Thursday, June 05, 2008

ப்ரத்யேகம், ப்ரதானம், நிதானம், நிதர்சனம்

சன் செய்திகளில் மிகுந்து அடிபடும் சொற்களில் இந்த ப்ரத்யேகம் 'தனித்தன்மை'க்காக செய்திகளில் அடிக்கடி வாசித்தலின் போது வருகிறது. இந்த சொல்லுக்கு மாற்றுச் சொல்லே இல்லையா ? என்று சிந்தனை செய்து பார்த்தேன். ப்ரத்யேக ஆடை, ப்ரத்யேக தயாரிப்பு என்றெல்லாம் சொல்கிறார்கள். அத்தகைய ஆடைகள், தயாரிப்புகள் தனிச்சிறப்பு வாய்ந்ததாம்.

சிறப்பு என்ற சொல்லிற்கு பதில் ப்ரத்யேகம் என்ற சொல் வழங்கப்படுகிறது. சிறப்பில் 'சிறப்பு' இல்லை என்று சன் செய்தியாளர்களுக்கு மட்டும் தெரிகிறது போலும் என்று நினைத்துக் கொண்டேன். சிறப்பை சிறப்பாக சொல்ல வேண்டுமென்றால் தனிச்சிறப்பு என்று மிகச்சிறப்பாக சொல்லலாம். ஒற்றைச் சொல்லாக (vocabulary) செல்லவேண்டுமென்றால் 'தனிப்பட்ட' அல்லது 'தனித்துவ' என்றும் ப்ரத்தியோகத்திற்கு மாற்றாக சொல்லமுடியும்.

சிங்கையில் ப்ரதானவிழா என்று ஒவ்வொரு ஆண்டும் தமிழ் தொலைக்காட்சியான வசந்தம் சென்டரலில் நடத்துகிறார்கள். முதன்மைக்கு முதன்மைத்துவம் கொடுக்காமல் போனது முதன்மையின் பொருள் புரியாததாலா என்று மிகவும் வியப்பாக இருந்தது. முதன்மையென்றால் எல்லாவற்றையும் விட மிகச்சிறப்பானது என்ற பொருளில் தான் செங்கிருதச் சொல்லான ப்ரதானமும் வழங்கப்படுகிறது. ப்ரதானம் என்று தமிழில் ஒற்றெழுத்துக்களை (மெய்யெழுத்து) முன் வைத்து எழுதுவதில்லை 'பிரதானம்' பிரத்தியேகம் என்று தான் எழுதுகிறோம். பயன்படுத்த பொருள் பொதிந்த சொற்கள் தமிழ் குவியலில் இருக்கிறது. அதுவும் கண்ணில் அகப்படும் வகையில் இருக்கிறது. ஒப்புமைத்துப் பார்த்து சரியான சொல்லை பயன்படுத்துவதில் சற்று சோம்பலாக ... பிறமொழிச் சொற்களை தமிழ்'படுத்தி' அந்த இடத்தில் பொருத்தி வருகிறோம்.

'நிதானமே ப்ரதானம்' என்று தெலுங்கில் பழமொழி சொல்லுவார்கள். இதற்கு பொருள் தமிழர்களுக்கும் நன்கு தெரியும். 'நிதானம்' இழக்கக் கூடாது என்று நினைத்து பொறுமை குறித்து சொல்லும் போது 'பொறுமை' இல்லாது, 'பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு' என்று அதை எதோ ஒரு எல்லைக்குள் எங்கேயோ நிறுத்திவிட்டு அறிவுரை சொல்லும் போது எல்லையற்று நிதானமே ப்ரதானமாக வருகிறது.

பொறுமையின் சிகரம் என அடைமொழிச் சொற்களும், பொறுமையுடையோர் பெருமை அடைவர் என்ற பழமொழி பத்தி (வாக்கியம்) பொறுமைக்கு பெருமை சேர்க்கின்றன. பொறுமைக்கு முதன்மைதரலாம் பொருளில் தொய்வு இல்லை, சுவையிலும் குறைவில்லை.

'நிதர்சனமான உண்மை' என்று உண்மையை அறுதியிட்டுச் சொல்ல அவ்வப்போது 'நிதர்சனம்' 'அப்பட்டமி'ன்றி அப்பட்டமாக பயன்படுகிறது. நிதர்சனமும் அப்பட்டமும் ஒரே பொருள் என்பது அப்பட்டமான உண்மை.

4 comments:

  1. இந்த இடுகை 'சொல் ஒரு சொல்' பதிவில் திரு.கோவி.கண்னன் அவர்களால் 31 மார்ச் 2007 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:

    13 கருத்துக்கள்: SK said...
    ப்ரதி+ ஏகம்= ப்ரத்யேகம்
    ப்ரதி =தான், தனக்கு, தனி
    ஏகம்= ஒன்று, ஒருமை
    ப்ரத்யேகம்= தனி ஒரு, தனித்துவம்

    ப்ரத்+ அதானம்= ப்ரதானம்
    ப்ரத்= தான், தனக்கு, தனி
    அதானம்= நிகழ்வு
    ப்ரதானம்= தனிப்பட்ட[முக்கிய] நிகழ்வு

    நி+அதானம்= நிதானம்
    நிகழ்வில் கவனம்

    நிர்+தர்ஸனம்= நிர்தர்ஸனம், நிதர்ஸனம், நிதர்சனம்
    தர்ஸனம்= பார்வை, காட்சி
    நிர்= இல்லாத, தேவையற்ற
    நிர்தர்ஸனம்= வெளிப்படை[பார்த்துச் சொல்ல வேண்டிய கட்டாயமே இல்லாத ஒன்று]
    [அப்பட்டத்தை விட இப்பட்டம் சிறப்பு!]

    ப்ரதானமா தமிழ்ச் சொல்லைச் சொல்ல ப்ரத்யேகச் சொற்களைத் தேடும்போது நிதானமா யோசித்து தகுந்த சொற்களைத் தருவதே ப்ரயோஜனமா இருக்கும் என்பதே நிதர்சனமான உண்மை!

    தனிப்பட்ட நிகழ்வாகத் தமிழ்ச்சொற்களுக்குத் தனித்துவச் சொற்களைத் தேடும்போது, நிகழ்வில் கவனமாக எண்ணி, தகுந்த சொற்களைத் தருவதே பேருதவியாய் இருக்கும் என்பது வெளிப்படையான உண்மை!

    நன்றி.

    இது என் கருத்து மட்டுமே!
    வேறெதையும் குறைத்துச் சொன்னதல்ல!
    இப்பல்லாம் டிஸ்கி போடணுமாமே!]
    :))

    March 31, 2007 11:10 AM
    கோவி.கண்ணன் [GK] said...
    //SK said...
    ப்ரதி+ ஏகம்= ப்ரத்யேகம்
    ப்ரதி =தான், தனக்கு, தனி
    ஏகம்= ஒன்று, ஒருமை
    ப்ரத்யேகம்= தனி ஒரு, தனித்துவம்

    ப்ரத்+ அதானம்= ப்ரதானம்
    ப்ரத்= தான், தனக்கு, தனி
    அதானம்= நிகழ்வு
    ப்ரதானம்= தனிப்பட்ட[முக்கிய] நிகழ்வு

    நி+அதானம்= நிதானம்
    நிகழ்வில் கவனம்

    நிர்+தர்ஸனம்= நிர்தர்ஸனம், நிதர்ஸனம், நிதர்சனம்
    தர்ஸனம்= பார்வை, காட்சி
    நிர்= இல்லாத, தேவையற்ற
    நிர்தர்ஸனம்= வெளிப்படை[பார்த்துச் சொல்ல வேண்டிய கட்டாயமே இல்லாத ஒன்று]
    [அப்பட்டத்தை விட இப்பட்டம் சிறப்பு!]

    ப்ரதானமா தமிழ்ச் சொல்லைச் சொல்ல ப்ரத்யேகச் சொற்களைத் தேடும்போது நிதானமா யோசித்து தகுந்த சொற்களைத் தருவதே ப்ரயோஜனமா இருக்கும் என்பதே நிதர்சனமான உண்மை!

    தனிப்பட்ட நிகழ்வாகத் தமிழ்ச்சொற்களுக்குத் தனித்துவச் சொற்களைத் தேடும்போது, நிகழ்வில் கவனமாக எண்ணி, தகுந்த சொற்களைத் தருவதே பேருதவியாய் இருக்கும் என்பது வெளிப்படையான உண்மை!

    நன்றி.

    இது என் கருத்து மட்டுமே!
    வேறெதையும் குறைத்துச் சொன்னதல்ல!
    இப்பல்லாம் டிஸ்கி போடணுமாமே!]
    :))
    //

    விஎஸ்கே ஐயா,

    தமிழ்மீது தாங்கள் கொண்டிருக்கும் அக்கரை மெய்சிலிர்க்க வைக்கிறது. இவ்வளவு விளக்கம் தெரிந்த தாங்கள் இந்த வலைபதிவில் இணைந்து கொண்டால் நான் *தனித்துவச் சொற்களைத் தேடும்போது, நிகழ்வில் கவனமாக எண்ணி* யிருக்க பேருதவியாக இருக்கும் !

    பின்னூட்டத்திற்கு நன்றி !

    March 31, 2007 12:20 PM
    ஓகை said...
    பிரத்யோகம் என்பதற்கு தனி, தனிப்பட்ட, தனித்துவ போன்ற சொற்களைப் பரிந்துரைத்திருப்பது சரியாக இருக்கிறது. பிரத்தியோகம் போன்ற சொற்கள் பாமர வழக்கிலும் பொது உரையாடல்களிலும் வரா. செய்தி செய்பவர்கள் ஏன் அவற்றைப் பிடித்துக்கொள்கிறார்கள் என்பது புரியவில்லை.

    ஆனால் இச்சொல்லுக்கு சிறப்பு என்னும் கூடுதல் பொருளைச் சொல்லியிருப்பது சரியா எனத் தெரியவில்லை. ஆங்கிலத்தின் exclusive என்பதற்கு இணையாகவே இச்சொல் பயன்படுத்தப்படுகிறது. எவ்வித பயன்பாட்டிலும் சிறப்பு என்னும் பொருள் வரவில்லை. சிறப்பு என்பது ஓர் ஒப்புமைக் கூற்று. தனித்துவம் என்பது ஒரு பண்பு. தனியாக இருப்பதே சிறப்பாகக் கருதப்படும் இடங்களில் இப்போருள் வரலாம். ஆனால் அங்கும் தனி என்கிற சொல்லே அந்தப் பொருளையும் தந்துவிடும்.

    பிரதானம் என்பதற்கு முதன்மை என்பது மிகச்சரியான சொல். ஒற்றெழுத்துடன் தமிழில் எச்சொல்லும் தொடங்குவது இல்லை. தனி ஒற்றெழுத்துடன் தொடங்கும் சொற்கள் தமிழரின் உச்சரிப்பு முறைகளுக்கும் பழக்கங்களுக்கும் அந்நியமானவை.

    நிதானம் வட சொல்லா என்கிற ஐயம் எனக்கு இருக்கிறது. பொறுமை என்கிற சொல்லுக்கு இருக்கும் பல பயன்பாடுகளில் நிதானமும் அடங்கும்.
    நிதானமாக இரு = பொறுமையாக இரு. ஆனால் பொறுமை என்பது பொறு என்னும் வினைப் பொருளையும் குறிக்கக்கூடியது.

    நிதர்சனம் என்பதற்கு நேரிடையான மொழியாக்கமாக கண்கூடு என்ற சொல்லைக் கூறலாம். வெளிப்படை என்பது அதே பொருளை சொன்னாலும் நிதர்சனம் என்னும் சொல்லில் இருக்கும் ஒரு காட்சி உருவகம் இச்சொல்லில் இல்லை. இந்த காட்சி உருவகத்தை ஒரு வகையில் அப்பட்டம் என்ற சொல் தருகிறது. ஆனால் அப்பட்டம் என்ற சொல் பேச்சுத் தமிழில் புழங்குகிற அளவுக்கு எழுத்தாக்கங்களில் புழங்குவதில்லை. இச்சொல்லின் மூலமும் புரியவில்லை. என்னிடமிருக்கும் அகராதியில் இச்சொல் இல்லை.

    April 01, 2007 1:25 AM
    குறும்பன் said...
    எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம் (ப்ரதானம்). இங்கு பிரதானம் என்பது முதன்மை என்ற பொருளில் தான் வருகிறது. கோவி சொல்வது போல் முதன்மையே சரியான பொருளாக தோன்றுகிறது.
    VSK ஐயா அவர்கள் ஒரு எ.கா சொன்னால் நன்றாக இருக்கும்.

    ஓகை ஐயா சொல்வது போல் பிரத்யோகம் என்பதற்கு சிறப்பு என்னும் கூடுதல் பொருளைச் சொல்லியிருப்பது சரி அல்ல என்று நினைக்கிறேன்.

    நிர்தர்ஸனம்= வெளிப்படை, கண்கூடு, அப்பட்டம்.

    April 05, 2007 4:04 PM
    VSK said...
    ப்ரதானம் என்பது முதன்மை என்னும் பொருளில் சொல்லப்பட்டாலும், முக்கிய நிகழ்வு என்னும் பொருளிலேயே பெரும்பாலும் அமையும்.

    "அந்த விழாவில் ஜெயகாந்தன் பேச்சே ப்ரதானமாய் இருந்தது"

    இதில் இந்த இரு பொருளும் வருவதைக் கவனிக்கவும்.

    நன்றி.

    ப்ரத்யோகம் என்பது தவறன சொல்.
    ப்ரத்யேகம் என்பதே சரி.
    தலைப்பில் தவறாக வந்தாலும், கோவியார் பதிவில் ப்ரத்யேகம் என்றுதான் குறிப்பிட்டிருக்கிறார்!

    April 05, 2007 10:11 PM
    G.Ragavan said...
    நல்ல பதிவு கோவி.

    ப்ரத்யேகம் என்பதற்கு தனிப்பட்ட என்று சொல்வது பொருந்தும். அத்தோடு ப்ரதானம் என்பது முதன்மை. நீங்கள் சொன்னது சரியே. நிதானம்....சொல்லவே தேவையில்லை. பொறுமையேதான். நிதர்சனம் என்றால் என்னவென்று அப்பட்டமாகச் சொல்லிவிட்டீர்களே. இதற்கு மேல் என்ன சொல்வது. இவைகளையே பயன்படுத்தலாம்.

    April 05, 2007 11:08 PM
    வல்லிசிம்ஹன் said...
    ஆங்கிலத்தின் exclusive என்பதற்கு ,
    இதுதான் சரியான சொல். பிரத்யேகம்.
    பிரயோசனத்துக்கும் வேறு ஏதாவது பிரயோகம் உண்டா?

    இந்தச் சொற்களுக்கே தனி அகராதி வேண்டும் போல இருக்கிறதே.

    நன்றி, கண்ணன்.
    சன் டி வி தமிழர்களுக்கான பிரத்தியேகச் சானல் அல்லவா. அதுதான் இப்படி செய்தி கொடுக்கிறார்கள்.:-)

    April 06, 2007 7:24 AM
    கோவி.கண்ணன் said...
    //நிதானம் வட சொல்லா என்கிற ஐயம் எனக்கு இருக்கிறது. பொறுமை என்கிற சொல்லுக்கு இருக்கும் பல பயன்பாடுகளில் நிதானமும் அடங்கும்.
    நிதானமாக இரு = பொறுமையாக இரு. ஆனால் பொறுமை என்பது பொறு என்னும் வினைப் பொருளையும் குறிக்கக்கூடியது.

    நிதர்சனம் என்பதற்கு நேரிடையான மொழியாக்கமாக கண்கூடு என்ற சொல்லைக் கூறலாம். வெளிப்படை என்பது அதே பொருளை சொன்னாலும் நிதர்சனம் என்னும் சொல்லில் இருக்கும் ஒரு காட்சி உருவகம் இச்சொல்லில் இல்லை. இந்த காட்சி உருவகத்தை ஒரு வகையில் அப்பட்டம் என்ற சொல் தருகிறது. ஆனால் அப்பட்டம் என்ற சொல் பேச்சுத் தமிழில் புழங்குகிற அளவுக்கு எழுத்தாக்கங்களில் புழங்குவதில்லை. இச்சொல்லின் மூலமும் புரியவில்லை. என்னிடமிருக்கும் அகராதியில் இச்சொல் இல்லை. //

    ஓகை ஐயா,

    எஸ்கே ஐயா நிதர்சனம் என்ற சொல்லுக்கு வெளிப்படை என்று பொருள் சொன்னார், நீங்கள் கண்கூடு என்று சொல்கிறீகள், இரண்டுமே சரியாக பொருந்துகிறது, தர்சனம் என்ற சொல்லில் இருந்து நிதர்சனம் தோன்றியதாக எடுத்துக் கொண்டால் நீங்கள் சொல்லும் கண்கூடு அதாவது பார்த்தல் என்ற பொருளுடன் இணைந்த சொல்லாக இருக்கிறது. அப்பட்டம் என்பது வேற்றுமொழிகளில் இல்லை அதானால் தமிழாகத்தான் இருக்கும் மட்டுமின்றி பெருவாரியாக (அதிகம்) பயன்பாட்டில் இருப்பதால் சொல்லி இருந்தேன். நீங்கள் சொல்வது போல் அந்த சொல் பேச்சுவழக்கில் இருப்பது போல் எழுத்துவழக்கில் மிகுந்து புழங்குவது இல்லை.

    தங்களின் மேலான கருத்துக்கு மிக்க நன்றி !

    April 06, 2007 11:05 AM
    கோவி.கண்ணன் said...
    // VSK said...
    ப்ரதானம் என்பது முதன்மை என்னும் பொருளில் சொல்லப்பட்டாலும், முக்கிய நிகழ்வு என்னும் பொருளிலேயே பெரும்பாலும் அமையும்.

    "அந்த விழாவில் ஜெயகாந்தன் பேச்சே ப்ரதானமாய் இருந்தது"

    இதில் இந்த இரு பொருளும் வருவதைக் கவனிக்கவும்.

    நன்றி.

    ப்ரத்யோகம் என்பது தவறன சொல்.
    ப்ரத்யேகம் என்பதே சரி.
    தலைப்பில் தவறாக வந்தாலும், கோவியார் பதிவில் ப்ரத்யேகம் என்றுதான் குறிப்பிட்டிருக்கிறார்!
    //

    எஸ்கே ஐயா பேச்சு வழக்கில் இருப்பதால் மட்டுமே ஒரு சொல் அந்த இடத்துக்கு பொருத்தமானதாக இருக்கும் என்று நான் கருதவில்லை.

    அங்கு முதன்மை என்று போட்டாலும் பொருள் வேறுபடுவது கிடையாது.

    மறு மறுமொழிக்க்கு நன்றி !

    ப்ரத்யேகம் என்பதும் தவறான சொல், பிரதியோகம் என்று தான் தமிழில் எழுதுவோம், எந்தமொழி சொல் என்றாலும் தமிழில் எழுதும் போது ஒற்றெழுத்துக்கு அங்கு இடமில்லை எடுத்துக்காட்டு பிரான்ஸ், சுவீடன் இன்னும் பிற.

    April 06, 2007 11:10 AM
    கோவி.கண்ணன் said...
    // G.Ragavan said...
    நல்ல பதிவு கோவி.

    ப்ரத்யேகம் என்பதற்கு தனிப்பட்ட என்று சொல்வது பொருந்தும். அத்தோடு ப்ரதானம் என்பது முதன்மை. நீங்கள் சொன்னது சரியே. நிதானம்....சொல்லவே தேவையில்லை. பொறுமையேதான். நிதர்சனம் என்றால் என்னவென்று அப்பட்டமாகச் சொல்லிவிட்டீர்களே. இதற்கு மேல் என்ன சொல்வது. இவைகளையே பயன்படுத்தலாம்.
    //

    ஜிரா, நன்றி

    கூடவே ஓகை ஐயா, எஸ்கே ஐயாவின் நிதர்சனம் குறித்த பரிந்துரைகள் அதாவது கண்கூடு, வெளிப்படையும் பொருத்தமான சொற்களாக தெரிகிறது. திரு குமரன் என்ன சொல்வார் என்று தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்.

    April 06, 2007 11:12 AM
    கோவி.கண்ணன் said...
    //பிரயோசனத்துக்கும் வேறு ஏதாவது பிரயோகம் உண்டா?//

    வல்லியம்மா,

    பிரயோகம் என்பதை தமிழில் பயன்பாடு என்று சொல்லலாம் பொருள் வேறல்ல, கர்ணன் பிரம்மா அஸ்திரத்தை பிரயோகப் படுத்தினான் என்பதும், கர்ணன் பிரம்மா அஸ்திரத்தை பயன்படுத்தினான் என்று சொல்வதும் ஒன்றே !

    April 06, 2007 11:14 AM
    குமரன் (Kumaran) said...
    கண்ணன் அண்ணா. இந்த இடுகையை இட்டவுடன் உடனே படித்துவிட்டேன். மற்றவர்களின் கருத்துகளைப் படிக்கக் காத்திருந்தேன். சொன்னவர்கள் எல்லாம் நன்றே சொல்லியிருக்கிறார்கள். அவற்றைத் தவிர்த்து எனக்குத் தனிப்பட்ட கருத்து இல்லை.

    எஸ்.கே. ஐயா சொல்லும் தவறு ப்ரத்யேகத்தை பிரத்யேகம் என்று எழுதுவதைப் பற்றி இல்லை; ப்ரத்யேகத்தை ப்ரத்யோகம் என்றும் ப்ரதானத்தை ப்ராதானம் என்றும் தவறாகத் தலைப்பிலும் இடுகையிலும் எழுதியிருப்பதை. நீங்கள் இடுகையை இட்டவுடன் வந்து தலைப்பிலும் இடுகையிலும் இருந்த எழுத்துப்பிழைகளை மற்றவர் பார்க்கும் முன் சரி செய்துவிட்டேன். ஆனாலும் எந்த தலைப்பில் இந்த இடுகை தமிழ்மணத்தில் தோன்றியதோ அதே போன்று (எழுத்துப்பிழைகளுடன்) மறுமொழியப்பட்ட இடுகைகள் பட்டியலிலும் இப்போதும் வருகிறது. அதனைத் தான் எஸ்.கே. குறிப்பிட்டிருக்கிறார்.

    April 06, 2007 11:24 AM
    கோவி.கண்ணன் [GK] said...
    //எஸ்.கே. ஐயா சொல்லும் தவறு ப்ரத்யேகத்தை பிரத்யேகம் என்று எழுதுவதைப் பற்றி இல்லை; ப்ரத்யேகத்தை ப்ரத்யோகம் என்றும் ப்ரதானத்தை ப்ராதானம் என்றும் தவறாகத் தலைப்பிலும் இடுகையிலும் எழுதியிருப்பதை. நீங்கள் இடுகையை இட்டவுடன் வந்து தலைப்பிலும் இடுகையிலும் இருந்த எழுத்துப்பிழைகளை மற்றவர் பார்க்கும் முன் சரி செய்துவிட்டேன். ஆனாலும் எந்த தலைப்பில் இந்த இடுகை தமிழ்மணத்தில் தோன்றியதோ அதே போன்று (எழுத்துப்பிழைகளுடன்) மறுமொழியப்பட்ட இடுகைகள் பட்டியலிலும் இப்போதும் வருகிறது. அதனைத் தான் எஸ்.கே. குறிப்பிட்டிருக்கிறார். //

    குமரன் நன்றி,

    ஆமாம் ! தவறாகத்தான் இருக்கிறது. ப்ரத்தியேகம் என்று நான் கேள்விப்பட்டதில்லை, ப்ரதியோகம் என்று தான் கேள்விப்பட்டு இருக்கிறேன். அதனால் அப்படி எழுதிவிட்டேன். ப்ராதானம் என்பது எழுதுப்பிழை ஒப்புக் கொள்கிறேன்.

    தவறை சுட்டிக் காட்டியதற்கு நன்றி !

    April 06, 2007 11:36 AM

    ReplyDelete
  2. உங்க புண்ணியத்தால என்னோட சொற்தொகை கொஞ்சம் பரவாயில்ல, இப்போ! :) 'ப்ரசவம்' தமிழ் சொல்லா?

    ReplyDelete
  3. இந்தப் புண்ணியமும் கண்ணனுக்கே.

    ப்ரசவம் வடசொல். மகப்பேறு தமிழ்ச்சொல் அக்கா.

    ReplyDelete
  4. பிரசவ ஆஸ்பத்திரி என்று முன்பு எழுதியிருந்த இடங்களில் இப்போதெல்லாம் மகப்பேறு மருத்துவமனை என்று எழுதியிருப்பதைப் படித்திருப்பீர்கள்.

    ReplyDelete