Tuesday, August 05, 2008
தெருளிடத்தடியார் சிந்தையுள் புகுந்த செல்வமே! சிவபெருமானே!
அருளுடைச் சுடரே! அளிந்ததோர் கனியே!
பெருந்திறல் அருந்தவர்க்கரசே!
பொருளுடைக் கலையே! புகழ்ச்சியைக் கடந்த
போகமே! யோகத்தின் பொலிவே!
தெருளிடத்தடியார் சிந்தையுள் புகுந்த
செல்வமே! சிவபெருமானே!
இருளிடத்துன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!
இந்தப் பாடலின் முதல் பகுதியை ஏறக்குறைய ஒரு மாதத்திற்கு முன்னால் பார்த்தோம். அடுத்தப் பகுதியை எழுதுவதற்கு இவ்வளவு நாட்கள் ஆகிவிட்டன. தாமதத்திற்கு மன்னிக்கவும்.
போன பதிவின் பின்னூட்டங்களிலேயே அன்பர்கள் பலர் 'புகழ்ச்சியைக் கடந்த போகமே' என்பதற்கு நல்ல விளக்கங்கள் கொடுத்திருக்கின்றனர். அவற்றை இங்கே சுருக்கமாகக் கொடுத்துவிட்டு மற்ற வரிகளையும் பார்க்கலாம் என்று எண்ணுகிறேன்.
இந்தப் பிரபஞ்சத்தின் அளவு நம் கற்பனைக்கு எல்லாம் தாண்டிய அளவில் இருப்பதாக வானவியலார் கூறுகின்றனர். இந்த உலகத்திலேயே நம் கற்பனைக்கு எட்டாத அளவில் பல அதிசயங்கள் இருக்கின்றன. அப்படி இருக்கும் போது 'நீ இப்படி இருக்கிறாய். அப்படி இருக்கிறாய்' என்று எத்தனை விதமாக இந்த உலகத்திற்கும் பிரபஞ்சத்திற்கும் மூலாதாரமான இறைவனை நாம் புகழ்ந்தாலும் அந்தப் புகழ்ச்சி எல்லாம் ஆயிரம் கோடி சூரியர்களின் பேரொளிக்கு முன்னால் சிறு மின்மினிப்பூச்சியின் மினுக்கு ஒளி போன்றது என்பது நமக்குத் தெரிந்தே உள்ளது.
உலகத்தில் சிறிதளவு பெருமை உடையவரும் அருகில் சென்று அணுகி இருக்க முடியாத படி பெருமிதத்துடன் இருப்பதைப் பார்க்கிறோம். அப்படி அவர்கள் தற்பெருமையுடன் இல்லா விட்டாலும் சுற்றிலும் இருப்பவர்கள் அவர்களைப் பற்றி நமக்குள் அப்படி ஒரு அபிப்பிராயம் ஏற்படுத்தி நம்மை அவர்கள் அருகில் சென்று இயல்பாகப் பழக முடியாத படி செய்து விடுகிறார்கள். நாமும் அப்படி எல்லாம் இல்லை; அந்தப் புகழ்பெற்றோர்கள் என்னெதிரில் வந்தால் நான் இயல்பாகத் தான் பேசுவேன் என்று சொன்னாலும், தற்செயலாக அவர்கள் நம் முன்னால் வந்தால் நம்மால் இயல்பாகப் பேச இயலுவதில்லை. அப்படியிருக்கும் போது எல்லாவுலகத்திற்கும் தலைவனான நம் இறைவனோ, எல்லாப் புகழுக்கும் உரிய அவனோ, எல்லாப் புகழ்ச்சியையும் தாண்டி நிற்கும் அவனோ, எளிமையாக நாமும் அவனுடன் கலந்து அனுபவிக்கலாம்படி இருக்கிறான். உலகத்தில் கிடைக்கும் எல்லா போகங்களுக்கும் சிறந்த போகமாக இருக்கிறான்.
இப்படி இறைவனின் அளவற்றப் புகழைப் பாடி அவன் பெருமையைக் கூறும் அதே நேரத்தில் அவனது எளிவந்த தன்மையையும் பாடியுள்ளார்கள் நம் அருளாளர்கள். நம் அருள் இலக்கியங்களில் இதனை எப்போதும் பார்க்கலாம். 'புகழ்ச்சியைக் கடந்த' என்று அவனுடைய பெரும் புகழைப் பாடும் அதே மூச்சில் 'போகமே' என்று அவனது எளிவந்தத் தன்மையையும் பாடுகிறார் மாணிக்கவாசகர். சும்மாவா சொன்னார்கள் ஒருவாசகமானாலும் திருவாசகம் என்று.
உலக இன்பங்களில் மனம் செல்லும் போது மனம் பலவாறாகப் பிரிந்து போகிறது. பிளவுபட்டுப் போகிறது; அதனால் அந்த இன்பங்களைப் புலன்கள் அனுபவித்தாலும் முழுமையான அனுபவமோ இன்பமோ நிறைவோ கிடைப்பதில்லை. அதனால் தான் அது எரிகிற நெருப்பில் வார்க்கும் எண்ணையாக மாறி மேன்மேலும் வேண்டும் என்று நம்மை அந்தப் புலனின்பங்களில் ஆழ்த்தி விடுகிறது. பெரியோர்களெல்லாம் அந்தப் புலனின்பங்களில் இருந்து மனதைத் திருப்பி ஞானவினையாற்றி யோகத்தில் மனதை நிறுத்த வேண்டும் என்கிறார்கள். ஆனால் அது தொடக்கத்தில் புரிவதே இல்லை. அப்படியே புரிந்தாலும் யோகத்தில் சுவை ஏற்படுவது இல்லை. வயதுக் காலத்தில் புலனின்பங்களை அனுபவித்து வயது போன பின் யோகத்தில் மனதை இருத்தலாம் என்று தோன்றுகிறது. இது இப்படி இருக்க யோகத்தில் மனதைச் செலுத்தியவர்களும் அவ்வப்போது மனம் தடுமாறி கீழே விழுகிறார்கள் என்றும் படிக்கிறோம்.
ஏன் அப்படி நடக்கிறது? புலனின்பத்தில் மூழ்கியவர்கள் கீழ்நிலைக்குப் போனால் அது இயற்கை எனலாம். ஆனால் யோகத்தில் நிலை நின்றவர்கள் கீழே ஏன் விழுகிறார்கள்? இந்தக் கேள்வி வரும் போது கீதையில் கண்ணன் சொன்னது நினைவிற்கு வருகிறது. யோகத்தின் நிறைவில் யோகி என்னைக் காண்பான். அப்படி என்னை நேருக்கு நேர் காணும் வரை புலன்களின் ஆதிக்கம் அவனிடம் இருக்கும் என்கிறார். அப்படி யோகத்தின் நிறைவாகத் தோன்றும் பொலிவே என்கிறார் மாணிக்கவாசகரும் இங்கு.
அப்படி யோகத்தில் ஈடுபட்டார் அவனை நேருக்கு நேர் காணும் வரை புலன்களின் ஆதிக்கம் இருக்கும் என்றால் யோகம் மிகக் கடினமானதொன்றாக அன்றோ இருக்கும்? புலன்களின் ஆதிக்கம் எவ்வளவு வலிமையுடையது என்பது நாம் ஒவ்வொருவரும் நம் அனுபவத்தில் காண்பது தானே? அப்படி இருக்க யோகிகள் தம் சொந்த முயற்சியால் அந்தப் புலன்களின் ஆதிக்கத்தை வெல்வதென்பது இயலக் கூடியக் காரியமா? இந்தக் கேள்விகள் எல்லாம் வருமென்று வாதவூராருக்குத் தெரியும் போல் இருக்கிறது. அதனால் அடுத்த வரியிலேயே அதற்குப் பதிலும் சொல்கிறார்.
தெருள் என்னும் தெளிவு வேண்டி அவனருளாலே அவன் தாள் வணங்கி அன்பெனும் மஞ்சன நீரால் அவனை நீராட்டி அவனுக்கு அடிமை செய்வாராய்த் தம்மை இருத்திக் கொண்டு இருக்கும் யோகிகளின் சிந்தனையுள் புகுந்து அவர்கள் செய்யும் ஞானவினையை நல் வழிக்குத் திருப்பி அவர்களுக்கு ஏற்படும் தொல்லைகளை அறுத்து என்றும் அவர்களுக்கு ஞான குருவாக நிற்கும் செல்வமே என்கிறார் - தெருள் இடத்து அடியார் சிந்தையுள் புகுந்த செல்வமே.
அந்தத் தெளிவு எனக்கு இல்லை. இன்னும் உலக இன்பங்களில் மனம் செல்கிறது. மயக்க நிலையில் தான் நான் இருப்பதாகத் தெரிகிறது. அப்படியே இருந்தாலும் உன் அடிகளைப் பிடித்தால் நற்கதி கிட்டும் என்று எனக்குத் தெரியும். அதனால் உன் திருவடிகளைச் சிக்கெனப் பிடித்தேன் என்று கூறி இந்தப் பாடலை நிறைவு செய்கிறார் அடிகளார்.
இந்த இடுகை 'திருவாசகம் ஒரடொரியொ' பதிவில் 8 பிப்ரவரி 2006 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:
ReplyDeleteஞானவெட்டியான் said...
அன்பு குமரன்,
தெள்ளத் தெளிவாக விளக்கியுள்ளீர்கள்.
February 08, 2006 7:52 AM
--
Merkondar said...
பிறவா யாக்கை பெரியோனைப் படிய சொல்லிய நல்உள்ளங்களுக்கு நன்றி
February 08, 2006 8:29 AM
--
குமரன் (Kumaran) said...
மிக்க நன்றி ஞானவெட்டியான் ஐயா. இந்தப் பதிவை எழுதும் போது தங்கள் நினைவே பல முறை வந்தது. சொல்வதைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறேனா? ஐயா என்ன சொல்லப் போகிறாரோ? என்ற கேள்விகளும் வந்தன. தெளிவாய்ச் சொல்லவைத்திருக்கிறான் என்பதைப் படிக்கும் போது மிக்க மகிழ்ச்சி.
February 08, 2006 9:23 AM
--
குமரன் (Kumaran) said...
மிக்க நன்றி என்னார் ஐயா.
February 08, 2006 9:23 AM
--
தி. ரா. ச.(T.R.C.) said...
புகழ்ச்சியைக் கடந்த
போகமே! யோகத்தின் பொலிவே!
அதே பின்னுட்டம்தான் ஆனான் முழு விளக்கம்.இறைவனைப் புகழ்வதால் அவனுக்கு ஒன்றும் பெருமை கிடையாது.இகழ்ச்சியும் அவனை நெருங்குவதில்லை.. உதாரணம் இராவணன், தக்ஷ்ன். இதை பட்டிணத்தார் எப்படி எளிமையாக கூறுகிறார் உரை தேவையில்லை தேவைப்பட்டால் பிறகு
தருகிறேன்.
பொன்னாற் பிரயோசனம் பொன்படைத் தார்க்குண்டு; பொன்படைத்தோன்
தன்னாற் பிரயோசனம் பொன்னுக்கங் கேதுண்டு? அத்தன்மையைப்போ
உன்னாற் பிரயோசனம் வேணதெல்லாம் உண்டுஉனைப் பணியும்
என்னாற் பிரயோசன மேதுண்டு? காளத்தி யீச்சுரனே
February 09, 2006 10:18 AM
--
குமரன் (Kumaran) said...
பட்டினத்தார் எளிமையாகத் தான் சொல்லியிருக்கிறார். பாடலுக்கு நன்றி தி.ரா.ச,
February 09, 2006 11:29 AM
--
G.Ragavan said...
புகழ்ச்சியைக் கடந்த போகம் என்பதற்கு இப்படியும் பொருள் கொள்ள வேண்டும்.
இங்கு இறைவன் புகழ்ச்சியைக் கண்டு மயங்காதவன் என்று பொருள் சொன்னால்..இகழ்ச்சியைக் கண்டு எரிச்சலுறுகிறவன் அல்லன் என்றும் சொல்ல வேண்டும்.
ஆனால் வாசகர் சொல்லவில்லை. ஏன்?
இறைவனை எல்லாரும் புகழ்கின்றார்கள். இப்படிப்பட்டவரே அப்படிப்பட்டவரே என்று....ஆனால் இறைவன் அவைகளையெல்லாம் கடந்தவன். உயர்ந்தவன். எவ்வளவுதான் புகழ்ந்தாலும் அதையும் கடந்து நிற்கும் போகமானவன். இதன் மறைபொருள்..என்னதான் இறைவனைப் புகழ்ந்தாலும் மனிதர்களால் மனித மொழிகளால் இறைவனை முழுமையாகப் புகழ முடியாது.
February 12, 2006 10:56 AM
--
குமரன் (Kumaran) said...
விளக்கத்திற்கு நன்றி இராகவன். அவனைப் புகழ்ந்து முடியாது என்றாலும் நம்மால் முடிந்த வரை புகழ்ந்து கொண்டே இருப்போம். நம் கடன் பணி செய்து கிடப்பதே அன்றோ? நீங்கள் வேலை வணங்குவதே வேலை என்று இருங்கள். நானும் அப்படியே இருக்கிறேன்.
February 12, 2006 7:38 PM
--
G.Ragavan said...
// விளக்கத்திற்கு நன்றி இராகவன். அவனைப் புகழ்ந்து முடியாது என்றாலும் நம்மால் முடிந்த வரை புகழ்ந்து கொண்டே இருப்போம். நம் கடன் பணி செய்து கிடப்பதே அன்றோ? நீங்கள் வேலை வணங்குவதே வேலை என்று இருங்கள். நானும் அப்படியே இருக்கிறேன். //
உண்மைதான் குமரன். இருக்கிற காற்றையெல்லாம் சுவாசிக்க முடியாவிட்டாலும் கொஞ்சம் கொஞ்சமாக சுவாசிப்பது போல, புகழ்ச்சி முழுவதும் சொல்லிலும் பொருளிலும் அடங்காவிட்டாலும் விடாது புகழ்வோம். நிச்சயமாக.
February 13, 2006 8:43 AM
--
சிவா said...
குமரன்! விளக்கம் வழக்கம் போல மிக அருமை. தெருள் என்பதை ஏற்கனவே எனக்கு தனிமடலில் விளக்கி இருப்பதாக நியாபகம். நானும் திருவாசகம் கேட்டு ரொம்ப நாளாச்சு. இந்த விளக்கங்களுடன் மீண்டும் கேட்டுப்பார்க்கிறேன். நன்றி
February 26, 2006 6:43 AM
--
தமிழ் குழந்தை said...
தமிழ் தகவல் தொழில் நுட்பம் வளர்ச்சியடைய பிளாக்கர் மூலமாக பல அரிய கருத்துக்களை தந்து கொண்டிருக்கின்றீர்கள். உங்கள் கருத்துக்கள் தெளிவாகவும் அருமையாகவும் உள்ளது.
May 05, 2006 3:19 AM
--
குமரன் (Kumaran) said...
நன்றி தமிழ்க்குழந்தை
May 06, 2006 4:33 PM
சிவ தொண்டு கோடி புண்ணியம்.......யாரையும் புண்படுத்தாமல் பண்படுத்துகிறீர்.....வணங்குகிறேன்...
ReplyDeleteநன்றி விபூஷ். அடியேன்.
ReplyDelete'புகழ்ச்சியைக் கடந்த போகமே' என்பதற்கு அருமையான விளக்கம் அளித்திருக்கிறீர்கள் குமரா.
ReplyDelete//அந்தத் தெளிவு எனக்கு இல்லை. இன்னும் உலக இன்பங்களில் மனம் செல்கிறது. மயக்க நிலையில் தான் நான் இருப்பதாகத் தெரிகிறது.//
அடிகளாரே இப்படிச் சொன்னால் அடியேன் என்ன செய்வது :(
நன்றி கவிநயா அக்கா.
ReplyDelete