நாளுக்காக காத்துள்ளேன்... கண் திறந்து தான் பாருங்களேன்.
ReplyDeleteஇன்னொன்று ஒவ்வொரு பாசுரமும் தாங்கள் இடும்போது ஏன் என்னுடைய Dashboard ல் தெரிவதில்லை.. உங்களுடைய பதிவுகள் மட்டும் தான் காட்டுகிறது.
இதே இடுகையில் பாசுரங்களைச் சேர்த்து வருவதால் அது மீண்டும் தெரிவதில்லை போல இராகவ். விரைவில் கோதை தமிழிலும் விஷ்ணு சித்தரிலும் எழுதத் தொடங்குகிறேன்.
ReplyDelete//மத்தக் களிற்று வசுதேவர் தம்முடை
ReplyDeleteசித்தம் பிரியாத தேவகி//
வசுதேவர் தான் தேவகி உயிரைக் கஞ்சனிடம் பேசிக் காப்பது. அவர் சித்தம் பிரியாத தேவகி-ன்னு சொன்னது மிகச் சிறப்பு!
//முத்தம் இருந்தவா காணீரே//
பொதுவாகக் குழந்தைகளின் ஆண்குறியை, ஆல இலை போன்ற ஒரு ஆபரணம் கொண்டு, அரை ஞாண் கயிற்றில் கட்டி மறைத்திருப்பார்கள்! அதான் "இருந்த" என்று இறந்த காலத்தில் சொல்கிறார் பாருங்கள்! அப்போ பார்த்தேனே! இப்போ இல்லையே! ஆலிலை மறைச்சிருக்கே! :))
//முகிழ்நகையீர் வந்து காணீரே//
இவ்வளவு நேரம் பெண்கள் சிரிப்பைக் காட்டாத ஆழ்வார், குழந்தையின் ஆண்குறி பற்றிப் பேச்சு வந்தவுடன், பெண்கள் குபுக்-ன்னு சிரிப்பதைப் பாக்குறார் போல! முகிழ் நகையீர்-னு "தக்க சமயத்தில்" சொல்கிறார்! ஹா ஹா ஹா!
சாரி ஃபார் திஸ் கெட்டப் பையன் பின்னூட்டம்! :))
//அத்தத்தின் பத்தாம் நாள் தோன்றிய அச்சுதன்//
ReplyDelete//ஹஸ்த நட்சத்திரத்தில் தொடங்கி எண்ணிக் கொண்டு வந்தால் பத்தாவது நட்சத்திரமாக சிராவண நட்சத்திரம் அமையும். ஹஸ்தத்தில் தொடங்கி பின்பக்கமாக எண்ணிக் கொண்டு வந்தால் பத்தாவது நட்சத்திரமாக ரோஹிணி அமையும்//
இதுக்கு இன்னொரு நுட்பமும் சொல்லட்டுமா? சில சமயம் எனக்கு இந்த மாதிரி கிறுக்குத்தனமாத் தோனும்! :)
திருவோணம்=பெருமாளின் நட்சத்திரம்!
ரோஹிணி=(கண்ண)பெருமாளின் நட்சத்திரம்!
இரண்டு பக்கத்தில் இருந்தும் பத்து எண்ணினால், இரண்டு நட்சத்திரமும் பொருத்தமே! இது எப்படிச் சாத்தியம் ஆயிற்று?
ஏன் என்றால் தாயாரின் நட்சத்திரம் ஹஸ்தம்!
அவளிடத்தில் இருந்து எண்ண ஆரம்பித்து விட்டால், முன்னே போனாலும் சரி, பின்னே போனாலும் சரி, அவள் எப்படியும் அவனிடம் கொண்டு சேர்பித்து விடுவாள்! - இப்படித் தான் அடியேன் நினைத்துக் கொள்வேன் குமரன்! :)
நல்ல விளக்கங்கள் இரவி. நன்றி.
ReplyDeleteபெரிய பிராட்டியார் திருப்பாற்கடலில் இருந்து தோன்றிய நட்சத்திரம் பங்குனி உத்திரம் என்று தான் படித்திருக்கிறேன். ஹஸ்த நட்சத்திரத்திலும் தாயார் உதித்திருக்கிறார் என்பது செய்தி.
ஆலிலையில் கண்ணன் படுத்திருப்பது பிறளய காலத்தில் உலகக் காப்பாற்றிக் கொண்டுவருவதாக எங்கள் மாஸ்டர் சொல்லுவார்.
ReplyDeleteஎல்லாம் முடிந்தது. வாசுதேவன் மட்டும் ஆலிலையில் யோகநித்திரையில் குழந்தை வடிவெடுத்து இருக்கிறான்.;
இந்த செய்தி நீங்களும் அறிவீர்கள் தானே.
குமரன்,ரவி.
விடைபெறுகிறேன்.
மீண்டும் பதிவுகளில் சந்திக்கலாம்.
ஆமாம் வல்லியம்மா. உலகங்களையும் உயிர்களையும் நுண்ணிய வடிவத்தில் தன்னுடைய திருவயிற்றில் வைத்துப் பிரலய காலத்தில் காப்பாற்றுகிறான் கோவிந்தன் என்று சொல்வார்கள்.
ReplyDeleteநன்றிகள்.