Friday, August 01, 2008

பொருளுடைக் கலையே! புகழ்ச்சியைக் கடந்த போகமே! யோகத்தின் பொலிவே!



அருளுடைச் சுடரே! அளிந்ததோர் கனியே!
பெருந்திறல் அருந்தவர்க்கரசே!
பொருளுடைக் கலையே! புகழ்ச்சியைக் கடந்த
போகமே! யோகத்தின் பொலிவே!
தெருளிடத்தடியார் சிந்தையுள் புகுந்த
செல்வமே! சிவபெருமானே!
இருளிடத்துன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!

உலகில் மூவகையான சுடர்கள் இருக்கின்றன - கதிரவன், மதியவன், தீ. விண்மீன்களும் சுடர்வன தான் என்றாலும் இந்த உலகில் இருந்து பார்க்கும் போது அவை ஒளியில் மிகக் குன்றித் தோன்றுவதால் அவற்றைக் கணக்கில் சேர்ப்பதில்லை. அந்த மூவகை சுடர்களிலும் ஒளியில் ஈடு இணையற்று இருக்கும் சுடர் பகலவன். இறைவனைப் பற்றிக் கூறும் போது ஆயிரம் பல்லாயிரம் சூரியர்கள் சேர்ந்து வந்தது போல் இருக்கிறது அவன் ஒளி என்று கூறுவர். ஒரு சூரியனே எப்படி எரிக்கிறான்; எப்படிக் கண்ணைக் கூசச்செய்கிறான்; பல்லாயிரம் கதிரவனின் ஒளி என்றால் அது எவ்வளவு வெப்பமானதாய் இருக்கும்; எப்படிக் கண்ணைக் கூசச்செய்யும் என்று தோன்றும். இறைவனுடைய ஒளியோ கருணையுடன் கூடியது. கதிரவனைப் போல் சுட்டெரிக்காது. நிலவைப் போல் குளிர்ந்து இருக்கும். அதனால் தான் இங்கே அருளுடைச் சுடரே என்கிறார் ஐயன்.

ஒரு பழ மரத்தில் காய்களும் கனிகளும் இருக்கின்றன என்று வைத்துக் கொள்வோம். நாம் எதனைப் பறித்துத் தின்போம்? கனிகளைத் தானே. அதிலும் பழுத்து மிக்கச் சாறுடன் இருக்கும் கனியென்றால் பறித்தவுடன் உண்ணலாம். ஆனால் அந்த மரத்தில் காய்கள் மட்டும் தான் இருக்கின்றன என்றால் என்ன செய்ய? அவை கனிகளாகும் வரைக் காத்திருக்க வேண்டியது தான்.

இந்த உலகத்தில் பெரும்பாலான விஷயங்கள் காய்கள் மட்டும் இருக்கும் மரம் போன்றவைதான். நாம் ஒரு முயற்சியைச் செய்துவிட்டு அதன் பலனை உடனேயா பார்க்கிறோம்? இல்லையே! காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதே! பூவிழி நோகப் பார்த்துக் கொண்டே இருந்தாலும் அந்த காய்கள் கனிவது போல் தெரியவில்லை. இந்த விஷயங்கள் இப்படி என்றால் சில விஷயங்கள் சீக்கிரம் கனிந்து விடுகிறது. ஆனால் அவை உண்ணச் சுவையாக சாறுடன் கூடி இல்லை. உலகத்தில் இருக்கும் எல்லா விஷயங்களையும் இப்படி என்றுமே பழுக்காத காய்கள், பழுக்கும் ஆனால் சுவைக்காத கனிகள் என்று வகைப்படுத்தி விடலாம்.

உலக விஷயங்கள் போலின்றி இறைவன் பறித்தவுடன் உண்ணலாம் படி கனிந்து சுவையுடன் இருக்கிறான். அவன் அருளாலே அவன் தாள் வணங்கினால் அவன் கருணையாலே தன்னை உடனே தருகிறான். என் செயல் ஆவது யாதொன்றும் இல்லை இனித் தெய்வமே நின் செயலே என்று எண்ணி அவனை நோக்கி நின்றால் அவனே தன்னைக் கொடுக்கிறான். அப்படி அவனே கொடுக்கும் போது உடனே சுவைக்கலாம் படி பழுத்தப் பழமாய் இருக்கிறான். அதனால் தான் வெறும் கனியே என்று சொல்லாமல் அளிந்ததோர் கனியே என்கிறார் ஒருவாசகமானாலும் திருவாசகமாய்ச் சொன்ன மாணிக்கவாசகர்.

பக்தி உடையார்க்கு எளியவன் ஆக இருக்கும் அந்த இறைவனே மற்றவர்களுக்கு மிக அரியவனாய் இருக்கிறான். பக்தி உடையார்க்கு அளிந்த கனியாய் இருக்கும் அவனே தங்கள் சொந்த முயற்சியால் அவனைக் காண விரும்புபவர்களுக்கு பெருமுயற்சிக்குப் பின் தன்னைக் கொடுக்கிறான். அந்த பெரு முயற்சியைச் செய்ய எல்லாராலும் முடியாது. அதற்கு பெருந்திறமை வேண்டும். அப்படி பெருந்திறலுடன் அருமையான தவம் செய்வார்களுக்கு அவன் அரசனைப் போல் அவர்களைக் காத்து அருளுகிறான்.

உலகில் எத்தனையோ இருக்கின்றன படிப்பதற்கு. சில சுவையாக இருக்கின்றன. சில சுவையின்றி இருக்கின்றன. விவகாரமான விஷயங்கள் என்றால் படிப்பதற்குச் சுவையாகத் தோன்றி அதில் நம் நேரத்தை வீணாக்குகிறோம். நல்ல விஷயங்கள் சுவையின்றி இருந்தால் அதனை பின்னர் படித்துக் கொள்ளலாம் என்று தள்ளிவிடுகிறோம். அறிவு தரும் கலைகளில் மெய்யறிவு தரும் கலைகளாய் சிலவே உண்டு. அவை நம் தற்போதைய சூழ்நிலையில் சுவையின்றித் தோன்றலாம். ஆனால் அவை மட்டுமே உண்மைப் பொருளை உடையன. மற்றவை நம் நேரத்தை வீணாக்குகின்றன. இறைவன் எல்லா அறிவிற்கும் இருப்பிடம். அதனால் அவனே உண்மைப் பொருளைக் காட்டும் கலையாகவும் இருக்கிறான்.

அடுத்த பகுதியில் மேலும் பார்ப்போம்.

3 comments:

  1. இந்த இடுகை 'திருவாசகம் ஒரடொரியோ' பதிவில் 6 ஜனவரி 2006 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:

    ஞானவெட்டியான் said...
    அன்பு குமரா!,
    //அவனே உண்மைப் பொருளைக் காட்டும் கலையாகவும் இருக்கிறான்.//

    உண்மைப் பொருள் = மெய்ப்பொருள் = மெய்க்குள் இருக்கும் பொருள்.

    கலை = சூரிய, சந்திர, அக்கினி கலைகள்.

    இது ஞான வழி.

    January 06, 2006 6:31 AM
    --

    G.Ragavan said...
    நல்ல விளக்கம் குமரன்.

    மெய்ப்பொருளை இறைவன் மட்டுமே உணர்விக்க முடியும். அதனால்தான் அருணகிரியும்

    செவ்வான் உருவில் திகழ் வேலவன் அன்று
    ஒவ்வா தததென உணர் வித்ததுதான்
    அவ்வாறு ஒருவர் அறிகின்றதலால்
    எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவே

    என்கிறார். அவனுடைய கலையின் வழி வந்த நாடகத்தில் மெய்ப்பொருளை உணர்வோம் என்று பொருள் கொள்ளலாமா?

    January 06, 2006 7:20 AM
    --

    தி. ரா. ச.(T.R.C.) said...
    பொருளுடைக் கலையே! புகழ்ச்சியைக் கடந்த
    போகமே!
    பொன்னால் பொருள்படைத்தருக்கு பயன் உண்டு--அதுபோல
    பொன்படைத்தாரல் பொன்னுக்கு பயனேதுமுன்டோ

    அது போல்த்தான் இறைவனை புகழ்வதால் நம்க்குத்தான் பெருமையே தவிர அவனுக்கு ஒன்றும் அதில் பெருமை கிடையாது. அதனால் தான் புகழ்ச்சியை கடந்த போகமே என்கிறார் போலும். தி.ரா.ச.

    January 06, 2006 7:49 AM
    --

    Anonymous said...
    good post sureshinuk

    January 06, 2006 9:37 AM
    --

    ஞானவெட்டியான் said...
    இறை கேட்டது:
    மேலும் என்னை உம்மால் வருணிக்க முடியுமா?

    யான் விடுத்தது :
    இறைவா, உன்னை வருணிக்க என் நா எழவில்லை. கடலுக்கும் எல்லையுண்டு. ஆயினும் உனக்கோ, உன் புகழுக்கோ எல்லையில்லை. உன் வருணிப்புக்கும் எல்லையில்லை. முடிவுமில்லை. எங்கும் நீ யாகிய பரிபூரணமே. எங்கு சென்றாலும், நீயாகிய பரிபூரணமே. பிரபஞ்சம் கூடாது, குறையாது. அதற்கு எல்லையில்லை. அது நிறைகோற்போற் சமமானது. திணையோ, பாலோ, எண்ணோ அற்றவனீ. இடத்தினுக்கு இடனானாய், காலத்திற்குக் காலமானாய்.

    இறை கேட்டது:
    என்னை நீர் புகழ்வதாலும், வருணிப்பதாலும், எனக்கு மதிப்புக்
    கொடுப்பதாலும், எனக்கு என்ன நன்மையுண்டு?

    யான் விடுத்தது :
    இறைவா, நீ புகழுக்குப் புகழானவன். வருணிப்புக்கு வருணிப்பானவன்.
    மதிப்புக்கு மதிப்பானவன். உன்னை எவன் புகழ்ந்தாலும், அப்புகழுக்கு
    எல்லையுண்டு. ஆனால், உன் புகழுக்கோ எல்லையில்லை. வருணிப்புக்கும்
    அவ்வாறே, மதிப்புக்கும் அவ்வாறே. நீ தேவையற்றவன். உனக்கு எதுவும்
    தேவையேயில்லை. அதனால் உனக்கு எந் நன்மையுமில்லை.

    இறை கேட்டது:
    என்னை நீர் புகழ்வதாலும், எனக்கு மதிப்புக் கொடுப்பதாலும்,வருணிப்பதாலும், உமக்கு என்ன நன்மையுண்டு?

    யான் விடுத்தது :
    இறைவா, நான் உன்னைப் புகழும் புகழ்ச்சிகளும், மதிக்கும் மதிப்புகளும்,
    வருணிக்கும் பண்புகளும், என்னையே வந்தடைகின்றன. அதுவே, யான் பெறும் நன்மைகள். உன்னை நான் இழிவு படுத்தினால் அதுவும் என்னையே வந்தடையும்.

    January 06, 2006 10:13 AM
    --

    குமரன் (Kumaran) said...
    உண்மைதான் ஞானவெட்டியான் ஐயா. இறைவன் நம் உடலில் தான் இருக்கிறான். உயிருக்கு உயிராய் ஆத்மாவிற்கு ஆத்மாவாய் மெய்யில் இருக்கும் பொருளாய் மெய்ப்பொருளாய் இருக்கிறான். அந்த மெய்ப்பொருளைக் காட்டும் மூன்று கலைகளாகவும் அவனே இருக்கிறான். அவன் அருள் இருந்தால், முக்கலைகளால் என் உயிருக்கு உயிராய் இருக்கும் அவனை எங்கும் என்னுள்ளேயும் காணமுடியும். இது ஞான வழி மட்டும் இல்லை. எந்த வழி சென்றாலும் இது தான் நடக்கும். என்று பெரியோர்கள் சொல்லிப் படித்திருக்கிறேன் என்பதையும் சேர்த்துவிடுகிறேன். அடியேன் அவன் அருளால் படிக்கவும் கேட்கவும் எண்ணவும் கிடைத்ததைத் தானே இங்கு எழுதுகிறேன். இன்னும் கையைக் கண் காண்பது போல் காணவில்லை. என்று உள்ளங்கை நெல்லிக்கனியாய் தெரிகிறானோ அப்போது இது தான் சரியான வழி என்றோ எல்லா வழியும் சரியான வழிதான் என்றோ அறுதியிட்டுக் கூறமுடியும். அதுவும் முடியுமோ இல்லையோ. கண்டவர் விண்டிலர் என்று வேறு சொல்லிவைத்திருக்கிறார்கள்.

    January 06, 2006 8:08 PM
    --

    குமரன் (Kumaran) said...
    அருணகிரியாரின் அற்புதமான பாடல் இராகவன். நன்றி.

    //அவனுடைய கலையின் வழி வந்த நாடகத்தில் மெய்ப்பொருளை உணர்வோம் என்று பொருள் கொள்ளலாமா? //

    புரியவில்லை. விளக்குகிறீர்களா?

    January 06, 2006 8:10 PM
    --

    குமரன் (Kumaran) said...
    உண்மை தான் தி.ரா.ச. அடுத்தப் பதிவில் புகழ்ச்சியைக் கடந்த போகமே என்பதைப் பற்றியும் பேசுகிறேன். எடுத்துக் கொடுத்ததற்கு மிக்க நன்றி.

    January 06, 2006 8:11 PM
    --

    குமரன் (Kumaran) said...
    Thanks sureshinuk

    January 06, 2006 8:11 PM
    --

    குமரன் (Kumaran) said...
    மிக நல்ல விளக்கம் ஞானவெட்டியான் ஐயா. உணர்ந்து எழுதியிருக்கிறீர்கள். மிக்க நன்றி.

    தயவு செய்து இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

    இறை கேட்டது:

    என்னை நீர் புகழ்வதைக் கேட்பதாலும் படிப்பதாலும் குமரன் போன்றவர்களுக்கு என்ன நன்மையுண்டு?

    ஐயா விடுத்தது:

    இறைவா, நான் உன்னைப் புகழும் புகழ்ச்சிகளும், மதிக்கும் மதிப்புகளும், வருணிக்கும் பண்புகளும், அதனைப் படிப்பவர்களுக்கு உன் அருளையும் உயர் பண்புகளையும் கொண்டு வருகின்றன. யத் பாவம் தத் பவதி என்று வடமொழி வேதம் சொன்னது போல் உன் புகழ்ச்சியைக் கடந்த குணங்களை என்றும் எண்ணுவதால் அதில் சிறிதாவது அவர்களுக்கு வந்தடைகிறது. அதுவே அவர்கள் பெறும் நன்மை.

    January 06, 2006 8:18 PM
    --

    ஞானவெட்டியான் said...
    "ததாஸ்து"

    January 07, 2006 5:43 AM
    --

    G.Ragavan said...
    ////அவனுடைய கலையின் வழி வந்த நாடகத்தில் மெய்ப்பொருளை உணர்வோம் என்று பொருள் கொள்ளலாமா? //

    புரியவில்லை. விளக்குகிறீர்களா? //

    இறைவன் மெய்ப்பொருளை ஒருவர்க்கு உணர்த்த வேண்டுமென முடிவு செய்தால் அதை ஒரு நாடகம் போலச் செய்வான். அதுவே அவனுடைய கலை. இதைத்தான் வேறு விதமாகச் சொன்னேன் குமரன்.

    January 09, 2006 3:19 AM
    --

    குமரன் (Kumaran) said...
    இப்போது புரிந்தது இராகவன். மிக்க நன்றி.

    January 09, 2006 5:48 AM
    --

    சிவா said...
    குமரன்! வெறும் பொருள் மட்டும் கூறாமல் ஒரு சொற்பொழிவே கொடுத்து விட்டீர்கள். அளிந்ததோர் கனிக்கான விளக்கம் நன்று.

    //**உலகில் எத்தனையோ இருக்கின்றன படிப்பதற்கு. சில சுவையாக இருக்கின்றன. சில சுவையின்றி இருக்கின்றன. விவகாரமான விஷயங்கள் என்றால் படிப்பதற்குச் சுவையாகத் தோன்றி அதில் நம் நேரத்தை வீணாக்குகிறோம். நல்ல விஷயங்கள் சுவையின்றி இருந்தால் அதனை பின்னர் படித்துக் கொள்ளலாம் என்று தள்ளிவிடுகிறோம் **.// இதுல எத்தனை உள்குத்து இருக்கு :-))

    January 09, 2006 6:35 AM
    --

    குமரன் (Kumaran) said...
    நடப்பதைத் தானே சொன்னேன் சிவா. நானும் பல முறை இதைச் செய்திருக்கிறேன். திருந்தாத ஜன்மம் நானெல்லாம். என்ன செய்வது? :-)

    பாராட்டுகளுக்கு நன்றி. இந்தப் பாட்டின் விளக்கத்தின் அடுத்தப் பகுதி விரைவில் இட்டுவிடுகிறேன்.

    January 09, 2006 7:08 AM
    --

    Kumaresh said...
    Ungal valaivugal mattum all, athan pinnoottangalum arputham. TRC, Desigan, Gnanavettiyan, Siva - melum palarin karuthukkal miga arputham.

    Kumaresh

    January 09, 2006 9:55 AM
    --

    குமரன் (Kumaran) said...
    சரியாகச் சொன்னீர்கள் குமரேஷ். நண்பர்களின் பின்னோட்டங்கள் அற்புதமாக இருப்பதால் தான் என்னால் தொடர்ந்து வலைப் பதிவுகள் பதிக்க முடிகின்றது. மிக்க நன்றி.

    January 09, 2006 3:46 PM
    --

    Anonymous said...
    Oh! Markandeya Gothra Kumara, I appreciate your work. Wherever you fly you are interested in Tamil language, literature and at the same time Sourashtra Literature and you have quoted Nayagi Swamigal songs. Please continue your efforts.
    If I want to publish tamil literary songs from Thiruvilayadar Puranam and Thiru Arutpa what should I do and how should I proceed? I am a lay man but want to dedicate my works to fellow tamilians regarding Tamil Bhakthi Ilakkiams. Please guide me.
    Yours,
    Malli Chandrasekaran Amarnath
    email: mcamarnath@yahoo.com

    March 13, 2006 3:18 AM
    --

    amarnath said...
    Oh! Markandeya Gothra Kumara, I appreciate your work. Wherever you fly you are interested in Tamil language, literature and at the same time Sourashtra Literature and you have quoted Nayagi Swamigal songs. Please continue your efforts.
    If I want to publish tamil literary songs from Thiruvilayadar Puranam and Thiru Arutpa what should I do and how should I proceed? I am a lay man but want to dedicate my works to fellow tamilians regarding Tamil Bhakthi Ilakkiams. Please guide me.
    Yours,
    Malli Chandrasekaran Amarnath
    email: mcamarnath@yahoo.com

    March 13, 2006 3:21 AM
    --

    குமரன் (Kumaran) said...
    அன்புள்ள மல்லி சந்திரசேகரன் அமர்நாத் அவர்களே. தங்களின் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி. தமிழ்பதிவுகளில் இலக்கியங்கள் பற்றி எழுதுவது எப்படி என்று உங்களுக்குத் தனி மடல் அனுப்பியிருக்கிறேன். மேலும் கேள்விகள் இருந்தால் தனிமடலில் கேளுங்கள்.

    March 13, 2006 2:54 PM

    ReplyDelete
  2. //நடப்பதைத் தானே சொன்னேன் சிவா. நானும் பல முறை இதைச் செய்திருக்கிறேன். திருந்தாத ஜன்மம் நானெல்லாம். என்ன செய்வது? :-)//

    ஹாஹா :) நான் அப்படி இல்லையே? ஏன்னா நீங்க எழுதறது எனக்கு ரொம்ப சுவையா இருக்குப்பா :)

    சுடருக்கும் அளிந்த கனிக்கும் நீங்கள் அளித்த விளக்கங்கள் அருமை. தற்காலிக இன்பத்தையே நாடுகிறது மனித மனம். அதனால் பின்னர் துன்பம் வரும் என்று அறிவால் அறிந்தாலும் அதிலிருந்து விடுபட எந்த முயற்சியும் எடுப்பதில்லை :( இறைவன் அடிகளே நிரந்தர இன்பம் என்பதை அவனருள் இருந்தால் உணரலாம். என்று வருமோ அந்தத் திருநாள்?

    ReplyDelete
  3. அடியேன் இன்னும் அப்படி இப்படி செல்வதைப் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன் கவிக்கா. :-)

    வாதவூர் அடிகள் சொன்னது தினைத்தனைப் பூவின் தேனை விரும்பி மலையளவு இன்பத்தைத் துறந்து கொண்டிருக்கிறேன். அவனருள் வரவேண்டும்.

    ReplyDelete